இந்தச் சம்பவம் 1951ம் ஆண்டு நிகழ்கிறது.
அன்று, நீர்கொழும்பு நகரிலிருக்கும் கேட் தோட்டம் என்ற தொடர் மனைக் குடியிருப்பு வீடொன்றில் ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அப்போதெல்லாம் வீட்டில்தான் செவிலித்தாயின் உதவியோடு மகப்பேறு பார்ப்பார்கள். பிள்ளை பிறந்த செய்தியை அறிந்ததும் அதன் தாய் வழித் தாத்தா வீட்டுக் கூரை மேலே கடகடவென ஏறிவிட்டார். அதில் நின்று, ஓடுகளைத் தடதடவென அடித்து அவர் ஊருக்குக் கட்டியம் கூறுகிறார்.
எனக்குப் பேரன் பிறந்துவிட்டான்.
முருகபூபதியின் ‘மல்லிகை ஜீவா நினைவுகள்’ (2001 வெளியீடு) நூலில் எழுதப்பட்டிருக்கும் இக்காட்சி மேலும் தொடர்கிறது.
அந்தத் தாத்தாவுக்கு அப்போது ஒரு கனவு இருந்தது. தன் மகள் குடும்பம் ஒரு சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்பது. தான் தன் பேரப் பிள்ளைகளோடு அங்கு கொஞ்சி விளையாடவேண்டும். கூடிய விரைவிலேயே அக்கனவும் நிறைவேறுகிறது. வாடகை வீட்டு வாழ்விலிருந்து, ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ முகவரியிலிருக்கும் வீட்டினை வாங்கி அந்தக் குடும்பம் குடி புகுகிறது. சொந்த வீட்டுக்குப் போனதுமே, தாத்தா முற்றத்தில் ஒரு மல்லிகைச் செடியை நட்டு வளர்க்க ஆரம்பிக்கிறார். அதற்குப் பசளை போடவும் தண்ணீர் ஊற்றவும் பேரனின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது. மல்லிகை வளர்ந்து, பந்தலும் போடப்பட்டு, அதற்குக் கீழே சாய்வு நாற்காலியில் தாத்தா உட்கார்ந்து ஓய்வெடுக்குமளவுக்குக் காலம் நகர்கிறது. பேரனும் வளர்கிறான். அதிகாலையிலே தாத்தா தான் எழுந்துவிடுவது மட்டுமின்றி பேரனையும் எழுப்பி, பந்தலடியில் அவனை இருத்திவைத்து தேவாரமும் பாடமும் சொல்லிக்கொடுப்பார்.
இது முருகபூபதியின் சொந்தக் கதைதான். தாத்தாவின் மல்லிகைப்பந்தலில் ஆரம்பிக்கும் ‘மல்லிகை ஜீவா நினைவுகள்’ நூல் ஏனைய அத்தியாயங்களில் எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவாவின் வாழ்வினை மணம் பரப்ப ஆரம்பிக்கிறது.
முருகபூபதியுடைய ‘அரச மரம்’ (1990, வீரகேசரி வெளியீடு) என்ற சிறுகதையில் இதே தாத்தா பிரதானப் பாத்திரமாகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் காவல் துறையில் பணி புரிந்த ‘பொலிஸ் தாத்தா’ இவர். இக்கதையில் அவருடைய பேரன் ஆரம்பப் பள்ளியில் படிக்கிறான். மதிய வேளைகளில் அவனைப் பள்ளி முடிந்ததும் கூட்டிச்செல்வதற்காக, பள்ளிக்கு முன்னே வளர்ந்து நின்ற அரச மர நிழலில் தாத்தா காத்து நிற்பார். மரத்தடியில் ஒரு திண்ணையும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் நாக தம்பிரானின் திண்ணையில் உட்காருவது பாவமென்று அவர் அதில் உட்காரமாட்டாராம். அரசமரம் மீது தாத்தாவுக்கு அப்படி ஒரு பற்றும் மரியாதையும். அதனருகே அமைந்திருந்த செம்மண் பாதையில் பலரும் காலைக்கடன்களைக் கழித்து, அருகிலிருந்த வாய்க்காலில் கழுவிவிட்டுப் போகிறார்கள் என்பதில் விசனமுற்று, உள்ளூராட்சி சபையில் அதற்கு முறைப்பாடும் கொடுத்து, அந்த மண் பாதையையே தார் வீதியாக்க ஏது செய்யுமளவுக்கு ஓர்மமும் செயற் திறனும் மிக்கவர் அந்தத் தாத்தா.
ஒரு நாள் வழமைபோல தன் பேரனைக் கூட்டிச்செல்ல அரசமரத்தடிக்கு வந்தவர், அங்கு யாரோடோ சண்டை போட்டுக்கொண்டிருந்தது தெரிகிறது. உள்ளூராட்சி சபை, வீதிக்குத் தார் போட்டதோடு நிற்காமல் அங்கே மின் கம்பங்களும் அமைத்து விளக்குகள் பொருத்தவும் தீர்மானித்துக் களத்தில் இறங்கியிருந்தது. அதற்காக மின் வயர்களை இழுக்கையில் குறுக்கே நின்ற சில அரச மரக் கொப்புகளைத் தறிக்கவேண்டி வந்துவிட்டது. அதனால்தான் தாத்தா அந்தக் கத்தல் கத்திக்கொண்டிருந்தார்.
‘கரண்ட் எடுக்க மரத்திண்ட கொப்பை ஆரும் வெட்டுவாங்களா? பாவிகள்’
இந்த மனக்கொதிப்போடும் அயர்ச்சியோடும் வீடு திரும்பிய தாத்தா, அன்று முழுதும் நிம்மதியின்றித் தத்தளித்து, ஒழுங்காகச் சாப்பிடாது, வெற்றிலைகூடப் போடாது படுத்தவர்தான். அடுத்த நாள் எழவேயில்லை.

இதே தாத்தா ‘சொல்ல வேண்டிய கதைகள்’ (2017 வெளியீடு) தொகுப்பில் ‘பொலிஸ்காரன் மகள்’ என்ற அத்தியாயத்தில் மறு பிரவேசம் செய்கிறார்.
இக்கதையினூடே காவல் துறையில் தாத்தா சார்ஜண்ட் தரத்தில் பணி புரிந்தது நமக்குத் தெரியவருகிறது. கண்டிப்பான மனிதர். அவர் முன்னாலே எவரும் பீடி, சுருட்டு பிடிக்கமாட்டார்களாம். இவர் பற்றித் தேடும்போது மேலும் பல சுவாரசியமான சம்பவங்கள் கிடைக்கின்றன. இந்தச் சம்பவம் 1920களில் நிகழ்ந்திருக்கலாம். நீர்கொழும்பில் அப்போது ஒரு வழிப்பறிக் கொள்ளைக் குழு ஊரையே அச்சுறுத்திக்கொண்டிருந்தது. அந்நேரம் அங்கு இளைஞராகக் காவல் துறையில் பணி புரிந்துகொண்டிருந்த தாத்தா, ஒரு நாள் பிச்சைக்காரன்போல மாறுவேடம் பூண்டு, வழிப்பறிக் கொள்ளையர் கூடுகின்ற இடத்துக்குப் போயிருக்கிறார். அங்கே கொள்ளையர்கள் ‘தாள்’ விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்விடம் அவர்கள் இருப்பதை உறுதிப்படுத்தியதும் அங்கு மறைவாகச் சுற்றி வளைத்து நின்ற காவல் துறையைத் தாத்தா விசில் ஊதி அழைக்க, முற்றுகை முற்றி மோதலாக மாறிவிட்டது. தாத்தா உட்படப் பலருக்குக் காயம். கொள்ளைக்காரர்களில் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டார். தாத்தாவின் இந்த வீர தீரச் செயலைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு வெள்ளிப் பதக்கம் வழங்கி அவரை கௌரவித்ததாம்.
இருபத்தேழு ஆண்டுகள் இடைவெளியில் வெளியான முருகபூபதியின் மூன்று வெவ்வேறு படைப்புகளினூடே இந்தப் பொலிஸ் தாத்தா பாத்திரம் மொத்தமாக மூன்று பக்கங்களுக்குள் அடங்குமளவுக்குதான் வந்து போகிறது. தன் பேரன் பிறந்ததும் கூரை ஏறிக் கட்டியம் கூறும், வீட்டு முற்றத்தில் மல்லிகை வளர்த்து அதனடியில் பேரனுக்குப் பாடம் போதிக்கும், அபிவிருத்தியின் பேரில் அரச மரக்கிளை வெட்டப்படும்போது வெகுண்டு எழும், ஒரு கண்டிப்பான நீர்கொழும்பு வாழ் பிரிட்டிஷ் கால பொலிஸ் பாத்திரம் என்பது இலக்கியத்துக்குத் தனித்துவமானது.
நாம் பெரிதும் அறிந்திராத ஒரு காலத்தின், நிலத்தின், மனிதரின் வாழ்வு நமக்கு மெல்லப் புலப்பட ஆரம்பிக்கிறது அல்லவா?
இப்போது தாத்தாவின் மகளுடைய வாழ்வினைப் பின் தொடரலாம். அதாவது முருகபூபதியின் அம்மா. அவருடைய எழுத்துகளில் மிக அதிகமாகத் தலை காட்டுகின்ற பாத்திரம். ‘சொல்ல வேண்டிய கதைகள்’ நூலில் வருகின்ற அதே ‘பொலிஸ்காரன் மகள்’. அப்பெயருக்கேற்பவே தன் அம்மாவும் மிகவும் கண்டிப்பானவர் என்கிறார் முருகபூபதி. அந்தக் குடும்பத்தை வழி நடத்தியதும் அவர்தான். பெயர் கதிர்மாணிக்கம். தன் தாயின் மரணப்படுக்கையிலும் ஈமக்கிரியையிலும் கூட இருக்கமுடியவில்லையே என்ற ஆதங்கம் முருகபூபதிக்கு இன்னமும் உண்டு. அவருடைய ‘கங்கை மகள்’ (2005 வெளியீடு) தொகுப்பிலிருக்கும் ‘உயிர் வாழ’ என்ற சிறுகதை அந்த அம்மாவின் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது. ‘சொல்ல மறந்த கதைகள்’ (2014 வெளியீடு) தொகுப்பிலிருக்கும் ‘கண்டம்’ சிறுகதையிலும் அது உண்டு. ‘சொல்ல வேண்டிய கதைகள்’ (2017 வெளியீடு) தொகுப்பிலும் அது உண்டு. முருகபூபதியின் மொத்த எழுத்துகளையும் வரிசைக்கிரமமாகப் படித்து வரும்போது இந்த அம்மா பாத்திரம் எப்படித் தன் இளமைப்பருவத்திலிருந்து வாழ்வை எதிர்கொண்டு, மூப்பு கண்டு, காலமாகிறது என்பதை உணர்வோடு உள்வாங்கமுடியும்.

முருகபூபதியின் ‘சுமையின் பங்காளிகள்’ (1975 வெளியீடு) தொகுப்பு முற்று முழுதாக நீர்கொழும்பின் மீனவ சமூகத்தைச் சுற்றி அமைந்த கதைகளைக் கொண்டது. ஆனால் அதில் வருகின்ற மரியா என்கின்ற பாத்திரத்தில் கொஞ்சமே முருகபூபதியின் அம்மா எட்டிப்பார்ப்பார். அக்கதையின் ஒரு காட்சியில் ‘வீட்டில் வறுமையைப்போல கூப்பன் அரிசியிலும் கற்கள் வியாபித்துக்கிடக்கின்றன’ என்று அவர் எழுதுகிறார். ‘அம்மா பசிக்குது’ என்று வயிற்றின் குரல் வாயில் பிரசவமாகிறது எனச் சிறுவனின் சிணுங்கல் விவரிக்கப்பட்டிருக்கும். அக்கதையின் பிறிதொரு காட்சியில் சிறுவன் ஸ்டீபன் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறான். கைக்குழந்தை பசியால் அழுகிறது. வீட்டில் றோஸ் பாணும் தேநீருந்தான் சாப்பாடு. கணவன் ஒரு ஊதாரி. சூதாட்டமும் குடியும் என்று அவன் குடும்பத்தின் சொத்துகளை இழக்க, தன் தந்தையின் உதவியால்தான் குடும்பம் கொஞ்சமாவது நகர்கிறது என்று மரியா புலம்புகிறாள்.
முருகபூபதியின் ‘இல 20, சூரியா வீதி’ வீட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம் என்ற சாத்தியத்தை அவருடைய இரு வேறு கட்டுரைகளிலிருந்து அறிந்துகொள்ளமுடியும்.
‘குல தெய்வம்’ கட்டுரை அவருடைய தந்தை நாற்பதுகளில் தமிழ் நாட்டிலிருந்து நீர்கொழும்புக்கு வந்திறங்கியதைப் பேசுகிறது. ஐம்பதுகளில் அவர் ஒரு சைவ உணவகத்தை அமைக்கிறார். ஆனால் அது நட்டத்தில் இயங்கியதில் கடனாளியாகிவிடுகிறார். தன் தந்தை ஒரு பரோபகாரி என்று பல இடங்களில் முருகபூபதி குறிப்பிடுகிறார். ஈற்றில் ‘இல 20, சூரியா வீதி’ வீடுமே அவரால் ஈடு வைக்கப்பட்டுக் கைவிட்டுப் போகின்ற நிலையில், அம்மாதான் நீதி மன்றத்தில் மன்றாடி தவணை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஈட்டைக் கட்டி வீட்டை மீட்கிறார் என்று கட்டுரை நீள்கிறது. ஐம்பத்தாறாம் ஆண்டளவில் அவ்வீட்டில் வறுமை தலை விரித்தாடுகிறது. முருகபூபதிக்கு அப்போது ஐந்து வயது. அதிகாலையிலேயே எழுந்து அம்மா தோசை, சட்னி, சாம்பார் என்று சமைத்துக் கொடுக்க, சிறுவன் முருகபூபதியும் அவருடைய அக்காவும் பாட்டியும் ஆளுக்கொரு திசையில் வட்டில்களில் சமைத்த உணவினைச் சுமந்துகொண்டு கடற்கரைக்குச் செல்வார்களாம். அங்கே காலையில் குவிந்திருக்கும் மீனவர்களிடம் ‘தோசை, தோசை’ என்று கூவி விற்ற அச்சிறுவனை ‘தோசைச் சிறுக்கன்’ என அந்த மனிதர்கள் பழித்திருக்கிறார்கள். ஒரு நாள் அவரின் தாயார் தோசைக்கல்லில் மா ஆட்டிக்கொண்டிருக்கையில் இளைய தம்பி பசிக்கிறது என்று அம்மாவின் தோளைப் பற்றி அழுதிருக்கிறான். அவனது பசியைப் போக்க முடியவில்லையே என்று தாய் புலம்புகிறார். இதைப் பார்த்து மனம் கேளாத பக்கத்து வீட்டுப்பெண், அருகிலிருந்த கடைக்கு ஓடிப்போய் பால்மா வாங்கி வந்து தம்பிக்குக் கொடுத்த காட்சியை முருகபூபதி ‘குல தெய்வம்’ கட்டுரையில் உருக்கத்தோடு விவரிக்கிறார்.
ஆக, ஐம்பத்தாறில் அவரது வீட்டில் நிஜமாக நிகழ்ந்த சம்பவம் எழுபதுகளில் ஒரு மீனவக் குடும்பத்தின் நிகழும் கதையாகப் புனைவானது. ‘சுமையின் பங்காளிகள்’ நூலில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் ‘வறுமையைப்போல கூப்பன் அரிசியிலும் கற்கள்’ போன்ற இலக்கியச் சித்தரிப்புகள் தொண்ணூறுகளுக்குப் பின்னர் வந்த முருகபூபதியின் எழுத்துகளில் அரிதாகவே இடம்பெறுகின்றன. இரண்டாயிரங்களில் எழுதுகையில் விடயங்களைப் புனைவுகளாக்கும் உத்திகளைக்கூட அவர் கடந்துவிட்டிருக்கவேண்டும். ஒருவேளை புனைவின் சாலங்களில் அவருக்குச் சலிப்பு நேர்ந்திருக்கலாம். நிஜ வாழ்க்கை நம்மை இத்தனை ஆழமாக அழுத்தும் என்றால் அதற்குப் புனைவு முலாம் பூசவேண்டிய தேவைதான் என்ன என்றுகூட அவர் யோசித்திருக்கலாம்.
அடுத்து முருகபூபதியின் அம்மாவிடமிருந்து அவருடைய பாட்டியை நோக்கி நகரலாம்.
‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ வீட்டிலிருந்து சில நூறு அடிகள் நடந்தாலே கடற்கரையை எட்டிவிடலாம். அந்தக் கடற்கரையில் சிறுவன் முருகபூபதி தன் தம்பியோடும் அக்காவோடும் சேர்ந்து விளையாடும் காட்சி ஒன்று இப்படி விரிகிறது.
கடலுக்கடியில் சூரியக்கோளம் சரிந்துகொண்டிருக்கிறது. அக்காள் அந்தப் பக்கம் கயிறடித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவளின் தம்பிகள் இருவரும் தம் காற்சட்டைப் பைகள் முழுதும் சிப்பிகளையும் சோகிகளையும் நிறைத்து வைத்திருக்கிறார்கள். தம்பிக்காக அண்ணன் மணலில் குழி தோண்டி, அவனது கால்களை உள்ளே இறக்கிவிடுகிறான். தம்பிக்கோ குதூகலம் தாளவில்லை. அதிலும் அடிப்பாதத்தினுள் கடல் நீர் ஊறவும் குறுகுறுப்பு எகிறிவிட்டது. அவன் சத்தமாகச் சிரிக்கிறான். இவர்களின் கலகலப்பைப் பார்த்து அக்காளும் ஓடிவந்து இவர்களோடு இணைகிறாள். அண்ணன் தோண்டியதைவிட ஆழமாக அவள் குழி அமைத்துக்கொடுக்க, அதற்குள் தம்பி இப்போது காலை விடுகிறான். அண்ணனுக்கோ ‘எப்படி நீ, என் குழியை விட்டுவிட்டு அக்காவின் குழிக்குள் போகலாம்?’ என்று கோபம் வந்துவிடுகிறது. அவன் தம்பியைத் தடுக்க, தம்பி அவன் மீது மண்ணைக் கொட்ட, நண்டுகள் நாலா புறமும் சிதறி ஓட, சூரியன் இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி படுக்கைக்குப் போகிறான் என்று முருகபூபதி எழுதுகிறார்.
வாசிக்கையில் நமக்கும் அந்தக் காட்சி சுடர்விட்டு ஒளிர்கிறது அல்லவா?
கடற்கரையில் சிப்பியும் சோகியும் பொறுக்கும் சிறுவர்கள் அவர்களோடு கூடி விளையாடும் ஏனைய சிறுவர்களிடமிருந்து சில தூஷண வார்த்தைகளையும் சேர்த்துப் பொறுக்குகிறார்கள். பின்னர் அந்த வார்த்தைகளை வீட்டிலும் அவர்கள் பிரயோகிக்க, பாட்டியிடமிருந்து திட்டு விழுகிறது. பாட்டியின் பெரும் அறம் என்னவெனில் அவர் தன் பேரக்குழந்தைகளைத் திட்டியது மாத்திரமின்றி, கடற்கரைக்குச் சென்று ஏனைய சிறுவர்களையும் ஏசித் திருத்த முயல்வாராம். பாட்டியால் பல சமயங்களில் அந்த நண்பர்கள் தன்னை விளையாட்டுக்கே சேர்ப்பதில்லை என்று சிறுவன் ஆதங்கப்படுகிறான்.
அந்தப் பாட்டியின் பெயர் தையலம்மா. அவர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர். அதே பொலிஸ் தாத்தாவின் மனைவிதான் இவர். பொலிஸ் தாத்தா யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். நீர்கொழும்புக்குப் பணி நிமித்தமாகச் சென்ற வேளையில் கார்த்திக்கேசு தையலம்மாவைக் கண்டடைந்திருக்கிறார். அதாவது 1925ம் ஆண்டுப்பகுதியில் நிகழ்ந்திருக்கக்கூடிய காதல் கதை இது. வழமைபோல வீட்டிலிருந்து எதிர்ப்பும் பழிப்பும் அந்த இணைமீது பரவுகிறது. இவர்களின் மகள் கதிர்மாணிக்கம் மாதகலில் பிறக்கிறார். எனினும் குடும்பம் நீர்கொழும்புக்கு நிரந்தரமாகக் குடி பெயருகிறது. தாத்தா இறுதிக்காலம்வரை பாட்டியைத் பதிவுத் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து மறைந்து போனாராம். அதனால் சட்டப்பூர்வமான மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காது, தாத்தாவின் ஓய்வூதியமும் பெற முடியாது, சொந்த உழைப்பிலேயே பாட்டி தொண்ணூற்றைந்து வயதுவரை வாழ நேர்ந்தது என்று முருகபூபதி ‘பாட்டி சொன்ன கதைகள்’ (1997 வெளியீடு) நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இங்கும் வறுமைக்காலத்தில் பாட்டியோடு கடற்கரையில் தானும் தோசை, பிட்டு விற்றுப் பிழைத்த காலத்தை அவர் எழுதுகிறார்.

முருகபூபதியின் எழுத்துகளில் இந்தப் பாட்டியின் தடங்கள் ஏராளம் பதிந்திருக்கின்றன. மனிசி சற்றுத் தன்மானமும் முன் கோபமும் கொண்டவர். அடிக்கடி மகளோடு கோபித்துக்கொண்டு திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்று தல யாத்திரை கிளம்பிவிட்டால் வாரக்கணக்கில் அவரைப்பற்றிய தகவலே அறிய முடியாமற் போகுமாம். இப்படிக் கோயில்களுக்குப் போகும்போதெல்லாம் அவர் மொட்டை அடித்துவிடுவார். ஆயினும் பாட்டி எப்படியும் தன் ஒரே மகளின் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படி ஒருமுறை கோபித்துக்கொண்டு போன பாட்டி, எங்கோ ஒரு கோயில் சத்திரத்திலிருந்து சிறுவன் முருகபூபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். எழுத வாசிக்கத் தெரியாத பாட்டி, கோயில் பூசகரின் உதவியோடு பேரனுக்குக் கடிதம் எழுதி தன் கைநாட்டை வைத்து அனுப்பியிருக்கிறார். அம்மாவைக் கஷ்டப்படாமல் பார்த்துக்கொள் என்று மகள்மீது கரிசனை கொண்டு எழுதியிருந்தாலும் அதனைத் தன் மகளுக்கே நேரடியாக எழுத அவரின் ‘ஈகோ’ தடுத்துவிட்டது என்று முருகபூபதி குறிப்பிடுகிறார். அந்தக் கடிதத்துக்கு சிறுவன் முருகபூபதி எழுதிய பதில் கடிதம்தான் தன்னுடைய முதல் படைப்பெழுத்து என்று ‘பாட்டி சொன்ன கதைகள்’ முன்னுரையில் முருகபூபதி பெருமிதப்படும்போது வாசிப்பவர்களிடத்திலும் அந்தப் பெருமிதம் சிறு புன்னகையோடு சூழ்ந்துவிடுகிறது. ‘நடைப் பயிற்சி’ என்ற பிறிதொரு கட்டுரையில் பன்னிரண்டு வயதில் பாட்டியோடு கதிர்காமத்திலிருந்து செல்லக்கதிர்காமத்துக்கு நடந்து சென்ற கதையையும் முருகபூபதி எழுதுகிறார்.
ஊரவர்கள் தம் கால்களுக்கு உளுக்கு எடுப்பதற்கு தையலம்மா பாட்டியைத் தேடு வருவதுண்டாம். அதற்கு ஊதியமாக வெறுமனே வெற்றிலை பாக்கினைத்தான் அவர் பெற்றிருக்கிறார். இல்லை என்று யாரேனும் வலிந்து பணம் கொடுத்தால், அதனைச் சேமித்து மனிசி தல யாத்திரைகளுக்குப் பயன்படுத்திவிடுமாம். இரவில் தன் பேரப்பிள்ளைகளைத் தூங்க வைக்கக் கதை சொல்லும் வழக்கமும் பாட்டிக்கு இருந்திருக்கிறது. இக்கதைகளைத்தான் ‘பாட்டி சொன்ன கதைகள்’ நூலில் முருகபூபதி தொகுத்துள்ளார். இத்தொகுப்பில் உள்ள ‘உழைப்பு’ என்ற சிறுகதையில், ஒரு ஆல மரத்துக்குக் கீழே தன்னுடைய கால் புண்ணைக் காட்டிக் கையேந்தும் பிச்சைக்காரனுக்குப் புத்தி சொல்லும் மூதாட்டி ஒருவர் வருகிறார். அதிகாலை எழுந்து தோசையும் சம்பலும் செய்து தெருத்தெருவாக விற்கும் அதே தையலம்மா பாட்டிதான் அவர். தன் வீட்டுக் குழந்தைகளை மட்டுமின்றி கடற்கரையில் நிற்கும் சிறுவர்களையும் தேடிச்சென்று திருத்த முயலும் அந்தப் பேரறம் ‘பாட்டி சொன்ன கதைகள்’ முழுதிலும் நிறைந்திருப்பதை வாசகர்கள் அறிந்துகொள்ளமுடியும்.

பொழுது இக்கணம் ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ இல்லத்தின்மீது கொஞ்சம் கொஞ்சமாகப் புலர்கிறது அல்லவா?
பொலிஸ்காரத் தாத்தா கார்த்திகேசு. முற்கோபமும் தன்மானமும் கொண்ட அவரது காதல் மனைவி தையலம்மா. அவர்களுக்கு ஒரே மகள் கதிர்மாணிக்கம். தமிழ்நாட்டிலிருந்து வந்திறங்கிய இளைஞன் லெட்சுமணனை அந்த மகள் திருமணம் செய்கிறார். அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ வீட்டை அவர்கள் வாங்குகிறார்கள். வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் கடற்கரை. குழந்தைகள் தினமும் கடற்கரையில் விளையாடி வீடு திரும்புகிறார்கள். வியாபாரத்தில் நட்டம். ஊதாரித்தனம். வீட்டில் வறுமை தலை எடுக்கிறது. கால ஓட்டத்தில் வயதானவர்கள் மரணிக்கிறார்கள். அரசமரம் தறிக்கப்பட்ட கொதிப்பில் தாத்தா மாரடைப்பு வந்து காலமாகிறார். எண்பத்து மூன்று கலவரத்தில் நண்பர்களை இழந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பு வந்து காலமாகிறார். பாட்டி, தாய், அக்கா என்று பெண்களின் உழைப்பிலும் தலைமைத்துவத்திலும் அந்த வீடு வாழ்கிறது. குழந்தைகள் தலை எடுக்கிறார்கள். பின்னர் பாட்டியும் மறைந்து போகிறார். பதின்மத்து முருகபூபதி இளைஞனாகிறான்.
‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ இல்லத்தைச் சுற்றி நிகழும் இப்புள்ளிகள் எல்லாவற்றிலும் ஒரு தனித்துவமான பேரிலக்கியத்துக்கான வித்துகள் விரவிக்கிடக்கின்றன.
ஆங்கில இலக்கியத்தில் ‘anatomising an area’ என்றொரு பிரயோகம் உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட களத்தை உள்வாங்கி, ஆழ அதனை அலசி, அதன் மனிதர்களையும் வாழ்வையும் எழுதுவதன் மூலம் அக்களத்துக்கு ஒரு முழு உருவினைக் கட்டமைப்பது. வில்லியம் போஃக்னர் அமெரிக்காவின் தென் மாநிலங்களின் அரசியல் சமூகச் சூழலைத் தன் சிறுகதைகள், நாவல்களினூடு இப்படி உருவகம் கொடுத்திருப்பார். அலீஸ் மன்றோவின் ஏராளம் சிறுகதைகளினூடு ஒண்டாரியோ, ஹூரோன் என்கின்ற கிராமம் அதன் பலம், பலவீனங்களோடு சேர்த்தே உயிர்பெற்று எழுந்தது. தமிழில் கீ.ராஜநாராயணின் பல கதைகளினூடாக ஒரு காலத்தின் கரிசல் நிலத்து மனிதர்களின் வாழ்வினை, அவர்களது புலம்பெயர்வுகளை எம்மால் உருவகித்துப் பார்க்கமுடிகிறது. அதேபோல, முருகபூபதியின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கும்போது அவருடைய ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ இல்லமும் உருப்பெற்று பலங்களும் பலவீனங்களும் நிறைந்த ஒரு மனிதராய் எழுந்து நிற்கிறது.
ஆனால் இதைக் கண்டடைவதற்கு நாம் ஐம்பது வருட கால முருகபூபதியின் பல்வேறு எழுத்து வடிவங்களை வாசிக்கவேண்டும். சிறுகதைகள், கட்டுரைகள், முன்னுரைகள், ஆளுமைகள் பற்றிய பதிவுகள் என்று முருகபூபதி எண்ணற்ற ஆக்கங்களை இக்காலப்பகுதியில் எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து பல நாவல்களை எம்மால் அகழ முடியும். அவருடைய ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ என்ற எழுதப்படாத நாவலையும் அப்படித்தான் அகழ்ந்து அறியவேண்டும். ஒரு தேர்ந்த படைப்பு அதன் முழு உருவை அடைவதற்குப் பல சமயங்களில் எழுத்தாளரினதும் வாசகரினதும் கூட்டு உழைப்பினை வேண்டி நிற்கிறது. ‘உரைமாண்ட உள்ளொளி வந்துளம் புகலும்’ என்ற திருத்தோள் நோக்க வரிகளைப்போல, முருகபூபதியின் பெரும் படைப்புகள் சில அவருடைய ஏராளம் எழுத்துகளில் எங்கணும் புதைந்துகிடக்கிறது. அவர் புலம்பெயர்ந்து தொண்ணூறுகளுக்குப் பின்னர் எழுதிய ‘சமாந்தரங்கள்’, ‘எங்கள் தேசம்’, ‘வெளிச்சம்’, ’கதைத் தொகுப்பின் கதை’ போன்ற நூல்களை மேலும் ஆராய்கையில் 1920களில் ஆரம்பிக்கும் இந்நாவல் எப்படி 2020கள்வரை நூற்றாண்டுகளுக்கு நீளக்கூடியது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இரண்டாயிரங்களில் அவர் எழுதிய பல படைப்புகளில் புலம்பெயர்ந்த, வயதான முருகபூபதி தன் அம்மாவின் வேடத்தைப் பிள்ளைகளுக்கும் பாட்டியின் வேடத்தைப் பேரப்பிள்ளைகளுக்கும் எடுத்துக்கொள்கிறார். ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ வாழ்வின் பிறிதொரு வடிவம் புதிய நிலத்தில் நிகழ்ந்தேறுகிறது. இவரின் பேரப்பிள்ளைகளுக்கு அந்த நீர்கொழும்பு சிறுவர்களின் பாத்திரங்கள் கிடைக்கின்றன. களமும் காலமும் மட்டும் வேறாகிவிடுகிறது. புலத்து வறுமை புலம்பெயர் நிலத்தின் வறுமையுடைய வடிவுக்கு மாறுகிறது. 1950களின் குழந்தைகளைப்போலன்றி இப்பிள்ளைகள் தம் தாத்தாவுக்கு அவை பிறந்த நிலத்தின் மொழியையும் வாழ்வையும் புகட்ட முனைகின்றன (கதைத்தொகுப்பின் கதை, எங்கள் தேசம்). நூற்றாண்டுக் காலத்துக்கு விரிந்து கிடக்கும் முருகபூபதியின் மாந்தர்களுடைய உரைமாண்ட உள்ளொளியை புரிந்துகொள்ளும் கணத்தில், கேப்ரியல் கார்சியா மார்காஸின் ‘100 Years of Solitude’ நாவலின் சாத்தியம் இங்கும் புதைந்திருக்கிறது என்பதை வாசகர் உணர்ந்துகொள்வர். முருகபூபதியிடமிருந்து நேரடியாக நிகழ மறுத்த சாத்தியம் இது. ஆயினும் தேர்ந்த வாசிப்பினூடு அதனை நம்மால் தேடிக் கண்டடையக்கூடியதாகவே இருக்கிறது.
இந்த ஒப்பிடல் எப்படிப் பொருத்தமானது என்பதற்கு எழுபதாம் எண்பதாம் ஆண்டுகளில் வாழ்ந்த இளைஞர் முருகபூபதியை அவர் எழுத்துகளினூடு அறிந்துகொள்வது அவசியமாகிறது.
எழுபதுகளில் முருகபூபதிக்கு வயது வெறுமனே இருபதுதான். அப்போது தென்னிலங்கையில் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சி தோன்றுகிறது. இடதுசாரிக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் சேர்ந்து முன்னெடுத்த பெரும் போராட்டம் அது. அவர்களோடு இளைஞன் முருகபூபதியும் இணைகிறார். கட்சியின் பிரசாரங்களில் பங்கெடுக்கிறார். அதேசமயம் பத்திரிகையாளராகவும் பணியாற்றுகிறார். வரலாறு பதிந்திருக்கும் பல மனிதர்களோடும் சம்பவங்களோடும் அந்த இளைஞன் அவ்வப்போது இணைந்து மீள்கிறார். ‘கண்ணுக்குள் சகோதரி’ (சொல்ல மறந்த கதைகள், 2014 வெளியீடு) என்ற கட்டுரையில் அவர் பகிரும் உண்மைச் சம்பவம் ஒன்று சுவாரசியமானது. கிளர்ச்சிக்காலத்தில் ஒரு இலங்கை ஆசிரியர் சங்க அலுவலகத்தில் அவர் இயக்கத்துக்காகப் பிரசாரச் சுவரொட்டிகளை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், பூச்சு மை அவருடைய கண்களுக்குள் கொட்டிவிட்டது. எரிச்சல் தாங்கமுடியவில்லை. கண்களையும் திறக்க இயலாமல் அவர் அவஸ்தைப்படுகிறார். காவல் துறையின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் அவரால் வெளியே சென்று உதவி கேட்கவும் முடியாது. அப்போது அந்த இடதுசாரி அலுவலகத்திலிருந்த சிங்களப்பெண் அவளது தமக்கையிடமிருந்து தாய்ப்பால் பெற்று வந்து அவருடைய கண்களுக்குள் விட்டுவிடுகிறாள். இது அடுத்த நாளும் தொடர்கிறது. வீங்கிய கண்களோடு இவரால் சுவரொட்டிகளை எழுத முடியாது என்பதால் அந்தத் தமிழ் தெரியாத சிங்களப் பெண்ணே இவர் தமிழில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்துப் பிரதி எடுத்து சுவரொட்டிகளை எழுதிக்கொடுக்கிறாள். முருகபூபதியிடமிருந்து தான் இனி தமிழ் கற்றுக்கொள்ளப்போகிறேன் என்று சொல்லிப் புன்னகைக்கிறாள். இச்சம்பவத்தை அவர் வீட்டில் வந்து சொல்லும்போது தாய்க்காரி எச்சரிக்கை செய்கிறார்.
சரிதான், பால், படிப்பு என்று வேறு எங்கும் போய்விடாதே.
உயிர்ப்பிச்சை (சொல்ல மறந்த கதைகள், 2014 வெளியீடு) எனும் கட்டுரையில் இவர் தெரணியகலை கிராமத்துக்குத் தன் அத்தை குடும்பத்தைப் பார்க்கப்போகிறார். அத்தையின் மகள்களுள் ஒருத்தியை இவருக்குத் திருமணம் முடித்து வைக்கலாம் என்ற பேச்சு அப்போது இருந்தது. அந்தச் சமயத்தில் ஜே.வி.பி தலைவர் ரோகண விஜேவீரா அந்த ஊரில் ஒளிந்திருக்கிறார் என்று செய்தி பரவியதில் காவல் துறையின் பிரசன்னமும் கெடுபிடியும் அதிகமாக இருந்திருக்கிறது. முருகபூபதி வேறு ஜே.வி.பியின் உறுப்பினர். அக்காலத்தில் ஜே.வி.பியின் உறுப்பினர் என்பது தெரியவந்தாலே காவல் துறை கையால் மரணம்தான் என்ற நிலை இருந்தது. ஊருக்குப் புதிதாக வந்த முருகபூபதியைப் பிடித்துக் காவல் துறை விசாரிக்கிறது. ஆனால் தமிழர் என்ற ஒரே காரணத்தினால் இவர் ஜே.வி.பியாக இருக்கச் சந்தர்ப்பமில்லை என்று அவர்கள் இவரை விட்டுவிட்டனர். இங்கு இரண்டு முரண் நகைகள் இலக்கியத்தில் இணைகின்றன. ஒன்று, தமிழர் என்பதால் இவ்விளைஞர் ஆயுதக் கிளர்ச்சியில் பங்கெடுத்திருக்கமாட்டார் என ஶ்ரீ லங்கா காவல் துறை நினைத்தது. இரண்டு, எந்த அமைப்பின் உறுப்பினர் என்று தெரிந்தால் அரசுப்படைகளால் கொல்லப்பட நேரிடும் என்ற அச்சுறுத்தல் இருந்ததோ, அதே அமைப்பு ஐம்பது வருடங்கள் கழித்து அதே நிலத்தில் அரசுக்கட்டில் ஏறியது.
இந்தக் களமும் குடும்ப உறவுகளும் மனிதர்களும் காலத்தின் போக்கில் தலைகீழாகும் வாழ்வுகளும் கேப்ரியல் மார்காஸின் நாவலிலும் காணக்கூடியதாக இருக்கும். கொள்கைகளின் தோற்றுவாய், அவை எப்படி நாள் கண்டு, முற்றி, அபத்த மூட்டைகளாக மாறுகின்றன, அவற்றின் அழிவு எதனால், எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதெல்லாம் முருகபூபதியின் எழுத்துகளில் அடி நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் ஒரு மேலோட்ட வாசிப்பில் அவற்றின் தீவிரம் பெரிதாக உணரப்படுவதில்லை. மார்க்காஸின் நாவலில் அமைந்ததைப்போலவே நான்கு தலைமுறைகளின் வாழ்வும் புலம்பெயர்வும் முருகபூபதியின் படைப்புகளிலும் இருக்கிறது. மார்க்காஸ் படைத்தது மக்கண்டோ என்ற நகரம் என்றால், முருகபூபதி எழுதியது நிஜமான ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ முகவரியின் மனிதர்களையும் அது குடிகொண்ட நிலத்தின் வாழ்வையும். கண்டங்கள் மாறினாலும் மனிதர்களின் வாழ்வும் சமூகச் சூழலும் அபத்தங்களும் பெரிதாக மாறுவதில்லை. இலக்கியங்களும் இவற்றை இனங்காணத் தவறுவதில்லை. ஒரே பெரிய வேறுபாடு. மார்க்கஸ் தன் நாவலைத் தானே உருவகப்படுத்தி மாயா சாலங்கள் சேர்த்து ஒரு தனி இலக்கியமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஆனால் முருகபூபதியின் எழுத்துகளிலிருந்து அந்த சாலத்தை வாசகர்களே அகழ்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. புள்ளிகளைக் கோர்த்து நாவலை நெய்வது நம் வேலையாகிறது. எவ்வாறாயினும் இரண்டினதும் உள்ளொளி என்னவோ ஒன்றுதான்.
அதுதான் இவ்விலக்கியங்களில் உளம் புதைந்திருக்கும் அன்பு சூழ் அறம்.
‘தலை முறைகள்’ (மல்லிகை, 1991 வெளியீடு) கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் இச்சம்பவம் எண்பதுகளில் இடம்பெறுகிறது. அப்போது இளைஞன் முருகபூபதிக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகளும் பிறந்துவிட்டன. மூத்த மகள் பாரதிக்கு ஐந்து வயது இருக்கலாம். பாட்டி சொன்ன கதைகள் அவளுக்கும் புகட்டப்படுகின்றன. ஒரு நாள் அதே ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ வீட்டு முற்றத்தில் பாரதி விளையாடிக்கொண்டிருக்கையில், பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் பன்றிகளுள் ஒன்று இவர்களது வளவுக்குள் நுழைந்துவிடுகிறது. உடனே தாய்க்காரி, ‘முற்றத்தில் அது அசிங்கம் பண்ணப்போகுது’ என்று அதனை கல்லெறிந்து விரட்டுமாறு மகளுக்குச் சொல்ல, சிறுமி மாட்டேனென்று புறுபுறுக்கிறாள்.
பன்றி பாவம் அம்மா, அது எங்கட சிவபெருமான், அடிக்கக்கூடாது.
சிவபெருமான் பன்றிக்குட்டிகளுக்குத் தாயாக மாறிப் பாலூட்டிய கதை அந்தச் சிறுமியின் மூளைக்குள் புதைந்துவிட்டிருந்தது. அந்தக் கதையின் அன்பும் சேர்ந்தே அங்கே ஊறிப்போனது. அதுதான் ‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ இல்லத்தின் எளிமையான வாழ்வது புகட்டிய அன்பு. தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட அன்பு. முருகபூபதியின் எழுத்துகளிலும்கூட அந்த அன்பினையே நாம் காண்கிறோம். அதனிலும் மேலாக, முருகபூபதி என்ற மனிதரின் அகம் முழுதுமே அந்த அன்புதான் நிறைந்து நிற்கிறது.
நாமெல்லோரும் கற்றுத் தெளியவேண்டிய அன்பு அது.
000
எழுத்தாளர் முருகபூபதியின் படைப்புகளைப் படிக்க:

ஜே.கே
அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















