வண்ணச் சீறடிகள் : செந்தில் ஜெகன்நாதன்

எம். கோபாலகிருஷ்ணனின் மனையறம் நாவலை முன்வைத்து

என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்

-அடைக்கலக்காதை

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்

-வழக்குரை காதை

கண்ணகியின் பாதம் முன்பு பூமி அறியாத மென்மை கொண்டது; பின்னர் அதே பாதம் மதுரையை எரிக்கிறது. சாதாரண மனிதப் பெண்ணிலிருந்து தெய்வமாக உயர்ந்த பரிணாமம் என்று கூறலாம். அதாவது Pure innocenceல் இருந்து More Matured க்கு அடைந்திருக்கும் மாற்றம்.

இந்த மாற்றும் காலகட்டத்தை அன்றாடம் நாம் அறிந்த பெண்களின் கதைகளாக எழுதினால் அதிலும் இப்படியான பரிணாம மாற்றங்களை நாம் தரிசிக்க முடியும். அப்படி எழுதப்பட்ட நான்கு பெண்களின் பரிணாமத்தைப் பற்றிய நாவல்தான் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ள மனையறம் நாவல். 

தோளில் குழந்தையுடன் எங்கே போவதென தெரியாமல் தெருவில் திகைத்து நின்ற கனகதுர்கா பெரும் ஆளுமையாக உருவெடுப்பதற்குப் பின்னால் அவள் எதிர்கொண்டவை,

நாளிதழ், வார இதழ்களில் வரும் நகைகளின் புகைப்படங்களை கத்தரித்து சேகரிக்கும் விஜி தான் விரும்பிய நகைகளே இரும்புச் சங்கிலியாக மாறி தன் கழுத்தை இறுக்கிய வாழ்விலிருந்து பெற்றது என்ன?,  

பொறுப்புக்கு அஞ்சும் தாய்க்குப் பிறந்தவர்களான, தங்களின் சுதந்திரத்தின் பொறுப்புணர்ந்த பிந்துவும், லேகாவும் வாழ்வில் இழந்து அடைந்தது எதை?

காதலை நிரூபிக்க உயிர் துறந்த கதைகள் உண்டு, இறப்புக்கு அருகில் சென்று காதலின் பொருட்டு வாழ்வதன் அதீத துன்பம், அதீத மகிழ்ச்சி இரண்டையும் அனுபவித்த ஃபெலிக்ஸ் வாழ்வில் உணர்ந்தது எதை?

என இந்த நான்கு கதைகளிலும் இப்படி விரிந்து வாழ்வின் அபாரமான கணங்களை இந்நாவலில் தரிசிக்க வைத்திருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன்.

நாவலின் முதன்மையாக என்னைக் கவர்ந்த அம்சம் அதன் மொழியும், கதையோட்டமும் என் உள்ளங்கைக்குள் கனமான ஒரு மலர் (696 பக்கங்கள்) இதழ் மலர்வதைப் போல விரிந்துகொண்டே சென்றது. 

இந்தக் கதைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலைகளும், நாடகீயத் தருணங்களும், உணர்ச்சிபூர்வமான சூழல்களும் நல்ல இலக்கிய வாசிப்பு அனுபவத்தை வழங்குகின்றன. 

நாடகீயத் தருணங்கள் கலையமைதியோடு மேலெழுந்து வரும் பல இடங்களை இந்நாவலில் சொல்ல முடியும், தன் சுதந்திரத்திற்காகவும், பணிக்காகவும் கைக்குழந்தையாக இருக்கும்போதே பாட்டியிடம் விட்டுச்சென்ற அம்மாவின் மீது எந்த உணர்வுமின்றி இருக்கிறாள் மகள், காலம் கடந்து தன் பிழைகளை உணர்ந்து, அறிவோடு வளர்ந்து நிற்கும் மகளை வாரி அணைக்கத் துடிக்கிறாள் தாய். ஒரு சூழலில் தாங்க முடியாமல் மூர்ச்சையாகிக் கிடக்கும் மகள் தாயின் மடியில் கண்விழிக்கிறாள். எழுந்துகொள்ளவும், மடியிலேயே இன்னும் சில நேரம் கிடக்கவுமான பறிதவிப்பின் ஒரு மின்னற் தருணம் எழுதப்பட்டிருக்கிறது. இப்படி பல தருணங்கள்.  

நாவலில் காமம் மற்றும் ரொமான்ஸ் இரண்டும் எழுதப்பட்டிருக்கும் விதம் இதன் இன்னொரு சிறப்பு. மத்தியதர வகுப்பு பெண் ஒருத்தி ஓரிடத்தில் ஆசையும்,குழப்பமும் அறிவை மயக்க கணவனை தாண்டி வேறொரு உறவுக்குள் செல்லும் காட்சி எழுதப்பட்டிருக்கும் விதம் அபாரமானது.

//அவரது கண்களைக் கூர்ந்து பார்த்தபடியே வலதுகாலை மெல்ல நீட்டினாள். பாதத்தை ஏந்திக்கொண்டவர் மெல்லத் தடவினார். உடல் கிளர்ந்தது. அவரது கைநடுக்கத்தை உணர முடிந்தது. நெற்றியிலும் கழுத்திலும் வேர்வை பெருக்கெடுக்க கொலுசை அணிவித்து திருகாணியைப் பூட்டினார். இடதுகாலை எடுத்து நீட்டிய கணத்தில் உள்ளுக்குள்ளிருந்த பெண்மை அவரை மேலும் சீண்டிப் பார்த்துவிட ஆசைகொண்டது. கெண்டைக்கால் தசை வெளிர்மஞ்சள் தண்டுபோல் மின்னி புடவையை இன்னும் சற்றே மேலுயர்த்தினாள். வாளிப்பான கெண்டைக்கால் தசை வெளிர் மஞ்சள் தண்டுபோல் மின்னி அசைய அவரது கண்கள் விரிந்தன. அவள் முகத்தைப் பார்த்தார். உதடுகளைச் சுழித்தபடி அவள் சிரித்த வேளையில் கைநடுக்கம் கூடியது. மறு கொலுசை அணிவிக்கப் போராடினார்.

இடதுகாலை மடக்கிக் கொலுசை அவளே சரியாகப் பூட்டியபின் இரு கால்களையும் அவர் முன் நீட்டினாள். கொலுசுகள் மின்னிய கால்கள் அவர் முன் அசைந்தன.//

காமத்தை எழுதுவது எளிதல்ல; அதை இலக்கியமாக எழுதுவது இன்னும் கடினம். வாசகரின் கற்பனைக்கு இடமின்றி அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லிவிடும் எழுத்து, உணர்வின் நுண்மையைக் களவாடி விடுகிறது. உண்மையான இலக்கியம், சொல்லப்படாத இடைவெளிகளில்தான் தன் ஒளியைப் பெறுகிறது. அந்த இடைவெளியில் வாசகரின் மனமே தன்னை ஒரு படைப்பாளியாக உணர்ந்துகொள்ளச் செய்கிறது.

அந்த அளவில், எம். கோபாலகிருஷ்ணன் காமத்தை கையாளும் விதம் குறிப்பிடத்தக்கது. அவர் காமத்தைச் அதிர்ச்சி மதிப்பீடாக இல்லாமல், மனித வாழ்வின் இயல்பான அங்கமாகவே அணுகுகிறார். அவரது எழுத்தில் காமம் கண்ணியத்துடன் வெளிப்படுகிறது; அது உடலின் அசைவாக மட்டும் இல்லாமல், உள்ளத்தின் அதிர்வாகவும் விரிகிறது. நேரடி விளக்கங்களின் பெருமூச்சு இல்லாமல், மெதுவான சைகைகளாலும் மனக்கிளர்ச்சியின் உணர்வினாலும் காட்சிகள் உருவாகின்றன. அதனால் தான் அந்த அனுபவம் வாசகருக்கு முழுமையாக கிடைக்கிறது. யூகிக்க, உணர, இடைவெளிகளை நிரப்ப—எழுத்தாளர் வாசகரை நம்புகிறார். நாவல் பாத்திரங்களின் அச்சமும், தவிப்பும், வெம்மையும் வெறும் காட்சிகளாக இல்லாமல் உணர்வுகளாக மாறுகின்றன. அவர்களின் துடிப்பு நம் உள்ளத்திலும் ஒலிக்கிறது. 

இந்நாவலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதில் வடிவெடுத்திருக்கும் ரொமான்ஸின் தன்மையும் அதன் உள்மனத் தாளமும். 

// ஈரம் மின்னிய அம்முவின் கண்களில் மெல்லத் திறந்தது இருள் போர்த்திய அடர்நெடுங்காடு. திசைகள் இல்லை. பாதைகள் இல்லை. அனைத்தும் இருள்மயம். சிள்வண்டுகளின் நீண்ட இசைக்கோவை. சடசடக்கும் பறவைச் சிறகோசை. நீரிரைச்சல். பாயும் அருவி. பாறைகளில் அறையும் பெருவெள்ளம். சாரல் துளிகளின் ஈரம். முகத்தில் மோதும் துமிகள். பவழமல்லி மணம். இலைதழைகளும் பூக்களும் செறிந்த மருங்குகள். சுள்ளிகள் மக்கிய ஈரத்தரையில் கால் வைக்கத் தயங்கி நிற்கும் அவன் வழிநடத்துகிறது மின்மினியின் பாதரச ஒளி. வேர்க்கிறது. இதயம் துடிக்கிறது. அதைக் கேட்க முடிகிறது. மெல்ல மெல்ல காட்டின் ஈரம் தேடும் வேர் நரம்புகள் அவனுக்குப் பரிச்சயம் ஆகின்றன. தயக்கம் விலகி உற்சாகம் ஏறுகிறது. சுடர்கிறது ஒளியின் துளி. காற்றிலாடும் சுடர்நடனம். களிப்பேறுகிறது. பெருநெருப்பு எழுந்தாடுகிறது. அனைத்தும் அதன் பொன்னொளியில் தகதகக்கின்றன. காடு மொத்தமும் கொதிக்கிறது. தவிக்கிறது. அதன் திக்குகள் எல்லாம் நெருங்கி நெருப்பின் மையத்தில் குவிகின்றன. தடமறியாக் காட்டில் இப்போது அந்த ஒற்றையடிப் பாதை. முகட்டை எட்டத் துடிக்கும் ஏற்றம்! மடுவில் வெள்ளமாய்ப் பாயும் சாகசம்! அனைத்தையும் விழுங்கிச் செரித்த நெருப்பு ஒருகணம் தன்னுள் வெடித்தது. சுட்டெரிக்கும் வெம்மை மொத்தமும் குளிர்ந்தது. கனிந்தது. மண்ணில் பாய்ந்தன மழைத்துளிகள். இலைகள் சிலிர்த்தன. கிளைகள் நனைந்தன. காடு மெல்லத் தன்னிலை மீண்டது. அசைந்து சிரித்தது.//

ஒரு இளம் ஜோடி இயற்கையின் நடுவே மலை, ஆறு, காடு என பயணிக்கிறார்கள். பயணத்தின் ஊடே அவர்களின் காதல் உணர்த்தப்படுகிறது. இங்கு காதல் வெறும் சம்பவமல்ல; அது மெதுவாக வளர்ந்து, நுணுக்கமாக விரியும் ஒரு மனப் பயணம். தங்கள் உணர்வுகளை முதன்முறையாக அறிந்து கொள்வதன் தயக்கமும், அருகாமையில் பிறக்கும் அச்சமும், அதே நேரத்தில் அந்த நெருக்கம் தரும் வெப்பமும் இவை அனைத்தும் கச்சிதத்துடனும் நுட்பமாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

அவர்களின் பார்வைகளில் உள்ள நிசப்தம் பல அர்த்தங்களை சுமக்கிறது. இந்த மென்மையான இடைவெளிகளே அந்த ரொமான்ஸுக்கு உயிர் கொடுக்கின்றன. வாசகர் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதில்லை; மாறாக, அந்த இளம் இதயங்களின் நடுக்கத்தையும் நம்பிக்கையையும் தன்னுள் உணரத் தொடங்குகிறார். 

எம். கோபாலகிருஷ்ணன்

நாவலில் முதன்மைக் கதாப்பாத்திரங்களின் வார்ப்பில் இருக்கும் முழுமை இரண்டொரு இடங்களில் வரும் துணைக் கதாபாத்திரங்களில் கூட மிக அழகாக உருவாகி வந்திருக்கிறது. இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கும் வெங்கடேஸ்வரராவ் கதாபாத்திரம் தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முக்கியமான கதாபாத்திரத்தில் ஒன்று. நாவலின் ஒரே ஒரு இடத்தில் வந்தால் கூட நிலோஃபர் போன்ற அழுத்தமான கதாபாத்திரங்களை எம்.கோபாலகிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். இன்னும் ரூபா, சிவனடி, ராணி, ஸ்டீபன், பத்மஜா, இந்திரஜா, மூத்த முத்தச்சி, அப்பத்தா,ஆனந்தி, சமந்தா, சுதர்சனவள்ளி என எத்தனை நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள்! ஒவ்வொன்றும் கனமானவை, தனித்துவமானவை.

எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகளில் வரும் பெண்கள் தனித்துவமானவர்கள். அவரால் பெண்களின் துயரத்தையும், சீற்றத்தையும், காமத்தையும், தத்தளிப்பையும், குழப்பத்தையும் அவர்களின் அக உலகுக்கு சென்று துலக்கமாக எழுத முடிகிறது. 

தி.ஜானகிராமன் பெண்களின் முன்னால் ஆண்கள் குறுகும் தருணத்தை எழுதியவர் என்றால், எம்.கோபாலகிருஷ்ணன் ஆண்கள் முன் பெண்கள் நிமிரும் தருணங்களை எழுதியவர் என்று சொல்ல முடியும்.

கண்ணகியின் பரிணாமத்தை நினைவில் கொண்டு வாசிக்கும்போது, “மனையறம்” நாவலில் வரையப்பட்டிருக்கும் பெண்களின் வாழ்க்கைப் பயணமும் அதேபோன்ற உள்மாற்றங்களின் பதிவாக இருக்கின்றது. கண்ணகியின் பாதம் முதலில் மென்மை கொண்டது; பின்னர் அது நீதியின் தீப்பொறியாக மாறியது போலவே இந்நாவலின் பெண்களும் ஆரம்பத்தில் அச்சம், குழப்பம், ஆசை, துன்பம் போன்ற அன்றாட உணர்ச்சிகளோடு நிற்பவர்கள்; ஆனால் காலமும் சூழலும் அவர்களை உள்ளிருந்து உறுதியானவர்களாக மேம்படுத்துகிறது.

மனைமாட்சி நாவல் எப்போதும் என் விருப்பப்பட்டியலில் உள்ள நாவல் அதைத் தாண்டி இந்த நாவல் இருக்குமா என்ற கேள்வியோடுதான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் வாசித்து முடிக்கும்போது மனைமாட்சியின் மேல் ஏறி கம்பீரத்துடன் அமர்ந்துவிட்டது மனையறம். 

நவீன இதயங்கள், பிழைகள், இடரல்கள், தவிப்புகள், ஆசைகள் என எல்லா இருளிலும் உழன்று தங்களின் அறத்தின் ஒளியை கண்டுகொள்கின்றன. இதன் மூலம், திருக்குறளில் கூறப்பட்ட மனையறம் இன்று நவீன வாழ்க்கையில் எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்பதை எம்.கோபாலகிருஷ்ணனின் மனையறம் உரையாடலுக்கு உள்ளாக்குகிறது.

000

செந்தில் ஜெகன்நாதன்

செந்தில் ஜெகன்நாதன், தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். திரைத்துறையில் பணியாற்றுகிறார்.
தமிழ் விக்கியில்

 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. நாவலை பற்றி மிகவும் சிறப்பான அறிமுகத்தை தருகிறது. நாவலை வாசிக்க தூண்டுகிறது. விரைவில் வாசிக்க வேண்டும். நன்றிகள் செந்தில்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop