
இல. சுபத்ரா
இல.சுபத்ரா, பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர். மொழிபெயர்ப்பாளர். திருப்பூரில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அமிதபா பக்சியின் ‘பாதி இரவு கடந்துவிட்டது(Half the night is gone)’ நாவலின் மொழிபெயர்ப்பு, 'அது உனது ரகசியம் மட்டுமல்ல', யுவான் ரூல்ஃபோவின் 'எரியும் சமவெளி' , அனா பர்ன்ஸின் 'ஆயன்(Milkman)' ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.

இளவேனில்
இளவேனில் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். கடந்த எட்டு ஆண்டுகளாக புதினங்கள், கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘உரையாடல்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

இஸுரு சாமர சோமவீர
சிங்கள இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர். 2 சிறுகதைத் தொகுதிகளும், 3 கவிதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன. சுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார். இவருடைய பத்துச் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘திருமதி பெரேரா’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

இஸ்க்ரா
இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர்.

ஈயூனிஸ் டி சௌசா
சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில், தன் வாழ்நாள் காலத்திலேயே கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைக்கும் உள்ளானவர். தனி அடையாளத்தையும் உலகையும் கொண்ட கவிஞர். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் 1940-இல் பிறந்து மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, தனியாகவே வாழ்ந்து 2017-இல் மறைந்தவர்.

உமா மகேஸ்வரி
குடும்ப உறவுகளில் இருக்கும் மானுட நாடங்களை நுட்பமாக எழுத்தில் கொண்டு வருபவர். மானுட மனதின் சிந்தனை மாற்றங்களை சட்டென்று எழுந்து பற்றிக்கொள்ளும் வசியம் நிறைந்த வலுவான படைப்புகளை தமிழுக்குத் தந்தவர். நினைவுகளில் இருந்து தவ்வித்தாவும் பெண்களின் அக அலைக்கழிப்புகளை, சிறுகதை வடிவ ஒருமைகளை மீறி எழுதி வெற்றியும் கொண்டவர்

உமாஜி
உமாஜி, காக்கா கொத்திய காயம் புத்தகத்தின் ஆசிரியர். சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். திரைப்படங்கள், புனைவுகள் மீது ஆர்வம் கொண்டவர்.

எம்.கோபாலகிருஷ்ணன்
எம்.கோபாலகிருஷ்ணன் (டிசம்பர் 2, 1966) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுகிறார். ஆங்கிலத்தில் இருந்தும் இந்தியில் இருந்தும் மொழியாக்கங்களும் செய்கிறார். திருப்பூர் பின்புலத்தில் தொழில்மயமாக்கம் உருவாக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை சித்தரிக்கும் படைப்புக்களால் முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.

எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். சிங்கள இலக்கியங்களை தமிழிற்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துவருகிறார். இலங்கை அரச சாகித்திய விருது, வம்சி விருது, கனடா இலக்கியத்தோட்ட விருது முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எஸ். செந்தில்குமார்
தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர்.

ஏ. பி. எம். இத்ரீஸ்
இலங்கையில் வாழைச்சேனையைச் சேர்ந்தவர். அரபுத்துறையில் இலக்கியம், பண்பாடு, புனிதப் பிரதிகள் மீதான மறுவாசிப்பு போன்றவற்றில் இயங்கி வருகிறார்.

ஏ.ஜி. யோகராஜா
இளமைக் காலத்தில் இலங்கையில் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர். சமூக, அரசியல் பரப்பில் புதிய சிந்தனை நோக்கிலான கருத்துக்களை தொடர்ச்சியாக எழுதி வருபவர். போருக்குப் பின்னர் சமூகச் செயற்பாடுகளிலும் இயங்கி வருகிறார். ஓர் அரங்க இயக்குனரும் கூட. தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறார்.

ஏ.வி மணிகண்டன்
ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ஏஜே.டானியல்
இலங்கையை தாயகமாகக் கொண்டு தற்சமயம் பிரான்ஸில் வசித்துவரும் ஏஜே.டானியல், சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகிறார்

ஐ. கிருத்திகா
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் வசிக்கிறார். இருபது வருடங்களாக சிறுகதைகள் எழுதிவரும் இவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஐசக் பாஷேவிஸ் சிங்கர்
ஐசக் பாஷேவிஸ் சிங்கர் ( 1904 - 1991) போலந்து நாட்டில் பிறந்த அமெரிக்க எழுத்தாளரான இவர் இட்டிஷ் மொழியில் நாவல்கள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். வார்சா ரப்பினிக்கல் செமினரியில் பாரம்பரிய யூதக் கல்வியைப் பெற்றார். அவரது முதல் நாவலான சாத்தான் இன் கோரே (1932) ஐ வெளியிட்ட பிறகு 1935 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நியூயார்க்கில் உள்ள ஒரு இட்டிஷ் செய்தித்தாளுக்கு எழுதினார். பெரும்பாலும் தொடர்ந்து இட்டிஷ் மொழியில் எழுதி வந்தாலும் தனிப்பட்ட முறையில் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மேற்பார்வையிட்டார். போலந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள யூதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இவரது படைப்புகள், மகத்துவுமான உண்மைகளை எளிமையாக சென்று தொடுபவை. இவருக்கு 1978 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவருடைய ஷோஷா (1974) நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Gimpel the Fool, and Other Stories (1957), The Spinoza of Market Street (1961), Short Friday (1964), The Seance (1968), A Crown of Feathers (1973), Old Love (1979), and The Image, and Other Stories (1985) ஆகியன இவருடைய முக்கியமான சிறுகதை தொகுப்புகள்.

ஒடெசா மோஷ்ஃபெக்
இன்றைய அமெரிக்க இலக்கியத்தின் தனித்துவமான மற்றும் முக்கிய குரல்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஈரானிய யூதப் பின்னணியை கொண்ட தந்தைக்கும், குரோஷிய கத்தோலிக்கப் பின்னணியை கொண்ட தாய்க்கும் மகளாக 1981ஆம் ஆண்டு பிறந்தார்.
அவருடைய எழுத்து நடை,இருண்ட நகைச்சுவை,கூர்மையான சமூக விமர்சனங்களுக்காக பெயர் பெற்றது. மனித மனதின் இருண்ட மூலைகளையும்,சமூகத்தின் போலித்தனங்களையும் தைரியமாக ஆராய்வதே இவருடைய படைப்புகளின் முக்கிய அம்சமாகும். இவரது ’எய்லீன்’ நாவல் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், ஹெமிங்க்வே அறக்கட்டளை/பென் விருதையும் வென்றது. இவரது கதைகள் தி பாரிஸ் ரிவியூ,தி நியூ யார்க்கர் மற்றும் கிராண்டா போன்ற புகழ்பெற்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

ஓ.ரா.ந கிருஷ்ணன்
ஓ.ரா.ந. கிருஷ்ணன் (ஓடத்துறை ராமாயாள் நல்லுச்சாமி கிருஷ்ணன்) (பிறப்பு: மே 16, 1934) பௌத்த தத்துவம், தியானம், சடங்குகள் சார்ந்த நூல்களை எழுதும் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், செயல்பாட்டாளர்.

க. கலாமோகன்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

க. ரகுநாதன்
க. ரகுநாதன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசுப் பணியாளராக உள்ளார். பல்வேறு சிற்றிதழ் மற்றும் இணைய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்பில் புனைவு மற்றும் அபுனைவுகள் வெளியாகி உள்ளன. காத்திரமான அயல்மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

க.சி.அம்பிகாவர்ஷினி
க.சி.அம்பிகாவர்ஷினி சிறுகதைகள், கவிதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். படிமங்கள் ஊடாக மன நகர்வுகளை புனைவின் வழியே வெளிப்படுத்துபவர். இரவு ஒரு சிறிய நூலகம், தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம், சிதைமுகம் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

க.நா.சுப்ரமணியம்
க.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31, 1912 - டிசம்பர் 16, 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இதழாளர். நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

க.மோகனரங்கன்
கவிஞராக அறியப்படும் க. மோகனரங்கன் விமர்சனம், மொழியாக்கத் துறையியிலும் தொடர்சியாக இயங்கிவருகிறார். மீகாமம்’, ‘அன்பின் ஐந்திணை’, ‘மைபொதி விளக்கு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

கண்டராதித்தன்
நவீன தமிழ் கவிஞர்களில் மரபோடு சார்ந்த கவிதைளை எழுதும் கவிஞர். இவருடைய கவிதைகள் பெரும்பாலும் பக்தி மரபுகளையும் தொன்மங்களையும் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் மரபின் பண்பாட்டுச் சித்திரங்கள் ஊடுருவும் கவிதை வெளி இவருடையது என்று கவிதைச்சூழலில் கருதப்படுகிறது.

கதிர் பாரதி
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'கதிர் பாரதி' சமகாலத்தில் அதிகம் கவனிக்கப்படும் தமிழ்க் கவிஞர்களில் ஒருவர். "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்", "ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்", "உயர்திணைப் பறவைகள்" ஆகிய கவிதை நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன.

கமலதேவி
கமலதேவி தொடர்ந்து தமிழில் சிறுகதைகளையும் கட்டுரைகளையும்ம் எழுதி வருபவர். மாறி வரும் உறவுநிலைகளை விலகல் தன்மையுடன் கதைகளாக்கி வருகிறார். திருச்சி சுற்று வட்டார காவேரிக்கரை கிராமங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை கதைகளின் ஊடாக அளிக்கிறார்.

கருணாகரன்
கருணாகரன் ஈழத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும், விமர்சனத்தையும் கண்டவை

கற்சுறா
கவிஞர், எழுத்தாளர் மற்றும் எக்ஸில் இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். சீற்றம் நிறைந்த கவிதைகளுக்காக ஈழத்து புகலிடச் சூழலில் நன்கு அறியப்பட்டவர். என்.கே.ரகுநாதனின் படைப்புகளைப் தொகுத்தவர். தற்சமயம் கனடாவில் வசித்து வருகிறார்.

கா. சிவா
விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.

காஞ்சனா பிரியகாந்த
சிங்கள மொழியில் அறியப்பட்ட இளம் எழுத்தாளர். சிங்களம், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார். KSP பதிப்பகத்தினை நிறுவி நடாத்தி வருகிறார்.