
பாரியைக் கொன்ற மூவேந்தருள் சேரனும் ஒருவன்தானே அப்படியிருக்க கபிலர் அவனை நாடிச் சென்று பாடியிருப்பானா? என்கிற சந்தேகத்தை தன் ‘கபிலம் ‘ நூலில் எழுப்புகிறார் ம.ரா.போ. எனக்கு அந்த சந்தேகம் இயல்பாகவே எழவில்லை. கபிலர் பாடியிருக்கிறார் என்றாலே பாரி மீது படையெடுத்த சேரன் இவனல்ல என்கிற தெளிவு பிறந்துவிட்டது எனக்கு. தன் நூலில் மேலும் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார் அவர். பதிற்றுப்பத்து பாடியதற்காக கபிலர் நூறாயிரம் பொன்னை பரிசாகப் பெற்றார் என்றும் , மேலும் நன்றா என்கிற குன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கண்ணில் தெரியும் ஊர் முழுதையும் கொடையாகக் கொடுத்தான் சேரன் என்றும் பதிகப்பாடல் சொல்கிறது. பதிகப்பாடல்கள் பொதுவாக பின்னாட்களில் பாடப்படுபவை .ஆனால் இதே பதிற்றுப்பத்தில் இன்னொரு புலவர் பாடுகிறார்.. சேரனிடம் தோற்ற பகைநாட்டுப் படை வீரர்கள் களத்தில் போட்டு விட்டு ஓடிய வேல்களின் எண்ணிக்கையானது, கபிலர் வாழியாதனிடம் பாடிப் பெற்ற ஊர்களை விட அதிகம் என்று.
“நனவில் பாடிய நல் இசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே” ( பதி.ப; 85)
ம.ரா.போவின் சந்தேகம் என்னவெனில், இவ்வளவு செல்வங்களைப் பெற்றவர் அவற்றை ஏன் பாரிமகளிர் வசம் சேர்க்கவில்லை, அதைக் கொண்டு அவர்களுக்கு ஏன் நல்லமுறையில் மணம்முடிக்காமல் ஊர் ஊராகச் சென்று அரசர்களிடம் இறைஞ்சி மணமுடித்துக் கொள்ள வேண்டினார் என்பதுதான். இவையெல்லாம் நவீன மனத்தின் இயல்பான சந்தேகங்கள். இந்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் திடமான பதில்கள் எதையும் நம்மால் சங்கத்திரட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடிவதில்லை. சங்கக் கவிதைகள் நம் பொக்கிஷம்தான். அதில் மாற்ற்றுக் கருத்தில்லை. ஆனால் அதில் சில குழப்பங்களும் உள்ளன. அதன் நெடும்பழமையைக் கணக்கிட்டால் அது அப்படித்தான் இருக்கவும் முடியும். ம.ரா.போ- க்கு அவ்வப்போது இது போன்ற சந்தேகங்கள் எழும் போதும் தனக்கு முந்தைய பேரறிஞர்கள் ஏற்றுக் கொண்ட பாடல்களின் மீது கேள்வி எழுப்பவும் அவரது பக்தி உள்ளம் தீவிரம் காட்டுவதில்லை. அவர் எழுதுகிறார்..
“சங்க நூல்களிலே கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, ஆகியவை பற்றிய ஆய்விலே பல சிக்கல்கள் உண்டு என்பது எண்ணித் துணிய வேண்டிய செய்தியாகும்.கபிலர் பாடல்களில் உள்ள சில செய்திகளும் இந்த ஐயத்திற்கு ஓரளவு இடம் அளிக்கின்றன. கபிலர் பாடல்கள் என்று ஐயரவர்கள் போன்ற சான்றோர்களால் ஏற்றுப் போற்றப்பட்டுள்ள பாடல்களை அறிமுகம் செய்யும் இந்த நூலில் அந்த ஆய்வுக்கு இடம் இல்லை. எனினும், குறிப்பாகவும், சுருக்கமாகவும் சுட்டிக் காட்டாமலிருக்க மனச்சான்றின் வழிப்பட்ட திறனாய்வுணர்வு இடம் தரவில்லை. சான்றோர்கள் மன்னிக்க வேண்டும்”

தமிழறிஞர்க்கே இது போன்ற குழப்பங்கள் எழுகையில் நமக்கும் அப்படி நிகழவே செய்யும். நம்மால் இயல்வதெல்லாம் அந்தச் சிக்கல்களையெல்லாம் அறிஞர்கள் வசமே ஒப்படைத்துவிட்டு கவிதையில் திளைப்பதுதான்.
சேரனின் வீரர்களுக்கு வாழ்வு தெரியும். அதன் நிலையாமை புரியும். ஆகவே உயிரைப் பொருட்டாக எண்ணாமல் களம் காண்பர்..
“ .. மறம்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்மறை! சேர்ந்தோர் செல்வ!” ( பதி.ப; 65)
வில் வீரர்கள் கற்க வேண்டிய மறை போன்றவன். தன் வீரர்களுக்கு முன் தான் நின்று கேடயம் போல் காப்பவன். தன்னைச் சேர்ந்தோர்க்கு பெருஞ் செல்வம் போன்றவன் வாழியாதன். அவனது வீரர்கள் காஞ்சி எனும் நிலையாமையை உணர்ந்தவர்கள். ஆகவே எதற்கும் துணிந்தவர்கள்.
சங்ககவிதைகளுக்கு பொதுவாக தலைப்புகள் இல்லை. பின்னாட்களில் உரையாசிரியர்கள் தங்களுக்குப் பிடித்த தலைப்புகளைச் சூட்டுவதுண்டு. ஆனால் பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்புகள் சூட்டப்பட்டுள்ளன. அப்படி இந்த 65 ம் பாடல் “ நாள் மகிழ் இருக்கை” என தலைப்பிடப்பட்டுள்ளது. அதாவது அரசன் தன் அரசவையில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் காட்சியைப் பாடுவது.
“… நின் நாள் மகிழ் இருக்கை
இனிது காண்டிகுமே-
தீம்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச்
சேறு செய் மாரியின், அளிக்கும் நின்
சாறுபடு திருவின் நனை மகிழானே” ( பதி;ப; 65)
திருவிழாக் காலத்து மதுவின் மகிழ்ச்சியை ஒத்து விளங்கும் உன் ‘நாள் மகிழ் இருக்கையை’ இனிது காண்கிறேன். மதுவிற்கு பாலைப் பண் உவமை சொல்லப்படுகிறது. மது ஒவ்வொரு முறையும் புதுப்புது மகிழ்ச்சியை அளிப்பது போல, பாலைப் பண்ணும் துயர இசையை வாசிக்கும் காலத்தும் இனிமையே கூட்டக்கூடியது.
சேரனின் குதிரைகள் எப்படிப்பட்டன?
போர்க்களத்தில் சிதறிக்கிடக்கிற பிணங்கள் இடறுவதால் இரத்தக்கறை படிந்ததும், விரைந்து செல்லக் கூடியதுமான குதிரைகள் அவை.
“ எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பரியுடை நன்மா..” (பதி:ப; 65)
இரத்தக்கறை “செம்மறு” எனப்படுகிறது. ஆம்…மறு..குற்றம்.. கழுவித்தீராத கறைகளும் உடையதுதானே வரலாறு. இச்சொல்லை கவிதைக்கு வெளியே எடுத்து வைத்தால் கறை குதிரையின் காலிலிருந்து மனிதரின் கைகளுக்கு மாறிவிடுகிறது.
கேடயத்திற்கு மேகம் உவமை சொல்லப்பட்டுள்ளது. சினிமாக்களில் நாம் பார்த்த கேடயங்கள் அதிகமும் பளபளக்கும் பொன்னிறம் கொண்டவை. ஆனால் இங்கு கரிய நிறக் கேடயங்கள் உவமை சொல்லப்பட்டுளன. கரியதும் பரந்ததுமான மேகக்கூட்டம் கேடயங்கள் ஆகின்றன.
“மழை என மருளும் மாஇரும் பல்தோல்” ( பதி.ப: 62)
மழையை இடியின் ஆகுபெயராகி நீட்டினால் கதாயுத தாக்குதலைக் கேடயம் கொண்டு தடுக்கையில் அங்கு இடி முழங்குவதையும் கேட்க முடியும்தான்.
கேடயப் படைகளுக்கு மேல் எழும் ஒளிரும் வேல்கள், மாரி மேகம் பரவிய மலைச்சிகரத்திற்கு உவமை சொல்லப்பட்டுள்ளது.
“ நாள் மழைக் குழூஉச்சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்…” ( பதி:ப: 66)
இந்தப்பாடலில் பேரியாழும் பாலைப் பண்ணும் குறிப்பிடப்படுகின்றன. மம்மது போன்ற தமிழிசை அறிஞர்கள் எழுதிய நூல்களில் இவற்றைக் குறித்து நாம் ஓரளவு அறிமுகம் பெறமுடியும்.
“ வாங்கு இரு மருப்பின் தீந்தொடை பழனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல..” ( பதி; ப; 66)
போர்களத்தில் எதிரிகளை கொன்றழித்து அவர்களிடம் திறையாகப் பெற்ற யானைகளையும், அளவிட முடியாத நெல்மணிகளையும் இரவலர்க்கு அளிக்கிறான்.
“ கொன்று புறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்
தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர்பதம் நல்கும் என்ப..” ( பதி; ப; 66)
“.. கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப்
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலை சேக்கும்..” ( பதி: ப 66)
கொற்றவை குடிகொள்ளும் வாகைமரத்தின் பஞ்சு போன்ற பூவினை ஒத்த முல்லைப் புதரினை வண்டுகள் விடாது மொய்க்கின்றன. அப்படித் தேன் உண்ட வண்டுகள் பிடா மரத்தின், மாலை போல் செரிந்த பூங்கொத்துக்களின் மேல் நிம்மதியாக உறங்கும் நாடு வாழியாதனின் நாடு. அந்த வண்டுகளைப் போல் இரவலர்களும் வாழியாதனிடம் வேண்டியதைப் பெற்று தங்கள் இருப்பிடத்தில் இன்புற்றிருக்கிறார்கள்.
“ போர் படு மள்ளர்” என்கிற சொற்றொடர்க்கு போர் வீரர்கள், போர் செய்யும் மள்ளர்கள் என்று பொருள் சொல்லலாம். ஆனால் நம் உரையாசிரியர்கள் “ போரில் அல்லாமல் பிறவகையில் இறத்தலை விரும்பாத “ என்றே உரை சொல்கிறார்கள். “ படு” என்கிற சொல் அந்த உரைக்கு பொருத்தமாகவும்தான் இருக்கிறது. என்னதான் வீரமறக்குலத் தோன்றல் என்றாலுமே, ஒரு உயிர் அப்படி விரும்புமா என்பது குறித்து எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. “அவ்வளவு சந்தேகத்தோட நீ என்ன மயித்துக்குடா என் பாட்டனின் இலக்கியத்த பாடுற..?” என்று “இடும்பாவனம் கார்த்திக்” கர்ஜிக்கும் ஓசை வேறு என் காதில் கேட்கிறது.
சேரனின் போர்க்களத்தில் பருந்திற்கும் பேய்களுக்கும் நல்ல வேட்டை.
“அமர்க்கண் அமைந்த அவிர்நிணப்பரப்பில்
குழூஉச்சிறை எருவை குருதி ஆரத்
தலைதுமிந்து எஞ்சிய ஆண்மலி யூபமோடு
உருஇல் பேய்மகள் கவலை கவற்ற..”( பதி: ப; 67)
இரத்தக் கறை விரவிக்கிடக்கும் போர்க்களத்தில் பருந்துகள் குருதியை வேண்டுமளவு குடிக்கின்றன. தலையற்ற முண்டங்களுக்கு அருகில் பேய்கள் தோன்றி கண்போரை அச்சுறுத்துகின்றன.
வீரர்கள் விழுப்புண்களை பெருமையாக கருதினார். அழகிய பெருமை மிக்க வரிகள் என்று அத்தழும்புகள் பாடப்படுகின்றன
“ வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்” ( பதி;ப;67)
ஊன் வணிகர் இறைச்சிகளை இட்டு வெட்டும் மரக்கட்டை எப்படி கத்திவீச்சின் தளும்புகளால் நிறைந்திருக்குமோ, அதுபோல் அவ்வீரர்களின் உடல் முழுக்க வீரத்தழும்புகள். ஆகவே அவர்கள் சந்தனம் அணிந்திருக்கும் போதும் அதன் அழகு துலக்கமாவதில்லை. அப்படியான சான்றோர் பெருமகன்கள் அவர்கள்.
“ பாசவர் எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்” ( பதி;ப; 67)
கடல் முழங்குகிறது. எப்படி முழங்குகிறது? காற்றே தடி ஆகி கடலை முழக்குகிறது. அப்படி கடல் போல் முழங்கும் முரசங்களைக் கொண்டவன் சேரன். அவை வான் நிறைத்து ஒலிக்கின்றன.
கால் எனில் காற்று, கடிப்பு எனில் தடி..
“ கால்கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு…
கடுஞ்சிலை கடவும் தழங்குகுரல் முரசம்
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர…” ( பதி; ப; 68)
சேரன் போர்க்களம் சென்றுவிட்டான்.
பிரிவுத் துயரால் அவனது தேவியர் உறக்கம் தொலைகிறது. மெலிவால் அணிகள் நழுவுகின்றன. தன் காதலன் பிரிந்து சென்ற நாட்களின் கணக்கை ஓவியம் ஒத்த அரண்மனைச் சுவரில் , ஏற்கனவே சிவந்த தன் விரல்கள், மேலும் சிவக்குமாறு குறித்துவைத்து வருந்துகிறார்கள் அப்பெண்கள்.
“ பாயல் இன்மையின், பாசிழை நெகிழ
… ஓவு உறழ் நெடுஞ்சுவர் நாள் பல எழுதிச்
செவ்விரல் சிவந்த..” ( பதி;ப; 68)
“ …மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழும் என இழிதரும் பறைக்குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையாதாக, நீ வாழும் நாளே!” ( பதி; ப: 70)
வாழியாதா! நீ வானுலகும் கேட்கும்படி பறைக்குரலில் அருவிகள் ஒலித்திடும் அயிரை என்கிற பெரிய மலையைப் போல் அழியாது நீடு வாழ்வாயாக!
விளையாட்டிற்கு கூட பொய் சொல்லாதவன், பகைவரின் புறஞ்சொற்களை கேளா குற்றமற்றவன்
“ நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை..” ( பதி; ப; 70)
சங்கக் கவிதைகளில் அரசியை நேரடியாகப் புகழும் வழக்கமில்லை. ஆனால் ‘அழகும் மாண்பும் கொண்ட பெண்ணின் கணவனே!’ என்பது போல் அரசர்கள் விளிக்கப்படுவதுண்டு.
“.. கமழும் சுடர் நுதற்
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!..” ( பதி: ப; 70)
“ சேண் நாறு நறுநுதல், சேயிழை கணவ!” ( பதி; ப; 65)
அருகில் அல்ல, தூரத்திருந்தே
மணக்கிற நுதல் உடையவள் அவள்.

சங்ககவிதைகள் அகம் ,புறம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் சமயங்களில் அகத்தில் புறமும், புறத்தில் அகமும் இழையோடிவிடுவதும் உண்டு. “சேண் நாறு நறு நுதல் “ என்கிற வரியை தனித்து அறிய நேர்கையில், கட்டாயம் நாம் அதை அகப்பாடல்களில்தான் தேடுவோம். இது போன்றே அகப்பாடல்களிலும் அரசரின் வீரமும், கொடையும் போற்றப்பட்டுள்ளன. ‘வேள் எவ்வி’ மாண்டு போகையில் , அவனால் புரக்கப்பட்ட பாணர்கள் துக்கம் தாளாது, தங்கள் யாழினை முறித்துப் போடும் காட்சி அகப்பாட்டு நூலான அகநாநூற்றில் காணக்கிடைக்கிறது.
உன் முன்னோர்களும் உன்னைப் போன்றே அசைவில் கொள்கையர் ஆகவே அவர்கள் மண் செழித்த இவ்வுலகம் முழுதையும் இனிது ஆண்டார்கள். அவர்கள் தேசத்தில் கதிரவன் சுடவில்லை. மழை பொய்க்கவில்லை. நான்கு திசைகளிலும் எதிரிகளே இல்லை.
“ நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆதலின், அசையாது
ஆண்டோர் மன்ற இம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் ,சுடர்சினம் தணியப்… பெயல் புரவு எதிர
நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த
இலங்கு கதிர்த் திகிரி முந்திசினோரே” ( பதி;ப 69)
இந்தப் பாட்டில் சேரன் “ கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே! என்று போற்றப்படுகிறான். அதாவது தான் போர் தொடுத்து வென்ற நாட்டு மக்களை அவர்கள் நாட்டிலேயே முன்பு போல வாழ அனுமதித்தவன் என்று பொருள்.
தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டிருக்கிற பதிற்றிப்பத்து உரை இப்படிச் சொல்கிறது..
“ போரில் வென்ற அரசர்கள் பகைவர்களை அழிப்பதுடன் அந்நாட்டில் வாழும் குடிமக்களுக்குப் பெருந்துன்பம் விளைப்பர். இதுவே போர் நெறியாக எக்காலத்திலும் விளங்க , செல்வக்கடுங்கோ வாழியாதனோ தாம் வென்ற நாடுகளில் வாழும் மக்களுக்குத் துன்பம் ஏதும் விளைவிக்காமல் அவர்களை அந்நாட்டிலேயே மகிழ்வுடன் வாழும்படி செய்தான்”
புறநானூற்றில் ஒரு பாடல்..அதியமானின் மகன் பொகுட்டெழினியைப் புகழ்ந்து ஒளைவையார் பாடியது.. அவனுக்கு இரண்டு பகைகள் இருப்பதாக ஒளவை சொல்கிறார். ஒன்று அவனால் காதல் நோய் முற்றிய பெண்களின் பகை. இன்னொன்று அவன் வென்ற ஊரிலுள்ள மக்களின் பகை.
அவர்கள் தங்கள் ஊரின் நீர்த்துறைகளுக்குள் எந்த நேரமும் பொகுட்டெழினியின் போர் யானைகள் புகுந்துவிடும் என்கிற அச்சத்தால், அந்த ஊரில் தங்காமல் வேற்றிடம் நோக்கி ஓடுகிறார்கள்..
“… ஒன்றே
…… துறை நீர்க் கைமான் கொள்ளுமோ என
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே” ( புற; 96)
இந்தப்பாடலை எண்ணி ‘இன்று’ நாம் பெருமை கொள்ள ஏதுமில்லை. ‘ஒளைவயார் கவித்துவத்திரட்டில் ‘ இந்தப் பாடல் குறித்து எழுதுகையில் இழிவென்றே எழுதினேன்.
பதிற்றுப்பத்து பற்றி ம.ரா.போ எழுதுகிறார்..
“ வீரமும், காதலும் விளக்கப்பட்டவாறு நினைந்து பதிற்றுப்பத்தைச் சுவைக்க முயலுவோமாக! அணுயுகப் போர் அச்சத்தில்- காந்தியடிகளின் கொல்லாமை நினைவில் இந்த ‘வீர’த்தைக் கண்டு வியப்பது, மனித குல வரலாற்றின் போக்கில் ஒரு கட்டம்”
பதிற்றுப்பத்தின் 69 ம் பாடல் “ மண் கெழு ஞாலம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மரா.போ இந்தத் தலைப்பு செயற்கையாக உள்ளது என்கிறார்.
“ செயற்கை நயமாக உள்ளது. “கெடுகுடி பயிற்றிய கொற்றம்” என்று பெயர் தருதல் சிறப்பு”
ஆம்.. போர் நிலத்தில், பட்டினியால் குழந்தைகள் மண்ணள்ளித்தின்னும் காட்சியைக் கண்டுவிட்ட நாம் கவனம் கொள்ள வேண்டியது இந்த வரியின் மீதுதான்.

இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















