
நாவல் எவ்வகையான பிரச்சினையையும் பேசலாம், எந்த மாதிரியான கதைக்களனிலும் அது இயங்கலாம்; ஆனால் அது கட்டமைக்கிற புனைவுலகத்தை நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதில் இரண்டு வகைமை உள்ளன. ஒன்று, நாவலில் நம்மை உணர்கிற தன்மை, அதாவது, நாவலை வாசிக்கிறபோது அதன் பல இடங்களில் நாம் “இப்படித்தான் நானும்” ”இதுமாதிரியான அனுபவம்தான் எனக்கும்” இப்படியாக அதன் பல பகுதிகளில் நம்மை அவதானிக்கிற தன்மை. இரண்டாவது வகை, நாவலை வாசிக்கிறபோது நாமே அதன் ஒரு பகுதியாகின்ற தன்மை. வேறு மாதிரியாகச் சொல்வதென்றால் அந்த நாவல் நம்மை குற்றவாளியாக்குகின்ற தன்மை. பிறழ் நாவல் இந்த இரண்டாவது தன்மையைத்தான் நமக்குள் செலுத்த முயற்சிக்கிறது.
பொதுவாக எழுத்தாளர்களின் தொடக்கப் படைப்புகள் முதலில் சொன்ன வகைமையில் பெரிதும் எழுதப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அதை நோஸ்டால்ஜியா அல்லது டைரிக்குறிப்புகள் என்றுகூட சொல்லலாம். பிறழ் நாவலும் நோஸ்டால்ஜியா மனநிலையில்தான் தனது கடந்தக் காலத்தைச் சொல்லத் தொடங்குகிறது. ஆனால் அது முற்றிலும் வேறான உலகிற்குள் நம்மை செலுத்துகிறது. பிறழ் நாவலின் கதைசொல்லி “ஒரே நேரத்தில் இருவராக வாழ்ந்துகொண்டிருப்பவனின் கதை“ என்று தன்னை அறிவித்துவிடுகிறார். அந்தக் கதைசொல்லி வெளியே நின்று மனச்சிதைவான ஒருவனின் கதையை விவரிக்கிறார். கதையின் போக்கில் அந்த எல்லாம் தெரிந்தக் கதைசொல்லிக்கு ஏற்படுகிற தடுமாற்றம்தான் கதையாகிறது.
பிறழ் நாவலின் கதைசொல்லி தீவிர இலக்கியமும் மார்க்ஸிய சிந்தனையும் சமகால உலகப் போக்கின் மீதான அவஸ்த்தையையும் கொண்ட ஒரு கதாப்பாத்திரம். துள்ளலான சிறுவனாக கதையில் அறிமுகமாகிறான். எல்லா சிறுவர்களுக்கும் வாய்க்கும் பால்யகாலச் சுவையான உலகம் அவனுக்கும் கிடைக்கிறது. அம்மாவின் உள்ளங்கையில் உறங்குவது, டியூசனில் படிப்பதாக ஏமாற்றுவது, திருட்டு சிகரெட், தொலைக்காட்சி விளையாட்டு, என அது அவனை கொண்டாட்டமாக வைத்திருக்கிறது அவனுடைய உலகம். தீவிர இலக்கிய வாசிப்பை சிறுவயதிலிருந்தே எடுத்துக்கொள்கிறான். முக்கியமாக பின்னாளில் அவனுக்கு எங்கு பாலியல் வன்முறை நிகழ்கிறதோ, அந்த வீட்டில்தான் முதன்முதலில் மார்க்ஸிய லெனினிய புத்தகங்கள் அவனது ஞாபகத்தில் பதிவாகின்றன. அங்கு அடுக்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்களும் தூசு படிந்த அதன் தோற்றமும் கம்பீரமான அதன் சொல் நடைகளும் (இவை நாவலில் விவரிக்கப்படவில்லை) அவனுக்குள் ஆளுமைக்குரிய விகசிப்பை உண்டாக்குகிறது.
மனிதனால் ஏற்பத்துகிற வன்முறைகளிலே பாலியல் வன்முறைதான் என்றைக்கும் அமைதியை திரும்ப தராத கருனையற்றது என்கிறார் ஜேம்ஸ் ஆர்தர் பால்ட்வின் . பிறழ் நாவலின் கதாநாயகனான சிறுவனின் துள்ளலான யதார்த்த உலதை பாலியல் வன்முறைதான் சிதைக்கிறது. பொதுவாக ”வன்முறை” என்கிற சொல்லை, அதன் தீவிரமான தொனிக்கேற்ப சித்திரவதை என்பதாகவே நாம் புரிந்துகொள்கிறோம். சித்திரவதைகள் அத்தனையும் ஏற்படுகிற இடம் உடல் என்றாலும், அதன் வலி பெரும் மௌனத்தைக் கொண்டிருக்கிற இடம் ஆழ்மனதுக்குள்தான் விழுகிறது. நாவலிலும் அது உடல் ரீதியான சித்திரவதையாகத்தான் அவனுக்கு நேர்கிறது. ”இருட்டு சந்து” சம்பவம் நமக்கு அவ்வாறுதான் காட்டப்படுகிறது. பிறகு அதைத் தொடர்ந்து அவனுக்கு இன்னொரு வன்முறை நிகழ்கிறது. அந்த வன்முறை என்னவென்றால் அந்தக் கதாப்பாத்திரம் நிர்வாணமாக இன்னொருவர் முன்னால் நிற்பது. இருட்டுச் சந்து வன்முறையை மறைக்க பவானி அக்கா அவனை நிர்வாணப்படுத்துகிறாள். அவனை இணங்க வைக்கிற முயற்சியென்பதுதான் அதன் உட்கிடை என்றாலும் அந்தக் கணம் நிர்வானமாக நிற்க வேண்டிய சங்கடத்தை பவானி அக்காவிடமிருந்து அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு பெண்ணின் முன் அவனது நிர்வாணம் கூசிப்போவதற்குப் பதிலாக மிகப்பெரிய சித்திரவதையை அனுபவிக்கும் உணர்வை அளிக்கிறது.
அவனது நிர்வாணப் படங்கள் அவளது புகைப்படக் கருவி என்கிற இருட்டுக்குள் ஒளிந்திருக்கின்றன! அது எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என்பது பயங்கரமான கனவைக் கொடுக்கிற பேய். இங்கிருந்துதான் அவனை ஞாபகத்தின் நரகத்துக்குள் தொலை வைக்கப் போகிற இரண்டு “இருட்டுச் சம்பவங்கள்” வந்து சேர்கின்றன. ஒன்று, அவனாகவே அனுபவித்த ”இருட்டுச் சந்து” சம்பவம். இன்னொன்று பவானி அக்காவின் புகைப்படக் கருவிக்குள் இவனது நிர்வாணம் ஒளிந்திருக்கிற ”இருள்”. ஒரே நேரத்தில் இந்த இருவிதமான வன்முறையும் அங்கு அரங்கேறுகின்றன. ஒருவர் சித்திரவதையாக அவனை மன்டியிட வைக்கிறார் இன்னொருவர் அவனை நிர்வாணமாக நிறுத்துகிறார்.

இந்த இருவரும்தான் (இரு சம்பவங்கள்) பின்னாளில் அந்தக் கதாநாயகனுக்கு இரு குரல்களாக உருவாகின்றன. அவனைச் சித்திரவதைப்படுத்திய இந்த இருவேறு மனிதர்கள் இருவரும் அவனது இசைவைப் பொருட்படுத்தவில்லை. அவனது காமத்தைப் பண்டப் பொருளாக்குகிறார்கள். இங்குதான் காம இச்சை சாதாரண பண்டப் பொருளாக உருமாற்றமடைகிறது. ஒரு மிட்டாயை வாங்கி வாயில் போட்டுச் சப்புவதுபோல அந்தச் சிறுவன் அவர்களுடையக் கைகளுக்குள், கண்களுக்குள் சுவைக்கப்படுகிறான். அவர்களது தீராவிழை ஒரு கட்டத்தில் சிறுவனுக்குள் ஒற்றைக் குரலாக மாறிவிடுகிறது. என்னவொரு அதிசயம் பாருங்கள்! இரண்டு சம்பவங்கள் ஏற்படுத்துகிற மனப்புணர்வின் பிரசத்தில் ஒரே குரல் உடைய ஒரு பாத்திரம் பிறப்பது. அது பிறகு மெல்ல மெல்ல அவனைத் தொற்றிக்கொள்கிறது. பிறகு அது அவனுக்குள் எதுவும் பேசுவதில்லை (அல்லது குறைவாகப் பேசலாம்) வெறும் ஆணை மட்டுமே இடுகிறது. அது எந்த வகையிலும் உரையாடவில்லை. நான் சொல்வதைச் செய் என்கிறது (செத்துப் போ). நாவலில் அந்தக் குரலை பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரம் “அவன்” என்கிறது. உண்மையில் அந்தக் குரல் வெளியே இருக்கும் கதைசொல்லியைப் போல பால் பேதமற்றதாகத்தான் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரம் அந்தக் குரலுக்கு “அவன்“ என்கிற ஆண் பால் பேதத்தை உண்டாக்கிக்கொள்வதைக் கவனிக்க வேண்டும். ஆணை இடுகிற தோரணை ஆணாகத்தான் இருக்க வேண்டுமென்பதாக. இருக்கலாம், பின்னாளில் அவனுக்குள் மென்மையான அன்பை அந்தக் கோதுமையழகி உருவிலியாகவும் யமுனாவின் வழியிலும் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆணை அவனை விரட்டிக்கொண்டிருக்கிறது.
பிறழின் கதைசொல்லி இரண்டு குரல்களின் ஊடாக ஒரு கதையைத்தான் சொல்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் முதன்மை கதாபாத்திரத்தை ஆணையிடுகிற ஆண் பாத்திரம் குரல் வழியாகவே வருகிறது. அது அவனை இங்கு நடக்கிற யதார்த்த உலகத்தின் புதிய அனுபவங்களை (அவன் அன்பு என்று இளைப்பாறுகிற தருணங்களை) கெடுத்து சுக்கு நூறாக்கிறது. அதனால்தான் அவனால் யமுனாவுடன் இருக்கிற அற்புதமான தருணங்களை அனுபவிக்க முடியவில்லை. உண்மையில் அந்தக் குரல்தான் அதைக் கெடுக்கிறது. காதுகள் நாவலை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். காரணம், காதுகளில் அந்தக் குரல் பேசிக்கொண்டே இருக்கும். அந்தக் குரலின் இருப்பு நாவல் முழுக்க வரும். பிறழில் அந்தக் குரலை மறந்துவிட முயற்சிக்கிற கதாபாத்திரத்தின் உலகம்தான் நமக்கு முழுமையாக விரிகிறது. அதாவது, அந்தக் குரல் அவனைத் துரத்துவதையும் மீறி யதார்த்தவுலகின் அழகியலை அவன் காப்பாற்ற முயல்கிறான். அங்கு முகிழ்கிற காதலை கைக்குள் பொத்திக்கொண்டு அலைகிறான்.
இந்த நாவலில் முக்கியமாக எனக்குப் பிடித்தமான இரண்டு விசயங்கள். ஒன்று, இதுபோன்ற நோய்மை உலகைச் சித்தரிக்கிற நாவல்களில் யதார்த்த உலகம் x நோய்மை உலகம் என்பதாக கட்டமைகிற இருமை இதில் இல்லை. மருத்துவம் அல்லது மருத்துவம் சார்ந்தக் கச்சாடாக்களின் தகவல் குவியல்கள் கிடையாது. இரண்டாவது முக்கியமான விசயம் பிறழ் நாவல் இந்த நோய்மை உலகின் இருளைவிட்டு வெளியேறி (அவன் ஏற்கெனவே இருளிலிருந்துதான் துரத்தப்படுகிறான்) காதலின் காத்திருப்பையும் வலியையும் புத்தொளியாக்க முயற்சிக்கிறது. அவன் காதலின் அழகில்தான் தன்னை இழக்க விரும்புகிறான். அந்தக் காதல் உலகம் இன்னுமே விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பதும் அவனது இடதுசாரி சிந்தனையும் இயக்கம் மீதான அவனது விமர்சனங்களும் இன்னும் விரிவாகப் பேசியிருக்கலாமென்பது என் தனிப்பட்ட அவா. காரணம், அந்த இளைஞன் மிகுந்த கூர் உணர்வுடையவனாக இருப்பது. தெள்ளத் தெளிவாக அவனுக்கு யதார்த்தவுலகின் அரசியல் தெரிந்திருக்கிறது. பாஜகவின் வளர்ச்சியும் இடதுசாரி அமைப்பின் வீழ்ச்சியையும் போகிற போக்கில் காட்டிவிடுகிறான். அமைப்பின் கோட்பாடுகளோடு அவனுக்கு விமர்சனம் உண்டு. அவனிடமுள்ள குறும்புத்தனங்கள்தான் ”பொன்னுலகைப் படைக்கும் மார்க்ஸிஸ்ட்களுக்கு மனச்சிதைவை மாற்ற முடியாதா என்ன?” போன்ற கேள்விகளை எழுப்புகிறது. இடதுசாரி சிந்தனையின் போதாமைகளை அசாத்தியமாக அவனால் மட்டும்தான் விமர்சிக்க முடிகிறது. மனச்சிதைவுச் சிகிச்சைக்கு தோழர்களிடம் சில யோசனைகள் கேட்கிறான். தோழர்கள் கொடுக்கிற டேவிட் கூப்பர் நூல்,மாவோவின் வரலாறு அதிகாலை பெருவெள்ளம், ஓநாய் குலச்சின்னம் நூலுக்கும் கலாச்சார புரட்சிக்குமிடையே உள்ள வித்தியாசம் இதெல்லாம் அவனை மீண்டும் குழப்புகிறது. அமைப்பின் கோட்பாட்டுக்கும் நவீன இலக்கியத்துக்கும் இடையே இருக்கிற வேறுபாடு முக்கியமான இடம். உண்மையில் நவீன இலக்கியம் இடதுசாரி மனநிலையை காலத்துக்கேற்ப தளர்த்திக்கொண்டிருக்கிறதா அல்லது இடதுசாரி இயக்கம் தளர்ந்திருக்கிறதா என்கிற கேள்வி இங்கு முக்கியம். ரஷ்ய இலக்கியங்கள்தான் நமக்கு இடதுசாரி இயக்கம், லட்சியவாதங்கள்மீது நம்பிக்கை அளித்த முதல் படி என்றால், ஏன் நம்முடை தீவிர நவீன தமிழலக்கியம் அமைப்பின் கோட்பாடுகளுக்கு வெளியே இருக்கிறது? இந்தக் கேள்வியை மறைமுகமாக இந்நாவல் நம்மிடம் கேட்கிறது. சமூகம், ஒழுங்கையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட முயல்கிறக் கலைஞன் அதை ஏன் குலைக்கிறான்? அதன் மாயபிம்பத்தை எதற்காக வீசியெறிகிறான்? அதைத்தான் பிறழ் நாவலின் கதாபாத்திரம் முயற்சிக்கிறது.
நாவலின் அக்கதாப்பாத்திரம் அடைகிற சித்திரவதைகளிலெல்லாம் நம்மால் அந்தக் கதாப்பாத்திரத்தின் தரப்பில் நிற்பதற்குப் பதிலாக இந்தச் சமூதாயத்தின் இருட்டான உலகுக்குள் நம்மை தள்ளிவிடுகிறார் கதைசொல்லி. நம்மால் அந்தக் குற்றவுணர்விலிருந்து வெளியேற முடியாமல் போகிறது. ஜேம்ஸ் பால்ட்வின் தன் கட்டுரையில் குறிப்பிடுகிற ஒன்று இந்த நாவலை வாசிக்கிறபோது நினைவுக்கு வந்தது. ஒன்று தனிமை பற்றியது. It is like the fearless alone that one sees in the eyes of someone who is suffering, whom we cannot help. Or it is like the aloneness of love, the force and mystery that so many have extolled and so many have cursed, but which no one has ever understood or ever really been able to control. பிறழ் நாவலின் கதாநாயகனுக்கு தோழியாக கிடைக்கிற யமுனா அப்படியான இடத்தில்தான் அவனை எதிர்கொள்கிறாள். பிறழ் நாவல் வாசிக்க வேண்டிய முக்கியமான பிரதி.
000
வெளியீடு : எதிர்
இணையத்தில் வாங்க

தூயன்
வரலாற்றையும் கருத்தில்கொண்டு புதிய புனைவு உத்திகள் வழியாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். "கதீட்ரல்" என்ற நாவல் மற்றும் "இருமுனை" , "டார்வினின் வால்" ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.