/

பூஜை அறையினுள் நுழையும் சிகரெட் புகை – மு.தளையசிங்கத்தின் கதைகளை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்

புதுயுகம் பிறக்கிறது என்ற தலைப்பு உச்சரிக்கப்படும் போதே சற்று வித்தியாசமாகத் தெரிகிறது இல்லையா? கலைக்க முடியாத ஒப்பனைகள், அலையும் சிறகுகள், திசைகளின் நடுவே, நீர்ப்பறவைகளின் தியானம், அரூப நெருப்பு என்றெல்லாம் சற்றே கவித்துவமும் பூடகமும் நிறைந்த தலைப்புகளே சிறுகதை தொகுப்புகளுக்கு பெரும்பாலும் வைக்கப்படும். இப்படியான தலைப்புகளை பார்த்துப் பழகிய நமக்கு புதுயுகம் பிறக்கிறது என்ற தலைப்பு சற்று திகைப்பை அளிக்கிறது அல்லவா? இத்தலைப்பு ஒரு கருத்தாக நம் முன்னே வந்து நிற்கிறது. பெரும்பாலும் சிறுகதைகளில் ‘கருத்து’ இருப்பதையே வாசக மனம் ஒத்துக் கொள்ளாது. நாவல்களில் கருத்துகள் விவாதிக்கப்படுவதற்கான உரசிக்கொள்வதற்கான வெளி இருக்கிறது. ஆனால் சிறுகதைகளில் நேரடியான கருத்து மோதல்களுக்கு இடமிருப்பதில்லை. அப்படியிருக்க ஒரு தொகுப்பின் தலைப்பே தன்னை ஒரு கருத்தாக முன்வைப்பது எந்தவொரு நவீன வாசகனுக்கும் சற்று விலகலை அளிக்கக்கூடியதே.

மேலும் இந்த தொகுப்பின் முன்னுரையிலேயே தொகுப்பில் இடம்பெறும் கதைகள் ஒரு ‘திட்டத்துடன்’ ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது வாசகனுக்கு ஏற்படும் மற்றொரு தடை. பெரும்பாலும் நவீன இலக்கிய வாசகர்கள் இலக்கியத்திற்கு பின் இப்படியொரு திட்டம் இருக்கும் என்பதை நம்ப விரும்புவதில்லை. படைப்பு படைப்பாளியை மீறிய தன்னிச்சையான ஒன்று என்று சொல்லிக் கொள்வது படைப்பு திட்டமிடப்பட்டது என்பதைவிட மேலானதாக நம்பப்படுகிறது. இது ஒரு வகையில் கடவுள் நம்பிக்கையை போன்ற ஒன்றுதான். ஆனால் படைப்புச் செயல்பாடு திட்டமிட்டும் நிகழ்த்தப்படலாம். எழுத்தாளன் எதிர்கொள்ளும் கேள்விகள் விரிவும் ஆழமும் கொண்டிருக்கும்போது  திட்டமிட்டு நிகழ்த்தப்படும்போதும் படைப்புகள் கலைத்தன்மையை அடையும் என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை சான்றாகக் கொள்ள முடியும். பெரும்பாலான கதைகள் மனிதனை இயக்கும் ஆதாரமான கேள்விகள் மற்றும் உணர்ச்சிகளுடன் பிணைந்துள்ளன என்பதே இத்தொகுப்பை முக்கியமானதாக மாற்றுகிறது.

இன்று உலகின் அத்தனை அறிவுத்துறைகளும் ஏதோவொரு வகையில் தங்களுடைய பிரத்யேக கருவியால் இப்பிரபஞ்ச இயக்கத்தை புரிந்து கொள்ளவே முயல்கின்றன. பௌதீகம் இயற்கையின் விசைகளையும் வேதியியல் இயற்கையின் பொருட்களையும் ஆய்வு செய்கின்றன. அவ்வகையில் இலக்கியம் மனித உணர்வுகளை ஆய்வு செய்யும் ஒரு துறை என்று சொல்லலாம். இவ்வாறு ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டு மு.தளையசிங்கத்தை அணுகுவது உதவிகரமானது. நவீன இலக்கியம் எதைப் பேசினாலும் அது அடிப்படையில் மனிதர்களைப் பற்றியதுதான். எவ்வகையான புனைவென்றாலும் அப்புனைவினுள் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாக மனிதர்களே இருக்கிறார்கள். ஒரு நிகழ்விலிருந்து மனிதன் அடையக்கூடிய ஆதாரமான கேள்விகளுக்கு விடை தேடுவது புனைவின் முக்கியமானதொரு வேலை. அப்படியான ஆதாரமான நிரந்தரமான சில கேள்விகளை மு.தளையசிங்கம் இத்தொகுப்பில் உள்ள கதைகள் வழியே எதிர்கொள்கிறார். அவருடைய வழிமுறையில் மார்க்சிய நோக்கும் அதைக் கடந்து செல்லும் எத்தனமும் வெளிப்படுவது உற்சாகமான வாசிப்பினை நல்கும் தொகுப்பாக இதை மாற்றுகிறது.

இத்தொகுப்பின் கதைகள் பேசும் சிக்கல்களை மூன்று விதமாக வகுத்துக் கொள்ளலாம். மூன்றுமே தனிமனிதன் என்ற பாத்திரத்துடன் தொடர்புடையது.

தனிமனிதன் சமூகத்துடன் கொள்ளும் இயைபு மற்றும் விலகல் சார்ந்த ஒரு தளம் அனைத்து கதைகளிலும் இருக்கிறது. தேடல் என்ற கதையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வெறிகொண்டு படித்து முன்னேறிய சோமு தான் படித்த கல்லூரிக்கு திரும்ப வருகிறான். தற்போது தான் வாழும் வாழ்க்கை பொருளற்றது என்றும் தன் கல்லூரி வாழ்க்கையே மகிழ்ச்சியானது என்றும் நினைத்து திரும்பி வருகிறவனுக்கு கல்லூரி கொடுப்பது மேலும் கசப்புகளை மட்டுமே. உச்சமாக அவன் படிக்கும் காலத்தில் ‘பொறுப்பின்மையின் உச்சம்’ என்று யாரை நினைத்திருந்தானோ அவனையே அக்கல்லூரி கொண்டாடுகிறது. இவ்வாறெல்லாம் வாழ்ந்தால் இச்சமூகம் இதையெல்லாம் தரும் என்ற கற்பிதம் உடைந்து போகக்கூடிய இடத்தை மிகச்சரியாக தொடும் கதையாக தேடலை வாசிக்கலாம். இரத்தம் இதே வகைமையில் மற்றொரு கதை. நல்ல குடும்பத்தில் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் ஒரு கலவரத்தில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். அவளுடைய நற்குணங்கள் அனைத்தும் திரிபடைகின்றன. இரத்தம் என்ற தலைப்பு கதைக்கு ஒரு வகையில் புது பரிமாணத்தை அளிக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட ரத்தம். சாதாரணமாக நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களை ‘நல்ல ரத்தம்’ என்றுதான் சொல்கிறோம். அப்படியொரு நல்ல குடும்பத்தில் பிறந்தவள் சிதைக்கப்படுவதும் ரத்த வெறியால்தான். இத்தொகுப்பு முழுவதுமே தனிமனிதன் சமூக நடைமுறைகளால் அவனுடைய ஆதி இயல்பை கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்கிறான் என்கிற தொனி பல கதைகளில் வெளிப்படுகிறது.

இரண்டாவதாக தனிமனிதனின் ஆன்மீக தத்தளிப்பு சார்ந்த ஒரு தளம். தொகுப்பின் முதல் கதையான வீழ்ச்சி இத்தன்மைக்கு சிறந்த உதாரணம். இக்கதையின் தொடக்கம் ஒரு வகையில் கிறிஸ்துவின் இறுதிச் சபலம் நாவலின் தொடக்கத்தை நினைவுபடுத்துகிறது. விடிதல் ரம்மியமானதாக இருக்கிறது. இயற்கையை அனுபவங்கொள்ளும் கதைசொல்லியின் மனம் தன்னை அதன் ஒரு பகுதியாக உணர்கிறது. ஆனால் அது கொஞ்சநேரமே நீடிக்கிறது. அவன் அன்றாடம் உயிர் வாழ்வதற்காக செய்ய வேண்டிய பணிகளின் நினைவு அவனை வருத்துகிறது. பெண்களின் மீதான விருப்பம் பதற்றம் கொள்ள வைக்கிறது.

/ஏற்கெனவே அழுக்கடைந்துவிட்டிருந்த அவனுடைய காற்சட்டையில் இன்னும் சேற்றை வாரி இறைக்கும் நோக்கத்துடன் இருண்டுவிட்ட வானத்தின் இடிமுழக்கத்துக்கு ஏற்ப ஒரு கறுத்தக் கார் பிசாசு போல ஓடி வருகிறது/

அவனுக்குள் அழுக்கடைந்தது எது என்ற கேள்வியை நோக்கி வாசகனை நகர்த்துவது இக்கதையின் வெற்றி.  புதுயுகம் பிறக்கிறது என்ற கதையும் ஒரு வகையான தத்தளிப்பையே பேசுகிறது. கதை சொல்லி முற்போக்கானவன். அனைத்தையும் விஞ்ஞானப்பூர்வமாக அணுக நினைப்பவன். ஆனால் தன்னுடைய குழந்தை இறந்து போகும் தருணத்தில் அவனால் அவனுடைய முற்போக்குத்தன்மையை பேணிக்கொள்ள இயல்வதில்லை.

/உங்கள் முன்னேற்றம் எங்கட கடவுளையே கொண்டு போட்டது/ என்று குழந்தையை பறிகொடுத்த தாய் சொல்வதாக கதை முடிகிறது. பிறக்கும் புதுயுகத்தில் மனிதனின் ஆன்மீகம் என்னவாக இருக்கப்போகிறது என்ற கேள்வியின் தொடர்ச்சியை பல கதைகளிலும் பார்க்க முடிகிறது.

மூன்றாவதாக ஆன்மீகத்தையும் காமத்தையும் வேடிக்கையாகவும் தீவிரமாகவும் இணைத்துப் பார்க்கும் தளையசிங்கத்தின் தைரியம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. பொதுவாக நம்முடைய முற்போக்கு எழுத்தாளர்களுக்கு பெண்கள் மீதான கரிசனம் அதிகம். ஜெயகாந்தனைப் பாருங்கள். அவரால் கங்காவிடம் எத்தவறையும் காண முடியவில்லை. சுதந்திர இச்சைகள் கொண்ட ‘நல்ல பெண்ணாகவே’ கங்கா வருகிறாள். ஆனால் அதுவொரு கற்பனை மட்டுமே. உலகின் அனைத்து சமூகங்களும் காமத்தை முறைப்படுத்தி இருக்கின்றன. இந்த முறைப்படுத்தல்கள் மீது ஆணுக்கோ பெண்ணுக்கோ புகார்கள் இருக்கலாம். ஆனால் ஒரு சமூக நடைமுறை ஒரு பாலினத்திற்கு முழுமையான அநீதியை இழைப்பதாக இருக்க இயலாது.  ஆனால் நாம் முற்போக்கானவர்களாக யோசிக்கும்போது ஒடுக்குகிறவன் ஒடுக்கப்படுகிறவன் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொள்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களாக நாம் கற்பனை செய்கிறவர்களை கரிசனத்துடனேயே நோக்கிறோம். அதனால்தான் முற்போக்கு எழுத்தாளர்கள் பெண்களை கூடுமானவரை ஆண்களால் பயன்படுத்திக் கொள்ளப்படும் அபலைகளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால் வாழ்தலுக்கான தந்திரங்களுடனேயே ஆண் பெண் என அனைவரும் பிறக்கிறோம். தந்திரம் என்பதை சமூக நடைமுறைகளை ஏமாற்றியோ பயன்படுத்திக்கொண்டோ தனக்கு வேண்டியதை அடைவது என்று இங்கு வகுத்துக் கொள்ளலாம். இன்று ஓரளவு இது பற்றிய தெளிவிருந்தாலும் தளையசிங்கம் எழுதியது யமுனா உருகி நிற்கும் தெய்வச்சிலையாக உணர்ச்சிகரமாக சிலாகிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில். அப்போதே தளையசிங்கத்திடம் இந்த கரிசன மயக்கங்கள் இல்லை. கோட்டை என்கிற கதை அதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

தளையசிங்கம் ஆன்மீகத்தையும் காமத்தையும் இணைத்துப் பார்ப்பது காமத்தின் மீதான பயத்தாலோ விலகலாலோ இல்லை. தி.ஜானகிராமனின் கதாப்பாத்திரங்களிடமும் இத்தகைய தத்தளிப்பு உண்டு. ஆனால் அத்தத்தளிப்பு காமம் சார்ந்த குற்றவுணர்வினால் எழுவது. தளையசிங்கம் மானுட விடுதலை என்பதை காமத்திலிருந்து விலக்கப்பட்ட புனிதமான ஒன்றாகக் கருதவில்லை. கோவில்கள் என்ற கதை மரணம் காமம் மீட்பு என்ற மூன்றையும் ஒன்றையொன்று தொடர்புபடுத்துகிறது. சபதம் காமத்தை வைத்து எழுதப்பட்ட தமிழின் நல்லதொரு பகடிக்கதை. தொகுப்பின் சிறந்த கதையென தொழுகையைச் சொல்லலாம். தளையசிங்கத்தின் பிரபலமான கதையும் கூட. கதை ஒரு கள்ள உறவில் தொடங்குகிறது. ஆனால் ஆணும் பெண்ணுமாக மட்டுமே மாறிநிற்கும் ஒரு ஆதாரவிசையில் முடிகிறது. செல்லம்மா  முத்துவை லிங்கமாகவும் முத்து செல்லம்மாவை  அம்மனாகவும் உணர்கிறார்கள். இதை மட்டுமே சொல்லியிருந்தால் இது சாதாரண கதையாகி இருக்கும். பின்னணியில் கோவில் பூசை நடக்கிறது. செல்லம்மாவும் முத்துவும் புணரும் சமயத்தில் மொத்த ஊரும் சிவனையும் பார்வதியையும் மொத்த ஊரும் வழிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆன்மீகமும் கலைத்தேட்டமும் மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளை மேல்நிலையாக்கம் செய்து எய்தப்படுகிறவை என்றொரு நம்பிக்கை உண்டு. இக்கதை அந்நம்பிக்கையை எதிர்புறமாக கிழித்துச் செல்கிறது.

நெடுங்காலமாக தொடரும் நம்பிக்கைகள் கேள்விக்கு உட்படுத்தப்படக்கூடாதவை அல்ல. அதேநேரம் நெடுங்காலமாக தொடரும் நம்பிக்கைகள் தூக்கி எறியப்பட வேண்டியவையும் அல்ல. அவற்றை தன் அகச்சான்றின்படி ஆராய்ந்து பார்ப்பதே ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடியது. மு.தளையசிங்கத்தின் இத்தொகுப்பு அவ்வகையில் நல்லதொரு வழிகாட்டி. புதுயுகம் பிறக்கிறது என்ற கதையில் கதைசொல்லியின் மனைவி பூஜையறையில் இருப்பாள். கதைசொல்லியின் சிகரெட்டிலிருந்து வெளியேறும் புகை அந்நேரம் பூஜை அறையினுள் நுழையும். தளையசிங்கத்தின் கதைகளையும் பூஜையறையினுள் நுழையும் சிகரெட் புகையாக பார்க்கலாம்.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.