/

அனோஜனுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தல்: மு.நித்தியானந்தன்

மு.நித்தியானந்தன் எழுதி அனுப்பிய இவ் எதிர்வினையின் ஓரிடத்தில் தங்கள் எழுத்திற்கு எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லாத பேடிகள் நிலையில் இந்தப் புனைபெயருக்குள் பதுங்கிக்கொள்ளும்போதுதான் ஏற்படுகிறது என்ற வரிகளில் ‘பேடிகள்’ என்ற வார்த்தை இழிசொல்லாகப் பயன்படுத்தப்பட்டது, எங்களுக்கு அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் ஒருங்கே தருகிறது. கற்றலினால் உருவாகும் அரசியல் கூருணர்வையும் மீறி சாதி, பால்நிலை, வர்க்கம் சார்ந்த அசமத்துவ இழி நோக்குகள் மனங்களில் ஆழப் புதைந்துள்ளன என்பதற்கும் இவற்றின் ‘சமூக இயல்பாக்கம்’ எவ்வாறானது என்பதற்கும் இச் சந்தர்ப்பம் ஓர் உதாரணம்.

‘பேடி’ என்ற சொல் சமூகத்தில் திருநங்கைள் உள்ளிட்ட LGBT விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவாக வசைபாட பயன்படுத்தப்படுகிறது.

எழுத்துப் பிழைகளையும் இலக்கண வழுக்களையும் சுட்டிக் காட்டுவதைவிடவும் இவற்றைச் சுட்டுவது அவசியம் என்று கருதுகிறோம். இச் சொல்லாடலில் எங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், கருத்துச் சுதந்திரம் கருதி, கண்டனத்துடன் வெளியிடுகிறோம்.

– ஆசிரியர்கள்   

‘அகழ்’ தளத்தில் ‘மு.நித்தியானந்தத்திற்கு ஓர் எதிர்வினை’ என்ற தலைப்பில் அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய பதிவைப் பார்த்தேன். எதிர்வினை, செய்வினை, சூனியம்  எல்லாம் செய்வது ஒருபுறமிருக்க, அனோஜன் நல்ல தமிழாசிரியரிடம் தமிழ் படிப்பது நல்லது. என் பெயர் நித்தியானந்தன். இதுவே அடிப்படைப் பெயராதலால், நித்தியானந்தன் + உ + கு என்றாகி, ‘நித்தியானந்தனுக்கு’  என்று வரும். இங்கு உகரம் ஒலித்துணைக்கு வந்துள்ளது. அனோஜன் ‘நித்தியானந்தத்திற்கு’ என்று எழுதி ஏன் அவஸ்தைப்படுகிறார் என்பது புரியவில்லை. ‘நித்தியானந்தத்திற்கு’ என்பதில் அத்துச் சாரியை இடம்பெற்றுள்ளது. இது மகர ஈற்றில் முடியும் சொல்லுடன்தான் வரும். எனவே, ‘நித்தியானந்தத்திற்கு’ என்னும் சொல்லமைப்பு நித்தியானந்தம் + அத்து + இன் + கு என இருக்கும். என் பெயர் நித்தியானந்தம் என்று மகர ஈற்றில் முடியும் பெயரல்ல.

“‘காலம் இதழின் அட்டைப்படமாக கே.எஸ்.சிவகுமாரனின் புகைப்படத்தைப் பிரசுரித்து, ‘கே.எஸ்.சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டு காலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது…’ என்ற அடைமொழியுடன் பிரசுரித்துள்ளது” என்று தனது முதல் வசனத்தை எழுதுகிறார்.

‘கே.எஸ்.சிவகுமாரனின் புகைப்படத்தைப் பிரசுரித்து’  என்று ஆரம்பமாகும் இந்த வசனம்  ‘என்ற அடைமொழியுடன் பிரசுரித்துள்ளது’ என்று முடிகிறது. இது என்ன வசனஅமைப்பு என்று தெரியவில்லை. என்னுடைய இரு வசன மேற்கோளை ‘அடைமொழி’ என்று அழைக்கிறார். அனோஜன், இந்த வசனங்கள் அடைமொழிகளல்ல. அடைமொழி என்பது ஒரு title, epithet ஆகும். ‘எழுத்துலகச்சிற்பி’, ‘நடனமணி’, ‘கலைமாமணி’ ‘கலாவித்தகர்’ போன்ற பட்டங்கள் அடைமொழிகளாகும்.

மு.நித்தியானந்தன்

 “ஈழத்து இலக்கியத் தோப்பில்  வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான், கே.எஸ்.சிவகுமாரன். பெரிய மரத்தோடு ஒப்பிட்டு றைம்மிங்காக நித்தியானந்தன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். அது என்ன வைரம் பாய்ந்த தனி விருட்சம்? ஆழ வேரோடிய, கிளை விரித்த, குளிர் பரப்பிய எல்லாம் ஏன் வருகின்றன? கே.எஸ்.சிவகுமாரனின் ஆளுமையை ஒப்பீட்டுச் சொல்லவா? எனக்கு ‘இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்’ என்ற திரைப்படப் பகிடியை இது நினைவு படுத்துகிறது. ஈழத்தில் தனித்த ஆளுமை கே.எஸ்.சிவகுமாரன் என்று எழுதிவிடலாம்” என்கிறார் அனோஜன். பெரிய மரத்தோடு ஒப்பிட்டு ‘றைம்மிங்காக’ நான்  கட்டுரையை ஆரம்பிப்பதாகக் கூறுகிறார். அனோஜன், ‘றைம்மிங்’ rhyming என்பது கல், சொல், பல் என்றோ, அடை, கிடை, மடை என்றோ ஒலி இயைந்து வருவது. ஆங்கிலத்தில்   cat, bat, fat என்றோ sun, run, bun என்றோ வருவது. பாலர் வகுப்பில் பிள்ளைகளுக்கு மொழி கற்பிக்கும்போது இந்த ‘றைம்மிங்’ சொற்களை அறிமுகப்படுத்துவார்கள். என்னுடைய வைரம் பாய்ந்த, தனி விருட்சம், ஆழ வேரோடி , குளிர்நிழல் பரப்பி என்பதில் எந்த ‘றைம்மிங்’ சொற்களும் இல்லை. உங்கள் பாட்டில்  ‘றைம்மிங்’, அது, இது என்றெல்லாம் அர்த்தம் தெரியாமல் அடுக்கிக்கொண்டு போவீர்களா? நான் எழுதி இருப்பது ‘றைம்மிங்’ அல்ல. உருவகம் metaphor.   ‘அது என்ன வைரம் பாய்ந்த தனி விருட்சம்? ஆழ வேரோடிய, கிளை விரித்த, குளிர் பரப்பிய எல்லாம் ஏன் வருகின்றன?’ என்று நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வியில் உங்களின் ரசனையின் வறட்சி மட்டமே துலாம்பரமாகத் தெரிகிறது. கே.எஸ்.சிவகுமாரன் நான்கு தலைமுறை எழுத்தாளர்களைப் பார்த்தவர். நீங்கள் பார்த்தேயிராத, வெறும் பெயர்களாக மட்டுமே நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான தமிழ், சிங்கள, ஆங்கில ஆளுமைகளோடு நெருக்கமான பரிச்சயம் கொண்டவர். கைலாசபதி அவர்களுடனான தனது உறவினை ஒரு நூலாக எழுதுமளவு, அவருடனான நீடித்த தொடர்பு வைத்திருந்தவர். இம்மாதிரி தேர்ந்த ஒரு நூறு இலக்கிய ஆளுமைகள் பற்றிய தனது தொடர்புகளைப்பதிவு செய்ய வல்லவர்.  இலக்கிய மரபின், முதுசத்தின் சாட்சியாக நம் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முதுபெரும் எழுத்தாளர் அவர். அவரைப்போன்று முதுமையில் சென்னையில் வாழ்ந்து கொண்டிருப்பவர், செ. கணேசலிங்கம். கே.எஸ். சிவகுமாரன் தனி விருட்சம்தான். மு.தளையசிங்கம், க.கைலாசபதி போன்ற ஆளுமைகள் அற்ப ஆயுளில் மறைந்துபோன நிலையில், நமக்கு ஆறுதசாப்த  ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் சாட்சியம், அவர். தலைநகர் கொழும்பின் இலக்கிய நிகழ்வுகள், எழுத்துச் செயற்பாடுகள், நூல் வெளியீடுகள், இலக்கியக் கூட்டங்கள், கலைவிழாக்கள், கருத்தரங்குகள், கலாபூர்வமான திரைப்பட விழாக்கள் என்பன பற்றிய தகவல் பொக்கிஷம் அவர். கொழும்பில் எந்த ஒரு இலக்கியக் கூட்டத்தையும் அவர் தவறவிட்டதில்லை.

இளம் எழுத்தாளர்களை, அவர்களின் ஆரம்பத் தொகுப்புகளை உற்சாகப்படுத்தி, பாராட்டி அறிமுகப்படுத்தும் ஆர்வம் மிகுந்தவர். தென்னிலங்கையிலிருந்து எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை அவர் தொடர்ந்து செய்து வருபவர். முஸ்லிம் எழுத்தாளர்கள் கே.எஸ்.சிவகுமாரன்மீது கொண்டிருக்கும் பெருமதிப்பினை நான் அறிவேன். எழுத்துலகிற்கு அப்பால், தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளின்  ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பழுத்த அநுபவம் கொண்டவர். இலங்கை வானொலியில் தமிழ், ஆங்கில செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகத்  தொழில் பார்த்தவர். ஆங்கில ஆசிரியராகவும் வெளிநாடுகளில் சேவை புரிந்திருக்கிறார்.                  

கே.எஸ்.சிவகுமாரன் வைரம் பாய்ந்த தனி விருட்சம்தான்; தனது ஆழ்ந்த வாசிப்பால் ஆழ வேரோடியவர்தான்; எழுத்தாளர்களைத் தனது பத்தி எழுத்துகளில் தொடர்ந்து உற்சாகப்படுத்தி எழுதி, அவர்களைப் பரந்த வாசகப் பரப்பிற்குக் கொண்டுசென்று, அவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரம் பெற்றுக்கொடுத்து குளிர்நிழல் பரப்பிய பெருமரம்தான்.இந்த மரம் எங்கே நிற்கிறது என்று கேட்காதகுறையாக, அது எப்படி வைரம் பாய்ந்தது, அதற்கு யார் தண்ணீர் ஊற்றியது, அதன் கிளைகளை முனிசிப்பல்காரர்கள் வந்து வெட்டிப்போனதுண்டா?  அது குளிர்நிழல் பரப்பியது எப்படி? அந்த மரநிழலில் யாராவது பாட்டி  வடை சுட்டு விற்றாளா? என்ற கணக்கில் நீங்கள் கேட்கும் கேள்விகளின் அபத்தத்தை நீங்களே விளங்காதது ஒருபுறம் என்றால்,  இப்படி எல்லாம் எழுதாமல்,   “ஈழத்தில் தனித்த ஆளுமை கே.எஸ்.சிவகுமாரன்”  என்று எழுதிவிடலாம் என்று நீங்கள் எழுதுவதைக் கலைத்துவம் ததும்பும் வாசகம் என்றுவேறு கருதிக்கொள்கிறீர்களா?

“கே.எஸ்.சிவகுமாரன் ஒரு பத்தி எழுத்தாளர். ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பல்வேறு பத்திரிகைகளில் எழுதி இருக்கிறார். ஆனால், இலக்கியத்தில் புலமை கொண்டவர் இல்லை என்பதற்கு அவர் எழுதியிருக்கும் பதிவுகளே சாட்சி. ஏன் பதிவுகள் என்கிறேன் என்றால், அவரால் திறனாய்வோ அல்லது விமர்சனமோ எழுத முடிந்ததில்லை. அவரும் தான் எழுதுவதை விமர்சனம் என்றெல்லாம் கூறியதாகத் தெரியவில்லை. முன்னெச்சரிக்கையாகப் பத்தி எழுத்துகள் என்கிறார். இருந்தும் ‘கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’ என்ற பெயரில் புத்தகமும் வெளியிடப்படுள்ளது.  இது ஒரு மோசடி. பத்தி எழுத்துகளுக்கான சுவாரஸ்யமும், தனிப்பார்வையும் அதிலில்லை. மேன்போக்கான எல்லோராலும் இலகுவில் எழுதிவிடக்கூடிய அறிமுகக்குறிப்புகளையே தொடர்ந்தும் அவர் வெவ்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.  அதனைத் திறனாய்வு/ மதிப்பீடு என்ற தலைப்பில் வெளியிடுவதை மோசடி என்கிறேன்.” என்று அனோஜன் கே.எஸ்.சிவகுமாரன்மீது charge sheet போடப்பார்க்கிறார்.

சிவகுமாரன் இலக்கியத்தில் புலமை கொண்டவர் இல்லை என்றும் அதற்கு அவர் எழுதியிருக்கும் பதிவுகளே சாட்சி என்றும் வாதத்தை முன்வைக்கிறார். அவர் எழுதுவது பத்தி எழுத்துகள். அதுவும் இலங்கையின் தேசிய நாளேடுகளின் வாராந்த இதழில், 25 அல்லது 30 வசனங்களில் எழுதப்படும் பத்தி அது. ஏனோதானோ என்று பத்திரிகையில் ஒதுக்கப்படும் பத்தி. 25000 இலிருந்து 30000 பிரதிகள் வரை அச்சிடப்படும் நாளேடுகள் அவை. சாதாரண பத்திரிகை வாசகனை மனதில்வைத்து ஓர் இலக்கியப்பிரதியை அறிமுகம் செய்யும் வேலை அது. இலக்கிய உபந்நியாசம் செய்ய அங்கே  இடமில்லை.

கே.எஸ்.சிவகுமாரனின் ‘அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்’ என்ற நூலினை எடுத்து அவரது எளிய அறிமுகக் குறிப்புகளை உதாரணப்படுத்துகிறார், அனோஜன். நல்லது. அந்த நூலில் 18 சிறுகதைத்தொகுப்புகள் பற்றிய பதிவுகள் உள்ளன. அவை இந்த நூல்கள் குறித்த சிவகுமாரனின் பத்தி எழுத்துக்கள். இத்தொகுப்பில் உடுவை தில்லை நடராஜாவின் ‘நிர்வாணம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை அறிமுகத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தச்  சிறுகதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. அந்த விமர்சனப் பத்தியில் 12 கதைகளையும் அறிமுகப்படுத்தி, கதையிலிருந்து மேற்கோள்காட்டி, நூலாசிரியனை அறிமுகப்படுத்தி, கதைகள் பற்றிய தனது அபிப்பிராயத்தையும் எழுத அவர் 30 வசனங்களைப் பாவித்திருக்கிறார். முப்பது வசனங்களில் பன்னிரண்டு கதைகள் அறிமுகம். ஒரு கதைக்கு தலா இரண்டு வசனங்கள். இந்த எல்லைப்படுத்தலுக்குள்ளும்  ‘வாசக்கட்டி’ என்ற கதையைப்பற்றி சிவகுமாரன் எழுதுகிறார்;

“’வாசக்கட்டி’ என்ற கதை மிகவும் எளிமையான விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இக்காலக் கதைகளைப் போன்று வண்ணமும் வடிவும் பெறவில்லை என்று ஓரளவு குறைப்பட்டுக்கொண்டாலும், ஒரு சிறுவனின் ஆதங்கத்தின் வாயிலாகப் பெரியவர்களாகிய நமக்கும் சில படிப்பினைகளை ஆசிரியர் புகட்டுகிறார் எனலாம். பாவனைப்பொருள் நுகர்ச்சி அதிகரித்திருக்கும் சூழலிலே விளம்பர உத்திகள் மேலிடம் பெறுவது தவிர்க்க முடியாதவைதான். விளம்பரத்தினால் ஏமாற்றப்பட்ட தாழ்வுணர்ச்சிகொண்ட ஒரு பையனின் குணச்சித்திரத்தை ஆசிரியர் காட்டுகிறார்.”

மு.பொன்னம்பலத்தின் ‘கடலும் கரையும்’ தொகுப்பின் விமர்சனக் குறிப்பில் சிவகுமாரன் பின்வருமாறு எழுதுகிறார்;

”மு.பொ.வின் தத்துவத்தளம் ஆன்மீக ரீதியானது. மனித நேயம் கொண்டது. இவருடைய ஆரம்பகாலக்கதைகளில் மு.தளையசிங்கத்தின் கதைகள் போன்றே மனித வேஷதாரித்தனங்கள் மீதான ஒரு வெறுப்பு படிந்திருப்பதைக்காணலாம். போலந்தில் பிறந்து, ஆங்கில மொழியில் வல்லுநராகி ஆழமான படைப்புக்களைத் தந்த ஜோசப் கொன்ராட் எவ்வாறு கடலைப் பின்னணியில் பயன்படுத்தினாரோ, அதே போன்று மு.பொ.வும் கடலை மையமாகக்கொண்டு இந்துமத தர்மத்தின்படி, ஆன்மீக விடுதலையைத் தேடிக்காட்டும் கதைகளை நிதர்சனமாக எழுதியிருக்கிறார். இவருடைய கதைகளில் கடல் ஒரு குறியீடு. திரும்பத் திரும்ப வந்து நிற்கும் படிமம். அடிமனது ஆழத்தில் புதையுண்ட ஒரு இலச்சினை. எனவே கடல் எதைக்குறிக்கிறது, அதன் தன்மைகள் என்ன என்பதை அறிந்தால் அவற்றின் பிரயோகத்தில் மு.பொ.வின் கதைகளை நாம் அணுக முடியும்.”

க.தணிகாசலத்தின் ‘பிரம்படி’ என்ற சிறுகதைத்தொகுப்பின் விமர்சனக்குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறார்;

”ஒரு சிறு கிராமத்தின் மக்கள் அனைவரும் ஒரு கதையின் பாத்திரங்களாக வரும் ‘அற்புதத்தை’ தணிகாசலம் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். ‘ஒரு புதிய பாதை திறக்கப்படுகிறது’ என்ற கதையை ஒரு துண்டுத் தொலைநாடகமாகப் படம் பிடிக்கலாம். அவ்வளவு தத்ரூபம்.அது மாத்திரமல்ல, மண்வாசனை, புதிய அணுகல்முறையான சமுதாய விழிப்புணர்வு அத்தனையையும் இக்கதையில் கொண்டுவந்துவிடுகிறார் ஆசிரியர். என்னைப் பொறுத்தமட்டிலே ஏனைய கதைகளைப்போலன்றி, ‘சிவந்த பாதையில்’ என்ற கதை சிறப்பாக அமையவில்லை. சிறிது அலுப்புத்தட்டுகிறது. கதை முற்பகுதி உடனிகழ் காலச்சித்திரிப்பாக அமைந்தாலும் பின்னோக்காக அமைந்த பகுதி. முற்றுமுழுதாகக் கதை ஆரம்பத்துடன் தொடர்புடையதாய் அமையவில்லை’”

இந்தக் குறுகிய ஒரு முப்பது வசன விமர்சனப் பரப்பிற்குள் யாருமே இதற்குமேல் சென்றிருக்க முடியாது.              .

“இந்தக் குறிப்புகளை படிக்கும்போது, அறிமுகம் என்பதைத் தாண்டி, ஓர் அறிமுக வாசகர் தனது கற்பனையில் விரித்தெடுத்து வளர்ந்து செல்ல தூண்டுதல்கள், வழிகாட்டுதல்கள் இதிலில்லை என்பதை வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று முன்மொழிகிறார், அனோஜன். ஒரு கதைக்கு இரண்டு வசனங்களே எழுதியாக வேண்டிய இட நிர்ப்பந்தத்திற்குள், ஓர் அறிமுக வாசகனை அவனது கற்பனையில் விரித்தெடுத்து, ஏதாவது மரக்கொப்பில் ஏற்றி, பின் மடக்கி, ககன வெளியில், சிறகை அசைத்துச் செல்லும் தூண்டுதல்களை எல்லாம் வழங்கும் சர்க்கஸை சிவகுமாரன் செய்யவில்லை என்று அனோஜன் ரொம்பத்தான்  குறைப்பட்டுக் கொள்கிறார். வாசகன் மூலக்கதையை வாசித்து, தனது கற்பனையை விரித்தெடுக்கலாம் அல்லது கற்பனையை  மடக்கி கக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். அது அவனவன் சுதர்மம் சார்ந்தது.

‘சிவகுமாரன் இலக்கியத்தில் புலமை கொண்டவர் இல்லை’ என்று கூறும் அனோஜன் அதற்கு அவரது பதிவுகளே சாட்சி என்கிறார். இல்லை, அனோஜன். Octef பற்றி அவர் எழுதியுள்ள பத்தியை வாசித்துப்பாருங்கள். உங்களையும் என்னையும்விட தமிழ், ஆங்கிலப்புலமையில் பல்கலைக்கழகச் சான்றுகள் கொண்டிருப்பவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையில் அவர் Western Classics, English ஆகிய பாடங்களில்  பெற்ற பட்டம் மிகக் கனதியானது. அதனை அடுத்து, ஆங்கிலத்தில் அவர் முதுகலைமாணிப்பட்டத்தையும் பெற்றிருக்கிறார். இந்தப்பெரும் தராதரத்தின் அடிப்படையில்தான் அவர் ஓமானில் ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிருக்கிறார். இதற்கெல்லாம் அப்பால் அவர் சீரிய ஆங்கில விமர்சன நூல்களை வாசிப்பதற்கு, பேராசிரியர் க.கைலாசபதி எவ்வாறு வழிகாட்டி இருக்கிறார் என்பதை அவர் பதிவு செய்திருக்கிறார்.

 “’காலம் காத்திருக்குமா?’ கதையில் சுயநலமிக்க ஓர் இளைஞனின் போக்கையும் அவன்மீது பாசங்கொண்ட தாயினதும் தங்கையினதும் மனோநிலையையும் ஆசிரியர் விளக்குகிறார்” என்று சிவகுமாரன் ஒற்றை வரியில் குறிப்பு எழுதி விட்டார், அதனால் இவருக்கு இலக்கியத்தில் புலமை இல்லை என்று வாதிடும் ஒருவரின் குறுகிய பார்வையை நாம் எப்படி மதிப்பிடுவது? ஏ.ஜே. போன்ற பெரும் படிப்பாளிகள் ‘யாராவது ஒருவருக்கு இலக்கியத்தில் புலமை இல்லை’ என்று சொல்லக் கூசி இருப்பார்கள்.

“பத்தி எழுத்துகளுக்கான சுவாரஸ்யமும், தனிப்பார்வையும் அதிலில்லை. மேன்போக்கான எல்லோராலும் இலகுவில் எழுதிவிடக்கூடிய அறிமுகக் குறிப்புகளையே தொடர்ந்தும் அவர் வெவ்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார். இது மோசடி” என்கிறார், அனோஜன்.

‘எல்லோராலும் இலகுவில் எழுதிவிடக்கூடியதாக’ அவருடைய அறிமுகக் குறிப்புகள் இருப்பதே அவை விமர்சனம் என்ற அந்தஸ்தைப் பெறத்தகுதியற்றதாக்குகிறது என்பது அனோஜனின் கருத்து. எல்லோராலும் இலகுவில் எழுதிவிடக்கூடியதாக இருப்பதே இவரின் பிரச்சினை. யாரிடமாவது தீட்சை பெற்று வந்து கஷ்டம் கஷ்டமாய் எழுதுவதுதான் இலக்கிய அந்தஸ்தைத் தரும் என்று நினைக்கிறார்.   அதனால், அது மோசடி என்கிறார். அரை நூற்றாண்டு காலமாக பத்தி எழுத்தாளராகத் திகழும் சிவகுமாரனை, 30 நூல்களுக்கு மேல் இந்தப் பத்தி எழுத்துக்களையே புத்தகமாகப் போட்டவரை, இவ்வளவு காலம் ஏன் மோசடிக்காரர் என்று அனோஜன் சொல்லவில்லை? உண்மையில் அவரை இப்போதுதான் அறிய வந்திருக்கிறாரா?

இவருக்கு, தான் உதிர்க்கும் வார்த்தைகளின் பொருள் தெரிவதில்லை.    இவர் மோசடி செய்தவர் என்று வெறும் FRI போடக்கூட முகாந்திரம் இல்லை.  இம்மாதிரி பொய்ப் பிராது கொண்டு ஸ்டேசனுக்குப் போனால்  இவரைத்தான் பிடித்து உள்ளே  போட்டுவிடுவார்கள்.

சிவகுமாரனின் ஒரு பத்தி எழுத்தை archival material என்றேன். Lanka Guardian (1980 April 1) Varied themes, but no theatre என்ற தலைப்பில் 1978 ஆம் ஆண்டு அரசின் கொழும்பு நாடக விழாவில் மேடை ஏற்றப்பட்ட 14 நாடகங்களையும் அவற்றின் கதை அம்சத்தையும் ஒரு பக்கத்தில் குறித்திருக்கிறார். எண்பதுகளில் தலைநகரில் தமிழ் நாடகங்களைப் பற்றி ஆராயும் ஆராய்வாளனுக்கு இது பொக்கிஷம் மாதிரி ஆவணம். அதில் ‘எமர்ஜன்சி’ என்ற  நாடகம் தணிக்கை காரணமாக மேடை ஏற்றப்படவில்லை  என்ற தகவலையும் சிவகுமாரன் அந்தக் குறிப்பில் தருகிறார். எண்பதுகளில் வெவ்வேறு ஆண்டுகளில் கொழும்பில் மேடை ஏறிய நாடகங்கள் எவை என்பதற்கு இம்மாதிரி குறிப்புகள் எதுவும் இல்லை.  நான் அர்த்தத்தோடுதான் இந்த நாடகக்குறிப்பை archival ஆவணம் என்றேன். அனோஜனுக்கு இம்மாதிரி ஆய்வுகளில் கொஞ்சநஞ்ச ஈடுபாடு இருந்திருந்தால்கூட இம்மாதிரி எழுதி இருக்கமாட்டார்.

சிவகுமாரன் வெளிநாட்டு இதழுக்கு வழங்கிய பேட்டியில், ‘விடுபடல்கள் உள்ளன’ என்று அ யேசுராசா அலை  இதழில் அவர் விட்டுவிட்ட எழுத்தாளர்களின் பட்டியலை அனோஜன் இங்கே கொண்டுவந்து கொட்டியிருக்கிறார். ஒரு பேட்டியில் பொதுவான ஒரு trend ஐச் சொல்லி, அதனோடு சேர்ந்த எழுத்தாளர்களைச் சொல்வதுதான் சாத்தியம். சிவகுமாரன் விட்டுவிட்ட சிறுகதை எழுத்தாளர்கள் என்று 14 பேரை யேசுராசா பட்டியலிடுகிறார். அவர் தந்திருக்கும் பட்டியலில் அவர் விட்டுவிட்ட இன்னும் 14 பேரின் பட்டியலை நான் தரலாம். ‘ஈழத்துப் பதினொரு கவிஞர்கள்’ தொகுப்பில், தர்மு சிவராமை கவனத்திலேயே எடுக்காமல், சாமர்த்தியமாக தன்னைப் பதினொன்றுக்குள் ஒன்றாய் போட்டுக்கொண்ட சாதுரியக்காரர்கள் ‘விடுபடல்களை’ப் பற்றிப் பேசுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.

“அ.யேசுராசாவின் இந்த எதிர்வினை முக்கியத்துவம் மிக்கது. இதழ்களுக்கு இடையிலான வேறுபாடுகள், அவற்றின் போக்குகள் பற்றி குறிப்பிடாமல் பொத்தம் பொதுவாக எழுதியிருப்பது சார்ந்து, யேசுராசா சொல்வது கவனத்தில் கொள்ள வேண்டியவை. ‘அலை’ அந்தக் காலகட்டத்தில் பல இலக்கிய உரையாடல்களைத் தீவிரமாக நிகழ்த்தியது. முக்கியமாக கா.சிவத்தம்பி, கைலாசபதி இவர்களது பிரச்சாரப் போக்குக்கு எதிரான விவாத்தை நிகழ்த்தியது. இந்தத் தளங்களைத் தொட்டுப் பேசாமல் பொத்தம் பொதுவாக நேர்காணல்கள் கொடுப்பது இலக்கியத்திற்கு எதிரான செயல்பாடே.” என்று தீர்ப்பு எழுதுகிறார் அனோஜன்.

லெரோய் றொபின்சன் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஜப்பானின் நாகசாகி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தபோது கே.எஸ்.சிவகுமாரனுடன் இலங்கை கலாசார, இலக்கியநிலை குறித்து நடத்திய நேர்காணல்கள் நாகசாகி பல்கலைக்கழகத்தின் இரண்டு முக்கிய ஆய்விதழ்களில்  இரண்டு ஆண்டுகளாக 5 தனிப்பகுதிகளாக வெளிவந்தன. இவற்றில் 1988 ஜனவரி மாதம் அவரது நேர்காணலின் முதல் பகுதி  வெளியானது. அந்த நேர்காணல் 33 பக்கங்களில் வெளியானது. அதனை ‘மிக நீண்ட’ செவ்வி என்று குறிப்பிட்டு அ .யேசுராசா எழுதி இருப்பதன் பெரும் பகுதியை அனோஜன் தனது பதிவில் மேற்கோள் காட்டுகிறார்.

யேசுராசா தனது குறிப்பில் சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, செ.கணேசலிங்கன், இளங்கீரன், பவானி, கோகிலா மகேந்திரன், தெளிவத்தை ஜோசப், செ.யோகநாதன், இலங்கையர்கோன், அ.முத்துலிங்கம், செ.கதிர்காமநாதன், கே.கணேஷ், ஈழவாணன், ஈழகணேஷ் ஆகியோரோடு இன்னும் சிலரையும் குறிப்பிடுகிறார். இவர்களைப் பற்றிப் பேசவே 33 பக்கங்கள் ஆகிவிட்டன. இவர்களில் யாரையும் தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதற்கில்லை. அதிலும் சிலரைப்பற்றி ஓரளவு குறிப்புகளும், இன்னும் சிலரைப்பற்றி வெறும் பெயர்களும் சொல்லியிருக்கிறார் என்றும் குறை கூறப்படுகிறது. இந்த 33 பக்கங்களிலேயே அதிகம் அவரால் சொல்லமுடியவில்லை என்று தெரிகிறது. இப்போது அவர் யார்யாரையெல்லாம் விட்டுவிட்டார் என்று அவர் விரிவாகவோ, ஓரளவோ பேசியிருக்க வேண்டிய எழுத்தாளர்களின் ஒரு பட்டியலை யேசுராசா சிபாரிசு செய்கிறார். சிறுகதையில் 14 பேரையும், கவிதையில் 11 பேரையும், பெண் எழுத்தாளர்களில் 4 பேர்களையும், ஆக விடுபட்ட 29 எழுத்தாளர்களின் பட்டியல் தருகிறார். விரிவாகவோ, ஓரளவோ, வெறும் பெயராகவோ 33 பக்கங்களில் சிவகமாரன் சொல்லக்கூடிய அளவில் சொல்லியிருக்கிறார். அந்த 33 பக்கங்களில் யாரையும் வெளியில் எடுப்பதற்கில்லை. அதிலும்  சிலரைப்பற்றி ஓரளவுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், சிலரது பெயர்கள் மட்டுமே பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்ற குறைபாடு வேறு சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த 33 பக்கங்களில் இன்னும் 29 எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது என்பது எப்படி காரிய சாத்தியமாகும்? ‘மிக நீண்ட செவ்வி’ என்று அந்த 33 பக்க நேர்காணலை எப்படி வரையறுக்க முடியும்? இங்கு தரப்பட்டிருக்கும் பட்டியல்  வெறும் பெயர்கள் அல்ல. இந்த எழுத்தாளர்கள் ஈழத்து இலக்கியத்திற்கு ஆற்றிய பங்கினை விளக்க வேண்டும். எஸ்.பொ, மு.தளையசிங்கம், மருதூர்க் கொத்தன், என்.கே.ரகுநாதன், உமா வரதராஜன், ரஞ்சகுமார், நந்தினி சேவியர் என்று 14 எழுத்தாளர்களின் எழுத்துலகை விவரிப்பது இந்த 33 பக்கங்களில் சாத்தியமா? கே.எஸ்.சிவகுமாரனுக்கு இந்த எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள்  எல்லாம் தெரியாதன அல்ல. இவர்களின் பெயர்களை திட்டமிட்டு மறைத்து, அல்லது அவர்களின் இலக்கியப் பங்களிப்பை நிராகரிக்கும் ஒரு விமர்சகர் அல்ல அவர். விடுபட்ட சிறுகதை எழுத்தாளர்கள் என்பது யேசுராசா தரும் தனக்கு உவப்பான 14 பேர்களோடு முடிந்து விடுவதில்லை. இது மாதிரி இன்னும் பலரின் கைகளில் வித்தியாசமான பட்டியல்கள்  இருக்கும்.

நிலைமை இப்படி இருக்க, “‘அலை’ அந்தக் காலகட்டத்தில் பல இலக்கிய உரையாடல்களைத் தீவிரமாக நிகழ்த்தியது. முக்கியமாக கா.சிவத்தம்பி, கைலாசபதி இவர்களது பிரச்சாரப் போக்குக்கு எதிரான விவாத்தை நிகழ்த்தியது. இந்தத் தளங்களைத் தொட்டுப் பேசாமல் பொத்தம் பொதுவாக நேர்காணல்கள் கொடுப்பது இலக்கியத்திற்கு எதிரான செயல்பாடே” என்று அனோஜன் அவர் பாட்டில் ரொம்பவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்.

யாழ்ப்பாணத்தில் இதே காலப்பகுதியில் இந்த விவாதங்களின் மையமாக இருந்த, டானியல் அன்ரனி நடத்திய ‘சமர்’ என்ற சஞ்சிகை பற்றிய பேச்சே இல்லை. ‘பாரதி’, ‘மறுமலர்ச்சி’, ‘விவேகி’ இதழ்களையோ, பதினொரு வருடங்களாக திருகோணமலையிலிருந்து பெண்களுக்காக வெளியான ‘மாதர் மதி மாலிகை’ பற்றியோ, கண்டியிலிருந்து வெளியான ‘மலை முரசு’ பற்றியோ, இன்னும் எண்ணற்ற சஞ்சிகைளையோ இவர் ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பலாம். இதில் சிவத்தம்பி – கைலாசபதி விவாதக்களத்தை ‘அலை’ நடத்தியதைத் தொட்டுப்பேசாமல் பொத்தாம் பொதுவாக நேர்காணல் கொடுத்துவிட்டார் கே.எஸ்.சிவகுமாரன் என்றும், அதற்குமேல் இது இலக்கியத்திற்கு எதிரான செயல்பாடு என்று தீர்ப்பு தந்தாரே அனோஜன் – புல்லரிக்கிறது! இவர்கள்  சொல்கிற  அட்வைஸ் கேட்டு பேட்டி வழங்குவதானால் குறைந்த பட்சம் 300 பக்கங்களாவது பேசவேண்டும். அனோஜன் அலையைத் தோண்டி காலாவதியாகிப்போன பிழையான தகவல்களைத் தனது பதிவில் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார்.

லெரோய் றொபின்சன் கே.எஸ்.சிவகுமாரனோடு நடத்திய 5 பேட்டிகளும்  தொகுக்கப்பட்டு Aspects of culture in Sri Lanka என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் 119 பக்கங்களில் வெளிவந்துவிட்டது. அனோஜன் தனது தேடலை கொஞ்சமாவது update பண்ணியிருக்கவேண்டும். விடுபட்டுப்போய் விட்டதாகக் கூறப்பட்ட சில எழுத்தாளர்களை பற்றி அவர் பின்னைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். சிங்கள கலை, இலக்கிய, ஓவிய, கூத்து, நடனம் போன்றவை பற்றியும் அவர் பேசியிருக்கிறார். உடனேயே ‘இலக்கியத்திற்கு எதிரான செயற்பாடு’ ‘மோசடி’, ‘தவறான வழிகாட்டல்’ என்றெல்லாம் அனோஜன் கூச்சல்போட ஆரம்பித்துவிடுகிறார். ஒன்றும் அறியாதவர்களுக்கு, வழிகாட்ட வந்துதித்த மகான்கள் இங்கு யாருமில்லை. இவருடைய ஞானத்தில் தவறான வழிகாட்டல், சரியான வழிகாட்டல் எல்லாம் துல்லியமாகத் தெரிந்து விடுகிறது! ‘இலக்கியத்திற்கு எதிரான செயற்பாடு’ இடம் பெற்றதும், இவரது மூளைக்குப் பாதுகாப்புச் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதும், அவற்றைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை அது துரிதமாகவே ஆரம்பித்துவிடும். இலங்கை அரசாங்கம் தனக்கு மாறான கருத்துக்கள் எதுவும் சொல்லப்பட்டதும், அவை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடு, மோசடி, பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தல், மக்களைத் திசை திருப்பும் முயற்சி, தவறான வழிகாட்டல் என்றெல்லாம் எந்த விவஸ்தையும் இன்றி பிரசாரத்தில் ஈடுபடுகிறதோ அந்த நச்சுவாடை அனோஜனின் பதிவில் தெளிவாகிறது. அனோஜன்! நீங்கள் பயப்படாதீர்கள். வருங்காலத் தலைமுறை உங்களது வழிகாட்டலுக்கோ  எனது வழிகாட்டலுக்கோ காத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நம்பியிராதீர்கள். எதிர்காலப் பிரஜைகள் நீங்களும் நானும் வழிகாட்டவேண்டிய மந்தைகள் அல்லர்.  சில வேளை நீங்கள் அவர்களின் மேய்ப்பனாக அலைதல் கூடும். நான் அவர்களின்  மேய்ப்பன் அல்லன்.

Ceylon Daily News இல் எஸ்ரா பவுண்டு பற்றி, மேர்வின் டி சில்வாவும் ரெஜி சிறிவர்த்தனாவும் ஆறு இதழ்களில் மேற்கொண்ட இலக்கிய வாதத்தினை, நமது கவனத்திற்குக் கொண்டுவருமுகமாக அவரது பதிவின் எல்லைக்குள் சிறு குறிப்பினைத் தருகிறார். நான் லேக் ஹவுசில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற இலக்கியவாதம் அது. அந்த வாதத் தொடர் அனைத்தையும் நான் நீண்டகாலமாக வைத்திருந்தேன். அந்த வாதம் இடம் பெற்றதைக்கூறி, மூலக்கட்டுரையினைத் தேடி வாசிக்கக் கோருவதுதான் சாத்தியமானது. ஓரிரிரு பந்தியில் அந்த வாதத்தின் சாரத்தை, அவரது 25 வசன எல்லைக்குள் செலுத்தியாக வேண்டும். ஞானி நிலவைக்காட்டினால், மூடன் சுட்டுவிரலைப் பார்த்துக்கொண்டிருந்த கதைதான்.  தாங்கள்தான் இலக்கியத்தையும் உலகத்தையும் உய்விப்பதற்கு எழுதிக்கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் எல்லாம் எதுவும் தெரியாதவர்களாகவும், வெட்டித்தனமாக எழுதிக்கொண்டிருப்பவர்களாகவும், எளிதில் எல்லோராலும் எழுதக்கூடியமாதிரி எழுதுகிறவர்கள் என்றும் கருதும் மனப்பான்மை கேவலமானதுதான்.

“இருட்டு அடர்த்தியில் வீழ்ந்து களைத்திருந்தது. மெல்லிய கீறலாக ஒளிபடர அவள் விண்ணிலிருந்து விடுபட்ட பறவையின் இறக்கையின் அலைவில் கீழே மிதந்துவந்தாள். தம்பி அவளையே பார்த்தவாறிருந்தான். நெருங்க நெருங்க அவள் உருவம் ஜொலித்து பிரகாசமாகி துலக்கம் அடைந்தது. அவளின் ஒளியின் முன்னால் நட்சத்திரங்கள் சோகை இழந்து கரைந்தன. அலைகள் பாதத்தின் விளிம்பு வரை நுரைத்துக்கொண்டு எழுந்து வந்து தழுவிச் சென்றன. அப்போதுதான் அவளின் வருகை நிகழ்ந்துகொண்டிருந்தது. அவளின் கையில் ஒரு போர்வை இருந்ததைத் தம்பி கவனித்தான்.” என்று அனோஜன் ‘போர்வைகள்’ என்ற தனது சிறுகதையில் ஓரிடத்தில் எழுதுகிறார். ‘விண்ணிலிருந்து மிதந்து வந்த தேவதையின் கையில் போர்வை இருந்ததைத் தம்பி கவனித்தான்’ என்பதுதானே மேட்டர். இதைச் சொல்ல அவள் உருவம் ஜொலித்தது, நட்சத்திரங்கள் சோபை இழந்தன, அலைகள் பாதத்தின் விளிம்பு வரை வந்த கதை எல்லாம் எதற்கு என்று யாராவது பாடம் நடத்துவார்களா?

ஆணி அடித்தலும் ஆழம் கண்டு பிடித்தலும் பற்றி அனோஜன் எழுதுகிறார். ‘நித்தியானந்தனின் இந்த எதிர்விமர்சனமே சுவற்றில் அடிக்கப்படாத ஆணிகள். இதில் எங்கே ஆழம் கண்டுபிடிக்க?’ என்று அனோஜன் துயருறுகிறார். இதனை உருவகப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். தனக்கு சரியாகத்தெரியாத ஒரு உருவகத்திற்குள் அவர் நுழைந்திருக்கிறார். சுவரில் ஆணி அடிக்கும் வேலைக்கு  இவர் ஏன் போனார் என்று தெரியவில்லை. இதில் ஆழம் பார்ப்பது எங்கு வந்து சேர்கிறது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆணியில் ஆழம் பார்ப்பது என்பது ஆணியின் அளவை (size) குறிக்கிறது என்றே நினைக்கிறேன். அதில் ஒரு பிரச்னையும் இல்லை. அனோஜன், நீங்கள் Homebase இற்குப் போனால் ஒரு இஞ்சி ஆணியிலிருந்து 3 1/2 (16d) இஞ்சி ஆணிவரை வெவ்வேறு பிராண்டுகளில் ஆணிகள் கிடைக்கும். விலையும் அவ்வளவு வராது. இதனை விட ஆணிகளின் வெவ்வேறு தேவைகள் கருதி எட்டு, ஒன்பது வகைகளாக அவற்றை வகைப்படுத்தி வைத்திருப்பார்கள். என்ன தேவைக்கு சுவரில் ஆணி அடிக்கப்போகிறீர்கள் என்றால் அவர்களே சரியான ஆணி, அதன் சைஸ் (அதாவது உங்கள் பாஷையில் ஆழம்) என்று சரியாகப் பார்த்துத்தருவார்கள். நீங்களே போய் ஆணி, ஆழம் என்று உளறி விடாதீர்கள். ஆணியில் ஆழம் என்றால் அவர்களுக்கு விளங்காது.

அடுத்து சுவரில் ஆணி அடிப்பது. வாடகை வீடுகள் என்றால் நீங்கள் ஒருபோதும் வீட்டுச் சுவரில் கண்டபடி ஆணி அடிக்கவிடமாட்டார்கள். சரி, ஆணி அடிப்பது என்று வந்தாகிவிட்டது. இப்போது எந்த அளவு நீளத்தில் (அதாவது ஆழத்தில்) இந்த ஆணியை அடிப்பது என்று முதலிலேயே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இந்த ஆணி அடிப்பது, வீடு திருத்துவதில் செயற்திறன் மிக என் நண்பர் ஒருவர், ஆணி அடிக்க  சுவரில் துளை போட்டிருக்கிறார்.அது அடுத்தவீட்டுச் சுவரையும் துளைத்து, பின் அந்த அயல்வீட்டுக்காரருக்கு நஷ்டஈடு கொடுத்து தீர்க்கவேண்டி வந்துவிட்டது. எந்தத் திண்மமான கல்வீட்டுச்சுவரையும் எந்தப்பிரச்னையும் இல்லாமல் drillerகொண்டு நேர்த்தியாகத் துளைக்கலாம். சுவரில் ஆணி அடிக்க ஆரம்பித்தபிறகு எவ்வளவு தூரம் அல்லது ஆழம் போயிருக்கிறது. என்பதுதான் உங்கள் பிரச்னை போலிருக்கிறது. அதனை நீங்கள் முதலிலேயே தீர்மானித்துக்கொண்டு விடுங்கள். எத்தனை இஞ்சி ஆணி உள்ளே போகவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த அளவு ஆணியை அவர் வடிவாக உங்களுக்கு உள்ளே அடித்துத் தருவார். பழைய காலத்தில் மாதிரி, சுவரில் ஆணி அடிக்கப்போய், ஆணியின் முனை வளைந்து ஆணி வீணாகும்நிலை எல்லாம் இப்போது இல்லை. அனோஜன், சுவரில் கண்டபடி தேவை இல்லாமல் ஆணி அடிக்காதீர்கள். இப்போது ஆணி அடிக்காமலேயே சுவரில் படங்களை, அறிவிப்புகளை மாட்டிவைக்க வேறு adhesives வந்திருக்கின்றன. சுவரில் யாரும் ஆணி அடிக்கவில்லை என்றால் தொல்லை தீர்ந்தது விட்டது என்று நிம்மதியாய் இருங்கள். இவர் ஆணி அடிக்கவில்லையே, நான் எப்படி ஆழம் பார்ப்பது என்று துயருறாதீர்கள்.. இப்போது தெரியாது, இப்படி விஷயங்கள்தான் பின்னாளில் பெரும் மன உபாதைகளுக்கு உங்களை உட்படுத்தும். ஆணி அடிக்கவில்லையே, ஆழம் தெரியவில்லையே என்று hallucinations வரப்பார்க்கும். உங்களின் ‘போர்வை’ கதையில் வருவதுபோல், நீங்களோ ஏற்கனவே தேவதை வானிலிருந்து இறங்கி வந்து போர்வை கொடுத்ததான கற்பனையில் உள்ளவர்.

உங்களின் இந்தப் பதிவிலிருந்து நான் புதிதாய் எதனையும் தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் வைக்கும் குறிப்புகள், கண்டனங்கள், குற்றச்சாட்டுகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக நான் கேட்டுவந்தவைதான். விமர்சகர்கள் என்று பேர் பண்ணப்பட்டு வருபவர்கள் சிலர், சிவகுமாரன் அளவு விமர்சன நூல்களை ஆழ்ந்து வாசித்தவர்கள் அல்லர். நீங்கள் பிறப்பதற்கு முன்பே சார்ள்ஸ் டிக்கன்ஸை அறிமுகப்படுத்தி தமிழில் கட்டுரைகள் எழுதியவர், அவர். எஸ்ரா பவுண்டு பற்றிய விவாதம் ஒன்று ஆங்கில நாளேட்டில் வெளிவந்த தகவலை  அவர் இல்லாவிட்டால் நீங்கள் எப்போதுமே தெரிய வந்திருக்கமாட்டீர்கள். அந்த விவாதம் எப்படி அமைந்தது என்று அந்த விவாதங்களைத் தேடி வாசிக்க விரும்பியிருப்பீர்கள் என்று நான் நினைத்தேன். அது உங்கள் நிலைமைக்குச் சாத்தியமில்லை. அப்படி ஒரு விவாதத்தை தமிழ்ப்பின்னணியில் நாம் இலங்கையில் அல்ல, தமிழ்நாட்டிலுமே   நடத்தியிருக்கமுடியாது. மேர்வின் டி  சில்வா, ரெஜி சிறிவர்த்தனா  ஆகிய இருவரையும் நான் அறிவேன். Ceylon Daily News பத்திரிகையின் பிரதம ஆசிரியராக மேர்வின் டி  சில்வா இருந்த காலத்தில்தான் நான் அப்பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான ‘தினகரன்’ ஏட்டில் பணிபுரிந்தேன். ரெஜி சிறிவர்த்தனா யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில்தான், ‘ஆங்கில நாவல் இலக்கியம்’ பற்றிய உரையாடலை நிகழ்த்தினார். குறுகியகால அவகாசத்தில் கூட்டப்பட்ட அக்கூட்டத்தில் புஷ்பராஜா போன்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளைப் பார்த்து ரெஜி வியப்படைந்தார். நிர்மலா இக்கேள்விகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அனோஜனின் இந்த எதிர்வினைகள் எவற்றிலும் பொருளில்லை. சிவகுமாரன் குறித்திருக்கும் ஆங்கில விமர்சன நூல்கள் சிறந்த நூல்கள். அவற்றின் சாரத்தை எல்லாம் 20, 25 வாக்கியங்களில் தருவது சாத்தியமில்லை. அந்தக் காலத்தில் தரமான சிற்றிதழ்கள் வெளிவந்துகொண்டிருந்து, அவற்றைத் தமிழில் முழுமையாகச் செய்துதருமாறு கேட்டிருந்தால், அவர் தாராளமாக செய்து தந்திருப்பார். சிற்றிதழ்கள் அவரை எவ்விதம் கேவலப்படுத்தின என்று நீங்கள் அறிந்திருந்திருக்கமாட்டீர்கள். நான் உதாரணம் தருவேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘புதுசு’ என்ற சிற்றிதழின் இரண்டாவது வெளியீட்டில் (1980) ‘சஞ்சயன் பக்கங்கள்’ என்ற பகுதியில் கே.எஸ்.சிவகுமாரன் பற்றிய விமர்சனக் குறிப்புகள் வெளியாகின. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. அந்தச் சஞ்சயன் யாரென்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை. அது பொதுப்பெயர். அந்த தலைப்பில் யாரும் வந்து எழுதுவார்கள். துணிவில்லாத கவிஞர் ஒருவர் மறைந்திருந்தும் எழுதலாம். நீங்கள் கூறுவதுபோல் இவற்றிற்கு பொறுப்பு கூறும் இடத்தில்   இதழின் ஆசிரியர் யாரும் ஒருவர் என்றில்லை. அப்போது கே.எஸ்.சிவகுமாரன் பற்றி ‘புதுசு’வில் வெளியான நச்சுத்தனமான கட்டுரைக்கு, கே.எஸ்.சிவகுமாரன் பதில் எழுதுகிறார். இந்தச் சிற்றிதழ் என்ன செய்திருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அந்தக் கட்டுரையை சிவகுமாரன் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்று அதனை உவந்தேற்றுப் பிரசுரித்திருக்க வேண்டும். இதில் உங்களுக்கு என் கருத்திலிருந்து மாற்றுக்கருத்து இருக்கமாட்டாது என்று நினைக்கிறேன். புதுசு அந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டு, ‘கட்டுரை நீண்டு போய் விட்டது, அதனை நீங்களே சுருக்கி எழுதி அனுப்புங்கள்’ என்று பதில் போட்டிருக்கிறது. அவரும் தனது கட்டுரையைச் சுருக்கி அனுப்பி வைத்திருக்கிறார். இப்போது புதுசு என்ன செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? சுதந்திரமான கருத்துரிமைக்குக் குரல் கொடுக்கும் யாரும் என்ன செய்திருப்பார்கள்? அதனை ஏற்றுப் பிரசுரித்திருப்பதுதான் ஒரு சிற்றிதழின் தார்மீகக் கடமை. அனோஜன், என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? புதுசு இதழ் தனது 4 ஆவது இதழில் பதில் எழுதியது. அந்தப்பதில் இது:

“இரண்டாவது புதுசு இதழில், சஞ்சயன் பக்கங்களில் கவனத்திலெடுக்கப்பட்ட கே.எஸ்.சிவகுமாரனின் கட்டுரைகள் பற்றி ஒரு நீண்ட பதிலை ஆரம்பத்தில் அவர் அனுப்பியிருந்தார். பின்னர் எமது வேண்டுகோளின்படி, ஒரு சுருக்கிய வடிவத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அவருடைய ‘சலியா’ எழுத்துக்கு நன்றி. குறிப்பிட்ட கட்டுரைகளை வெளியிடுவதற்குரிய புதுசுவின் கால இடைவெளி நீண்டு போனதால் அவருடைய கருத்தையும் வெளியிடுவது உசிதம் என்று படாததால் அதை வெளியிடவில்லை.”

நீங்களே போய் ஒருவரை உங்கள்பாட்டில் அறமற்றுத் தாக்கிவிட்டு, அவர் தனது தார்மீகமான ‘எதிர்வினையை’ ஆற்றியபோது, அது நீண்டது என்று சுருக்கித் தரச்  சொல்லி, அவரும் அதை மதித்து சுருக்கி எழுதி அனுப்ப, கால இடைவெளி நீண்டதால் உங்கள் கருத்தை வெளியிடுவதும் உசிதம் இல்லை என்று பதில் எழுதியதில் துலங்கும், ‘புதுசுகள்’ எழுத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தார்மீகத்தை என்னவென்று சொல்லுங்கள்! அவரது ‘சலியா’ எழுத்துக்கு நன்றி என்ற ‘புதுசுக் கிண்டலும்’ ‘புதுசு நக்கலும்’ வேறு. புதுசுவின் 5ஆவது இதழில்  ‘அவர் சுருக்கிய வடிவம் கையில் கிடைத்தபோது,  புதுசு இதழ்கள் முடிகிற நேரமுமாயிற்று. இடமும் அமையவில்லை. இப்படி முடிந்தது அது.’ என்று மிக எளிதாக இதனைக் கடந்து போக முடிந்த நேர்மையீனத்தைச் சொல்லுங்கள். ‘இடமும் அமையவில்லை’ என்ற அவர்களின் கூற்றில் என்ன உண்மை உள்ளது என்று பரிசீலிக்கலாம்?

புதுசு முதல் இதழின் ‘விமர்சன’ அரங்கு நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய கே.டானியல், அ.யேசுராசா, சந்தியாபிள்ளை ஆகியோரின் சொற்பொழிவுகளின் பகுதிகள், புதுசு இரண்டாவது இதழில் bullet point இல் வெளியாகின. யேசுராசாவின் பேச்சு 8 பிரிவுகளில் வெளியானது. அதில் ஒரு பகுதி இது;

” தமிழ் (சிறப்பு) ஒரு பாடமாக உள்ள பல பல்கலைக்கழக மாணவிகளுக்கு, இப்போது நவீன இலக்கியத்துறையிலுள்ள ஒரு பெரிய பிரச்சினை பற்றிய பிரக்ஞை  எதுவுமே இல்லை என்று காணக்கூடியதாக உள்ளது. இவற்றை நாம் சொல்லும்போது அவர்களுக்குப் புரிவதுமில்லை. ஏனெனில் இது அவர்களுடைய பாடத்திட்டத்தில் இல்லை”

ஓர் இலக்கியச் சிற்றிதழின் விமர்சனக்கூட்டத்தில் பேசப்பட்டவற்றைக் குறிப்பெடுத்து எழுதப்பட்ட பதிவு இது. ஒருவர் சிரத்தையோடு குறிப்பெழுதி, அதனை ஆசிரியர் குழு பார்த்து அச்சேற்றிய பதிவு இது. தமிழை சிறப்புப் பாடமாகக்கொண்ட மாணவிகளுக்கு புரிதலில்லை என்று துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு மட்டுமே புரிதலில்லை என்ற ஆணாதிக்க எழுத்தினை வெளியிட்ட புதுசு இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

இதழ் வெளியான கையோடு, ‘இம்மாதிரிப் பதிவுகளில் கருத்து வேறுபாடுகளும் தொனி வேறுபாடும் நிகழும்’ என்ற குறிப்போடு, இம்மாதிரி நான் பேசவில்லை என்ற ‘தொனியில்’ யேசுராசா எழுதிய பதில் உடனடியாகப் பதிவு பெறுகிறது. ‘பல்கலைக்கழக மாணவிகள் என்று தனித்துச் சொல்லப்படவில்லை’ என்று பதில் எழுதி இவ்வாறு தான் சொல்லவில்லை என்கிறார் பேசியவர். “ஈழத்து இலக்கியம் ஆரோக்கிய சூழ்நிலையில் இருக்கிறது என்ற ஒரு சிறிய வட்டத்தினது போலி மாயையினை நிரந்தரமாக நிதர்சனமாக்க எண்ணி நாங்கள் இப்பணிக்குள் கால்களை இறக்கியிருக்கிறோம்’ என்று முதல் இதழில் முழக்கமிட்டவர்களுக்கு, தங்கள் இதழின் விமர்சனக் கூட்டத்தில்  என்ன பேசப்பட்டது என்பதைக்கூட ஒழுங்காக எழுத முடியாமல் இருந்தார்களா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஒரு செய்திப் பத்திரிகையில் வேலை பார்த்தவன். பத்திரிகை நிருபர்களாக இருப்பவர்கள் யாரும் இலக்கியப் பணிக்குள் கால்களை இறக்கியவர்கள் அல்லர். ஆனால், ஒரு கூட்டத்தில் பேசப்படுவது என்ன என்பதை ஒழுங்காக எழுதி அனுப்ப வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனுப்பும் செய்திகளை நாம் யாரும் மறுக்க இடம் கொடுக்கமாட்டோம். வழக்குகளில் நீதிமன்றங்களை நாடியிருக்கிறோம். இந்த மாதிரித் தப்புத்தப்பாய் எழுதிவிட்டு, பிழையான அச்செய்திக்கு எந்த பொறுப்பும் கூறாமல் ‘புதுசுகள்’ கம்மென்று இருந்தது இப்போதும் எனக்கு விளங்கவில்லை. ‘தமிழ் சிறப்புப்பாடமாக உள்ள பல்கலைக்கழக மாணவிகள்’ என்று பேச்சாளர் சொல்லாததை தங்கள் பாட்டில் கோர்த்துவிட்டார்களா? ஆசிரியர் குழுவின் கண்ணிற்கே இது தெரியாமல் போனது எப்படி? ஒரு பக்கத்தில் பேசியவரின் குறிப்பு வந்து, இப்போது ‘தொனி மாறிப்போனதை’ சரிப்படுத்த இரண்டு பக்கம் ஒதுக்க இடம் இருந்திருக்கிறது. ஆனால், சிவகுமாரனுக்குத்தான் புதுசுவில் ‘இடமும் அமையவில்லை’!

எம்.ஏ.நுஃமான்  எழுதிய ‘பா நாடகங்கள்’ பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரையை அடைக்குறிப்பு சகிதம் இரண்டு இதழ்களில் பதினொரு பக்கங்களில் வெளியிட இடம் இருந்திருக்கிறது. அக்கட்டுரை உண்மையில் ஏதாவது பல்கலைக்கழகச் சஞ்சிகையில் வெளிவந்திருக்கக்கூடிய கட்டுரை. இக்கட்டுரையை வெளியிட புதுசுவைவிட வேறு தரமான களங்கள் அவருக்கு உள்ளன. கே.எஸ்.சிவகுமாரனின் எதிர்வினை, இதழியல் அறத்தின்படி, புதுசு இதழில் மட்டுமே பிரசுரமாக வேண்டிய கட்டுரை. நீங்கள் அவரைப்பற்றி எழுதிய- அவரை மட்டம்தட்டும் தோரணையில் எழுதிய கட்டுரைக்கு அவர் என்ன எதிர்வினை ஆற்றினார் என்பதை அறியும் தேவை இலக்கிய உலகிற்கு உள்ளது. அவர் அதனை அலட்சியப்படுத்திவிட்டுப் போயிருந்தால் அது வேறு பிரச்சினை. இந்தக்கூட்டம் மூணு வார்த்தை பேசவிடு, ‘நாலு வார்த்தை பேசவிடு’ என்று கூச்சல் போடும்போது இந்தப் போலிகளின் – கொசுக்களின் ரீங்காரம் தாங்கமுடியவில்லை.

அடுத்து, புனைபெயர்களில் எழுதுகிறார்  என்பதற்காக பேக் ஐடி வகையறாக்கள் என்று சொல்ல இயலாது என்கிறார் அனோஜன். புனைபெயர்கள் பல நோக்கங்களுக்காக வைத்துக்கொள்ளப்படுகின்றன. தனது பெயரில் ஆயிரக்கணக்கானோர் இருக்கும்போது, தன்னைத் தனித்துக்காட்டுவதற்காக ஒருவர் புனைபெயர் வைத்துக்கொள்ளலாம். பெண்கள் பெயரில் எழுதினால், கவன ஈர்ப்பைப் பெறலாம் என்று புனைபெயர்கள் சூடியவர்கள் உள்ளனர். தமது பெயரில் எழுதினாலே பிரசுரம் செய்யமாட்டார்கள் என்று கருதிய பெண் எழுத்தாளர்கள், ஆண்கள் பெயரில் எழுதிய காலமும் இருந்தது. இதில் நமக்குப் பிரச்சினை இல்ல. புனைபெயர் என்ற பெயரில் fake ID காரன் எங்கே வருகிறான் என்றால், யாரையாவது கண்டனம் செய்வதற்கு, சொந்தப்பெயர் போட்டு எழுதத்திராணியற்றவர்கள், தங்கள் எழுத்திற்கு எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லாத பேடிகள் நிலையில் இந்தப் புனைபெயருக்குள் பதுங்கிக்கொள்ளும்போதுதான் ஏற்படுகிறது. மிகப்பிரபல எழுத்தாளர்கள் புனைபெயர்களில் தங்களைத் தாங்களே பாராட்டி எழுதிய கதைகள் பல. இந்த மாதிரி பேர்வழிகள் fake ID காரர்கள்தான். சிற்றிதழ் சஞ்சிகை சூழலில் புனைபெயர் இயல்பானது என்பதால் புனைபெயர்கள் என்பன புனிதமாகிவிடுவதில்லை. சில சிற்றிதழ்கள்  ஏனைய குழுக்களைத் தாக்குவதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டவை. பின் சில இதழ்களோடு அவை நின்றுபோகும். அவர்கள் யாருக்கும் பொறுப்புக்கூற வேண்டியதில்லை. பின் அவர்கள் எங்கே போனார்கள் என்றும் தெரிய வருவதில்லை. யாரையாவது கண்டனம் செய்வதற்கென்றே போலிப் பெயர்களை புனைபெயர்களாகக் கொண்டு எழுதுபவர்கள் fake ID வகையறாக்கள்தான். அச்சு ஊடகங்களில் போலிப்பெயர்களை – அதாவது புனைபெயர்களைப் பாவிப்பவர்கள் இணைய வெளியில் – முகநூலில் fake ID க்களில் வந்து எழுதுவார்கள். சாராம்சத்தில் இவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.    

இன்னுமொரு விடயம், சிவகுமாரன் குறிப்பிடும் ஆங்கில விமர்சன நூல்கள் மிகச் சிறந்த நூல்கள். விமர்சனத் துறையில் ஆழ்ந்த புலமையுடைய பல அறிஞர்களின் ஆக்கங்களைத் தாங்கிய சில நூல்களை அவர் அறிமுகம் செய்கிறார். அவை எத்தகைய நூல்கள் என்று தேடி வாசிப்பதற்கான அறிமுகக்குறிப்புகளை, இது என்ன பெரிய வாசிப்பு, இது மோசமான வாசிப்பு என்றெல்லாம் மனம் போனபடி அனோஜன் எழுதுவாரா? இதற்கு முன் இத்தகைய விமர்சன நூல்கள் பற்றி அவர் கேள்விப்பட்டிருப்பாரா என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால், அந்த நூல்களை எல்லாம் வாசித்த ஒருவர், அது என்ன அப்படிப் பெரிய வாசிப்பு என்று சொல்லத்துணியமாட்டார். அந்த நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அந்தக்கட்டுரைகளின் சாரத்தை எல்லாம் ஒரு பத்தி எழுத்தில் தருவது சாத்தியமில்லை. சிறு குறிப்பைத்தந்து அந்த நூலை அறிமுகப்படுத்தும் பணியையே அவர் செய்திருக்கிறார். அப்படி வாசகர்கள் வாசிக்கக்கூடிய ஒரு விமர்சன நூலைக்கூடப் புரிந்து வாசித்து, அதுபற்றிப் பிழையில்லாமல் எழுதி, தெளிவாக அறிமுகம் செய்யும் திறமையும் புலமையும் கொண்டவராக அனோஜனை நான் கருதவில்லை. அனோஜன், இந்த நூல்களை முதலில் தேடி எடுத்து வாசிக்கப்பாருங்கள். தர்க்கம், ஆழம், மோசமான / அற்புதமான வாசிப்பு என்பதை எல்லாம் பிறகு பார்க்கலாம். ஒரு வாசிப்பு எத்தனமும் இல்லாமல் வெறும் நூல்களின் பெயர்களையே சொல்லி எதிர்வினையாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள்.  

