பரங்குன்றத்து ஆலம் பழுப்பு வீழ்ந்த நிலமும் நீரும் : லாவண்யா சுந்தரராஜன்

ந. ஜயபாஸ்கரன்

கவிஞர் ந. ஜயபாஸ்கரனின் கவிதைகள் எனக்கு 2019 காலகட்டத்தில் அறிமுகமானது. காலச்சுவடு இதழில் ‘ஊனப்பட்ட விளக்கின் தனிமை பிரத்தியேகமானது’ என்று தொடங்கும் கவிதையும் அதோடு அவர் எழுதிய சில கவிதைகள் வெளியாகியிருந்தன என்று நினைக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது வெங்கல வணிகத் தெருவில் உலாவுவது போலொரு அனுபவம் கிடைத்தது. கவிஞர் கவிதைகளை வெங்கல கடைக்குள் அமர்ந்து எழுதி இருப்பாரோ என்று குழுவில் பகிர்ந்து கொண்டேன். தோழி ஸ்வாதி முகில் அவர் வெங்கலப் பாத்திரக்கடைக்குள் அமர்ந்தே கவிதைகளை எழுதுகிறார் என்று சொன்னார். ஆச்சரியமாக இருந்தது, கவிஞர் உணர்ந்த அதே அனுபவத்தை கவிதை வாசிப்பவரும் உணர்வது இயல்பானது. அதற்காகவே கவிதைகள் எழுதப்படுகின்றன. ஆனால் எழுதிய சூழலும் அதில் படம் பிடிக்கப்பட்டிருந்தது அபூர்வமானது. அதன் பிறகு தான் நான் கவிஞர் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இதுவரை ஏழு தொகுப்புகள் வெளியாகியிருக்கும் கவிஞர் ந. ஜயபாஸ்கரன் எழுதிப் பிரசுரமான முதல் கவிதையின் வயது வரும் ஆண்டில்(2027) 60 ஆண்டுகள் ஆகிவிடும். கவிதையுள் 60 ஆண்டு காலம் இயங்குவது பெரும் சாதனையே. அரை நூற்றாண்டைத் தாண்டி அடுத்த தசாப்தத்தில் வெளியிட வேண்டி எட்டாம் தொகுப்புக்கான கவிதைகளையும் கைவசம் வைத்திருப்பதாக அறிகிறேன். அவருக்கு என் வணக்கங்கள். இந்த அறுபதாண்டு பயணத்தில் கவிஞர் ந. ஜயபாஸ்கரன் தனக்கான தனி பாணியொன்றை தொழிற்படுத்தியிருக்கிறார்.

வாழ்க்கை

‘எழு குளிறு மிதித்த 
ஒரு பழம் போல’

குழைந்து
சிதைந்து
சிதறுகிறது

கவனத்துக்கும்
உதாசீனத்துக்கும்
அப்பால்

அவர் அதிகம் வாசிக்கிறார். அதில் தன்னை பாதித்த வரிகளை ( எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறுந்தொகையில் வரும் வரி), கதையை தன் கருத்தோடு இணைத்து அதற்கு இன்னொரு வடிவை, பொருளை, உயிரைக் கொடுக்கிறார். பலர்க்கும் தெரிந்த கதைகளை, கதைமாந்தர்களை உள்புதைத்து இவர் எழுதுபவை புதுவிதமான நவீன கவிதைகள். இவற்றுள் காட்சியும்(வெண் பூண்டு தொலி குமிந்திருக்கும் கடைத்தெருவை பாற்கடல்/பிரளய பெருவெள்ளமெனக் காட்டுவது) இருக்கும். சில இடத்தில் ஓவியத்தின் பகுதியை (பால சரஸ்வதியின் அபிநய லாவண்யம் அந்தர மலராய் உறைந்து நிற்கிறது) வரைந்து மீதியை நீங்களே வரைந்து கொள்ளுங்கள் என்ற கற்பனைக்கு இடம் தரும் இடைவெளி இருக்கும். சில கவிதைகளில் வெறுமனே புள்ளிகளை வைத்து விட்டு இணைத்துப் பார்த்துக் கொள்வது உங்களது சாமர்த்தியம் என்று சவால் தன்மையிருக்கும். சில கவிதைகளில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் கதையை, சம்பவத்தை அல்லது கதாப்பாத்திரத்தை தேடிப் போய் இன்னும் சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள திறனாய்வு செய்ய வழி வைத்து எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலான கவிதைகள் அளவில் சிறியவை. ஆனால் அது கொண்டிருக்கும் அடர்த்தி வியத்தகு விதமானவை.  

எதிரெதிராய் இயங்கும் இருமுனைகளை ந. ஜயபாஸ்கரனின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. அந்த முனைகள் எப்போதும் இருதிசைகளை நோக்கியிருக்கின்றன. அதே நேரத்தில் அவை ஒற்றைப் பொருளாகவும் இருக்கின்றன.

வறட்சியின்
எல்லையில்

‘எனது பாத்திரம்
நிரம்பி
வழிகிறது’

யாருக் காக

எதற்காக
வும்

அவருடைய கவிதைகள் சங்க, பக்தி இலக்கியத்தின் தொடச்சியாகவும் அதே சமயம் நவீன கவிதையுலகின் வார்ப்பாகவும் இயங்குகிறது.  அதெப்படி சாத்தியமாகுமென்றால் அவரே கவிதையுள் காட்டியிருக்கும் தொன்ம கதையொன்றிலிருந்து இது வியப்புக்கு அப்பாற்பட்டதென்று காட்டி விட முடியும். திருப்பரங்குன்றத்து சரவணப் பொய்கையில் நக்கீரர் ஞானம் பெற பூதம் உதிர்த்த பழுத்த ஆலிலையின் நீரில் விழும் பகுதி மீனாகவும் நிலத்தில் விழும் பகுதி பறவையாகவும் மாறும் தொன்மக் கதையைத் துணைக்கிழுத்து இதனை விளக்கி விடலாம். அது போதாதென்றால் நம்மாழ்வார் ஞானம் பெற்ற ஆழ்வார் திருநகரியின் உறங்காப்புளி மரத்தையும் உடனழைக்கலாம். தற்போதம், ஞானம் பெறும் வழிகளில் இடைப்படும் வியாபாரம், இலக்கியம் இரண்டும் கொடுத்த பித்துநிலையால் பிசைந்தாக்கப்பட்டது ந. ஜயபாஸ்கரன் பாணி கவிதைகள். அவை கையாள்வதெல்லாம் யுக நூற்றாண்டுகளாய் கலை மனம் சூடிக்கொள்ளும் தனிமை. அதை வெளியே விரட்ட அகமனம் தனக்குத் தானே பூசிக்கொள்ளும் எல்லா அரிதாரமும் அவர் கவிதையுலகமாகிறது.

‘என்னகத்து நின்னுரு
கண்முண் மிளிரும்
கயிற்றரவு’

அரவு தீண்டாத
விஷக்கடி

விறுவிறுப்பு

ஆயுள்
வரை

கவிதை பாணியில் எதிர் துருவ வகைமையைக் கையாளுவதாலோ என்னவோ ந. ஜயபாஸ்கரன் முதல் தொகுப்பே அர்த்தநாரி. ஆண் பெண் ஒரே வாழ்க்கையின் இருபாதிகளெனில் அவ் வாழ்க்கையின் பாடுகள், அது கொணரும் சிக்கல்கள், சொல்லித் தீராத புராண இதிகாசக் கதைகள் என்றே நீள்கிறது. அடுத்த இரு தொகுப்புகள் ’அவன்’ அதற்கு எதிர் முனையாய் ’அவள்.’ அவன் தொகுப்பில் மாணிக்கவாசகர், நம்மாழ்வார் ஆகிய பராங்குச நாயகி, ஆண்டாள், காரைக்கால் அம்மை ஆகியோர் தேடிய இறைவன், மேலும் அவர்கள் கடவுள் மீது கொண்டிருந்த பித்துநிலை, பிறழ்ந்த மனநிலையில் தங்கள் தெய்வத்தைக் கண்டடையும் தருணம் இவை யாவும் விசித்திர சித்தமாய் விரிகிறது. அந்த கவிதைகளை ஊழ்வினையறுத்து மெய்ஞானம் தேடும் கவிதைகள் என்றும் பகுக்க முடியும். ‘அவள்’ தொகுப்பில் எமிலி மீதான காதல் பெரிதாய் வளர்கிறது. பிற கவிதைகள் பல இருந்தாலும் எமிலி அவள் கவிதைகளில் உயிர் உருக்கி விளைந்த கவிதைகள் பக்தி இலக்கிய வகைமையே. ‘கண்ணாடிக் குவளைக்குள் மிதக்கும் கண்கள்’ அது ‘அருந்தும் ஜீவரசம்’ நிகழுமிடமோ ‘அந்நிய மண்ணில்’ நிகழும் காலம் ‘அந்திக் கருக்கலில்’ என்று எதை எதையோ தொட்டு மீளும் கவிதைகள். எமிலி கவிதைகளின் மீதான காதல் பக்தி இலக்கியத்தில் நாயகி பாவம் கொண்டவர்களின் காதலை காமத்தை ஒத்தது. அது எமிலியைப் பற்றி எழுதியவர்களையும் (வா.மூர்த்தி, ஹிக்கின்ஸன், ஹார்ட் கிரேன்) கவிதைக்குள் நித்தியமாய் வாழ வைக்கத் தூண்டியிருக்கிறது. எமிலியின் படைப்புலகை துளித்துளியாய் அனுபவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பது என் எண்ணம். ‘அவள்’ தொகுப்பிலும் ‘அர்ந்தநாரி’, ‘அவன்’ தொகுப்புகளில் இருப்பது போலவே புராண, தொன்மக் கதைகள் தற்கால நிகழ்வுகளுடனோ, இன்னும் பிற நிகழ்வுகளுடனோ இசைந்து வெளிபடுகிறது. எமிலியின் மீதான பக்திக்கு இணையான பக்தியை அவர் வான்கோ மேலும் கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது நன்று. அதை ‘அறுந்த காதின் தனிமை’ தொகுப்பில் காணலாம். 

முதல் மூன்று தொகுப்புகளும் ந. ஜயபாஸ்கரன் பாணி கவிதைகளில் பாடு பொருள் பெரும்பாலும் இறைப்பற்று அல்லது இறைவனை வியப்பது, இறைவனை வியந்தவர்களை நயந்திருப்பது என்று விரியும் அதே நேரம் மீதமிருக்கும் நான்கு தொகுப்புகளும் அதற்கு எதிர்திசையில் லௌகீகத்தின் திசைச்சாயல் நோக்கி நகர்கின்றன 

கடைவீதியில் விலாசத்தை நிலைநிறுத்த
ஆயுள்பலி தருபவர்கள் மத்தியில்

‘அவர் இவராக இருப்பது எத்தனை அயர்வூட்டும் விஷயம்’
என்ற எமிலி வரி துணையாக

இருப்பில் சேர்க்கப்படாத
அ வியாபாரியாக ஆக

சக்கர வட்டமாக
விற்பனை செய்யப்பட்ட இடத்துக்கே வந்துசேரும்
பித்தளை தானம் செம்புகளின்
பரிகசிப்பை ஏற்றுக்கொண்டு

சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம், பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள், அறுந்த காதின் தனிமை, இல்லாத இன்னொரு பயணம் தொகுப்புகளின் மேலோங்கி இருப்பது தனித்த வியாபாரியின் லௌகீக நம்பிக்கைகள். மதுரையும் மதுரைசார்ந்த இடங்களும், அதில் கவிஞருடைய தனி உலகமும் அதற்குள் அவர் கண்ணுறும் அபத்தங்களும், கற்பிதங்களும் சூழ்ந்த கவிதைகளை கொண்ட தொகுப்புகள் அவை. இதில் புராண, இதிகாச, பக்தி மார்க்கக் கதைகளும் உண்டென்றாலும் உலோகத்தின் மீதான காதல் மிகுந்திருக்கும் கவிதைகள் அதிகம். முழுவதும் அகவயமான இவர் கவிதைகளில் இருப்புக்கும் இன்மைக்கும், இசைவுக்கும் இசைவின்மைக்கும், இருளுக்கும் இருள் நீங்கிய மென் ஒளிக்கும் இடைப்பட்ட வெளியில், நித்திய, அநித்திய தருணங்களுக்கு நடுவில், மூழ்குதலுக்கும் மிதத்தலுக்குமான ஊசலாட்டம் (ஊசல் அலைவு) நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒளி x நிழல் நம்பிக்கை x சோர்வு, உறவு x துரோகம் என்ற இரட்டைகளுக்குள் சுழலும் அவர் உலகம். 

திரிந்த பால்
நிரம்பி இருப்பது
கிழங்கான
வெண்கல உருளிகளில்

மூழ்கலுக்கும் மிதத்தலுக்கும்
அப்பால்
பரிதவிக்கும் உயிர்

இந்த இரட்டைகளை இன்னும் கொஞ்சம் நீட்டிப் பார்த்தால் கவிதைகளுக்குள்ளும் அவை இயங்குவதைப் பார்க்கலாம். ‘அர்த்தநாரி’ கவிதையில் ஒரு பாதி பெண்மையை பிரயத்தனப்பட்டு மறைத்து கொள்ளும் கவிமனம் இறுதியில் ஏதோ ஒரு தருணத்தில் இயல்பாக அடையும் தேவநிலையை, தொகுப்பின் இன்னொரு கவிதையில் வரும் காட்சியான மீனாட்சி கோவில் சிற்ப மோகினி ‘நீட்டும் அகப்பையின் வெறுமை’ இறக்குவது அசுரநிலைக்கு. இவ்விரு கவிதைகளையும் புராணக் கதைகளில் மீட்டுருவாக கவிஞரின் அகமன விளைவுகளின் உணர்ச்சித் தளும்பலாக வாசகரின் மனகிலேசங்களை மீட்டுப் பார்க்கும் வண்ணம் எழுதப்படுகின்றன. பக்தி இலக்கியத்தில் திளைக்கும் யோகநிலைக்கு உயர்த்தும் கவிதைகள் வாடிக்கையாளர்களுக்கு டீ ஏந்தும் கிழவிக்கு அருள்கின்றன. ரசாயன பொடி பூசிய கருத்த தோளுடைய சுமைதூக்கிக்கு வருந்துகின்றன. தோளில் சுமக்கும் சுமையின் அவஸ்தை எதுவுமின்றி முட்டுச் சந்தில் ஏறத் தவிக்கும் மூன்று சக்கர வண்டிக்குக் கைக் கொடுத்துத் தள்ளும் சாமானியரைக் காட்சிப்படுத்துகின்றன. ‘முட்டுச் சந்தில் ஏறத் தவிக்கும்’ என்பதே ஒரு படிமம் அதை லௌகீக உலகின் எல்லாப் பற்றுகளையும் பிடித்துக் கொண்டு ஞானநிலையை அடையத் தவிக்கும் உணர்வு நிலையைக் காட்டுகிறது. இந்த இரட்டையுலகம் இவர் கவிதைகள் கட்டமைக்கும் நிறப்படிமங்களுக்குள்ளும் நிகழ்வது இன்னொரு அதிசயம்.

பிரகாரங்களின் வெதுவெதுப்பும்
பிரார்த்தனைகளின் உஷ்ணமும்
வெளிநோக்கித் துரத்த
நீரற்ற பொற்றாமரையின்
வெறுமையும் தாளாமல்
மீண்டும்
இருள் கவியும் நடைக்குள்
புகுந்து கொள்கிறேன்

ஒருகணம் இசைவும்
மறுகணம் இசைவின்மையும் என
ஊசலாடும் 
சித்தத்தைப் பற்றிக் கொண்டு
இந்த இருள்மூடும் பிரகாரங்களில்
எதைத் தேடி அலைகிறேன்

தொலைந்து போன
மூன்றாம் முலையை

கால பிரக்ஞை தவறும்
பிரகாரங்களில் இறைபடும்
பதிகங்களும்

உள்மருகும் வாதவூரனின்
தனி மொழியும்

‘உண்டுமில்லையுமாம்
சொல்லொணாததுமாய்’ என்ற
எண்ணாயிரத்தில் ஒரு சமணன்
ஆவியும்
சதா
பிச்சேற்றுகின்றன

என்னை.

ந. ஜயபாஸ்கரனின் கவிதையுலகில் அடிக்கடி வரும் படிமம் கருமை. இருள் விதானம், இருள் மூடும் பிரகாரம், புராதனப் பிசுக்கு நிறைந்த புனித இருள், இருளின் நிழல்கள், பிரகார தூண் இருள் என இருண்மை பல கவிதைகளில் பல்வேறு சூழல்களைக் காட்ட புனையப்படுகிறது. இந்த இருள் படிமமும் அது தொடரும் தனிமையும் மருட்சியும் கழிவிரக்கமுமாய்ப் பரிமளிக்கிறது. களிம்பேறிய பித்தளை நாட்கள்(பித்தளை களிம்பேறினால் அடையும் நிறம் கரும் பசுமை) என்ற படிமம் அன்னாடங்களில் சலிப்புற்ற மனிதத் திரிபுகளைப் பேசுபவை. இவை ‘துயர கேலியின் இருண்ட கணமாக’ தொழிற்படும் அதே நேரம் இதற்கு எதிர் நிலை கொள்ளும் நிறப்படிமம் மஞ்சள். 

வீடு கை மாறிப் பழக் கிட்டங்கி

ரகசியம் தொலைத்துத்
திறந்து கிடக்கும் மரப்படிக்கட்டு

நிர்வாண மரத்தூண் பழுப்பு

பிளாஸ்டிக் கிரேடுகளில்
ஒளிமயமான பழ வரிசை

வெளியே சலிக்கும்
வாழ்ந்து கெட்டவன் நிழல்

எதிரே
சாக்கு வைக்கோல் மீது
எலுமிச்சை மஞ்சள்

எத்தனை விதமான மஞ்சள் ஷேட்களை தனது கவிதைகளில் சொல்கிறார் கவிஞர். எலுமிச்சை மஞ்சள், உலோக மஞ்சள், மாங்கனி மஞ்சள், வெள்ளரிப்பழ மஞ்சள், பித்தளை தூள் மஞ்சள், வெங்கல மஞ்சள், வெளிர் மஞ்சள், வான்கோவின் சூரியகாந்தி மஞ்சள், பழுப்பு மஞ்சள் , தீப சிவப்பு மஞ்சள் என்று சுடருமதைப் பார்க்கும் போது ‘மஞ்சளித்து வரும் கடைவீதியில் வாழும் சிறுவெளி உலோக வியாபாரியிடமிருந்து மஞ்சளைப் பிரிக்காதீர்கள்’ என்று அவர் சொல்வது சரி தான் என்று தோன்றுகிறது. 

 தனிமையின் நிறமும் மஞ்சள் என்று உணரும் தருணம் பிரகாசமான மஞ்சள் பித்தளைத் தட்டின் கருமஞ்சள் ஆகிறது. அப்போது ஆசையின் உலோக மஞ்சள் வீர வசந்தராயன் மண்டபத்தைச் சூழும் கரும்புகையாகிறது. அதொரு காலக்களிம்பு மஞ்சள். மஞ்சளை உருவகமாகவும், உணர்வுகளாகவும் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளில் காமாலை மஞ்சள், துயர மஞ்சள், கனவு மஞ்சள், ரசவாத மஞ்சள், மாலை மஞ்சளாகப் பார்க்க முடிகிறது. மேலும் மஞ்சளுக்கு மங்கலம், அசுத்தம், ஆபாசம் என்ற அர்த்த அடுக்குகள் உண்டு என்கிறார் ந. ஜயபாஸ்கரன். எப்படி மஞ்சளை உலோகப் பாத்திர வியாபாரியிடமிருந்து பிரிக்க முடியாதோ அது போலவே மதுரையை ந. ஜயபாஸ்கரன் கவிதைகளிலிருந்து பிரிக்க முடியாது.

ஆலவாயின் பேராசை நாக்குகள்

துயர மஞ்சள் கதிர்களை முத்தமிட்ட
எண்பெருங் குன்றங்களின்
எச்சத்தின் கீழ்

ருசித்துக்கொண்டிருக்கின்றன
மனித எலும்புகளை

இந்த மதுரை மண் மீதான காதல் எந்த அளவுக்கென்றால் உறைபனி தேசத்து எமிலியையும், வான்கோவையும் மதுரை வெயிலுக்கு அழைத்து வருகிறது. மதுரையின் வரைபடத்திலிருக்கும் பெரும்பாலான தெருக்கள், சந்துகள், சாலைகள் கவிதைக்குள் வந்துவிடுகின்றன. மதுரையில் நடக்கும் எல்லா திருவிழாக்களைப் பற்றிய குறிப்புகள் முக்கியமாய் திக்விஜயம், சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி, சடங்குகள், தைப்பூசத் திருவிழா, ஆவணி மாத பெருந்திருவிழா, மார்கழி தைலக்காப்பு என்று அந்த விழாவைப் பற்றித் தெரிந்தவர்கள் வாசிக்க சுவாரஸ்மாகவும் தெரியாதவர்களுக்கு அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் வரும்படி கவிதையுள் பிசிறின்றி இழைத்து வைக்கப்பட்டிருக்கிறது. திருவிழா முடிந்த காட்சியும், கடைவெளியில்  பிளாஸ்டிக் மிதந்து வரும் மழைநீர்க் காட்சிகளும் காட்சிப்படுத்தப்படும் கவிதைகளில் சங்கம் தொடங்கி, பக்தி இலக்கியம், தொன்மக் கதைகள், சிலப்பதிகாரம், நவீன இலக்கியம் என்று மதுரையைக் களமாகக் கொண்ட எல்லா இலக்கியங்களையும் தொட்டு மீண்டிருக்கிறார். மதுரையின் பல கதைகளை சின்னங்களை அடையாளங்களை கவிதையுலகுக்குள் கொண்டு வந்திருக்கும் ந. ஜயபாஸ்கரனை பாலை பாடிய பெருங்கடுங்கோ போலொரு மதுரை பாடிய ந. ஜயபாஸ்கரன் என்றால் மிகையில்லை.  

அடங்கையில்

தேங்கிய வையை
திசைமாறித் தூர்த்த கிருதமலை
வற்றிப் போன பொற்றாமரை

கரையில் நிற்பவனின்
ரணமான அகங்கையில்

மிடக்கு தீர்த்தம்

அவ்வளவே
தாகம்.

வித்தியாசமான வடிவ முயற்சியாக எழுபதுகளில் எழுதப்பட்ட கவிதைகள் சிலவறஂறில் தொழிறஂபடும். சொல்லை உடைத்து எழுதுதல்(உடைந்த உணர்வு), ஓவ்வொரு வரியிலும் வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் எழுதுதல் (ஒழுகுதல்), எழுத்தை வார்த்தையை வரி தொடங்குமிடத்திலிருந்து நகர்த்தி எழுதுதல்(காற்றை அசைத்துச் சொற்களும் எழுத்துகளும் நகர்ந்தது போல) கண்ணாடி முன் நின்று பார்ப்பது போல வார்த்தைகள் தன்னை எதிர் எதிரே பார்த்து கொள்வது போல தனித்தனியாக படிக்கவும் அல்லது ஒரே வாக்கியமாய்ப் படிக்கவும் உகந்தனவாக எழுதுதல் என பல்வேறு வடிவ உத்திகளை ந. ஜயபாஸ்கரன் தனது கவிதைகளுக்குள் முயன்று பார்த்திருக்கிறார்.

முகத்துப் பரவும்
பரு தரும்
அருவருப்
பாய்
உணர்ச்சி
கசிந்து
மெல்லப்
பெருகும்
சொ
ல்

பக்தி, நவீன இலக்கிய வாக்கியங்களை, இலக்கியவாதிகளை, படைப்புகள் மீதான விமர்சனங்களை சொந்த படைப்புக்குள் கொண்டு வந்து எழுதியவர்களுக்கு முன்னோடியாக இந்த கவிதைகளைச் சொல்லலாம். கு ப ரா, தி ஜா, ல சா ரா, நகுலன், சுகுமாரன், புதுமைபித்தன், க நா சு, சபரிநாதன் வரிகளை, ஏன் இதழ்களின் பெயரைக் கூட கவிதைக்குள் பொதிக்கும் ரசவாதம் உலோக மஞ்சளைப் பொன்னாக்கி பொன்னனையாள் கையளித்த சித்தரின் ரசவாதத்துக்குச் சற்றும் குறைவில்லாதது. ‘சிரித்தது செங்கட் சீயம்’ என்ற கம்பராமாயண வரியை சூரியனோடு ஒப்பிடும் தருணத்தையும், புராணம் இதிகாசம் முயங்கும் தருணங்களையும் (வேவ்வேறு புராணத் தருணங்களை இணைப்பது, புராணத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பது, புராணக் கதைகளோடு தத்துவ விசாரம் செய்வது) படிக்கும் போது பரவசம் கொள்ளச்​ செய்பவையாக​ இருக்கின்றன. நவீன இலக்கியத்தின் வரிகளை, புராணத் தொன்ம வரிகளை இவ்விலக்கியங்கள் நிகழ்ந்த நிலத்தோடும் கலாச்சாரத்தோடும் சம்மந்தமே இல்லாத அயல் இலக்கிய படைப்புகள் ந. ஜயபாஸ்கரனுக்கு தந்த அனுபவங்களோடு பிசைந்து கொடுத்திருப்பது ஒவ்வொரு கவிதையையும் வெவ்வேறு திறப்புகளுக்கு உட்படுத்த வல்லதாக அமைந்துவிடுகிறது. இன்னுமொரு விசேஷம் ஒரே கவிதையை மறுமுறை வாசிக்கும் போது இன்னும் ஏதோ ஒன்று புதிதாகப் புலப்படுகிறது. எந்த இலக்கியத்தோடும்  நிகழ்காலத்தை இணைத்து எழுதியிருக்கும் கவிதைகள் வியப்பூட்டுபவை. சில கவிதைகளில் பிரம்மராஜன், ஆத்மாநாம், ப சிங்காரம், ஜி நாகராஜன், கார்த்திகை பாண்டியன், திருச்செந்தாழை, ஓனகட்டா மாங்கிரு ஸனகவா யுகியோ மிஷிமா எல்லோரும் கதாபாத்திரங்களாக வருமிடங்கள் அபாரமானவை. 

லா ச ரா சொல்கிற “ஆழ்ந்த மவுனத்தின் விறுவிறுப்பு”
காற்றில் இருக்கு இங்கு
சாலைகளில்
ஒழுங்கைகளில்
வளைவுகளில்
பெயர்களாகி விட்ட இடங்களில்
இதழ் பிரிகிற கார்த்திகைப் பூக்களில்

பொருளற்றுப் போய்விட்ட
பரித்தியாகங்கள்
வன்மங்கள்
குரூரங்கள்
காணாமல் ஆக்கப்பட்ட வலிகள்

வற்றாப்பளை கண்ணகை அம்மன்
வலது கையில்
ஒற்றைச் சிலம்புடன்

எதிரே விரியும் நந்திக் கடலின் ஓலம்

படை வீரர்களின் அடர் இருப்பு

வன்னிக் காடுகளின் மவுனம்

ந. ஜயபாஸ்கரனுக்கு இலக்கியத்தின் மேலிருக்கும் காதலுக்கு நிகரான அன்னியோன்ய வாஞ்சை பித்தளை வெங்கலப் பாத்திரங்கள் மீதிருக்கிறது. அவர் கை கொண்டிருந்த தொழில் உலோக வியாபாரம் மேலும் வாழ்பனுபவ இலக்கியம் கொண்டு கவிதை செய்தல். அவர் படைப்புகளில் பிரதான இயங்குலகத்தில் வெங்கல, பித்தளைப் பாத்திரங்கள் மஞ்சளின் பல வடிவம் எடுத்து இலக்கியத்தோடு தன்னை பிணைத்துக் கொண்டு உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரை சமைத்துக் காட்டுகின்றன.

பித்தளை ஜோடுகளிலிருந்து
வர்ணம் கசியாத சொற்களைக்
கண்ணனின் வெண்ணைச் சட்டிக்கு
கைமாற்றிக் கொண்டிருந்த
நடுக்கக் கணத்தில்

உள்ளே நுழைகிறான்
அறுந்த காதுடன்

வெண்கல மஞ்சள் வெளியில்
துடித்துப் பறக்கின்றன

காகங்கள்

இந்த வெங்கல வாஞ்சையினாலோ என்னவோ உலோகப் பாத்திரத்தை முக்கியமான கதாபாத்திரமாக கொண்ட தி ஜானகிராமனின் கோதாவரி குண்டு, சாமநாது ஐயர் கவிழ்த்த பாயாசம் இருந்த பித்தளை ஜோட்டி கவிதைக்குள் வந்து வசமாய் அமைந்து விடுகின்றன. கு.ப.ராவின் அம்மா இறந்த பின்னர் விற்ற பித்தளைப் பாத்திரங்கள் இவர் கவிதையின் கச்சாப் பொருளாகின்றன. கு அழகிரிசாமியின் வெற்றிலைச் செல்லத்தை இவர் கவிதையின் வெயில் வருடிக் கொடுத்து கவிதையைத் துவக்கி வைக்கிறது. அப்படி இலக்கியமும் வெங்கலமும் இணைபிரியா இரட்டை உலகமாய் ந. ஜயபாஸ்கரனின் கவிதையுலகை ஆட்கொண்டிருக்கின்றன. அதன் பொருட்டே எதிர் துருவ முனையில் இயங்கும் இரட்டை மனநிலை அவர் கவிதைகளுக்குள் இயங்கும் பொறிநுட்பமாய் திகழ்கிறதோ என்பது எனது ஐய்யம். இலக்கியமும், உலோகத்துடன் இணைந்திருப்பதும் ஒன்றே என்ற புதியதொரு விஞ்ஞானத்தை தன் கவிதைக் காதல் மூலம் முன் வைக்கிறார் கவிஞர் ந. ஜயபாஸ்கரன். உலோகம், இலக்கியம் இவை இரண்டும் தந்த அனுபவங்களை விடுத்து கவி பாட வேறு எதுவுமே இல்லையா என்று ந. ஜயபாஸ்கரனிடம் கேட்டால் அவர் தனது முழுத் தொகுப்பின் முன்னுரையில் சுந்தர ராமசாமியின் கட்டுரையிலிருந்து தனக்கான வரியாகக் குறிப்பிடும் ‘இவ்வளவு போதும்’ என்று சொல்லக் கூடும். அவரது கவிதைகள் அடர் நேர்த்தியாக இருக்கின்றன. அவரது இருநூற்றுத் தொண்ணுத்தி எட்டுக் கவிதைகளை வாசிக்கும் போது அவர் கவிதையில் சொல்வது போல ‘அகங்கைக்குள் அடங்கும் மிடக்கு தீர்த்தம் அவ்வளவே தாகம்’ என்பது அவர் கவிதையின் முக்கிய சூத்திரம் என்பது புலப்படுகிறது.

வெங்கலக் காதுக்கிண்ணியின்
உறைந்த எண்ணெய்யின்
மிருதுப் பச்சை

உலோக மஞ்சளைப்
புணரும் தருணம்

ரசவாதம்

கவிஞருக்கு உலோகத் தொழில் மீதான பக்தி அதீதமானது. வடிவம் கண்ட கணத்தில் தயாரிப்பு ஊர் பேர் சொல்லும் வியாபார நுட்பம் தெரிந்தவர். அதனாலேயே பிரத்தியேகமான பாத்திரங்கள் அவை உருவாகும் இடங்கள் இவற்றைத் தனது கவிதைகளில் நித்தியமாய் வாழ வைத்திருப்பது ஆச்சரியமானதே அல்ல. நிலக்கோட்டை மாடக்குழி விளக்கு, திருநெல்வேலி நிலைக்காதுச் சட்டி, காரைக்குடி கல் அடுக்குகள், ஊத்துப்பட்டைகள், மானாமதுரை வெண்கல படிகள், போகணிகள், உருளிகள், கும்பகோணம் காது வளர்ந்த பித்தளை வட்டக் கொப்பரைகள், அரிசி அரிக்க(அரிசியோடு கலந்திருக்கும் சிறு கற்களை அடியில் தேக்கித் தரும்) சருவச் சட்டி , வாகைக்குளக் குத்துவிளக்கு, , பாலக்காடு வெண்கலம் தாலவட்டி, கும்பா, முறி, பித்தளைக் குத்துச்சட்டி, பச்சடு கருவழி நாழிக்கம் என்று பாத்திரத்தோடு அது உருவாகும் இடங்கள் அந்த பாத்திரங்கள் புழக்கத்திலிருக்கும் ஊர்கள் எல்லாவற்றையும் தனது கவிதைகளில் ஆவணப்படுத்துகிறார்.

நிலக்கோட்டை அங்கணப் பத்தர்
கித்தான் பைகளில் சுமந்து வந்த
மாடக்குழி விளக்குகளின்
இருமருங்கிலும் இருந்த கிளிகள்
பறந்துபோயின

மானாமதுரை பரமசாமி ஆசாரி
தீர்த்துக் கொண்டு வந்த
வெண்கலப் படிகளும் போகணிகளும்
பால்நுரை கக்கி மரித்துவிட்டன

பிரம்ம தேசத்து விளக்குகளும்
திருநெல்வேலி நிலைகாதுச் சட்டிகளும்
சீர்வரிசைக் காரைக்குடிக் கல் அடுக்குகளும்
நீர் காணாத ஊத்துப்பட்டைகளும்

பரண் தூசி துணையுடன்

முதிர் கன்னியராய்

விலைபோகும் காத்திருப்பில்

 மேலும் அவர் பட்டியலிடும் பாத்திரங்கள் பித்தளை ஜோடு தவலை, வெண்ணெய்ச் சட்டி, வெங்கல காதுக் கிண்ணி, வெங்கல அகப்பை, வெங்கலப் பாக்கு வெட்டி அதன் இருபுறத்திலும் வடிவமைக்கப்பட்ட மிதுனச் சிற்பங்கள், காளாஸ்திரி ரயில் கூஜா, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, வாகைக்குள குத்துவிளக்கு, கும்பகோணத்து வெங்கல சாம்பிராணி கரண்டி, ராஜமுந்திரி வெங்கலக் குண்டா, காரைக்குடி பித்தளைத் தூக்குகள், வாழைப்பூ ஜாடி, வசுந்தரா ஜாடி, அணுகுண்டு ஜாடி, ஐஸ்புரூட் ஜாடி, லலிதா ஜாடி, டாம் டாம் வாளி, சொருகுதூக்கு என நீளும் பட்டியலை ஆவணப்படுத்துவது எதிர்கால சந்ததிக்கு இத்தனை வகையான பாத்திரங்கள் இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். முக்கியமாக பாத்திர வரலாற்றை பதிவு செய்யும் கவிதைகளாக ந. ஜயபாஸ்கரனின் கவிதைகளைப் பார்க்கலாம். விதவிதமான பாத்திரங்களும் அவை வாழ்வோடு எவ்வாறு பிணைந்திருந்தன என்பதை பதிவு செய்ததில் ந. ஜயபாஸ்கரனின் பங்கு முக்கியமானது.

கை இருப்பு இல்லாமல்
கடன் வாங்கிக்
கேத வீட்டுக்குச் சுமந்து செல்லும்
பித்தளை அண்டா
சீதேவி மரக்கால்
நீர்மாலைச் சொம்பு
காமாட்சி தீபம்
எல்லாம் எரிகின்றன
கடைவெளி வெயிலில்

எல்லா மங்கல அமங்கலக் காரியங்களுக்கு இன்னென்ன பாத்திரங்கள் என்று பதிவிடும் கவிதையும் ந. ஜயபாஸ்கரனின் தொகுப்பில் உண்டு. இவற்றோடு சித்திரக்காரப் பெயர்வெட்டியின் உளிகள் காட்சிப்படுவதும் மிக முக்கியமானது. சீர்பாத்திரங்கள் எடுப்பதும் அதில் மணமக்கள் முதல் எழுத்துக்களை அடையாளமாக பதிவதையும் தற்கால சூழலில் எங்குமே காண முடியாத அளவுக்கு உலகமயமாக்கலில் மயங்கிக் கிடக்கிறோம். கடைத் தெருக்களுக்கு போகாமல் அமேசானில் வாங்கிக் குவிக்கும் தற்காலத் தலைமுறைக்கு உயிர்ப்போடு இயங்கும் கடைத்தெருக்கள் காண்பதைக் கூட இனி ஏ ஐ தொழில் நுட்பத்தில் தான் காட்ட முடியும். அது போலவே எவர்சில்வர் பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னர் கோலோச்சிய பித்தளை வெங்கல பாத்திரங்களையும் ஏ ஐ உதவியோடே காண முடியும். அப்படி ப்ராம்ட் செய்யத் தேவைப்படும் எல்லா தகவல்களும் ந. ஜயபாஸ்கரனின் தொகுதிகளில் கிடைக்கும்.

பெண்களின் அக உணர்வுகளை மூன்றாம் மனிதனாய் வியாபாரியாக நின்று கவிதை சொல்லி பதிவு செய்யுமிடங்கள் அபாரமானவை. பாத்திரங்களைக் கையாளுவதில் முக்கியமானவர்கள் பெண்கள். பாத்திரங்கள் சீர் வரிசையாக பெண்களுக்கே தரப்படுகிறது. பெண்களுக்குப் புடவை, நகை இதையடுத்த இடத்தில் பாத்திரங்கள் சேர்ப்பதிலும் பித்துமை இருக்கும். அதனாலேயே ந. ஜயபாஸ்கரன் கவிதைகளில் ஆண்களை விடப் பெண் கதாபாத்திரங்கள் நிறைய நடமாடுகின்றன. கவிஞரின் கவிதையுலகத்தில் சங்கம் தொடங்கி, பக்தி இலக்கியம், உலோக சம்மந்தப்பட்ட கவிதைகளில் பெண்களே பெரும்பங்கில் வந்து செல்கின்றனர். நவீன இலக்கியத்தில் பட்டியலிட்ட அனைவரையும் ஒரு தட்டில் வைத்தால் மறுதட்டில் எமிலியை மட்டும் வைத்துக் கொண்டு சமன்படுத்திவிட முடியும். அத்தனை கவிதைகளில் எமிலி எட்டிப் பார்க்கிறார். 

காரைக்கால் பேய்
ஆண்டாள்
பராங்குச நாயகி
மகாதேவி அக்கா
லல்லேஸ்வரி
எமிலி டிக்கின்ஸன்
வர்ஜீனியா வுல்ஃப்
ஸில்வியா பிளாத்

எல்லோரும்
அறுந்த காதின்
தனிமையை உணர்ந்தவர்கள் தான்

அறுந்த காதின் தனிமைக்கு இணையானது
இன்னொரு காதின் தனிமை
என்பதும் உண்மை

வியாபார உலகில் வந்து போன பெண்களைப் பற்றிய கவிதைகள் மிக ரசமானவை. ‘லாங்’காக விளக்குக் கேட்ட பெண் பற்றி கவிதை வரியை வாசிக்கும் தருணம் அந்த பெண் அப்படி கேட்டதன் பின் இயங்கும் உளவியல் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது அது பல கதைகளை நமக்கு சொல்கிறது. ‘தங்கையின் சீர்பாத்திரங்கள் அதிகரித்துக் கொண்டே போக பெரிய பெண் கண்களில் மினுக்கும் நீர்’ என்று சொல்லுமிடத்தில் தமக்கையின் மனச்சிடுக்கு மினுக்குவதும், விளக்குத் தண்டின் கருமண்ணுக்கான எடை கழிக்கும் போது ‘புது விளக்கில் மண்ணுக்கு வெங்கல எடை தானே’ என்று சாமர்த்தியத்தையும் பதிவு செய்கிறார். கூடவே வியாபாரிகளிடம் சாமர்த்தியம் காட்டி பணவிஷத்தில் கெட்டியாக இருக்கும் பெண்கள் நிஜப்படியே அவ்வளவு சாதுர்யமான வாழ்க்கையை வாழ்கின்றார்களா என்பதை ‘விளக்கு தகழியில் திரண்டிருக்கும் கரிய எண்ணெய்ப் பிசுக்கும், திரிநூல் கசடும், நீர் காணாத மஞ்சள் குங்குமத் திட்டுகளும் அலட்சியத்தில் எரிந்த அகவாழ்க்கை விற்பனைக்குக் கொண்டு வருகின்றன’ என்று பதிவிடும் இடம் அழகானது. அரிசி கழுவ மட்டுமே அறிந்து அரிக்கத் தெரியாத புதுப்பெண்(மணமான புதுப் பெண்ணுக்கு புதிராக எதிர் நிற்பது புதுவாழ்க்கை, புதுக்காமம், புது உறவுகள், புதியதொரு உலகம் என்று நீள்வதை அந்த ஒற்றை வரியில் அடக்கி விடலாம்) மேலும் மேல் பத்தியில் சொன்னது போல அரிசியை கல் நீக்க அரித்தல் என்ற ஒரு வழக்கமிருந்ததே என் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையில் தெரிய வாய்ப்பில்லை இது போன்ற விஷயங்களை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இதை விட முக்கியமானது கடை ராசி என்று அலர் பரப்பும் பெண்கள் ‘உங்கிட்ட சீர் வாங்கினதால எம்பொண்ணுக்கு மூணும் பொட்டை’ என்ற அபத்த sentiment டை காட்சியாக்கி கேள்வி கேட்கும் இடங்கள் கவிதையுள் வந்திருக்கின்றன.

இதையடுத்து கவிஞரின் பெரும்பாலான கவிதைகளில் இயங்குவது வயோதிக காமம். அது உடலற்ற காமமாய் இயங்குவதைப் பல கவிதைகளில் இருந்து எடுத்துக்காட்டிவிட முடியும். இவர் கவிதைகளில் காணப்படும் நீரற்ற வைகை படிமம், நீரோ மீனோ அற்ற பொற்றாமரைக் குளம், மீன் மறுத்த நாரை எல்லாம் உணர்த்துவது மனதுக்குள் வயது, தயக்கம் காரணமாய் வெளிபடுத்தத் தயங்கும் காமம். அது ‘எரிவதும் எரியாததும் ஆன காமன் பண்டிகை ஆட்டம்’ என்று எல்லாத் திசைகளிலும் அலைக்கழிகிறது. 

பயணம் நின்று போன
காளாஸ்திரி வெண்கல
ரயில் கூஜாவின்

உள்ளே

பதுங்கிக் கிடக்கும்
நீர் மொள்ளத் தவிக்கும்

மஞ்சள் நிறக் கிண்ணியாய்

கவிதைக்குள்

நான்

இவர் கவிதை வரிகளின் சொல்லப்பட்டிருக்கும் ‘புறசலன நீர்மையின்றி’ , ‘தனக்குள் தேநீர் இல்லாத மெலிந்த வயோதிகன்’, ‘முதுகில் கண்கள் பல கொண்ட முதிய இந்திரன்’ என்று பல்வேறு விதமாய் வயோதிகப் பருவத்தில் வந்தொழியும் கள்ள உணர்வை சொல்லித் தீராமல் ‘மணமகள் மாருக்கு நேர்வரும் நாச்சியார் கோவில் குத்துவிளக்கின் மூக்கைக் கொத்திவிட்டும் வெயில்’ அதை கவனிக்கும் பார்வையை, மாதாந்திரம் பாத்திரச் சீட்டு கட்ட வரும் பெண்ணின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் மன அலைவை,  திடீர்நகர் மின்னல்கொடி திருடிய பாத்திரங்கள் மறைத்து வைக்கும் சேலைமடிப்புகள் அவள் கவிதை சொல்லியின் கண்ணுக்கு மட்டும் மஞ்சள் தட்சி ஆவதை அப்பட்டமாய் பதிவு செய்கின்றன. ‘மூன்றாம் முலை’ படிமம் சார்ந்த பல கவிதைகளில் சில கவிதைகள் பேசுவது மறைத்துக் கொள்ள விரும்பும் ஆனால் மறைக்கவியலாத காமத்தை.

மணல் புரளும்
மன வெளியில்
எதிர் ஏறிய
ஏடு தான்
இதுவும்
ஒரு வகையில்

எடுப்பவரும்
படிப்பவரும்
இல்லா
விடினும்.


சில குறுந்தொகை, நற்றிணைப் பாடல்களின் மிகச் சிறந்த வரிகளை அப்படியே உள்ளடக்கிய கவிதைகள் பல ஜ நயபாஸ்கரன் தொகுப்பில் காணக்கிடக்கின்றன. நெடுவெண்ணிலவு, புலிப்போத்து, பெரும்பாணாற்றுப்படை, நள்ளென்ற யாமம் போன்ற வார்த்தைகள் நம்மை சங்க காலத்துக்குள்ளே கொண்டு நிறுத்தும் அதே நேரம் நூபுரம் (சதங்கை அல்லது கொலுசு), முரணி(முரண் படுதல்), போதம்(ஞானம்), அகங்கை(உள்ளங்கை), அசங்கிய(அருவருப்பு), போனகம்(சாப்பாடு), மசகு எண்ணெய்(தேய்மானம் தடுக்கும் திரவம்), கச்சாத்து(வரி பற்றுச்சீட்டு) என்று அதிகம் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளையும் கவிதையுள் பயன்படுத்துகிறார். இவருடைய கவிதைகளில் சில கவிதைகள் சம்மந்தப்பட்ட இலக்கிய வரியின் நிஜப் பொருள் என்னவென்று தெரியாத வாசகர்களுக்கு கவிதை அனுபவமாகும் கடை(இறுதி)விளைவு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது. உதாரணத்துக்கு

மூடிய கதவு

அவள் அது ஆன
அந்தக் கணத்தில்
ஹிக்கின்ஸ்னின் அவதானிப்பு:

‘நரை திரை இன்றி
இளமை திரும்பிய முகம்

அழகிய புருவத்தின் மீது
சம்பூரணமான அமைதி’

‘தன் சுனை போய்ச் சேர்ந்துவிட்டவளைக்’
குறித்த
கரைப் பார்வை

‘அழங் காலிலே இழித்தார் படியைக்
கரையிலே நின்றாரால் சொல்லப் போமோ’

இந்த கவிதையில் இரண்டாம் மூன்றாம் பத்திகளில் ஒற்றைக் கொம்புக்குள் வரும் வாக்கியங்கள் ஹிக்கின்ஸன் எமிலியின் மரணம் சார்ந்து சொன்ன கருத்து. நான்காம் பத்தியில் முதல் வரியில் சொல்லப்பட்ட வாக்கியம் லா.ச.ரா கொட்டுமேளம் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் ஒரு வாக்கியம். இறுதிப் பத்தி நம்பிள்ளை ஈடு இதிலிருந்து எடுக்கப்பட்ட வாசகம். நம்பிள்ளை ஈடு என்பது நம்மாழ்வார் திருமொழிக்கு அவர் சீடர் வடக்குத் திருவீதிப்பிள்ளை எழுதிய விளக்க உரை. இப்படி ஒரு கவிதைக்குள் எமிலி, ஹிக்கின்ஸன், லா.ச.ரா, வடக்குத் திருவீதிப்பிள்ளை ஆகிய அனைவரையும் கொண்டு வருவது ஒருபுறம் சீரிய ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கும் முயற்சி. மறுபுறம் தனது கவிதை வாசிப்பை சாமானிய எளிய எம்போன்ற வாசகரிடமிருந்து விலக்கி வைக்கும் சாத்தியக்கூறுகள் அடங்கிய கவிதையுக்தி. இதைத் தவிர இந்தத் தொகுப்பில் வேறு குறைகளை நான் கண்டடைய முடியவில்லை.

புலன்களை எல்லாம்
தாண்டிப் போன
அவனைத்
தொடர்வதும்
தொடுவதும்
எப்படி

மெலிந்த
புலன்களை
இருப்பில்
வைத்துக்
கொண்டு

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களையும் சரி பாதியாய் தன் கவிதையுலத்துக்குள் பாடியிருக்கும் ந. ஜயபாஸ்கரன் பல கவிதைகளில் பட்டினத்தார் பாடல்கள் போல உலக நிலையாமையைச் சொல்லுமிடங்களும் உண்டு. துவைத அத்வைத கருத்தாக்கங்கள் கொண்ட கவிதைகளும் ‘உலகம் நீ நான் இது தவிர வேறில்லை’ என்ற தத்துவமும் ’நானும் அவனும் வேறில்லை’ என்று சொல்லும் கவிதைகளும் இருக்கின்றன. வாழ்க்கை இலக்கின்றி நகர்வதைப் பேசும் கவிதைகள், அன்றாட சலிப்பேறிய உறவுகள் தரும் அ-ருசியைப் பேசும் கவிதைகள்,  பிரிவேக்கம் பேசும் கவிதைகள் என்று பல்வேறு விதமான கவிதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாசிக்கும் தருணம் எனக்குப் பின்வரும் விஷயங்கள் பிடிப்பட்டன. ந. ஜயபாஸ்கரன் கவிதை உள்ளடங்கிய குரலில் பேசுபவை. அதற்குக் காரணமாய் அவரே சொல்கிறார் ‘குரலை மிகவும் உயர்த்தக் கூடாது, உயர்த்தினால் போதாமை உடைசல் தெரியக் கூடும்’. தொன்ம, புராணக் கதை மறுபடி மறுபடி வருகின்றன அதையும் அவரே வாழ்க்கைத் தத்துவம் போலச் சொல்கிறார் ‘ஒரே கவலையை மாற்றி மாற்றிச் சலிக்கவில்லை’  பித்தின் தனிமை கவிஞர் அகத்தின் மூலையில் கிடக்கத்தான் செய்கிறது. இந்தப் பித்து மனமே பொன்னனையாள் முன்னிலையில் எமிலியையும் வான்கோவையும் முத்தமிடத் துடிக்கிறது. அப்பாவுக்கு நகுலேஸ்வரத்தில் திவசம் கொடுக்கும் போதும் அறிந்தும் அறியாதவர்கள் பாகத்தில் நகுலனைச் சேர்த்துக் கொள்ள தோன்றியதாய் பதிவிடுகிறது. மேலும் அது  ‘தூரம் என்பது ஒரு நூறு வருஷமும் ஆயிரக் கணக்கான மைல்களும் இல்லை’ என்று சொல்லித் தவிக்கிறது.

பாலையில் ஒளிரும் பரிதியும் முழுமதியும்
கவலை கொள்வதில்லை
தான் எனும் உணர்வு இல்லாததால்;
அகண்ட வானமும் பூமியும்
அதனைக் கைவிடுவதில்லையாதலால்;
தானற்றதோர் தான் உணர்வுடனே
அது அனைத்து வெளிகளிலும் வந்தமைவதால். 

முன்பே சுட்டிய இரட்டைத் தன்மையில் தன்னை தெய்வநிலைக்கோ அசுரநிலைக்கோ உயர்த்திப் பேசும் பெருமிதம் ததும்பும் கவிதைகளும் உண்டு.  தன்னிரக்கமும், அவநம்பிக்கையும் மேலோங்கியிருக்கும் வாழ்வின் அபத்தம் பேசும் கவிதைகளுக்கும் இடம் உண்டு.  பகலில் உலகை நேராய்ப் பார்க்கும் இவர் கவிதைகள், இருள் கவிந்தவுடன்  ‘இரவில் கடைப்பூட்டுடன் தலைகீழாய் தொங்கும் சுய’ த்தின் வழி உலகை தலைகீழாய் நோக்குவதும் எங்கேனும் கவிதைகள் வந்து அமைந்து விடுகின்றன. அது ‘தலைகீழ் மனநிழ’ லாய் நீள்கிறது. அறுபது ஆண்டுகளாய் எழுதும் ந. ஜயபாஸ்கரன் தனது கவிதையின் இருப்பை இப்படிச் சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது ‘பிரிக்கப்படப் போகாத உள்நாட்டுக் கடிதத்தின் ஒரு சிறு பக்கம் போதுமானதாக இருக்கிறது’ அப்படிக் கிடைத்த இடத்துக்குள் கற்ற பார்த்த பார்க்காத அனுபவித்த எல்லா வாதைகளையும் அடைத்துவிடும் பேரார்வமும் அந்தக் கவிதைகளைத் துளிக்குள் நிகழ்த்தும் பிரவாகமாய்ப் பெருகி வாசகரை முழுக்காட்டி திக்குமுக்காடச் செய்கிறது. தொகுப்பில் பல கவிதைகளைக் குறிப்பிட குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன் அதில் எதைச் சொல்வது எதை விடுவது என்ற குழப்பத்தோடு பின் வரும் கவிதையோடு இந்த கட்டுரையை முடிக்க மனமின்றி விடுகிறேன்.

வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகள் மீது
தூசி உருவாக்கும்
படிமம் போன்ற
இயல்பான திறமை
ஸ்காட் ஃ பிட்ஜெரால்டினுடையது
என்கிறார்
எர்னஸ்ட் ஹெமிங்வே

கடையில்
வெண்கலப் பாத்திரங்கள்
மேல்
படியும்
காலத் தூசின்
அருவக் கோலங்கள்

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss