ஆண்பால் உலகு என்கிற இந்நாவல் சமகால ஈழ நாவல்களிலும் புலம்பெயர் நாவல்களிலும் ஈழத்தலித்திய நாவல்களிலும் பல வகைகளில் முக்கியமானது. சிறப்பானது. கடந்த இருபதாண்டுகளில் நான் படித்த ஈழநாவல்களில் சிறப்பானது எதுவென்று கேட்டால், என்னால் ஆண்பால் உலகை பரிந்துரைக்க முடியும். அவ்வளவு சிறப்பான நாவல்.

காலனியாதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றபின் இலங்கையின் தமிழர் தலைநகரான யாழ்ப்பாணத்தின் புறநகரான நாவாந்துறையில் வாழ்ந்த ஓரு தலித் குடும்பத்தின் 1970 க்கும் 1996 க்கும் இடைப்பட்ட காலக்கதை இது.

இந்நாவலின் வடிவமே ஒரு புதுமைதான். தன் வரலாறு(Memoirs) வேறு. நாவல் வேறு. தன்வரலாறு நாவலாவதில்லை. சுயவரலாற்றை அடிப்படையாகக் கொண்டெழுதும் தன்வரலாற்று நாவல்கள்(Auto fiction) தன் வரலாறாவதில்லை. இதற்குக் காரணம் தன்வரலாற்று நாவல்கள் தன் வரலாற்றில்(Memoirs) வருவதுபோல முழுவதும் உண்மைக்கதையல்ல. அது உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் ஒரு கலைப்படைப்பாகச் சிறப்பதற்காக அதில் புனைவுகளும் கலக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்நாவலில், நாவல் என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்ட இந்த தன்வரலாற்று நூலில் அர்த்த நாரீஸ்வரர் போல அதிசயமாக மகத்தான பேரிணைவு சாத்தியப்பட்டிருக்கிறது. இதனை நீங்கள் நாவலாகவும் படிக்கலாம். தன்வரலாறாகவும் படிக்கலாம். இரண்டு வகைகளிலுமே சிறப்பான நூலாக வந்திருந்தாலும் இதனை நாவலாக மட்டும் எழுதியிருந்தால் இன்னுஞ் சிறப்பாகப் பறந்திருக்கும்.

99 சதவீதம் உண்மைப் பாத்திரங்களும் கதையும் கதைப்பின்னலும் உடையது. கதாபாத்திரங்களின் பெயர்கள், தலம், இடம் அனைத்தும் உட்பட. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு மட்டும் எழுதப்பட்டதல்ல. 99 சதவீதம் உண்மைக்கதை.

இன்னுஞ் சிறப்பாகப் பறந்திருக்கும் என்று சொல்கிறபோது அதனுடைய அர்த்தம் இந்நாவல் சிறப்பாகப் பறக்கவில்லை என்ற அர்த்தத்தில் அல்ல. தன்வரலாற்று நூல்களில் ஒரு நாவலுக்குரிய அடிப்படையான மூலக்கூறுகளான கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண்/பிரச்சனை, theme, setting, point of view என்பவற்றில் முதற்கூறிய மூன்று கூறுகளும் சிறப்பாக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணம் இம்முன்று கூறுகளும் படைப்பாக்கம் சார்ந்த ஒரு செயல்முறைக்கூடாகவே வருகிறது. தன்வரலாற்று நூல்களில் பொய் சொல்லக்கூடாது. புனையக்கூடாது என்பது சட்டமாகவே இருக்கிறது. அப்படிப் பொய்சொல்லிப் புனைந்து ஒரு தன்வரலாற்று நூல் எழுதப்படுமாயின் நீதிமன்றில் அதற்கெதிராக அது ஒரு போலித்தன்வரலாற்று(Fake Memoir) நூல் என்று வழக்குத் தொடரலாம். [தமிழர் சம்பந்தப்பட்ட ஒரு போலித்தன்வரலாற்று நூலுக்கு உதாரணம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Tamil Tigress(2011). சிறப்பான அசல் தன்வரலாற்று நூலுக்கு உதாரணம் பெண்புலித்தளபதி தமிழினி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில்(2015)] அதன் காரணமாக பெரும்பாலான தன்வரலாற்று நூல்களில் கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண்/பிரச்சனை என்பவை படைப்புச் சிறப்பாக வருவதில்லை. ஆனால் உண்மையான இந்த தன்வரலாற்றில் அதாவது உண்மையான கதைப்பின்னலும் உண்மையான பாத்திரங்களும் உண்மையான முரணும் புனைந்து பறக்கவேண்டிய தேவையில்லாத அளவுக்கு படைப்புச் சிறப்போடு இருக்கிறது. அல்லது புனைய வேண்டிய தேவை இல்லாமலே காவியம் ஆகியிருக்கிறது.

அருந்ததி

இந்நாவலைப் படித்தபோது எனக்கு ஈழ/கனேடிய ஆங்கில நாவலாசிரியரான மைக்கல் ஒண்டாச்சியின் தன்வரலாற்று நூலான Running in the Family நூல் நினைவுக்கு வந்தது. மைக்கல் ஒண்டாச்சி ஈழத்தில் பிறந்து பதினொரு வயதில் இங்கிலாந்து வழியாக கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் பறங்கியர். அவர் வளர்ந்த பிறகு ஈழத்துக்குப்போய் தன் குடும்ப வரலாற்றை ஆராய்ந்து எழுதிய தன்வரலாற்று நூல் மேற்குறித்தது. தன்வரலாறாகப் பதிப்பிக்கப்பட்ட அந்நூலும் கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண் ஆகிய கூறுகளின் சிறப்பினால் நாவல் போலவே இருந்தது. அதனை இப்போது Fictionalized Memoir என்று விக்கிபீடியா விபரிக்கிறது. ஒண்டாச்சியின் Running in the Family நாவலாகப் புனையப்பட்ட தன்வரலாறு ஆயின் புனையாமலே நாவலாகப் பறந்த தன்வரலாறு ஆண்பால் உலகு.

இந்நாவலின்/ தன்வரலாற்று நூலின் தன்மை(ஒருமைக் கதைசொல்லி) அருந்ததி என்ற புனைபெயரில் எழுதும் அருளானந்தராஜா. 1958ல் யாழ்ப்பாண நகரை அண்டிய கடற்கரை புறநகரான நாவாந்துறையில் பிறந்தார். இரண்டு அண்ணன்களுக்கும் இரண்டு அக்காக்களுக்கும் பின்பிறந்த கடைசிப் பையனாக. தந்தை அவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இரண்டு அண்ணன்மார்களும் தந்தையும் கூட சாதியக் குலத்தொழிலை செய்யவேண்டியிருக்கவில்லை.

இதுவொரு தலித்திய நாவல் என்றாலும் இதனுடைய மையப் பேசுபொருள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் உயர்ந்த தலித்துக்களால் பொருளாதார ரீதியில் உயரமுடியாத தலித்துக்கள் மீது செய்யப்படும் அடக்குமுறைதான். இவ்வகையில் இது தலித்துகளிடையே இருக்கும் வர்க்கப் பிரச்சனையை பேசும் நாவல். சாதிய அடக்குமுறை குறைந்த பின்னும், பின் தலித்துக்களிடையே வர்க்கம் தன் கோர முகத்தைக் காட்டும் என்று சொல்கிற நாவல். இதற்குக் காரணம் இது நகரமயமாதலின் கதை கூட. யாழ் நகரத்து தலித் கதை. இன்னொரு வகையில் தலித் குடும்பங்களிலிருக்கும் பெண் ஒடுக்குமுறையைப் பற்றிய கதை.

நாவலின் பிரதான கதாபாத்திரம் கதை சொல்லி அருந்ததியின் அக்கா அழகி; புத்தகங்கள் படிப்பதில் தீவிர ஈடுபாடுள்ளவர். குடும்ப வறுமையையும் மீறி படித்து ஒரு வங்கியில் வேலை பெறுமளவுக்கு உயர்கிறார். ஆனால் பெண் வேலைக்கு போவது தனக்கு அவமானம் என்று அருந்ததியின் ஒரு அண்ணன் அவள் வேலைக்குப் போவதை அனுமதிக்கவில்லை. அவளை பாஸ்கரன் என்பவன் காதலித்து ஏமாற்றுகிறான். பிறகு வேறொருவரை மணஞ்செய்து கப்பலில் வேலைக்குச் சேர்ந்து ஒஸ்றேலியாவில் குடியேடிவிட்டான். அக்காவை பிறகு திருமணஞ்செய்து ஏமாற்றியவன் ஒரு தலித் பணக்காரனின் மகனான அரசரெட்னம். ஏற்கெனவே திருமணமான இவன் மிகக்கொடூரமான பொம்பிளைக்கள்ளன். அருந்ததி பிரான்சுக்கு வந்தபின்னர் ஈழ யுத்தத்தின் உச்சகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்தில் அருந்ததியின் அக்காவுக்கு பெருங்கொடுமை செய்துவிட்டு ஒஸ்றேலியாவிலிருந்த தன் முன்னைய மனைவியிடம் போய் அங்கு குடியேறிவிட்டான்.

ஈழ சுதந்திரத்துக்குப் பிற்பட்ட, சர்வசன வாக்குரிமைக்குப் பிற்பட்ட, தமிழரசுக் கட்சியால் முன்மொழியப்பட்டு வெற்றிகரமாக தீண்டாமை ஒழிப்புச் சட்டம்(Social Disabilities Act,1957) வெற்றிகரமான சட்டமூலமானபின் நடக்கும் கதை. இம்முன்னேற்றமான சட்டத்தால் அதிகளவில் யதார்த்தத்தில் பயன்பெற்றவர்கள் யாழ் நகரத்தையும் அதை அண்டிய ஊர்களிலும் வாழ்ந்த தலித்துக்களே. ஈழத்தில் சாதிய அடக்குமுறை அதிகமான யாழ் குடாநாட்டின் அதன் தலை நகரான யாழ் நகரில் வாழ்ந்த தலித்துக்களுக்கு கிடைத்த சில முன்னேற்றங்கள் குடாநாட்டிற் மற்றைய பகுதிகளான வடமராட்சி, தென்மராட்சி, தீவுப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மை.

இந்நாவல் எழுபது எண்பதுகள் கால யாழ்ப்பாண தலித்துக்கள் பற்றிய வரலாற்று ஆவணம் கூட. ஈழத்தலித்துக்களுக்கும் தமிழக தலித்துக்களுக்குமிடையே அடக்குமுறையின் அடிப்படையில் பாரிய வேறுபாடுகள் உண்டு. அ.மார்க்சின் தமிழக தலித் ஆய்வுகளை காப்பி பண்ணி ஈழத்திலும் தமிழக அளவுக்கு அடக்குமுறையின் உச்சம் இருக்கிறது என்று வாதிடுபவர் சோபாசக்தி. ஆனால் உண்மை அதுவல்ல. எழுபதுகளிலேயே சில யாழ்ப்பாணத் தலித்துக்கள் பலபேருக்கு வேலை கொடுக்கும் தொழில் நிறுவனங்களின் பெரு முதலாளிகளாக இருந்திருக்கிறார்கள். பணக்காரர்களாக யாழ் நகரில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இந்த நாவல்.

இந்நாவலாசிரியர் அருந்ததி(1958) ஈழத்தின் இரண்டாவது தலித் எழுத்தாளர் தலைமுறையைச் சேர்ந்தவர். ஈழத்தின் முதல் தலித் எழுத்தாளர் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கே.டானியல்(1926), டொமினிக் ஜீவா(1927), என்.கே.ரகுநாதன்(1929) எஸ்.பொன்னுத்துரை(1932), பெனடிக்ற் பாலன்(1939) தெணியான்(1942), கே..ஆர். டேவிட்(1945), நந்தினி சேவியர்(1949).

முதல் தலித் எழுத்தாளர் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலர் அக்கால புரட்சிகர இடதுசாரி கம்யூனிச இயக்கங்களோடு சேர்ந்தியங்கினார்கள். இரண்டாவது தலித் தலைமுறை வந்தபோது ஈழத்தேசிய விடுதலை இயக்கங்கள் வந்தன. இரண்டாவது தலித் தலைமுறையைச் சேர்ந்த த.கலாமணி(1952), கி.பி. அரவிந்தன்(1953), ஜீவமுரளி, எஸ்.கே. விக்னேஸ்வரன், அருந்ததி(1958), தேவதாசன், க.நவம்(முதல் தலைமுறை தெணியானின் கடைசித்தம்பி). சத்தியதாஸ் தவராசா(1961), கலாமோகன்(1960), ஜோர்ச் குருச்சேவ் ஆகியோர். இதில் அரவிந்தன் ஒரு கவிஞர். ஜீவமுரளி சிறுகதைகளும் ‘லெனின் சின்னத்தம்பி’ என்றொரு நாவலும் எழுதியுள்ளார். லெனின் சின்னத்தம்பி என்கிற நாவல் ஈழத்தை பகைப்புலமாகக் கொண்ட தலித்திய நாவல் அல்ல. ஆக ஆண்பால் உலகு நாவல் மட்டுந்தான் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தலித்திய நாவல் என்பதாலும் மிக முக்கியமானதாகிறது.

முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் சிறப்பான எழுத்தாளர் எஸ்.பொ. முதல் தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பாக கே.டானியல், டொமினிக் ஜீவா, கே.ஆர்.டேவிட், தெணியான் ஆகியோரின் படைப்புக்கள் மீது கலையாகச் சிறக்கவில்லை என்கிற நியாயமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இரண்டாம் தலைமுறையில் இக்குறைபாடுகள் இல்லை. ஆனால் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் போல இவர்கள் அதிகம் எழுதவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

தமிழகத்தோடு ஒப்பிடுகிறபோது ஈழத்தில் நாவல் சோபிக்கவில்லை. அதிலும் முதல்,தலைமுறையைச் சேர்ந்த ஈழத்தலித் எழுத்தாளர்களில் சிறப்பானவரான எஸ்.பொ தலித்திய நாவல் எதுவும் எழுதவில்லை. பல தலித்திய நாவல்களை எழுதிய கே.டானியல், தெணியான் ஆகியோரின் நாவல்கள் கலையாகச் சிறக்கவில்லை. ஆண்பால் உலகு என்கிற இந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தலித் எழுத்தாளரின் நாவல் இதுகாலவரையான ஈழத்தலித்திய நாவல்களில் சிறந்தது என்று நான் விவாதிக்கிறேன். ஒரு நாவலின் அடிப்படைக்கூறுகளான கதைப்பின்னல், பேசுபொருள், களம், முரண், பாத்திரவார்ப்பு, கதை சொல்லியின் நோக்குநிலை ஆகிய அனைத்திலும் இந்நாவல் சிறப்பாகத் தேறிப் பறந்திருக்கிறது.

இன்னொரு முக்கியமான விடயம் பல தலித் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து கனடா, ஐரோப்பா, ஒஸ்றேலியா ஆகிய முதலாம் உலக நாடுகளில்தான் புலம்பெயர்ந்து வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். முதல் தலைமுறை எழுத்தாளரான என். கே.ரகுநாதன் கனடாவில் வசித்து 2018ல் காலமானார். எஸ்.பொன்னுத்துரை ஒஸ்றேலியாவில் வசித்து 2014 ல் காலமானார். கே.டானியல் கூட 1986ல் இறக்காது இன்னுமொரு தசாப்தம் வாழ்ந்திருந்தால் ஒஸ்றேலியாவில் தான் மரித்திருப்பார். ஏனெனில் டானியலின் கடைசி மகள் துவாரகா 1993ல் ஒஸ்றேலிய அரசின் பல்கலைக்கழக புலமைப் பரிசில் பெற்று ஒஸ்றேலியாவில் வசிக்கிறார்.

இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்களான கி.பி. அரவிந்தன் 1977ல் பிரான்சின் பாரிசில் குடியேறி வசித்து 2015ல் இறந்தார். இந்நாவலாசிரியர் 1984ல் இருந்து இன்றுவரை பிரான்ஸ், பாரிசில் வசித்துவருகிறார்.

சரி. இந்த நல்ல நாவல் ஏன் இதற்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய சமகாலக் கவனத்தையும் விமர்சன ரீதியான பாராட்டுக்களையும் பெறவில்லை? கொரோனா காலத்தில் 2019 இறுதியில் இந்நூல் வெளிவந்தது. நூலாசிரியர் அருந்ததி இச்சமகால தேவைகளில் ஒன்றான தன்னை முன்னிலைப்படுத்தத் தெரியாத அப்பாவி. சமூக வலைத்தளங்களில் இவர் உஷாராக இல்லை.

334 பக்கங்கள் கொண்ட இந்நாவலின் ஒரேயொரு குறைபாடு கடைசி 80 பக்கங்கள்தான். இப்பகுதி நாவலாக இல்லாமல் வெறும் தன்வரலாறாகவே வருகிறது. அடுத்த பதிப்பில் இப்பக்கங்களை முற்றாக நீக்கலாம். அல்லது நாவலை முற்றும் என முடித்து இப்பகுதியை பின்னிணைப்பாக இணைக்கலாம்.

000

நூல்: ஆண்பால் உலகு

ஆசிரியர்: அருந்ததி

முதல் பதிப்பு: 2019 நவம்பர்

வெளியீடு: கருப்பு பிரதிகள்.

நட்சத்திரன் செவ்விந்தியன்

நட்சத்திரன் செவ்விந்தியன் ‘வசந்தம் 91’, ‘எப்போதாவது ஒருநாள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், 'முகாமுகம்' என்கிற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். பல்வேறு பத்திரிகைகள், இணைய இதழ்கள், சஞ்சிகைகளில் இவர் எழுதிய விமர்சனங்கள், குறிப்புகள், அரசியல் கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் விரவிக்கிடக்கின்றன.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. இந்த நாவல் வெளிவந்த காலகட்டத்திலேயே வாசித்தவர்களுள் நானும் ஒருவன். இந் நாவல் சீர்மை (Editing) செய்யப்படாத நாவலொன்றிற்கு சிறந்த உதாரணம். என்னதான் தன் வரலாறாக இருந்தாலும் அவரது சகோதரி பற்றி எழுதியதெல்லாம் சன் டீவியில் படு சுமாரான ஒரு சீரியலை பார்ப்பதற்கு ஒப்பானதாக இருக்கும். தமிழ்ப்பிரபாவின் கோசலை நாவலும் இதே ரகம் தான். அடுத்து இந்த நாவல் ஒரு நாடக எழுத்துரு பாணியில் இருக்கின்ற மாதிரி ஒரு உணர்வை தரும். வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு எனும் கணக்கான மீள மீள ஒரே கதை திரும்பத் திரும்ப சொல்லப்படும். ஒரு வாசகனாக ஒரு காட்டமான விமர்சனத்தையே என்னால் இந்த நாவல் மீது வைக்க முடியும். 2019 இலே அதிக விலை கொடுத்து வாங்கிய ஒரு நாவல், பெயர் தெரியாத ஒரு நடிகரின் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட மொக்கை படம் பார்த்தது போன்ற உணர்வை வழங்கும். இந்த நாவலை சடுதியாக தூக்கிப்பிடிக்க முன்னர் அதன் 2ம் பதிப்பு வருகின்றதென்றால் நீங்கள் சொன்னது போல் 80 பக்கங்களை அல்ல அரைக்கு அரைவாசி வெட்டி வீசப்பட வேண்டும். தன் வரலாற்றுக்கு உண்மையாக இருந்திருக்கலாம். நாவலுக்கு?! ( நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனத்தின் மீது ஒரு துளி நம்பிக்கை எப்போதும் இருக்கும் உடைத்துவிட வேண்டாம்.)

    ஆசிரியர் அருந்ததியின் தனிப்பட்ட வரலாற்றில் இடம்பெற்ற துயர் நிறைந்த சம்பவங்களுக்கு மட்டும் அவரை இறுக அணைத்து ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன். படைப்பின் மீது பெருங்கவனம் தேவை.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss