ஆர். சிவகுமாரின் ‘உருமாற்றம்’ மொழிபெயர்ப்பு குறித்து.

ஆகுதி ஒருங்கிணைத்த ‘மொழிபெயர்ப்பின் நிறம்’ ஒரு நாள் கருத்தரங்கிற்காக எழுதப் பட்ட கட்டுரை

முதலில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்காக இந்த ஒரு நாள் நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஆகுதிக்கும் அகர முதல்வனுக்கும் பாராட்டுக்களும் நன்றியும். மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு சமூகத்தின் கருத்துப் பரப்பில் புது வெள்ளம் பாய்ச்சுகிறவர்கள். மொழிக்கு செழுமை சேர்ப்பவர்கள், சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்ற பாரதியின் கட்டளையை செயல்படுத்துகிறவர்கள். தமிழ் உரைநடையே மொழிபெயர்ப்பால் உருவாகி வந்ததுதான் என்று சொல்வார்கள். நவீன இலக்கியத்தின் துவக்க காலங்கள் தொட்டே பிறமொழி இலக்கியங்களின் தாக்கமும் மொழிபெயர்ப்பும் ஒரு முக்கிய பணியாக இருந்து வந்துள்ளது.

நம் முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் பிற மொழி இலக்கியங்களைப் பயின்று அதை ஒட்டி தமிழில் முன்னோடி படைப்புகளை எழுதியவர்கள்தாம். மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ் இலக்கியத்துக்கு, வாசகர்களுக்கு செய்து வரும் பணியை ஒரு போதும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. மொழிபெயர்ப்புகள் நம் இலக்கியங்களுக்கும் சிந்தனைக்கும் உந்துதலை மட்டுமல்ல ஒரு உரைகல்லையும் கொடுக்கின்றன.

பிரான்ஸ் காஃப்கா தமிழில் நன்கு அறியப் பட்ட எழுத்தாளர். அவரது கதைகளை படிக்காதவர்களுக்குக் கூட அவரது பெயரைத் தெரிந்திருக்கும். அதுவும் மெட்டமார்பசிஸ் என்று கேட்டதும் வண்ணத்து பூச்சி நினைவுக்கு வந்தால் நீங்கள் தவறான கருத்தரங்கிற்கு வந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இங்கிருப்பவர்களுக்கு காஃப்காதான் நினைவுக்கு வந்திருப்பார். மெட்டமார்பசிஸ் ஒரு உலகப் புகழ்பெற்ற கதை. அதன் ஆழமான இருண்மையைத் தாண்டியும் உலகப் புகழ் பெற்ற கதை.

1882 கடவுள் இறந்துவிட்டார் என நீட்ஷே அறிவித்ததற்கு அடுத்த ஆண்டு. 1883ல் காஃப்கா பிறந்தார். அதற்கு முன்பு 1844ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் அன்னியமாதல் – Alienation – எனும் ஒரு சமூக, பொருளாதார கருத்தை முன்வைத்தார்.

நவீன முதலீட்டிய பணியிடத்தில் உழைப்பாளி தன் வேலையில் ஒரு கருவியைப் போல, ஒர் எந்திரத்தைப் போல செயல்படுவதால், ஒரு பகுதி வேலையில் மட்டுமே ஈடுபடுவதால் அவன் அல்லது அவள் தன் பணியின் பலனிலிருந்து அன்னியப்படுகிறான்,

தன் விருப்பத்திற்கு ஏற்ற நேரங்களில் பணி செய்யாமல் கட்டாயமாக தினமும் வேலை செய்வதால் தன் பணி நிகழும் நடைமுறையிலிருந்து (Process) அன்னியப்படுகிறான்,

நிறைவு தரக் கூடிய உழைப்பு மனித இருப்புக்கு அடிப்படை என்பதால் தன் சுயத்திலிருந்து அன்னியப்படுகிறான்,

தன் சக தொழிலாளியுடன் போட்டி போட வேண்டியிருப்பதால் தன் தோழர்களிடமிருந்து அன்னியப்படுகிறான்.

மார்க்ஸ் ஏன் உலகம் போற்றும் சிந்தனையாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ‘Alienation of labour’ என்கிற கோட்பாடு மிக முக்கியமான உதாரணம். இன்றளவும் நாம் இத்தகைய அன்னியமாதலை உணர்ந்து வருகிறோம். இது பணியில் அன்னியமாதல்.

1881ல் மறைந்த தஸ்தயெவ்ஸ்கி தன்னுடைய கதைகளில் சமூகத்திடமிருந்து அன்னியமாகும் மனிதர்களைக் குறித்து எழுதியிருக்கிறார், அவரது நிலவறைக் குறிப்புகள் இதற்கான சிறந்த உதாரணமாய் உள்ளது. அவரைத் தன் முன்னோடியாக, தன் “சொந்த இரத்தமாகக்” கருதிய காஃப்கா 1915ல் வெளியிட்ட தன் முதல் கைதையில் ஒரு தனிமனிதன் சமூகத்திலிருந்தும், தன் நெருங்கிய உறவுகளிடமிருந்தும் அன்னியப் படுவதைக் குறித்து மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலும் அதே நேரம் நம்பகத்தன்மையுடனும் எழுதிய கதைதான் உருமாற்றம்.

“ஒரு நாள் காலை கெட்ட கனவுகளிலிருந்து விழித்த கிரெகர் சாம்சா தான் ஒரு பிரம்மாண்டமான பூச்சியாக மாறியிருப்பதைக் கண்டான்.” இதுதான் உருமாற்றம் கதையின் புகழ்பெற்ற முதல் வரி. தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் தன்னை ஒரு பூச்சியாக நினைத்திராத மனிதன் உண்டா அல்லது ஒரு மனிதன் பூச்சியாக மாறிய வேடிக்கையை இரசிக்காதவர்கள் உண்டா? எனவே இந்த ஒற்றை வரியில் காஃப்கா வாசகனைக் கவர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் சில வேடிக்கையான நிகழ்வுகளைக் காட்டி மேலும் நம்மை உள்ளிழுக்கிறார், பின்னர் படிப் படியாக அவர் நம்மை ஒரு இருண்ட பாதை வழியே அழைத்துச் சென்று யாருமற்ற ஒரு பாழ் வெளியின் இருளில் விட்டு விடுகிறார். திரும்பிப் பார்த்தால் காஃப்காவைக் காணவில்லை. நாம் தன்னந் தனியாக வெறுமையில் நின்றுகொண்டிருக்கிறோம். இதுதான் அடிப்படையான, முழுமுற்றான ஒரு இருத்தலியக் கதை. காஃப்காயெஸ்க் அல்லது காஃப்காபாணி கதைகள் எனச் சொல்லப் படும் தனி மனித அன்னியமாதலுக்கு மிகச் சிறந்த உதாரண கதை.

இப்போது சற்று யோசித்தால் காஃப்கா ஏன் தமிழுக்கு முக்கியமான எழுத்தாளர் என்பதை உணர முடியும். தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் இருத்தலியக் கதைகளை எழுதியுள்ளார்கள். இன்றும் தமிழில் இருத்தலியக் கதைகள் பல எழுதப்படுகின்றன.

ஆர். சிவகுமார்

ஆர். சிவகுமார் அவர்கள் மொழிபெயர்த்த இந்த உருமாற்றம் புத்தகத்திலேயே கா.நா.சு காஃப்கா குறித்து எழுதிய கட்டுரை உள்ளது. கா.நா.சு புதுமைப் பித்தனிடமிருந்து மெட்டமார்பசிஸ் புத்தகத்தை வாங்கி வாசித்து விட்டு மௌனியிடம் தருகிறார் அவர் வாசித்துவிட்டு இது தமக்காகவே எழுதப் பட்டுள்ளதாக அறிக்கையிடுகிறார். மிகவும் சுவையான கட்டுரை அது. அந்த கட்டுரையே தமிழில் மொழிபெயர்ப்புக்கான முக்கியத்துவத்தையும் சிறப்பாகச் சொல்லிவிடுகிறது. 1915ல் ஜெர்மன் மொழியில் வெளி வந்த ஒரு கதை 1937ல் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. அதுவும் ஒரு அமெரிக்க பத்திரிகையிலிருந்து வாசிக்கப்பட்டது

நவீன இலக்கியம் என்பது மேற்குலகில் உருவாகி வந்து நம்மை அடைந்தது என்பது நமக்குத் தெரியும். எனவே வடிவங்கள் கருத்துக்கள் என பலவற்றையும் நவீன தமிழ் இலக்கியம் மேலை இலக்கியங்களிலிருந்து பெற்றுக்கொண்டது. பாரதிக்கும் அந்த தாக்கம் இருந்தது, அவர் ஷெல்லியின் ஆராதகராக இருந்தார் ஷெல்லி தாசன் என்ற புனை பெயரை வைத்திருந்தார். அதே நேரம் நம் முன்னோடிகள் நம் மண்ணின் பண்பாட்டில் வேரூன்றி அவர்கள் நவீன கருத்தாக்கங்களை, நம் மண்ணின் உணர்வலையில் எழுதினார்கள். உடனே அவர்கள் காப்பி அடித்து விட்டார்கள் என்று சொல்லக் கூடாது. நியூட்டனைப் படித்துதான் ஐன்ஸ்டீன் உருவாக முடியும் இல்லையா! நியூட்டனே ‘பேராளுமைகளின் தோள்களில் நின்று நான் கொஞ்சம் எட்டிப் பார்த்திருக்கிறேன்.’ என்று தன் தனிப் பெரும் சாதனைகளைக் குறித்து சொல்லியிருக்கிறார்.

நான் ஒவ்வொருமுறை மொழிபெயர்க்கும் போதும் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பெடுத்து வைக்க வேண்டும் என நினைப்பேன் ஆனால் அப்படி செய்வதே கிடையாது. அது ஏதோ ஒரு சரியான வார்த்தை கிடைக்காமல் போவதைப் போன்ற எளிய சவால் அல்ல, பல நேரங்களில் அது ஒரு ஆழமான தத்துவார்த்தமான இயலாமையும், தனிமையும் மேலிடும் ஒரு இருத்தலிய சவாலாகவுமே இருந்திருக்கிறது.

முதலாவது ஒரு மொழிபெயர்ப்பாளர் யாருக்கு நம்பிகைக்குரியவராக இருக்க வேண்டும் என்கிற குழப்பம் வருகிறது. அவர் அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது அதை வாசிக்கப்போகும் வாசகருக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா… இந்த சவாலை இப்படிப் பார்க்கலாம்.. ஆசிரியர் எழுதியிருப்பதை வார்த்தை விடாமல். வரிசை மாறாமல் மொழி பெயர்க்க வேண்டுமா அல்லது வாசகரின் சூழலுக்கு, புரிதலுக்கு ஏற்ப மொழிபெயர்க்க வேண்டுமா?

புனைவை மொழிபெயர்க்கும்போது ஒரு முறையையும் புனைவற்றவற்றை மொழிபெயர்க்கும்போது வேறொன்றையும் செய்யலாமா? என குழப்பங்கள் வருவதுண்டு. இறுதியில் நான் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஒரு நடுப் பாதையை தேர்ந்தெடுப்பேன். அதாவது என்னுடைய முதல் வரைவு ஆசிரியருக்கு நெருக்கமாகவும் இறுதி வரைவு வாசகருக்கு நெருக்கமாகவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை கவிதைகள், புனித நூல்கள் மேலும் அறிவியல் உட்பட்ட தகவல்களைச் சொல்லும் நூல்களைத் தவிற பிற மொழிபெயர்ப்புகள் மிகக் கறாராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆர். சிவகுமாரும் இரு தரப்புக்கும் நடுவிலான ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

முற்றிலும் வாசகருக்கு நெருக்கமான மொழிபெயர்ப்பு என்பது தமிழிலேயே அந்த புத்தகம் எழுதப்பட்டிருப்பதைப் போன்றே அமைந்து விடுவது. கா. நா. சுப்பிரமணியம், பெ. தூரன் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் இப்படி அமைந்துள்ளன. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழில் மொழிபெயர்க்காமல் அந்த கதையோட்டம், அல்லது கருத்து தமிழ் வாசகரைச் சென்று சேரும்படி தமிழில் எப்படி எழுதப்படுமோ அப்படியே அதை திருப்பி எழுதுகிறார்கள்.

இரண்டாவதாக ஒரு புனைவை மொழிபெயர்க்கும்போது, அதுவும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் போது நாம் இயல்பான பேச்சு மொழியைக் கையாள வேண்டுமா அல்லது கறாறான சுத்தமான நடையைக் கையாள வேண்டுமா என ஒரு குழப்பம் ஏற்படும். தமிழ்ப் புனைவுகளில் வட்டார வழக்கு சரளமாக பயன் படுத்தப் படுகிறது. நவீன தமிழின் முக்கிய கதைகளில் ஒன்றான ‘மாடன் மோட்சம்’ கன்னியா குமரி மாவட்டத்தில் ஒரு 20, 30 கி.மி பரப்பளவில் வாழும் மக்களில், ஒரு வகையினர் பேசும் வட்டார மொழியில் அமைந்துள்ளது.

என் அவதானிப்பில் புனைவை மொழிபெயர்க்கும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பொதுவாக பேச்சு வழக்கை அல்லாமல் சீரான உரை நடையையே தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழில் எழுதப்படும் கதைகள் பலவும் மிக இயல்பானவையாக எழுதப்படுகின்றன. ஆனால் மொழிபெயர்ப்புக் கதைகள் ஏதோ பிரிட்டிஷ் ராணியின் அவையில் வாசிக்கப்படும் அறிக்கைகளைப் போல சில நேரங்களில் அமைந்துவிடுகின்றன. ரேமண்ட் கார்வர் போன்ற மிக இயல்பான சூழல்களைக் குறித்து எழுதும் ஆசிரியர்கள் கூட மிகக் கறாரான, கனவான் மொழியில் அல்லது ‘அவை’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனர். அதற்காக ‘ஏய் கிழவி போய் கண்ணம்மா பேட்டைல படுத்துக்கோ’ என்ற டப்பிங் திரைப்பட வசனம் போலவும் எழுத முடியாது. ஆனால் இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் உரையாடல் மொழியில் நிச்சயம் கதைகளை மொழிபெயர்க்கலாம். நான் ஒன்றிரண்டு கதைகளை அப்படி மொழிபெயர்த்திருக்கிறேன். இதிலும் ஆர். சிவகுமார் அவர்கள் ஒரு நடு நிலையான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்த உருமாற்றம் கதை ஏன் ஒரு கோண்டாடப்படும் படைப்பாக இருக்கிறது என்றால் காஃப்கா எடுத்த உடனேயே உங்களை ஒரு பெரும் துயரில் அமிழ்த்து விடுவதில்லை. அவர் மெல்ல மெல்ல ஒரு முட்டை வெடித்து புழு வந்து, புழு கூட்டுப் புழுவாகி, பின்னர் ஒரு பூச்சியாக மாறுவதைப்போல இந்த கதையை வளர்த்தெடுக்கிறார். ஒரு மனிதன் பூச்சியாகிவிட்டால் அது எத்தனை வேடிக்கையானதாக இருக்கும் இல்லையா? அந்த வேடிக்கையை அவர் வாசகனுக்கு மறுத்துவிடவில்லை. அவன் மல்லாந்து படுத்துக் கிடக்கிறான், மல்லாந்து கிடப்பது ஒரு பூச்சிக்கு மிகவும் சவாலானது. (குழந்தைகள் பூச்சியை மல்லாக்க வைத்து விளையாடுவதுண்டு.) கிரெகர் சாம்சாவின் பல கால்களும் ஆகாயத்தில் தன்னிச்சையாக அசைகின்றன வழுவழுப்பான உடலிலிருந்து போர்வை நழுவிச் செல்கிறது அதை அவனால் கட்டுப்படுத்த முடிவதில்லை பூச்சிக்கு போர்வை எதற்கு என விட்டுவிடவும் முடியவில்லை. தான் பூச்சியான பிறகும் சட்டென்று கிளம்பி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் எனும் அவசரம் அவனுக்குள் உள்ளது. இப்படி வேடிக்கையாகத் துவங்குகிறார் காஃப்கா ஆனால் பின்னால் இது வேதனையாக மாறி மெல்ல மெல்ல அவன் ஒரு வெறும் பூச்சியாக உணரப்பட்டு வெறுக்கப்படும் நிலை வரை சென்று இறுதியில் அவனது மரணத்தில் முடிகிறது. இதனால்கூட துவக்கத்தில் மிகுந்த வேடிக்கையான மொழியும் பின்னர் தீவிரமான மொழியும் என இல்லாமல் மொழிபெயர்ப்பாளர் ஒரு நடுவாந்திர மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

உண்மையில் காஃப்கா கவித்துவமாக எதையும் எழுதவில்லை. குறைவான கவித்துவம் என்பதே இருத்தலிய அழகியலாக இருக்க முடியும். எனவே நேரடியாக இக்கதையை மொழிபெயர்ப்பதே போதுமானதாய் இருக்கும்.

