/

இலக்கிய மதிப்பீட்டில் சமூக அரசியல் தரப்பு

அகழ் ஏப்ரல் இதழில் மீண்டும் சந்திக்கிறோம். இந்த வருடத்தின் நான்காவது இதழ். இந்த வருடத்தின் நான்கு இதழ்களும் நிறைவை தருகின்றன. எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் எதிர்வினைகள் உற்சாகம் அளிக்கின்றன. ஒவ்வொரு இதழையும் தீவிரத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனுமே கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். “அகழ்” இதழ் சார்ந்து அந்த எதிர்பார்ப்பு சூழலிலும் மிகுந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இணைய வசதியின் பெருக்கம் இதழ் நடத்த அதிக சௌகரியத்தைக் கொடுத்தாலும் தேர்வு, நிகாரிப்பு ஆகியவற்றின் பின்னுள்ள உறுதியான நிலைபாடுகளே தரத்தை உறுதிசெய்கின்றன. தனித்துவத்தை நிர்ணயிக்கின்றன. “அகழ்” அப்படி தனித்துவமான ஓர் இடத்தை தனக்காய் உருவாக்கிக் கொள்ளும் எனும் நம்பிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

O

சமீபத்தில் மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் தேவா மறைந்தார் . அவருக்கு “அகழ்” இதழ் தன் இதயபூர்வமான அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது. தேவாவின் மொழியாக்க தேர்வு தனித்துவமானது; ஒடுக்குமுறையின் பெருங்கதையாடல்களுக்குள் இருக்கும் சிறுகதையாடல்களை கவனத்துடன் அடையாளப்படுத்தினார். அம்பரயா, அனோனிமா, என் பெயர் விக்டோரியா, குழந்தைப்போராளி,   நீண்ட காத்திருப்பு போன்ற மொழியாக்க படைப்புககள் அதற்குச் சாட்சி. அவரின் இலக்கிய பங்களிப்பு தமிழில் எப்போதும் இருக்கும், உரையாடப்படும் அதன் ஊடாக அவரது இருப்பு நிலைகொள்ளும்.

O

இலக்கியத்தோடு நின்றுவிடாமல் வெவ்வேறு கலை வடிவங்கள் சார்ந்தும் “அகழ்” இதழில் கட்டுரைகள் வெளியிட எங்களுக்கு விருப்பம் இருந்தது.மெல்ல அதுவும் சாத்தியமாக ஆரம்பித்திருக்கிறது. புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன் தொடர்ந்து புகைப்படக் கலை சார்ந்து காத்திரமாக கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்த இதழிலும் அவருடைய கட்டுரை வெளியாகியுள்ளது. அழகிய மணவாளன் கதகளி பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இப்படி நவீனம், செவ்வியல் என்று வெவ்வேறு கலை வடிவங்கள் பற்றியும் கட்டுரைகள் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவை உருவாக்கும் சலனங்களையும் முக்கியமாக எண்ணுகிறோம்.

O

ஏப்ரல் இதழில் மார்க்ஸிய விமர்சகரான டெர்ரி ஈகிள்டனின் பேட்டியும் கட்டுரையும் வெளியாகியுள்ளன. கலை இலக்கியம் என்பது வெவ்வேறு சிந்தனைப் போக்குகள், வெவ்வேறு அழகியல் மற்றும் கருத்தியல் தரப்புகள்  ஆகியவற்றின் சங்கமம். அதில் ஏதாவது ஒரேயொரு தரப்பை மட்டும் முன்மொழிவது குறுகிய பார்வையாக மாறிவிடும். எனவே இலக்கிய மதிப்பீட்டிலும் தனி நபர் ரசனை மட்டுமில்லாமல் சமூக அரசியல் தரப்புக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. அதே நேரம் எந்த தரப்பிலும் முக்கியமான சிந்தனையாளர்களை மட்டுமே உரையாடலுக்கான முகங்களாக கொள்ள வேண்டும். குறிப்பாக அரசியலில் இன்னும் கவனம் வேண்டும். இல்லாவிடில் இலக்கியத்தை வெறும் கருத்து ஊடகமாக பார்க்கும் எளிய மூன்றாம்தர விமர்சன முறை அங்கீகாரம் பெற்றுவிடும்.

கலாச்சார கோட்பாட்டாளரான டெர்ரி ஈகிள்டன் சமகாலத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர். பாரதி புத்தகாலயம் வெளியீடாக தமிழில் ஏற்கனவே அவருடைய சில நூல்கள் மொழிபெயர்ப்பாகி வந்திருந்தாலும், அவர் இன்னமும் கூடுதல் கவனம் பெற வேண்டியவர். அவர் கருத்துக்களோடு ஒருவர் உடன்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் அவரால் சீண்டப்படுவதுக்கூட முக்கியமானது என்றே கருதுகிறோம். “இலக்கியம் என்றால் என்ன?” எனும் அவருடைய கட்டுரை விஷால் ராஜா மொழிபெயர்ப்பில் இவ்விதழில் வெளியாகியிருக்கிறது. சீண்டி சிந்திக்கத் தூண்டும் கட்டுரை.

O

இந்த இதழிலில் இருந்து ‘அர்த்தமண்டபம்’ என்று ஒரு புதிய பகுதி தொடங்கப்படுகிறது. வெவ்வேறு எழுத்தாளர்களை அவர்களுக்கு விருப்பமான கவிதைகளை வாசிக்கச் சொல்லி, பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம். அக்குரல்பதிவை “அகழ்” இதழில் உள்ள ஒலிப்பானில் கேட்கலாம். மின்னிதழ் என்பதால் தொழில்நுட்ப சாத்தியங்களையும் பரிசீலித்து பார்க்கும் விழைவில் இதை தொடங்கியிருக்கிறோம். வாசகர்களிடம் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த வேண்டும். கவிதையை மேடை நிகழ்வு போல செய்வது இங்கே நோக்கமன்று. எனவே நாடகீயத்தை எதிர்பார்க்க வேண்டாம். எழுத்தாளருடைய குரல் வழியே ஒரு தொடர்புறுத்தலை நிகழ்த்துவதே எண்ணம். மேலும் கவிதை சார்ந்து ஒரு கவனத்தையும் உண்டாக்க நினைக்கிறோம். எழுத்தாளர்களே கவிதைகளை தெரிவு செய்வதால், ரசனை பரிமாற்றமும் நடக்கும். புகழ்பெற்ற கவிதைகளும், அவ்வளவு புகழ்பெறாத கவிதைகளும் அப்பரிமாற்றத்தில் துலங்கக்கூடும். இவை எல்லாம் விருப்பங்களே. நடைமுறையில் என்ன விளைவென்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கூடுதலாக இச்செயலுக்கு ஆவண மதிப்பும் உண்டு. தமிழில் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் அரிதாகவே கிடைக்கின்றன. ஆவணப்படுத்துவதில் நாம் பின் தங்கியே உள்ளோம். இந்த நிலையில் எழுத்தாளர்களின் குரல் ஓர் இடத்தில் இருப்பது தேவையானதே. “அர்த்த மண்டபம்” பகுதியின் தொடக்கமாக, சுகுமாரன் அவர்களின் மூன்று கவிதைகளை  கவிஞர் இசை  வாசித்தளித்துள்ளார். ஒரு முன்னோடியின் கவிதைகள் – சமகாலத்தின் ஒரு முக்கியமான கவியின் குரலில். இதைவிட ஒரு நல்ல தொடக்கம் கிடைப்பதரிது. இசைக்கு “அகழ்” தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


O

இந்த இதழில் பங்களிப்பாற்றிய பிற எழுத்தாளர்கள் பென்னி, லாவண்யா சுந்தரராஜன், நெகிழன், நீலாவணை இந்திரா, உமா மகேஸ்வரி, அசுரா நாதன், ஸ்ரீதர் நாராயணன், சப்னாஸ் ஹாசிம் ஆகியோருக்கும் நன்றி. வாகர்கள் இதழை படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். இன்னும் மேம்பட எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

1 Comment

  1. நல்ல தரமான இதழாக வெளிவந்துகொண்டிருகிறது . வாழ்த்துக்கள்

உரையாடலுக்கு

Your email address will not be published.