சாகத் தவறிய மறுநாள்
சாவதும் ஒரு கலை – எல்லாவற்றையும் போல
– ஸில்வியா ப்ளாத்
கடைசி மாத்திரையை விழுங்கியதும்
மனம் அலைகளடங்கி அமைதியானது
இறப்பு கருணையுடன் நெருங்கியது
இனி விழிப்பின் அவலங்கள் இல்லை
கண்ணீரோ
ஓயாமல் கசியும் காயங்களோ
அலைகழிதலோ இல்லை.
பொய்யின் கசப்போ
அழுகிய புன்னகைகளின் துர்நாற்றமோ
நொந்துகொள்வதோ இல்லை
பயமோ
நிரந்தரமாய்க் கவிந்த வெறுமையோ
நேசமற்ற கணங்களோ இல்லை
காலம் வெளி பெயர்கள் இல்லை
மேலாக
வாழ்வின் குமட்டல் இல்லை
மனம் அலைகளடங்கி அமைதியானது
நினைவில் புதைந்த இசை
வெளிப்பட்டுத் ததும்பியது
மனம் அலைகளடங்கி அமைதியானது.
காலையில்
ஒளி வந்து அழைக்க எழுந்து
என் கிளிக்குப்
பழங்கள் பொறுக்கப் போனேன் வழக்கம்போல
சந்தோஷம்
துக்கம் என்னும் சலனங்களலற்று
சிறுநீர் அடக்கிய வடிவயிறாய்க்
கனத்தது மனம்
பெருமழையில் வாகனம் ஓட்டும்போது
பெருமழையில் வாகனம் ஓட்டும்போது
நீங்கள் நீங்களாக இருப்பதில்லை
யாரோவாக ஆகிறீர்கள்
நீங்கள் ஓட்டுவது
பயணி வாகனமெனில்
நீங்கள் நோவா
உங்கள் வாகனம் நீர் நுழையாப் பேழை
உங்கள் முன் அலையடிக்கிறது பிரளய ஜலம்
நீங்கள் செலுத்துவது
உறவின் ஊர்தியெனில்
நீங்கள் குகன்
உங்கள் ஊர்தி நீரில் தவழும் தோணி
உங்கள் பாதையில் புரண்டோடுகிறது நதி
நீங்கள் முடுக்குவது
இரு சக்கர சாகசத்தையெனில்
நீங்கள் சே உங்கள் வண்டி நீருடன் போராடும் படகு
உங்கள் வழியில் பிளக்கிறது நீரோட்டம்
நீங்கள் மிதிப்பது
காற்றின் உலோகக் கனவையெனில்
நீங்கள் சாந்தியாகோ
உங்கள் செல்லரதம் நீருக்கஞ்சாத கட்டுமரம்
உங்களுக்காகப் பின்னோக்கிச் சுருள்கிறது நீர்ப்பாய்
பெருமழையில் நனைந்து நின்று
எந்த வாகனத்தை
ஓட்டிப் போகலாமென யோசிக்கிறீர்கள்?
வாகனம் எதுவானாலும் நீங்கள் நீங்களாகவா இருக்கப்போகிறீர்கள்?
பரோல்
அவ்வப்போது
பரோலில் வெளிவந்து
உன்னோடு காதல் செய்வதில்
குற்றமுணர்கிறேன் பெண்ணே
எனவே
என்னை நீ இழந்துபோவதில்
எனக்குப் பெருந்துக்கமில்லை
நான் பற்றியிழுத்துத் துய்த்த உன் இதழ்கள்
விரகத்தின் குளிரால் வெடிக்கக்கூடும்
உன் முடிச்சுருளில்
பரவசமாய் இடறி நகர்ந்த என்
விரல்கள் வெப்பமற்று உறையக்கூடும்
நான்
திளைக்கத் திளைக்கக் கவ்விய
உன் கனிந்த மார்புகளின்
உள்ளொடுங்கிய காம்புகள்
என் ஈரநாவுக்குள் விறைந்து நிமிரும்
திவ்விய நொடிகள் இனி இல்லாது
போகும்
உன்
நாபிச் சுழலில் வட்டமிட்டு இறங்கி
உன்னில் கரையும் மாயச் சுழற்சி
ஓய்ந்துபோகும்
விரியத் திறந்து வரவேற்கும்
மென்மயிர்க் கருஞ்சுடரில்
படர்ந்த முத்தங்கள் உதிரக்கூடும்
எனினும்
நாம் பரஸ்பரம் பகிர்ந்து
ஒருவருக்கொருவராய் நிறைந்த
காலத்தின் நினைவுக்காய்
உன் பாதங்களில் என் இரு துளிக் கண்ணீர்
எப்போதும் நீ
கருணை விளைக்கக் காத்திருக்கும்
பக்குவ வயல்
இப்போது நான்
வாக்குறுதியின் பிழையில் சிறைப்பட்ட
மலட்டு மேகம்
அடிக்கடி பரோல்
அனுமதிக்கப்படுவதில்லை பெண்ணே
என்னை நீ இழந்துபோவதில்
எனக்குப் பெருந்துக்கமில்லை
ஏனெனில் என்னை நான்
கடந்துகொண்டிருக்கிறேன்