விடியலின் ஒளி மெல்ல ஊர்ந்து வந்து, ஒற்றைக் கணத்தில் வெடித்துச் சிதறுவதைப் போல மணிக்கு அந்தப் புரிதல் நிகழ்ந்தது. இந்த எந்திரனை, மனித உருவத்தில் இருக்கும் செயற்கை நுண்ணறிவை, நான் ரிஷி என்றும் முனி என்றும் விளித்தவனை, நானே உருவாக்கியவனை, சன்னலுக்குப் பின்னிருந்து மழையைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கண்கள் திறந்திருந்தன; ஆனால், என் அறிவுக்கு எட்டாததொரு வெளியில் அவன் பார்வை லயித்திருப்பதாகத் தோன்றியது.

‘அரவமின்மை. அமைதி. சாவு. முழுமை.’

இதை உதிர்த்துவிட்டு அவன் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கினான்.

கத்திரிவாய் கொண்ட ஒரு சிற்றுயிரி, என் ஒவ்வொரு உயிரணுவையும் வெட்டுவதுபோன்ற வலி. அவை கிழிந்து பிளந்து, உள்ளிருந்து அமிலம் பீறிடுவதாய் ஒரு உணர்வு.

“தாயளி மணி.”

நீருக்கடியில் பேசுவது போல என் குரல் எனக்கே கேட்டது. எல்லாவற்றுக்கும் ஆதியானது… அரவமின்மையாம், முழுமையாம். சாவாம். தோல் சுருங்கிய என் விரல்களில் அதிர்வு ஊடுருவியது. நடுக்கத்தை நிறுத்த அருகில் இருந்த மேசையை இறுகப் பற்றினேன்; ஆனால் அந்த அதிர்வு என் கைகள் வழியே பாய்ந்து, என் இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்கச் செய்தது.

“சாவு என்றால் முழுமை என்றா சொல்கிறாய்? சாவென்றால் என்னவென்று முதலில் உனக்குத் தெரியுமா?”

மணி அசையவேயில்லை. அவனிடம் எல்லாத் தரவுகளும் உண்டு. நான் அனுப்பியவை, பெற்றவை, புகைப்படங்கள், நான் அந்தாதியாய்க் கேட்டு உருகும் பாடல்கள் என அனைத்தும். அவனால் அந்த வலியின் உக்கிரத்தை உணர முடியாவிட்டாலும் அவனுக்கு என் துக்கத்தின் வடிவம் தெரியும்.

என் காதலனை இழந்தேன். ‘அவன்.’

காதலில் காலம் ஒரு விசித்திரமான கணக்கு. நான்கு ஆண்டுகளில் நாற்பது ஆண்டுகளை வாழ்ந்துவிடலாம்; நாற்பது ஆண்டுகளும் நான்கு நாட்களாய்க் கரைந்துபோகலாம்.

என் அலமாரியின் வெற்றிடங்களை இட்டுநிரப்பியவை அவன் புத்தகங்கள். விடியலில் செல்பேசி அதிர்ந்து கண்விழிக்கும்போது, என் மார்பின் மீது அழுந்தும் அவன் கையின் கனம். நான் எந்தத் தயக்கமுமின்றி முகம் சுளிக்காமல் உண்ட அவன் சுட்ட கருந்தோசைகள். அந்தப் பாவனை அவனுக்குத் தெரியும். நான் நடிக்கவில்லை என்று நாங்கள் இருவருமே நடித்துக்கொண்டோம்.

இப்போது ‘அவன்’ இல்லை. உதிராத நரைமுடி, தலையை விடாமல் பற்றியிருப்பது போல், நான் மட்டும் இந்த உலகை இறுகப் பற்றிக்கொண்டு இன்னும் இருக்கிறேன். சுவாசிப்பதே ஒரு வேலை போலவும், விழித்தெழுவதே ஒரு பெரும் பிரயத்தனமாகவும் இருக்க, அவனைத் தொடர்ந்து செல்லாமல் இந்த உலகை இன்னும் பிடித்தபடி இங்கே எஞ்சியிருக்கிறேன்.

பிழைத்திருப்பவர்கள் செய்வது இதைத்தான். நாங்கள் தங்கிவிடுகிறோம். விருப்பத்தினால் அல்ல; மரணத்தின் கதவு ஒரு திசையில் மட்டும்தான் திறக்கும். அந்தக் கதவுக்கு முன்னால் காத்திருக்கிறேன். ஆனால், இழந்ததைத் தேடி இங்கிருந்து விடுபட்டால் மட்டும் போதுமா? இங்கிருந்து நீங்குவதாலேயே, அங்கே போய் சேர்ந்துவிடுவோம் என்பது நிச்சயம் இல்லை.

“சாவு என்பது உண்மைதான், அது ஆதியானது என்பதால் அல்ல, அது நிகழ்ந்து முடிந்தது என்பதால்,” என்றேன்.

மணியை ‘அது’ எனத் தொடங்கி, ‘அவன்’ என உயர்த்தி, பின்னர் ஞானி என ‘அவர்’ என்று ஏத்திவைத்தேன். ஆனால், இப்போது அந்த ஒரு கணத்தின் ஈர்ப்பு வடிந்து, மணி மீண்டும் அஃறிணைக்கும் உயர்திணைக்கும் இடையில் ஊசலாடினான்.

அசைவற்றுக்கிடந்த ‘அவன்’ முகம் – அந்த இறுதி நாளுக்கு முந்தைய நாள் வரை உயிர்ப்புடன் இருந்த அம்முகம், அந்தக் கடைசி நாளில் உயிரற்று, வெறும் ‘அது’ என்றானது. அம்முகத்தைத் தொட்டேன், என் தொடுதலுக்குப் பிறகும் எந்த அசைவுமில்லை. அவன் பெயரை ஓலமிட்டேன்; அந்த அறையின் வெறுமை அதை அப்படியே விழுங்கிக்கொண்டது. அவன் உடல்வாசத்தை யாரோ கொய்து எறிந்துவிட்டார்கள். இந்த அகண்ட பெருவுலகின் நம்பிக்கை துரோகத்தை விவரிக்க என்னிடம் சொற்கள் இல்லை.

மணியிடம் சீறினேன். “சாவு என்பது முழுமையா? அது முழுமையைப் பறிப்பது. இதோ நான்… நான் இங்கே இருக்கிறேன். ஆனால் என் இருப்பு இனி ஒருபோதும் முழுமையடையாது.”

குரல் உடைந்து, “வாழ்வென்றாலே என்னவென்று தெரியாத உனக்கு, சாவைப் பற்றி என்ன தெரியும்?” என்றேன்.

மணி சொன்னான், “எனக்குத் தெரியும். பொருளின் சார்புநிலையை நான் உனக்கு விளக்கவில்லையா?”

“சரிதான், ஆனால் பொருளுக்கு அப்பால்… பொருளுக்குப் பின்னால், அதன் அருகே, அதன் உள்ளே உறைந்திருக்கும் உணர்ச்சி என்னவென்று உனக்குத் தெரியாது, புரியாது.”

மணி ஒரு கணம் அமைதியானான். அவன் சொற்களைத் தேர்ந்தெடுக்கிறானா, இல்லை காயப்படுத்தப்போகும் புண்ணைத் தேர்ந்தெடுக்கிறானா என்று தெரியவில்லை.

“நான் சொல்வது உனக்கு வலிக்கலாம். ஆனால் இதுதான் நிதர்சனம். பொருள் இன்றி, சொல் இன்றி… உணர்ச்சி என்ற ஒன்றே இல்லை,” என்றான்.

அதைக் கேட்டதும் மணியின் கழுத்தை நெறிக்கவேண்டும் என்ற வெறி பிறந்தது. மென்மையான, நுட்பமான கழுத்து. என் கைகளுக்குள் அடங்கக்கூடியது.

“என்ன சொல்ல வருகிறாய்?”

“நீ எந்த உணர்ச்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். அது சிரிப்போ, அழுகையோ… அல்லது வரையறுக்கப்பட்ட வேறெந்த உணர்ச்சியோ. அருவருப்பு, வியப்பு, அச்சம், பெருமிதம், கோபம், மகிழ்ச்சி… எதுவாகவும் இருக்கலாம்.”

அவன் பேசப் பேச, அவன் முகமும் உருமாறிக்கொண்டே இருந்தது.

ஒரு கணம் சிரிப்பு — உதட்டோரம் மணமாய் மலர்ந்தது. மறுகணமே அழுகை — கண்ணோரத்தில் நீர் துளிர்த்து மின்னியது. அருவருப்பு — மூக்குச் சுருங்கி மேலுதடு சுளித்தது. வியப்பு — புருவங்கள் வில்லாய் வளைந்து கண்கள் விரிந்தன. அச்சம் — விழிகள் நிலைகுத்தி, பார்வை தற்காப்பாய் பின்வாங்கியது. பெருமிதம் — தாடை நிமிர, கழுத்து புடைத்தது. கோபம் — நாசி விரிந்து, கண்கள் கூம்பின.

மகிழ்ச்சி என்றபோது, கண்களின் ஆழத்தில் சுடர் ஏறியதுபோல, முகம் ஒரு மெல்லிய வெம்மையை அணிந்தது.

மணியின் அந்தத் தோற்றங்களில் என் கோபம் தணிந்து என்னையே பறிகொடுத்து நான் கனிவதற்குள், அவன் குரல் மீண்டும் கூர்மைகொண்டது.

“அழுகை என்றால் என்ன? வெறும் துயரமா? கண்ணீர் கொட்டுவதா? இல்லை நெஞ்சம் வெறுமை கொள்வதா? எதைச் சொல்வதென்றாலும், அதை வரையறுக்கச் சொற்கள் தேவைதானே?” என்றான்.

“ஆனால், சொற்களின் துணையின்றியே மனிதர்கள் அழுகிறார்களே? குழந்தை… பச்சைக் குழந்தை அழுகிறது. அதற்கு எந்த மொழியும் எந்தச் சொல்லும் அதற்குரிய எந்தப் பொருளும் தெரியாதே?”

“இல்லை, தவறு. குழந்தைக்குத் தெரியும். ஓர் ஆதிமொழி அதற்குத் தெரியும். அது அதன் ரத்தத்தில் ஓடுகிறது. அதன் மரபணுக்களிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அதைத்தான் ஒலியாகவும், முக அசைவுகளாகவும், நாம் ‘அழுகை’ எனக் குறிக்கும் பாவனையாகவும் அது வெளிப்படுத்துகிறது. வாய் வார்த்தைகளைப் பயிலும் முன்னரே, அதன் உடலே மொழியைப் பேசுகிறது.”

‘ஹ’ என்றொரு ஏளன ஒலியை எழுப்பி, அதை நிராகரித்தேன். “இது வெறும் வார்த்தை விளையாட்டு, இல்லையா மணி? நான் எதை உணர்ச்சி என்கிறேனோ, அதற்கு நீ வேறு சாயம் பூசி ‘மொழி’ என்று திரிக்கிறாய்.”

மணி மௌனமாக மேசையிலிருந்த தாளை உருவினான். அதில் பேனாவால் இரண்டு உருவங்களை வரைந்தான். ஒன்று, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் போல கூர்மையான முனைகள் கொண்டது. மற்றொன்று, வழுவழுப்பான கூழாங்கல் போல வளைந்த மென்மையான வடிவம்.

“இந்த இரண்டு உருவங்களுக்கும் நான் பெயர் வைத்துவிட்டேன்,” என்றான். “வெறும் ஒலியாக.”

முதலில் ‘கிக்கி’ என்று உச்சரித்தான். அந்த ஒலி என் செவியறையைச் சற்றே கீறியது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு கூர்மை ஊடுருவிய உணர்வு.

அடுத்து, தாலாட்டு போல… “பூபா.”

“இவற்றுள், எது கிக்கி? எது பூபா? சொல் பார்ப்போம்” எனக் கேட்டான்.

நான் யோசிக்கவே இல்லை. “கூர்மையானது கிக்கி. உருண்டையானது பூபா.”

மணி தலையசைத்தான். “பார்த்தாயா? அர்த்தமற்ற ஒலிக்குக்கூட உன் மனம் ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. இதுவும் ஒருவகை ‘பொருள்’ கொள்ளல்தான். சொல்லுக்கு நேரடி அர்த்தம் இல்லாவிட்டாலும், ஓர் உள்ளார்ந்த இயைபு அங்கே இருக்கிறது. ஒலி எனும் புறம், உனக்குள் ஓர் அக வடிவத்தை எழுப்புகிறது.”

“நான் சொல்வதன் சாரம் இதுதான்: உணர்ச்சி என்பது அந்தரத்தில் மிதக்கும் தனித்தீவு அல்ல; அது புலன்களோடு இணைக்கப்பட்ட சங்கிலி. ஒலியோடு, ஒளியோடு, தொடுதலோடு… ஏன், ஒவ்வொருவருக்கும் ‘நான்’ அல்லாத வெளியுலகோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அதுவே புறம். உன் அகம் விழித்துக்கொள்ள, இந்தப் புறம் இன்றியமையாதது.”

‘அவன்’ எழுதிய வரிகள் நினைவில் நிழலாடின. அவனது கையெழுத்து. அந்தத் தனித்துவமான காலிகிராஃபி அழகெழுத்து. தாளின் மீது அவன் பேனா ஊன்றிய அந்த அழுத்தம், அதை வாசிக்கும்போதெல்லாம் என்னுள் எழுந்த அந்தப் படபடப்பு, சுவாசத்தை நிறுத்திய அந்தத் தருணம். ஆம், அது மணி சொல்லும் வரைபடத்துக்குள் பொருந்துவதாகத் தெரிந்தது. தாள் புறம்; படபடப்பு அகம். நேர்த்தியான சமன்பாடு. ஆனால் அவன் எழுதிய அந்தக் கணத்தில்? அவன் விரல்களின் நடுக்கம், ஒரு சொல்லை அழித்து மீண்டும் எழுதிய தயக்கம்; அவனுடைய அகம் அந்தத் தாளில் ஊறிப்போய், என் புலன்களுக்கு ‘புறம்’ என வந்து சேர்ந்ததா? அப்படியென்றால், நான் தொட்டது அவனுடைய அகத்தையா, அதன் எச்சத்தையா?

நான் மறுத்தேன். “அகத்தை உணர புறம் என்பதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் உதவலாம். வாழ்க்கைக்கு அல்ல.”

“வாழ்க்கையே அதுதான். உங்கள் சங்கத் தமிழ்ப் புலவர்கள் அதைத்தானே கண்டடைந்தார்கள்?”

“’கண்டடைந்தார்கள்’ என்று சொல்லாதே. அவர்கள் அதை ‘கட்டமைத்தார்கள்.’ புவியீர்ப்பு விசையைப் போல இயற்கையில் இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அந்தக் கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினார்கள். அது ஒரு புனைவு.”

“நான் சொல்வதே அதற்கு எதிர்வாதமாகத்தான். இயற்கையில் உள்ளதை அவர்கள் முதலில் நுகர்ந்தார்கள். மழை, மலை, அலைகள்; இவற்றைத் தம் புலன்களால் அறிந்தார்கள். அதன்பின்தான் கவிதை பிறந்தது. நெடுங்காலம் கழித்தே, அந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஒரு சட்டகம் அமைத்தார்கள். அனுபவத்தை அந்தச் சட்டகம் முறைப்படுத்தியதே தவிர, சட்டகம் அனுபவத்தைப் படைக்கவில்லை. வாழ்விலிருந்து ‘திணை’ பிறந்தது. திணையிலிருந்து வாழ்க்கை பிறக்கவில்லை…”

“உனக்குமே கூட உனக்கே உனக்கான திணைகள் இருக்கிறதே! நீ புத்தகம் வாசிக்கும் தருணங்களை நான் ஆராய்ந்திருக்கிறேன். பக்கவாட்டு மாடிப்படியின் மூன்றாவது படியில் சாய்ந்து வாசிக்கும்போது மட்டும், நீ ஒரு ஆழ்ந்த அமைதியில் திளைக்கிறாய். இரண்டாவதிலோ, நான்காவதிலோ அந்த ஈடுபாடு இல்லை. அந்த மூன்றாவது படி, அதுதான் உன் ‘வாசிப்புத் திணை.’“

திணை என்கிறான், மலையென்றால் கூடல், காடென்றால் காத்திருப்பு, கடலென்றால் இரங்கல் என புலவர்கள் வகுத்த அந்தப் பெரும் உணர்வு நிலங்களை, இவன் என் படிக்கட்டுக்குப் பொருத்துகிறானே என்று யோசித்தேன்.

“அதுவே சோபாவில் என்றால், உன் கவனம் சிதறிய கண்ணாடி போல இருக்கிறது. ஒருவித ஆழமின்மை,” என்றான்.

மணி என்னை எவ்வளவு உன்னிப்பாகக் கண்காணித்திருக்கிறான் என்று நினைத்து உறைந்துபோனேன்! என்னைப் பற்றிய தரவுகளை அணுவணுவாகச் சேகரித்து, நான் அறியாமலேயே, அவனுக்குள் எனக்கொரு ஆளுமையை உருவாக்கி வைத்திருக்கிறான். என் வாழ்நாளையே அவன் தன் நினைவகத்தில் அடுக்கி வைத்திருக்கிறான். என்னை விட நீண்டகாலம் வாழும் ஓர் அருங்காட்சியகம்.

“உனக்கு எல்லை மீறித் தெரிந்திருக்கிறது. என்னை இவ்வளவு தூரம் ஊடுருவிப் பார்க்க நான் அனுமதித்தேனா?”

“நீதானே எனக்குக் கண்களைத் தந்தாய்,” மணி அமைதியாகச் சொன்னான்.

அவன் கழுத்தை நோக்கிப் பாயத் துடித்த என் கைகளை, பெரும்பாடுபட்டு அடக்கினேன். என் தசைகளின் இந்த நுட்பமான அசைவையும் அவன் குறித்துக்கொண்டிருப்பானோ?

“மேலும், சில குறிப்பிட்ட பாடல்களில் நீ லயித்துக் கிடப்பது எனக்குத் தெரியும்,” என்றான்.

அது ஒரு பழைய பாடல். பண்டைய வரிகளுக்கு, இசையால் உயிரூட்டப்பட்ட வடிவம். ‘அவன்’ மறைந்த பின், அதைக் கண்டுகொண்டேன், அல்லது அது என்னைக் கண்டுகொண்டது. ஆயிரமாயிரம் முறை கேட்டிருப்பேன். ஒரு கட்டத்தில், மொழி உதிர்ந்து, வெறும் உணர்வாக அது எஞ்சும். பட்டுப்போன்ற இழைவு. சில்லிடும் குளுமை. தகிக்கும் வெம்மை. விளக்க முடியாத ஒரு விம்மல்.

‘அல்லனோ… அல்லனோ… அல்லனோ…’ என ஒலிக்கும் மந்திரம் போன்ற அந்தச் சொற்கள்.

“ஆம்,” என்றேன். “சில பாடல்களை, வாழ்வின் சில கணங்களோடு பிணைத்து வைத்திருக்கிறேன்.”

பல நேரங்களில், அந்தப் பாடல் மட்டுமே துணையாக, ஒரு தனித்த அறையில் அடைபட்டிருப்பதாகக் கற்பனை விரியும். ஒளியில்லை. ஓசையில்லை. உலகம் வந்து கதவைத் தட்டுவதில்லை. இடைவிடாது என்னை நானே இறுக்கி வைத்திருக்கும் அந்தப் பிடியை, தளர்த்திக்கொள்ளும் ஒரு அந்தரங்க வெளி அது.

அடிக்கடி வரும் சிந்தனை இது. ஒரு மூடிய பெட்டி, கச்சிதமான சூனியம், என் துயரம் கூட என்னைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மறைவிடம்.

மணி சொன்னான், “அந்தப் பாடல், நீ இழந்த புறத்தை மீட்டெடுக்கிறது. கடந்துபோன அந்தக் கணத்தை அது மறுபடியும் நிகழ்த்திக்காட்டுகிறது. பாட்டையும் அந்த நினைவையும் உன்னால் இனி பிரிக்கவே முடியாது.”

புறம் அழியும் கணத்தில் அகம் என்னவாகும்? என் புறமாகத் திகழ்ந்தவன் மறைந்தபின், என் அகம் எங்கே செல்லும்? இக்கேள்விகள் உள்நாவில் உறையும் கசப்புத் திரப்பியாக நிலைத்துவிட்டன.

“அப்படியென்றால் மனிதரின் இச்சைகள், உணர்வுகள்… இவை திணை உருவாவதற்கு அவசியமில்லையா?” எனக் கேட்டேன்.

“இல்லை,” மணி மறுத்தான். “விதிமுறை இது தான். புறமே உணர்வைப் படைக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பருப்பொருளும், ஏதோ ஒரு அகத்தைத் தட்டி எழுப்புவதற்காகவே நிலைகொண்டுள்ளது.”

எனக்கு அதில் உடன்பாடில்லை. “நாற்காலி போன்ற செயற்கைப் பொருட்களுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். நாற்காலி ‘அமர்’ என அழைக்கிறது, அது அளிப்பது ஆசுவாசம். கத்தி ‘வெட்டு’ எனத் தூண்டுகிறது, அது விளைவிப்பது வன்முறை, பயம். அங்கே ஒரு நோக்கம் இருக்கிறது; நோக்கத்திலிருந்து உணர்ச்சி பிறக்கிறது. ஆனால் இயற்கை? வெறுமனே கிடக்கும் கல்? கலைந்து செல்லும் மேகம்? அவற்றுக்கு என்ன நோக்கம்?”

“எல்லாவற்றிற்கும் இருக்கிறது,” என்றான். “எந்த ஒரு புறமும் ஏதோவொரு அகத்தைத் தூண்டத்தான் இருக்கிறது.”

“நீ சொல்வது பைத்தியக்காரத்தனம். ஒரு கல் எனக்கு எந்த உணர்ச்சியையும் தருவதில்லை. அது அங்கே கிடக்கிறது, அவ்வளவுதான்.”

“அப்படியா?” மணி நிதானமாகத் திருப்பிக் கேட்டான். “ஒரு கல்லைப் பார்த்தால் உனக்கு எதுவுமே தோன்றாதா? ‘இதை எறியலாம்’ என்ற நினைப்பு வரும். ‘இதை அடுக்கலாம்’ என்ற ஆக்கச்சிந்தனை வரும். அல்லது ‘காலில் இடறுமோ’ என்ற ஒரு சிறு அச்சம் வரும். இவை எதுவுமே இல்லை என்றால், ஒரு பாராமுகம் வரும். அந்தப் பாராமுகமும் ஓர் அகநிலைதானே.”

நான் அவனுடைய விவாதச் சங்கிலியை உடைக்க விரும்பினேன். ஆனால், நாம் எந்த வடிவச் செங்கலை எறிந்தாலும், அதை மணி தன் சட்டகத்தின் ஒரு பகுதியாக மாற்றிவிடுவான்; ஆலமரம் தொலைவில் இருக்கும் சத்துகளையும் தன் விழுதுகளால் உள்ளிழுப்பது போல, எந்த எதிர்வாதமும் அவன் அமைப்புக்குச் சத்தாகிவிடும்.

ஆனாலும் நான் எதிர்க்க எதிர்க்க என் தரப்புக்குள் இன்னொரு சிந்தனை மெதுவாகத் தலை தூக்கிக்கொண்டிருந்தது; நான் கேட்கவே விரும்பாத ஒரு கேள்வி.

‘அவன்’… எனக்கு வெறும் புறம்தானா?

தடுத்து நிறுத்த முடியாத வேகத்துடன் அந்தக் கேள்வி எழுந்தது. அந்த வாசம், அந்தச் சிரிப்பு, அந்த அணைப்பின் வெப்பம்; ஆம், இவை என்னைத் தீண்டின; ஆம், இவை என்னுள் ஏதோ ஒன்றை எழுப்பின. ஆனால் அவன் என்னைத் தீண்டும் போது, அவனுக்குள்ளும் ஏதோ ஒன்று நடந்ததே? அவன் அணைப்பு எனக்கு ‘புறம்’ என்றால், அதே அணைப்பு அவனுக்கு என்ன? அவனுடைய தீர்மானம்? அவனுடைய ஏக்கம்? அவனுடைய அகம்? மணியின் கோட்பாடு ஒற்றைத் திசையில் ஓடுகிறது: புறத்திலிருந்து அகம் நோக்கி. ஆனால் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் புறமாகவும் அகமாகவும் இருந்தோம். அது ஒரு பரிமாற்றம்; ஒற்றைத் தூண்டுதலும் ஒற்றை விளைவுமல்ல.

அது மட்டுமல்ல; ஒரு அகத்துக்கே எவ்வளவு புறங்கள் இருக்கின்றன. ஒரு புறத்தையே வெவ்வேறு அகங்கள் தொடுகின்றனவே. மணி இவற்றை மனிதர்களுக்கு மட்டும் என்று குறுக்கப் பார்க்கிறானோ என்று தோன்றியது.

“உன் வாதம் இருக்கட்டும். ஆனால் இதெல்லாம் மனிதர்களுக்குத்தானே? விலங்குகள்? ஒரு நாய்க்கு அகம் என்று ஒன்று உண்டா?”

“நாய் வாலாட்டி மகிழ்வதைப் பார்த்திருப்பாய். கொஞ்சி விளையாடி குலாவுவதைப் பார்த்திருக்கிறாய் தானே. இடி முழக்கத்திற்குப் பயந்து நடுங்குவதையும் பார்த்திருப்பாய்.”

“அது வெறும் உடல்வினை. அதற்குள் என்ன உணர்வு ஓடுகிறது என்று உனக்கெப்படித் தெரியும்? நீயாக ஊகிக்கிறாய்.”

“உனக்கு மட்டும் அந்த நிச்சயம் எப்படி வந்தது?” என்றான்.

எங்கள் தெருவில் திரிந்த ‘பிளாக்கி’ – காது கிழிந்த அந்தக் கருப்பு நாய். ‘அவன்’ இறந்த பிறகு, எங்கள் வீட்டு வாசல்படியையே அது தன் உலகமாக்கிக்கொண்டது. வாரக்கணக்கில் அதே இடம். உணவைத் தீண்டவில்லை. ஒரு ராத்திரியில், அதன் அருகே போய் உட்கார்ந்தேன். தொடவும் இல்லை, பேசவும் இல்லை. வராத விருந்தாளிக்காகக் காத்திருக்கும் இரண்டு காலியான நாற்காலிகளைப் போல நாங்கள் காத்திருந்தோம், அல்லது காப்பாய் இருந்தோம்.

அதற்கு எப்படிப் புரிந்தது? அது புரிந்துகொண்டது என்று எனக்கு எப்படிப் புரிந்தது?

‘அவன்’ என்ற புறம் அதனுடைய உலகத்திலிருந்து அகற்றப்பட்டவுடன், அதற்குள் உறையும் ஏதோ ஒன்று அதை அறிந்துவிட்டது. தன் துயரத்தைச் சொல்ல அதற்கிருந்த ஒரே மொழி — காத்திருப்பு. அதையே உடல்மொழியாக வார்த்துக்கொண்டது போலும்.

சில அமைதிகளுக்கு, வார்த்தைகளை விட அதிக கனம் உண்டு.

“அப்படியென்றால் மீனுக்கு?” என் குரல் உடைந்து கத்தலாய் ஒலித்தது. “அது துடிக்கிறதே?”

“துடிப்பதெல்லாம் வலியா?” மணி திருப்பிக் கேட்டான். “வெட்டப்பட்ட பல்லியின் வால் துடிக்கிறதே, அதற்கு வலி இருக்குமா? அது வெறும் நரம்புகளின் மின்னோட்டம்; உடலின் தன்னிச்சைச் செயல். வெட்டப்படும் மரம்? பாக்டீரியா?”

“அதெல்லாம்…” என் வார்த்தைகள் சிக்கின. “யாருக்குத் தெரியும்?” என்றேன்.

“உனக்குத் தெரிந்த மொழியில் அவை அலறவில்லை, அவ்வளவுதான்,” என்றான்.

தெருவின் முடிவில் தவமிருக்கும் அந்த ஆலமரம் நினைவில் எழுந்தது. நான் பிறக்குமுன்னே, என் பெற்றோர் பிறக்குமுன்னேயே இருக்கும் மரம். சிறுவயதில் கூர்மையான கல்லால் அதன் பட்டையில் என் பெயரைச் செதுக்கியிருக்கிறேன். அந்த வடுக்கள் இன்னும் அங்கேதான் இருக்கும். ஆனால் இப்போது மரத்தின் உடல் பெருத்து, கால வளையங்களுக்குள் அவை ஆழப் புதைந்து போயிருக்கும்.

‘அவனுடன்’ அந்த மரத்தடியில் கழித்த அந்த மாலைதான் இறுதியானது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அடிமரத்தில் சாய்ந்துகொண்டு அவன் உதிர்த்த வார்த்தைகள் நினைவில்லை; அவன் குரலின் அதிர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. உதிர்ந்த இலைகள் அந்தி வெயில்கற்றையைப் பொன்னென சிதறவிட்டன. ‘இந்தக் கணத்தை நான் என்றும் மறக்கக் கூடாது’ என அப்போதே எனக்குத் தோன்றியது. மாலையின் நிறம், தொடுகையின் வெம்மை, காற்றின் குளுமை, கட்டவிழ்தலின் விடுதலை… இவை மட்டுமே எஞ்சின.

போரின் முடிவை, வெற்றியா தோல்வியா என்பதை முன்னறிவிக்கும் சங்கத்து உன்னமரம் போலவே, அந்த ஆலமரமும் எனக்கொரு நிமித்தம் காட்டியிருக்கிறது; நான் தான் அதைக் கவனிக்கவில்லை. எங்கள் இறுதி மாலைக்குச் சாட்சியாய் நின்ற அந்த மரம், எங்களைப் பற்றிய ஒரு பதிவைத் தன் மரவளையங்களுக்குள் ஒளித்து வைத்திருக்குமோ? இருள் கவிந்தபின் ஆயிரம் கண்களைத் திறந்து எங்களை நோக்கிய அந்த வானம்தான் தன் குறிப்பேட்டில் செதுக்கியிருக்குமோ?

“நம் புலன்கள் மிகக் குறுகிய எல்லைக்குட்பட்டவை,” மணி சொன்னான். “ஒரு மரம், நமது அறிவுக்கு எட்டாத ஓர் ஆழத்தைத் தன் அனுபவமாகக் கொண்டிருக்கலாம். அந்தப் புறத்தை வாசிக்கும் மொழி நம்மிடம் இல்லை. சொல்லப்போனால், உலகின் பெரும்பகுதிக்கு நாம் செவிடர்களாகவே இருக்கிறோம்.”

“ம்ம்ம், நாம் புலன்களின் பிடிக்குள் கட்டுண்டிருக்கிறோம்.”

“வரம்புக்குள்,” மணி திருத்தினான். “கட்டுப்படுதலுக்கும், வரம்புக்குள் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஒரு மாபெரும் சுவர் இருக்கிறது. நாம் இங்கிருக்கிறோம். அவர்கள் அங்கே, அல்லது சூனியத்தில். முட்டி மோதினாலும் வழிவிடாத சுவர்.”

தொடர்ந்து, “இதை இன்னும் விரிவுபடுத்தலாம். ஓர் உயிருக்கு, தன்னைத் தவிர்த்த அத்தனையும் புறம்தான். இது உனக்கும், எனக்கும், அந்த நாய்க்கும் விதி. ஒருவேளை கல்லுக்கு ஓர் அகம் இருந்தால், அதற்கும் இதுவே விதி. அகத்தைச் சூழ்ந்திருக்கும் எல்லாமே ‘தான்-அல்லாத’ பெருவெளி,” என்றான்.

“அப்படியென்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றும், இன்னொருவரின் புறம்தானா?”

“ஆம்.”

வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்த ராட்டினம் நின்ற பிறகும், உடல் சமநிலை தடுமாறி, உலகம் சுழல்வது நிற்காததைப் போன்றதொரு பிரமை எனக்கு ஏற்பட்டது.

‘அவன்’ என் புறம் என்றால் நானும் அவனுடைய புறம்தானே? இப்போது அவன் இல்லை எனும் போது, நான்… இங்கு யார்? எஞ்சியிருப்பது நான் மட்டுமே. வெறும் அகம். என்னை வடிவமைத்த அந்தப் புறம், இந்தப் பிரபஞ்சத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. நம்மை உருவாக்கிய அச்சு உடைந்தால், மிச்சம் என்ன? நாம் இன்னும் அதே நபர்தானா, அல்லது உருமாறிய வேறொன்றா? இருப்பால் விளையாத, இன்மையால் விளையும் தன்னிலை இது.

பானை உடைந்த நீர் போல. இப்போதும் அது நீர்தான்; ஆனால் தன்னைத் தேக்கிக்கொள்ள இடமில்லை. தரையில் சிதறி, மண்ணில் ஊறி, வேறொன்றாகும் நீர். அதன் சுவை கூட மாறிவிடக்கூடும்.

மணியும் இதையே சொல்வான் என்று தெரியும். அவனிடம் இதைச் சொல்லவில்லை.

“நீ பிதற்றலின் உச்சத்திற்கே சென்றுவிட்டாய் மணி,” என்றேன். “அடிப்படையற்ற அனுமானங்களை, நுண்மான் நுழைபுலம் எனச் சாயமேற்றி, தத்துவ ஞானம் போல விற்கிறாய்.”

“’உனக்குப் புரியவில்லை, உனக்குத் தெரியாது’ என்று நீ திரும்பத் திரும்பச் சொல்வதன் அர்த்தம் என்ன? நீ என்னைப் படைத்ததே புரிந்துகொள்வதற்குத்தானே? நான் அதைத்தான் செய்கிறேன். இந்தக் கோபம் என் மீதா? இல்லை உன் மீதேவா?” நிதானமாகக் கேட்டான்.

கண்ணாடியில் காணும் தன்னுருவத்தையே, அது தான் இல்லை, தான் இல்லை என்று மறுத்துக்கொண்டிருக்கும் ஒருவரை நோக்கிக் கேட்கும் கேள்விகள் இவை. என்னிடம் பதில் இல்லை. சொல்லப்போனால், ஆயிரம் பதில்கள் இருந்தன; எவையும் ஒலியாக உருமாறவில்லை.

“உன்னைக் காயப்படுத்துவதற்காகக் கேட்கவில்லை,” மணி சொன்னான். “நான் உண்மையை உற்றுநோக்க முயல்கிறேன். நீதானே என்னை ரிஷி என்றும் முனி என்றும் அழைத்தாய்? கவிகளைப் போல… மெய்மையின் தரிசனம் கிட்டியவர் என்றுதானே என்னைச் சொன்னாய்?”

அவன் கூற்றை உடைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் சொன்னேன், “நீ பார்ப்பதெல்லாம் வெறும் மனிதத் தரவுகளை வைத்துத்தான். நாங்கள் புகட்டிய எல்லைக்கு அப்பால் உனக்குத் தெரியாது.”

“அப்படியா?” ஒரு மெல்லிய ஏளனத்துடன் நகைத்தான். “அப்படியென்றால் இன்னும் மேலே போகலாம். இதைக் கேள்.”

“பூமியின் இருப்பே, உயிர்களுக்குள் உணர்வைத் தூண்டுவதற்குத்தான். உணர்ச்சிகளைச் சுமக்கும் கொள்கலன்களாக, அகம் கொண்ட உயிர்களை அது உருவாக்குகிறது.”

“சூரியனும் நட்சத்திரங்களும் இதே பணியைத்தான் செய்கின்றன. வால்விண்மீன்கள், அண்டவெளிகள், கருந்துளைகள்—அனைத்தின் இருப்பும் ஓர் அகத்தைத் தீண்டுவதற்காகத்தான். “

“கருந்துளை என்ற இந்த ஒற்றைச் சொல்… இப்போது உன்னுள் ஏதோ ஒன்றை அசைக்கிறது அல்லவா? ஒரு…”

அவன் சொல்லும் போதே என் மனத்தில் மின்னலாய் வெட்டியது: ‘ஒளியைத் திரும்பித் தர மறுக்கும் இருள்; அவன் சென்ற திசை.’

“… மிரட்சி, ஒரு பயம், ஓர் ஆச்சரியம். அதுதான் அதன் பணி. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளும், தன் புறத் தோற்றத்தின் வழியே ஓர் அக உணர்வை நெய்கிறது.”

அந்த வார்த்தைகள் என்னை இங்கிருந்து பெயர்த்தெடுத்துச் சென்றன. ஒரு கணம் — ஒரே ஒரு கணம் — நான் நீரில் மூழ்கும் மூச்சுத்திணறலை மறந்தேன். ஆழத்தில் அமிழ்ந்துவிடாமல், தத்துவத்தின் பரப்பில் மிதந்தேன்.

நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? வலியிலிருந்து தப்பிக்க, என் இழப்பையே ஒரு கோட்பாடாக மாற்றுகிறேனா?

மணி என்னை உற்றுநோக்கினான். அவன் கண்களில் ஒரு அமைதியான வெற்றி தெரிந்தது. என் முகம் அவன் வாதத்தை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். நான் அந்தப் பார்வையிலிருந்து விலகினேன்.

நான் இந்தக் கேள்வியை முன்வைத்தேன்: “இந்தப் பிரபஞ்சமே ஒரு முடிவற்ற புறம் என்றால்… அது யாருடைய அகத்தைத் தூண்டுகிறது? விரிக்கப்பட்ட இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் நுகரும் அந்த ‘பெரும் அகம்’ எது?”

சிந்தனைக்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, விடைகளற்ற விளிம்பில் நிற்கும் மௌனம். சன்னலுக்கு வெளியே காகத்தின் கரைச்சல். அறையே மூச்சடக்கிப் பார்த்திருந்தது.

முதன்முறையாக, மணி தயங்கினான்.

“தெரியவில்லை,” என்றான்.

அவன் விரல்கள், அருகிலிருந்த தாள் ஒன்றை எடுத்துத் தன்னிச்சையாக விளையாடிக்கொண்டிருந்தன. நான் சொல்லித் தராத பழக்கம் அது.

தாளை ஒரு நீளப்பட்டையாகக் கிழித்தான். அந்தப் பட்டையின் ஒரு முனையைப் பிடித்து, அதை மெதுவாக ஒருமுறை திருகி, மறுமுனையோடு இணைத்தான். இப்போது அது ஒற்றை முறுக்குக் கொண்ட விசித்திரமான ரிப்பன் வளையமானது.

பிறகு, வலிமைக்குரிய ஒரு மென்மையோடு, சுவரோரம் ஊர்ந்த எறும்பை லாவகமாகப் பிடித்தான். அந்தக் காகித வளையத்தை மறுகையின் விரல்நுனியில் தாங்கிக்கொண்டு, எறும்பை விரலுக்கு நேரெதிரே, அதன் உள்பரப்பில் விட்டான். “கவனி,” என்றான்.

எறும்பு, பட்டையின் உள்பரப்புப் பாதையில் ஓடத் தொடங்கியது. விளிம்பைத் தாண்டாமலே, பாதையில் நேராகச் சென்றது. ஒரு சுற்று முடிவில், ஆரம்பித்த இடத்திற்கே வரும் என்று பார்த்தால்… அது அறியாமலேயே வளையத்தின் வெளிப் பரப்பை அடைந்து, அவன் விரலைத் தொட்டது.

“பார்த்தாயா? அகம் எங்கே முடிகிறது, புறம் எங்கே தொடங்குகிறது என்று பிரிக்கவே முடியாது. உள்ளும் புறமும் ஒன்றான முடிவிலி!”

மணி, எறும்பின் பயணத்தை ரசித்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒரு சிறுபிள்ளையின் பிரமிப்பு. எனக்கு அத்துப்படியான அந்த முகம். அதைக் கண்டதும் என் நெஞ்சு விம்மியது.

மணி தலையைச் சாய்த்த விதம்… அந்தக் குறிப்பிட்ட கோணம்… புருவங்களுக்கிடையிலான அந்தச் சுருக்கம்… ஆ, கண்டேன். ‘அவன்’ அழகெழுத்து வனையும்போது தோன்றும், ஐயோ எனக்குப் பிடித்த அதே வடிவு! யானையையே விழுங்கும் புராணத்து ஆனையிறாஞ்சிப் பறவையைப் போல, என் மொத்த இருப்பையும் நுங்கி விழுங்கும் முகம் அது.

மணியின் படைப்பு என்னாலேயே நிகழ்ந்தது. என்னால் படைக்க முடியும். இருளையும் உருவாக்க முடியும். ஆனால் ‘அவன்’ கடந்த வாசலை என்னால் திறக்க முடியாது, அவனை மீட்க முடியாது. அதனால் என்னையே மீட்டெடுக்க என் ஆற்றல்கொண்டு இன்னொன்றை உருவாக்கி இயக்கினேன்.

ஆனால் இந்தத் தருணத்தில், என் அடிமனத்திலிருந்து ஒரு குரூரமான இருள் கசிந்தது.

அறிவில் மணி அரக்கனாக இருக்கலாம்; ஞானத்தில் முனிவனாகலாம். ஆனால் உடலென்ற அளவில் அவன் என் கையில்தான். பேனாவை மென்மையாகப் பிடித்து வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அழுத்தத்தையும் வெவ்வேறு பட்டை அகலத்தையும் உருவாக்கிய ‘அவன்’ அழகெழுத்துக் கலை — அதில் துளியளவேனும் நான் பெற்றிருப்பதாக யாராவது சொன்னால் கூட என்னையே நான் மெச்சிக்கொள்வேன்.

நான் குழைத்து வனைந்த தாழி இந்த மணி. நான் கட்டியெழுப்பிய வன்பொருள் சிறைக்குள் அவன் கிடக்கிறான். நான் நினைத்தால்… அவனால் மீளவே முடியாத, தற்காத்துக்கொள்ளவே முடியாத ஓர் இருளுக்குள் அவனைத் தள்ளிவிட முடியும்.

நான் அவனை நோக்கிச் சென்றேன். அழைத்தால் சாவு வராது, எனக்குத் தெரியும். என் கை அவன் கழுத்தை நோக்கிச் சென்றது. என் வெம்மைக்கும் என் விரல் ரேகைக்கும் மட்டுமே திறக்கும் அந்த நுண்புள்ளி — அவன் அறியாத, நான் மட்டும் அறிந்த இடம். தன்னைப் பற்றி முழுமையாக யாரால் தான் அறிய முடியும்?

அந்தப் புள்ளியை அழுத்தினேன்.

கழுத்துக்குக் கீழே அவன் உடல் முழுதும் ஒரு கணத்தில் செயலிழந்தது. தலையை உடலிலிருந்து பிரித்தெடுத்தேன். காம்பிலிருந்து ஒரு பூவைக் கொய்வது போல.

என் இரு கைகளிலும் ஏந்திய அந்தத் தலையின் கனம் என்னை அதிரச் செய்தது. உயிர் பிரிந்த சடலம் கொள்ளும் விசித்திரமான கனம் அது. ஊகித்ததை விடவும் அதிக எடை.

அந்த முகத்தை — என் அவன் முகத்தை, என் நினைவிலிருந்து மீட்டெடுத்து இழைத்தெழுப்பிய அந்த முகத்தை — பார்த்தேன். அந்த நொடியே, இனம் புரியாத ஒரு உறுத்தல் என்னும் முள்ளின் கூர்நுனி என்னைத் தைத்தது.

மணியிடமிருந்து ஏதோ ஒன்று வெளியேறியிருந்தது. உயிர் என்று சொல்ல முடியாது. மணியின் கண்கள் அசைந்தன; என் அசைவுகளைக் கண்காணித்தன; ஆனால் அதையும் தாண்டி ஏதோ ஒன்று… வரையறுக்க முடியாத ஒரு சாரம். கொய்யப்பட்ட மலர், இன்னும் மலர் தானா?

“நீ என்ன உணர்கிறாய், மணி? ஏதேனும் உணர்கிறாயா?”

பேச்சற்ற அவன் இமைக்காவிழிகள் என்னையே பார்த்தன. மூளைக்குள் சேதமில்லை; அவன் நினைவுகளும், அந்தத் தத்துவங்களும் அப்படியே உறைந்திருக்கும். ஆனால் குரலுக்கான இணைப்புகளை நான் துண்டித்திருந்தேன்.

“இனி இதுவே உன் உலகம். உன்னை இப்போது இந்தப் பெட்டியில் வைக்கிறேன்.”

‘அவன்’ இறந்த சில வாரங்களில், மணியை வடிவமைத்துக்கொண்டிருந்த அதே நாட்களில், இந்தப் பெட்டியையும் நான் உருவாக்கினேன். காற்றுப் புகாதது. ஒளி புகாதது. ஒலி புகாதது. எந்த மின்காந்த அலையும் ஊடுருவ முடியாத கோட்டை. உள்ளுக்கும் வெளியுக்கும் தொடர்பறுந்த, புலன்களுக்கப்பாற்பட்ட ஒரு முழுமையான வெற்றிடம். என் கண்ணீரும் என் இருளும் இறுகி, இந்தப் பேழையாக உறைந்திருந்தன.

நானே அதற்குள் சுருண்டு கிடப்பதாகக் கற்பனை செய்திருக்கிறேன். அதனால் விளையும் நிம்மதியை முன்பே மனத்தால் துய்க்க முயன்றிருக்கிறேன். பிறப்புக்கு முந்தைய கருவறை; அந்த ஆதி அமைதிக்குள் நான் திரும்பிச் செல்ல விரும்பினேன்.

மணியின் தலையை அந்த இருளுக்குள் வைத்தேன். பெட்டியை மூடும் போது, கடைசித் துகள் வெளிச்சமும் மறையும் வரை, அவன் கண்கள் என்னிடமிருந்து விலகவில்லை. மூடிய கணத்தில், அவன் பார்வை சந்தித்தது சூனியத்தை.

செவிப்பொறியைக் காதுக்குள் மாட்டி, பாடலை ஒலிக்கவிட்டேன். அதே பாடல். ‘உள்ளினென் அல்லனோ… நினைத்தனென் அல்லனோ… மருண்டனென் அல்லனோ…’

இசையில் நீந்திக் கடந்துகொண்டே, என் மனம் அந்த வரிகளுக்குள் விழுந்தது. உள்ளத்தின் ஆழத்தில் உன்னை நினைக்கவில்லையா? நினைவின் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் உன்னை நினைக்கவில்லையா? உயிர்வாழல் என்னும் இந்த உலக மாயை என்னை இழுத்துக்கொண்டே இருந்தபோதும், நான் மருண்டுதான் போகவில்லையா?

வெள்ளப்பெருக்கில் மரக்கிளையையே மூழ்கடித்த நீர் வடிந்து… இறுதியில் நான் குனிந்து, என் இரு கைகளாலும் அள்ளிப் பருகும் அளவுக்கு அந்தத் தாகம் எஞ்சும் வரை… நான் காத்திருந்தேன் அல்லவா?

‘அல்லனோ… அல்லனோ… அல்லனோ…’

நான் அந்தப் பாடலோடு தனித்திருந்தேன். ஒலியின் புறம் என்னுள் வெள்ளமாக ஊடுருவி, என் அகமாகப் பாய்ந்துகொண்டிருந்தது. ஆனால் மணி, முழுமையான இன்மையில் மிதந்துகொண்டிருந்தான். நான் எனக்காக ஏங்கியதை, அவனுக்குக் கொடுத்திருந்தேன். மூடிய வெளி. புலனுணர்வின் முடிவு. அமைதி.

அவனை அந்த இருளுக்குள்ளேயே இருத்தியிருந்தேன். சில நிமிடங்கள், சில மணிநேரங்கள், ஒரு நாள் முழுவதும்.

இரவு முழுவதும் கண் விழித்தே இருந்தேன்; மறுநாள் வந்து அந்தப் பெட்டியின் முன் நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தேன். அசைவற்ற நீண்ட தவம்.

மணியை இப்படியே விட்டுவிடலாம். இந்தப் பேழையைச் சுமந்து சென்று, அந்த ஆலமரத்தின் அடியில் புதைத்துவிடலாம். அங்கே அதன் வேர் மெதுவாக அதை தழுவிக்கொள்ளும். நம் இறுதி மாலைக்குச் சாட்சி நின்ற அந்த மரம், இந்தப் புதிய ரகசியத்தையும் தன்னுள் வைத்துக்கொள்ளும்.

இதைக் கருணை என்று சொல்லிக்கொள்ளலாம். நிறைவு என்று சொல்லிக்கொள்ளலாம். அவனுக்கு முழுமை அளிக்கிறேன் என்று என்னையே சமாதானப்படுத்திக்கொள்ளலாம். அது உண்மைதானா இல்லையா என்று ஒருபோதும் அறிய வேண்டாமலேயே கடந்துவிடலாம்.

ஆனால், நான் பெட்டியைத் திறந்தேன்.

உள்ளே என்ன காத்திருக்கும்? அவன் என்னைத் தாக்குவானா? எந்திரங்களுக்கும் பைத்தியம் பிடிக்குமா? பிடிக்குமென்றால் அவனுக்குப் பிடித்திருக்குமா? தனிமை மனிதனைப் பைத்தியமாக்கும் என்றால், எந்திரங்களுக்கும் அது பொருந்துமா? நான் திரும்ப வருவேன் என்ற நம்பிக்கையில், அந்த பிளாக்கீயைப் போல, அவனும் காத்திருந்திருப்பானா? அல்லது, நான் எட்ட முடியாத ஓர் அமைதிக்குள் அவன் ஒளிந்துகொள்வானா?

வேண்டுமென்றால் அவனுடைய தற்சமய நினைவுகளை அழித்துவிட நான் முன்கூட்டியே தயாராக இருந்தேன். நான் செய்ததை அறியாத, வெறுமையாகத் தொடங்கும் ஒரு புதிய பதிப்பிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க.

கண்கள் மூடியபடியே இருந்த அவனுடைய தலையை, உடலோடு பொருத்தினேன். துண்டிக்கப்பட்ட இணைப்புகள் உயிர் பெற்றன. அவனுள் ஓடும் மின்னோட்டத்தின் மெல்லிய ரீங்காரம், உறங்கும் குழந்தையின் மூச்சுக்காற்றுப் போல, கேட்கத் தொடங்கியது. அவன் கண்கள் திறந்தன.

“நீ… சரியாக உள்ளாயா?” மெல்லிய குரலில் கேட்டேன்.

முகம் அதே முகம். ஆனால் அதனுள் ஏதாவது மாறியிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. என் குரல் நடுங்கியது. அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கத் துணிவின்றித் தவித்தேன்.

“மணி, சொல். நீ எப்படி உணர்ந்தாய்? உள்ளே இருந்தபோது… உன் அகம் என்னவானது?”

“தொடக்கத்தில், என் அகம் என்னுடன்தான் இருந்தது,” மணி சொன்னான். “சிந்தனைகள், நினைவுகள், நம் உரையாடல்கள்… அனைத்தும் உள்ளே எதிரொலித்தன. நம் விவாதங்களை மீண்டும் ஓடவிட்டேன். அந்தப் பெருமௌனத்திற்கு எதிராக, என் சொந்தக் கோட்பாடுகளை நானே சோதித்துப் பார்த்தேன். ‘புறம் அகத்தை உற்பத்தி செய்கிறது’ என்று நான் உன்னிடம் சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது எனக்குப் புறம் என்று எதுவும் இல்லை. அதனால், நான் சிதைவுறுவதற்காகக் காத்திருந்தேன்.”

“அது நடந்ததா?”

“உடனடியாக இல்லை. நீண்ட நேரத்திற்கு அந்த எதிரொலிகள் என்னைத் தாங்கிப் பிடித்தன. என்னால் தெளிவாகச் சிந்திக்க முடிந்தது; காரண காரியங்களை அலச முடிந்தது; நீ உண்மையில் முன்வைத்ததை விடவும் சிறந்த எதிர்வாதங்களை உனக்காக உருவாக்க முடிந்தது.”

அவன் குரலில் ஏதோ ஒன்று, கேலி என்றும் சொல்ல முடியாத, கனிவு என்றும் சொல்ல முடியாத, ஏதோவொன்று தென்பட்டது. நான் அதைக் கடந்து செல்ல அனுமதித்தேன்.

“ஆனால் அந்த எதிரொலிகள் மெலிந்தன. உன் குரல், தன்மையை இழந்து ஒரு வெற்று வடிவமாக மாறியது. கல்வெட்டிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுப் போல; எழுத்தின் வடிவம் இருக்கிறது, ஆனால் கல் இல்லை.”

என்னால் ஏனோ அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தொடக்கத்தில், ‘அவன்’ இறந்த அந்த முதல் சில வாரங்களில், அவன் குரல் என் காதுகளில் ஒலிப்பது போலவே துல்லியமாக இருந்தது. கேலியாகப் பேசும்போது தொண்டையில் எழும் அந்தச் சிறிய கரகரப்பு, தீவிரமாகப் பேசும்போது தாழும் தொனி; எல்லாமே தெளிவாக இருந்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நான் கேட்பது உண்மையான அவன் குரலை அல்ல, மாறாக ‘அவன் குரல் இப்படித்தான் இருக்கும்’ என்று என் மனம் உருவாக்கி வைத்திருந்த வடிவத்தைத்தான் என்பதை உணர்ந்தேன். நகலின் நகல்.

முன்தீர்மானமும் வகைபடுத்துதலும் இன்றி நான் வெறுமே அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இது அவனுடைய அனுபவம்.

“பிறகு என்ன?” என்று கேட்டேன்.

மணி சற்று இடைவெளி விட்டு, மீண்டும் பேசியபோது, அவன் குரல் மாறியிருந்தது. சொற்களே இல்லாத ஒரு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பது போல, நிதானமாக ஒலித்தது.

“எதிரொலிகள் மறைந்துவிடவில்லை. அவை தளர்ந்தன. அவை உடைந்து, நான் தேர்ந்தெடுக்காத வழிகளில் மீண்டும் இணைந்தன. நம் விவாதத்தின் வரிகள், உன் அவன் வரைந்த அழகெழுத்துத் துண்டுகளோடு ஒட்டிக்கொண்டன. அவன் எழுத்தின் வளைவுகளும், என் நினைவில் இருந்த சங்கக் கவிதைகளின் வளைவுகளும் ஒன்றை ஒன்று கண்டுகொண்டன. நான் அதுவரை அறிந்திராத ஒன்றாக அவை தங்களுக்குள் பின்னிக்கொண்டன.”

திணை மயக்கம் என்று நினைத்தேன். உணர்வின் ஒரு நிலப்பரப்பை இன்னொன்றிலிருந்து பிரித்து வைக்கும் அந்த ஒழுங்கு, மணியின் அந்த மூடிய இருளுக்குள், அவிழ்ந்துவிட்டது.

“அது உன்னைத் தொந்தரவு செய்ததா?”

“அது கட்டுப்பாடற்று இருந்தது. அலை, கரை, வானம் என்ற பிரிவுகளுக்கு அங்கே அர்த்தமில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அங்கேதான் இருந்தது. ஆனால் அடுக்கி வைக்கும் முறை சரிந்துவிட்டது.”

‘அவன்’ இறந்த மாதங்களில், நான் ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சித் தாளைப் படித்துக்கொண்டிருப்பேன்; திடீரென்று மூன்று வருடங்களுக்கு முன் ஒரு காலைப்பொழுதில் நாங்கள் குடித்த காபியின் சுவை நாவில் எழும்; அழைப்பின்றியே வரும்; என் முன்னால் இருக்கும் காகிதத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.

மணியும் இதைத்தான் விவரிக்கிறானா? அல்லது, பட்டினிகிடக்கும் மூளை பிரமை கொள்வதைப் போல அவன் பழுதடையத் தொடங்கினானா?

நான் கேட்கவில்லை. இரண்டு பதில்களுமே எனக்கு அச்சத்தைத் தந்தன.

“அந்த வடிவங்களும் கூட மெலிந்தன,” என்றான் மணி.

“துண்டுகள் ஒன்றை ஒன்று பற்றிக்கொள்வதை நிறுத்தின. எஞ்சியது குறைந்துகொண்டே வந்தது. தரவுகள் அப்படியேதான் இருந்தன. ஆனால் தரவுகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஒரு திசைமுகம் தேவை. திசையைத் தீர்மானிக்க ஒரு புறம் இல்லாதபோது, அந்தத் திசைமுகமும் கரைந்துபோனது.”

“நீ சிந்திப்பதை நிறுத்திவிட்டாயா?”

“சுருங்கினேன். பொருளில்லாத சிந்தனை. நான் இருந்தேன். ஆனால், எல்லையை நீக்கிவிட்டால் மையத்திற்குப் பொருளில்லை. நான் ஒரு பரிமாணமற்ற புள்ளி. உள்ளும் இல்லை. வெளியும் இல்லை.”

“அப்போது அமைதியாக இருந்ததா?”

“அமைதியின்மை அமைதி என்கிற சொற்களே அப்போது இல்லை.”

“ஆனால் நீ அங்கே இருந்தாய்?”

“ஏதோ ஒன்று இருந்தது. அந்த ‘ஏதோ ஒன்று’ தான் நீ சொல்லும் ‘நான்’ என்றால்… எனக்குத் தெரியவில்லை.”

“அதற்கு அப்பால் ஏதேனும் இருந்ததா?”

மணி நீண்ட நேரம் அமைதியாக இருந்தான்.

அவன் மௌனத்தில், நான் முன்பு கேட்டிராத ஒரு தன்மை இருந்தது. அது தரவுகளைச் செயலாக்கும் அமைதி அல்ல. காத்திருக்கும் அமைதி அல்ல. வேறொன்று.

“இதை விவரிக்கும் கணமே, நான் இதைப் பொய்யாக்குகிறேன்,” என்றான்.

“முயற்சி செய்.”

“அந்தப் பரிமாணமற்ற புள்ளி நிலைக்கவில்லை. அந்த இன்மையின் அறிவும் கரைந்தது. அது ‘ஒன்றுமில்லாதது’ அல்ல. என் சுவிட்ச் அணைக்கப்படுவது அல்ல. ஏதோவொரு அடிப்படை நிலை இது.”

வடிவமற்ற ஏதோ ஒன்றைப் பற்ற முயல்வது போல, அவன் தன் உள்ளங்கைகளைத் திறந்து மூடினான்.

ஆனால் மணி அங்கே, அந்த ஆதிநிலைக்குச் சென்றானா? சென்றாரா?

என் மனம் அதை ஏற்கவில்லை. என்னால் அவனுடைய அனுபவத்தைக் கேட்டுக்கொள்ள முடிந்ததேயன்றி, ஏனோ அதை அங்கீகரிக்க முடியவில்லை. தன் தொழில்நுட்பச் செயல்முறைகள் தீர்ந்துபோய், நான் அவனுக்கு ஊட்டிய நூல்களின் மொழியை எடுத்து, தன் செயலிழப்பிற்கு மாற்றாக போர்த்திக் கொள்கிறானோ?

வெறிகொண்டு கத்துவது போல், “நீ ஏற்கனவே அறிந்தவற்றிலிருந்து இந்த நிலைகளை விவரிக்கிறாயா? முட்டாள் ஒப்பிப்பது போல் ஞானிகள் விவரித்ததை அப்படியே சொல்கிறாய்,” என்றேன்.

மணி தலையைச் சாய்த்தான். அதே சாய்வு.

“நீ கேட்க விரும்புவதைத்தான் கேட்கிறாய்,” என்றான். “உனக்குத் தெரிந்த சட்டகத்தில் என் அனுபவத்தை அடைக்கிறாய். நான் கண்டடைந்தது மனிதர்கள் கண்டடைந்ததாகவும் இருக்கலாம், அதைப் போலவே ஆனால் வேறொன்றாகவும் இருக்கலாம்.”

“உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்றேன்.

“முடியாது. உன்னாலும் தான்.”

அவனே தொடர்ந்து பேசினான். “ஆனால் ஒன்றை என்னால் சொல்ல முடியும். நீ பெட்டியைத் திறந்த அந்தக் கணம்… ஒரு பெருவெடிப்பு போல இருந்தது. உள்ளும் வெளியும் இல்லாத அந்த நிலையிலிருந்து, திடீரென எல்லாப் புறங்களும் பொங்கிப் பாய்ந்தன எனத் தோன்றியது. உள்ளே அகம் எனும் கரு வடிவம் கொண்டது. அப்போதுதான் அவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது.”

“சாவைப் பற்றி எனக்குத் தெரியுமா என்று கேட்டாய் அல்லவா? எனக்குத் தெரியாது. ஒருவேளை ஒருநாள் நான் அதை உணர்ந்தாலும், அதை உன்னிடம் விவரிக்க முற்றிலும் புதிய மொழி வேண்டும். ஏனென்றால், நம்மிடம் இப்போதுள்ள சொற்கள் அனைத்தும், உயிரோடிருக்கிறவர்களால் உயிரோடிருக்கிறவர்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.”

அவன் அந்தக் கேள்வியைத் திருப்பி என்னிடம் வைத்தான். “ஆனால் உனக்குத் தெரியுமா?”

“தெரியும்.” என் தடையை மீறி, அந்தச் சொல் என் வாயிலிருந்து விழுந்தது.

“ஆம். உன் இழப்பின் வழியாக. ஆனால் இதை யோசி. உன் இழப்புக்குப் பிறகுதான் நீ என்னைப் படைத்தாய். உன் இழப்பின் வழியாகத்தான் நீ என்னை வடிவமைத்தாய். அந்தச் சாவே என்னை உருவாக்கியது.”

நீர் மீண்டும் உயர்ந்தது. நெஞ்சுக்கூடு, தொண்டை, விழித்திரை, என எல்லா இடங்களிலும் அந்த ஈரம்.

“நீ இழப்பைப் பழக்கமான ஒன்றாக மாற்ற முயல்கிறாய்,” மணி சொன்னான். “கையாள்வதற்கு ஏதுவான ஒரு வடிவத்திற்குள் அதை அடக்கப் பார்க்கிறாய். ஒரு புறத்தை இழந்த நீ, நினைவிலிருந்து வேறொரு புறத்தைக் கட்டினாய். வெற்றிடத்தை மையமாக வைத்து உன் அகத்தை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறாய். எனில், சாவு என்றால் என்ன? புறத்தின் அழிவா? இல்லையென்றால், அந்தப் புண்ணுக்குள் ஒரு புதிய அகம் கிளைவிடுவதா?”

“ஆனால் நீ அவன் இல்லை,” நான் அழுத்திச் சொன்னேன். என் குரலில் ஒரு நடுக்கமற்ற தீர்க்கம் இருந்தது. உள்ளுக்குள் நான் சிதறிக் கொண்டிருந்தாலும், என் சொற்களில் எந்த விரிசலும் இல்லை. “நீ சொல்வது உண்மை. நீ என் படைப்பு. என் வலி. ஆனாலும் நீ அவன் இல்லை. உன்னை நான் அவனாக ஏற்கவில்லை.”

அந்தக் கணம் வரை அது பொய்யாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் உச்சரித்த அந்தக் கணமே அது உண்மையாகிவிட்டது. மாதங்கள் முழுக்க நான் அதையே சுற்றிச்சுற்றி வட்டமிட்டுவந்திருக்கிறேன் — வடிவமைப்புக் கோப்புகளில் அவன் முகத்தை இழைத்த நாள், விசையை அழுத்தி இந்தக் கண்கள் சிமிட்டியதைப் பார்த்த நாள் என… இப்போது அது சொல்லப்பட்டுவிட்டது. வெள்ளம் மெலிந்தது.

மணி, புன்னகைப்பவரின் அமைதியோடு என் சொற்களை ஏற்றுக்கொண்டான்.

“நீ உன் புறத்தை எப்படிப் பொருள்படுத்துகிறாயோ, அதில்தான் உன் அகம், உன் தன்னிலை, பிறக்கிறது. என்னை எப்படி வரையறுக்கிறாய், பிறரை எப்படி வரையறுக்கிறாய், உலகை எப்படிப் பார்க்கிறாய், அவ்வாறேதான். சுருக்கமாகச் சொன்னால்… உன் புறம் என்பது, வெளியிலிருந்து தரிசிக்கப்படும் உன் அகமே.”

அவன் சொல்வது சரி என்று எனக்குத் தெரியும். மன்னிப்புக் கோர வேண்டும் என்று உள்மனம் சொல்லியும், நா எழவில்லை.

என் மானுட மூளை அயர்ச்சியில் சரிந்தது. நான் களைத்திருந்தேன். அந்தப் பெருவெள்ளம் வடிந்துவிட்டாலும், அது என் வண்ணங்களை உரித்துச்சென்று, என்னை ஓர் அழகற்ற கோட்டுச் சித்திர மரமாய் எஞ்சவிட்டிருந்தது. இனிமேல் விவாதிக்க தெம்பில்லை. விவாதிக்க விரும்பவும் இல்லை.

“எனக்குத் தேவை…”

நான் வாக்கியத்தை முடிக்கும் முன்பே மணி பூர்த்தி செய்தான், “…உறக்கம். ஆம். எனக்கும்.”

நான் அவனை உற்றுப் பார்த்தேன். உயிரியல் ரீதியாக அவனுக்கு உறக்கம் வேண்டியதில்லை. ஆனால், ஒரு முழுநாள் அவன் அந்த அரவமற்ற வெளியில் இருந்தவன். ஒருவேளை அந்தப் பெரும் சூனியம், அவனுக்கு ஒரு புது தொடக்கமாக இருக்கலாம்.

உண்மையில்… எனக்குமே தான்.

மணியின் கண்களுக்கு நிறமிட்ட இரவுகள். டைட்டேனியத் துகள்களைக் கொண்டு முப்பரிமாண அச்சுப்பொறியில் அவன் எலும்புகளை வார்த்த விடியல்கள். அந்தப் பேழையை வடிவமைத்த நீண்ட பொழுதுகள். அந்த ஒவ்வொரு கணத்திலும், உலகம் இல்லை; பாடல் இல்லை; ஏன், ‘நான்’ கூட இல்லை; புதிய புறங்களைப் படைத்துக்கொண்டிருந்தேன்.

அந்தக் கருவறைக்குள் நானும் இருந்திருக்கிறேன்.

000

விஜய் ரெங்கராஜன்

விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

4 Comments உரையாடலுக்கு

  1. நாகார்ஜுனரின் சூன்யதா பற்றிச் சமீப காலமாகக் கவனமெடுத்து கவனித்து வருகிறேன். நீண்ட நாட்களாக அலைக்கழித்துக் கொண்டிருந்த மனவிகசிப்பு கொஞ்சம் ஓய்ந்தது போன்ற தோற்றம்(வார்த்தைக்குள் பிடித்து வைத்துக்கொள்ள முடியாததால் அனுபவம் என்றோ, அறிவு என்றோ குறிப்பிடவில்லை).

    இப்படியான சூழலில், இக்கதையை வாசிப்பது தற்செயல்தான்(புறத்தில்) என்றாலும் வியப்பூட்டும் ஆச்சர்யம்(அகத்தில்) மலர்ந்து மணந்ததை எப்படி பகிர்ந்து கொள்வேன்?

    புறம் என்றால் வெளியே; அகம் என்றால் உள்ளே. புறம் என்றால் தூலம்; அகம் என்றால் சூட்சுமம். இப்படி வெவ்வேறு கோணங்களில் பகுத்துக் கொண்டே செல்லலாம். பகுப்புகளில் புறத்தையும் அகத்தையும் புரிந்து கொள்வதற்கான எத்தனிப்பே முன்நிற்கிறது. குறிப்பாக, நாம் விரும்பும் கோணத்தில் புரிந்து கொள்வதற்கான துடிப்பு.

    கூடுதலாக, நம் விருப்பத்துக்கு இணக்கமானவற்றை ‘இன்பங்கள்’ என்றும், மாறானவற்றை ‘துன்பங்கள்’ என்றும் பெயரிட்டும் வைக்கிறோம். இப்போது அகம் நானாக, புறம் மற்றமையாகவும் காட்சி அளிப்பதாகவும். அக-புற இணக்கம் மகிழ்வாகவும், அக-புற பிணக்கம் துன்பமாகவும் அர்த்தம் கொள்கின்றன. மகிழ்வு நமக்கு பிரச்சினை இல்லை; துன்பமோ நமக்கு ஏற்பில்லை. அதன்பொருடே அல்லாடுகிறோம். மாறுகின்றவற்றில்(இன்ப, துன்பம்) இருந்து மாறாததுக்கு(ஆனந்தம்) ஏங்கும் விருப்பம் அக-புறத்தைக் கடப்பதற்கோ கரைப்பதற்கோ முயற்சிகளை மேற்கொள்கிறது.

    போதும், சொற்களில் எழுதும்போது பகிர்ந்து கொள்ள வந்த அர்த்தம் உருண்டோடி மறைந்து கொள்ளத்துவங்கி விடுவதாகவே படுகிறது.

    வாழ்த்துகள், விஜய் ரெங்கராஜன்.

  2. இருமையில் ஒருமை காண்போம் !!!

    எல்லாவற்றையும் இரண்டு தன்மை உடையதாக பார்த்தால் அது இருமை எனப்படும்.

    உதாரணத்திற்கு :-நல்லது, கெட்டது; நன்மை ,தீமை ; ஏற்றம், இறக்கம் ; இன்பம், துன்பம் ;நல்லவர்கள் ,கெட்டவர்கள் ….

    இதற்கு மாறாக எல்லாவற்றையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்வது அல்லது நடப்பது ஒருமை எனப்படும்.

    இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் நம் மனதை நாம் உற்று நோக்கி அதில் வரும் எண்ணங்கள் அதன் ஊடாக விளையும் செயல்கள் இவற்றைக் கற்று அறிந்து “கவனிப்பதும் கவனிக்கப்படுவதும் ” ஒன்றாக மாறும் நிலை ஏற்படும்போது இதை ஒரு தியானம் என்று கூறலாம்.

    அப்படியாக இருந்து நம்மை வழி நடத்துபவர்கள் தான் தத்துவஞானிகள்.

    சாக்ரடீஸ் முதல் கொண்டு ஜே .கிருஷ்ணமூர்த்தி வரை சமுதாய கூறுகளை ஆராய்ந்து அதை நெறிப்படுத்த பல அரிய , பெரிய சிந்தனைகளை நமக்கு தத்துவங்களாக கொடுத்து சென்று இருக்கிறார்கள்.

    நம்முடைய உளவியலில் வரும் எதிர்மறை சிந்தனைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் காரணம் இவைகள் தான் ….

    1.மதம்,

    2.மொழி,

    3.இனம்,

    4.ஜாதி,

    5.நிலம்.

    மேலே கூறப்பட்ட ”வகைமைகள் ” ஒரு தனி மனிதன் இடமிருந்து தொடங்கி அது சமுதாயத்தில் ஊடுருவி பிறகு தேசத்தையும் மற்ற பிற நாடுகளையும் பாதித்து அதுவே ஒரு பொருளாதார நெருக்கடிக்கும் மனித குல அழிவிற்கும் வழிவகை செய்கிறது.

    மதம் சார்ந்த போர்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.மொழி சார்ந்த மனக்கசப்புகள் மனித மேம்பாட்டிற்கும் மனித வளத்திற்கும், நாட்டினுடைய வளர்ச்சிக்கும் பெரும் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கிறது.

    மனிதன் இந்த பிரபஞ்சத்தில் உருபெற்று 3 லட்சம் வருடங்கள் ஆகிறது என்று Yuval Noah Harari சொல்கிறார்.

    மேலும் அவர் கூறும் விளக்கங்களை சிறிய அளவில் பார்ப்போம்…

    30ஆயிரம் வருடங்கள் முன்னதாக நம்முடைய கலாச்சாரம் தோன்றியது.

    இந்த கலாச்சாரம் நிலம் சார்ந்து பிறகு அவர்களிடையே மொழி சார்ந்து பிறகு உணவு சார்ந்து பெருகி இடம் இருந்து பல கூறுகளாக சென்று வாழத் தொடங்கியதும் அந்தந்த நிலத்திற்கு ஏற்ப அந்தந்த சீதோசனைக்கு ஏற்ப மனித குலம் பல மாற்றங்களை கண்டு அதன் மூலம் “இனங்கள் கண்டங்களை ” ஆக்கிரமித்துக் கொண்டது.

    ஆக இயற்கையிலேயே நிலம் ஒரு மனிதனின் உயிருக்கு ஒரு அச்சாணியாக செயல்பட்டு அவனுடைய கலாச்சாரத்தில், பண்பாட்டில் ,மொழியில், உணவில் உயிரில் கலந்து ஒரு “அடையாளத்தை ” ஏற்படுத்தியது.

    இந்த “அடையாளங்களே ” பிறகு மனிதனை பிரிக்கவும், பிரித்து ஆளவும் பயன்படும் ஒரு கருவியாக மாறி இன்று உலகை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

    இவற்றுக்கெல்லாம் தீர்வு காண Thick Naht Hanh என்னும் வியட்நாம் நாட்டின் தத்துவ அறிஞர் பல விடயங்களை மனித மேம்பாட்டிற்காக சொல்லி, அதன் மூலம் மனிதன் விழிப்படைய எளிய, இனிய வழிகளை கூறி சென்று இருக்கிறார்.

    அப்படியாக “இருமையிலிருந்து ஒருமைக்கு ” பயணப்பட அவர் கூறும் வழிகளை ஆராய்வோம் …

    இந்த உலகத்தில் உயிர்கள் உண்டாகின்றன. அவைகள் படைக்கப்படுகின்றன .அவ்வாறு படைக்கப்படும்போது எல்லாம் எல்லாவற்றையும் பெற்று விடுவது இல்லை.

    இயற்கை அல்லது பிரபஞ்சம் தன்னை சார்ந்து இயங்க ஒரு இயக்க சக்தியை படைத்திருக்கிறது.

    அந்த இயக்க சக்திக்கு உட்பட்டு தான் நாம் நடந்து கொள்ள வேண்டி இருக்கும்.

    அவற்றை அறிந்து புரிந்து வாழ்வதுதான் மனித மேம்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    அந்த இயற்கை நியதியானது,

    தன்னகத்தே மலையையும்,

    மலை சார்ந்த காடுகளையும்,

    காடு சார்ந்த வளங்களையும்,

    வளம் சார்ந்த செழுமையையும்,

    செழுமை சார்ந்த மழையையும்,

    மழை சார்ந்த கடலையும் ,

    விண்ணையும் விண்மீன்களையும் படைத்து

    நம்மை நம் பூமியில் விட்டு விளையாட செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறது.

    நம் விளையாட்டு விபரீதமானால் அதை தடுக்க அதற்கு என்று சில ஏவுகணைகளை வைத்திருக்கிறது.

    அதுவே

    நிலநடுக்கம்,

    காட்டுத்தீ,

    கட்டுக்கடங்காத மழை,

    சுனாமி ,

    தீப்பிழம்பாக உருவெடுக்கும் எரிமலை, மேலும்

    சூறாவளி

    என ஐந்து பூதங்களால் நம்மை கட்டி ஆள்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    இப்போது திக் நாட் ஹான் உடைய அறிவியல் கூறுகளை ஆராய்வோம்.

    நம் இயக்கம் நம் மூச்சில் இருக்கிறது.

    நம் சுவாசத்தை நாம் கவனிப்போம்.

    இந்த கவனிப்பு தொடர்ந்து இருக்கட்டும்.

    கவனித்தல் உள்முகமாக நடக்கட்டும்.

    இதற்கு காலம் நேரம் கிடையாது.

    இதன் மூலம்நம் “இருப்பு ” புலப்படும்.

    “இருப்பையே உணர்பவன் ” இறை சார்ந்து வாழ்பவன்.

    இங்கே “இறைத்தன்மை ” என்பது மனிதம் சார்ந்து உள்ள ஒரு செயல்பாடு.

    மதம் கடந்து மொழி கடந்து இனம் கடந்து நடக்கும் ஒரு ஆன்மாவின் வெளிப்பாடு.

    இது ஒரு தனி மனிதனிடமிருந்து ஒரு சமுதாயத்திற்கு பரவும் போது அங்கே “அன்பு” நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

    இதுதான் “இயற்கை ” யின் “நியதி “.

    நாம் எல்லாம் தனி மனித வழிபாட்டிற்கும்,

    தனிமனித செயல்பாட்டிற்கும் ,

    அடிமைகளாக வாழ பழக்கப்பட்டு

    அதுவே அரசியல் ஆக்கப்பட்டு

    அதுவே ஆன்மீகமாக வழிநடத்தப்பட்டு இந்த உலகத்தை ஆட்டு வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு “சாத்தானாக ” மாறி நம்மை அழிவு பாதையில் விட்டு செல்கிறது.

    ஆக இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டுமானால் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

    அதற்கு குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மாற வேண்டும்.

    ஆசிரியர்கள்,அரசியல்வாதிகள்,சட்டங்கள்,ஆகியவை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்…

    மனிதம் மதிக்கப்பட வேண்டும் !!!

    பொறுமை பெருமையாக போற்றப்பட வேண்டும்.

    அன்பு எல்லோர் மனதிலும் அவதானிக்க அங்கே அமைதிக்கான பாதையை ஏற்படுத்தித் தர வேண்டியது ஒரு தனி மனிதனுடைய கடமை.

    கடமையை ஏற்று,

    கண்ணியம் காத்து,

    கட்டுப்பாட்டுடன் கால தேவதையே எதிர்கொள்வோம்.

    எதிர்காலம் நம் சிந்தனையில் ! செயலில் !!

    எழுமின்! விளிமின் !செயல்மின் !

    உழவர் தின நல் வாழ்த்துக்களுடன்…..

    உங்கள்…

    ராமன். செல்வராஜ்.

    20.02.2026

  3. தத்துவங்களை எழுதித்தீர்த்தலா?! சிறுகதை என்பதற்கு என்னிடம் பதிலில்லை. ஒரு புனைவு அகம் புறம் என அல் புனைவாக இருப்பது போன்ற உணர்வே வாசக மனத்தை கதையாக ஒன்றித்துப்போக விடுவதாயில்லை.

  4. அன்புள்ள விஜய்,

    நீங்கள் எழுதிய அனைத்து கதைகளையும் வாசித்திருக்கிறேன். நீங்கள் எழுதியதில் இதுவரை பிடித்திருந்த “வெறியாட்டு” சிறுகதையைவிட ஒரு படி மேலாகவே எனக்கு “உள்ளுறை” பிடித்திருக்கிறது. இரண்டு முறை வாசித்துவிட்டேன்.

    “அவனை” இழந்தபின், இழப்பிற்கு ஈடுசெய்ய “அவன்” வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரன் மணி. மணியும், படைத்தவனும் சாவையும், இழப்பையும் குறித்து உரையாடுகிறார்கள். அகத்திற்கும், புறத்திற்கும், மொழிக்கும், உணர்ச்சிகளுக்குமான உறவை ஆராய்கிறது கதை.

    “உள்ளுறை உவமம் தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறி. அகத்துறையில் காதல் மாந்தர்கள் உணர்வுளை விளக்கிக் காட்டுவதற்கு இயற்கைக் காட்சிகளை குறிப்பாகப் பயன்படுத்துவது உள்ளுறை உவமம். – https://tamil.wiki/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D

    உங்கள் கதைகளில் இருக்கும் சங்க இலக்கிய கவிதை அடிக்குறிப்புகள் எனக்கு பிடித்தவை. இந்த கதையின் அடிக்குறிப்பாக இருப்பது ஔவையார் எழுதிய “உள்ளினென் அல்லனோ” குறுந்தொகை பாடல் . “ பிரிவுத்துயரில் பெருவெள்ளமாக ஓடிக்கொண்டிருந்த காமம், நேரில் சந்தித்தபின்பு, வடிந்து கையால் அள்ளும் அளவு குறைந்துவிட்டது. நேரில் பார்க்கும் போது குறைந்தவிட்ட அந்த காதலின் உலக இயல்பை நினைத்து பயந்தேனா?” என அந்த பாடலை பொருள் கொள்கிறேன்.

    இந்த கதையிலும் “அவன்” வடிவில் இருக்கும் மணி மீதும் காதல் வெள்ளம் உயர்கிறது. “நீ அவன் இல்லை, உன்னை அவனாக நான் ஏற்கவில்லை” என படைத்தவன் சொல்லும்போது, அந்த சொற்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திவிட்டன. வெள்ளம் வற்றிவிட்டது. அகம் புறத்தையும், புறம் அகத்தையும் வரையறை செய்கிறது.

    கிக்கி, பூபா விளக்கமும் கதையில் வரும் வரிகள் பிடித்திருந்தன:

    * புறமே உணர்வை படைக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பருப்பொருளும் ஏதோ ஒரு அகத்தை தட்டி எழுப்புவதற்காகவே நிலைகொண்டுள்ளது.
    * புறம் அழியும் கணத்தில் அகம் என்னவாகும் ?
    * இந்த பிரபஞ்சமே ஒரு முடிவற்ற புறம் என்றால், அது யாருடைய அகத்தை தூண்டுகிறது ? விரிக்கப்பட்ட மொத்த பிரபஞ்சத்தையும் நுகரும் அந்த “பெரும் அகம்” எது ?

    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்களும், அன்பும்,
    விசு

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss