வெறுங்கூட்டின் கண்ணீர் : பார்கவி

கா சிவா எழுதிய சரஸ்துதி என்ற கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை

உலகத்தை நாம் சொற்களால் தொட்டு அறிகிறோம். எழுத்தாளருக்கு அந்த சொல் என்பது வெறும் கருவியோ களமோ மட்டுமல்ல, அது அவள் அகம். அவை சொல் என்ற இடத்தில் இருந்து கலை என்ற நிலைக்கு நகர கற்பனையும் கனவும் தவமும் தேவைப்படுகிறது. கூடவே, கைப்பிடி அருளும் அவசியமாகிறது. தவம் இயற்றினாலும் அருள் கிட்டாமல் இருந்தால், சொல் திகழாத, நிகழாத காலம் என்று ஒன்று வரக்கூடும். நிகழாது வெளிப்படமுடியாது இருப்பது என்பது ஒரு வகையான தரித்திரம், இருண்ட இடை நிறுத்தம், துளி மரணம். அதைக் கடப்பது அத்தனை எளிதல்ல. 

உலகம் முழுவதும் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் படைப்பூக்கத்தில் ஏற்படும் தேக்க நிலையை குறித்து எழுதி உள்ளனர்.  அச்சு பதிப்புகள் அதிகரித்த காலத்தில் இணையாகவே தடங்கல்களும், அது சார்ந்த சிந்தனைகளும் அதிகரித்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. முற்காலத்து எழுத்தாளர்களுக்கு வெளிக்கொணர்வதின் பொருட்டு எழுத வேண்டிய கட்டாயமின்மை ஒரு காரணம்.  அரங்கேற்றம் இன்றியும் ஆடலாம் என்ற சுதந்திரம். 

சிந்தனை-வெளிப்பாட்டுத் தடைகளைச் சந்திக்கும் படைப்பாளிக்கும் பண்பாட்டுச் சூழலுக்கும் இடையில் நிகழும் நிழலாட்டத்தை அமெரிக்க கட்டுரையாளர் ஜோன் அகோசெல்லா பதிவு செய்கிறார். இரண்டாம் உலகப் போரிற்கு பிந்தைய காலத்தில் தம் படைப்புச் செயல்பாட்டில் தடைகளை சந்திப்பதாக அமெரிக்க எழுத்தாளர்கள் விரிவாக எழுதி இருக்கின்றனர். வரலாற்றில் அமெரிக்க நாவலாசிரியர்களின் புகழ் ஓங்க, உலகத்திற்கு முன்மாதிரியாக தம்மை காட்டிக்கொள்ளும் நிர்பந்தமும் லட்சிய வெறியும் பிடரியைப் பிடித்து உந்திக்கொண்டிருந்தது. இலக்கியத் தரம் உயர, அதைத் தாண்ட முயல்பவரின் பதட்டங்களும் உயர்கின்றன, சக படைப்பாளிகளின் வெளியீடுகள் அழுத்ததை (peer pressure) ஏற்றுகிறது. உளவியலாளர்களும் மருத்துவர்களும் துணைக்கு அழைக்கபட்டு, கலைக்கும் நரம்புத் திரிபிற்கும், மேதைமைக்கும் மன நோய்க்குமான தொடர்புகள் அலசி ஆராயப்படுகின்றன. ஆழுள்ளத்திற்குள் செல்லச் செல்ல வாழும் நனவுலகம் கை மீறிச் சென்று பித்தை நோக்கித் தள்ளுகிறது. எழுத்தாளர்கள் சராசரி மனிதர்கள் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இத்தனை ஆபத்தான விளையாட்டில் இவர்கள் எதற்காக ஈடுபடுகிறார்கள்? அத்தனை மனிவிரிவா எழுத்தலார்களுக்கு என்றால் இல்லை.  படைப்பின்பம் தரும் ஆணவ நிறைவு (‘the megalomaniac pleasure of creation’ – Edmund Bergler) என்பது மண்ணில் காணும் அனைத்து வித இன்பங்களைக்  காட்டிலும் பெரிது என்று உளப்பகுப்பாய்வாளர்கள் பிரகடனம் செய்தனர். அது இல்லாமல் ஆவது என்பது சுயத்தை ஆட்டம் காணச் செய்வது. 

முழுமையாகவே, இது ஒரு பாவனை என்று விமர்சிப்பவர் உண்டு. படைப்பூக்கத்திற்கென வற்றாத ஊற்று தன்னுள்ளிருப்பதாகவும், அதை அணுக முடியாததே சிக்கல் என்பதாகவும் எண்ணிக்கொள்வது செருக்கு என்ற கருத்தையும் இங்கு நினைவூட்டுகிறேன். ஆனால், எழுத எண்ணி, விரும்பி, எழுத முடியாமல் போவது என்பது இன்றளவும் தொடரும் சிக்கல். குறிப்பாக எழுத்தில் நிகழ்ந்து பின்னர் காணாமல் ஆனவர்களைப் பற்றி  ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் குறிப்பிடுகிறார். இளமையில் வெற்றி காணும் எழுத்தாளர்கள், சுயதேர்வின் காரணமாக அந்நிலையை அடைவதாக மயங்குவதுண்டு. ஆனால் படைப்பில் நிகழ்தல், வாசக ஏற்பென்ற வெற்றி அடைதல் ஆகியவை தற்செயலின் ஆசீர்வாதம். நம் வானத்தில் கிரகங்கள் சாதகமாக ஜொலிக்கின்றன. கட்டங்கள் மாறும் பொழுது, மனக்கோட்டைகள் பிறழ்ந்து, ஊன்றிக்கொள்ள திடமான மாற்றுக் கருத்தாக்கம் அமையாமல் தவிப்பதை  ஃபிட்ஸ்ஜெரால்ட் ‘தொடக்ககால வெற்றி’ (1937) என்ற தன் கட்டுரையில் எழுதுகிறார். அவர் இருபத்து மூன்று வயதில் தன் நாவலுக்குக் கிடைத்த அசாதாரணமான அங்கீகாரத்தைச் சுவைத்து, நாற்பதுகளில் தற்கொலைக்கு பலியானவர். 

இன்று எழுத்தாளர்களின் மனத்தடைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதற்கான உயிரியல் நரம்பியல் காரணிகளை புறந்தள்ளுவதற்கு இல்லை. கலை என்பது நாம் கைசுட்ட முடியாத பெருவெளியில் இருந்து பிறந்து மின்னி மறைவது என்ற கனவுண்மையை நம்புவர்களுக்கு அந்த மருந்துகள் மட்டும் போதாது. சிக்கிச்சைக்குப் பின்னும் நிறையாத பள்ளங்கள் உள்ளத்தில் எஞ்சக்கூடும். 

கனவிற்கும் கடவுளிற்கும் ஒரு ரகசிய பாதை இருக்க வேண்டும். மெய்யியலைத் தேடி ஆன்மீகத்தை நோக்கி நகர்தல் என்ற கீழை மரபிற்கு பின்னால் இருப்பது கனவுகளின் மீதிருக்கும் ஆறாப்பற்று தான். ஒரு வகையில், உடல், நோய்க்கூறு, உலகியல் தடைகள் ஆகியவற்றிலிருந்து அகக்காரணிகளை நோக்கி நம்மைத் தள்ளி உளம் குவிய தெய்வம் என்ற பிம்பம் தேவைப்படுகிறது.. அதிலும் அன்னை தெய்வமென்றால் வேண்டுதலில் அணுக்கம் ஏறிவிடுகிறது. அவ்வகையில் கா சிவா எழுதிய ‘சரஸ்துதி’ அக இருளிலிருந்து நீங்கி விடுபடலுக்கான ஓர் இறைஞ்சல். 

வாழ்த்து, இறைஞ்சுதல் இரங்குதல், உள்ளமழிதல், உணர்தல், வேண்டுதல், தொழுதல் என்று ஏழு பகுதிகளில் கலையின் தெய்வமான சரஸ்வதியிடம் தன்னை மீண்டும் எழுத்திற்குள் ஈடுபடுத்தும் படி கவி பலவிதமாகக் கேட்டுக் கொள்கிறார். தன்னை ‘கவிதை ‘என்று இந்நூல் அறிவித்துக் கொள்ளவில்லை, நேரடியாகவே  துதி தான். துதி என்றால் கம்பன் எழுதிய சரஸ்வதி அந்தாதி அல்லது குமரகுருபரனின் சகலகலாவல்லிமாலையின் மரபார்ந்த வழியில் அல்ல. நேரடியான  உரைநடை மொழியில் அந்தரங்கமாக வெளிப்பட்டவை. செய்யுள் தன்மையில் அமையாது நவீன கவிதையின் செறிவார்ந்த மொழியும் இல்லாமல், உளக்குமுறல்களுக்கே உண்டான ஒரு கலவை மொழியில் இந்த கவிதைகள் அமைகின்றன. ஒரு வகையில், இவை மன்றாட்டின் பாடல்கள். 

விண்ணில் பறப்பதற்கான அனைத்தையும் 
உன் இருப்பால் அடைந்த நான் 
இப்போது
பாதாளத்திற்குள் புதைவதற்கான 
துயரையும் இருண்மையையும்
உன் இன்மையால் அடைந்தேன் தேவி 

உள்ளம் செல்லும் வழியில் மொழி திமிறியும் அடங்கியும் உருகியும் வழிவதை கவனிக்கலாம். முற்பிறவி என்று தோன்றும் படைப்பூக்க கால நினைவுகளின் உயரத்தில் இருந்தே இறைவிக்கு சில மென்மையான கடிந்துரைத்தல்கள் தொடங்குகின்றன. ‘என்னை கழட்டிவிட்டாயா? கதற விடலாமா?’  என்று கேட்கும் அளவிற்கு உரத்துத் தொனிக்கிறது.  சட்டென்று திரும்பி மறைமுகக் குத்தல் பொதிந்த தொழில்முறை மொழி வருகிறது, ‘இதென்ன திறன் சோதனைப் பயிற்சியா தேவி?’ ‘தகுதி காண் பருவமா?’ என்பது போல. 

கவிஞர் தான் ஒரு பிழையும் செய்யாதவர் என்று அன்னையை நம்பச் சொல்கிறார்; கலைத்தெய்வம் தான் இரக்கம் சிறிதும் இன்றி, காரணமே இல்லாமல் அவரிடம் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் உள்ளம் அழிய அழிய அகங்காரம் ஒரு காரணமாக மேலெழுகிறது. அதை ஒரு மாய வேடிக்கை என்றும் பார்க்க முடிகிறது. அது ஒரு நகர்வு. அங்கிருந்து தன் போக்கில் வடிந்து சரண் புகுவது ஒன்றே வழி என்று மாறுகிறது. அவளைப் பகைத்துக் கொள்ள முடியாது அல்லவா?

உன்னுடனிருந்த இனிமை பொழுதுகளை 
வண்ணத்துப் பூச்சியைப்போல 
துளித்துளியாய் உறிஞ்சினேன் 
இப்போது
கைப்பு கடலென என்னைச் சூழ்ந்துள்ள
நீயில்லாத இப்பொழுதை 
சக்கரவாகம்போல மிடறு மிடறாக 
விழுங்குகிறேன் தேவி                                                                       

வாழ்க்கையின் விரிந்த பரப்பில் வைத்துப் பார்க்கும் பொழுது, இதை பெருந்துக்கம் அல்லது பேரனுபவம் என்று சொல்வதற்கில்லை. இந்தக் கவிதைகளில் தத்துவார்த்தமான அல்லாடல்கள் இல்லை.  எழுத்தே வாழ்க்கையின் முழுமுற்றான இன்பம் என்ற பிறகு, அதில் எழும் தடைகளை நீக்கியருள விண்ணபிப்பதே உள்ளடக்கம் என்றபடியால், இதனுள் நிறைந்திருக்கும் கலங்கிய தன்மை தான் இதன் வடிவமும் கூட. அடுத்து ஏதேனும் நிழக்கூடாதா என்ற எதிர்பார்ப்பின் விடாய், என்று தான் நிகழுமோ என்ற பெருமூச்சு. ஒருவேளை நிகழவே இல்லை என்றால் நாம் என்னாவது என்ற பயம், விரைவில் நிகழும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. நிச்சயமும் நித்தியமும் அற்ற ஒன்றிற்கு ஏனிந்த மனம் இப்படித் தவிக்கிறது என்பதற்கு விடையில்லை. ஓர்  ஆழமான அக உந்துதல் என்பதை உணர மட்டுமே இயலும். 

இந்தத் துயரை இன்னும் ஆழமாக உற்றுநோக்கி, உழன்று, பரிசோதிக்கும் வாய்ப்பை சிவா முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கருதுகிறேன். கவிதையாகச் சாத்தியமாகும் கணங்களை பிரார்த்தனை நோக்கில் எளிதில் தவிர்த்துச் செல்கிறார். தேக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உருவகங்களும் படிமங்களும் அபூர்வமாக எழுகின்றன. கலை அணைந்துவிடுதல் என்பது பூமியே சுருண்டு மறைதலுக்கு நிகரான அந்தகாரம் என்பது புதியது. புல்நுனி போன்ற மனதில் துயரம் புவி வைத்தது போலாகிறது. வெறுமை அத்தகையது தான்.  மேலும் கலையாக வெளிப்பட்டிருந்தால் வாசகரும் இணைந்து பாடும் கூட்டுப் பிரார்த்தனையாக ஆகி இருக்கும். கலையின் நோக்கம் என்பது கூட்டுமனம் நோக்கி நகரும் எத்தனம் தான், இல்லையா?

உன் அண்மையால் 
தண்வெண்ணெயென பொங்கிப்பொங்கி 
பெருகிய என் படைப்பூக்கம்
உன் சேய்மையால் 
வெந்நெய்யென உருகி 
வழிந்தோடிவிட்டது தேவி

முழுவதும் தூய்மையாக்கப்பட்ட கரும்பலகையாக இருப்பது என்பது ஒரு வரம், தபுல ரசா என்று லத்தீன தத்துவவாதிகள் சொல்வது இதையே. ஒழிந்த உள்ளத்தில் தான் பிரிவிலும் வெம்மையின் உருகுதலை உணர முடியும் என்று தோன்றுகிறது. காதலியா அன்னையா பக்தி கோரும் தெய்வமா காவு கேட்பவளா என்று அறுதியாக சொல்லிவிட முடியாத கலைக்கும் தனிமனிதனுக்குமான இந்த விசித்திர உறவிற்கும் பிரிவிற்கும் இடைநின்று யாரும் எந்த உறுதியும் சொல்லித் தேற்றிவிட முடியாது. என்றாலும், ஒரு மறுமொழியாக அப்துல் ரகுமானின் கவிதையை முன்வைக்கிறேன். 

என்னை விட்டு நீ 
எங்கே ஓட முடியும்?
நான் இல்லாத இடம் எது 
என்றாய்
நீ என்னை விட்டு ஓடவில்லை
உன்னை விட்டு ஓடுகிறாய் 
உன் ஓட்டம் நானே 
நீ ஒளியும் இடமும் நானே  என்றாய் 
பனித் துளி 
வேறெங்கே ஒளிய முடியும்?
வெயிலைத் தவிர
எனக்கும் 
வேறு வழி இல்லை
உன்னிடம் ஒளிவதைத் தவிர

கா சிவாவின் கவிதைகள், கலைக்கும் – அதன் ஆராதகனுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம். தெய்வத்திற்கு அது மற்றுமொரு நாடகமாக இருக்கலாம். எழுத்தாளரிடமிருந்து துளிர்ப்பது உண்மையான கண்ணீர் திவலைகள். கண்ணீரை எடை போட முடியாது. அது கலையாக சித்திக்கக் காத்திருக்கலாம். சிந்திய துளிகளில் இருந்து கடல் திரளட்டும்.

பார்கவி

எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஸ்ரீநிவாஸ் எனும் தன் நண்பருடன் இணைந்து “இம்பர்வாரி செவ்விலக்கிய வட்டம்” என்ற கம்பராமாயண வாசிப்புக் குழுமத்தை நடத்தி வருகிறார். சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss