நண்பர்கள் அனைவருக்கும் “அகழ்” ஆசிரியர் குழு சார்பில் வணக்கம்.
கடந்த ஐந்து வருடங்களாக தமிழ் அறிவுச் சூழலில் “அகழ்” தீவிரமாக பணியாற்றி வருகிறது. காலாண்டிதழாக துவங்கப்பட்டு, பின் மாதாந்திர இதழாக உருமாறி இன்று ஒவ்வொரு மறுதினமும் பதிவேற்றம் நிகழும் இணையதளமாக அகழ் செயல்பட்டு வருகிறது. அகழ் வாசகர்களுக்கு இந்த இணையதளத்தின் தரத்தினை விளக்க வேண்டியதில்லை. இச்சூழலில் “அகழ்” நிறுவனர்களில் ஒருவரும், அதன் நிர்வாகியுமான எழுத்தாளர் சயந்தன் அவர்கள் ஒரு புதிய ஊக்கத் திட்டத்தினை முன்மொழிந்துள்ளார்.
அறிவுத்தள பங்களிப்புகளை வரவேற்கும்விதமாக அகழில் வெளியாகும் நேர்க்காணல்களுக்கும், கட்டுரைகளுக்கும் தன் “S நிறுவனத்தின் (S Travel pvt ltd – Switzerland)” வாயிலாக ‘மதிப்புத் தொகை’ அளிக்க முன்வந்திருக்கிறார். மொழிபெயர்ப்புகளும் அதில் அடங்கும். நேர்காணல்களுக்கு 2000 ரூபாயும், கட்டுரைகளுக்கு 1500 ரூபாயும் வழங்க இப்போதைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அகழில் ஒவ்வொரு மாதமும் பிரசுரிமாகிற உள்ளடக்கத்தின் அளவைக் கணக்கிட்டால் இது கணிசமாக பணத்தைக் கோரும் திட்டம். சயந்தன் ஒரு தனி நபராக இதை முன்னெடுப்பதற்கு ஆசிரியர் குழு சார்பில் நன்றி. ஏற்கனவே அகழ் இணையதளத்துக்கான பராமரிப்பு செலவையும் அவரே ஏற்று வருகிறார் என்பதையும் இங்கு குறிப்பிட கடன்பட்டுள்ளோம்.
இன்றைய தேதியில், தமிழில் எழுத்துக்கேற்ற சன்மானத்தை பெரிய பத்திரிக்கைகள்கூட வழங்கிட முடியாது என்பதே நிஜம். ஒரு சிற்றிதழாக எல்லைக்குட்பட்ட இடத்திலிருந்து, எவ்வகையிலும் இந்த ஊக்கத்தொகை எழுத்தின் மதிப்புக்கு ஈடாகாது என்ற அறிதலுடனும் தன்னடக்கத்துடனுமே இத்திட்டத்தை முன்வைக்கிறோம். கடந்தகாலத்தில்கூட சில எழுத்தாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அவ்வப்போது தனிப்பட்ட முறையில் அகழ் சன்மானம் அளித்துள்ளது. ஆனால், அதைச் சீராகச் செய்ய இயன்றதில்லை. இப்போது அதை மாற்றுவதற்கான ஆரம்பப் படிகளில் எட்டு வைக்கிறோம்.
தற்சமயம், புனைவுகளும் கவிதைகளும் இத்திட்டத்தில் இடம்பெறவில்லை. திரைக்கலை சார்ந்த எழுத்துக்களும் தற்காலிகமாக சேர்க்கப்படவில்லை. சிறிய அளவில் நடைமுறைப்படுத்திப் பார்த்துவிட்டு பின்னர் விஸ்தீரிக்கும் வாய்ப்பு அமைந்தால் மேற்கொண்டு செயல்பட எண்ணியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் பங்களிக்க விரும்பும் எழுத்தாளர்கள் akazhonline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
சில விதிமுறைகள்,
- நேர்காணல்கள் 4000 வார்த்தைகளுக்குக் குறையாமலும், கட்டுரைகள் 3000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். எழுத்தின் முக்கியத்துவம் மற்றும் தரத்தின் அடிப்படையில் விதிவிலக்குகளுக்கு அனுமதியுண்டு. ஆனால் அது முழுக்க முழுக்க ஆசிரியர் குழுவின் தேர்வு மட்டுமே.
- நேர்காணல் மேற்கொள்கிற விரும்புகிறவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள ஆளுமையை முதலிலேயே ஆசிரியர் குழுவுக்கு எழுதித் தெரியப்படுத்த வேண்டும். இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் ஆளுமையின் நேர்காணல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- மேற்சொன்ன விதி மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும். மொழிபெயர்ப்புக்கான மூலக் கட்டுரைகள் ஆசிரியர் குழுவுக்குக் கட்டாயம் அனுப்பப்பட வேண்டும்.
- “அகழ்” இணையதளம் நவீன இலக்கியத்துக்கு முதன்மை இடம் அளித்தாலும், தத்துவம், வரலாறு போன்ற பிற அறிவுத் துறைகளிலும் அக்கறை கொண்டுள்ளது. எனவே மரபிலக்கியம் பற்றிய கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. கலாச்சார மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு முன்னுரிமை உண்டு. நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரையில் நூல் மதிப்புரைகளைக் காட்டிலும் விரிவான திறனாய்வு கட்டுரைகளே எதிர்நோக்கப்படுகின்றன.
- ஈழ இலக்கிய , பண்பாடு ரீதியிலான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
அகழ் ஆசிரியர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மொழிபெயர்க்க விருப்பம் உள்ளவர்களும் எங்கள் மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
எழுத்துக்கான ஊதியத்தை உறுதி செய்வது என்பது ஓரு நெடிய கனவு. பலரும் அதற்காக பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்கள். இந்த எளிய நியாயமான தேவை, பூர்த்தி செய்வதே கனவாக இருப்பது நம் சூழலின் துரதிருஷ்டம். அதை மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் அகழின் இந்தத் திட்டமும் இடம்பெற விரும்புகிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
ஆசிரியர் குழு.
நல்ல திட்டம். வாழ்த்துக்கள். இலக்கிச் சமூகவெளியில் சயந்தன் இதயசுத்தியுடன் ஆற்றி வரும் இந்தப் பங்களிப்பு மகத்தானது.
அருமை, வாழ்த்துகள் ,,