பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

ஆவதென்ன….

அது என் மூளை
எனக்கே தெரியாமல் மாற்றிய கடவுச்சொல்.
அது உனது வருகையை
உனக்கே தெரியாமல் படம்பிடிக்கும் கருவி.
அது நமது அரசு
நமக்கே தெரியாமல் இயற்றிய சட்டம்.
தெரிந்துகொண்டு நாமும் என்ன செய்யப் போகிறோம்
வெப்ப அலையில் கூடிவிட்ட வெயில்
பளிச்சென்று தெரிகின்றன பழைய கட்டிடங்கள்.
காடு அழிவதைத் தவிர்க்கும்பொருட்டும், காலநிலை மாற்றம் குறித்தும்
பேருந்தில் பிரச்சாரம் செய்கிறாள் ஒரு இளம்பெண்
அவள் சொல்வதைக் கேட்டவாறே
வாங்கிய வெள்ளரிப்பிஞ்சுகளுக்கு மீதிச் சில்லறையைத் தேடுகிறேன்.
மறுநாளின் தேதியில் எழுதப்படும் இன்றைய நாட்குறிப்புகளாய்
முன்கூட்டியே வந்துவிடுகின்றன இறங்கவேண்டிய நிறுத்தங்கள்
சரி…
அப்படியே சுதாரித்துக்கொண்டுதான் நாமும் என்ன செய்யப் போகிறோம்
தினமும் கடந்துசெல்லும் முற்றத்துச் செடியில்
இதுவரைக் கண்டுகொள்ளாத பூக்களே ஏராளம் ஏராளம்
அதற்காக மலராத பூக்களும் ஏராளம் ஏராளம்.

000

தண்டிக்க முடியாத இடைவெளி

தண்டிக்க முடியாத இடைவெளியில் நின்று இருவர் வாதிடுகின்றனர்
ஒருவரின் பலவீனத்தை இன்னொருவர் சொல்லி
கிட்டத்தட்ட மூர்க்கமாக, எதிரெதிர் தரப்புகளாக…..
என்ன காரணமென்று அறிய முடியவில்லை
ஆனால் அவ்விருவரையும் தந்தை மகன் என்று
தொடர்புப் படுத்தினால் அப்படியே பொருந்திப் போகும்.
ஒருபுறம் பட்டுப்போன விருட்சங்கள், மறுபுறம் நிறமொழுகும் பூச்செடிகள்
அவ்வீதியை ஒரு போர்க்களம் என்று மிகைப்படுத்தினால் – அதுவும்
அப்படியே பொருந்திப் போகும்.
நான் அவ்விருவரின் இடத்தில் என்னையும் என் தந்தையையும்
ஒப்பிட்டபடி தோட்டத்தினூடே வீடு திரும்பினேன்.
அங்கே வெளிச்சத்தை வழிமறிக்கும் கிளையொன்றில்
அதன் நுனியிலிருந்து புறப்படப்போகும் கூடொன்றில்
ஒரு தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு ஊட்டுகின்ற இரையானது
வரிசையாகத் தவறிக் கீழே விழுந்துகொண்டிருந்தது.
அதிர்ச்சியில் விரிந்த விழிகள்
முடிந்தவரை உலகினை ஒட்டுமொத்தமாய்க் காண முயல்கின்றன
இப்போது அச்சம்பவத்தை
வேண்டுமென்றே நடந்தவொன்றெனக் கூறினால்
அதுவும் அப்படியே பொருந்திப் போகும்.

000

வந்தடையும் பொழுதுகள்

குயில்கள் சிலநேரம் கத்துவதுண்டு
சரியாக
என் தரப்பு நியாயத்தை அப்போதுதான் துவங்கியிருப்பேன்
பழுதடைந்த வாகனத்துடன் நடுவழியில் சிக்கியிருப்பேன்
மாதக் கடைசியில் இன்னும் பதில் வந்திருக்காது
யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்ட ரகசியங்களை
வேண்டுமென்றே அனைவருக்கும் அம்பலப்படுத்துவதுபோல்
குயில்கள் சிலநேரம் கத்துவதுண்டு
தொலைவிலிருந்து கூச்சலாய்
பெருங்கூச்சலாய்….

குயில்கள் சிலநேரம் கூவுவதுண்டு
சரியாக
அந்தத் தெருமுனையில் நீ ஒவ்வொரு நபராய் காட்சி தருவாய்,
தவறுதலாய் அனுப்பப்பட்ட தொகை திரும்பக் கிடைத்திருக்கும்,
வேலைமுடிந்து பெருமூச்சுடன் இருக்கைவிட்டு எழுந்திடுவேன்,
அல்லது ஏதோவொரு அந்தி மாலையில்
வெட்டவெளிதனில்
கடந்து செல்வதற்கு ஒன்றுகூட மிச்சமில்லாத வேளையில்
குயில்கள் சிலநேரம் கூவுவதுண்டு
எங்கோ தொலைவிலிருந்து
படிப்படியாக உள்ளிருந்தும்.

000

பெரு விஷ்ணுகுமார்

ழ என்ற பாதையில் நடப்பவன்’ கவிதைத்தொகுப்பின் ஆசிரியர். கவிதைகளும், சிறுகதைகளும் சமகாலத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. முன்கூட்டியே வந்துவிடுகின்றன இறங்கவேண்டிய நிறுத்தங்கள்; ஆம். வாசிப்பதற்கு முன்பே பறந்து விடுகின்றன கவிதைகளும். அதுவே கவிதைகளின் நறுமணம். இன்னும் சூழ்ந்திருக்கிறது என்னை.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss