ஞானபீடம் விருது : எங்கள் கண்டனங்கள்

வைரமுத்து

இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது இது. நவீன தமிழ் இலக்கியச் சூழலில், யாருமே வைரமுத்துவை நல்ல கவிஞராகவோ அல்லது புனைவாசிரியராகவோ கருதுவதில்லை. அவர் எழுத்து நுண்ணுணர்வில்லாதது.

வைரமுத்துவின் கவிதைகள் வானம்பாடி மரபை சேர்ந்தவையாக அடையாளம் காட்டப்படுகின்றன. எழுத்து, வானம்பாடி இவ்விரு பத்திரிக்கைகள் வழியே இருவேறு அழகியல்கள் தமிழ் கவிதையில் நிலைப்பெற்றன. எழுத்துவழி அழகியலே இன்று தமிழ் இலக்கியச் சூழலில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. எவ்வித பாசாங்குமில்லாமல் வாழ்க்கையை, மனித குணாதிசயங்களை, உள அடுக்குகளை, கருத்தியல்களை – கூர்மையுடன் – விசாரிப்பதே இவ்வகை ஆக்கங்களின் குறிக்கோள். அதற்கு நுட்பமான எழுத்துமுறை தேவைப்படுகிறது. அலங்காரங்களில்லாத தனி வாசிப்புக்குரிய அந்தரங்கமான மொழிநடை தேவைப்படுகிறது. வாசக இடைவெளிகளுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதையும் நேரடியாக பகிர்வதைக் காட்டிலும் குறிப்புணர்த்துவதையே முதன்மையாகக் கொண்ட அழகியல் அது. வானம்பாடி இதற்கு நேர்மாறானது. அது வெளிப்படையான கூற்றுகளையே தேர்கிறது. எனினும் அதற்கும் ஒரு வரலாற்று பொருத்தப்பாடு உண்டு. இடதுசாரி அரசியலின் பின்னனியில் அது உருப்பெற்றது. புரட்சிக்கான அறைக்கூவல் கொண்டிருந்தது. இன்னொருபுறம் பொது மனதின் அக ஏக்கத்துக்கான வடிகாலாக இருந்தது. இன்றைய சமூகச் சூழல் கடந்தகாலத்திலிருந்து வேறுபட்டது. எனவே அக்கவிதைகளுக்கான பொருத்தப்பாடும் ஏறத்தாழ இல்லாமல் ஆகிவிட்டது.

வைரமுத்து வானம்பாடி மரபின் தொடர்ச்சியாக அடையாளம் காட்டப்பட்டாலும் அவ்வரிசையிலும் பொருட்படுத்தத்தக்க இடம் அவருக்கில்லை. பைரன் போன்ற புகழ்பெற்ற கற்பனாவாதிகளை நகலெடுக்கும்விதமாக இயற்கையை வருணிப்பது; கலையின் உன்னதத்தை சுட்டுவது. மறுமுனையில், சுயமுன்னேற்றத்துக்கான ஒழுக்க விதிகள். (அவருடைய அமைப்பின் பெயரே ‘வெற்றித் தமிழர் பேரவை’தான்). கொச்சையான காதல் வரிகள். அறிவியல் தகவல்களை வைத்து மேம்போக்காக சமூக விமர்சனம் செய்வது. மிகை நாடகீயம். இவையே அவர் எழுத்துக்களின் மையமாக இருந்துள்ளது. ஒருவகையில் அறிவியல் மயப்பட்ட நேருவிய சோஷியலிச யுகத்திற்கும் உலகமயமாதல் யுகத்திற்கும் நடுவே அவர் இருக்கிறார். இரண்டிலிருந்தும் சுய அடையாளத்தையும், லாபத்தையும் பெருக்கும்விதமாய் கருத்துக்களை எடுத்து, தேய்ந்த பழைய நடையில் எழுதுவதே அவர் பாணியாக உள்ளது. சங்க இலக்கியச் சான்றுகளும் வட்டார வழக்கும் ஊடாடுவது அவருடைய தனித்தன்மையாக கருதப்படுகிறது. இவை யாவுமே, சில ஆயிரம் பரிசுத் தொகையில் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டே வருடங்களில் நின்று போகிற விருதுகளுக்குக்கூட பெறுமதியானவை அல்ல. ஆனால் வைரமுத்து சாகித்திய அகாடெமி வாங்கிவிட்டார். இப்போது ஞானபீடத்தையும் வாங்கிவிட்டார்.

திரைப்பட பாடலாசிரியராக வைரமுத்துவை மதிப்பிடுவது இவ்விருதுக்கு வெளியே பேசுவதாகும். அத்துறையில் அவருடைய நிபுணத்துவம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு கவிஞராக, புனைவாசிரியராக அவருக்கு நவீன இலக்கியத்தில் எந்த இடமும் இல்லை. இந்நிலையில் அவர் தேசிய அளவில் இத்தகைய உயரிய விருதை பெறுவது நவீன தமிழ் இலக்கிய இயக்கத்துக்கு நேர்கிற அவமரியாதை; தமிழ் மொழிக்கு நேர்கிற அவமரியாதை. (தமிழ் மொழியும், நவீன இலக்கிய இயக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பதே பொதுச் சமூகத்தின் புரிதல். எனவே அது இந்த விருதை வரவேற்கவே செய்யும்). வைரமுத்துவின் அரசியல் செல்வாக்கு ரகசியமானதன்று. பல்வேறு மட்டங்களில் அவருடைய தொடர்பு வலை நீள்கிறது. மாநிலத்தின் முதலமைச்சர் வரை அவருக்கு நட்பு வட்டம் இருக்கிறது. அதை அடிக்கடி பிரகடனம் செய்யவும் அவர் தவறுவதில்லை. கவிஞன் எனும் அடையாளத்தை -குரலும் உடையும் பாவனையுமாக- ஒரு கேடயம் போல அவர் பயன்படுத்திக் கொள்கிறார். ஓர் இலக்கியவாதிக்குரிய லட்சணங்கள் அல்ல இவை.

வைரமுத்து ஞானபீடம் விருதுக்கு நீண்ட காலமாகவே முயற்சித்து வந்தார் என்பது செய்தி. பல ஆண்டுகளாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழுக்கு ஞானபீடம் வேண்டும் என்று முழங்கியிருக்கிறார். தனக்கு வேண்டும் என்று நேரடியாக கேட்க முடியாது என்பதால் தமிழுக்கு வேண்டும் என கேட்பது பலரும் பின்பற்றும் ஒரு வழிமுறை. (அந்தளவு நாகரீகம் மிச்சம் இருப்பதும் மெச்சத்தக்கதே). வைரமுத்து மீது பொதுவெளியில் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளினாலேயே இவ்விருது அவருக்கு காலத் தாமதமாக கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. பரவலாக விவாதிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகள்கூட இவ்விருதுக்கு தடையாகவில்லை; அவருடைய அரசியல் சார்புகளும் தடையாகவில்லை. இவை எல்லாம் வைரமுத்துவின் செல்வாக்கையே காட்டுகின்றன. 2017லேயே எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் வைரமுத்து ஞானபீடத்தை வெல்லும் இடத்தில் இருப்பதாக எழுதினார். தன் எதிர்ப்பை தெரிவித்ததுடன் கரிசல் எழுத்தின் முன்னோடியான கி.ராஜநாராயணனுக்கு அவ்விருது வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தார். ஆனால் கி.ராஜநாராயணன் அவ்விருதை பெறாமலேயே 2021ல் மறைந்துவிட்டார். இன்று வைரமுத்து அதை வாங்கிவிட்டார்.

நவீன தமிழ் இலக்கிய இயக்கம், மிகச் சிறிய வாசக வட்டத்தினுள் புழங்குவது. அமைப்புகளுடனும் அதிகார மட்டங்களுடனும் நெருக்கமான தொடர்பில்லாதது. தனித்து செயல்படுவது. சமீப ஆண்டுகளில்தான் சாகித்திய அகாடெமி விருதுகளே தகுதியான எழுத்தாளர்களை அடைகின்றன. அந்த இடத்துக்கே இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறோம். எனினும் சிறிய குழுவாக இயங்கினாலும் அதனுடைய தீவிரம் எந்த உலக இலக்கிய சூழலுக்கும் குறைவானதல்ல. இன்று, வைரமுத்து இவ்விருதுக்கு தகுதியானவர் அல்ல என்று ஓர் ஆரம்ப நிலை வாசகனால் கூட சொல்ல முடிகிறதென்றால் அது இந்த இயக்கத்தின் மதிப்பையே காட்டுகிறது. அந்த மதிப்பை தொடர்ந்து தக்க வைப்பதும், ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் கடத்துவதுமே நம்முடைய லட்சியங்கள். அதன் நிமித்தமாகவே இவ்விருதுக்கு அகழ் தன் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது. வைரமுத்துவுக்கு ஞானபீடம் அறிவித்திருப்பதன் வழியே பாரதிய ஞானபீட அமைப்பு தனக்கும் தமிழ் மொழிக்கும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இத்தகைய உயரிய விருதுகள் தொடர்ந்து ரகசியமான முறைகளிலேயே செயல்படுவதும் விமர்சனத்திற்குரியது. தேர்வுக் குழு, பரிந்துரை விவரம் இவை எல்லாம் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல், ரகசியமாக விற்கப்படுவதினால்தானே இவ்விருதுகளை வாங்கவும் முடிகிறது.

சுந்தர ராமசாமி

இந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளரான சுந்தர ராமசாமியினை நினைவுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தன் வாழ்நாள் முழுக்க சாகித்திய அகாடெமியின் தேர்வுகளுக்கு எதிராக அவர் பேசியும் எழுதியும் வந்தார். அவை ஒரு அடிப்படை வரையறை நமக்கு அளித்தன. பலரும் பின்பற்றுவதற்கான மாதிரியாக அது மாறியது. அகிலன் ஞானபீடம் வாங்கியபோது அதை எதிர்த்து அவர் எழுதிய கட்டுரை – “போலி முகங்கள் சந்தர்ப்பம் : ஞானபீடப் பரிசு”- புகழ்பெற்றது. பல சூழ்நிலைகளிலும் அது தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகிறது. அகிலன் விருது பெற்றதை பத்திரிக்கைகள் கொண்டாடுவது பற்றி அவர் எழுதிய வரி -“ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது”- பழமொழி போலாகிவிட்டது. “எந்த இலக்கியப் பரிசும் ஒரு சமூகச் செயல்” என வகுத்து விருதுகளில் நிகழும் மோசடிகளை எதிர்கொள்வதற்கான மொழியை நமக்கு அது தந்தது. அதை நவீன தமிழ் இலக்கியச் சூழலின் அறிக்கை எனலாம்.

ஞானபீடம் பரிசுப் பெற்ற அகிலனின் “சித்திரப் பாவை” நூலைவிட சிறந்த நாவல்கள் ஐம்பதேனும் தமிழில் உண்டு என்று 1976ல் சுந்தர ராமசாமி எழுதுகிறார். இப்போது மேலும் ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் கூடுதலாக ஐம்பது நாவல்களை நம்மால் பட்டியல் போட முடியும் என்பது பெருமையளிக்கிறது. போலியான விருதும் புகழும் நீண்ட காலம் நிலைத்திருப்பவை அல்ல. ஆனால் தீவிர இலக்கிய நூல்கள் அழியாது நிலைக்கும். “சித்திரப் பாவை” பற்றி இப்போது யாரும் பேசுவது போல தெரியவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி உத்தேசித்த ஐம்பது நாவல்களும் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. அவை உரையாடலில் உள்ளன. பெயர் சொல்லாமலேயே அவை என்னென்ன நூல்கள் என்பதை நம் எல்லோராலும் கிட்டத்தட்ட யூகித்துவிட முடியும். ஞானபீடம் விருதுக்கு எதிராக நியாயமான எதிர்ப்புகளும் கண்டனங்களும் பரவும் வேளையில் இதை எண்ணுவதும் அவசியமானதே.

அகழ் ஆசிரியர் குழு


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

4 Comments உரையாடலுக்கு

  1. மனது கனத்தது. எத்தனை இலக்கிடவாதிகள் இருக்க திராவிடத்தை ஆதரித்தவருக்கு ஆரியம் எப்படி விருது அளித்தது. எல்லாம் அரசியல்.
    தமிழுக்கு அவமானம். அசிங்கம்.

