யாழ்ப்பாணம், மெலிஞ்சிமுனையைப் பிறந்த மெலிஞ்சி முத்தன், தற்போது கனடாவில் வாழ்கிறார். ‘முட்களின் இடுக்கில்‘, ‘வேருலகு‘, ‘பிரண்டையாறு‘, ‘அத்தாங்கு‘, ‘உடக்கு‘ முதலியன இவரது முந்தைய படைப்புகள். மெலிஞ்சி முத்தனின் சமீபத்திய நாவல் ‘காந்தப்புலம்‘.
“மெலிஞ்சி முத்தனின் கனவுகள், வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையைப்போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை யுத்தம் உருவாக்கிய மனிதனைப் பற்றிய உண்மையான வெளிப்பாடு. எதன்மீதும் சார்பு கொள்ள முடியாதபடி அவரது மனம் துவண்டு கிடக்கிறது. எழுத்து மட்டுமே வாழ்வின் மீதான ஒரே பற்றுக்கோடாக உள்ள ஒரு கலைஞன் மெலிஞ்சி முத்தன். கனடாவில் வசிக்கும் இவர் ஒரு சிறந்த கூத்து கலைஞர்” என்று குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் எஸ். ராமகிருஸ்ணன்.
மெலிஞ்சி முத்தனின் இலக்கிய அடையாளம் கூத்து, இசை, புலம்பெயர் வாழ்வு, கடலோடும் வாழ்க்கை, கிறிஸ்தவப் பண்பாட்டுப் புலம், இவையெல்லாவற்றிலும் உள்ளோடும் தத்துவார்த்தத் தேடலோடு இணைந்தது. என்பதால், அதற்கான மொழியையும் சித்திரிப்பு முறையையும் கொண்டிருப்பது. இந்த நேர்காணல் இணைய வழியிலும் தொலைபேசி உரையாடல்களிலுமாக அமைந்தது. பேசியவை ஏராளம். பதிவு பெற்றவை சொற்பம். ‘கலைஞர் இயற்றும் காலம்’ என்பது கனவின் வெளிப்பாடு அல்ல. அத்தகைய காலம் ஒன்றே மானுடருக்கானது, அதுவே நிஜமாக வேண்டும் என்று விரும்புகிறார் மெலிஞ்சி முத்தன். நம்முடைய விருப்பமும் அதுவாகத்தானே உள்ளது.
- கருணாகரன்

கேள்வி: யாழ்ப்பாணத்திலுள்ள மெலிஞ்சிமுனை என்ற கடலோரக் கிராமத்தில் பிறந்த இயூயின், கனடாவிலுள்ள ரொறன்ரோ நகரில் மெலிஞ்சி முத்தன் ஆகிய கதை என்ன?
பதில் : எந்த மாற்றமும், வளர்ச்சியும் திடீரென்று நிகழ்வதில்லைத்தானே. நிலம், உறவு, உணர்வு, பழக்க வழக்கம், சிறப்புத் தேர்ச்சி, அனுபவம், கலை, அரசியல் , ஞானம் எனும் படிக்கட்டுகளின் வழியாகவே வாழ்தலின் ஆகக் கூடிய சாத்தியத்தைக் கண்டடைகிறோம். அத்தோடு என்னிடம் எள்ளாக இருந்தவைதான் எண்ணையாக மாறியிருக்கின்றனவெனச் சொல்லலாம்.
அப்பா விஜயநாதன் தேவாலயங்களில் பாடல் பயிற்றுவிப்பாளராகவும் ‘கீபோர்ட்’ வாசிப்பவராகவும், கூத்து அரங்கேற்றங்களில் ஆர்மோனியம் வாசிப்பவராகவும் இருந்தார். மாமன்கள், கூத்துக் கலைஞர்களாக இருந்தார்கள்.
சிறு வயதிலேயே கூத்துப் பாடல்களையும், கிறிஸ்தவப்பாடல்களையும், நாடகங்களையும் எழுதும் தன்மை கைவந்தது.
உடைந்த கடவுள் சிலைகளின் முதுகுகளில் புதிய மனித உருவங்களைச் செதுக்கிப் பார்ப்பதும், ஆலயத்தில் உருகி வடிந்த மெழுகில் உருவங்களைச் செய்து பார்ப்பதும் விருப்பமான விடயமாக இருந்தது.
நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்த காலங்களில் மன்னாரின் சில கிறிஸ்தவக் கிராமங்களின் எல்லைகளில் காவல் தெய்வங்களாக நிற்கும் மேரி மாதாக்கள் சோகமாக இருக்கக் கூடாதென்று எனது தூரிகைகளால் மகிழ்ச்சியாக மாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் சிற்பியைத் தாண்டும் ஓவியனின் மகிழ்ச்சி எனக்குள் இரகசியமாக எட்டிப் பார்த்ததுண்டு.
அக்காலத்தில் எங்கள் இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு வந்து உரையாடிய ‘யூட்லால் பாதர்’ வெளியிட்ட ‘மூன்றாவது கண் ‘ சஞ்சிகைக்கு சில கவிதைகளை எழுதி அனுப்பினேன். அப்போதுதான் அம்மாவின் ஊராகிய மெலிஞ்சிமுனையையும், அப்பாவின் ஊராகிய முத்தரிப்புத் துறையையும் இணைத்து மெலிஞ்சி முத்தனெனும் புனைபெயரை எனக்கானதாக வைத்துக்கொண்டேன்.
மூன்றாவது கண்ணில் என் கவிதைகள் வெளிவந்தனவா தெரியாது. நான் அந்த முகாமை விட்டும், பின்னர் நாட்டை விட்டும் வெளியேறினேன். வெளிநாட்டு வாழ்க்கைக்குள் என்னைத் தொலைத்துவிடாமலிருக்க எழுதத் தொடங்கினேன். கிறிஸ்தவம் கட்டமைத்த மனநிலைகளிலிருந்து என்னை வெளியேற்றுவது கடினமாக இருந்தது. எனது இலக்கியம்தான் என்னை மீட்டெடுத்தது என்று சொல்ல முடியும்.
கிறிஸ்தவம் கட்டமைத்த மன நிலையிலிருந்து உங்களை வெளியேற்றக் கடினமாக இருந்தது – இலக்கியமே உங்களை மீட்டெடுத்தது. ‘வெளிநாட்டு வாழ்க்கைக்குள் தொலைந்துவிடாமலிருக்க எழுதினேன்.’ இரண்டும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விசயங்கள் இதைப்பற்றிச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.
எனது அப்பப்பா தேவாலயத்தில் சங்கித்தனாக இருந்தவர். எனது சிறு வயதிலேயே கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போல கைகளை விரித்துக்கொண்டுதான் செபம் சொல்லக் கற்றுத்தந்திருந்தார். கை உளைய, உளைய முழந்தாள் படியிட்டு செபம் சொல்ல வேண்டும்.
அடிக்கடி சிலுவ
நித்தம் பூச
கல்லற கிட்ட
கபால மல தூர
சுற்றிவரச் சம்மனசு
தூரப்போகும் சத்திராதி
என்ற வாய்ப்பாட்டோடுதான் மேற்சட்டைப் பொத்தானைக் கழுத்துவரை குத்திக்கொண்டு வளர்ந்தேன். அம்மாவின் சோட்டியைப் போட்டுக்கொண்டு மச்சாள், மச்சான்களோடு பூசை வைத்து விளையாடினேன்.
சிறுவனாக இருக்கும்போது இரவுகளில் கனவு கண்டு அச்சத்தோடு அழும்போதெல்லாம் என்னைத் தேற்ற என்னுடைய தந்தையார் ‘நான் ஐயா உன்னோட இருக்கிறன்ரா’ என்று சொல்லித் தேற்றுவார். ஆனால் என் கனவில் வந்த மலை உச்சியில் ஏறி நின்ற என்னைக் கீழே இறக்க ஐயா போதுமானவராக இருந்ததில்லை. கிறிஸ்து எனும் ‘சுப்பர் கீரோவே’ என்னை மலையிலிருந்து இறக்குவதற்கு தகுதியானவர் என்று எனக்குள் இருந்த ‘நம்பிக்கை’ எனக்குச் சொன்னது.
உளவியல் அந்தர நிலைக்கு ‘சாவைக் கடந்தவர்’ எனும் ஒருவர் மீதான நம்பிக்கை மருந்தாக இருந்தது. வளர்ந்து வரும்போதில் மச்சாள் ஒருத்தி நான் சிரிக்கும்போது பரிதாபமாக இருக்கிறேனென்று சொன்னாள். இன்னொருத்தி என் காதற்பார்வைகூட வியாகுலமாதாவை நினைவு படுத்துவதாகச் சொன்னாள். அப்போதெல்லாம் துயரம் மிக வேகமாகத் தொற்றிவிடக் கூடியவனாக இருந்தேன். அன்புகூட ஒரு நோயைப்போலத்தான் என்னிடமிருந்தது. புனிதங்களை கேள்வி கேட்காதவனாகவும், என்னை ஒறுத்து வருத்தத்தக்கவனாகவும் இருந்தேன்.
‘பிறக்கும்போதே பாவியாகத்தான் பிறக்கிறாய்’ என்று எனக்குள் குற்ற உணர்வை விதைத்ததும்’ ‘தேவ பயம்’ என்ற பெயரில் நம்பிக்கையை ஊன்றி, ‘திருமுழுக்கால் அழியாத முத்திரை பதிக்கப்பட்டிருப்பதாக’ தனக்குள்ளேயே எனைக் கட்டிப் போட்டிருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவம்.
என்னைப்பற்றிய சுய தேடலில் எனக்குப் போதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவம் போதுமானதாக இருக்கவில்லை. அது விடுதலைக்கான கருவியாக இல்லாது மன இறுக்கத்தை உருவாக்கும் இயந்திரமாக இருப்பதை காலப்போக்கில் உணர்ந்தேன். புல்லிலும் நோகாமல் நடந்தவனை புத்தகங்கள்தான் மாற்றின. கிறிஸ்தவக் கடமைகளை தவிர்ப்பது வெளிப்படையான மறுப்புத்தான். அகத்தில் ஏற்படும் மாற்றமென்பது அடிப்படைச் சிந்தனை முறையில் ஏற்பட வேண்டியது.
ஒழுக்கக் கோட்பாடுகள் நம்மை எதற்கு உகந்த வழியில் தயார் படுத்துகின்றன என்பதையும், எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் யோசிக்கும்போது கிடைக்கும் பதில்கள் முக்கியமானவை.