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பதில் நான் எதிர் கொள்ளும் வேறொரு சவால் Complex and compound Sentences. ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் ஒரே வரியில் சொல்லப்படுவது. இதை தமிழில் அப்படியே தருவது வாசகரைக் குழப்பும். நான் பொதுவாக இவற்றை உடைத்து தனித்தனி வரிகளாக எழுதுவேன். ஆனால் ஆர். சிவகுமார் பல நேரங்களில் இவற்றை ஒற்றை வரியாகவும் அதே நேரம் தெளிவாகவும் மொழிபெயர்த்துள்ளார். வெகு சில இடங்களில் மட்டுமே இது ஒரு காம்பவுண்ட் வரி என்று நாம் உணர்கிறோம். ஒரு மொழி பெயர்ப்பில் பொதுவாக நாம் quote செய்யும் வகையான வாக்கியங்கள் இருக்கிறதா என தேடிப் பார்க்கலாம். அதாவது சொல்வதற்கு கச்சிதமான வரிகள். அப்படி ஒரு வரி எனக்கு ஆர். சிவகுமாரின் உருமாற்றத்தில் தென்பட்டது. “ஏழை மக்களிடம் உலகம் நிர்ப்பந்தித்துப் பெறும் எல்லாவற்றையும் அவர்கள் அதிகபட்சமாக செய்தார்கள்” (பக்கம் 60) கிரகர் சாம்சாவின் குடும்பத்தின் நிலை ஒற்றைவரியில், சொல்நயத்துடன் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல அவர் ‘சாண வண்டு’ என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். இதை நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை. அதேபோல இசைக் குறிப்புகள் வைக்கப்படும் ஸ்டாண்ட்டை ‘தாங்கி’ என எழுதியுள்ளார். இவை என் கண்ணில் பட்ட, நான் குறிப்பாக அவதானித்த வார்த்தைகள். கிரெட்டா எனும் பெயரை கிரீட் என எழுதியுள்ளார். அந்த காலத்தில் யூ டியூப் எல்லாம் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.

அண்மையில் நான் மொழி பெயர்த்து வெளி வந்த ‘ஒரே நிழல்’ நூலில் கட்லெட் போன்ற ஒரு ரஷ்ய பண்டத்தை ‘மாமிச வடை’ என மொழி பெயர்த்திருந்தேன். பதிப்பாளர் மதிப்புக்குரிய ஷைலஜா அவர்கள் அதை வேண்டாம், கட்லெட் என்றே போடலாம் என்றார்கள். இதுவும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு வரும் சோதனைதான். எப்படியாவது இதை தமிழில் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பு, ஆங்கில வார்த்தையை கலப்பது ஒரு துளி விஷத்தை கலப்பதற்கு சமம் என்பதுபோல எழும் குற்ற உணர்வு. தமிழுக்கே துரோகம் செய்வதைப் போல ஒரு இருத்தலிய Anguish. ஆனாலும் சில வார்த்தைகளை தவிர்க்கவே முடியாமல் சேர்க்க வேண்டி வரும். குறிப்பாக நம் சூழலில் மிகவும் சாதாரணமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை, கிட்டத்தட்ட தமிழ் வார்த்தையாகவே ஆகிவிட்டவற்றை அப்படி எழுத வெண்டியுள்ளது. அப்படி ஒரு சில வார்த்தைகள் இந்த நாவலில் உள்ளன.

ஒரு மொழிபெயர்ப்பாளரின் முக்கியமான இன்னொரு பணி ‘தெரிந்தெடுப்பது’. என் நண்பர் நரேன் பல நூறு கதைகளை வாசித்துவிட்டு பத்து கதைகளை மொழிபெயர்க்கிறார். இந்த உழைப்பு பலருக்கும் தெரியாமல் போகிறது. மெட்டமார்பசிஸ் ஏற்கனவே 1937ல் தமிழ் நாட்டில் வாசிக்கப்பட்டிருந்தது, 1977 கா.நா. சு தன் கட்டுரையை எழுதியுள்ளார், அது உலகப் புகழ்பெற்ற கதை வேறு, எனவே அதைத் தேர்ந்தெடுக்க பெரும் முயற்சிகள் தேவையில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் காஃப்காவின் சில குறுங்கதைகளும், அவர் தன் தந்தைக்கு எழுதிய ஒரு முக்கியமான கடிதத்தின் ஒரு பகுதியும் அவரது நாட்குறிப்புகளின் சில வரிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதை ஆர். சிவகுமார் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவை இந்த தொகுப்பை மேலும் சிறப்பாக்குகின்றன. ஆர். சிவகுமார் அvவர்களின் முன்னுரையும், இந்த பிற கதைகளுடன் கா.நா.சு வின் கட்டுரையும் சேர்ந்து இதை ஒரு Primer on Kafka அதாவது காஃப்கா குறித்த ஒரு அடிப்படையான புரிதலை அளிக்கக் கூடிய புத்தகமாக ஆக்குகின்றன. அதனால் இது இருத்தியலுத்துக்கான Primer என்றும் சொல்லலாம்.

இருத்தலியம் அடிப்படையில் தனி மனிதனை அலகாகக் கொண்டது. கிரேக்க தத்துவத்தில் அர்த்தம் முதலாவதாகவும் இருப்பு அர்த்தத்தின் மீது கட்டப்பட்டதாகவும் இருக்கிறது. இருத்தலியத்தில் இருப்பே முதலில் வருவது. அர்த்தம் இரண்டாவதாக வருவது. (Existence precedes essence என்பார் சார்த்ரே) இயல்பாக இருக்கும் அர்த்தம் என்று ஒன்று இல்லை, அப்படி இருப்பவை எல்லாமே கற்பிதங்கள் அல்லது பொய்கள். எனவே ஒரு தனிமனிதன் தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்படி அதை உருவாக்கிக் கொள்ள அவன் கட்டற்ற சுதந்திரம் உடையவனாக தன்னை உணர வேண்டும், அந்த சுதந்திரத்தின் வழியே அவன் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அவனே முழுதாக பொறுப்பேற்கவும் வேண்டும். இதுதான் இருத்தலியம் குற்றித்த ஒரு எளிய சாரம் .

இருத்தலிய சோகத்தை எடுத்துக்கொண்டு மீட்சியை விடுபவர்கள் உண்டு, கட்டற்ற சுதந்திரம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு போறுப்பு துறப்பவர்கள் உண்டு, வெறுமனே உலகம் அர்த்தமற்றது என்று மட்டும் சொல்லி எந்த அர்த்தத்தையும் தேடிக்கொள்ளாதவர்களும் உண்டு. ஆக உலகின் வேறெந்த தத்துவத்தைப் போலவும் இருத்தலியமும் துர்ப்பிரயோகம் செய்யப்படும் எல்லா சாத்தியங்களையும் கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இருத்தலியம் வெறும் தனி மனித துயரத்தை மட்டும் பேசும் தத்துவம் அல்ல அதில்தன்னை மீட்டுக்கொள்ள வழி முறையும் உள்ளது. 2025 விஷ்ணுபுரம் விழாவில் கன்னட எழுத்தாளர் ஜெயந்த் காய்கினி தன் குருவான ஒரு எழுத்தாளர் சொன்ன வரி ஒன்றைச் சொன்னார் ‘We are not born human, we are born to be human.’ இதை ‘நாம் மனிதர்களாக பிறப்பதில்லை, மனிதர்கள் ஆகவே பிறக்கிறோம்.’ என்று மொழிபெயர்க்கலாம். இந்த வகையில் வரி ஒரு அருமையான, நேர்மறையான இருத்தலிய வரி.

ஆனால், குழந்தையைத் தின்பதற்குக் காத்திருக்கும் கழுகைப் படம் பிடித்த கலைஞனைப் போல இருத்தலிய சோகத்தை மட்டும் படம் பிடித்துக் காட்டுகிறார் காஃப்கா. இது இருத்தலிய கதைகளின் பொதுவான தன்மை என்று கூடச் சொல்லலாம். ஏன் இருத்தலிய கதைகள் இத்தனை இருள் மண்டியதாகத் தோன்றுகின்றன? ஏனென்றால் அவை எக்ஸ் ரே படங்கள். மனித நிலையை ஊடுருவிப் பார்ப்பவை. அவை diagnosisஐ மட்டுமே தருகின்றன. எக்ஸ் ரே எடுப்பவரிடம் போய் மருந்து கேட்கக் கூடாது. மருந்தை நீயே தேடிக்கொள், அதற்கான சுதந்திரத்தை நீயே எடுத்துக் கொள், அந்த மருந்தின் நல் விளைவுகளுக்கும் தீ விளைவுகளுக்கும் நீயே பொறுப்பு என்கிறது இருத்தலியம்.

தஸ்தயெவ்ஸ்கி இருத்தலியக் கதைகளை எழுதினாலும் இறுதியில் ஒரு சிறு வெளிச்சத்தையாவது காட்டிவிடுகிறார். அவரின் பல கதைகளும் மீட்பின் கதைகளே. காஃப்கா ‘அது உன்பாடு’ என்று தப்பி ஓடி விடுகிறார். இருத்தலியம் ஒரு தத்துவமாக காஃப்காவுக்கு பிந்தைய காலத்தில்தான் உருவாகியது. ஆனால் காஃப்காதான் இருத்தலிய இலக்கியத்தின் தலைமகன். காஃப்காவின் காலம் எப்படிப்பட்டதாய் இருந்தது என்று பார்ப்போம்?

நாம் இன்று வாழும் வாழ்க்கை பல வகைகளில் 19ஆம் நூற்றாண்டில் நிர்ணயிக்கப்பட்டது. அரசியலில் கம்யூசம், ஃபாசிசம், லிபரல் டெமாக்ரசி என்று மூன்று முறைகள் உருவாகி ஒன்றுக்கொன்று போட்டி போட்டன. நவீன தத்துவவாதிகள் உருவாகி வந்தனர், நவீன இலக்கியம் உருவானது, உலகளாவிய பொருளாதாரம், கல்வியின் பரவலாக்கம், மாஸ் புரொடக்‌ஷன். இப்படி பல…

காஃப்கா 1883ல் பிறந்தார். 1865ல் தான் அமெரிக்கா அடிமை முறையை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. ஐரோப்பாவில் தொழில் புரட்சி உச்சத்தை அடைந்திருந்தது. மனிதன் பெரும் எந்திரங்களுக்கு மத்தியில் எந்திரமாக வேலை செய்துகொண்டிருந்தான். சார்லஸ் டிக்கன்ஸ் துவங்கி பலரும் இந்த காலகட்டத்தின் மானுட அவலங்களை எழுதியிருக்கிறார்கள், ஸ்னோரென் கிர்க்கிகார்ட் 19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் சமூகம் மனிதனைத் தனிமனதனாக அல்லாமல் திரளாக ஒருங்கிணைப்பதைக் குறித்த தத்துவ விம்ர்சனங்களை எழுதினார். அவர் ஒரு பிராட்டஸ்ட்டாண்ட் இறையியலாளர்.

கார்ல் மார்க்ஸ் இந்த காலகட்டத்தின் முக்கிய அரசியல் பொருளாதார சிந்தனையாளர்களில் ஒருவராகத் தோன்றினார். அவர் நோய்க்கூறாய்வு செய்தார், அதற்கு ஒரு மருந்தையும் எழுதித் தந்தார். அந்த மருந்தின் பின்விளைவு அதன் நல்விளைவை விட அதிகமாக இருந்தது. ஆனால் அவரது டயக்னோஸிஸ் இன்னும் செல்லுபடியாகிறது.

தொழில் புரட்சியுடன், இந்த காலகட்டம் காலனிய விரிவாக்கத்திற்கும் பெயர்போனது. மேற்கில் சில நாடுகள் மட்டும் காலனியத்தால் கொழித்தன. பிற நாடுகள் தத்தளித்தன. 1915ல் காஃப்காவின் உருமாற்றம் வெளி வந்தபோது முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தது. அந்தப் போரில் 85 இலட்சம் போர் வீரர்கள் மடிந்தனர் 1.3 கோடி மக்கள் மடிந்தனர். ஜெர்மெனி ஒடுக்கப்பட்டது. 1924ல் காச நோய் முற்றி காஃப்கா இறந்துவிடுகிறார்.

முதல் உலகப் போரில் ஒடுக்கப்பட்ட ஜெர்மனி ஹிட்லரின் தலைமையில் அடிபட்ட விலங்கைப் போல கொடூரமான வகையில் மீண்டு வந்தது. அந்த கோடூரத்தில் எல்லி, வல்லி, ஆட்லா என்ற மூன்று யூத சகோதரிகள் கொல்லப் பட்டார்கள். அவர்கள் மூவரும் காஃப்காவின் உடன்பிறந்த சகோதரிகள். இரண்டாம் உலகப் போர் முடியும்போது, உலகமே வெறுமையில் நின்றுகொண்டிருந்தது. அந்த நேரம் இருத்தலியம் ஒரு கருத்தியல் வடிவை அடைந்தது. பலரும் காஃப்கா இந்த வெறுமையான, அர்த்தமற்ற உலகை முன்னறிவித்தவர் என்று நம்பினர். Alienation – Anguish/அங்ஸ்ட் – Absurdity (அன்னியமாதல்-உளப் புழுக்கம்/அல்லது வேதனை – அபத்தம்) போன்ற வார்த்தைகளால் மனிதனின் நிலை விளக்கப்பட்டது. காஃப்காவும் தஸ்தயெவ்ஸ்கியும் எடுத்து வைத்த எக்ஸ் ரேக்களுக்கு சார்த்ரேயும், காம்யுவும் நோய்க்கூறாய்வு அறிக்கையை எழுதி முடித்தனர்.

இன்றைய வாசகன் ஏன் காஃப்காவை ஒருமுறையேனும் வாசிக்க வேண்டும் என்றால். இன்றைக்கும் மனித நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. நாம் சிரித்தபடியே காட்சியளிக்கும் ஒரு எலும்புக்கூட்டைப்போல இளித்துக்கொண்டே உள்ளீடற்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று ஒருவர் சொன்னால் நம்மால் மறுக்க முடியுமா? நம் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த எல்லாம் பொய்யென்று தொடர்ந்து நமக்குக் கூறப்பட்டு வருகிறது அல்லவா? நம் பணியிடங்களில் நாம் எந்திரமாக மாறியது போய் இப்போது நம்மை எந்திரங்கள் மாற்றிக்கொண்டிருக்கின்றன அல்லவா? எல்லாப் பக்கங்களிலும் அவநம்பிக்கை ஊட்டும் செய்திகளை மட்டுமே கேட்டு கேட்டு நம் இளைஞர்களுக்கு எதைச் சொல்லி நம்பிக்கை ஊட்டுவது என்று ஒரு குழப்பம் நம்மிடம் எப்போதும் உள்ளது இல்லையா?

காஃப்காவிடம் கேட்டால்.. ‘இதத்தான் நான் அப்பவே சொன்னேனே’ என்று சொல்வார்.

உருமாற்றம் கதையில். கிரெகர் சாம்சா அதிர்ச்சியுறும் வகையில் பூச்சியாக மாறிவிடுகிறான். அவன் குடும்பம் படிப்படியாக உருமாற்றத்தை அடைகிறது. அவர்கள் வண்ணத்துப் பூச்சிகளிலிருந்து கூட்டுப் புழுக்களாகி புழுக்களாக மாறிவிடுகிறார்கள். இறுதியில் நாம் முற்றிலும் உருமாறிவிட்ட குடும்பத்தைக் கண்டு அதிர்ச்சியுறுகிறோம். இந்த படிப்படியான கதை நகர்வை சரியான முறையில் மொழிபெயர்ப்பதுதான் உருமாற்றத்தை மொழிபெயர்ப்பதன் சவால் என்று சொல்லலாம். அதை சிறப்பாக செய்திருக்கிறார் ஆர். சிவகுமார்.

ஆனால் நான் இந்த கட்டுரையை காஃப்காத் தனமாக முடிக்க விரும்பவில்லை. காஃப்கா பல சிறிய கதைகளையும், குறுங்கதைகளையும், டைரிக் குறிப்புகளையும் எழுதினாலும்.காஃப்காவின் மிகவும் புகழ்பெற்ற கதைகள் மூன்று. ஒன்று இந்த உருமாற்றம், இன்னொன்று The Castle (கோட்டை) மூன்றாவது The Trial. (வழக்கு அல்லது விசாரணை) இவை மூன்றும் தனிமனிதன் முறையே குடும்பம், அரசு, நீதி அல்லது சட்ட ஒழுங்கு அமைப்புகளால் ஒடுக்கப் படுவதைச் சொல்லும் கதைகள். ஆனால் இன்னொரு வகையில் இந்த அமைப்புக்கள் எத்தனையோ எளிய மனிதர்களுக்கு அரணாக அமைந்துள்ளன, எத்தனையோ சமூகங்களை மீட்டெடுத்துள்ளன. நல்ல குடும்பம், நல்ல அரசு நல்ல நீதி அமைப்புகள்தான் நாம் காணும் கனவு. அந்தக் கனவை நாம் ஒரு நாளும் கைவிட முடியாது. காஃப்காவும் அதை முன்வைத்து எழுதியிருக்கக் கூடும். அவர் தன் சகோதரிகளுடனும் அன்னையுடனும் நெருக்கமாய் இருந்தவர். குறைந்த பட்சம் மூன்று முறையேனும் காதலித்தவர். ஆனால் திருமணம் செய்துகொள்ள அவருக்கு மனத் தடை இருந்தது. இதை எல்லாம் விட தன் எழுத்துக்களை தன் வாழ் நாளுக்குப் பிறகு எரித்து விட வேண்டும் என்று தன் நண்பரைக் கேட்டுக்கொண்ட்வர். ஆனால் அந்த நண்பர் அந்த கடைசி ஆசையை நிறைவேற்றாமல் அவற்றை வெளியிட்டு விட்டார். காஃப்காவுக்கே தன் கதைகளைக் குறித்த சந்தேகங்கள் இருந்தன.

மொழிபெயர்ப்பாளர்களைக் குறித்து பேசுகையில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் எத்தனை துல்லியமாகவும் அழகாகவும் மொழிபெயர்த்தாலும் எந்த வாசகரும் ஒருநாளும் “என்னமா மொழிபெர்த்திருக்காரு பாத்தியா!” என்று சொல்லப் போவதில்லை. மொழிபெயர்ப்பு என்பது நன்றி பெறாத சேவை, ஒரு thankless job. மூல புத்தகத்தை எழுதியவருக்கே அனைத்து புகழும் சென்று சேரும். அதைத்தான் நாமும் விரும்புவோம். அதுதான் மொழிபெயர்ப்பின் இருத்தலிய சோகம். இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கும் ஆர். சிவகுமார் அவர்களுக்கும் அவரைப் போன்ற பல நூறு மொழிபெயர்ப்பளர்களுக்கும் தமிழ் வாசகர்கள் நன்றி செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

000

சிறில் அலெக்ஸ்

சிறில் அலெக்ஸ் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பிரித்தானிய எழுத்தாளர் ராய்மாக்ஸத்தின்  'உப்பு வேலி' மற்றும் 'தே ஒரு இலையின் வரலாறு' புத்தகங்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. சிறில் அலெக்ஸ் காஃப்காவைப் பற்றிய தனது ‘புரிதலைச்’ சொல்லி இருக்கிறார். அவர் ‘வரித்துக்’ கொண்டிருக்கும் ‘இலக்கிய அமைப்பின் வியாக்கியான’ அடிப்படையிலேயே அவரின் சிந்த்னைகள் எழுந்து வரும். ஆனால், காஃப்கா தன் ஆக்கங்களை ’எப்படியான மனநிலையில்’ எழுதினார் அல்லது ‘முன்கூட்டிய திட்டமிடலுடன்’ எழுதினாரா என்பது பற்றியெல்லாம் நாம் ‘நேர்ப்பொருளில்’ புரிந்து கொள்ளவோ விளக்கி விடவோ முடியாது. இதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    ஆகுதி அமைப்பு(அகரமுதல்வன்) காஃப்காவைக் கொண்டாடுவதன் வழியாக அவரை ‘விமர்சித்து’த் தன் ‘இலக்கிய அளவுகோலு’க்கான பிரச்சாரமாக்கி இருக்கிறது. கலந்து கொண்டு உரையாற்றியவர்களும் அத்தகையவர்களே. அவர்களின் ‘விமர்சனங்களில்’ பெரும்பாலும் விஷ்ணுபுரப்பள்ளியில் பயின்றவையே அமிழந்து அடங்கி இருந்தன. விழா மீது காழ்ப்பு கொண்டு எழுதுவதாக நினைத்து விடும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், ஒன்றை உங்களுக்குப் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்கிறேன். அகரமுதல்வன் எனக்கு நெருக்கமான நண்பன். என்றாலும், இதை நேரடியாக அவரிடம் பேசிவிட முடியாது.

    கையில் ஒரு ரெடிமேட் அளவுகோலை வைத்துக்கொண்டு எடைபோடத் துவங்குவது கோட்பாடுகளுக்குப் பொருந்தி வரக்கூடும். படைப்புகளை ‘அறிவுத்தளத்தை’க் காட்டிலும் ‘உணர்வுத்தளத்தில்’ இருந்து உசாவுதலே சாலப்பொருத்தமானது. இதை ஒரு ‘கோட்பாட்டு முன்வரைவாக’ நான் சொல்லவில்லை என்பதையும் அழுத்தமாய்த் தெரிவிக்கிறேன்.

    நாம் வாழ்வின் விளங்(க்)க முடியா நிகழ்வுகளின் உந்துதலால் பற்றிக்கொள்ளும் நெருப்புத்துண்டுகளாகவே படைப்புகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது. நேர்கோட்டு முறை(சமூக வரலாறு), பரிணாம வளர்ச்சி(வாழ்க்கை முறை மாற்றங்கள்) போன்றவற்றின் ஊடாக ‘மனித உணர்வுகள்’ மேம்பட்டு வருவதாகக் கருதிக்கொள்வதை நம்புவதன் வழியாகவே நாம் தரப்பரிசீலனைகளை உருவாக்கிக் கொள்கிறோம். ’மனித உணர்வுகள்’ என்பவை தோற்றம்-இயக்கம்-முடிவு என்பதான தருக்கத்தளத்தில் பொருந்தாமல் அந்தரத்தில் மிதப்பவை. யதார்த்த வாழ்வைக் கொஞ்சம் நிதானித்துக் கவனித்தாலே என் யோசனை பிடிபடக்கூடும். அந்தரத்தின் மிதப்பவற்றைக் கொண்டு ஒருவன் நிகழ்த்தும் மேஜிக்கே படைப்பு. ராமாயணமும், மகாபாரதமும் இன்றளவும் நம்மைப் பிடித்துக் கொண்டிருப்பது அவற்றில் அரங்கேறும் மனித உணர்வுகளின் அந்தரந்த ஆட்டம்தான். அவ்வாட்டத்தை விதவிதமாக ஆடிப்பார்க்கலாம். காஃபா அப்படியான ஒரு ஆட்டக்காரர்.

    ஜெயமோககன் எனும் ஆட்டக்காரரைப் பிடித்திருக்கிறது என்பதில் இங்கு பிரச்சினை இல்லை(எனக்கும் அவாஇ நிரம்பப் பிடிக்கும்). அவர் வரைவு செய்தளிக்கும் படியிலான ஆட்டம்தான் படைப்பாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என்பதான மென்யோசனையைத்தான் ஆகுதி நண்பர்கள் பரிசீலித்துப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.

    சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேதன் உள்ளிட்டோருக்கு விருதளிக்கப்பட்ட நிகழ்வுகளில் ‘ஜெயமோக ஆட்ட’ அடிப்படையிலான விதிகளை மறைச்சரடாகக் கொண்டே அப்படைப்பாளர்கள் மீதான ‘விமர்சனங்களை’ பெரும்பாலானவர்கள் எழுதி இருந்தார்கள். இன்னும் வருத்தம் என்னவென்றால், விருதளிக்கிறோம் என்பதற்காகவே அப்படைப்பாளர்களின் படைப்புகளை ‘ஜெயமோக வாசகர்கள்’ வாசிக்க வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருந்தது(அவர்கள் விரும்பா விட்டாலும்). விருது விழாக்கள் முடிந்தவுடன் அவர்களைப் பற்றிய பேச்சோ அல்லது உரையாடல்களோ தொடர்ந்து இடம் பெறாது(அவ்வாசகர்களுக்கு இடையே), தேர்தல் முடிந்தவுடன் வேட்பாளர்கள் கூப்பிய கைகளை இயல்புக்குக் கொண்டு வந்து விடுவதைப் போல.

    இவற்றையெல்லாம் அங்கிருப்பவர்களிடம் சென்று சொன்னால் கேட்கும் மனநிலையில் இ;ல்லை என்பதை நேரடியாக உணர்ந்தவன் நான். அதனால்தான் இங்கு ‘உருமாறி’ வந்திருக்கிறேன். காதிருப்பவர்கள் கேட்கக் கடவர்; இல்லாவிட்டால், எனக்கொன்றும் நட்டமில்லை.. இலக்கியத்துக்கும்தான்!

  2. ஒரு சிறிய வட்டத்திற்குள், அது இலக்கியப் போக்கோ, சிற்றிதழ் சூழலோ, கலை இயக்கமோ, தொடர்ந்து புழங்கும்போது, அந்தத் தனித்த மொழியும் கூட மற்றொரு புழக்க மொழியாக (diction) மாறும் அபாயம் உண்டு. இது பொதுச் சமூக மொழியை விட ஆபத்தானது. சமூக மொழியைப் பயன்படுத்துபவர்களுக்கு தங்கள் மொழிச் செயற்பாடு குறித்து பெரும்பாலும் அக்கறை இருக்காது. ஆனால் தனித்த மொழியில் இயங்குபவர்களுக்கு அதுவே பெருமிதத்தின் அடையாளமாக மாறக்கூடும். அதன் விளைவாக, மொழியின் ஆரம்பகால நோக்கமான ஆராய்ச்சி இல்லாமலாகும். ஆனால் பாவனை பெருகி இருக்கும்.

    https://akazhonline.com/?p=11517

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop