கார்த்திகா முகுந்த் கவிதைகள்

ஒரு ஓவியத்தை

எப்போது முடித்து நிறுத்துவதென

எனக்குத் தெரியாது

அதனாலே எனக்கு நிகிலைப் பிடித்தது

நிகிலின் இலையை வாசித்துக்கொண்டிருந்தேன்

வரிகளினிடையே திடீரென

ஒரு செவ்வெறும்பு தோன்றியிருந்தது

மெதுவாக அதை ஏந்தித் தரையில் விட்டேன்

நிகிலின் இலைக்கு மீண்டேன்

நிகிலின் வாழ்க்கை வேறு யாரோவின் வாழ்க்கையா?

எறும்பு திரும்பியிருந்தது

அடுத்த பக்கத்தினுள்.

என் கட்டைவிரல் நகத்தில்

என்னவோ தேடியது.

இரு விரல்களிடை அதைப் பற்றி

மீண்டும் தரையிறக்கினேன்

நிகிலின் இலையிடம் திரும்பினேன்

வாசிக்க வாசிக்க வாசிக்க

எழுந்து வந்துகொண்டேயிருந்தது

பக்கங்களின் நடுவே அதே எறும்பு

புத்தகமும் தரையும் அதன்

பென்ரோஸ் படிக்கட்டுகள்.

இல்லை

நிகிலின் இலையை

மூடி வைக்க முடியவில்லை என்னால்.

நிகில் ஏன்

நிறைவடையா அவ்வோவியத்தை வரைந்துகொண்டேயிருந்தான்…

எறும்பு வந்தது

நிகில் எங்கே போகவேண்டி வந்தது…

எறும்பு வந்தது

நிகில் எவ்விதம் ஓவியத்துக்குள் மீண்டான்…

எறும்பு வந்தது

கொஞ்சம் திகிலாயிருந்தது.

நிகிலின் இலை என்னை மயக்கியது

நிகிலின் இலை என்னை ஆண்டது

நிகிலின் இலை என்னை சிந்திக்கத் தூண்டியது

கடைசியாக

நிகிலின் சிரிப்பு தொலைதூர மலைகளில் எதிரொலித்தபோது

பொறுமையாக ஏறிவந்துகொண்டிருந்தது

செவ்வெறும்பு

மீண்டும் ஒருமுறை அங்கே

ஓர் இறுதி முயற்சி போல.

கொடுக்கு தீண்டாமலே

சுரீர் எனப் பட்டது.

என் முகத்துக்கு நேரே

ஆதுரமாக அதை ஏந்திக் கேட்டேன்

மனத்தின் வயிறு

எதைக் கொண்டும் நிரம்புவதில்லை.

இல்லையா… டோல்கின்?

என் த்வனியில் ஏனோ

மரப் பிசினின் விசித்திரக் குழைவு

அதில் சிக்கிக் கொள்ளாமல்

மெல்ல என் விரல் நுனியை முத்தமிட்டது

அந்தச் சிறிய டோல்கின்.

Candace Hilligoss

சட்டென வண்டியை நிறுத்திவிட்டாள்

நடுச் சாலையில்

அவள் பயணங்கள் எல்லாம்

அந்தப் புள்ளியில் தீர்ந்துவிட்டது போல்

தார்ச்சாலையின் குறுக்கே

ஒரு நதி பாய்கிறது அவளுக்கு

அமைதியின் திசைகள் நாற்புறமும் திறக்கின்றன

புதுவெள்ளத்தின் நீர்ச்சுழிகளை வெறித்துக்கொண்டு

மத்தியில் இறங்குகிறாள்

திறந்த வாயும் அகன்ற விழிகளுமாய்

போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது

வாகனங்களின் ஹாரன் ஓசைகள் இறகுகளாகி

அவளைச் சுற்றி மிதக்கின்றன

எதிரில் வரும் வாகனமொன்று

அவளை மோதிக் கடந்து செல்கிறது

இன்னும் அங்கேயே நிற்கிறாள்

மோனத்தின் திரைச்சீலை ஓவியம் அக்கணம்

ஆன்மாக்களின் உரையாடல் கேட்கின்ற நிசப்தம்

நதியலைகள் இதழ்களாக

மையத்தில் குவிந்தெழும் ஒரு மலர்

சுழலும் அதன் விசித்திர கதிக்கு

நடனமாடத் தொடங்குகிறாள்

மெதுமெதுவாக நெடுநேரம் வீழுமொரு பூப்போல்.

அவள் பயணங்கள் தீர்ந்த அப்புள்ளியில்

ஒரு விருட்சம் நிற்கிறது இப்போது

குழைந்து வழியும் அதன் ஒளியை

அவள் தீண்டுகையில்

மதுர கீதமொன்று எங்கோ தொடங்குகிறது

அவள் வந்திருந்த வண்டி மட்டும்

அசையாது அங்கேயே நிற்கிறது.

(Candace Hilligoss-க்கு)

000

கார்த்திகா முகுந்த்

பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தும் பணியில் உள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்.

கம்பளி ஆடை வடிவமைப்பு(Knitting), பூப்பின்னல்(Crotchet), புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள்.

வெளியாகியுள்ள நூல்கள்:

  1. இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு
  2. குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு
  3. ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு
  4. துமி (2022) – கவிதைத் தொகுப்பு
  5. க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண் (2024) - கவிதைத் தொகுப்பு
  6. என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது (2024) - கவிதைத் தொகுப்பு
  7. ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும் (2024) – சிறுகதைத் தொகுப்பு

Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss