சமீப ஆண்டுகளில், தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்படும் வேகம் பல மடங்கு உயர்ந்துள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைத்துத் துறைகளிலும் இந்த பரிமாற்ற வேகம் பாதிப்பைச் செலுத்தியுள்ளது. உலகின் எந்தவொரு கலாசாரத்தைச் சார்ந்த ஒருவரும் வேறெந்த கலாசாரத்தை சேர்ந்த இன்னொருவருடன் மிக எளிதாக உரையாட முடிகிறது. உலக இலக்கியங்களையும் தத்துவங்களையும் ஆர்வமிருக்கும்பட்சத்தில் நேரடியாகவே ஒரு வாசகரால் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது. இந்தப் போக்கின் சாதகங்கள் பாதகங்கள் குறித்த விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும் இப்போக்கு வாசகரின்  ரசனையில் தீர்மானமான பாதிப்பை செலுத்தியுள்ளது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘உலகளாவிய ரசனை’ என்ற ஒன்று உருவாகி வருகிறது. உலகளாவிய என்ற சொல்லை, கவனத்துடனேயே பயன்படுத்துகிறோம். முதலாளித்துவம் உருவாக்கிய மையப்பொருளியல் நோக்கில் இச்சொல் இங்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக உலகில் நிலவும் பல்வேறுபட்ட  உறவு ஒழுங்கமைவுகளை, உணவுப்பழக்கங்களை, நீதி வழங்கும் முறைகளை சமநிலையுடனும் திறந்த மனதுடனும் அணுகும் திறன் கொண்ட ஒரு வாசிப்பு போக்கு வலுப்பெறுவதையே ‘உலகளாவிய ரசனை’ என்ற சொல் வழியாக குறிப்பிட விழைகிறோம்.

கலாசாரங்களுக்கு இடையேயான நுட்பமாக வேறுபாடுகளை மழுங்கடித்து ஒரு நகர்புற நுகர்வியத்தை நோக்கி மனிதர்கள் உந்தப்படும் ஒரு காலத்தில் வேற்றுமைகளுக்கு இடையேயான உரையாடல் அவசியமாகிறது. தீவிரமான வாசிப்பு எழுத்து என்ற போக்குக்கு மாற்றாக அனைத்தையும் ‘லைட்டாக’ எடுத்துக் கொண்டு ஆழமும் உள்ளீடும் இல்லாத எழுத்துக்களும் இலக்கியம் என்ற பெயரில் முன்வைக்கப்படுகின்றன.

நம்மைச்சூழ்ந்து பெருகிக் கிடக்கும் தகவல்களால் ஒரு பெரும் சலிப்பு, சூழலில் நிலவுகிறது. கூர்மையான வாசிப்பு மற்றும் ரசனை சார்ந்த விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு இந்த தகவல் குவியல் ஒரு பெருந்தடை. அதேநேரம்  ‘தகவல்’ என்ற இந்த நூற்றாண்டு அளிக்கும் சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச்சூழலை கருத்தில் கொண்டே ‘அகழ்’ தன்னுடைய இலக்கிய செயல்பாட்டின் செல்வழிகளை தீர்மானித்து இருக்கிறது.

  • தமிழ் இலக்கியம் என்ற உலகளாவிய ஒற்றைப் பரப்பில் நிகழும் அனைத்து விதமான இலக்கிய முன்னெடுப்புகளையும் அடையாளப்படுத்துவது.
  • இம்முன்னெடுப்புகளுக்கு இடையேயான உரையாடல்களை சாத்தியப்படுத்துவது.
  • தீவிரமான இலக்கியம் எது என்பது சார்ந்த விவாதத்தை இலக்கிய விமர்சனங்கள் வழியாகவும் மதிப்புரைகள் வழியாகவும் தொடர்ந்து முன்னெடுப்பது.

முதலான நோக்கங்களை வரித்தவாறு, அகழ் சுயாதீனமாக இயங்குகிறது. இந்த இலக்குகளைப் பலப்படுத்தும் அனைவரது ஒத்துழைப்பையும் பங்களிப்புக்களையும் எதிர்பார்க்கிறது. நன்றி

பொறுப்பாசிரியர்கள்