  2. முதலில் கவிஞர் வைரமுத்து மீதான குற்றச்சாட்டிற்கு வருகிறேன்.
    புகழ் மற்றும் பணம் வரும்வரை பாடகி சின்மயி கவிரைப் பற்றி புகார் அளிக்கவில்லை. ஏனெனில் கவிஞரோட தயவு தேவைப்பட்டது.
    இப்போது பணம் வசதி வந்தவுடன் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். ஏன் சின்மயி யோக்யதை சினிமா துறையில் அத்துனை
    பேருக்கும் தெரியும்.
    இரண்டாவது கவிதையில் பலவகை இருக்கலாம். ஆனால் கவிதையின் தரத்தைத்தான் பார்க்கவேண்டும்.
    அது இந்த வகை அந்த வகையை சேர்ந்தது
    என்று வகைப்படுத்தும் கேவலம் தமிழகத்தில்தான் உள்ளது.
    ஞானபீடம் விருதினைப் பெறும் கவிஞர் வைரமுத்துவிற்கு பாராட்டுக்கள்💐

  3. வைரமுத்து இதற்கு நிச்சயம் தகுதியானவர் அல்ல… குறிப்பாக இந்த கட்டுரையின் ஆணி வேராக திகழும் ஒரு குறிப்பிட்ட சாராம்சத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன் அது என்னவென்றால் வைரமுத்து கூர்த்த மதிப்படைத்த ஒரு இலக்கியவாதி அல்ல… அறிவு குறை உடையவர்களின் எதிர்பார்ப்புகளை அழகியலோடு பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே அறிவாற்றல் கொண்டவர். அவர் அதற்கு மேல் செய்ய விரும்பவில்லை என்பது இதன் பொருள் அல்ல அவரால் அதற்கு மேல் செய்ய முடியாது என்பதுதான் அவருக்கு உள்ள திறன். நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்கிறேன் அவரை ஒருபோதும் இன்குலாப் போட்டு ஒப்பிடவே முடியாது. வைரமுத்துவின் மொழி நடை இன்குலாப்பை விட மிஞ்சி நிற்கலாம் ஆனால் இன்குலாப்பின் உள்ளடக்கம் வைரமுத்து ஒரு காலத்திலும் தொட முடியாத ஒன்று. இது விஷயத்தில், வைரமுத்துவை அப்துல் ரகுமானோடு கூட ஒப்பிட இயலாது. அப்துல் ரகுமான் முனைவர் பட்டம் பெற்றவர் என்றால் உள்ளடக்கத்தை பொருத்தவரை வைரமுத்துவின் தரம் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் அறிவு நிலை என்று கூறலாம். இந்த நீண்ட விமர்சனப் பதிவில் குறிப்பாக இந்த விஷயத்தை இந்த ஆசிரியர் குழு கண்டுணர்ந்திருப்பதும் அதை வெளிப்படுத்தி இருப்பதும் உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியது ஆச்சரியப்படத்தக்கது. எனவே என்னுடைய அறிவுக்கெட்டிய வரை இன்னொரு தகவலை இங்கே சொல்லுகிறேன். நான் அறிந்தவரை இத்தகைய தகுதி உடைய ஒருவர் இப்போது தமிழ் இலக்கிய உலகின் புகழ் வெளிச்சத்தில் எவரும் இல்லை. ஆனால் எனக்கும் என்னைப் போன்ற ஒரு சிறு வட்டத்திற்கு மட்டும் தெரிந்த ஒருவரை எனக்கு தெரியும். ஆனால் அவர் எழுதத் தொடங்கியே ஒரு மூன்றாண்டுகளுக்குள் தான் இருக்கும். அவர் பெயர் அறிவுச்செல்வன். மணப்பாறையில் இருந்து எழுதுகிறார். நத்தம் பக்கத்தில் உள்ள சிறுகுடி என்பது அவரது சொந்த ஊர். ஓரளவுக்கு புகழ் பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமைகள் அனைவரது எழுத்துக்களையும் வாசித்தவன் என்கிற வகையில் சொல்லுகிறேன்… அவர் உச்சி மலையில் பழுத்திருக்கும் அவ்வை சொன்ன நெல்லிக்கனி. அது ஒரு நாள் உலகுக்குத் தெரிய வரும்போது ஒருவேளை கொண்டாடப்படலாம். எனது இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு ஒருவேளை அவரை யாரேனும் தொடர்பு கொள்ள விரும்பினாலோ அல்லது அவரது படைப்புகளை பார்க்க ஆசைப்பட்டாலோ அவருடைய எண்ணையே தருகிறேன் தொடர்பு கொள்ளுங்கள். என்னுடைய மின்னஞ்சலுக்கும் இது தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள நீங்கள் கடிதம் அனுப்பலாம்.

    அறிவுச்செல்வன்: 9790478781
    மணவை.
    என்னுடைய மின்னஞ்சல்: jamrrprof@gmail.com

Leave a Reply to A M KHAN Cancel reply

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop