தொலைந்து போன உருவம் : சிறுகதை

1

நான் யார் நினைவிலும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள எனக்கு நீண்ட காலமும், ஆழமான புரிதலும், மிகுந்த மன முதிர்ச்சியும் தேவைப்பட்டது. அல்லது இந்த நிலை எனக்கு ஆழ்ந்த புரிதலையும் மன முதிர்ச்சியையும் அளித்திருந்தது என்றும் சொல்லலாம்.

நான் சந்திக்கும் யாரிடமும் என்னுடைய முகம் நினைவில் இல்லை என்பது உண்மையிலேயே நான் இல்லை என்பதற்கான சாட்சியம் இல்லையா? ஆனால் நான் இருக்கிறேன் என்பதுதான் பிரச்சனை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை விட்டை சுத்தம் செய்யும்போது, ஒரு ஆல்பத்திலிருந்து என்னுடைய பழைய புகைப்படம் ஒன்று கிடைத்தது. பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது. அதை எடுத்துக் கொண்டுபோய் அம்மாவிடம் காட்டி இது யார்? என்றேன்.

அம்மா சட்டென்று தெரியலையே என்றுவிட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா இது நான் மா. பத்தாவது படிக்கும்போது எடுத்தது என்றேன். அம்மா மீண்டும் அந்தப் படத்தை வாங்கி உற்று உற்றுப் பார்த்தாள். இல்ல இது நீ இல்ல இது வேற யாரோ தெரியல என்றாள்.

எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை இது நான் இல்லையோ? அந்தப் புகைப்படத்தை வாங்கி திரும்பப் பார்த்தேன். அந்தப் புகைப்படம் எடுத்த நாள் கூட எனக்கு நினைவிருக்கிறது. அது மலர் ஸ்டுடியோவில் எடுத்தது. அன்று அம்மாவும்தான் வந்திருந்தார். அதை நான் அம்மா மறதி நோய்க்கு ஆட்பட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டேன்.

ஆனால் வேறெந்த சமயத்திலும் அம்மாவுக்கு மறதி நோய் ஏறபட்டுள்ளதற்கான அறிகுறி வெளிப்படாததைக் கண்டு குழப்பமாய் இருந்தது. அப்படியென்றால் அம்மா ஏன் என் புகைப்படத்தைப் பார்த்து இது யாரென்று தெரியவில்லை என்றார்? என்னால் அதைப்பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை இது அம்மாவின் பிரச்சனை என்றுதான் நீண்ட நாட்களுக்கு நினைத்திருந்தேன். ஆனால் என்னைப் பற்றிய இந்த நினைவற்ற நிலை மற்றவர்களுக்கும் இருக்கிறது என்பதை சின்னச் சின்ன சம்பவங்கள் வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் நான் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை.

ஒருநாள் நான் எப்போதும் போல அலுவலகம் முடிந்து வந்து வீட்டு காலிங்பெல்லை அழுத்தினேன். என் மனைவி சுலோசனா வந்து கதவைத் திறந்தாள். திறந்தவுடன் என் முகத்தைப் பார்த்து, யாரு? என்றாள்.

அவள் என் முகத்தை சரியாகப் பார்க்காமல் இப்படி கேட்கவில்லை. நன்றாக நேருக்கு நேராக என் கண்களைப் பார்த்துக் கேட்டாள். யாரு?

பின் விநாடிக்கும் குறைவான நேரத்தில் என்னுடைய நினைவுகளை மீட்டுக் கொண்டவளாய் நீங்க தானா? என்றாள்.

எனக்கு அப்போதும் சந்தேகம் வரவில்லை. அது எல்லோர் வாழ்க்கையிலும் சாதாரணமாய் நிகழும் ஒன்றைப் போல அவ்வளவு சகஜமாய் இருந்தது.

என்னுடைய இரண்டாவது நாவல் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. என்னுடைய முதல் நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொன்னூறுகள் காலத்தில் நடக்கும் ஒரு ஆணவக் கொலையை மையமாக வைத்து அந்த நாவலை எழுதியிருந்தேன். இந்த நாவலில் சமகால விஷயங்களை எழுதியிருக்கிறேன். சற்றேறக் குறைய முன்னூற்றி ஐம்பது பக்கங்கள். ஓராண்டுக்கும் மேல் என்னுடைய கவனம் எல்லாம் இதிலேயே இருந்ததால் வெளி உலகம் பற்றிய அவதானிப்புகளையே மறந்துவிட்டேன்.

நான் எதிலும் சற்று விலகியிருப்பவன் என்பதால் தான் யாரும் என்னை எந்த இலக்கிய நிகழ்வுக்கும் அழைப்பதில்லை என்றுதான் நான் வெகு நாட்களாக நினைத்திருந்தேன். அது அப்படியில்லை என்பதும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்தது.

என்னுடைய புத்தகங்களுக்கு அறிமுகக் கூட்டங்கள் நடக்கும். அதில் நான் கலந்து கொள்வேன். என்னுடைய கதைகளைப் படித்துவிட்டு நிறையபேர் எனக்கு மெயில் செய்திருக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள போன் நம்பரை வைத்து போன் செய்தும் பேசி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் இயல்பாய் நடப்பதைப் போலவே நடந்து கொண்டிருப்பதைப் வைத்துப் பார்த்தால் இப்படி ஒரு விஷயத்தை யாராலும் யூகிக்கவே முடியாது. ஒருவேளை இது இதற்கு முன்பும் பல பேருக்கு நடந்திருக்கலாம். ஆனால் நம்முடைய முகம் வேறு யாருடைய நினைவிலும் இல்லை என்பதை அந்த எல்லோரும் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

இது என் சம்பந்தப்பட்ட ஒரு மறதி நோய் வகையைச் சேர்ந்த ஒன்று என்றிருந்தால் அதை மருந்துகள் மூலம் பயிற்சிகள் மூலம் தீர்க்க முயற்சி செய்யலாம். மற்றவர் சம்பந்தப்பட்டது என்னும் போது இதை ஒரு நோய் என்றோ சமூக நிலை என்றோ சொல்லிவிட முடியாது. இது ஒரு அரசியல் என நீங்கள் முடிவுக்கு வர வேண்டாம். இதில் எந்த அரசியலும் இல்லை. சரி இதை எப்படித்தான் சொல்வது என்று கேட்டால் இயற்கையின் ஒரு சிறிய மாறுபாடு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். பிறக்கும் போதே சிலருக்கு கைகள் சிறியதாக அல்லது தலை மட்டும் அளவுக்கு மீறி சிறியதாக இருப்பதைப் போல. அப்படி இருந்தால் அது ஊனம் அல்லவா? எனவே இதையும் ஊனம் என்று சொல்லிவிடலாமா என்றால் முடியாது. சரி என்னால் இதை இதற்கு மேல் விளக்கிச் சொல்ல முடியவில்லை.

என்னுடைய இரண்டாவது நாவல் வெளியான வேகத்திலேயே வரவேற்பைப் பெறத் துவங்கிவிட்டது. பலரும் பாராட்டிப் பேசுகிறார்கள்..தொலைபேசி அழைப்புகளும் மின் அஞ்சல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆங்காங்கே கூட்டங்களும் நடக்கின்றன. என்னையும் அழைக்கிறார்கள். நானும் போய் கலந்து கொள்கிறேன். எல்லாம் மாறிவிட்டது என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

என் அலுவலகத்திற்குப் போவதுதான் இதில் ஒரு புதுமையான அம்சம். ஒவ்வொரு நாளும் நான் என் அலுவலகத்தில் நுழைவேன். என்னைப் புதிதாக வேலைக்கு வந்திருக்கும் ஒரு நபரைப் போல எல்லோரும் பார்ப்பார்கள். நான் அமைதியாக சென்று என் சீட்டில் அமர்வேன். சில நிமிடங்கள் கழித்தே அவர்கள் நான் வழக்கமானவன் என்பதை அவர்கள் உணர்வார்கள். யோசித்துப் பார்த்தால் எனக்கு இந்த நிலை சின்ன வயதிலிருந்தே இருப்பதில்லை. கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் இப்படி நடக்கிறது. நான் ஏன்னவோ ஒரு எழுத்தாளனை மதிக்காத சமகம் பற்றிப் பூடகமாக சொல்லிக் கொண்டிருப்பதாகத்தானே நினைக்கிறீர்கள்? நான் சொல்ல வருவது அதுவல்ல.

பொதுவாகவே எழுத்தாளன் என்றால் அவனை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது நிஜம்தான். சரி அவனே ஒரு சினிமா நடிகன் என்று வைத்துக் கொள்வோம். அவன் வெளியில் செல்லும்போது பலரும் அவனை அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசுவார்கள் தானே? ஒருவேளை நான் ஒரு நடிகன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்போது ஒரு ஊருக்குச் செல்கிறேன் என்றால் அங்கே என்னை ரசிகர் கூட்டம் மொய்க்காது. என்னை யார் என்றே யாருக்கும் தெரியாது.

இது மன உளைச்சல் தரும் நிலைதான். ஆனால் இதிலும் சில சாதகமான அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக நான் நடுரோட்டில் ஒருவனை வெட்டிப் போட்டுவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னை எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஆனால் நான் யார் என்றே யாருக்கும் தெரியாது. என் பக்கத்து வீடு வரை வந்து சிசி டிவியில் எடுக்கப்பட்ட என்னுடைய போட்டோவை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினாலும், என் பக்கத்து வீட்டுக்காரர் என்னை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுவார். இந்த நிலையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக என்னால் கொலையெல்லாம் செய்ய முடியாது என்பது வேறு விஷயம்.

2

நானும் சுலோசனாவும் படம் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறோம். சற்று கூட்டமாக இருந்ததால் அவளால் என்னோடு இணைந்து வர முடியாமல் பின் தங்கிவிட்டாள். நானும் ஏதோ யோசனையில் கொஞ்ச தூரம் போய்விட்டேன். அது இரண்டாவது மாடியில் இருக்கும் தியேட்டர். கூட்டம் என்னைப் படிகளில் முன்னால் தள்ளிக் கொண்டிருக்கிறது. நானும் சரி கீழே வந்து பார்த்துக் கொள்ளலாம் என படிகளைவிட்டு கீழிறங்கி ஒரு பக்கமாக நின்றிருக்கிறேன். சுலோசனா கீழே வருகிறாள். அவள் கண்கள் சுற்றும் முற்றும் தேடுகின்றன. அவள் பார்வை என்னையும் ஒன்றிரண்டு முறை கடந்து செல்கிறது. நான் மௌனமாக அவள் முன்னால் போய் நிற்கிறேன். அப்போதும் நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை வைத்தே என்னை கவனித்துப் பார்த்து கண்டுகொள்கிறாள்.

நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது, என் அறைக்குள் வந்தவளிடம் கேட்டேன். நான் உன் முன்னாடியேதானே நின்னேன். என்னை உனக்குத் தெரியலையா?

என்னவோ தெரியல சட்டுனு பாக்க நீங்க வேற யாரோ மாதிரி இருந்தீங்க.

இதப்பத்தி நீ எப்பவாவது யோசிச்சிப் பாத்தியா?

நான் பலமுறை யோசிச்சிருக்கேன். நான் உங்களைப் பத்தி நினைக்கும் போதெல்லாம் உங்க உருவம் என் மனசுக்குள்ள வர்றதே இல்லை. இதைச் சொல்லும்போது அவள் சங்கடத்திற்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறாள். அவள் கண்கள் மெல்லக் கலங்குகின்றன. நான் அவள் கைகளைப் பற்றி ஆறுதலாய் அழுத்தினேன்.

3

ஒரு இலக்கிய நிகழ்வுக்காக ரயிலில் பெங்களூருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். தர்மபுரி ஸ்டேஷனில் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு என்னுடைய இருக்கைக்குத் திரும்பினேன். அருகில் இருந்தவர் இந்த சீட்ல வேறொருத்தர் இருந்தாரே என்றார். நான் அவர் தர்மபுரியில இறங்கிப் போயிட்டார் என்றேன்.

அவர் அப்படியா? அவர் பேங்களூர் போறதா இல்ல சொல்லிகிட்டிருந்தார். தெரியல ஏதாவது அவசர வேலையா இருக்கும்.

அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. அப்படியே அவர் இறங்கிப் போயிருந்தாலும் அது உங்களுக்கெப்படித் தெரியும். இந்த ரிசர்வேசன் கம்பார்ட்மெண்ட்ல நீங்க எப்படி?

நான் அவசரமா பெங்களூர் போகனும். ரிசர்வேசன் கிடைக்காததால கௌண்டர்லதான் டிக்கட் எடுத்திருந்தேன். அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல சரியான கூட்டம். நான் என்ன செய்யறதுன்னு தெரியாம நின்னுகிட்டிருந்தேன். அப்பதான் இதில இருந்து இறங்கிப் போனவர் ஹலோ சார் நான் அவசரமா ஊருக்குப் போக வேண்டியதாயிடிச்சி. நீங்க என்னோட சீட்டுக்குப் போங்க எஸ் டூ ல முப்பத்தஞ்சாவது சீட் அப்படீன்னார் என்றேன்.

என்னுடைய இவ்வளவு பெரிய விளக்கத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. ஒகே ஒகே என்றுவிட்டுத் திரும்பிக் கொண்டார். எனக்கு முன்னாலும் பக்கவாட்டிலும் உட்கார்ந்திருந்த யாருக்கும் அந்த சீட்டில் ஏற்கனவே நான் தான் உட்கார்ந்திருந்தேன் என்பது நினைவில் இல்லை. எல்லோருமே நான் தர்மபுரியில் ஏறியவன் என்றே நினைத்துக் கொண்டார்கள்.

அடுத்து நான் கிருஷ்ணகிரியிலும் இதே போலச் செய்தேன். இப்படியாக நான் ஒருவனே வெவ்வேறு நபர்களாக பெங்களூர் போய்ச் சேர்ந்தேன்.

நிகழ்வில் யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லோரையும் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கூட்டத்தில் என்னுடைய நாவல் பற்றியும் பேசப்பட்டது. பேசியவர் ஒரு மூத்த எழுத்தாளர். நாவலின் பல விஷயங்களைத் தொட்டு நன்றாகப் பேசினார். கூட்டம் பலமாகக் கை தட்டிக் கொண்டிருந்தது. மேடையில் பேசிய யாரும் அல்லது கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரும் நானும் அங்கிருப்பதைக் குறிப்பிடவில்லை. ஒருவேளை அந்த நாவலின் பின் அட்டைப் படத்தில் என்னுடைய புகைப்படமும் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்னவோ?

கூட்டம் முடிந்தபின்,அங்கே போடப்பட்டிருந்த புத்தக ஸ்டாலில் என்னுடைய நாவலின் சில பிரதிகள் விற்றன. நான் நாவலைப் பற்றிப் பேசியவரின் கைகளைப்பற்றிக் குலுக்கி, நல்லாப் பேசுனீங்க என்றேன்.

தேங்க்யூ என்றபடி வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அன்றிரவே நான் ஊருக்குத் திரும்பினேன். ஜங்ஷனில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் மூர்த்தி யாரோ புதிய நபரைப் பார்ப்பதைப் போல என்னைப் பார்த்தபடியே கடந்து சென்றான். குறைந்தபட்சம் உங்கள எங்கியோ பாத்த மாதிரி இருக்கே என்றாவது என்னைப் பார்த்து சொல்லியிருக்கலாம் அல்லது நினைத்தாவது இருக்கலாம்.

இது உண்மையிலேயே கொடுமையாக இருக்கிறது.

இதில் என்னென்னவெல்லாம் நடக்க சாத்தியம் இருக்கிறது என நான் விடிய விடிய கற்பனை செய்தபடியே படுத்திருக்கிறேன்.

ஒருவேளை இதிலும் ஆரம்பநிலை, வளர்ந்த நிலை முற்றிய நிலை என படிநிலைகள் இருக்கலாம். இப்போது நான் வளர்ந்த நிலையில் இருக்கிறேன். முற்றிய நிலையில் நான் என் வீட்டுக்குள் நுழையும்போது, யார் சார் நீங்க? திற்திருக்கற வீட்ல நீங்க பாட்டுக்கு நுழையறீங்க என கேட்கப்படலாம். எதற்கும் என்னுடைய போட்டோவை வீட்டில் மாட்டி வைப்பது நல்லது.

அந்த நிலையை நான் வெகு சீக்கிரத்திலேயே உணர்ந்தேன். வீட்டுக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. வாடகைக் கார் புக் செய்திருந்தேன்.

காரில் வந்த இளைஞன் சரளமாக என்னோடு பேசிக் கொண்டு வந்தான். பத்து நிமிடத்தில் நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. காரை நிறுத்தும்போது, அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் போனை எடுத்துப் பேசினான். நான் இறங்கி கீழே நின்று கொண்டு பர்ஸை எடுத்தேன்.

அவன் போனை வைத்துவிட்டு திடுக்கிட்டவனாக சுற்றுமுற்றும் பார்த்தான். முன்பக்க சாலையையும் வந்த வழியையும் திரும்பத் திரும்பப் பார்த்தான். நான் காரிலிருந்து சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தேன். இரண்டு நிமிடங்களுக்குப் பின் அவன் என்னிடம் வந்து சார் நான் ஒருத்தர கார்ல கூட்டிகிட்டு வந்தேன். இங்கதான் இறங்கினார். அந்த சமயம் பாத்து எனக்கு ஒரு போன் வந்திடுச்சி. ஒரு பத்து செகண்ட் அதப் பேசிட்டு திரும்பிப் பார்த்தா ஆளக் காணோம். அப்படியே மாயமா மறைஞ்சி போன மாதிரி போயிட்டார். இங்கதான நீங்க நின்னுகிட்டிருக்கீங்க? நீங்க கூட பாத்திருக்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என்றான்.

நான் அவர் பாக்க எப்படி இருப்பார்? என்றேன்.

அது என் ஞாபகத்திலயே இல்ல சார். இத்தனைக்கும் அவர் எம்பக்கத்திலயே உட்கார்ந்திருந்தார். நான் அவர்கிட்ட பேசிகிட்டேதான் வந்தேன். பெரிய மந்திரவாதியா இருப்பார் போல இருக்கு சார். என்றான்.

நான் சிரித்தபடியே அது நான் தான். இந்தாங்க பணம் என்றேன். அவனால் அதை நம்பவே முடியவில்லை. என்னையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

உங்களுக்கு ஞாபக மறதி ரொம்ப முத்திப் போச்சி. போய் யாராவது டாக்டரைப் பாருங்க என்றபடியே வண்டிக்கான வாடகையை அவன் கையில் திணித்தேன். அந்த கேப் ஓட்டுனர் செல்லில் என்னைப் புகைப்படும் எடுத்துக் கொண்டான்.

நான் உனக்கு இங்க நடந்தது ஞாபகம் இருக்கும். ஆனால் இதைப் பத்தி யோசிக்கும்போது, என்னோட முகம் உன் ஞாபகத்தில வராது. இந்த படத்தில இருக்கறது யார்? இவர் படத்தை எதுக்கு எடுத்து வச்சிருக்காம்னுதான் யோசிப்ப என்றேன்.

அவன் ஒரு மாயாவியைப் பார்ப்பதைப் போல என்னைப் பார்த்தான். இந்த சம்பவம் ஞாபகம் இருக்கும்னா அப்ப நான் உங்கள படம் எடுத்ததும் ஞாபகம் இருக்கும் இல்ல. அப்போ இந்தப் போட்டோவைப் பார்த்தா ஒருவேளை இவர்தானா? ன்னு கூடவா சந்தேகம் வராது? என்றான்.

வரலாம் எனக்குத் தெரியல என்றுவிட்டு நான் நகர்ந்துவிட்டேன்.

4

அந்த வாரத்திலேயே வாட்ஸ் அப் குரூப்களில் ஒரு விஷயம் படு வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அது என்னைப் பற்றி அந்த கேப் ஒட்டுனர் எழுதியதுதான்.

இவர் ஒரு மாய மனிதன் யார் இவரைப் பார்த்தாலும் அவர்களுக்கு இந்த முகம் நினைவில் இருக்காது. என்று ஆரம்பித்து, கீழே அன்று நடந்த விஷயத்தை விரிவாக எழுதி இருந்தான். அந்த விஷயம் ஒரே நாளில் நகரம் முழுவதும் பரவிவிட்டது.

பொது இடங்களில் இந்த விஷயம் ஒரு விவாதப் பொருளானது. நான் செல்லும் இடங்களில் பல பேர் இந்த விஷயத்தைப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கிறேன். அவர்கள் தங்களுக்கு சம்பந்தமில்லாத இடத்தில் எங்கேயோ யாரோ அப்படி இருக்காங்களாம் என்று பேசிக் கொண்டார்கள். இப்படி ஒரு சக்தியோடு இருப்பது நல்லதா கெட்டதா என டிவியில் ஒரு விவாதம் கூட நடந்தது.

இந்த விஷயம் அரசாங்கத்தின் கவனத்துக்கும் போய்விட்டது.

5

நாட்டில் எங்கேயாவது ஏதாவது மர்மமான முறையில் நடந்தால் இதை அந்த மாயாவிதான் செய்திருப்பான் என மக்கள் பேசிக் கொள்ளத் துவங்கினார்கள்.

இப்படிப் பட்ட நபரை சமூகத்தில் விட்டு வைத்திருப்பது ஆபத்து என அறிவித்த அரசாங்கம் என்னுடைய புகைப்படத்தை எல்லா இடங்களிலும் ஒட்டிவைத்து இந்த நபரை யார் பார்த்தாலும் அவரைப் பிடித்து அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

6

நான் வெளியே எங்கும் போகவில்லை. அந்த நபர் நான் தான் என போலீஸ் ஸ்டேஷனில் போய் சரணடைந்துவிடலாமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளலாமா என ஒரு வாரமாக யோசித்தேன்.

தற்கொலை செய்து கொள்ளும் தைரியம் எனக்கு கைகூடவில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் போய் போலீஸ் ஸ்டேஷனிலேயே சரண் அடைந்துவிடலாம் என முடிவு செய்தவனாய் பத்து நாட்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

போகும் வழியில் எங்கள் தெருவிலேயே அந்த போஸ்டரைப் பார்த்தேன். இந்த நபரை யாரேனும் பார்த்தால். அவரை அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆமாம் அது நான் தான். அதற்காகத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த போஸ்டரில் இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் முகத்தை நான் எங்கும் பார்த்ததாக நினைவில் இல்லை.

000

குமாரநந்தன்

குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

7 Comments உரையாடலுக்கு

  1. கதையை நான் விமர்சிக்கப் போவதில்லை. மாறாக, குமாரநந்தனிடம் ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்; பரிசீலிப்பது அவர் விருப்பம். எண் 6 பகுதியைத் தயவு செய்து நீக்கி விடுங்கள்(அச்சுக்குச் செல்லும்போதாவது).

    எண் 6 நீக்கப்படுமாயின், கதை கனமாகவும் செறிவாகவும் இயல்பாகவும் இருக்கும்; மீண்டும், இது என் பரிசீலனைக்குரிய வேண்டுகோள் மட்டுமே. குமாரநந்தன் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்.

  2. நல்ல நடை.. வாசிக்க வாசிக்க விறுவிறுப்பு கூடுகிறது. வாழ்த்துகள் குமாரநந்தன் சார்💐

  3. தமிழ் சிறுகதையில் ந.முத்துசாமி தொட்ட இடம், மனித இருப்பின் வினோதமான அபத்த அம்சம். அந்த இடத்திலிருந்து ஒரு நீட்சியாக ஒரு சத்தான இடத்துக்கு குமாரநந்தன் வந்துசேர்ந்திருக்கிறார். ஒருவன் இருக்கிறான். ஆனால், அவனது முகம் எல்லாரிடமும் பதியாமல் போய்விடும் அபத்தம் நிகழ்கிறது. முகமே நூலாகிவிட்ட முகவரியாகவிட்ட காலத்தில் முகத்தை இழக்கும் துயரம் எத்தனை ஆழமானது? கதை சொல்லும் தன்னிலையே கடைசியில் தன் முகபிம்பத்தை அகத்தில் இல்லாமல் இழந்து நிற்கிறது. அன்பு குமார நந்தனுக்கு எனது வாழ்த்துகள்.

  4. அருமையான கதை அருமையான நடை.. நன்றி குமாரநந்தன்… Voluntary and Involuntary self effacement…

  5. கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. முதல் வரி “நான் யார் நினைவிலும் இல்லை” கடைசி வரி “அந்த போஸ்டரில் இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் முகத்தை நான் எங்கும் பார்த்ததாக நினைவில் இல்லை”. நாம் யார் நினைவிலும் இல்லாமல் போவதென்பது கிட்டத்தட்ட நாம் இல்லாமல் போவதற்கு ஒப்பானது. நமக்கே நம்மை நினைவில்லாமல் போவது எவ்வளவு துயரமானது. நாம் இருந்துகொண்டு நமக்கு மற்ற எல்லாம் நினைவில் இருக்கும்போது நம்மை நாமே மறப்பது பித்து நிலையில் வருமா என்று தெரியவில்லை. இந்திய தத்துவம் சுயத்தை அழித்தல் குறித்து நெடுங்காலமாய் பேசி வருகிறது. ஆனால் இங்கு நமது சுயம் மற்றவர்களுக்கு மறந்து போனால் நாம் அதை எப்படி எதிர்கொள்வது நாமும் நம்மை மறப்பதைத் தவிர என்ற கோணத்தில் வாசித்தால் இந்த சிறுகதை ஒரு தத்துவ விசாரமாகவும் உள்ளது.

  6. கதை அருமை வாழ்த்துக்கள் பாலமுருகன் சார்…

    நான் உங்களுடன் பணி புரிந்தவன் என்பதால் இந்த பெயரை பதிவு செய்கிறேன்….

    குமாரநந்னுக்கு வாழ்த்துக்கள்

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss