/

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று அசைவியக்கத்தை அறிந்து கொள்ள விரும்பும் யாவருமே அயோத்திதாசரைக் கற்றுதான் ஆக வேண்டும்: முனைவர் பா.ச.அரிபாபு

நேர்கண்டவர் சுரேஷ் பிரதீப்

முனைவர் பா.ச.அரிபாபு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இளமை முதலே நாட்டுப்புறவியல் ஆய்வுகளிலும் வழக்காறுகளை ஆவணப்படுத்துவதிலும் மிகுந்த ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு வருகிறவர். பஃபூன் என்கிற யூடியூப் சேனல் வழியாக விளிம்புநிலை மக்களின் வாழ்வியல், கலை, பண்பாடு, அரசியல் என பலவற்றையும் ஆவணப்படுத்தி வருகிறார். சென்ற ஆண்டு இவர் ஒருங்கிணைத்த பேராசிரியர் டி தருமராஜின் அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை நூல் மீதான இருநாள் கருத்தரங்கு மிக முக்கியமானதொரு பண்பாட்டு நிகழ்வு. இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து அயோத்திதாசரியம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறார். ராமாயண ஒயில், திணை மரபும் நவீனமும் போன்றவை இவரது பிற ஆய்வு நூல்கள். சமீபத்தில் வெளியான தமிழறம் நாட்டுப்புறவியல் சிறப்பிதழின் ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றி இருக்கிறார். இது அரிபாபு அவர்களுடன்  மின்னஞ்சல் வழியே நிகழ்த்திய நேர்காணல்

உங்களைப் பற்றியும் குடும்பம் பற்றியும் சொல்லுங்கள். மேலும் நாட்டுப்புறவியலைத் துறையாகத் தேர்ந்து கொண்டது இவற்றைப் பற்றி..

வணக்கம்.  எனது சொந்த ஊர், பரமக்குடிக்கு  அருகில்  உள்ள  சிறிய கிராமம் S. அண்டக்குடி. அப்பா பாலுக்கண்ணு, அம்மா சரஸ்வதி. என்னுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள். நான் கடைசிப் பையன். சகோதரி இல்லை. விவசாயக் குடும்பம். விவசாயம் என்றால், மானாவாரி விவசாயம்தான். வானம் பார்த்த பூமி. வறுமையோடு மல்லுக்கட்டிதான் குடும்பம் நகர்ந்தது.  நான்கு அண்ணன்களும்  பள்ளிப்படிப்பிற்குப் பிறகு தொடர்ந்து படிக்க வில்லை. ஆக, விவசாயக் குடும்பத்தில்  பிறந்து வளர்ந்த நான், பரமக்குடியில் உள்ள அரசுப்பள்ளி வழியாகப்  பள்ளிப் படிப்பை நிறைவு செய்தேன். பின்பு, பொறியியல் படிக்க வேண்டும் என்பது எனது பெரும் விருப்பமாக இருந்தது. ஏனெனில்  இரண்டாயிரமாவது ஆண்டில் பொறியியல் படிப்பிற்குப் பெரும் வரவேற்பு இருந்தது அல்லவா? ஆனால்,  எனக்கு  அரசு ஒதுக்கீட்டில் இடம் இடக்கவில்லை. 

கல்லூரிப் படிப்பை கண்டிப்பாகப் படித்திட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெற்றோர்களும் அண்ணன்களும்  சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வெளியூருக்குச் சென்று படிக்க வேண்டும் என்றும் விரும்பினார்கள். தமிழ் இலக்கியம் எடுத்துப் படிக்க விரும்பினேன். காரணம்,  பலரும் சொல்லுவதுதான். பள்ளியில்  நன்றாகப் பேசக் கூடியவனாக இருந்தேன். இரண்டு கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஒன்று அரசுக் கலைக்கல்லூரி, இராமநாதபுரம். மற்றொன்று   அமெரிக்கன் கல்லூரி, மதுரை. அமெரிக்கன் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றே எனது அண்ணன்கள் விரும்பினார்கள். கல்லூரி விடுதியில் தங்கி ஐந்து ஆண்டுகள்(B.A.,&M.A.,) தொடர்ந்து பயின்றேன்.   மகிழ்சியான நாட்கள். என்னை வடிவமைத்துக் கொள்ள பெரிதும் உதவியது. இளங்கலையில் முன்னணி மாணவராக இருந்த நான், முதுகலையில்  முதல் மாணவனாக உருமாற்றம் அடைந்திருந்தேன். 

தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழியாக ஆய்வியல் நிறைஞர்(M.phil.,) மற்றும் முனைவர் பட்டங்களை(Ph.d.,) உரிய  காலத்திற்குள் முடித்துவிட்டேன். ‘திணைக்கோட்பாட்டு அடிப்படையில்  தமிழ் நாவல்கள்’ என்பதுதான் எனது ஆய்வுத் தலைப்பு. 27 ஆம் வயதிலேயே முனைவர் பட்டத்தைப் பெற்றுவிட்டேன்.

2009  இல் நான் பயின்ற அமெரிக்கன் கல்லூரியிலேயே உதவிப் பேராசிரியராக  தேர்ந்தெடுக்கப்பட்டேன். முதுகலையில் என்னுடன் பயின்ற வகுப்புத் தோழி ‘சலோமி’ அவர்களைக்  காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன்.  இரண்டு மகன்கள். மூத்தவர் ‘எழில் அமுதன்’ 3 ஆம் வகுப்பு.  இளையவர் ‘எழில் ஆதவன்’ LKG.

‘நாட்டுப்புறவியல்’ எனக்கு ஒரு பாடமாக  கல்லூரியில் அறிமுகமாகியதென்றாலும் நாட்டார்  வழக்காறுகளோடுதான் வளர்ந்தேன். வருடந்தோறும் நடக்கும்  ஊர் தெய்வமான ‘வாழவந்தாள்’ அம்மனுக்குத் திருவிழா கொண்டாடப்படும் ஒரு வாரகாலத்தில் ஒயில் ஆடுவதும்,  மழைப்பாடலும், கும்மிப்பாடலும்  பாடப்படுவதும் இன்று வரை தொடர்ந்து வரும் வழக்கம். நான் ஒயிலாட்டத்தில் தவறாது பங்கெடுப்பேன். ஒயில் நன்றாக ஆடவரும். மேலும், இறப்பு வீட்டில் பாடப்படும் ‘ஒப்பாரி’ரொம்பவும்  பாடல் பிடிக்கும். அதில் வெளிப்படும் சோகம் ஒரு மாதிரி நம்மை நிலைகுலைய வைக்கும் அல்லவா?

பிறகு, இறப்பு நடந்த வீட்டிற்குப்  பிணம் தூக்கிய  அன்றைய இரவில்  ஊர் மக்கள் அனைவருமே  மீண்டும் ‘கேதம்’ கேட்கச் செல்லுவது வழக்கம். அப்போது பெண்கள் ‘நிறை செம்பு’தண்ணியை முன்னால் வைத்து ஒப்பு சொல்லி அழுவார்கள். அவர்கள் கலைந்தற்குப் பிறகு, ஆண்கள் மாரடிப்பார்கள். (மார்பில் அடித்துக் கொண்டு புலம்பிப் பாடுவது) சிறு வயதில் பார்வையாளனாகவும் வளர்ந்தற்குப் பிறகு ஒன்றிரண்டு இறப்பு வீட்டில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.  பிறகு, எனது குலசாமி ‘முனியாண்டி’.இந்தச்சாமி வழிபாட்டில் ஆடப்படும் ‘சாமியாட்டம் ‘ வசீகரிக்கக்கூடிய ஒன்று. ஆண் சாமிகளும் பெண் சாமிகளும் இணைந்து ஆடுவார்கள். எனது பெரியப்பா சாமியாடி. அவர் இறந்தற்குப் பிறகு என்னுடன் பிறந்த மூன்றாவது அண்ணன் சாமியாடிக் கொண்டிருக்கிறார். சாமியாடிக் குடும்பம். எனக்கு வழிபாட்டின் மீதும்  பெரிய நம்பிக்கை இல்லை. என்றாலும்,  இந்தமாதிரியான பண்பாட்டு அடையாளங்களைப் புறந்தள்ள முடியாதல்லவா? ஒரு பங்கெடுப்பாளனாக இன்று வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறேன்.

 அழிந்து வரும் பண்பாட்டுச் செல்வங்களைச் சேகரிக்க வேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா?அப்படியே எனது வேலைகளைத் துவங்கினேன். முதுகலை படிக்கும் போதே மழைப்பாடல்களையும் திருமணப் பாடல்களையும் தொகுக்கத் தொடங்கி விட்டேன். குறிப்பாக, ஒயிலாட்டம் எனது ஊரில் மட்டும் அல்லாது எங்களது வட்டார அளவில்  பிரபலமாக இருக்கும். காரணம், இராமாயணக் கதையைத் தழுவிய ஒயிலாட்டம்.  கதையும் பாடலுமாக வடிவம் கொண்டது. முன்பெல்லாம் எனது முன்னோர்கள்  மூன்று  முழு நாள் இரவு நிகழ்த்தியிருக்கிறார்கள். இன்று அவ்வாறு இல்லை. சூழலும்  மாறிவிட்டது.

நான் ஒயிலாட்டக் கதையைத் தொகுக்க வேண்டும் என்று விரும்பினேன். காரணம், வஸ்தாவிகளில்  ஒருவர் இறந்து விடவே , முழுமையற்ற ஒயிலாட்டமாக  மாறத் தொடங்கியது. இருக்கும் ஒரு வஸ்தாவியிடமாவது தொகுத்திட  வேண்டி, அவரைப் பின் தொடர்ந்தேன் அவரது பெயர் சி.வீரன். 2 மாதங்கள் ‘அவர்  சொல்ல நான் எழுத’ என்று முழுமையாக ஈடுபட்டேன். பின்பு, 2007 இல்  இராமாயண ஒயில் என்னும் தலைப்பில்  நூலாக்கம் பெற்றது. இந்நூலை  ‘நாஞ்சில் நாடன் வந்து வெளியிட்டார். (முதல் பதிப்பு ‘அனன்யா பதிப்பகம்’ -தஞ்சாவூர், இரண்டாம் பதிப்பு கருத்து=பட்டறை-மதுரை) நாஞ்சில் நாடன் அப்போது ‘தீதும் நன்றும் என்ற பெயரில் ஒரு தொடர் ஒன்றை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்தார்.   நூல் வெளியான மறுவாரத்தில் இந்நூல் குறித்தும் சிறு குறிப்பை எழுதினார். மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், கல்லூரியில் சேர்ந்தற்குப் பிறகு, UGC உதவியுடன்  2,50,000  மதிப்பீட்டில்  ‘fertility rituals a collection and recording’ என்னும் தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டேன். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘மழைச் சடங்கு குறித்த ஒர் ஆவணப் படம் ஒன்றையும் எடுத்தேன்.  இவ்வாறான பணிகளே  நான் நாட்டுப்புறவியல் துறைக்குள் நுழைவதற்கான துவக்கமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

அயோத்திதாசர் உங்களுக்கு எவ்வாறு அறிமுகமானார்? ‘அயோத்திதாசரியம்’ நூலின் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.

அயோத்திதாசர் குறித்துத் தமிழகத்தில் பலருக்கும் கவனம் வந்து சேர்ந்ததில் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவே நினைக்கிறேன்.  அவரது ‘நான் பூர்வ பௌத்தன்’ என்னும் சிறிய நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஒரு  மாயச் சுழலாக சுற்றியது. அயோத்திதாசரைப் பலரும் அறிந்து கொள்ளவும் வாசிக்கத் துவங்குவதற்கும் வாய்ப்பாக அமைந்தது.  நூல்  வெளியாகி மூன்றாண்டுகள் கடந்தே அதாவது முதுகலை படிக்கும் போதே எனக்கு அறிமுகம் ஆகியது. அந்த வயதில்  தாசர் குறித்த முழுமை எனக்கு ஏற்படவில்லை. இன்று வரையிலும் என்று கூட சொல்லாம். ஆனால், அயோத்திதாசர் என்னும் நவீன ஆளுமையைப் பற்றியும்   அவரது செயல்பாடுகள் குறித்தும்  அறியத் தலைப்படாமல் செல்வது முறையாகாது.  ஏனெனில்,  தமிழ்ச் சமூகத்தின்  வரலாற்று அசைவியக்கத்தை அறிந்து கொள்ள விரும்பும்  யாவருமே  விருப்பு வெறுப்பு இல்லாமல் அயோத்திதாசரைக் கற்றுதான் ஆக வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் நான் துவக்கத்தில் இருக்கிறேன். இன்னும் மூன்று ஆண்டுகளாவது வேண்டும்.

‘அயோத்திதாசரியம்’ நூல் உருவான பின்னணி  கொஞ்சம் சுவாரசியமானதுதான். ஆசிரியர் -மாணவர் உறவு சம்மந்தப்பட்டது. பேராசிரியர்  டி. தருமராஜை பல ஆண்டுகளாக அறிந்திருந்தும் பழகுவதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. மாறிய சூழலில் சிறந்த உரையாடல்காரர் என்பதைப் நன்றாக பழகியற்குப் பின்னரே தெரிந்து கொண்டேன். அவரது எழுத்துக்களைப் பின் தொடர்ந்த நான், ஒரு சூழலில்  நேரடியாக அவரது பேச்சைக் கேட்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.  அவரை மையமாக வைத்து ஒரு வாரகால கோட்பாட்டுப் பயிலரங்கை மதுரையில் செயல்படும் ‘கலைடாஸ்கோப்’ என்னும் அமைப்பானது கொடைக்கானலில் ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தோம். அந்தப் பயிலரங்கில் டி. தருமராஜ்  கோட்பாடுகளை மிகவும் எளிமையாக விளக்கினார்.  மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம். உற்சாகமான நிகழ்வு அது. நான் உறுதியாகச் சொல்வேன் டி. தருமராஜ் சிறந்த சிந்தனையாளர் மட்டும் அல்ல சிறந்த ஆசிரியரும் கூட.

தொடர்ந்து,  ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ ஆகிய நூல்களின் வருகையின் போது தமிழகம் கடந்து வெளிநாடுகள் வரையிலும் வாசகர்கள் டி. தருமராஜின் எழுத்துக்களைப்  பின் தொடந்தார்கள். குறிப்பாக, அயோத்திதாசர் புத்தகம் மிகுந்த கவனத்தைப் பெற்றது. இது உண்மையிலேயே நல்லவிதமான  போக்கு என்றுதான் சொல்வேன். ஒரு  நூல் மீதான உரையாடலும் விமர்சனமும் எழுவதென்பது ஆரோக்கியமான சமூகத்தின் வெளிப்பாடு.  இந்த உரையாடலுக்கு ஒரு வடிவம் கொடுக்கவே விரும்பினோம் . இந்த வடிவ முயற்சியிலிருந்து பிறந்தது தான் ‘அயோத்திதாசரியம்’  நூலாக்கம்.  நூலில் எழுத்தாளர்கள் , ஆய்வாளர்கள் , பேராசிரியர்கள் என பலரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அயோத்திதாசரியத்தை எவ்வாறு வரையறுப்பீர்கள்? கடந்த இருபதாண்டுகளில் அயோத்திதாசர் என்ற பெயர் மெல்ல மெல்ல தமிழ் அறிவுச்சூழலில் நிலைபெற்றுவிட்டது என்றாலும் பெரியாரியம் அம்பேத்கரியம் போன்ற இயமாக அயோத்திதாசரியம் எத்தன்மை உடையது?

இது கனமான கேள்வி. அயோத்திதாசரைத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருப்பவர்களை நோக்கிக் கேட்கப் பட வேண்டியது. என்றாலும், எந்த இயமாக இருந்தாலும் அது உருவாவதற்கும் அது பரவலாக பேசப்படுவதற்கும் தேவை இருந்தாக வேண்டும். தமிழ்ச் சூழலிலோ அல்லது இந்தியச்சூழலிலோ  தாசராக இருக்கட்டும் அல்லது அம்பேத்தகர் மற்றும் பெரியாராக இருக்கட்டும்  மூவரின் தேவையும் தற்காலத்தில் வலுவாகத் தேவைப்படுகிறது. வலதுசாரித்துவ சிந்தனை மேலெழுந்து வரும் சூழலில் இவர்களே நமக்குத் தேவை. இவர்கள் காட்டும் ஒளியில்தான் நாம் நடை போட வேண்டும்.  மூவருமே கைவைத்தது பார்பனியத்தின்மீதும் அதன் தோற்றத்தின் மீதும்தான். மூவரும் விரும்பியதும் மனித விடுதலையையும் சுய மரியாதையையும்தான். இந்த இருவருக்கும் முன்னோடி அயோத்திதாசர்.  ஆனால், அம்பேத்கரிய எழுத்துகளுக்கும் பெரியாரிய எழுத்துகளுக்கும்  நவீன கால அரசியலில் குறிப்பிடத்தகுந்த இடம் கிடைத்தது. காரணம்,  அரசியல் இயக்கப் பின்னணி.  இதன்வழி உருவான தொடர் பேச்சுகள்  மற்றும் எழுத்துகள்.  இது அயோத்திதாசருக்கு  நிகழ்வதற்குண்டான சூழல் முற்றிலும் உருவாகவில்லை.

தொண்ணூறுகளில் உருவாகி வந்த தலித் இயக்கங்கள் கூட அம்பேத்கரின் சிந்தனைகளை முழுமையாக எடுத்துக் கொண்டார்களேயொழிய  தாசரை எடுக்கவில்லை. திராவிட இயக்கங்கள் முற்றிலும் மோசம். ஐம்பதாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் தாசர் குறித்து அவர்கள் பேசப்படாததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.  ஆனால் அந்த இயக்கம் பேசவில்லை என்பதுதானே வரலாறு.   இதை மீறி அயோத்திதாசர் பேசப்படுவது  சிந்தனையாளர்கள் வெளியில்.  தவிர்க்க முடியாமல் சமகாலத்தில் அயோத்திதாசர் மையத்திற்கு வந்துவிட்டார் என்பதை மறுக்க முடியாவிட்டாலும், மக்கள் மையமாவது  சாதாரணமானது அல்ல.  மிகப் பெரிய பணிகளைத் தொடர வேண்டும்.

அயோத்திதாசரியம் என்பது காந்தியத்தை விட  அம்பேத்கரியத்தை விட  பெரியாரியத்தைவிட வேறுபட்டது; பன்முகத்தன்மை கொண்டது. காந்தியம் ஒரு வாழ்வியல் என்றால் அயோத்திதாசரியமும் ஒரு வாழ்வியல்தான்.  இந்த நிலத்தில் திராவிடம்- மொழி – சுயமரியாதை – பிராமண எதிர்ப்பு-பெண்விடுதலை- இட ஒதுக்கீடு என்ற வகையில் நவீன அரசு கால்கொண்டது அல்லவா? இந்த கால்கோளுக்கு அடித்தளம் அல்லது முன்னோடி அயோத்திதாசர். அயோத்தித்தாசரியத்திலிருந்து பிறந்தது திராவிட இயக்கம் .

நாட்டுப்புறவியலும் அயோத்திதாசரும் எப்புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனர்?

நாட்டுப்புறவியல் என்பது பண்பாட்டை ஆராயும் நவீன அறிவியல். இந்த அறிவியலோடு அயோத்திதாசர் எப்புள்ளியில்  இணைகிறார் என்கிற கேள்விக்கே இடம் இல்லை. காரணம், நாட்டுப்புறவியல் எதைப் பேசத்தலைபடுகிறதோ அதனை முன்னமே பேசியவர் என்கிற வகையில் முன்னோடியாக நிற்கிறார். அதனால்தான் பேராசிரியர்  டி. தருமராஜ்  அயோத்திதாசரை  ‘தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை’ என்று நிறுவுகிறார்.

‘நாட்டுப்புறவியல்’ என்பதை வாய்மொழி வழக்காறுகள் ,நிகழ்த்துக்கலைகள், சமயம் மற்றும் நம்பிக்கைகள்  மற்றும் பயன்படு பொருள்கள்  ஆகியன குறித்துப் பேசுகிறது என்றுதானே வரையறுக்கிறோம்.  இந்த வரையறைகளை முழுவதும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியவர் அயோத்திதாசர் ஒருவர் மட்டும்தான். மேலதிகமாக, ஒவ்வொரு சடங்கும் இன்று நிகழ்த்தப்படுவதற்கு முன்பு எவ்வாறு நிகழ்த்தப் பட்டிருக்கும் என்று எடுத்தும்  ஆராய்ந்து காட்டுகிறார்.

குறிப்பாக, அயோத்திதாசர் புராணங்களைத் தனது ஆராய்சிக்கு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக நாட்டுபுறவியலுக்கு மேலும் நெருக்கமானவராக மாறுகிறார். ஆனால்  இன்று சொல்லப்படும்  ‘இந்து’புராணக் கதையை மறுக்கும் அவர் மாற்றுப் புராணத்தை முவைக்கக் கூடியவராக  வெளிப்படுகிறார். ‘கார்த்திகைத் தீபம்’ பற்றியும்  ‘தீபாவளி’ பண்டிகை குறித்தும் அவர் வைக்கும்  பார்வையைச் சான்றாகக் கொள்ளலாம். மேலும், அம்மன் வழிபாடு,திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு, மொட்டையடித்தல், மஞ்சலாடை உடுத்துதல், சங்கராந்தி என்று நாட்டுப்புறவியல் எதனைக் கவனப்படுத்துகிறதோ அதனையே ஆராய்ந்தவர் என்ற வகையில் அயோத்திதாசரை நாட்டுப்புறவியலாளர் என்று அழைப்பது பொருத்தம் தானே!

‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர்’ வரை நூல் வெளிவந்தபிறகு அந்நூலின் மீதான எதிர்வினைகள் அனைத்தையும் தொகுக்கும் விதமாக ஒரு கருத்தரங்கினை ஒருங்கிணைத்தீர்கள். அந்நூலையும் அயோத்திதாசரையும் தமிழ் அறிவுச்சூழல் எவ்வாறு உள்வாங்க இருக்கிறது என நினைக்கிறீர்கள்? 

இக்கேள்விக்கு முன்னமே கொஞ்சம்  பதில் அளித்திருக்கிறேன்.  என்றாலும் ஒன்றை மட்டும்  தைரியமாகச் சொல்வேன். எதனையும் வலிந்து செய்யக் கூடாது. அதற்கான சூழல் தானாகவே உருவாக வேண்டும். கூடுதலாக, எதனை எடுக்க வேண்டுமோ அதனை  வாசகர்கள்  கண்டடைந்து கொண்டாடுவார்கள். அது  டி. தருமராஜின் அயோத்திதாசர் பிரதிக்கு நடந்தது. அண்மைக்காலத்தில் அதிகமாக விற்பனயான ஓர் ஆய்வுப் பிரதியாக நிற்கிறது. இன்னும் இப்பிரதி பற்றிய உரையாடல் எழுந்தவண்ணம் உள்ளது.  இதனையே மேலும் வளர்க்க விரும்பினோம். இது காலத்தில் செய்ய வேண்டிய கடமை. அதனால்தான் பன்னாட்டு அளவிலான  இணைய வழியிலான கருத்தரங்கை  நடத்தினோம். அதிகமான பங்கேற்பார்கள் . வெற்றியடைந்த நிகழ்வு. அயோத்தி தாசரை  உரையாடலுக்குள்  நிறுத்தினோம்.  கரோனா காலத்தில்  மக்கள் முடங்கிக் கிடந்தார்கள். ஒரு வகையில் சிறைமாதிரியான வாழ்வுதான் நமக்கெல்லாம் வாய்த்தது.  இந்த சிறையிலிருந்து  மீள்வதற்கு அயோத்திதாசர் துணைபுரிந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.  எங்கெல்லாம் மக்கள் அடக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் அயோத்திதாசரின் உரையாடல் நமக்குத் தேவை.  இதனைத் தொடர்ந்த உடன் நிகழ்வுதான் ‘டி. தருமராஜின் அயோத்திதாசரியம்’ தொகுப்பு  நூல்.

எதிர்காலத்தில் அயோத்திதாசர் எவ்வாறு பேசப்படுவார் என்பதை முன்கூட்டியே அனுமானிக்கக் கூடாதல்லவா? வரலாற்றுச் சூழல்தானே தீர்மானிக்கும்.  ஆனால் எக்காலத்திற்கும்  அயோத்திதாசர் குறித்த ஆக்கங்கள் சமூகத்திற்குத் கண்டிப்பாகத்  தேவை. அந்தத்தேவைக்கு  இந்த இரண்டு பிரதிகளும் முக்கியப் பங்காற்றும்.அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை  நூல்முதல் நூலாகவும், ‘டி. தருமராஜின் அயோத்திதாசரியம் வழிநூலாகவும் காலத்தில் நிற்கும். வளரும் தலைமுறையினர் அயோத்தாசரின் மூலத்தைப் முழுமையாகப் படிக்காவிட்டாலும் அவர் பற்றிய ஒரு சித்திரத்தை  வரைந்து கொள்ளுவார்கள். இப்பணியில் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களே முழுமையாக நிறைந்திருக்கிறார். நான் தொகுத்தளிக்கும் சிறு வினையை மட்டுமே ஆற்றியிருக்கிறேன்.

கிட்டத்தட்ட பால்யம் முதல் கிராமியக் கலைகளுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். பதினைந்து ஆண்டுகளாக நாட்டுப்புற கலைகள் சார்ந்த ஆய்வுகளில் பதிவுகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். கிராமப்புறங்கள் ஒரு வகையான மெய்நிகர் நகர்மயத்தை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கும் இன்றைய காலத்தில் நாட்டுப்புறக்கலைகளில் எவ்வகையான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக நினைக்கிறீர்கள்? மாறிவரும் சமூகச்சூழலுக்கு ஏற்ப இக்கலைகள் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றனவா?

நான் அவதானித்த அளவில் சடங்குகளோடு  இணைந்து  வெளிப்படும் கலைகளில் பெரிய மாற்றம்  வந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன்.  காரணம், சடங்கியலின் குணமே அதனைக் காப்பாற்றுகிறது.  சான்றாக மழைப்பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். கலப்புக்கு இடம் இல்லை. ஏனெனில் அந்தக் களமும்/  சூழலும்  பொழுதுபோக்கிற்கு இடமளிப்பதில்லை. பார்வையாளர்களும் கூட கொண்டாட்ட மன நிலையில் இருப்பதில்லை. இதே போல வில்லுப்பாடலானது  உயிர்ப்போடே இருக்கிறது. காரணம்  ஒரு தெய்வத்தோடு இணைத்துக் கதை சொல்லப்படுவதால் தாக்குப்பிடிக்கிறது.

ஆனால்  ‘கும்மிப் பாட்டில்’ கலப்படம் வந்திருப்பதையும்  பார்க்க முடிகிறது. ஆதியிலிருந்து ‘கும்மி’க்கென்று  ஒரு மெட்டு இருக்கிறதல்லவா? அது இன்று சிதைந்து வருகிறது என்றுதான் சொல்வேன். கைதட்டி, கால் மாற்றி, குழுமி, நிமிர்ந்து, வட்டமாக  இணையும் போது அவ்வளவு அழகாக இருக்கும். இசைக் கருவிகளுக்கு இடமே இல்லை. கை தட்டல்தான் இசையே. இன்று கிராமங்களில் ‘குத்தாட்டம்’ போடுகிறார்கள். நேரடியாக சினிமா பாடலை ஒலிக்கவிட்டு ஆடுகிறர்கள்.  இல்லாவிட்டால் சினிமா  தாளலயத்தில் அமைந்த  நாட்டுப்புறப்பாடலுக்கு ஆடுகிறார்கள். கொண்டாட்டமும் துள்ளலும் இருக்கிறது. ஆனால், அதனுடைய  ஆதித் தாளமும் அமையும் இல்லை.  இதைக் கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவ்வாறு மாறியிருக்கிறது என்று சொல்லுகிறேன்.

புறக்கலைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில்  கிராமத்தில் நிகழ்தப்படும்  ‘ஸ்பெசல் தியேட்டர்’ என்று  அழைக்கப்படும்  மேடை நாடகங்கள்  முழுவதும் கலப்படத்திற்கு உள்ளாகிவிட்டன. சங்கரதாஸ் சுவாமிகளோ அல்லது பம்மல் சம்பந்த முதலியாரோ  எழுதிய நாடகங்களை  எந்த மேடையிலும் பார்க்க முடியாது. பங்கு பெறும் கலைஞர்களுக்குத் திறமை இல்லை என்று சொல்லவருகிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். நானும் கள ஆய்வில் கேட்டேன். அவர்கள் சொல்லும் பதில் இதுதான். “உண்மையான நாடகப் பாடல்களைப் பாடினா ரசிப்பதற்கு  பார்வையாளர்களே இல்லை”.என்கிறார்கள். ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில்  90 விழுக்காட்டிற்கு மேல்  சினிமாவின் தாக்கம் தான்  அதிகமாக இருக்கிறதுவேறு வழி இல்லாமல் நாடகக் கலைஞர்களும் சினிமா பாடலைத்தான் பாடி நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ராஜா ராணி’ ஆட்டம் என்கிற ஒரு வகை இருக்கிறது. சில பகுதிகளில் குறவன் குறத்தி நடனம் என்றும் சொல்லுவார்கள். முழுவதும் பாலியல் விரசம். சினிமாவில் இல்லாததா? என்று கேட்கலாம். அதுகூட  ஒரு ஊடகத்தின் வழியாகப் பார்க்கிறோம்.  இது பொது மக்களின்  முன்னால் நிகழ்த்தப்படுகிறது.  பல கிராமங்களில் முட்டி மோதி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நாம்  இத்தகவல்களிலிருந்து புரிந்து கொள்ளவேண்டியதும்  ஆராய வேண்டியதும்   பார்வையாளர்களின் இரசனை மாற்றத்தையே. நாட்டுப்புறக் கலைகள்  மாறிவரும் சமூகப் பொருளாதார பின்னணிக்கு ஏற்ப  தங்களை வடிவமைத்துக் கொள்ளத் தயாராக இருந்தாலும்  பார்வையாளரின் இரசனை மாறிவிட்டதை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்.  மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு  ‘சினிமா’ ஒன்றை மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக  அல்லது கலையாக கற்பனை செய்கிறது.  எல்லாமே சினிமா மயம்தான். இன்று  ஒரு நவீன நாடகத்தை  இயக்கி, நோட்டீஸ்  அடித்து,   விளம்பரப்படுத்தி  கட்டணம் ஏதும் இல்லை என்று  கூட அழைத்துப் பாருங்கள்  ஒரு ஐம்பது நபர்கள் கூட வரமாட்டார்கள்.  ஏன் இந்தச் சிக்கல்? மரபான கலையை இரசிப்பதற்குண்டான சூழலை  நாம் உருவாக்கவில்லை.  தொடர்ச்சியாக,  அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் இல்லை. ;பழக்கப்படுத்தவும் இல்லை.  மேலும், இக்கட்டாக  வந்த ‘கொரானா’  நோய்த் தொற்றானது நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களின் பொருளாதார வளர்ச்சியையும் முற்றிலும் ஒழித்து விட்டது .

இந்தச் சூழலில்தான்  ‘மெய்நிகர்’ யோசனையை முன்வைக்க வேண்டியிருக்கிறது. சான்றாக, ‘பாவைக் கூத்தை’ எடுத்துக் கொள்ளுங்கள்  ஒரு சமூகம் மட்டும் பங்களிப்புச் செய்து வந்த கலை. இன்று மதிப்பிழந்து விட்டது. கிராமம் கிராமமாகச் சென்று பொருள் ஈட்ட முடியாத சூழல் நிலவுகிறது . கூத்துக் கலைஞர்களோ வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள். இக்கலையை அடுத்த தலைமுறையினர்  நிகழ்த்தப் போவதில்லை. தொடந்து நிகழ்த்தாவிட்டால் மறைந்து போகும். இதை எவ்வாறு தடுப்பது என்று யோசிக்கும் போதுதான் ‘மெய்நிகர்’ வடிவம் துணைபுரியும் என்கிறார் பேராசிரியர் டி. தருமராஜ். அசலையும் காப்பாற்றலாம்; பொருளாதார பாதுகாப்பையும்  கலைஞர்களுக்கு வழங்கலாம். இதுதான் நவீன காலத்தில்  அவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த தீர்வாக இருக்க முடியும்.

தமிழறம் நாட்டுப்புறவியல் சிறப்பிதழ் உருவாக்கம் குறித்துச் சொல்லுங்கள்

நாட்டுப்புறவியல் சிறப்பிதழ் யோசனையே   முதல் அலை கொரான காலத்தில் எழுந்ததுதான்.  இதற்கான முன் உரையாடலையும் வடிவத்தையும் வழங்கியவர்  பேராசிரியர் டி. தருமராஜ். இவர் கடந்த ஆண்டு ‘உலக நாட்டுப்புறவியல் நாளில்  ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நவீனம் உச்சத்திலிருக்கும் இக்காலத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வுகளானது  எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

கொரானா  காலத்தில்  மக்களின் தினசரி நடவடிக்கைகள் தொடங்கி, சமூகப் பண்பாட்டுநடவடிக்கைகள்  வரை   தலைகீழாக மாறியதல்லவா? இந்த மாற்றத்தைப் பதிவு செய்ய விரும்பினோம்.  மேலும், நாட்டுப்புறவியலின் செல்திசை மீதான ஓர் உயிர்ப்பான உரையாடலைக் கட்ட விரும்பினோம். இந்தப் பின்னணியிலிருந்து உதயமானதுதான் நாட்டுப்புறவியல் சிறப்பிதழ். நானும், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை ஆய்வாளர் ரா. கார்த்திக் அவர்களும் இணைந்து முன்னெடுத்தோம்.  நல்ல வரவேற்பு. நாடுகடந்தும் பேசப்பட்டது. மிகுந்த உற்சாகத்தை  வழங்கியிருகிறது. தொடர்ச்சியாக  நாட்டுப்புறவியல் துணையோடு  ‘இதழ்’ கொணரும்  திட்டம் வலுவாக உருவாகியிருக்கிறது. இன்னும் மாற்று இதழுக்கும்- அச்சு இதழுக்கும் வரவேற்புக் குறைந்திடவில்லை எனபதற்கு நாட்டுப்புறவியல் சிறப்பிதழே சாட்சியாக நிற்கிறது.

நாட்டுப்புறச் சிறப்பு இதழில் பொது முடக்க காலத்தை முன்வைத்து மெய்நிகர் நாட்டுப்புறம் என்றொரு கருதுகோள் முன்வைத்து இயங்கியுள்ளீர்கள் சரி, ஆனால், நீங்கள் அதற்கு முன்னதாகவே ‘பஃபூன்’ யூடியூப் சேனல் வழியாக நாட்டுப்புற கலைஞர்களையும் வழக்கங்களையும் ஆவணப்படுத்தி வருகிறீர்கள். பஃபூன் சேனலைத் தொடங்க உந்துதல் எவ்வாறு ஏற்பட்டது? 

ஒரு காலத்தில் டி.வி.  வைத்திருப்பது எல்லோருக்கும் எட்டாக் கனி. பார்ப்பதற்குக்  கூட வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. சூழல் மாறியது. மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட  இலவச   ‘கலைஞர் தொலைக்காட்சி’   திட்டம் வழியாக  மலிந்து,  500 க்கும்1000 க்கும் கிடைத்ததைப் பார்த்தோம்.

இன்று டி. வி கான தேவை முடிந்து விட்டது என்று கூட தைரியமாகக் அறிவிக்கலாம். காரணம்,  ‘செல்போன்’.  டி.விக்கான இடத்தை அழித்துவிட்டது. சாதாரணமாக பேப்பர் பொறுக்கி விற்பனை செய்யும் தொழிலாளி தொடங்கி,  அதிக சம்பளம் வாங்கும்  அதிகாரி வரை ஒரே அளவான தரமான செல்போனை வைத்திருப்பதைப்  பார்க்க முடிகிறது.

ஆன்ராய்டு செல்போன் வழங்கிய பெரும் வாய்ப்பு எல்லோருமே ஒரு சேனலைத் தொடங்கலாம் என்பதுதான்.  ஒவ்வொரு யூடியூபருமே சேனலின் ஓனர்தான். இது எவ்வளவு பெரிய செய்தி. சமகாலத்தில் கிடைத்திட்ட பெரும் பொக்கிஷம்.  இந்தப் பொக்கிஷத்தை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதுதான்  நமக்கான அரசியல் தேவை.  இந்தத் தேவையிலிருந்து  பிறந்ததுதான் பஃபூன்.

நானும் எனது நண்பர் ‘கிதியோன் பிரேம் சிங்’ அவர்களும் இணைந்துதான் சேனலைத் தொடங்கினோம். எங்களுக்கென்று ஒரு தெளிவான திட்டமும் வரையறையும் இருந்தது. அதாவது நமது மரபான மண்ணின் கலை,கலைஞர்கள்,  மற்றும் அவர்களது வாழ்வியல். அலைகுடி மக்கள்  மற்றும் பழங்குடி மக்கள்  ஆகியோரது இசை –கலாச்சாரம் –பண்பாடு- போன்றவற்றைச் சமரசம் இல்லாமல் ஆவணப்படுத்தும் அதன் வழியாக ஒரு உரையாடலைத் தொடங்குவதும் தான்  எங்களது நோக்கமாக இருந்தது.  நாட்டுப்புறப்பாடகர் ‘பரவை முனியம்மா’ அவர்கள் உடல் சுகவீனம் இல்லாமல்  கடைசிக் காலத்தைப் படுக்கையில் கழித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியதிலிருந்து பஃபூன் பயணம் துவங்கியது. இதுவே அவர் வழங்கிய கடைசி நேர்காணல்.  இன்றுவரைத் தமிழகத்தின்  வெவ்வேறு நிலக்காட்சிகளினூடாக  பயணமாகிக் கொண்டிருகிறோம்.  

எதிர்காலங்களில்  பஃபூன் வழியாக எவ்வகையான சமூக அசைவியக்கங்களை ஆவணப்படுத்த எண்ணியிருக்கிறீர்கள்? ஏனெனில் இதுவரையிலான காணொளிகள் பன்றிக்கட்டு, குடுகுடுப்பைக்காரர்கள், அன்புராஜுடனான பேட்டி, கூன் பாண்டியன் வழிபட்ட கோவில் என கலவையான தன்மையை கொண்டவையாக இருக்கின்றன. இத்தெரிவுகளில் குறிப்பிட்ட நோக்கம் ஏதும் உள்ளதா அல்லது உங்களுடைய ரசனை வட்டத்திற்குள் வருகின்வற்றை ஆவணப்படுத்துகிறீர்களா?

எங்களது  முதன்மையான நோக்கமே  விளிம்புநிலை மக்களை ஆவணப்படுத்த வேண்டும் என்பதுதான்.  ஒடுக்கப்பட்ட  மக்களை விட மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிற குறவர்கள் , புதிரை  வண்ணார்கள், தொம்பர்கள்  போன்ற சமூகம் பற்றிய உரையாடலை முன்வைத்தோம். இதுவரையிலும்  பொது வெளியில் பேசப்படாமல் கிடந்த பல செய்திகள் பேசுபொருளாயின. தோழர் அன்புராஜுவுடனான நேர்காணல் வழியாக  மிக முக்கியமான இரண்டு புள்ளிகளை இணைக்க விரும்பினோம்.  அவர் வீரப்பனுடன் காட்டில் மூன்றாண்டுகள் இருந்ததை விடக் கொடுமையானது 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது.   சிறை எனபது ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும்/ அரசியல்வாதிகளுகும்  ஒரு மாதிரியாகவும்  கீழ்நிலை மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துவதோடு,  அன்புராஜ் சிறையிலிருந்து இன்று மீண்டுவந்துவிட்டவர் மட்டும் அல்ல . மாறாக, சிறந்த நாடகக் காரர்.  சிறையுனுள் பூத்த கலைஞர்.  இந்தக் கலை வாழ்வு குறித்தும் பேச விரும்பினோம்.

எதிர்காலத்தில் பஃபூனின் பயணமானது பழங்குடி மக்களை ஆவணப்படுத்துவதைத்தான்  பெரிய கடமையாகக் கொண்டிருக்கிறது. மலை ஏறவேண்டும். சமவெளியில்  ஒடுக்கப்பட்ட மக்களைவிட பல மடங்குத் துயரத்தைப் பழங்குடிகள் அனுபவித்துக் கொண்டிருகிறார்கள்.  வனப்பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, காட்டிற்கும் அவர்களுக்குமான உறவு முறிக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகள்  சொல்லொண்ணா துயரத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.  அவர்களோடு பேச வேண்டும். அவர்களது பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஆவணப்படுத்த வேண்டும். இதுவே எதிர்காலத் திட்டம்.  இதை நடைமுறைப்படுத்த நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டும்.  ஆனாலும், நம்பிக்கை இருக்கிறது.

நவீன இலக்கிய உலகுடன் ஒரு நெருக்கமான  பரிச்சயம் உங்களுக்கு இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் கல்விப்புலத்தில்  இருப்பவர்கள்  நவீன இலக்கியத்துடன்  கொண்டிருக்கும் தொடர்பு குறைவு என்ற நிலை நீடிக்கிறது.உங்களுக்கு நவீன இலக்கியம் எவ்வாறு அறிமுகமானது? கல்விப் புலத்தில் வாசிப்பு நிகழ்கிறதா?

இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதில் ஒரு கூச்சம் சட்டென ஒட்டிக் கொள்கிறது . காரணம் மிகுந்த ‘அகம்’ சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன். வாசிப்பு எப்படி அகம் சம்பந்தப்பட்டது என்று கேட்கலாம் ஆனாலும் நான் அவ்வாறுதான் பதில் சொல்வேன்.  பொதுவாக, எனது சின்னச்சின்ன  சமீபத்திய  வேலைப்பாடுகள் வழியாக   தெரிந்தாலும், நவீன இலக்கியத்தின் மீதான வாசிப்பும் அதன் தொடர்ச்சியும் எனது நெருங்கிய நண்பர் வட்டத்திற்கு மட்டுமே தெரியும் . குறிப்பாக எனது ஆசிரியர்களுக்கு  நன்றாகத் தெரியும். வெளியில் பகிர்ந்தது இல்லை. இச்சூழலில் பதில் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. கடந்து போக முடியவில்லை பாருங்களேன்.

சாண்டியலின் ‘கடல்புறா’தான் நான் படித்த முதல் நாவல். எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது. நாவல் என்றால் என்ன என்றெல்லாம் தெரியாது. படித்தேன். சுவாரசியமாக இருந்தது அவ்வளவுதான். ஆனால் கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டில்  ஜானகிராமனின் அம்மா வந்தாள் ஜெயக்காந்தனின் உன்னைப்போல் ஒருவன் மேலூம் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்இந்த மூன்று ஆக்கங்களும் அறிமுகமாகின.   இவைகள் தமிழின் ‘கிளாசிகல் நாவல்கள். இந்த அறிமுகத்திற்குப் பிறகு, வாசிப்புக்குள் பயணப்பட பயணப்படத்தான் வேறுபாடுகள் மெல்லவே விளங்கின. எதை வாசிக்க வேண்டும்? எதை நிராகரிக்க வேண்டும்? என்ற தெளிவும் கொஞ்சம் உருவாகியது. போக,

எனது நவீன இலக்கிய வாசிப்புக்கு முன் உதாரண பாத்திரங்களாக யாரும் இல்லை.  நானே என்னை வடிவமைத்துக் கொண்டேன்.  எனது  வாசிப்புப் பழக்கம் எப்படிப்பட்டது என்றால் ஒவ்வொரு எழுத்தாளரையும் முழுமையாகப் படிக்க வேண்டும் என்று நினைப்பேன்.   புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தருமன், ச. தமிழ்ச்செல்வன்  கண்மணி குணசேகரன், இமையம்,  ஜோ டி குரூஸ்  ,சல்மா, என கலவையாக  எனது பட்டியல் நீளும். இவை தவிற தமிழில் எழுதும் அனைத்துப் படைப்பாளிகளின் படைப்புகளையும்   கவனப்படுத்தியே வருகிறேன்.  தற்போது எழுதிக்கொண்டிருக்கும் இளம்படைப்பாளிகள் வரை. உங்கள் படைப்புகள் வரை. நீங்கள் என்னை நேர்காணல் செய்வதானால் சொல்லாமல் விட்டுவிடுவேனா என்ன?

நான் ஒவ்வொரு காலத்திலும்  ஒவ்வொரு எழுத்தாளரிடமும் தங்கிக் கிடந்து பிறகு வெளியே வந்துவிட்டேன். ஜெயகாந்தனிடம் நீண்ட காலமும், பிறகு எஸ்.ராமகிருஷ்ணனிடம்  வந்து சேர்ந்தேன். எஸ்.ராமருஷ்ணனின் புனைவுகளைவிட அபுனைவுகளே மிகவும் நெருக்கம்.  தற்போது ஜெயமோகன். எனக்கு இரண்டு படைப்பாளிகளே எழுத்து ஆதர்சம்  ஒருவர் தி.ஜா, மற்றொருவர் ஜெயமோகன்.

மற்றபடி, கல்விப்புலத்தில் வாசிப்பிற்கான சூழல் முன்னைவிட மோசம் என்றுதான் சொல்வேன். நான், பேராசிரியர்களைச் சொல்லவில்லை. மற்ற பேராசிரியர்களின் வாசிப்புப் பயணம் பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் அதிமாக பழக்கம் இல்லை. ஆனால், எனது பழக்கத்தின் வட்டத்தில் எனது ஆசிரியர்கள், நண்பர்கள் தீராத வாசிப்பும் தேடலும் கொண்டவர்கள். அவர்களோடு உரையாடியே என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்.

கல்லூரியில் மாணவர்களைப் பொறுத்தவரை வலுக்கட்டாயமாக சில நாவல்களையோ கதைகளையோ பாடத்தின் ஒரு பகுதியாக படிப்பார்கள். பிறகு, சில மாணவர்கள்   அதை வளப்படுத்திக் கொண்டு தீவிர வாசிப்பாளர்களாக  மாறிவிடுவார்கள். ஒரு மேஜிக் நிகழ்ந்தது போல இருக்கும்.    அந்த மேஜிக் மேன்கள் இனிமேல் உருவாவதற்கான சூழல் தேய்ந்து விட்டதோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.  அதிலும் கொரானா காலத்திற்குப் பிறகு முற்றிலும்  இல்லாமல் ஆகிவிட்டது. இது கொரானா ஏற்படுத்திய மிக முக்கியமான  அகப்பேரழிவு. ஆசிரியர்களைச் சந்திக்காமலேயே, கலை சார்ந்த எந்த அறிமுகமும் புரிதலும் இல்லாமலேயே ஒரு தலைமுறை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் எல்லோரும் பட்டங்களை முடித்தவர்களாக இருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாரக்ள்? காலம்தான் முடிவு செய்யும்.

நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் கூறுகள் தமிழ் இலக்கியத்தில் பயின்று வருகின்றவா?

தமிழ் இலக்கியத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் கூறுகள் என்று சொல்லுவதைவிட நாட்டுபுறவியலுக்கான கூறுகள் என்று எடுத்துக் கொண்டால் மிகச்சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறெனில் ஒரு நீண்ட மரபுத்தொடர்ச்சி உண்டுதானே! ‘சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியஙகளே’ என்று நிறுவப்பட்டிருகிறதுதானே! மேலும், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் வரைக்கும் அதன் தடம் அழுத்தமாக  உண்டு.  இன்னும் சொல்லவதெனில் எழுத்திலக்கிய மரபை (செவ்வியல் மரபை) வளப்படுத்தியதில்  வாய்மொழிமரபிற்கு அதிகப் பங்கு உண்டு.

நாட்டுப்புறவியல் அம்சங்கள் இருக்கும்பட்சத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள் நிறைந்த முதன்மையான ஆக்கங்களாக( நவீன படைப்புகளில் ) எவற்றைக் கருதுகிறீர்கள்.

மேலே சுட்டிக்காட்டிய  இலக்கிய வடிவங்களை விட  தமிழ் நவீன  இலக்கியங்களில்    நாட்டுப்புறக் கூறுகள் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியும். இது வளமான போக்கு. புராண இதிகாச கூறுகளை எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளே நூற்றுக்கணக்கில் உண்டு. நாவல் பட்டியல்  தனி. எனக்குப் பிடித்த ஆக்கங்களாக, நாட்டுப்புறவியல் கூறுகளைக் கச்சிதமாகக் கையாண்டுள்ள பிரதிகளாக  பூமணியின் அஞ்ஞாடி . ஜெயமோகனின் ‘கொற்றவை, சோ.தருமனின்  சூல் , முத்துநாகுவின் ‘சுளுந்திஆகிய படைப்புக்களைக் குறிப்பிடுவேன்.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

14 Comments

  1. நேர்காணல் நன்று.
    அயோத்திதாசர் பண்டிதரின் எழுத்துகள், இங்கே மறைக்கப்பட்ட அவரின் தமிழ் பெளத்த கருத்தியல் மேலும் அவருக்கு எதிராக பேசப்படும் கருத்துக்களை மையப்படுத்தி இன்னும் சில கேள்விகளை அமைத்திருக்கலாம்.
    நன்றி

  2. மிக அருமையான கருத்து காட்சி கட்டுரை. வாசிக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி

  3. அருமையான நேர்காணல். அயோத்திதாசரைப் புரிந்துகொள்ளவும் இந்நேர்காணல் துணைநிற்கும்.

  4. மிகச் சிறந்த படைப்பாளி என்பதைத் தாண்டி மிகச்சிறந்த சமூகப் போராளியாகவே அடையாளங்காணப்படுகிறார் முனைவர் பா.ச. அரிபாபு அவர்கள்.

  5. அருமையான நேர்காணல். எழுத்துப் பிழைகளை சரி செய்து புதுப்பிக்கும் ஆறு கேட்டுக்கொள்கிறேன்

  6. சிறந்த நேர்காணல். கேள்விகளும் பதில்களும் அருமை. தம்பி அரிபாபுவின் தமிழ்ப் பங்களிப்பை வெளிப்படுத்தியமைக்குப் பாராட்டுகள்.

    அயோத்திதாசரியத்திலிருந்து திராவிட இயக்கம் பிறந்தது எனும் கருத்தை அரிபாபு முன்வைத்திருக்கிறார். திராவிட அரசியல் கருத்தியலுக்கும் அயோத்திதாசரியத்திற்கும் வேறுவேறான பண்புக்கூறுகள் உண்டு.

  7. சிறந்த நேர்காணல். கேள்விகளும் பதில்களும் அருமை. தம்பி அரிபாபுவின் தமிழ்ப் பங்களிப்பை வெளிப்படுத்தியமைக்குப் பாராட்டுகள்.

    அயோத்திதாசரியத்திலிருந்து திராவிட இயக்கம் பிறந்தது எனும் கருத்தை அரிபாபு முன்வைத்திருக்கிறார். திராவிட அரசியல் கருத்தியலுக்கும் அயோத்திதாசரியத்திற்கும் வேறுவேறான பண்புக்கூறுகள் உண்டு.

  8. நேர்காணல் அருமை. அமெரிக்கன் கல்லூரி வாழ்வு மட்டுமல்ல வாழ்க்கைத் துணையும் தந்தது மகிழ்ச்சி. வாழ்வின் கடந்த கால அனுபவங்கள் தெரிகின்றன. தொடர்ந்து பல வெற்றி காண இறைவனை இறைஞ்சுகிறேன் . அன்புடன்
    பசுமலை தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ்

  9. மிகச் சிறப்பாக முடிந்த அளவிற்கு பதிவு செய்து உள்ளீர்கள்நன்றிகள், அய்யோத்திதாசர் அவர்களின் பண்பாட்டு, அரசியல், கலை தொடர் வாசிப்பை உருவாக்க செயல் திட்டம் பற்றி கூறிப்பிடவில்லை, தாங்கள் விரும்பினால் எமது Centre for Dalits Studies , மூலம் பரிசோதனை முறையில் எடுத்துச்சொல்வோம் ,

  10. அரிபாபு, சுரேஸ் பிரதீப் உரையாடல் வளர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கை .

    சிந்தனைக்கும் கருத்தியலுக்கும் எதிர் நிலையாக முன்வைக்கப்படும் எதிர்பபும் வெறுப்புமான போக்கை வளர்த்தெடுப்பதில் நவீனத்துவ சிந்தனை யின் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது . இதனை ஒரு நெருக்கடியான அனுபவமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    மாற்று வரலாற்றுகளின் மறை பொருள் என்பது சிந்தனைக்கு எதிர் சிந்தனையே, கருத்தியலுக்கு எதிர் வேறொரு கருத்தியலே, எழுதப்படும் வரலாறுகளுக்கு எதிர் மாற்று வரலாறுகளே என்பதை தமிழகம் அயோத்திதாசர் வழியாக கண்டைந்துவருகிறது. இதனை பிறிதொன்றிற்கான எதிர் நிலையில் அயோத்திதாசரை முன்வைக்காது முன்னகர்வின் பொறுப்போடு சிந்திப்பதில் தமிழகத்தில் பல புதிய தலைமுறைகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதில் அரிபாபு என்பவரையும் அகழ் மின் இதழ் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    இவ்வுரையாடலில் அரிபாபு கவனப்படுத்தும் கீழ் காணும் :

    //தமிழ்ச் சூழலிலோ அல்லது இந்தியச்சூழலிலோ தாசராக இருக்கட்டும் அல்லது அம்பேத்தகர் மற்றும் பெரியாராக இருக்கட்டும் மூவரின் தேவையும் தற்காலத்தில் வலுவாகத் தேவைப்படுகிறது. வலதுசாரித்துவ சிந்தனை மேலெழுந்து வரும் சூழலில் இவர்களே நமக்குத் தேவை. இவர்கள் காட்டும் ஒளியில்தான் நாம் நடை போட வேண்டும். மூவருமே கைவைத்தது பார்பனியத்தின்மீதும் அதன் தோற்றத்தின் மீதும்தான். மூவரும் விரும்பியதும் மனித விடுதலையையும் சுய மரியாதையையும்தான். இந்த இருவருக்கும் முன்னோடி அயோத்திதாசர். ஆனால், அம்பேத்கரிய எழுத்துகளுக்கும் பெரியாரிய எழுத்துகளுக்கும் நவீன கால அரசியலில் குறிப்பிடத்தகுந்த இடம் கிடைத்தது. காரணம், அரசியல் இயக்கப் பின்னணி. இதன்வழி உருவான தொடர் பேச்சுகள் மற்றும் எழுத்துகள். இது அயோத்திதாசருக்கு நிகழ்வதற்குண்டான சூழல் முற்றிலும் உருவாகவில்லை.// என்பது நீண்டகாலமாக தொடர்ச்சியாக பழக்கப்பட்ட வழிகளோடு
    மோதிக்கொண்டே இருப்பதால் எம்மால் கடக்க முடியாது இருக்கிறதென்பதை நினைவூட்டுகிறது.

    எம்மை நாம் பலவழிகளில் தளர்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது முன்னகர்வதற்கு. இல்லாதுபோனால் பயனற்ற சதுப்பு நிலமாவோம். பல தடைகளையும் முட்டி மோதிப்பாய்ந்தோடும் அருவியாக இல்லாது சாக்கடை நீரோவோம்.

  11. மிக ஆழமான நேர்காணல் தோழர் அரிபாபுவின் பள்ளி வாழ்க்கை தொடங்கி இன்றுவரை அவர் பெற்றஅனுபவங்களின் கோர்வையை இந்த நேர்காணல் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அடுத்து என்ன அடுத்து என்ன என எதிர்பார்க்க தூண்டும் வகையில் இந்த நேர்காணல் அமைந்ததுள்ளது….மேலும் இவரது ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  12. நல்லதோர் நேர்காணல். அரிபாபுவுடன் தொலைபேசித் தொடர்புண்டு,அவரது வாசிப்பு ஆர்வம், கற்கும் மனோநிலை, மேலும் அறியும் தீவிரம் என்பன அவரிடம் எனக்குப் பிடித்த குணாம்சங்கள். உரையாடலின் போதுதான் நாட்டுப்புறவியல் சஞ்சிகை வெளிவரவிருப்பது தெரிந்தது அதற்கு ஈழத்து சுடலைமாடன் வழிபாடு பற்றி ஓர் ஆக்கம் அனுப்பும் சந்தர்ப்பமும் வாய்த்தது

    எமது தலைமுறை 1940 களைச்சேர்ந்தது.

    இடையில் எத்தனையோ மாற்றங்களைப் பார்த்துவிட்டோம்.

    ஆய்வு உலகில் புதிய புதிய நெறிமுறைகளும் புல்ங்களும் வந்துவிட்டன,
    அரிபாபு போன்ற இ;ளம் தலைமுறைகளுடன் ஊடாடுவது மகிழ்ச்சி தருகிறது.

    தமிழகம் என்றால் சினிமா மட்டுமே என்ற சிந்தனைக் கட்டமைப்பும் வந்து விட்ட இக்காலகட்டத்தில், தமிழக பல்கலைக்க்ழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் பட்டிமன்றம் என்ற மாயைக்குள் தாமும் அகப்பட்டு அதறகென ஓர் எடுத்துரைப்பு முறையையும் உருவாக்கி மக்க்ளையும் சிறாரையும் அகப்படுத்தியிருக்கும் இக்காலகட்டத்தில்

    அரிபாபு போன்ற இளம் ஆய்வாளர்களை இளம் தமிழ்ப் பேராசிரியர்களைக் காண்கையில் மகிழ்ச்சி பிறக்கிறது.

    ஆய்வுலகில் வரலாற்றில் எப்போதும் காத்திரம் மலினம் என இரு போக்குகள் என்றும் இருக்கும்.

    அந்தக் காத்திரப்போக்கினை காலத்திற்கேற்பக் கைக்கொள்ளும் இளைஞர்களான அரிபாபுவுக்கும்

    அவரை நேர்காணல் செய்த சுரேஸ் பிரதிப்புக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    இளைஞர்கள் காலை இளம் சூரியன் போன்றவ்ர்கள் அவர்கள் எப்போதும் வளர் நிலையில் இருக்கும் மனோநிலையும் உடல் வ்ன்மையும் கொண்டவர்கள்

  13. தோழர் அரிபாபுவின் நேர்காணலுக்கு நன்றி 🙏

உரையாடலுக்கு

Your email address will not be published.