‘விக்கிபீடியாத்தனமாக எழுதுவது மோசடித்தனமானது’ என்று தன் கட்டுரைக்கு முத்தாய்ப்பு வைக்கிறார் அனோஜன்.  ‘விக்கிபீடியாத் தனம்’ என்றால் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. விக்கிபீடியா என்பது உலகளாவிய உசாத்துணைக் களஞ்சியமாகத் திகழும் வலைத்தளமாகும். இந்த இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் 62 லட்சத்திற்கும் மேலான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதற்கு மேல் 300 மொழிகளிலும் இத்தளம் செயற்படுகிறது. இந்த இணையத்தளத்தை 1.7 பில்லியன் பேர் உலகெங்கிலுமிருந்து பார்வையிடுகிறார்கள். இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள் பெரும்பாலானோர் அவ்வத்துறைகளில் வல்லுநர்களாவர். இந்த இணையத்தளத்தின்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்கள்கூட, உண்மைகள், பாதி உண்மைகள், தவறான தகவல்கள் என்றுதான் வரிசைப்படுத்துகிறார்கள். பார்வையாளர்களே இந்தக் கட்டுரையாளர்களாகவும் இருப்பதால் vandalism, ஒரு பக்கச்சார்பு, இனவாதம், ஆண்மையவாதம் என்று பல்வேறு குறைகள் கூறப்பட்டுவருகின்றன. ஆனாலும், நம்பகமான கட்டுரைகளை featured articles என்றே தனியே வகைப்படுத்துகின்றனர். ஏனைய தகவல்களில் தவறுகள் இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுகிறார்கள். நான் பார்க்க நேர்ந்த பல ஆங்கிலக் கட்டுரைகள் மிக விரிவாக,  தெளிவாக, நூற்றுக்கணக்கான அடிக்குறிப்புகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த 62 லட்சம் கட்டுரைகளை வாசித்து முடிக்கவே அனோஜனின் வாழ்நாள் போதாது. இவை அனைத்தையும் வாசித்து, அவற்றின் குறை நிறை தெரிந்தவன்தான் விக்கிபீடியாவின் தரம் குறித்துப்பேச முடியும். விக்கிபீடியாவில் தமிழில் வெளியான  கட்டுரைகளை அனோஜனின் தரத்தில் யாரும் எழுதியிருந்தால் விக்கிபீடியாவையே இழிவாக ஒதுக்குவது முறையாகாது!

அனோஜன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையிலேயே இவ்வளவு தவறுகள் மலிந்து காணப்படுகின்றன. முதலில் அவர் தமிழைப் பிழையில்லாது எழுதவேண்டும். நான் பதுளை ஊவாக் கல்லூரியில் படித்த காலத்தில் எனது தமிழ்ப் பாட ஆசிரியர் மதுரைத் தமிழ்ப் பண்டிதர் கனகசபாபதி அவர்கள், எனக்குக் கற்பித்த, எழுத்தில் வரக்கூடாத குற்றங்களை அனோஜன் நீங்களும் பின்பற்ற வேண்டும். குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொற் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன் இன்மை ஆகிய குற்றங்கள் இல்லாமல் நீங்கள் தமிழை எழுதிப் பயிலச் சிரத்தையோடு முயற்சி செய்யுங்கள். பின்னர் எழுத்தாளர், விமர்சகர், எதிர்வினையாளராக நீங்கள் வருவது பற்றி யோசிக்கலாம்.

தனது வாதத்திற்கு வலுத் தேடும் தீவிரத்தில் அதற்கு மாறான ஆதாரங்கள் வந்தபோது அவற்றைத் தந்திரமாக தவிர்த்திருக்கிறார், அனோஜன். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி மூல மாணாக்கர்கள் சிவகுமாரனின் நூல்களை ஆதார உசாத்துணை நூல்களாகப் பயின்று வருவது பற்றி தனது பல்கலைக்கழக நீண்டகால அனுபவத்திலிருந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய குறிப்புகளையோ, பேராசிரியர் சி.மௌனகுருவின் அவதானங்களையோ ஈஸியாகத் தவிர்த்துவிடுவதில் அனோஜனின் குள்ளத்தனம் தெரிகிறது. இப்படிப் பக்கச்சார்பான நிலைப்பாடு கூடாது என்று விக்கிபீடியா அறிவுறுத்துகிறது. முப்பது நாற்பது பேர் பட்டியல் தயாரித்த, அவர்களின் இலக்கியப் பங்களிப்பையும் அதோடு சேர்த்து தமிழ்ச் சிறு சஞ்சிகைகளின் தாரதம்மியத்தையும் ஒப்பிட்டு, முப்பது பக்கங்களில் விபரிக்குமாறு, சிவகுமாரனுக்கு அனோஜன் விளைவித்த துன்பம் பெரியது. முப்பது பக்கங்களில் இவ்வளவு பேரினதும் இலக்கியப் பங்களிப்பை விளக்கி, ஒரு முன்னோடியாக அனோஜன் ஒரு கட்டுரை எழுதிக்காட்டினால், அது சிவகுமாரனுக்கு அறிவொளியேற்றிருக்கும். நாமும் அதனை வாசித்து பெரும்பேறு பெற்றிருப்போம். காலாவதியான மேற்கோள்களைக் காட்டும் அனோஜன் சில விஷயங்களை update பண்ணிக்கொண்டிருக்கவேண்டும். இந்தநிலையில்  ‘விக்கிபீடியாத்தனமாக’ எழுதுவதாகக்கூறி, அதனை இழிவுபடுத்தி, தான் அதனிலும் மேம்பட்ட மேதாவி என்று தெரியப்படுத்தும் அனோஜனின் பாங்கினைப் பார்த்து நாம் புன்னகைக்கலாம். ‘போர்வை’ கதையில் இவர் எழுதி இருப்பதுபோல, வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தேவதையிடம் போர்வையோ பெட்ஷீட்டோ வாங்கியதாகக் கதை பண்ணலாம். சென்னையில் இவர் போலீஸ்காரனிடம் மாட்டினால், ‘திருட்டுப்பயலே!, இந்தப் போர்வையை எந்தப் புடைவைக் கடையில் அபேஸ் பண்ணினாய்? என்று இவருக்கு  லாடம் கட்டியிருப்பார்கள். நிஜ உலகத்திற்கும் இடைக்கிடை இவர் வந்துபோவது நல்லது.

கற்றது கைம்மண்ணளவு என்று தெளிவதற்கு காலம் தேவை. “எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான்'” என்று சொன்னவனின் ஞானம் சித்திப்பது எல்லோருக்குமா வாய்த்துவிடும்?    

1 Comment

  1. “மு.நித்தியானந்தன் எழுதி அனுப்பிய இவ் எதிர்வினையின் ஓரிடத்தில் தங்கள் எழுத்திற்கு எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லாத பேடிகள் நிலையில் இந்தப் புனைபெயருக்குள் பதுங்கிக்கொள்ளும்போதுதான் ஏற்படுகிறது என்ற வரிகளில் ‘பேடிகள்’ என்ற வார்த்தை இழிசொல்லாகப் பயன்படுத்தப்பட்டது.” என்ற கண்டனக் குறிப்பினைத் தெரிவித்திருக்கிறீர்கள். பேடி என்பது தற்கால வழக்கில் ஆண்மை அற்றவன் (impotent man) , வீரம் இல்லாதவன், கோழை (coward) என்ற இரண்டு அர்த்தங்களிலேயே பயன்படுத்தப்படுவதை க்ரியா அகராதி(2020) குறிக்கிறது.தங்கள் எழுத்திற்கு பொறுப்புக்கூற முடியாத கோழைகள் என்ற அர்த்தத்திலேயே அங்கு பேடி என்ற சொல்லைப்பாவித்திருக்கிறேன். திருநங்கையர், LGBT யினரை தற்காலத்தில் பேடி என்று யாரும் அழைப்பதில்லை. அவர்களை நோக்கிய இழிசொல்லாக நான் அதனைப்பயன்படுத்தவில்லை. அவர்களை ஒருபோதும் இழிவாக நான் நோக்குபவனுமில்லை.அன்போடும் நேசத்தோடும் கௌரவத்தோடும் திருநங்கையரோடு பழகுபவன் நான். -மு.நித்தியானந்தன்

உரையாடலுக்கு

Your email address will not be published.