நிறங்கள் வற்றிப்போன அந்தப் பழைய புகைப்படத்தில் வட்டமுகப் பெண் தன் இடுப்பிலிருக்கும் சிறுவனை நெஞ்சோடு அணைத்திருக்கிறாள். இருவர் முகத்திலும் உயிர்ப்பில்லை. அவளது காக்கிநிற மார்க்கச்சையை அழுத்தமாய்ப் பற்றியிருக்கும் சிறுவனின் கண்களில் அந்த இறுக்கத்தைத் தொலைத்துவிடக் கூடாது என்ற பரிதவிப்பு.

அவளது கருநீல கண்கள் என்னிடம் மன்னிப்பு கோருவதைப்போல் இறைஞ்சின. உண்மைக்கு வெகு தொலைவில் ஒரு மெலிதான புன்முறுவல்… மீளமுடியாத காலச்சுழியில் என்னை மீண்டும் சிக்கவைக்கத்தான் அந்தச் சிரிப்பு… புகைப்படங்களுக்கே உரித்தான மாயப்புன்னகை. துணுக்குற்றுப் பார்வையை விலக்கிக் கொண்டேன்.

கட்டிலின் மேற்விரிப்பில் பரத்திக் கிடந்த இதரப் புகைப்படங்கள் காற்றில் படபடத்தன. மின்விசிறியை அணைத்துவிட்டு பால்கனியின் சதுரவடிவக் கண்ணாடி ஜன்னலை வெளிப்புறமாகத் திறந்துவிட்டேன். ஹாலில் புகைப்படச் சட்டகங்கள் அப்புறப்படுத்தப்பட்ட சுவர்ப்பகுதி மட்டும் தனித்துப் பளிச்சிட்டது.

அபார்ட்மென்ட் வாசல் புல்வெளியில் காரசாரமாய் விவாதம் போய்க்கொண்டிருந்தது. ஒரே இரைச்சலும் முணுமுணுப்புகளுமாகக் கனத்த வெக்கைக் காற்று. ஒரே ஆளாக வீட்டில் உள்ள எல்லா புகைப்படங்களையும் தேடி எடுத்ததில் உடல் லேசாய் அசந்திருந்தது. ஆனால் பெரிதாக அலுத்துக்கொள்ளுமளவு என்னிடம் அத்தனை புகைப்படங்கள் கிடையாது. என் தனிமைப் பொழுதுகளை பெரும்பாலும் நான் படம்பிடித்துக் கொள்வதில்லை.

ஹாலின் அடர்நீலநிறச் சுவரில் மிச்சமிருந்த கடைசி புகைப்படத்தையும் அப்புறப்படுத்தியதும், நண்பனுக்கு போன் செய்து எப்போதும் சந்திக்கும் ‘மன்கீஸ்’ பாருக்கு வரச்சொன்னேன்.

மரக்கட்டிலின் குள்ளமான கால்களினடியில், பிளாஸ்டிக் டேபிளின் நகரும் சக்கரங்களின் கீழ், ஆளுயர பீரோவின் பின்னால் என அங்கங்கே சிதறிக் கிடக்கும் புகைப்படத் துண்டுகளை மொத்தமாய்க் குவித்துத் தள்ளினேன். வெறுமைக்குச் சட்டகம் போட்டபடி இருக்கும் காலி போட்டோ ஃபிரேம்களை அட்டைப்பெட்டிக்குள் வீசியதும் கண்ணாடி விரிசலிட்டு உடைந்தது. வாசல் குப்பைத் தொட்டியில் மொத்தமாக வீசி எறிந்துவிட்டு வீதிக்குச் சென்றேன்.

சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருக்கும் முதியவர் மரச்சட்டகமிட்ட புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தபடி வாசலில் நின்றிருந்தார். ஏதோ சொல்ல விழையும் பார்வையோடு என்னை நெருங்கவும் விலகி நடக்கத் தொடங்கினேன்.

வீதியெங்கும் வரிசையாக அட்டைப்பெட்டிகள்… போட்டோ ஆல்பங்கள்… சுவற்றிலிருந்து அப்போது தான் கழற்றப்பட்ட புகைப்படக் குவியல்கள்… எல்லா போட்டோக்களிலும் ஜோடி உதடுகள் எப்படியோ எதற்காகவோ சிரித்தபடி இருக்கின்றன.

வீசி எறிய மனமில்லாத நெருக்கமானவர்களின் புகைப்படங்களை சிலர் வீட்டுவாசலில் மேசை போட்டு அடுக்கி வைத்திருந்தனர். ஏதோ நினைவு அஞ்சலி மாதிரி. மெழுகுவர்த்தி பொருத்துவது தான் பாக்கி.

இவர்களுக்காகவே அரசின் புதுச்சட்டத்தை மனதார பாராட்டுகிறேன்.

வாழ்வின் அத்தனை தருணங்களையும் ரசித்து ருசித்து வாழ்ந்தவர்களைப் போலவும் ஒவ்வொரு நொடியும் மறக்க முடியாதளவு மிக நெருக்கமானது போலவும் இவர்கள் கொடுக்கும் அங்கலாய்ப்புக்கு அளவில்லை.

புகைப்படங்களைத் தடைசெய்வதாக அரசு அறிவித்திருப்பது மிகச்சரி தான் எனத் தோன்றியது.

யாரோ என்னைக் கூப்பிடவும் திரும்பிப் பார்த்தேன். சோர்வு படர்ந்த முகத்தோடு நண்பன் நின்றிருந்தான்.

கடந்தகால குப்பைகளை மூட்டை கட்டியாச்சா? எனக் கேட்டான். முகத்தில் அலட்சிய புன்னகை வடிந்தது.

இருவரும் சாலையின் எதிரே கண்ணாடிக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்திலிருக்கும் ‘மன்கீஸ்’ பாருக்குள் நுழைந்தோம்.

ஆகாயத்தை நோக்கி நீளும் மரக்கொப்பின் உச்சியில் இருபக்கமும் கால்களைத் தொங்கப் போட்டபடி வரிசையாக அமர்ந்து பீர் அருந்திக் கொண்டிருக்கும் கடுங்காக்கிநிற குரங்குகளின் சுவரோவியம் பளிச்சிட்டது.

வழக்கத்துக்கு மாறாக பாரில் அதிகக் கூட்டம். எல்லார் முகத்திலும் கழிந்த காலத்தின் சில பக்கங்களை விருப்பமின்றிக் கிழித்தெறிந்ததன் சோர்வு.

“இனி இணையதளத்தில் பதிவேற்றப்படும் போட்டோக்களும் வீடியோக்களும் கூட தினமும் காலை ஆறு மணிக்கு அழிக்கப்பட்டுவிடுமாம்… “

“மடத்தனம்…”

“இப்படியே போனால் நாம் உணராமலேயே நம் மூளை கடிவாளம் போட்ட குதிரை மாதிரி அவர்கள் விருப்பம் போல சிந்திக்கப் பழகிவிடும்…”

“நல்லவேளை சிந்தனையைக் கட்டுப்படுத்தும் கருவி ஒன்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை….இருந்திருந்தால் அதையும் நம் மூளைக்குள் பொருத்திவிடுவார்கள்!”

பக்கத்து மேசைகளில் அரசு உத்தரவுக்கு எதிரான ஆத்திரம் காட்டமாக வெளிப்பட்டது…

வட்டவடிவ கண்ணாடித் தடுப்பின் மறுபக்கமிருக்கும் பார் வெயிட்டரிடம் பீர் சொல்லிவிட்டு நானும் நண்பனும் எதிரெதிரே அமர்ந்து கொண்டோம்.

புகைப்படங்கள் அப்புறப்படுத்தபட வேண்டிய தேவையற்ற சுமைகள்… என அலறிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியை நோக்கி உரக்க வசைபாடிய கூட்டத்தோடு நண்பனும் சேர்ந்து கத்தவும் சிரித்து விட்டேன்.

“எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரிச்சுக்கோ. திடீரென ஒரு நாள் சிரிப்பையும் தடைசெய்து விடுவார்கள்.. பைத்தியக்காரர்கள்!” என்றான் நண்பன்…

“பயந்தவன் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் பேய்தான்”

பீரின் குளிர்ச்சி வறண்ட தொண்டைக்குச் சற்று இதமாக இருந்தது. நண்பன் என்னை முறைத்துப் பார்ப்பதைக் கண்டுகொள்ளாமல் இடப்பக்கமிருக்கும் கண்ணாடிச் சாளரத்தைப் பார்த்தேன். வரலாற்றுப் பரிச்சயமான முகங்கள் சிறுசிறு சதுரங்களில் ஒன்று மீது ஒன்றாகப் பலவண்ண அடுக்குகளில் நேர்த்தியாகப் பொறிக்கப்பட்டிருந்தன.

கட்டாயம் பதிலைக் கோரும் பார்வையோடு நண்பன் அழுத்தமாகக் கேட்டான்…

“உனக்கு என்ன தோணுது??”

“எதைப் பற்றி?”

“இந்தமுறை அவர்கள் புகைப்படங்களைத் தடை செய்திருப்பதைப் பற்றி…”

“பெரிதாக அலட்டிக்கொள்ள ஒண்ணுமில்லை. போலிச் சிரிப்பைத் தவிர புகைப்படங்களில் என்ன இருக்கிறது?”

“உனக்கு இன்னுமா புரியவில்லை…? வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களை பொதுமக்கள் பார்வையிட நிரந்தரத் தடை விதித்தபோதே எனக்குப் பொறி தட்டியது… இதுவெறும் புகைப்படங்கள் சம்பந்தப்பட்டதல்ல… பெரும் அழித்தொழிப்பின் ஆரம்பம்!!”

“என்னைக் கேட்டால் தொட்டதுக்கெல்லாம் இப்படி நிதர்சனத்தை நொந்துகொள்வது கூட கையாலாகாதத்தனம் தான். இந்தச் சமுதாய பலவீனத்தை தான் அரசும் களையெடுக்க நினைக்கிறது போல”

“நீயும் அவர்களில் ஒருத்தன் மாதிரி தான் பேசாதே!” என்றபோது நண்பனின் குரல் சத்தமாக ஒலித்தது.

என் முகம் சட்டென்று மாறியதை அவனும் கவனிக்காமல் இல்லை. என்னுடைய சிலநிமிட முகச்சலனம் அவனது அலைப்பாயும் மனதுக்குச் சிறிதளவு ஆறுதலேனும் அளிக்கட்டும்.

ஒருநிமிடம் நிதானித்து அழுத்தமாகச் சொன்னேன்…

“நல்லவேளை நான் உன்னைப் போல் அவசரப்பட்டுத் திருமணம் செய்துகொள்ளவில்லை. இல்லையென்றால் என்னிடமும் கிழித்துப் போட எக்கச்சக்க போட்டோக்கள் இருந்திருக்கும்…”

என் பதிலில் தொனித்த எள்ளல் நண்பனைத் தொந்தரவு செய்திருக்க வேண்டும். குடித்துக் கொண்டிருந்த பீர் அவனது தாடியின் அடர்த்தியினூடே வழிந்து சிந்தியது.

“வெறும் புகைப்படங்கள் என்பதைக் கடந்து ஒவ்வொன்னும் நினைவுப்பொக்கிஷம்… கடந்தகால நினைவுகள் மட்டும்தான் ஒருவனுக்கான கடைசி ஆறுதல். உனக்கு இதெல்லாம் புரியாது…” என்ற நண்பனின் பேச்சுத் தொனி சட்டென மாறியது. “இப்படியே ஒவ்வொன்றாகத் தடை செய்துவந்தால் நினைவுகள் என எதுவும் மிஞ்சப் போவதில்லை!! அவர்களது நோக்கமும் அதுதான்… கொஞ்சம் கொஞ்சமாய் நமக்கும் கடந்த காலத்துக்குமான சரடை மெல்ல அறுப்பது. இந்தமுறை போட்டோக்கள் என்ற பெயரிலும் அதையே தான் செய்ய முயல்கிறார்கள். இப்படியே போனால் நாமெல்லாம் அவர்கள் கையில் வெறும் பொம்மைகள் தான்!”

நினைவுகளை உதற விரும்பாமல் கட்டி அணைத்துக் கொண்டிருப்பவனிடம் நான் மேலும் விவாதிக்க விரும்பவில்லை. சாளரத்தின் வெளியே புறாவொன்று அமர்ந்திருப்பது வண்ணக் கண்ணாடியினூடே கருநிழலாய்த் தெரிந்தது. நிலைகொள்ளாத கால்கள் முன்னும்பின்னும் உலாத்தியபடியே இருந்தன. ஒருவேளை அதன் கால்களில் எனக்கான செய்தி எதுவும் கட்டப்பட்டிருக்கிறதா? சூரியன் இன்னும் உதித்திராத வருங்காலத்திலிருந்து யாரோ எனக்கு விடுத்த அறைகூவலாக இருக்கலாம் இல்லை எனக்கு நானே கடந்த காலத்திலிருந்து அனுப்பிய இருண்ட நினைவூட்டலாகவும் இருக்கலாம்… வட்டவட்ட சிகரெட் புகையின் வெண்திரையில் நினைவுருவங்கள் நிழலாடின. ஒழுங்கற்ற எண்ணச்சுழல் ஆழத்திலிருந்து மேலெழுந்தது.

நிச்சயம் அதுவும் ஏதோவொரு உவப்பற்ற ஞாயிற்றுக் கிழமையாகத் தான் இருக்கும். முழுக்கைச் சட்டை அணிந்திருந்த சுருள்முடி சிறுவன் தன் சூப்பர்வைசருடன் ட்ரக்கில் போய்க் கொண்டிருக்கிறான். வாராந்தர பொருட்கள் வாங்க ஃபார்ம் ஹவுசிலிருந்து பக்கத்து டவுனுக்குப் போகும் அந்த அரைநாள் மட்டுமே அவனுக்கானது. வேலைப்பளுவின் உடல்நோவு தூக்கத்தை யாசித்தாலும் சிறுவன் கண்ணயர விரும்பவில்லை. வண்டிக்கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியே கழுத்தை நீட்டி வேடிக்கை பார்த்தபடி வருகிறான். இடையிடையே பின்னுக்குப் போகும் மரங்களைத் திரும்பிப் பார்த்து வேகமாய்க் கையசைக்கிறான். பராமரிப்பற்ற அவனது சுருள் தலைமுடி கந்தல் துணியைப் போல் எதிர்க்காற்றில் அலைகிறது. அறிவு இருக்கா…? சூப்பர்வைசர் திட்டியதும் கழுத்தை உள்ளிழுத்துக் கொள்கிறான். இருந்தும் வெளியுலகின் ஒரு துளியையும் இழக்க விரும்பாத அவனது கண்கள் சாலையை மேய்ந்தபடியே வருகின்றன.

வண்டி வழக்கமான காய்கறி கொள்முதல் அங்காடியில் வந்து நிற்கிறது. சூப்பர்வைசர் அங்காடிக்குள் நுழையவும் எதிரிலிருக்கும் முதிர்ந்த புளியமரத்தை நோக்கி ஒட்டமெடுத்தவன், தன் கீழாடைப் பையில் திணித்திருக்கும் மஞ்சள்நிறப் பந்தை மரக்கொப்பை நோக்கி மேலே எறிகிறான். எப்போதும் போல் பழுத்த இலைகள் மட்டுமே உதிர்கின்றன. புளி எதுவும் விழவில்லை. முகம் சுளித்தபடி மீண்டும் பந்தை எறிகிறான்.

ஒருவேளை இந்தமுறை குறிதவறாவிட்டால், உதிர்ந்து விழும் புளியங்காயையும் பந்தையும் ஒருசேர மண்ணில் விழும்முன் பிடித்தாக வேண்டும். அப்போதுதான் குழந்தையிலேயே அவனை ஏனோ ஃபார்ம் ஹவுசில் விட்டுப்போன அம்மா திரும்பி வந்து கூட்டிப் போவாள். அப்படி நடக்கும் பட்சத்தில் இனி அவன் அங்கு வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. பெரிய மீசை தாடிகள் இரவில் தொந்தரவு செய்யாது. சத்தமில்லாமல் அழவேண்டாம். எல்லாரிடமும் தைரியமாகப் பேசலாம். யாரும் அவன் இனத்தின் கசப்பான வரலாறைக் காரணங்காட்டி ஒதுக்கமாட்டார்கள்… இதேபோல் தனியாகப் பந்தை மேலே தூக்கி வீசவோ பூங்கா புல்வெளியில் விளையாடும் பிற சிறுவர்களைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கவோ தேவை இருக்காது. ஆனால் இவை எல்லாமே, கடையில் வாங்கிய பொருட்களுக்கு சூப்பர்வைசர் காசு கொடுப்பதற்கும் அவற்றை வண்டியில் ஏற்ற சிறுவனை அழைப்பதற்குமான சிலநிமிட இடைவெளிக்குள் பந்தையும் புளியங்காயையும் ஒருசேர பிடித்தால் மட்டுமே நிகழும்… அடுத்த முயற்சிக்கு சிறுவன் அண்ணாந்து குறிபார்த்துக் கொண்டிருந்த போது சூப்பர்வைசர் அதட்டலாய்க் கூப்பிடும் சத்தம் கேட்கிறது!

பீரின் புளித்த வாடை என் முகத்தில் காட்டமாய் வீச நண்பன் நெருக்கமாக வந்து கேட்டான், “என்ன யோசனை! பேச்சையே காணும்?”

“நீ சொன்ன மாதிரி கடந்தகாலம் எல்லாருக்கும் பொக்கிஷமாக இருப்பதில்லை…”

நண்பனின் போதையூறிய சிவந்த கண்கள் என்னை வெறித்துப் பார்த்தன. இருவரது பீர் கிளாசும் வெறுமையில் நிறைந்திருந்தது. சாளரத்தின் வெளித்திண்டில் புறாவைக் காணவில்லை.

“புகைப்படங்களை இவ்வளவு புனிதப்படுத்தத் தேவையில்லை… பெரும்பாலும் அவை நாம் மறக்க முயற்சிக்கும் பொழுதுகளின் தடயங்கள் தான்… அவற்றைக் கிழித்தெறிய முடிந்தால் அதுவே பெரும் ஆசுவாசம்…”

நண்பன் பதிலேதும் சொல்லாமல் கோபமாய்க் கிளம்பிச் சென்றதும் என் கீழாடைப் பையில் கசங்கிக் கிடக்கும் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். இடது உள்ளங்கையால் சுருக்கங்கள் போக மீண்டும் அழுத்தித் தேய்த்தேன். சுருள் தலைமுடி சிறுவனை நெஞ்சோடு அணைத்திருக்கும் அவளின் கருநீல கண்களில் தெரியும் பரிதவிப்பு உள்ளூர அணத்தியது. கடந்தகால படிக்கட்டில் நின்றுகொண்டு என்னையும் இறங்கி வர அழைக்கிறாள்… நினைவுகளின் ஒவ்வாமை மூளை முடுக்கெல்லாம் அலைக்கழித்து உடல் நடுங்கியது. போட்டோவை சட்டென கிழித்து வீசினேன். நீண்டதொரு பெருமூச்சு வெக்கைக் காற்றாய் வெளிப்பட்டது.

தலையைக் கவிழ்த்து ஒருவர் முதுகின் மீது ஒருவர் முன்னோக்கிச் சரிந்து கிடப்பதைப் போல் புத்தகங்கள் படுக்கையறையின் அலமாரி அடுக்குகளில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் கடந்த காலத்தின் ஒரு வரியைக் கூடப் பேசாத நூல் எது என எப்படிக் கண்டுபிடிப்பது?

வரலாற்று நூல்கள் ஆய்வுக் கட்டுரைகள் ஆவணங்கள் சரித்திரப் புனைவுகள் எல்லாம் புகைப்படங்களைப் போல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு உத்தரவு வெளியான அன்று என் அலுவலகத்தில் விடுப்பு விட்டிருந்தனர்.

‘வன்முறையும் அழித்தொழிப்பும் தான் வரலாறு! தொடர் போரும் பழிவாங்கலும் தான் மானிட சரித்திரம். ரத்தக்கறை படிந்த அப்பக்கங்களைக் கிழித்தெறியாத வரை நிரந்தர அமைதி பிறக்கப்போவதில்லை’ என்ற அரசு அறிவிப்பு திரும்பும் திசையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

என்னிடம் புத்தகங்கள் குறைவென்றாலும் ஒவ்வொரு நூலாக எடுத்து வாசித்து எந்தெந்த இடத்திலெல்லாம் வரலாற்று மேற்கோள்கள் வருகின்றன என ஆராய்ந்து அப்பக்கங்களை மட்டும் களைய நான் விரும்பவில்லை. ஒருவேளை நான் அப்படிச் செய்யும் பட்சத்தில் ஏதேனும் ஒன்றிரண்டு இடங்களை நான் கவனிக்காமல் விட்டுவிட்டால்…? அச்சொற்கள் ஏதோவொரு வரலாற்று நிகழ்வைப் பேசியிருந்தால்…? இன வன்முறையைத் தூண்டும் சரித்திரத் துணுக்குகளை மறைத்து வைத்திருக்கும் குற்றத்திற்கு நானும் ஆளாக நேரிடும்.

புத்தகங்கள் அத்தனையும் மொத்தமாக மூட்டை கட்டினேன். சொற்களின் கனம் சற்று அதிகமாகவே இருந்தது. புத்தக மூட்டையை காரின் டிக்கியில் இழுத்துப் போட்டு முன்முடிவு ஏதுமின்றி காரை செலுத்தினேன். நகரத்துக்குள் நுழையும் சாலை பரபரத்துக் கொண்டிருந்தது. புத்தகங்களைத் தலையில் சுமந்து அரசுக்கு எதிராகக் கோஷமிட்டபடி ஊர்வலம் போகும் வயது வரம்பற்ற கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது.

அப்புறப்படுத்தப்பட வேண்டிய நூல்களை உரக்க வாசித்தபடியும் தடைசெய்யப்பட்ட வரலாற்று ஆசிரியர்களின் உருவப்படங்களைத் தூக்கிப் பிடித்தபடியும் ஆமைவேகத்தில் நகரும் முட்டாள் கும்பலைச் சபித்தபடி காரை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்திலிருந்து தப்பிக்க காபி ஷாப்புக்குள் நுழைந்தேன்.

பழங்கால நூலகத்திற்குள் பிரவேசித்த உணர்வு. மௌனமாக அமர்ந்திருந்த எல்லார் கைகளிலும் ஏதோவொரு புத்தகம் விரிந்திருந்தது. அரசு அறிவித்திருக்கும் இரண்டு நாட்கள் கெடு முடிவதற்குள் எல்லாவற்றையும் வாசித்துத் தீர்த்துவிட வேண்டும் என்ற வெறி அந்தக் கண்களில். அறையெங்கும் பக்கங்கள் திருப்பப்படும் மெல்லிய ஓசை.

மானிட பண்பாடும் நாகரீகமும் பற்றிய புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த முதியவரின் எதிரே உட்கார்ந்து கொண்டேன். புத்தகங்களற்று வெறுங்கையோடு அமர்ந்திருக்கும் என்னை ஒரு பூச்சியைப் பார்ப்பதைப் போல் வெறித்துவிட்டு முகச்சுளிப்போடு கேட்டார்…

“புத்தகத் தடைக்கு எந்த எதிர்வினையும் இல்லையா?”

“எல்லாப் புத்தகங்களையும் அரசு ஒட்டுமொத்தமாகத் தடை செய்துவிடவில்லையே. வெறும் வரலாற்று நூல்களை மட்டும் தானே தடை செய்திருக்கிறது…”

“வரலாறு தெரியாத மனுஷனுக்கும் இயந்திரத்துக்கும் என்ன வித்தியாசம்? வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்பட்டுவிட்டால் நம் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதைதான்… அப்புறம் அவர்கள் வைப்பது தான் சட்டம்… சொல்வது தான் சரித்திரம்…”

“காலங்காலமாய் வரலாறு என்பதே எழுதப்படும் பேனாவைப் பொறுத்தது தானே… உங்களுக்குத் தெரியாதா என்ன? வரலாற்றின் ஓர் மூலையில் எழுதப்பட்ட ஒரு கொலை தண்டனைக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதக்குலம் எவ்வளவு இரத்தம் சிந்தி இருக்கிறதென்று…”

என் பதிலும் அதிலிருந்த நிதானமும் அவரைச் சிறிதளவேனும் காயப்படுத்தி இருக்கும். அவர் தனக்குள் முணுமுணுத்த வசைச்சொற்கள் துல்லியாமாகக் காதில் விழுந்தன.

அந்நேரம் குறுகுறுக்கும் பார்வையோடு கடைக்குள் நுழைந்த இளைஞனொருவன் “வரலாற்று அழிப்பு நாகரீகக் கேலிக்கூத்து…” என உரக்கக் கத்திவிட்டு தன் முதுகுப்பையிலிருந்து சிவப்பு மஞ்சள் நோட்டீஸ்களைப் பறக்கவிட்டான்

‘பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள்… புகைப்படங்கள்.. வரலாற்றுப் புத்தகங்கள்..’ என ஒன்று கீழ் ஒன்று எழுதப்பட்டு அடுத்தது என்ன ? என்ற பெரிய கேள்விக்குறியிடப்பட்ட நோட்டீஸ்கள் மின்விசிறிக் காற்றில் சலசலத்தன. அமைதி குலைந்து கூட்டம் மொத்தமும் ஆர்ப்பரித்தது. தன் கருத்து முன்மொழியப்படும் பெருமிதம் அந்த இளைஞனின் முகத்தில்… தனித்துவிடப்பட்ட மௌனத்தில் நின்றிருந்தேன். பெரியவர் கண்களில் தெரிந்த ஏளனம் என்னை மேலும் சிறுமைப்படுத்தியது. பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அந்தப் பரிகாச கண்களை உற்றுநோக்கி மெல்ல கேட்டேன்..

“திறக்கப்படாத எல்லைக் கதவுகளில் போக்கிடமற்றவர்கள் முட்டி நின்றபோதெல்லாம் உங்கள் வரலாற்று நூல்கள் எந்த உண்மையைப் பேசிக்கொண்டிருந்தன…?”

அவரது பதிலுக்குக் காத்திருக்கவில்லை… இருப்பு கொள்ளாமல் வெளியேறினேன். வீதியிலும் இரைச்சல் ஓய்ந்தபாடில்லை. சாலையோர கூட்டத்தின் முன்னால். “அரசின் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கம் கொண்ட சதிச்செயல்….“ எனப் பேசிக் கொண்டிருந்த குறுந்தாடி முகம் என் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் ப்ரொபசர் தான் என்பது புலப்பட சில நிமிடங்கள் பிடித்தன. என்னைப் பார்த்து புன்னகையோடு ஓரிருமுறை கையசைத்தார். கவனிக்காததைப் போல் கூட்டத்துக்குள் மறைந்து போனேன்.

நகரத்துப் பரபரப்புக்கு வெகுதொலைவில் ஆள்வரத்து குறைவான கடற்கரையில் தனித்து அமர்ந்திருந்தேன். மனித இரைச்சலற்ற கடலோசை சற்று ஆசுவாசமாக இருந்தது. தூரத்தில் கரும்புள்ளியாய்த் தெரியும் படகை வெறித்தபடி இருந்தேன். கடற்கரை மணலில் சிறு குழியொன்றைத் தோண்டி கற்களை வட்டமாக சுற்றி அடுக்கி காய்ந்த மரக்கட்டைகளையும் சருகுகளையும் இட்டு தழல் மூட்டியபோது கடற்காற்று அவ்வளவாக இல்லை.

மூட்டையிலிருந்து கறுப்பு உறையிட்ட புத்தகத்தை வெளியெடுத்து அலசினேன். நடுப்பக்கத்தில் புதைந்திருந்த புறா இறகொன்று நினைவுகளிலிருந்து கீழே விழுந்தது.

சிறுவனின் தோளைத் தட்டி “புறா மட்டும் தான் தன் அலகால் தண்ணீர் உறிஞ்சிக் குடிக்கும்..” என்று சொன்ன அன்று அவளின் கன்னங்கள் சிவந்து கருநீல கண்கள் சிறுத்திருந்தன. மகிழ்ச்சி கொப்பளிக்கும் அரிய தருணங்களில் அவளது முகப்போக்கு அப்படித்தானிருக்கும்.

உண்மையாவாம்மா…?? சிறுவன் ஆச்சரியமாகக் கேட்கிறான்.

தடித்த உறையிட்ட புத்தகத்திலிருந்து கருஞ்சாம்பல்நிற புறா இறகை வெளியே எடுத்து அவள் சிறுவனிடம் கொடுக்கவும் கைத்தட்டி துள்ளிக் குதிக்கிறான்…

குடியிருப்புக்குத் தாமதமாகத் திரும்பும் இரவுகளில் இப்படித்தான். சிறுவனுக்காக ஏதேனுமொன்று கொண்டு வருவாள்…

சிலசமயம் உணவுப்பொட்டலம்…. சிலசமயம் அவன் உடல் அளவுக்கு பொருந்தாத பழைய மேலாடை… சிலசமயம் உருவம் சிதைந்த பொம்மை… பழைய பந்து… இந்தமுறை கருஞ்சாம்பல்நிறப் புறா இறகு.

அவள் வரும்வரை கூடாரங்களின் வாசலில் தழல்மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு கும்பலோடு சிறுவன் ஒடுங்கி அமர்ந்திருப்பான்…

இன்று அவள் புதிதாகக் கொண்டு வந்திருக்கும் கறுப்பு உறையிட்ட புத்தகத்தின் மீது சிறுவனுக்கு நாட்டமேதும் இல்லை. புறா இறகை மட்டும் ஆர்வமாய் வாங்கிக்கொண்டு தன் கிழிந்த சட்டைப்பைக்குள் சொருகிக் கொள்கிறான்…

சோர்ந்திருக்கும் சிறுவனை மடியில் கிடத்தி அந்தத் தடித்த புத்தகத்தின் வசனங்களை மிகவும் சிரத்தையுடன் சத்தமாக வாசித்துக் காட்டுகிறாள்…

சமாதானம் நல்கக் கூடிய இந்த நூலுக்கு ஏற்ற புத்தகக்குறி என வாசித்து முடித்த பக்கத்தில் அப்புறா இறகை வைத்து மூடுகிறாள்.

அதையே வழக்கமாக்கிக் கொண்டாள். பழுப்புநிற பக்கங்களின் பொடிபொடி எழுத்துகளைக் கூர்மையாகப் பின்தொடர்ந்து நாள் தவறாமல் வாசிக்கிறாள்.. குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட இரவிலும்… தற்காலிகக் கூடாரங்களில் தங்கிய நாட்களிலும்… இருண்ட வானை வெறித்தபடி வெட்டவெளியில் படுத்துறங்கிய தருணங்களிலும்… என்றுமே அவள் அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தவறியதில்லை…

“தினமும் இப்படி ஈடுபாட்டோட வாசிக்கணும்… கட்டாயம் ஏதாவது அற்புதம் நடக்கும்…” நட்சத்திரங்களை ஏறிட்டு சிறுவனின் தலைகோதியபடி துலக்கமற்றுப் புன்னகைக்கிறாள். சிறுவனும் அதீத நம்பிக்கையோடு தலை அசைக்கிறான்…

நிதானித்து எரியும் தழலை இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு உறுதிப்பாட்டிற்கு வந்தது போல் கையிலிருக்கும் கறுப்பு உறையிட்ட புத்தகத்தை நெருப்புக்குள் வீசினேன். உள்ளுக்குள் ஏதோ அழுத்தியது. அனலுக்குள் விழுந்த கருஞ்சாம்பல்நிற இறகை மட்டும் குச்சியால் விறுவிறுவென வெளியே தள்ளி எடுத்தேன். தீயின் வெம்மை நினைவுகளைப்போல் சுட்டது..

புத்தகங்களின் வழவழ பக்கங்கள் நெருப்பு வெளிச்சத்தில் இன்னும் கூடுதலாகப் பளபளத்தன. கருகிச் சாம்பலாகும் வரலாற்றுக் காகிதங்களைப் பார்த்தபடி இரவு கவியும் வரை கடற்கரையிலேயே படுத்திருந்தேன். புத்தக மூட்டை சீக்கிரமே எடையில்லாமல் போனது.

சமீப நாட்களாக அரசின் புது அறிவிப்பு ஏதும் வெளிவராததால் முந்தைய உத்தரவுகளைப் பற்றியே டிவி சேனல்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.. பங்குச் சந்தையிலும் பொருட்படுத்தத்தக்க ஏற்ற இறக்கம் ஏதுமில்லை. கண் எரிச்சலை இலகுவாக்கும் சொட்டு மருந்திட்டு விழிகள் மூடியிருந்தேன்.

“எல்லாரும் சேர்ந்து அழியப்போறீங்க..”

சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தேன்.

சொட்டு மருந்தின் திரவ நீர்ப்பில் காட்சிகளில் துலக்கமில்லை. கைகள் இரண்டும் பின்பக்கமாக விலங்கிடப்பட்டு ப்ரொபசரும் அவரது நண்பர்கள் இருவரும் இழுத்துச் செல்லப்படுவது கலங்கலாகத் தெரிந்தது.

சட்டகத்தின் பின்புற கார்ட்போர்ட் மட்டும் தெரியும்படி அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இடுப்பளவு புகைப்படங்களைக் காவலர்கள் மறைத்துக் கொண்டு சென்றனர்.

“தீர்ப்புநாள் நெருங்கி விட்டது….”

வேடிக்கை பார்க்கும் அப்பார்ட்மென்ட் முகங்களை நோக்கி ப்ரொபசர் சத்தமாகக் கத்தினார். ஜன்னல் திரைச் சீலையை இழுத்து விட்டுக் கொண்டேன்.

போட்டோக்கள் அப்புறப்படுத்தப்பட்ட வெற்றுச் சுவரில் மாட்டுவதற்காக வாங்கிவந்திருந்த சிறு சிறு மரப்பறவைகளின் நினைவு வந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து மாட்டினேன். வரிசையாக அறையப்பட்ட ஆணியில் மரப்பறவைகள் ஓசையின்றி பறந்தன. சுவரின் நீலவண்ணம் பறத்தலை உறுதிச் செய்தது. சுவரில் குறுக்காக விழும் சாளரத்துக் கம்பியின் நிழலில் அவை வானளவு கூண்டுக்குள் பறப்பதைப் போலிருந்தது.

அழைப்புமணிச் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். புன்னகையோடு நின்று கொண்டிருந்த நண்பன் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்றான்.

“எத்தனை முறை போன் பண்ணேன். எடுக்கவே இல்ல…”

“தூங்கிட்டேன்….”

“பிறந்தநாள் அதுவுமாவா?? வேற யாரும் போன் செய்யலையா என்ன?”

நான் இருவருக்கும் சேர்த்து காபி போடப்போனேன்..

“காபியெல்லாம் வேணாம். வா… வீட்டுக்குப் போவோம்…”

“வீட்டுக்கா??”

“ஆமா… மனைவியும் குழந்தையும் வெளியூர் போயிருக்காங்க… வீட்டில் யாருமில்லை…” வினோதமான புன்னகையோடு நண்பன் சொன்னான்.

பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்துவர அவன் செல்லவும் நான் வாசலில் காத்திருந்தேன். திடீரென சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது புறா ஒன்று தரையில் துடித்துக் கொண்டிருந்தது.. தானியங்கிக் கதவில் தான் அடிபட்டிருக்க வேண்டும். அதன் மங்கிய வெள்ளைச் சிறகில் திட்டு திட்டாகச் சிவப்பு பரவியது. தரையில் சிறகுகள் படபடத்து அடித்தன.

நெளிந்த பிளாஸ்டிக் டின்கள் போடப்பட்டிருந்த அட்டைப்பெட்டியைக் காலிசெய்து நீண்ட குச்சியால் அடிப்பக்கமாகப் புறாவை நெம்பி அப்பெட்டிக்குள் தள்ளினேன்.

நேரமாகுது… என காரில் இருந்தபடி நண்பன் கத்தினான். முகத்தில் அசௌகரியம் நெளிந்தது.

வேகமாக வீட்டிற்குச் சென்று காலி அலமாரியில் புறா அட்டைப்பெட்டியை வைத்துவிட்டு உள்ளே கையளவு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்தேன். பறக்க எத்தனிக்கும் சிறகுகள் அட்டைப் பெட்டியின் சதுர மூலைகளில் முட்டி மோதின. ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டுக் கிளம்பினேன்.

நண்பன் தன் வீட்டுப் படுக்கையறை கார்ட்போர்ட் அலமாரியில் மறைத்து வைத்திருந்த மதுக்குப்பியை எடுத்துக்காட்டி மீண்டும் ஹாப்பி பர்த்டே என்றான். வேலைப்பாடற்ற பழைய பாணியிலான கண்ணாடி கிளாசில் விஸ்கியின் பொன்னிறம் மின்னியது.

“இந்தப் பாட்டு ஞாபகம் இருக்குதா?” என்றான்.

இருவரும் வலக்கைக் கைகோர்த்தபடி நடனம் என்ற பெயரில் இசையின் போக்கிற்கேற்ப கால்களை மாறி மாறி வீசினோம். கைகளை இறுகப் பின்னிக்கொண்டு வெறி பிடித்தவர்களைப் போல் சுற்றியதில் தரையில் விழுந்த நண்பன் ஒரு பைத்தியத்தைப் போல் சிரித்தான். மதுக்குப்பி காலிடறி தரையில் கொட்டியிருந்தது.

“மது வீணடித்தவனுக்கு நரகம் தான் வாய்க்கும்…” காட்டாற்றில் நீர் அருந்தும் வனவிலங்கைப் போல் மண்டியிட்டு தரையில் சிந்திய மதுவை நக்கினான். நான் உடல் குலுங்கக் கைத்தட்டிச் சிரித்தபடி சரிந்து விழுந்தேன்…

“கடைசியாக நாம் இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது நம் கல்லூரி நாட்களில் தான்! இனி அந்த இனிமையான நாட்கள் திரும்பப்போவதில்லை… தோஸ் ஆர் கோல்டன் டேய்ஸ்…”

“கோல்டன் டேய்ஸ்… என்ற வார்த்தையே நம்மை நாமே ஏமாற்றத்தான்!”

நண்பனின் முகம் ஒருகணம் கோணிப்போனது. இன்றாவது நான் இப்படிப் பேசாமல் இருந்திருக்கலாம். தலை கனத்தது. என்னை அறியாமல் உறங்கிப்போனேன்

“நல்லவேளை நேற்று உன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டோம்…”

நண்பன் என்னை உலுக்கி எழுப்பியபோது பகல் வெளிச்சம் கண் கூசியது. இரவுக் கனவுகளில் அலைக்கழிந்த என் கண்கள் சிவந்திருந்தன. நண்பன் சொல்வது எதுவும் விளங்கவில்லை.

“இன்றிலிருந்து எல்லாவித ஆண்டு விழா கொண்டாட்டங்களையும் தடை செய்துள்ளார்களாம்! பிறந்த நாள்… நினைவுநாள்… திருமணநாள்… என சகலமும். தேவையற்ற செலவைத் தடுக்கவாம்… இதைவிடப் பெரிய அடாவடித்தனமே அகழ்வாராய்ச்சித் திட்டங்களையும் அரசு நிறுத்திக் கொண்டுள்ளது. அதே காரணம்! புதைந்துபோன இறந்த காலத்தைத் தோண்டி எடுத்து ஆராய்வதில் மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் விரயமாகிறதாம்!

நண்பன் சொல்லிக் கொண்டிருப்பது டிவி சேனல்களில் தடித்த சிவப்பு எழுத்துகளில் ஓடிக்கொண்டிருந்தது.

“அவர்கள் தெளிவாகக் காய் நகர்த்துகிறார்கள்! சரித்திர அழிப்பு எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா?? நம் வருங்கால சந்ததிக்கு கடந்தகாலத்துடன் எந்தத் தொடர்பும் இருக்கப்போவதில்லை… அவர்களைக் கைப்பாவையைப் போல் ஆட்டி வைப்பார்கள்…”

நண்பன் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தான். நான் அவனோடு விவாதிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன்.

“நாம் அவ்வளவுதான். ஒழிந்தோம். தனிமனித சுதந்திரம் என்ற ஒன்று அடியோடு அழிந்துவிடும்…” நண்பன் கோபத்தில் தண்ணீர் பாட்டிலை எட்டி உதைத்தான்…

“அரசாங்க உத்தியோகஸ்தனுக்கு அரசு மீது இத்தனை கோபம் ஆகாது…”

நீ சிலாகிக்கும் வரலாறு என்பதே அகதிகளையும் அடிமைகளையும் உற்பத்திச் செய்ய உதவும் புனைவுக்களம் தான்… நாவின் நுனிவரை திரண்டுவந்த வார்த்தைகளை மௌனமாக விழுங்கிக்கொண்டு என் சட்டையைத் தேடியெடுத்துப் போட்டுக் கிளம்பினேன்.

அயர்ந்த கண்களோடு என் வீட்டிற்குள் நுழைந்ததும் சகிக்க முடியாத துர்நாற்றம்… மரண வாடை… கைக்குட்டையை விரித்து முகத்தை மூடிக் கொண்டேன்.

நடுவறையின் இருட்டில் ஜோடி கண்கள் பளிச்சிட்டன. மின்விளக்கைப் போட்டதும் சாம்பல்நிறப் பூனை திறந்திருக்கும் ஜன்னல் வழியே எகிறிக் குதித்து ஓடியது

கறுப்பு வெள்ளைச் இறகுகள் அலமாரியின் அடித்தட்டு வரை சிதறி இருந்தன. தலையில்லா புறா! குமட்டிக் கொண்டு வந்தது எனக்கு. தூக்கத்தில் கண்கள் வேறு செருகின.

ஜன்னலின் பின்னால் ஒரு உருவம் அசைவது தெரிந்தது.

‘செத்து ஒழி….’

கையில் கிடைத்ததை ஆக்ரோஷமாய் விட்டெறிந்தேன். பூனை வலியில் வினோதமாய்க் கத்திக்கொண்டு ஓடியது.

நெஞ்சு வரை சுருள் சுருளான நீண்ட தாடியும் ஓங்கிய கையில் கூரிய வாளை ஏந்தியபடி மிரளச் செய்யும் கண்களை அகலத் திறந்து நிற்கும் பத்தாம் நூற்றாண்டு போர்வீரனின் ஆறடி நிர்வாண சிலையொன்று பீடத்திலிருந்து கீழே தள்ளி உடைக்கப்பட்டது தான் தொடக்கம்.

கடந்தகாலச் சின்னங்களின் மீதான வெறுப்பு பொதுவெளியில் அதுவரை இல்லாத அளவு வெளிப்படையாகக் கொப்பளிக்கத் தொடங்கியது. கற்கால சின்னங்கள் பண்பாடற்ற மானிடத்தின் எச்சங்கள்… என்ற முழக்கத்தோடு நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றுச் சிற்பங்களை மக்கள் கூட்டம் கூட்டமாக உடைத்து ஆர்ப்பரித்தனர்.

‘கடந்தகாலத்தை விடாமல் இறுகப்பற்றி சிலாகிப்பவர்கள் பலவீனமானவர்கள். எதிர்கால குறிகோளற்றவர்கள். முன்னேறத் துடிக்கும் சமுதாயத்தின் கரையான்கள்…’

அரசு அறிவிப்புகளும் அதற்கான நியாயங்களும் எல்லா தொலைகாட்சி சேனல்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தன…

பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டிருந்தது. பச்சை வண்ணத்தில் கூட்டல் குறியோடு மினுங்கும் எண்களை மாறி மாறி உற்றுப் பார்த்தேன். என் கணிப்பு பலித்திருந்த மகிழ்ச்சி.

எதற்கும் உதவாத இறந்தகாலச் சின்னங்களை கண்ணாடிப் பெட்டகத்தில் வைத்துக் கொண்டாடும் அருங்காட்சியங்களை அரசு இனி இயக்கப்போவதில்லை என்று வெளிவந்திருக்கும் அறிவிப்பைப் பற்றி அலுவலகத்தில் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

தேநீர் இடைவேளிக்கு மிகச்சரியாகப் பொருந்தும் பேசுபொருள். சுவாரசியமற்ற அந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்தேன். நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது. ஏற்கனவே மூன்று முறை கூப்பிட்டிருக்கிறான். கவனிக்கவில்லை

“இப்போ என்னைப் பார்க்க வர முடியுமா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வா…”

அவன் எங்கே என்று சொல்லாவிட்டாலும் எனக்குப் புரிந்திருந்தது. பேச்சில் நிதானமில்லை. வார்த்தைகள் உடைபட்டு விழுந்தன.

அலுவலகம் முடிந்து வருவதாகச் சொல்லிவிட்டு கண்ணாடி அறையினூடாய் வெளியே பார்த்தேன். வெறிகொண்ட விலங்கைப் போல் நகரம் பரபரத்துக் கொண்டிருந்தது.

“அந்தக் கிழட்டு பழமைவாதியை விடாதே…”

“சமுதாயத்துக்கு இவனொரு தேவையற்ற சுமை…”

அரசு உத்தரவுகளைப் பொதுவில் விமர்சித்த முதியவரை நான்குபேர் சேர்ந்து தாக்கிக் கொண்டிருப்பதைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும் சாலையோரக் கும்பலோடு நானும் சில நிமிடங்கள் நின்றிருந்தேன்.

ஆர்ப்பரிக்கும் கூட்டத்திலிருந்து விலகி நான் மன்கீஸ் பாருக்குள் நுழையும்போதே நண்பன் அதிகம் குடித்திருந்தான். ரொம்ப நேரமாகக் குடித்திருந்ததில் முகம் வீங்கிப் போயிருந்தது. அழுது அயர்ந்த கண்கள் சிவந்திருந்தன. உதட்டோரம் உறைந்த ரத்தக்கறை…

என்னைப் பார்த்ததும் அவனது முகம் மேலும் இறுகிப் போனதை உணர்ந்தேன். எதுவும் பேச விரும்பாமல் அமைதியாக இருந்தவன் தன் தளர்ந்த பார்வையை என் முகத்தில் நிறுத்தி உடைந்துவிடும் குரலில் மெல்ல சொன்னான்…

“வினோத முகமூடி கும்பலால் ஓவியக் கண்காட்சி சூறையாடப்பட்டு தன் படைப்புகள் அத்தனையும் கொளுத்தப்பட்ட அதிர்ச்சியில் பிரபல ஓவியர் முன்தினம் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வைப் பற்றி இன்று நான் வேலை பார்க்கும் உணவகத்தில் பேச்சு எழுந்தது. எல்லாரும் பல வருடங்களாக ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் தான்…

‘இத்தனை வருட படைப்பையும் மொத்தமாக அழித்தொழித்தால் பாவம் ஒருவன் வேறென்ன செய்வான்? அரசு ஏன் இதைப்பற்றி எதுவும் பேசவில்லை…?’ என்று கேட்டேன். ‘இது அவருடைய முட்டாள்தனம் தான்… இப்போதுள்ள சூழலில் ஓவியக் கண்காட்சி எவ்வளவு ஆபத்து என அவருக்குத்தான் முன்னமே தெரிந்திருக்கணும்… அரசுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இது மக்களின் கோபம்…’ என்று ஒட்டுமொத்தமாக மறுத்தார்கள். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விவாதம் முற்றிப்போன ஒருகணத்தில் தாக்கப்பட்டேன்… என்னைப் பணியிலிருந்தும் நீக்கிவிட்டார்கள். என்னை மட்டுமே நீக்கினார்கள்… யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை…” என்றபோது நண்பனின் கண்கள் கலங்கியிருந்தன.

“இங்கு எல்லாம் மாறிவிட்டது… எல்லாரும் மாறிவிட்டார்கள்… அந்தக் காலம் திரும்பப் போவதில்லை… இனி புலம்புவதைத் தவிர செய்வதற்கு ஒண்ணுமில்லை…” என்றான்.

நண்பனின் சோர்வடைந்த முகத்தை நோக்கி சத்தமாகப் பேச வேண்டாம் எனச் செய்கை செய்தேன். பொது இடங்களில் கடந்த காலத்தை நினைவு கூர்வதும் அரசு உத்தரவுகளை விவாதிப்பதும் தண்டனைக்குரியது என்பதை மறந்திருப்பான்.

புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கும் வெள்ளைச் சுவரில் பழைய குரங்கோவியங்கள் ஏதுமில்லை. சதுர வடிவில் வரலாற்று முகங்கள் பொறிக்கப்பட்டிருந்த வண்ணக் கண்ணாடிச் சாளரத்திற்குப் பதில் புதிதாக மாற்றப்பட்டிருக்கும் வேலைப்பாடுகளற்ற எளிய சாளரம் மேலும் சலிப்பூட்டியது.

நண்பன் மற்ற மேசைகளை பரிதாபமாக நோட்டமிடுவதும் மதுக்குப்பியை அப்படியே கவிழ்ப்பதுமாக இருந்தான்.

“சரி விடு! இனி வருத்தப்பட்டு ஒண்ணும் ஆகப்போவதில்லை…”

நான் அப்படிச் சொன்னதில் அவன் மேலும் உடைந்திருக்க வேண்டும். தலையை வேகமாக அசைத்து எங்கோ பார்த்தபடி சன்னமாக முணுமுணுத்தான்.

அவனால் முடிந்தது அவ்வளவுதான்… அவனால் மட்டுமல்ல இனி யாரால் தான் என்ன செய்துவிட முடியும்?

மது அருந்தும் மனநிலை இல்லாததால் அவன் மேலும் என்னை இருக்கச் சொல்லியும் சீக்கிரமே கிளம்பி விட்டேன்

கட்டிடத்தின் வாசலில் இரு பக்கமும் ஒரு ஆணின் இடுப்பளவு உயரமுள்ள இரண்டு செராமிக் குடங்களில் செயற்கையாய் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மேற்பகுதி விரிந்தும் கீழ்ப்பகுதி கூம்பு வடிவில் சுருங்கி இறங்கும் அந்தக் குடங்களை வெறித்துக் கொண்டிருந்தேன். ஏதோவொன்று மனதை அரித்தது.

அடுத்தடுத்து இரண்டு சிகரெட்கள் பிடித்திருந்தேன். கை காட்டியும் முதல் இரண்டு டாக்சிகள் நிற்கவில்லை. பனிப்பொழிவு கூடியிருந்தது. கைகளை சூடேற உரசிக் கொண்டேன்.

குபுக் குபுக் எனத் தண்ணீர் பீறிடும் குடத்தின் அமைப்பு இரத்தம் பீறிடும் கழுத்தறுபட்ட புறாவை நினைவுபடுத்தியது. பார்வையை விலக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். மஞ்சள்நிற டாக்சி என்பக்கமாக ஒதுங்கி நின்றது.

“என்ன பிரண்ட்! விடுமுறை கொண்டாட்டமா?” என்று கேட்ட ஓட்டுனரிடம் “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை…” என்றபடி சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டேன்.

கார் ரேடியோவில் லைவ் கான்செட் ஓடிக் கொண்டிருந்தது.

“இப்போதெல்லாம் ரேடியோவில் பழைய பாடல்கள் ஒலிபரப்புவதில்லை. லைவ் கான்செட் மட்டும்தான். அன்றைய பாடல் அந்தந்த தேதிக்கு மட்டுமே சொந்தம்” என்றவன் தன் முகம் மறைக்கும் பெரிய மீசையை நீவிக் கொண்டான்.

ரேடியோ இசையின் வயலின் தந்திகள் என்னுள் அதிர்ந்து பரவின. முதிர்ந்த பட்சியின் இறுதி சிறகடிப்பாய் என்னை நடுங்கச் செய்தது. வியாகுல குளத்தில் மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தேன்.

சிறுவன் தன் மெலிந்த மணிக்கட்டை துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் நுழைத்து வெளிப்பக்கமாகச் சோளத்தைப் பரப்பி வைத்துவிட்டு நெளிந்த பிளாஸ்டிக் கப்பில் கொஞ்சம் தண்ணீரும் பிடித்து வைக்கிறான்.

ஆனால் இடிந்த கட்டிடத்தில் அமர்ந்திருந்த வெளிர்சாம்பல் புறா சிறுவன் எதிர்பார்த்ததைப் போல் உடனே பறந்து வரவில்லை.

“நாம பார்த்துட்டே இருந்தா வராது… பயந்து போகும்..” என்றவள் சிறுவனைத் தூக்கிக் கொண்டு விலகியது தான் தாமதம் புறாவின் சிறகடிப்பு மிக அருகாமையில் கேட்கிறது. சிறுவன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டான்.

வாசல் கதவைப் படாலென்று திறந்து உள் நுழைந்த தடித்த ஆணின் குரல் சத்தமாக ஒலிக்கிறது. மிரண்டு போன சிறுவன் அவளது பிடியிலிருந்து விலக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டான்.

மீண்டும் கதவு திறக்கப்பட்ட போது சிறுவனின் பிடரியில் அடிப்பதைப் போல் மீசைக்காரன் கையை ஓங்கிக்காட்டிச் சிரித்தபடி கிளம்பிப் போகிறான். தன் துணிமூட்டைக்குள் அவள் எதையோ மறைத்து வைப்பதில் சிறுவனுக்கு ஆர்வமில்லை. வேகமாக ஜன்னலருகே போய்ப் பார்க்கிறான். புறா எதுவும் தென்படவில்லை…

அன்றைய இரவில் வழக்கமான புத்தகத்தை அவள் சிறுவனுக்காக வாசித்துக்காட்டவில்லை. அவனை மடியில் கிடத்தி தலை கோதியபடி விசும்பிக் கொண்டேயிருக்கிறாள்..

மறுநாள் விடியலின் வெளிச்சம் பிறக்கும் முன்னே சிறுவனை இடுப்பில் தூக்கி வைத்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினாள். சிறுவன் அத்தனை பாரமில்லை தான். இருந்தும் அவளுக்கு மூச்சிரைக்கிறது. வளர்ந்த புளியமரத்தைக் கடந்து போகையில் மெல்லிய புன்னகையோடு சொல்கிறாள்…

“அங்க நிறைய புறா இருக்கும்…”

“நிறைய புறாவா??” சிறுவனின் கண்கள் சிறகுகளாய் விரிகின்றன…

ஆமாம் எனத் தலையசைத்தவள் சிறுவனின் கிழிந்த சட்டைப்பையில் கருஞ்சாம்பல்நிற இறகைச் சொருகிவிட்டு இறுக அணைத்து முத்தமிட்டபோது அவள் கண்கள் சிறுத்திருந்தன. சிறுவனும் அவளது முகத்தில் இறகால் மெல்ல வருடிச் சிரிக்கிறான்.

போகும் வழியில் சிறுவனுக்கு மிகவும் பிடித்த உணவு பண்டத்தை ஊட்டுகிறாள். உணவு வாசத்திற்கு அடர்ந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கருங்குரங்குகள் இறங்கி வருகின்றன.

சிறுவனின் காதோரம் விழும் முடிக்கொத்தை விலக்கிவிட்டு Going Nowhere பாடல்வரிகளை அவள் முணுமுணுத்துக் கொண்டே வரவும் உறங்கிப்போகிறான். அரைத்தூக்கத்தில் அவன் கண் விழித்தபோது காதில் மெல்ல முணுமுணுக்கிறாள்… “அழாம இருக்கணும்.. நான் சீக்கிரமே வந்துருவேன்…”

அவன் பிடிவாதமாக அவளின் மார்க்கச்சையை இறுக அணைத்துக் கொள்கிறான்… தூரத்தில் ஃபார்ம் ஹவுஸ் தெரிகிறது.

“உங்களுக்கு இந்த வயலின் இசை ரொம்பப் பிடிக்குமோ??” வண்டி ஓட்டுனரின் கரகரத்த குரல் எங்கோ தொலைந்து கொண்டிருந்த என்னை மீட்டெடுத்தது…

“ஆமா… சில பாடல்கள் நெருக்கம்… குறிப்பாக Going Nowhere பாடல்… என் சிறுவயதின் பல இரவுகளில் அந்தப்பாடல் வரிகளை தனிமையில் அனிச்சையாக முணுமுணுத்தபடி இருந்திருக்கிறேன்…”

ஓட்டுனரின் முகம் சட்டென்று மாறியது. இறுகிய முகத்தோடு சாலையினோரம் வண்டியை நிறுத்திவிட்டு என்னை இறங்கச் சொன்னான். நான் ஒன்றும் புரியாமல் முழித்தேன்.

“வேசி மகனே! என் மூன்று வயது மகன் ப்ளூ காய்ச்சலில் இறந்த இரவு அன்று தூரத்து வானொலியில் நீ சொன்ன பாடல் தான் ஒலித்துக்கொண்டிருந்தது. தேவையில்லாமல் பழைய நினைவுகளை கிளறிவிட்டுவிட்டாய்… வண்டியை விட்டு இறங்கு.“

சத்தமாகக் கத்தினான். பயந்துதான் போனேன். கடந்த காலத்தை பொதுவில் பேசியதாக அவன் மட்டும் என் மீது புகார் கொடுத்துவிட்டால்…? அச்சத்தில் உள்ளூர வெடவெடத்தது.

“முட்டாளே! உன்னைப் போன்ற கையாலாகாதவர்களை என்ன செய்தாலும் தகும்…” உரக்கக் கத்திவிட்டு காரை கிளப்பினான்.

பெரிய அலையில் இருந்து மீண்டெழுந்ததைப் போல் உணர்ந்தேன். இரவு காற்று குளிர்ச்சியில் செவிகள் விறைத்துப் போயின. குளிர் ஜாக்கெட்டின் தலைப்பகுதியை முன்னிழுத்துக் கொண்டேன். உள்ளங்கைகளை உரசிக் கொண்டு ஆழமாக மூச்சு விட்டுக் கொண்டேன்.

புதுரக ரேஸ் பைக் ஒன்று உறுமியபடியே கடந்து போனது. பைக் ஓட்டுபவனை இறுக அணைத்திருந்தவள் நொடிப்பொழுது என்னைத் திரும்பிப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தாள்

நடைபாதையில் தனியாக நடந்து கொண்டிருந்தேன். அதுவரை இல்லாத வெறுமை காலிக் கோப்பையைப் போல் என்னை நிறைத்தது. செவிமடலுக்குள் ஓவென்று ஒலிக்கும் நிற்காத ஓலம். தன்னுணர்வின்றி என் நடையின் வேகம் கூடியிருந்தது.

பக்கத்துக் குடியிருப்பில் சிவப்பு ஸ்வட்டர் அணிந்த முதியவர் ஜன்னல் கம்பிகளினூடே வீதியை வெறித்துக் கொண்டிருந்தார். யாருடனும் பேசுவதற்கும் பகிர்வதற்கும் எதுவும் மிச்சமில்லாததைப் போன்றதொரு சூனியப்பார்வை.

நீண்ட விடைத்த நாக்கில் எச்சில் சொட்ட சொட்ட கூரிய நகங்கள் மின்ன ஏதோவொன்று என்னை விரட்டுவதைப் போன்ற உள்ளுணர்வு

வீட்டிற்குள் நுழைந்ததும் வாசற்கதவை அழுத்தமாய்த் தாழிட்டுக் கொண்டேன். ஆளரவமற்ற வீட்டின் நிச்சலமான வெறுமை… காலி இருக்கைகள்… வெற்றுப் புகைப்படச் சட்டகத்தின் சதுர வடிவ கறைபடிந்த சுவர்கள்… காலி புத்தக அடுக்குகள்… மேசையில் கழுவாமல் கிடக்கும் சாப்பாட்டுத் தட்டு… ஜன்னலின் மறுபக்கம் கடுவன் பூனையின் நிழலசைவு… தரை முழுவதும் கறுப்புவெள்ளைப் புறா இறகுகள்…. சுக்கல் சுக்கலாய்க் கிழித்துப்போட்ட கலர்கலர் புகைப்படங்கள்… கிழித்தெறிந்த முகங்கள் எல்லாம் ஒன்றுகூடி மீண்டும் மீண்டும் உரக்கச் சிரிக்கின்றன…

‘இங்க நீ அழாம இருக்கணும்… தினமும் நிறைய புறாக்களைப் பார்க்கலாம்…. அம்மா சீக்கிரமே வந்து கூட்டிப்போறேன்…’ ‘டே பையா! உன் வீட்டுக்குப் போகணுமா? அப்போ நான் சொல்றபடி கேட்பியா…?’ ‘உன் அப்பா பெயர் என்ன?’ ‘உங்க இனமே இப்படித்தான் போல… விரட்டி அடிச்சதுல தப்பே இல்ல..’ ‘எந்தப் பொண்ணு தான் உன்கூட இருப்பா? உன்னால எதுவும் முடியாது… நீ எதுக்குமே லாயக்கில்லாதவன்..’

உடல் நடுங்கியது… காலணிகளைக் கழற்றவில்லை… விஸ்தாரமான காலிப் படுக்கையில் அப்படியே சரிந்தேன். ஏமாற்றாமல் அரவணைக்கும் மடி எனக்கும் வாய்த்தால் தான் என்ன? தலையணையில் முகத்தைப் புதைத்தேன். ஒருமுறை கூட புளியங்காயையும் பந்தையும் ஒருசேர பிடிக்க முடியவில்லை. உரக்கக் கத்த வேண்டும் போல் தோன்றியது. வழவழப்பான புறாஇறகுகள் மொத்தமும் மின்விசிறிக் காற்றில் சுழன்றுமோதி என் மீது மலையாய்க் குவிந்து அழுத்தின. யாருமற்ற கனத்த இறுக்கம் குரல்வளையை நெறித்தது. விரல்நுனியில் சுழலும் கூடைப்பந்தாய்த் தலை சுற்றியது. என் காதுமடலுக்குள் சற்றும் பிசிறில்லாமல் பாடிக்கொண்டேயிருக்கிறாள்…

என்னைத் திருட்டுத்தனமாய் வேவு பார்க்கும் கடந்தகால நினைவுகள் மொத்தமும் கூட்டமாக விரட்டுகின்றன.

தன் நெஞ்சோடு சேர்த்து என்னை அணைத்துக் கொள்கிறாள். கூட்டம் என்னை நெருங்கி விட்டது. அவள் தன் காக்கிநிற மார்க்கச்சையோடு என்னை இன்னமும் இறுக அணைத்துக் கொள்கிறாள். கண்ணீர் மட்டுமே வாய்த்தவன் போல் அழுது கொண்டே இருக்கிறேன்… அழுது கொண்டே இருக்கிறேன்… அழஅழ என்னை அணைத்துக் கொள்பவளின் உடல் ஸ்பரிசத்திற்காக…

ஐயோ கடவுளே! யாராவது கனவுகளையும் தடைசெய்ய மாட்டார்களா??

விஜய ராவணன்

திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய ராவணன் தற்சமயம் சென்னையில் வசித்துவருகிறார். ‘சால்ட்’ வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘நிழற்காடு’ இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பாகும்

2 Comments

  1. உள்ளிழுக்கும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரராண விஜயராவணன், காத்திரமானக் கருக்களையே தனது சிறுகதைகளின் முன்புலமாக வைத்திருப்பார். பிரமிக்கவைக்கும் அந்தக் காட்சியை,நிகழ்வை, நிகழ்ச்சியைச்சுற்றி, எளியநடையில் கதைச்சொல்லும் அவரது பாணி, இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.

  2. ஆத்மாநாமின் அவசரம் கவிதை

    “அந்த நகரத்தில்
    இருவர் கூடினால் கூட்டம்
    நால்வர் கூடினால் பொதுக்கூட்டம் ……

    சாலையில் கூட்டமாய்ச் செல்லக் கூடாது
    வீட்டுக்குள் யாரும் நடக்கலாம் ……

    மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்

    அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து”

    நினைவுக்கு வருகிறது.

    ஆனால் அக்கவிதையைவிடவும் அடர்த்தியான சித்தரிப்பு.

    நன்றி விஜய ராவணன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.