
உப்பு நீராடு
நாள்பட்ட பாவங்களின் கறை
நன்னீரில் போகாது
கண்ணீரில் நீராடு
கடலில் நீராடு
கூட்டம் கூட்டமாய் வரும் யாத்திகர்கள்
உன் கண்ணீருக்கு துணையாய் இருப்பார்கள்
ஓ மரியே
யா அல்லாவே
ஓ ஈஸ்வரனே
ஏய் மனசாட்சியே
என் செல்லக் கண்ணீரே
என் வசீகர துரோகமே
என் துரோகத்தின் கறையே
ஓ மானுடமே
கூவு மனதுக்குள் கூவு
கடலோடு சேர்ந்து கூவு
எந்த நல்லூழோ
யாருடைய நல்லூழோ
சமீபத்தில் எந்த மரணமும் இல்லை
இன்றைக்குப்போல்
என்றைக்கும் வாய்க்காது
அந்தச் சூரிய ஒளியில்
நீயும் தூய்மையாகத்தான் தெரிகிறாய்
இன்று உன் பரிசுத்தத்தைத்தான்
நீ கைகூப்பி தொழுகிறாய்
உன் குற்றவுணர்ச்சிக்காகத்தான்
மண்டியிட்டு பிரார்த்திக்கிறாய்
உனக்கான தண்டனையாகத்தான்
கால் கடுக்க நடந்தாய்
இன்றைக்குப்போல்
என்றைக்கும் வாய்க்காது
கூட்டம் கூட்டமாய் வரும் யாத்திகர்கள்
உன் கண்ணீருக்கு துணையாய் இருப்பார்கள்
ஈரத்துணியோடு
குடும்பத்தோடு
நண்பர்களோடு
அழுதபடி பின்னர் சிரித்தபடி
அந்த மோசமான தேநீரை அருந்து
இப்போது உன் நாக்கில்
தித்திப்பது
எந்தக் கரும்பின் ஆசுவாசம்
விடுதி அறையின்
பாதரசம் கரைய
உன் கண்ணில் ஒளிர்வது
எந்த குற்றத்திற்கான மன்னிப்பு
000

சோ.விஜயகுமார்
சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