மதமிருந்த இடத்தில் இலக்கியத்தை வைக்கலாமென்று நினைத்தேன். இலக்கியத்தின் முக்கிய குணமே ‘உடைப்பெடுத்தல்’ என்று பின்னர்தான் புரிந்தது. வாசிப்பதால் கற்றுக்கொள்கிறேன் என்ற இடத்திலிருந்து, ‘எழுதுவதால் கற்றுக்கொள்கிறேன்’ எனும் உணர்விற்கு உட்பட்டேன். எனது விடுதலை உணர்விற்கும், பயணிக்கும் தன்மைக்கும் இலக்கியம் பொருத்தமானதாக இருக்கிறது. நான் ஒரு ‘சுப்பர் கீரோ அல்ல’ ஆனால் தன்நம்பிக்கை கொண்ட புதிய தலைமுறையை உருவாக்க ஆசைப்படுகிறேன். ‘நானொரு எழுத்தாளன் ‘ என்று சொன்னால் ஒரு புத்தகத்திற்கு எவ்வளவு காசு கிடைக்கும்? என்று கேட்கின்ற தமிழ்ச் சமூகத்தில்தான் வாழ்கிறேன்.
வாரத்தில் பத்து மணித்தியாலங்கள் ஒரு கட்டடத் தொழிலாழியாக உடலுழைப்பை முன் நிறுத்தும் தொழிலைச் செய்து வருகிறேன். என் குடும்ப வேலைகளிலும், சமூக அமைப்புகள் தொடர்பான வேலைகளிலும் என்னுடைய முழுமையான பங்களிப்பைக்கொடுக்கிறேன். என்னுடைய மூளையை இந்த வர்த்தக உலகத்திற்கு முழுமையாகக் கொடுத்து சரணடைய எனக்கு விருப்பமில்லை. கடவுச் சொற்களையும், கட்டுப்பணத் தவணைகளையும் மூளை நிறையக் கொட்டி வைக்க முடியவில்லை.
வேலை, சாப்பாடு, தூக்கம் என்ற மூன்றையும் செக்கு மாடுபோலச் செய்துகொண்டு வாழ்வது ஒரு வாழ்க்கையா? இந்த வர்த்தக உலகத்தில் மனிதம் வாழக்கூடிய நீக்கல்களை சரியாகப் பயன்படுத்த விரும்புகிறேன். அந்த நீக்கல்களைப் பெருப்பிக்க நான் எழுத வேண்டியுள்ளது. அதில் என் மனிதத்தின் இருப்பை உணர்கிறேன்.
கேள்வி: இதொரு முக்கியமான இடம். வீட்டுச் சூழல் அல்லது குடும்பம் உருவாக்கி வைத்திருக்கும் ஆசாரத்தன்மைகளிலிருந்து விடுபட்டு, வெளியேறுதல் நிகழும்போது நாம் இன்னொன்றாக மாறி விடுகிறோம்தான். ஆனால், அதற்கு குடும்பத்திற்குள்ளும் சூழவுள்ள சமூகத்திலும் இடமளிக்காத நிலையே உண்டு. இதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
பதில்: 2002ல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பொன்று வெளிவந்ததோடு என்னுடைய ஊரிலிருந்தே நான் வெளியேற வேண்டிய நிலை வந்தது. சமூகத்தின் போக்கோடு ஒத்தோடாத கலைஞனை தனிமைப்படுத்தி துன்புறுத்தி, முட்டாளாகவும், துரோகியாகவும் சித்தரித்து , வெளித்தள்ளியது சமூகம்.
புலம்பெயர்ந்த பின்னரும் மன அழுத்தம் தரக்கூடிய நடவடிக்கைகள் இருந்தன. எது நடந்தபோதும் நான் எழுதுவதைக் கைவிட்டதில்லை. ஒரு கலைஞனாக எனக்கான தனித்துவத்தோடு நிமிர்ந்தே நிற்கிறேன். எனக்கான எதிர்ப்புகள் வெவ்வேறு வடிவங்களில் வந்து இடைஞ்சல்களைத் தந்தாலும் மதம் என்ற வடிவத்தில் வரவில்லை. மதச் சடங்குகளில் நான் கலந்துகொள்ளாதது என்னுடைய சொந்தங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அது கடுமையான எதிர்ப்பாக மாறவில்லை. இந்த விடயத்தில் வெளி நாட்டு வாழ்க்கையும் எனக்கு சாதகமாகவே இருக்கிறது.
புலம்பெயர்வு பற்றிய கசந்த அனுவங்களும் துயர் நிறைந்த கதைகளும் ஏராளமுண்டு. ஆனாலும் ஈழத்திலிருந்து இன்னுமின்னும் புலம்பெயரும் கனவோடு (ஆசையோடு) தானே பலரும் இருப்பது ஏன்?
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையும், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் கவர்ச்சி காட்டலும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். இலங்கையில் வசிக்கும் தமிழருக்கான சனத்தொகையைக் குறையாது பார்த்துக்கொள்ளல் ஒரு அரசியற் தேவைவையாகவும் இருக்கிறது.
புலம்பெயர் வாழ்க்கையின் சிதைந்த தன்மையும் சரியாகச் சொல்லப்பட வேண்டும். அதை யார் சொல்வது? யார் சொன்னால் கேட்கப்படும்? வெளிநாடு வராதீர்களென்றால், அதற்கான மாற்றீடுகளான தொழில் வாய்ப்புகளையும், இன்ன பிற தேவைகளையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்து அணுகும் நிலை இருக்கிறதா? பல புலம்பெயர் அமைப்புகள் தொட்டந்தொட்டமாய் மக்களுக்கான உதவிகளை வழங்கி வந்தாலும்.
நம்மிடம் இவற்றையெல்லாம் சரியான முறையில் அணுகி நெறிப்படுத்த ‘சிந்தனைக் களமாக’ இயங்கத்தக்க வலுவான பொது அமைப்பொன்று கட்டியெழுப்பப்படவில்லை. கட்சி அரசியல், குழு அரசியல் இயங்கு முறைகளே உண்டு. இந்த அணுகு முறைகள் முழுமையான சமூக மேம்பாட்டிற்கு போதுமானவையல்ல. இதற்கான பதிலை நான் சற்று விலகி நின்றே சொல்லிப் பார்க்கிறேன்.
முதலில் நமக்குள் அடிப்படைக் கட்டுமானமொன்று நடக்க வேண்டியுள்ளது. அதை புலம்பெயர்ந்தவர்களும், நாட்டில் வசிப்பவர்களும் இணைந்தே செய்ய வேண்டுமென நினைக்கிறேன். ஈழத் தமிழ் சமூகத்தின் சுய சிந்தனைக்கான ஊற்றுக்கள் திறக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனிமனிதச் சுயமும் சமூகப் பொது அறத்தோடு கலக்க வேண்டியுள்ளது.
கேள்வி: நிச்சயமாக. ‘ஒவ்வொரு தனிமனிதச் சுயமும் சமூகப் பொது அறத்தோடு கலக்க வேண்டியுள்ளது’ என்று சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். போரிற்குப் பிறகுள்ள சமூக, அரசியல் சூழலை வலுவாக்கம் செய்யக் கூடிய, சரியான முறையில் அணுகி, நெறிப்படுத்த ‘சிந்தனைக் களமாக’ இயங்கத்தக்க வலுவான பொது அமைப்பொன்றை தொடர்ந்து நாமும் வலியுறுத்தி வந்தோம். அது நடக்கவில்லை. இந்தப் பின்னடைவுக்காக காரணம் என்ன?
பதில்: நம்முடைய அரசியற் கட்சிகள் அதையெல்லாம் செய்யும் நிலையில் இல்லை. ஏற்கனவே நம்மிடமிருக்கும் அமைப்புகள் கட்சிகளாகவும், குழுக்களாகவும் எல்லைக் கோடுகளைக் கொண்டவைதான். இவை தமது அடையாளங்களையும், பிடிவாதங்களையும் தாண்டும் நிலையில் இல்லை. இவற்றிற்குள் தனிமனித புகழ் ஆசையின் கூறுகளும் கலந்தே இருக்கின்றன.
இவற்றிலிருந்து உதிரிகளாக ஒலிக்கும் குரல்களிடமிருக்கும் புதுத் தன்மைகள் கோர்க்கப்பட்டு முதலில் ஒருமுகப்படுத்தும் உரையாடல்கள் நடக்க வேண்டும். அதை மற்றவர்கள் செய்வார்கள் என்று பார்த்துக்கொண்டிராமல் கலைஞர்களே செய்யலாமென நினைக்கிறேன். அறிவு அதிகாரிகளாக இல்லாமல் மக்களோடு மக்களாக சமூக மேம்பாட்டின் சகல துறைகளிலும் பங்காற்றும் அமைப்பாகவும் இது அமைய வேண்டும்.
தமிழீழக் கனவோடு ஆயுதமேந்திப் போராடப் புறப்பட்ட பல உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம். போராட்ட இயக்கங்களுக்குள் பல வகையான கருத்து முரண்கள் ஏற்பட்டு சகோதரப் படுகொலைகளும், பழி தீர்த்தல்களும் நடந்திருக்கின்றன. இறந்தவர்கள் யாவரும் நம்முடைய சொந்தங்களே. தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து சமூகத்திற்காக தமது வாழ்க்கையை முன்நிறுத்தியவர்கள். போராட்டத்தில் இறந்தவர்கள் போக, எஞ்சிய அதே தலைமுறை கொலைகளின் கணக்குகளையும், காட்டிக்கொடுப்புகளின் கணக்குகளையும் முன் நிறுத்தி பல ஆண்டுகளாக வலைப்பூவிலிருந்து, ‘ரிக்ரொக்‘ வரை உரையாடிச் சண்டைசெய்து முரண்பட்ட சிறு, சிறு துணிக்கைகள் ஆகிக்கொண்டிருக்கிறது. களைப்பின் பெயரிலாவது இந்த இடத்திலிருந்து நாம் நகர வேண்டும்.
கருத்து முரண்கள் இருந்தாலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடச் சென்று இறந்தவர்கள் எனும் பொது மரியாதையை எல்லா இயக்கங்களின் போராளிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதும், அதற்கான மன நிலையை நோக்கி நாம் நகர வேண்டுமென்பதும் முதலாவது தேவையாக இருக்கிறது. அவ்வாறு நகராமல் இவ்வாறான கூட்டுச் சிந்தனைக்கான கள உருவாக்கம் சாத்தியப்படாது. அவ்வாறான மன நிலைக்கு நகர்ந்த மனிதர்களின் கூட்டு இயங்கு நிலையின் பெறுபேறுகள்தான் ஈழத் தமிழர்களுக்கான சமூகக் கட்டுமானத்தின் ஆதாரங்களாகத் திகழ முடியும்.
கேள்வி: நியாயமே. ஆனால், இதைப்பற்றிய அக்கறை சமூகரீதியாக ஏற்படவில்லையே! பொறுப்பாகச் சிந்திக்க வேண்டியவர்களும் குரல் தரக் கூடியவர்களும் இதையிட்டு மௌனமே கொண்டுள்ளனர். இதை எப்படி உடைப்பது; மாற்றுவது?
பதில்: இன உணர்வின் அதி உச்ச நிலைக்குச் சென்று சமூகத்திற்காக தமது உயிரைக் கொடுக்கும் நிலைக்கு இளையோரை முன் தள்ளிய சமூகம் நமது சமூகம்.
உச்சத்திற்கெழுந்த இன உணர்வின் வெளிப்பாடுகள் தோற்கடிக்கப்பட்டு படு பாதாளத்தில் வீழ்ந்த பின்னர் மக்கள் தம்மைத் தற்காத்துக்கொண்டு வெளிக்கும் சிறிய சிறிய வாசல்களிற்குள்ளால் வாழ்க்கையைத் தொடங்கி வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் பொருளாதார நிலை ஒவ்வொரு குடும்பங்களையும் தாக்குகிறது. இதற்குள் சமூகப் பொது வாழ்க்கைக்கு முன்வரும் தன்மைகள் குறைந்திருப்பது இயல்புதான். நமது அரசியல்வாதிகள் தமது இடத்தை எப்படி தக்கவைத்துக்கொள்வது, இனி எப்படி நகர்வது என்றெல்லாம் ஏதேதோ பேசி எதுவும் உருப்பட்டதாக இல்லை. இவர்களிடம் இருக்கும் அரசியல் அனுபவம் என்பது எத்தகையது என்றே யோசிக்கத் தோணுகிறது.
அதே நேரம் புத்த சிலைகளைத் தூக்கிக்கொண்டு வரும் வேலையை சிங்கள இனவாதிகள் நிறுத்துவதாக இல்லை. உச்சத்திற்கேறிய இன உணர்வின் வீச்சோடு பெருந் துயரத்தையும் காவிக்கொண்டு திரிகிறது நமது இனம். இன்றுவரை அந்த உள வடுக்களோடுதான் பேசிக்கொண்டிருக்கிறோம். நமது அரசியல் அணுகுமுறைகளுக்குள் அதி கூடிய விகிதம் உணர்ச்சி வசப்பட்ட தன்மைகள் இருக்கின்றன. அதை கணக்கிலெடுத்து நாம் கொஞ்சம் அறிவியல்பூர்வமாக இயங்க வேண்டியுள்ளது. நமது சமூகத்தில் நுண்ணறிவுத் தளத்தில் இயங்கும் தன்மை மிகமிகக் குறைவாக உள்ளது. நுண்ணறிவுத் தொடக்கங்கள் இருந்தாலும் சிந்தனைச் சோம்பலால் ஏற்கனவே பழகிப்போன பள்ளங்களில் விழுந்துவிடுகிறோம். இன்று மாறிவரும் புதிய உலக ஒழுங்கை கணக்கில் வைத்து சிந்திக்க வேண்டியுள்ளது. வேறொருவரிடமிருந்து பெறும் கருத்துத் தொகுப்புகளை அறிவாய் சுமந்து மேற்கோள் காட்டும் தன்மையிலிருந்து முன்னேறிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் சுய சிந்தனை ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான கல்விமுறை நமக்குத் தேவை. ஏற்கனவே நம் சமூகத்தின் பொறுப்புகளிலிருப்பவர்களின் சிந்தனை முறையிலிருந்து வித்தியாசப்பட்ட தன்மையோடு சிந்திப்பவர்கள் முன்னிலைப் பட வேண்டும்.
தமிழ்ச் சமூகத்திற்கான ஒருங்கமைக்கப்பட்ட சிந்தனைக் கள உருவாக்கம்பற்றி ஆங்காங்கே பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன அவற்றையெல்லாம் கோர்க்கும் வேலைகளை நாம் செய்வதிலிருந்து பல மௌனங்களை நாம் உடைக்கலாமென நினைக்கிறேன். ஒவ்வொருவரும் தமது கோட்பாட்டுக் கொள்ளிடங்களுக்குள் துரவ நிலைகளில் நின்று கைகளை நீட்டாமல், தாம் கற்றவற்றைத் தொகுத்துக்கொண்டு சுய சிந்தனை மேம்பாட்டுடன் கூடிய சமூகப் பொது மனிதராய் திறந்த மனதோடும், அற்பணிப்போடும் கைகோர்க்க வேண்டும். அரசியல், பண்பாட்டுத் தளத்திலான புதிய நிலைப்பாடுகளை நாம் உருவாக்க வேண்டும். என் பதில்கள் தூர தேசத்தில் வசிக்கும், எந்தத் துறையிலும் நிபுணனாய் இல்லாத புனைவு எழுத்தாளன் ஒருவனின் தேடல் முயல்வுகள்தான்.
கேள்வி: ஈழத்தமிழ்ச் சமூக அமைப்பைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளது. உங்களுடைய பார்வையில்…
பதில்: ஈழத்தமிழ் சமூக அமைப்பு உருவாக்கங்களெல்லாம் பிரிவினைகளில் முடிகின்றனவென்றால், அல்லது முழுமையான தொகுப்பு நிலைக்கு வந்தடையாமையின் காரணமென்ன? சில ஆண்டுகளின் முன்னர் எனக்கு அறிமுகமான சில ஈழத்து மூத்த மார்க்சிய வாதிகளிடம் ‘ஏன் ஈழத்தில் பெரியாரியம் உள்வாங்கப்படவில்லை’ எனக் கேட்டிருந்தேன் அதற்கான பதில்’ அவசியப்படவில்லை’ என்றே வந்தது.
இது குறித்து நான் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தேன். போத்துக்கேயர் காலத்தில் காணிகளைப் பதிவு செய்யும்போது வெள்ளாளர் என்கின்ற சாதிப்பெயர் காசிற்கு விற்கப்பட்டது. ஒறிஜினல் வெள்ளாளர், ஒறிஜினலில்லாத வெள்ளாளரென்ற பாகுபாடு இருந்தாலும் வடபகுதியில் வெள்ளாள சமூகத்தின் பலம் அதிகமாக இதுவும் ஒரு காரணமென்று சொல்லலாம். சாதி வழமைச் சட்டத்தின் உள்வாங்கலோடு அமைக்கப்பட்ட தேச வழமைச் சட்டமும் பிற்காலத்தில் வெள்ளாளரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மறுக்கப்பட்டதும், பாடசாலைகள் தீக்கிரையானதும் நாம் அறிந்ததே.
வெள்ளாளர் கல்விமான்களாய் வருவதற்கான கதவுகள் திறந்தே கிடந்தன. நமது மார்க்சியர்களில் வெள்ளாள மார்க்சிஸ்டுகள் இருந்ததும், வெளியே மார்க்சியம் பேசிக்கொண்டு உள்ளே சாதி மனநிலை, பதவிமோகம், ஆணாதிக்கம் போன்ற தன்மைகளோடும் இருந்தார்களென்பதும் மறுக்க முடியாதது.
கத்தோலிக்க பிசப்புகள், கலை விருது கொடுக்கும் இடத்திலிருந்தவர்கள், அதிகாரிகளெல்லாம் இவர்களே என நிறைந்து வழிந்தார்கள். பிற்காலத்தில் உருவாகிய இயக்கங்களும் சாதி இயக்கங்களானது மட்டுமல்லாது, தற்போது தலித்தியம்பேசும் பலரும்கூட வெள்ளாள சமூகத்தவர்களே. சாதி பார்ப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற சமூகம் அதிகார ஆசையை உருமாற்றவும் கற்றுக்கொண்டது.
ஒருவர் அதிகாரம் செய்யும் பகுதியில் பிறப்பது தவறில்லை. அவர் தன்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்தி, சமூகப் பொது வேலைக்குள் தமது அதிகாரக் குணாம்சங்கள் பிரதிபலிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே நாம் எந்த அமைப்பைக் கட்டினாலும் அதற்குள் உருவாகும் ஆதிக்க, ஒடுக்குமுறைக்கான மன நிலையின் அடி வேர் கிண்டப்பட்டு வெட்டி எறியப்பட வேண்டும். ஆணாதிக்க, சாதிய, மத ஆதிக்க வேர்களை அப்படியே வைத்துக்கொண்டு எதுவுமே செய்ய முடியாது.
அதே நேரம் ‘வர்க்கப் பொறாமையும் ‘ ஒடுக்கிய சமூகத்தைப் பழி வாங்கும் தன்மையும் தவிர்க்கப்படவும் வேண்டும். ஈழத்தமிழ்ச் சமூகம் சிறியதாக இருந்தாலும் அதற்குள்ளும் சிந்தனை ரீதியான ‘இட ஒதுக்கீடொன்று’ தேவையென்றே நினைக்கிறேன். ஆகவே ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கான ‘அரசியல், தத்துவார்த்த, பண்பாட்டுச் செயற்பாடுகளை வளப்படுத்தும் சிந்தனைக் களமொன்றை நாம் உருவாக்கவேண்டும்.
அரசியல்வாதிகளோ, வர்த்தகர்களோ செய்வார்களென்று பார்த்துக்கொண்டிராமல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் சத்தியத் துணிவோடு முன் வந்து நமக்கான ‘சமூக ஆத்மாவை வலுப்படுத்த வேண்டும்’. அரசுகள் சமாதானத்தைக்கூட ராஜ தந்திரமாகப் பாவிக்கும் உலகப் போக்கில் கலைஞர்கள் உண்மையான சமத்துவத்தையும், சமாதானத்தையும் கட்டியெழுப்பும் வேலையென்பது உலகப் பொதுத் தேவையும்கூட.
நாம் நமது நாட்டின் ஒவ்வொரு கிராமங்களையும் ‘சமத்துவக் கிராமங்களாக்க’ கிராம மட்ட அமைப்புகளோடு சேர்ந்து வேலைசெய்ய வேண்டும். இன்றைய இலங்கையில் வசிக்கும் இளையோரை நோக்கி மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளில் ஈழ அரசியல் பேசும் இளையோரை நோக்கியும் நாம் வேலை செய்யவேண்டியுள்ளது.
கேள்வி: ஆனால், முன்னரைப்போல சாதியக் கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் இப்போதில்லை. சிலர் மட்டுந்தான் இன்னும் சாதியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். நடைமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, பொருளாதாரம், சமூகநிலை, அரசியல் வாய்ப்புகள் போன்றவற்றில் முன்னேறி, புதியநிலைக்குச் சென்று விட்டனர். அவர்களில் யாரும் சாதிய ஒடுக்குமுறையைக் குறித்துப் பேசுவதில்லை. இந்தப் புதிய நிலையைப் பற்றிய புதிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆகவே, இன்னமும் பழைய வஞ்சத்தோடு – பழிவாங்கும் உணர்வோடுதான் இந்தப் பிரச்சினை நோக்கப்படுகிறது என்பதைப் பற்றி…
பதில்: நான் படிக்கும் காலத்தில் நேரடியாகவே சாதி ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டவன். கூடப் படிக்கும் மாணவர்களால் மட்டுமல்ல, ஆசிரியர்களாலும் ஒதுக்கப்பட்ட மாணவர்களில் ஒருவனாக நின்ற அனுபவம் உண்டு. ஒதுக்கப்படலில் காரம் கூடியது எது? குறைந்தது எது? அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும் சகோதரா? கல்வி,பொருளாதாரம், சமூக நிலை, அரசியல் வாய்ப்புகள் போன்றவற்றில் முன்னேறியிருக்கிறார்களென்றால் அவையெல்லாம் சாதாரணமாகக் கிடைத்திருக்க வாய்ப்பில்லையே.
பாடசாலைகளிற்குள் இருக்கும் சாதி மன நிலைகள் மோசமானவை. ஒரு காலத்தில் பாடசாலைகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சேர்வது கடினமாக இருந்தது, பாடசாலைகள் எரிக்கப்பட்ட கதைகளெல்லாம் நமக்குத் தெரியும். இன்னொரு காலத்தில் பாடசாலைகளில் சேர்ந்த மாணவர்கள் உள ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள். இன்றும் பாடசாலைகளில் இந்த ஒடுக்குமுறை மன நிலையின் எச்சங்கள் வேறு தன்மைகளில் இருப்பதாய் விசாரித்து அறிந்தேன்.
ஒடுக்கப்பட்ட சாதியினராக அனுபவித்த பலர் இன்று தாங்கள் ஒடுக்கப்பட்டதைச் சொல்வதில்லை என்பதற்குப் பின்னால் இருக்கும் உண்மை – அவர்களே தங்களைக் குறைந்தவர்களாக நம்பப் பயிற்றுவிக்கப்பட்டதுதான். பொருளாதாரத்தில் மேலே வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தங்களை ‘ ஆதிக்க சாதி மன நிலை கொண்டவர்களாக’ பாவனை காட்டுவதும் நடக்கிறது. இது ஒரு தொற்று வியாதி. ‘சாதி’ என்பது யாரும் படித்து வாங்கும் பட்டமோ, உடலுழைப்பால் பெற்ற செல்வமோ அல்ல எந்தப் பெறுமதியுமற்ற வெற்றுப்பெருமிதம் என்பதை எல்லாத் தரப்பினருமே புரிந்துகொள்ள வேண்டும்.
‘பழைய வஞ்சத்தோடு, பழிவாங்கும் உணர்வோடுதான் இந்தப் பிரச்சினை நோக்கப்படுகிறது’ என்று கூறும்போது மறுபடியும் ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பை குறை கூறும் இடத்திற்கே வந்து சேர்கிறது. அழுத்தத்தை ஒடுக்கப்பட்டவர்கள்மீது போட்டு ஒடுக்கியவர்களிற்கு எந்தச் சலனமும் இல்லாத இடத்தில் விட்டுவிடும் தன்மையில் அமைந்துவிடுகிறது.
முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்த பின்னரும் நமது நிலங்களில் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடிய சாதி ஒடுக்குமுறைகள் பற்றிய செய்திகள் நம் காதுகளில் விழத்தானே செய்தன? சாதிஒடுக்குமுறை தணிந்திருக்கிறது என்று சொல்வதா? அல்லது அது மாற்றுருக் கொண்டு இயங்குகின்றதா? மாற்றுருக் கொண்டியங்கும் தன்மைகள் பலவற்றை புலம்பெயர் சூழல்களிலும் அவதானிக்க முடிகிறது. தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வதற்கான மாற்று வழிகளை பயன்படுத்திக்கொண்டுதானிருக்கிறார்கள். சாதாரண பேச்சு முறைகளிலேயே சாதியை வெற்றிலையோடு சேர்த்துக் குதப்பி வெளிநாடுகளின் கடைத்தெருக்களில் துப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்டவர்கள் பேசுகின்ற வெளியொன்று இந்தத் தலைமுறையில் உருவாகியிருக்கிறது. ஒடுக்கியவர்கள் தரப்பிலிருந்து ‘ஓமப்பா ஒரு காலத்தில் அப்படியெல்லாம் இருந்ததுதான். இப்ப இல்லாமப் போச்சு.அது பிழைதான். அதையேன் திரும்பத் திரும்பக் கிளறுறியள், விடுங்களன்’ என்று கூறிக்கொண்டே ‘சாதி மனிதராக ‘ வாழும் நிலைகளையும் காணக்கூடியதாகத்தானே இருக்கிறது. ஆகவே நாம் தொடர்ந்து சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களாய் ஒலியெழுப்ப வேண்டித்தான் இருக்கிறது. அது புதியதொரு சமத்துவ சமூக உருவாக்கத்திற்கான தூர நோக்கோடு கொண்டுசெல்லப்பட வேண்டியுமுள்ளது.
‘சாதியத்தை முன்நிலைப்படுத்தும் அரசியலை இலங்கையில் செய்கிறோம்‘ என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் சாதி உரையாடலிலிருந்து அதை தேசிய இனங்களுக்கிடையிலான அரசியற் களம்வரை நீட்டிச் செல்லும்போது, இலங்கையின் சிங்கள பேரினவாதத்தை விமர்சிக்காமல் கடந்து செல்கிறார்களென்றால் அது தமிழ்ச் சமூகத்தை பிரிக்க எடுக்கும் முயற்சி என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.
ஒடுக்குமுறைச் சம்பவங்களைக் கூறி, வசைபாடி இந்த மக்களின் அரசியலை எதை நோக்கிக் கொண்டு செல்கிறீர்கள்? எனும் கேள்வியும் எழுகிறது. சாதி அரசியலின் இலட்சியம் சமத்துவ சமூகத்தை உருவாக்குவதை நோக்கிக் நகர்த்தப்பட வேண்டும். வெளி நாடுகளில் ஊர்ச் சங்கங்களாக இயங்கும் சங்கங்கள் பல சாதிச் சங்க மனநிலைகளையும் உள்ளே கொண்டிருக்கின்றன. திரும்பத் திரும்ப சாதியத்தை அழிப்பதற்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
புதிய முறையில் சமத்துவப் பண்பாட்டுச் சூழல் ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் என்று இதைச் சொல்லலாமா? இதை நோக்கியதாகத்தானே ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியமும் கலையும் பயிலப்படுகிறது?
பதில்: தம்மை ஒரு தேசிய இனமாக உணரும் ஈழத் தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வந்து தம்மை ‘புலம்பெயர் ஈழத் தமிழர்’ என்று ஒரு சமூகமாய் முன்வைக்கும் சமூகம், சில கட்டுக்கடங்காத தன்மைகளைக் கொண்டிருக்கிறது. அல்லது சிதறிய தன்மையைக் கொண்டிருக்கிறது. அது இன்னமுமே ஒருமுகப்பட்ட நிலைக்கு வந்து சேரவில்லை.
‘என்னப்பா கீழ்சாதியாரெல்லாம் வெளிநாடுகளுக்கு வாறாங்களப்பா’ என்று பார்க்கப்பட்ட காலத்திலிருந்து இன்று எல்லாச் சாதியினருமே வெளிநாடுகளுக்கு வந்துள்ளனர். பொருளாதாரத்திலும், கல்வியிலும் சமப்பட்ட நிலைகள் வந்தாலும் ‘நாங்கள் பெரியஆக்கள்’ என்கின்ற மனநிலை மனிதர்களிடம் வந்து சேர்கிறது. அவர் என்ன சாதியாக இருந்தாலும் இது ஒரு சமூகப் பொதுப் பழக்கமாக நீட்சியுறுகிறது.
நாம் நமது கிராமங்களை சகல துறைகளிலும் வளர்த்தெடுப்பதோடு சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் செயல்களில் இறங்கும்போது சாதி, மதம், அரசியற் கட்சிப் பிழவுகள் மட்டுமல்லாமல் குடும்ப அதிகாரங்களும் வந்து நிற்கின்றன. நாம் ஊருக்கான வேலைத் திட்டத்தில் சமத்துவ மன நிலையோடு ஒரு விடயத்தை அணுகும்போது வெளிநாட்டிலிருந்து ஒரு தனிமனிதர் தன் பெருமையை நிலைநாட்ட பணம் அனுப்பி அதனை நீர்த்துப்போக வைத்துவிடுகிறார் .
ஆகவே ‘நாங்கள் பெரிய ஆக்கள்’ என்ற சமூகப் பொதுப் பழக்கத்தை மாற்றும் சிந்தனைகளை முன் வைக்கும் கலை, இலக்கிய முயற்சிகளை நாம் தொடர்ந்து செய்யவேண்டியது மட்டுமல்லாது ‘சமத்துவ இலக்கியம்’ எனும் ஒன்றை நமது கடந்த கால இலக்கியப் போக்குகளின் வெற்றி, தோல்விகளின் அனுபவத்தோடு கட்டமைக்க வேண்டியுள்ளதெனவும் நினைக்கிறேன்.
கேள்வி: சமத்துவக் கிராமங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். சாதிய, வர்க்க வேறுபாடுகள் வலுவாக உள்ள சூழலில் அதற்கான சாத்தியம்?
பதில்: நான் தூர நாடொன்றில் இருந்தபடி கற்பனையில் பேசும் வார்த்தைகள் அல்ல இவை. என்னோடு தொடர்புபட்டிருக்கும் கிராமங்களின் அபிவிருத்திக்கான செயற்பாடுகளில் இயங்கும் அனுபவங்களையும் வைத்துக்கொண்டு அவற்றை விரித்து ஒட்டுமொத்த சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் தன்மையில் விளைந்த அனுபவங்களை வைத்துக்கொண்டே பேசுகின்றேன்.
வெளிநாட்டுத் தமிழரின் நிதி, சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் நிறையவே சமூக உதவி அமைப்புகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் அவற்றின் அளவுகளுக்கேற்ப அடையாளங்களும் இருக்கின்றன. ஒரு பொது வேலைத் திட்டத்திற்குள் வேலை செய்ய அழைக்கும்போது தமது அடையாளத்தை இழக்க விரும்பாத நிலை இருக்கலாம், அதை சரியாக உரையாடி கூட்டுச் சேர்க்க வேண்டியிருக்கும்.
கிராம மட்ட அமைப்புகளின் செயற்திறனை ஊக்கப்படுத்துவதோடு, கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியையும், சமத்துவமான நிலையையும் கட்டியெழுப்பவேண்டும். முன்னொரு காலத்தில் ‘சிற்றூரவை’ உருவாக்கப்பட்டதுபோல கிராமமட்ட அமைப்புகளின் நடுவமாக ‘சமத்துவக் குழு’ இயங்கலாம். ஏற்கனவே ஆங்காங்கே நம்முடைய நிலங்களில் இயங்கிவரும் ‘கருத்தியல் உளவளத் துணை’ வழங்கக் கூடிய அமைப்புகள், கலைக்குழுக்களை கிராமச் சங்கங்களோடு வேலை செய்ய வைக்கலாம்.
அத்தோடு அரச திணைக்களங்களில் வேலை செய்யும் அதிகாரிகள், ஊழியர்களின் மக்கள் தொடர்பு உரையாடல் முறைகள் பக்குவப்படுத்தப்பட வேண்டும். இளையோரை சமூகப் பணிகளில் முனைப்புக்கொள்ளச் செய்வதோடு அதிகரித்துவரும் இள வயதுத் திருமணங்களுக்கான சூழலிலிருந்து மாற்றமடையச் செய்தல் வேண்டும். அதே நேரம் வரலாற்றிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாத அரசியற் கட்சிகளுக்குப் பின்னால் உசாரில் திரளும் இளையோரை சரியாக வழிப்படுத்த வேண்டியுமுள்ளது. இது போல வரிசையாய் சில தளங்களில் செயலாற்றவேண்டியிருக்கும்.
செயலில் இறங்கினால் புதிய பல அனுபவங்கள் கிடைக்கும், ஒவ்வொரு கிராமத்தின் தன்மைக்கேற்ப இயங்க வேண்டியிருக்கும் இல்லாவிடில் கரையில் நின்று நீச்சல் பற்றிப் பாடமெடுப்பதாகத்தான் இருக்கும். நான் எனது அறிவுக்கெட்டிய, அனுபவத்தினூடான விடயங்களைச் சொல்லியுள்ளேன். சாத்தியம் இல்லையென்று சொல்லிக்கொண்டிருக்காமல் செய்ய வேண்டும்.
கேள்வி: ஈழத்தில் பெரியாரின் செல்வாக்கு ஏற்படாத்தற்குக் காரணம் என்ன?
பதில்: அதிகார மன நிலைகளின் சின்னச் சின்னப் புற்றுகள் தகர்ந்துவிடுமென்ற அச்சம்தான். அத்தோடு மதம் கலாச்சாரத்தோடு கலந்து மனதின் அடியிலிருக்கும் ரசனையில் அங்கம் வகிப்பதும்தான். சுய சாதியில் இருக்கும் ஒருவர் சொந்தக்காரராக இருப்பார், அல்லது சுய சாதிக் காரரையே சொந்தக்காரராகப் பார்ப்பது, சாதியாரென்பதை ஒரு உறவு நிலையாகப் பார்த்துவந்த மனப் பழக்கம் இவையெல்லாம் சாதியிலிருந்து முற்றாக வெளியேறத் தடையானவை. நாம் சாதியை அதிகாரம் செய்யும் ஒன்றாகப் பார்க்காமல் உறவு நிலையாகக் கொண்டு சென்றால் போதுமானதுதானே எனும் மன நிலைகள்.
பெரியாரை அணுகினால் முற்று முழுதாக இந்தச் சமாளிப்புகள் உடைந்துவிடுமென்ற எண்ணம்தான்.
கேள்வி: ஒரு பக்கம் தமிழீழக் கனவு, தமிழ்மொழிப்பற்று, தாய்நிலத்தின் மீதான காதல். மறுபக்கத்தில் புலம்பெயரும் விருப்பம், ஆங்கிலத்தில் அல்லது மேற்கத்தேச மொழிகளில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் திறமையாளர்களாக வரவேண்டுமென்ற ஆசை, புலம்பெயர்ந்த நாட்டிலும் ஈழத்திலும் தாம் விரும்புகின்ற அரசியல் குறித்த ஏக்கம் என ஒருவகையான குழப்பமும் ஆதிக்க உணர்வும் புலம்பெயர் மூத்த தலைமுறையிடம் உள்ளதல்லவா. இதுபற்றி?
பதில்: இலங்கைத் தமிழர்களென்றால் கடினமாக உழைப்பவர்கள் என்ற பார்வை மற்றைய இனத்தவர்களுக்கு உண்டு. அதுபோல இலங்கையிலுள்ள தமது சொந்தங்களை முன்னேற்றவேண்டும் என்ற தன்மை சமூகப் பழக்கமாகவே அமைந்திருக்கிறது. நேரம் பணமாக பார்க்கப்பட்டு, பணத்திற்காக ஓடியே தேய்ந்து போகிற முதற் தலைமுறை உளவியல் எல்லாச் சமூகங்களுக்குமே பொதுவானதுதான். நேரத்தைப் பணமாகப் பார்க்கும்போது ஓய்வு நாட்களைக்கூட வேலைக்கான ஆயத்தப்படுத்தும் நாட்களாக மாற்றிக்கொள்ளும் தன்மையுள்ளது. கடன்களோடும், பொறுப்புகளோடும் ஒவ்வொரு பருவங்களையும் தாண்டி, சலித்துப் போகும் வாழ்க்கையில் சற்று பொருளாதாரத்தில் ஏற்படும் உயர்வை வைத்துக்கொண்டு தமக்கான இமேஜை எந்தெந்தத் துறைகளில் உருவாக்கலாமென முயல்வது ஒரு பகுதி மக்களின் தன்மை. ஊரில் இருக்கும் உறவுகளுக்கு உதவும்போது அங்கிருந்து கிடைக்கும் நன்றி வார்த்தைகள் பெரும்பாலும் ஒரு வகை போதையாக மாறி விடுகின்றன.
தொடர்ந்து பொருளாதாரத்தை முன் நிறுத்தி ஓடிக்கொண்டே இருப்பதால் வேறு துறைகளில் தம்மை வளர்த்துக்கொள்ள நேரமில்லை. சிலர் கொஞ்சம் ஆரம்பத்திலேயே படிக்கக்கூடிய அவகாசம் கிடைத்து தாம் விரும்பிய துறைகளில் முன்னேறினாலும் தொழிற்கல்வியிலிருந்து விலகிய சிந்தனை எத்தனை விகிதம் என்பது கேள்விக்குறிதான்.
பிறந்த நாட்டில் பிரச்சினை அதனால் இங்கு வந்தோம் என்பது பெரியதொரு மனப் பதிவு. சிந்தனை ரீதியாக அதைக் கடக்க முடியவில்லை. யுத்தத்தால் வந்த உளவடுக்களை தனித்தனி மனிதர்களாகவே எதிர்கொள்ளவேண்டியுள்ளது. பொது வாழ்க்கையில் முன்நின்ற பலர் போதைக்கு அடிமையாகிப் போய் வாழ்க்கையை முடித்துக்கொண்ட கதைகள் பலவுண்டு.
ஒரு காலத்தில் கவிஞர்கள் அதிகரித்ததுபோல இப்போது அரசியல் ஆய்வாளர்கள் அதிகரித்திருப்பதாக உணர முடிகிறது. ஆட்டிறைச்சிப் பங்கிற்கு வரிசையில் நிற்பவர்கள் பேசுவதையும், தமிழ்க் கடைகளில் மீன் வெட்டுபவர்களோடு நுகர்வோர் நடந்துகொள்ளும் தன்மைகளையும், கோட், சூட் போட்ட இலக்கியக் கூட்டங்களின் புகழ் பாடல்களையும், குறைந்த ஊதியம் கொடுத்து கடைகளில் வேலைக்கு வைத்திருக்கும் மனிதர்களோடு நமது முதலாளிகள் நடந்துகொள்ளும் தன்மைகளையும், கலியாணத் தரகர்களின் ‘சாதி மனிதரைத்’ தேடும் முயல்வுகளையும் அவதானிக்கும்போது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகக் கூட்டுமனமென்பது ஆரோக்கியமாக இல்லை என்பது துல்லியமாகத் தெரிகிறது.
சுய பரிசீலனையின்மூலம் தம்மை புதிதாய் நிர்மாணப் படுத்தும் இடத்திற்கு இந்த முதற் தலைமுறை நகரவேண்டும். அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். தமிழ்ச் சமூக மையம் ஒன்றை உருவாக்கும் முயல்வுகள் கனடாவில் தொடங்கியிருக்கிறது. அது வெறும் கட்டடமாக இல்லாமல் பண்பாட்டு அரசியல் மீளாய்வுகளைச் செய்யும் இடமாக அது பரிணமித்தால் மகிழ்ச்சியே.
கேள்வி: கடுமையான விமர்சனத்திற்குரிய மாதிரியே புலம்பெயர் சமூகத்தின் இன்றைய வாழ்க்கையும் சிந்தனையும் உள்ளது. அவர்களுடைய அரசியல் ஈடுபாடுகளும், பண்பாட்டு நடவடிக்கைகளும் சரிந்தவை என்ற கவலைகள் பலருக்குமுண்டு. இந்த நிலையைப்பற்றிய எழுத்துகள்?
பதில்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகப் பொது மனிதரை முன் மொழிந்தது நமது தமிழ் மொழி. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களை இனம், மொழி, பண்பாடு என்றெல்லாம் ஏன் மினக்கெட்டுப் பேச வேண்டும்? உலகப் பொது மனிதராகவே விட்டுவிடலாமே. அவரவர் வாழ்க்கை இயல்புகளுக்கேற்ப மக்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே. வரலாற்றின் போக்கோடு கரையட்டுமே. அதை விடுத்து குறுகிய வட்டங்களுக்குள் ஏன் சிந்திக்கிறீர்கள்? என்று யாரும் நம்மைக் குறை கூறலாம். ஒரே பதில்தான். ‘இந்த உலகம் பாதுகாப்பானதாக இல்லை.’ அடையாளங்களைப் பேணவேண்டிய தேவையும், பண்பாட்டு வேரிலிருந்து மனிதச் சாரத்தை வலுப்படுத்தும் ஈரத்தை எடுக்க வேண்டிய தேவையும் ஒவ்வொரு இனத்திற்கும் உண்டு.
இது பிரிவினை மன நிலையல்ல. பன்முகத் தன்மைகளை மதித்து, சமத்துவக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டுமெனும் எண்ணத்திலிருந்து வருவது. எமது நிலங்களை காலனித்துவப்படுத்தி கொள்ளையடித்தவர்களின் நாடுகளுக்கு இப்போது நாங்களே வந்து, நிறவாத மன நிலைகளுக்குள் வாழ்வதிலிருக்கும் இழப்புகளை உணர்ந்து சுதாகரித்து, சீர்படுத்திக்கொள்வதுதான். அதே நேரம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டியாகிறது.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்ச் சமூகம் பண்பாட்டின் கூறாகிய சடங்கு முறைகளை நினைவிலிருந்து இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல் சடங்குப் பொருட்களையும் இலங்கையிலிருந்தே இறக்குமதி செய்கின்றது. சடங்கொன்றில் எத்தனை வெற்றிலை பாவிப்பதென்பது மந்திர அடிப்படையில் ஓசையின் சக்தி, எண்களின் சக்தி என்ற ரீதியில் அமைந்திருப்பது பற்றிய விபரங்களெவையும் தெரிய வேண்டிய பிரயத்தனங்களற்ற வெறும் இறக்குமதியாளர்களாகத்தான் இவர்கள் இயங்குகின்றனர்.பண்பாடென்பது வெறும் மொழியுடன் மட்டும் சார்ந்திருப்பதல்ல. நிலத்தோடும் சார்ந்திருப்பதுதான்.
சடங்குகள் நிலம், தொழில், அரசியல், நம்பிக்கைகள் என்பனவற்றால் பொதியப்பட்டது. அந்தவகையில் நாம் காவி வரும் சடங்குகள் புலம்பெயர் நிலங்களில் எவ்வகையில் பொருந்தக்கூடியன என்று பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல வட இந்தியச் சடங்கு முறைகளை கவர்ச்சியாகக் காவி வருகின்றன. கொண்டாட்ட விடுதிகளுக்கு பணம் கட்டினால் ‘Package’ ல் கொண்டாட்டமொன்று தயாராகிவிடும். பல கிறீஸ்தவ வீடுகளில் தொலைக்காட்சிகளில் திருப்பலிப் பூசை காண்கின்றனர்.
வெவ்வேறு நாடுகளில் இருக்கும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது கிராமத்தின் பெயரால் ஒரு அமைப்பைக் கட்டி, வட்ஸப் குழுவிலோ, zoom மிலோ கலந்துரையாடுகின்றனர். இந்தக் குவிவு அவர்களின் கிராமத்தை வளப்படுத்தினாலும் புலம்பெயர்ந்த மக்கள் ‘தொடுகை’ அனுபவமற்றவர்கள்தான். தூரத்திலிருக்கும் பாட்டி சமூக ஊடகத்தின் வீடியோ மூலம் உணவூட்டுவது போலத்தான் பல விடயங்கள்.
மாவீரர் தினம், கரும்புலிகள் தினம், போன்ற நினைவு நாட்கள், முள்ளி வாய்க்கால் நினைவு நாளென்று அதிகமான மக்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் நடக்கின்றன. விழாக்கள் நடாத்த வேண்டுமென்றால் கலை நிகழ்ச்சிகள் முக்கியம். அதற்கு தாராளமாகவே பரதநாட்டியக் கல்லூரிகள் ‘வடசொல்லொட்டுப் பெருமிதங்களோடு’ இருக்கின்றன. பிள்ளைகள் வேறு பராக்குகளுக்குள் போகாமலிருக்க பெற்றோர் இத்தகைய கல்லூரிகளை நாடிக் கேட்கும் முதற்கேள்வி ‘ பிள்ளைகளுக்கு அடிக்கடி நிகழ்ச்சி கொடுப்பீர்களா?’ என்பதுதான். வகுப்புகள் நடாத்தும் பரத நாட்டிய ஆசிரியைகளின் மாணவிகள் வரிசை வரிசையாக வந்து கண்களை முழிந்து, கைகளை புலிபோல வைத்து ஆடிவிட்டுப் போகின்றர். தங்கள் பிள்ளைகளின் பரத நாட்டியம் முடிந்ததும் பெரும்பாலான பெற்றோர் அவர்களைக் கூட்டிக்கொண்டு வெளியேறிவிடுகின்றனர்.
பரத நாட்டிய ஆசிரியைகளுக்கோ தமது நாட்டியக் கல்லூரியை நிலை நிறுத்தும் இடமாக இவ்விழாக்கள் இருக்கின்றன. இவ்விடயங்களில் ஒரு சில விதி விலக்கான கல்லூரிகளும் இருக்கின்றன. பெருந்தொகையான உயிர்களை நமது சமூகம் இழந்திருக்கின்றது. இழந்த உறவுகளை நினைவுகூரும் இடங்களாக இவை இருக்கின்றன. இவற்றிற்குச் செல்லும் மக்கள் அரசியற் கோட்பாடுகளெல்லாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டுமென்றில்லை. அத்தோடு துயரத்தின் வீச்சு உருவாக்கும் அரசியற் சாய்வையே மக்கள் செய்கிறார்கள். ஆனால் இத்தகைய விழாக்கள் எதிர்கால அரசியலுக்கு உவப்பான கருத்துருவாக்கங்களைச் செய்யமுடியாத உணர்ச்சித் தூண்டல்களை உருவாக்கும் இடங்களாக இருக்கின்றன.
இவ்விழாக்களுக்கு எதிர் நிலையானவர்களின் குழுக்களும் இங்கு இருக்கின்றன. பெரும்பாலும் ஐம்பது வயதைத் தாண்டிய இவர்கள் தங்கள் அமைப்பால் ஒரு கூட்டம் வைத்தால் முப்பதிலிருந்து, ஐம்பதுபேர் வரை வரக்கூடும். அந்த ஐம்பதிற்குள்ளும் ஆயிரம் முரண்கள். ‘எங்களுக்கு தலைகளின் எண்ணிக்கை முக்கியமில்லை, தலைகளுக்குள் இருப்பதுதான் முக்கியம்’ என்று பல ஆண்டுகளாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். பல சஞ்சிகைகளை நடத்தியும், நாடகங்களை நடத்தியும், புத்தக வெளியீடுகளைச் செய்தும் தங்கள் இருப்பை நினைவு படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இக்குழுக்கள் போதுமான அளவு மக்கள் மத்தியில் செல்வாக்கற்றவர்களாகவே இருக்கின்றனர். மக்களுக்குள் இறங்கி பண்பாட்டு அரசியற் தளங்களில் வேலைசெய்யும் முனைப்போ, பலமோ இவர்களிடம் இல்லை.
‘புலிகள் அதிகாரத்தில் இருந்தபோது எதிர்க் குரலாக இருந்தோம்’ என்பதே இன்று இவர்கள் பெருமையாகச் சொல்லக்கூடியதாக இருக்கிறது. புலிகள் உருவாக்கி விட்ட அரசியற் கலாசாரத்தின் நீர்த்துப்போன எச்சங்களிலிருந்து வியாபாரிகள் செய்யும் தந்திரங்களிலிருந்து மக்களை வெளியேற்றக்கூடிய செயற்பாடுகள் நடக்க வேண்டியுள்ளது.
எழுத்தாளர்களில் புலி ஆதரவாளர்கள் புலி எதிர்ப்பாளர்கள் எனும் இருவகையினரை இன்னமும் காணக்கூடியதாகவே இருக்கிறது. நீ இரண்டில் ஒன்றைத்தான் தெரிவு செய்யலாமென்று சொன்னால், அந்த இரண்டுமே துல்லியப்படுத்தப்பட்டு, அல்லது செறிவூட்டப்பட்டிருக்கிறது என்பதுதானே பொருள். பன்முகப்பட்ட சமூக இயங்கு முறைக்குள் இரட்டைகள் அதிகாரங்களாகித்தான் நிற்கின்றன. தத்தமது பகுதிச் சார்புடையோரை தூக்கிப்பிடித்தபடிதான் இந்த இரட்டைகளும் பயணிக்கின்றன.
பகை உணர்வுகளை பொதுமைப்படுத்தப்பட்ட சூத்திரங்களாக அடுத்த தலைமுறைக்குக் கொடுக்காது செல்வதே நாம் செய்யும் புண்ணியமாக இருக்க முடியும். சுய விசாரணைகள், தவறுகளை ஒப்புக்கொள்ளும் தன்மைகள், மன்னிப்புக் கோரல்களிலிருந்து ஒற்றுமையான செயற்பாட்டை நோக்கி நகரவேண்டும். என்பதே இறுதியாகச் சொல்லக்கூடியது.
கேள்வி: அந்த மாற்றுத் தன்மையைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்ற எண்ணமுடையோர் ஒரு வலையமைப்பில் செயலூக்கம் கொள்ள முடியும் அல்லவா?
பதில்: ஆம். அது காலத்தின் தேவையும்கூட.
கேள்வி: கூத்து, இலக்கியம், இசை, பாட்டு, நாடகம் எனப் பல துறையில் ஈடுபாடும் தேர்ச்சியும் உங்களுக்குண்டு. ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மையும் அடிப்படை உறவுமுண்டு. ஆனாலும் எல்லோருக்கும் இது வாய்ப்பதி்லை. இப்படி பலவற்றிலும் ஈடுபடுவதிலுள்ள மகிழ்ச்சி அல்லது சிக்கல்?
பதில்: மரபு என்பதை தேக்கமுற்றதாக அணுகாமல் புதிய காலச் சமூக வாழ்க்கையை மேம்படுத்தும் அனுபவத் தொகுப்பாக அணுகுதல் அவசியம். நமது மரபிற்குள் சொருகிக் கிடக்கும் ஆதிக்க, பழமைவாதத் தன்மைகளிலிருந்து கலைகளை பிரித்தெடுத்தல் வேண்டும்.
சினிமாவின் பல்வேறு பரிமாணங்களைத் துய்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு முன்னால் மன்னர் காலக் கதைகளை அதுகும் பழந்தமிழ்ப் பாடல்களின்மூலம் கொண்டு செல்கையில் இக்கால ரசிக மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. இக்காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும், அம்மாற்றம் மிதமிஞ்சியதாய் ஆகிவிடவும் கூடாது.
கூத்து மெட்டுகளுக்குள் உழைக்கும் மக்களின் ஒவ்வொரு தொழில் முறைகளுக்கும் ஏற்ற வகையான ‘மூச்சுத் தூரம்’ இருப்பதாகக் காண்கிறேன். ஆட்டங்கள் திணைகளை எனக்கு உணர்த்துகின்றன. இக்காலக் கவிதையின் தன்மையை கூத்திற்குள் செய்ய முயல்கிறேன்.
கதையை நகர்த்தும் பாடல்களாகவும், சுதந்திரமான கவிதைக்குரிய தன்மையைக்கொண்ட பாடல்களாகவும் கலந்து புனைய வேண்டியுள்ளது. சமகாலத்தின் வாழ்க்கையை உரையாடும் எனது பிரதிகளை பெரும்பாலும் ‘மாய யதார்த்தவாதத்’ தன்மைகளுடன் அமைத்துக்கொள்கிறேன். அதற்கான வித்தியாசமான ஆடை வடிவமைப்பு, அரங்க ஒளியமைப்பிற்கான தனிப்பிரதியமைத்தல் என்பன பெரிதும் இன்பம் தரக்கூடிய விடயங்களாக இருக்கின்றன.
ஆடை வடிவமைப்பிற்கான துணிகளை வாங்க துணிக்கடைக்குள் செல்லும்போது ஒவ்வொரு துணியிலும் வரையப்பட்ட ஓவியங்களாலான தொகுப்பு ஒரு நிழல் உலகம்போல் நம்மை வரவேற்கிறது. துணிக் கடை உலகத்தில் நமது கூத்துப் பிரதியை நிகழ்த்திப் பார்க்கும்போது ஒரு துணியிலிருந்து துள்ளும் மான்குட்டியிடமிருந்து நமக்கான உடல்மொழி கிடைக்கலாம்.
அவ்வாறுதான் ‘ ஈழ நிலத்தார் அழைப்பாடல்’ என்ற கூத்தில் பறையிசைக் கலைஞர்களை மீன்களாகவும், கூத்துக் கலைஞர்களை செந்நாரைகளாகவும் வடிவமைத்தேன். இவ்வாறான தருணங்களில்தான் கற்பனை நமது பரிணாமத்தில் அங்கம் வகிப்பதை நம்மால் உணர முடியும். இன்னமும் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய பேரனார் நடித்திருந்த பாத்திரங்களின் மெட்டுகளைப் பாடி நான் ஆடும்போது என்றோ இறந்துபோன அவரின் உடல் ஒழுங்கையும், உடல் மொழியையும் என்னுடைய உடல் உணர்கிறது. மெட்டு காலத்தை ஊடுருவிச் செல்லும்போது, நான் எனக்கான காலத்தை இயற்றுவதாய் உணர்கிறேன்.

ஒரு நாடகத்தையோ, கூத்தையோ எழுதி இயக்கும்போது இயக்குனருக்கு இயல்பாய்க் கிடைக்கும் ‘அதிகாரச் சலுகையை’ கூட்டுச் சிந்தனையாகவும், கூட்டு ரசனை வளர்ச்சியாகவும் உரு மாற்றவுமே முயல்கிறேன். அதேவேளை இக்கூட்டுச் செயற்பாட்டில் மற்றவர்களின் ஆற்றலிலிருந்து கிடைக்கும் வளங்களை எனது பெயருக்காகப் பாவித்ததில்லை.
இவ்வாறான கலை முயல்வுகளால் இன்பமன்றி துன்பமில்லை.
கேள்வி: புலம்பெயர் இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் வித்தியாசமுடையது உங்களுடைய எழுத்து. ஒருவிதமான விலகல் தன்மையுடைய – வித்தியசமான மொழிதல். ஆனால் தீவிரமான உணர்வின் – பிரக்ஞையின் வெளிப்பாடு. இதை எப்படிக் கண்டடைந்தீர்கள்?
பதில்: ஊரென்பது என்ன? மண்ணா? மக்களா? இரண்டும் சேர்ந்ததுதான் என்றாலும் ஊர் என்ற பெயரில் வினையாற்றும் மக்களின் சமூகக் கூட்டு மனதை ஒரு கலைஞனாய் அவதானித்துக்கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் உடலால் ஒரு ஆணாக இருக்கும் என்னையும் அவதானித்துக்கொண்டே இருக்கிறேன். என்னை எத்தருணத்திலும் விமர்சிக்கத் தயாராக இருப்பவர்களே என்னைச் சுற்றியிருக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். கறாராக விமர்சனங்களை முன் வைத்து பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறேன். அதே நேரம் கலைஞர்களிடமிருக்கும் சமூக நேசமும், மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பவர்கள் என்ற புரிதலும் நமது அணுகுமுறையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது.
கருத்துகளையும், உணர்வுகளையும் மோதவைத்து புதிய உணர்வுகளையும், கருத்துகளையும் துல்லியப்படுத்தும் களமாக இலக்கியத்தைப் பார்க்கிறேன். இலக்கியம் ஒரு தேடற் கருவியாகவும், விஞ்ஞானமாகவும் தெரிகிறது. கிறுக்கல்களிற்குள்ளே உருவங்களைக் கண்டுபிடிப்பதுபோல எல்லாக் கலைகளிற்குள்ளேயும் நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
இலக்கியத்திற்குள் கண்டுபிடிக்கும் தன்மையோடு இயங்கும்போது சொற்களில் துணிவும், சொற்களை மீறும் முனைப்பும் தேவைப்படுகிறது.
இங்கே இலக்கணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சொற்களைப் புலம்புவதும், நான் புலம்பிய சொற்கள் தமிழ்தானா என்று அகராதியில் தேடுவதும் ஒரு அழகான விளையாட்டு. இந்த விளையாட்டின்போது தமிழிலிருந்து கிளைத்த சொற்களை என் இலக்கியத்திற்குள் நாசூக்காய் தள்ளிவிடுவதுமுண்டு.
இலக்கியம் மீறல்களை விரும்புகிறது. மொழியின் பழய முட்டுச் சந்துகளிலிருந்து நாம் வெளியேற வேண்டியுள்ளது.
இத்தகைய முயல்வுகளை மயக்கமுற்ற, பிறள்வுபட்ட மனப்போக்குடைய , கற்பனாவாதத் தன்மைகொண்ட இலக்கிய வாதிகளின் போக்கு என்று யாரேனும் சொன்னால் ஒரு சிறு புன்னகையோடு கடந்து போகத்தான் முடியும்.
ஒவ்வொரு செயலுக்கும் அரசியல் இருப்பதுபோல, ஒவ்வொரு அரசியலுக்குமே அழகியல் இருக்கிறது. இலக்கியவாதிகள் இக்கணக்கில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
தமிழ்ச் சமூகத்தின் கற்பனைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது சமூக மனப் பதிவாக அதிகார சக்திகளால் காலம்தோறும் ஊட்டப்பட்டுள்ளது. நான் செய்வது சமூக மாற்றத்திற்கான மாற்றுக் கற்பனை முயல்வு. இந்த அடித்தள எண்ண ஓட்டத்திலிருந்தே எழுதுகிறேன். மற்றவர்களைப்போல எழுத வேண்டுமென்றால் நான் எதற்கு?
அத்தோடு இலக்கியம் என்பது பந்தயக் குதிரை இல்லையே. இலக்கியத்தின் வடிவத்தை எள்ளல்களால் நிரப்பி மேற்போக்கான மனக்கிளர்ச்சியால் சமூகத்திற்கு பராக்குக் காட்டும் வேலையை நாம் செய்யத் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.
கேள்வி: ஆனால் எள்ளல், அல்லது அங்கதம் இலக்கிய வெளிப்பாட்டிலும், அதனுடைய தொனியிலும், இலக்கிய அரசியலிலும் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளதே.
பதில்: ஆம் எள்ளல் இவ்வாறெல்லாம் இயங்கக் கூடியதுதான். குழு வாதங்களுக்குள் நின்றும் மாறி, மாறிச் செய்யக்கூடியதும்தான். அதிகாரத்தை நோக்கிச் செய்யும் எள்ளல் அரசியல் வலிமையுடையதென்றால், தன்னைத் தானே செய்யும் எள்ளல் ‘வாழ்க்கை ஒரு அபத்தம்’ என்ற நிலைப்பாட்டில் வருவது. இவ்வாறுரைத்தவர்களை ஞானியர் என்கின்றனர்.
இவை இரண்டையுமே ‘டெம்பிளேட்டுகளாக’ எடுத்துக்கொண்டு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தன்மையோடும், பிற்போக்கான தன்மையோடும்கூட பாவிப்பவர்களும் உண்டு. அவர்கள் புகழ் பெற்ற எழுத்தாளர்களாய் இருப்பதுமுண்டு. ‘வைரலாகும்’ யாவும் சிறந்ததென்ற நிலைக்குத்தானே வந்துள்ளது சமூகம்.! அனேகமானவர்கள் ஒரே பாணி எல்லைக்குள் எழுதுவதும், கட்டுரைக்குரிய மொழியில் புனைவுகளைச் செய்வதும், கலை வடிவங்களை செயற்கையான வழிகளில் செய்வதும் நடக்கின்றது.
எல்லாமே இலக்கியம்தான். ஒவ்வொரு மனிதருமே ஒவ்வொரு வகையான இலக்கியத்தை உருவாக்க முடியும். நான் பேச முற்படுவது இலக்கியத்தின் ஆழமான செயற்பாடு பற்றியது.
சார்லி சாப்ளின் தன் முழு உடலையுமே எள்ளலுக்குகந்ததாய் மாற்றினார். இலக்கியத்தின் உடலில் அவ்வாறு முழுத் தன்மையோடு எள்ளலை யாரேனும் செய்தால் மகிழ்ச்சி. இலக்கியத்தின் முழு உடலுமே ஒரு பெரிய சக்கரமென்றால், அதனுள்ளே இருந்து இயங்கும் பல பகுதிச் சக்கரங்களில் ஒன்றாகவே ‘எள்ளல்’ எனும் தன்மையை நான் காண்கிறேன். அது பெரும்பாலும் மொழியின் மேற்படையில் செய்யப்படும் வேலையாகத்தான் அவதானிக்க முடிகிறது. போகிற போக்கில் மொழியால் செய்யும் வேலையாகத் தெரிகிறது. தரவு என்பதிலிருந்து அறிவு எவ்வாறு வித்தியாசப்படுகிறது? வெளியே இருந்து பெறுபவற்றை நமக்குள்ளே திரட்டி அதிலிருந்து ஒன்றைக் கண்டடைவதுதான் அறிவு என்று சொன்னால், அது அறிவு பற்றிய அரைவாசி உண்மைதான்.
நமக்குள் உள்ளறிவென்று ஒன்று உள்ளது. அதை நாமே கண்டடைவது, நமக்குள் இயல்பாய் நடக்கக்கூடியதொரு தொழில்நுட்பம்.
இதற்கு இயற்கையுடனான உறவு முக்கியமானதாக இருக்கிறது. இதை மதவாதிகளின் கருத்துகளோடு பொருத்தி புறமொதுக்கக் கூடாது. மதம், சாதி, வர்க்கம் என்ற பிரிவினைகளை விரும்புபவர்களின் கைகளில் இதனை விட்டுவிடாமல் சமத்துவவாதிகள் இதைக் கையிலெடுக்க வேண்டும். சமத்துவத்திற்கான உள்ளறிவு நமக்கொன்றும் புதிதல்ல. அது கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே தோன்றி வளர்த்தெடுத்ததுதான்.
அதனோடு தோய்ந்து, நகர்ந்துவரும் நமது மொழியிடமிருந்து நமக்குக் கிடைக்கும் அறிவுப் பரிசுகளை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். நமது இலக்கியத்தின் பரிணாமத்திற்கு இது அவசியம். ஒவ்வொரு எழுத்தாளரும் மொழிக்கு முன்னால் யானைப் பாகரைப்போன்று இயங்க வேண்டும். தத்துவமும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரே புள்ளியில் சந்தித்து ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் காலத்தில் இலக்கியத்தின் முழுமையான ஆற்றல் சமூகத்தை மேம்படுத்த வேண்டும்.

கேள்வி: கூத்தினை நவீனப்படுத்துவதைப் பற்றிய விவாதங்கள் முடிவற்றவை. ஆனால் எதிர்காலத்தில், இனிவரும் தலைமுறைகளிடம் கூத்து நிலைப்படுத்துவது, கூத்துப்பயில்தல் எல்லாம் எப்படி இருக்கும்? எப்படி இருக்க வேண்டும்?
பதில்: நம்முடைய உடலின் தன்மையைப்பொறுத்து அதற்கான வெளிப்பாட்டு மொழி அமைகிறது. அத்தோடு வாழும் நிலம், தொழில் என்பனவற்றின் தாக்கமும், சமூகத்திலிருந்து பிரதியெடுத்தவையும் நம் உடல்மொழியில் கலந்திருக்கின்றன.
கனடா போன்ற நாடுகளில் குழந்தைகள் காட்டூன் பொம்மைகளைப் போல உடல்மொழியை அமைத்துக்கொள்ள சாத்தியமுள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரைப்போல இளையோர் குரலை அமைத்துக்கொள்கின்றனர், சினிமாவில் பாவிக்கும் உடல்மொழி ‘டெம்ளேற்றுகளை’ பிரதியெடுத்துக்கொள்கின்றனர். இன்னமும் சொன்னால் ஒரு பாதணி நிறுவனம் கட்டமைக்க விரும்பும் நடையைத்தான் நாங்கள் எல்லோருமே நடந்துகொண்டிருக்கிறோம். புல்லை வெறும் காலால் தொடுவதற்கான சந்தர்ப்பத்தை வலிந்து உருவாக்க வேண்டியுள்ளது.
தன்னைத் தானே உணர்தல், தனது தனித்துவத்தை உணர்தல் என்பதெல்லாம் தனக்குள் தானே செய்யும் பயணம்தான். தனக்கான உடல்மொழியை கண்டடைந்து முடிவெடுத்தல் என்பதும் ஆழுமை உருவாக்கத்தின் அங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு சுயத்திற்கான தனித்துவத்தில் உடல் பிரதானப் பொருள் என்பதால் உடல் மொழியும் பிரதானமானதே.
கூத்துக் கலை நம்முடலை நாம் புரிந்துகொள்ளவும், நமக்கான உடல்மொழியை கண்டடையவும் உதவுகிறது. தற்காலத்தின் கலையாக சினிமா இருக்கும்போதும் அதைக் கடந்தும் ஏன் கூத்துக்கலை அவசியம் என்பதற்கு இதுவும் ஒரு பதிலாக இருக்கிறது. பெற்றோரின் உள வடு, மறைந்திருக்கும் நிறவாதம், இலகுவாக போதைப்பொருட்கள் கிடைக்கும் தன்மை, பாடசாலைகளில் ஒதுக்கப்படும் தன்மைகள், கல்வி சுமையாதல் என்பன கனடா போன்ற நாடுகளில் அதிகமான இளையோரின் தற்கொலைக்குக் காரணமாகின்றன.
பிள்ளைகள் வழி தவறிப் போய்விடக் கூடாதென பெற்றோர் பரதநாட்டிய வகுப்புகளுக்கும், மிருதங்க, கிற்றார் வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர். இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உரையாடும் கூத்துப் பிரதியொன்றினை தனியார் பாடசாலைகளில் செய்த உரையாடலில் கிடைத்த புரிதலோடு உருவாக்கி கடந்த மூன்று வருடங்களாகக் காத்திருக்கிறேன். பத்துக்கு உட்பட்ட கலைஞர்கள்தான் தேவை. ஒன்று சேர்த்து ஒத்திகைக்குப்போக முடியவில்லை. ஆனால் மக்கள் பரதநாட்டியத்தைத் தேடியே ஓடுகிறார்கள். ஒரு அரங்கேற்றத்திற்கு பல்லாயிரம் டொலர்களைச் செலவு செய்கிறார்கள். பரத நாட்டியத்தை கௌரவமான கலையாகக் காண்கிறார்கள்.
கூத்து என்பது பிற்படுத்தப்பட்டோரின் கலையென்று முதற் தலைமுறையின் பெரும்பான்மையிடம் ஒரு பார்வை இருக்கிறது. கூத்து என்றால் கத்திப் பாடுவது என்று இளந் தலைமுறையிடம் ஒரு பார்வையும் உண்டு. இப்பார்வைக்கு கூத்தை வளர்க்கிறோமென்று நம் அண்ணாவிமார் செய்த வேலைகளும் காரணம்தான். கூத்துக்கான பயிற்சி வகுப்புகளை பரவலாக நடத்த வேண்டும். பண்பாட்டு அரசியற் பிரக்ஞையோடு சரியான பயிற்சித் திட்டம் வரைந்து அதனைக் கொண்டு செல்லவேண்டும். கூத்தை மறுவாசிப்புச் செய்வதாய் அடித்த குஸ்திகளை முடித்துக்கொண்டு புதிய சமூகத்திற்கான புதிய பிரதிகளை எழுத வேண்டும். புதிய பிரதிகளை எழுதுவதற்கான பயிற்சிகளை இளையோர் மத்தியில் கொண்டுசெல்லவேண்டும்.
சில ஆண்டுகளின் முன்னர் நண்பர்களோடு சேர்ந்து ‘ கூத்தறாப் பள்ளி’ ஒன்றை உருவாக்க முயற்சித்தோம் கொரோணாவின் பின்னர் இன்றுவரை அதை சாத்தியப்படுத்த முடியவில்லை.
கேள்வி: கூத்துப்பிரதி, நாடகப்பிரதி, சிறுகதை அல்லது நாடகப் பிரதி ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் எவை?
பதில்: வாழ்க்கையை மறு உருவாக்கம் செய்து நமக்கு வேண்டிய அளவில், விரும்பிய பகுதிகளை பொரும வைத்து, சுருக்கிவைத்து மேலதிகமான புரிதல்களை, அனுபவங்களை துல்லியப் படுத்தவே எல்லாக் கலைகளும் உதவுகின்றன.
ஒவ்வொரு கலைக்கும் வெவ்வேறு வடிவங்களும் , உரைப்பு முறைகளும் உள்ளன. எந்த வகைக் கலைப்பிரதியானாலும் ஒவ்வொரு எழுத்தாளரும் தமக்குப் பொருத்தமான பாணி, எழுத்து முறைகளைக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களிடையே பல வகைக் கூத்து வடிவங்கள் உண்டு. நான் யாழ்ப்பாணத்து தென்மோடிப் பாணிக்கே பரீச்சயமானவன். கூத்துப் பிரதியொன்று எழுதப்போகிறோமென்றால் உத்தேசமான கதைப்பரப்பொன்றை முடிவெடுக்க வேண்டியுள்ளது. திருப்பங்கள் செய்யக்கூடிய வடிவமொன்றையும் தயார்ப்படுத்திய பின்னர் மெட்டுகளைத் தெரிவு செய்யவேண்டும்.
வரலாற்றுக் கூத்துப் பிரதியொன்றை எழுதப்போகிறோமென்றால் மிக இலகுவாகத் தெரிவு செய்துவிடலாம். அதுவே சமகாலக் கதையென்றால், உளவியல் சார்ந்த விடயமொன்றை எழுதப் போகிறோமென்றால், அநேகமாக மறைபரப்புதலுக்குப் பாவித்த மெட்டைத்தான் பாவிக்க வேண்டியிருக்கும். அந்த மெட்டு உணர்வு மாற்றங்களுக்குப் பொருந்துகிறதாவெனப் பார்க்க வேண்டும். மெட்டுகள் கதையின் தன்மைக்கேற்பவும், உணர்வுகளின் தன்மைக்கேற்பவும் தொகுக்கப்படும்போது தாளங்கள் ஒன்றோடொன்று உறவாகும்போது ஒரு ஒட்டுமொத்த அழகு வரும். இடையிடை தொடர்புபடுத்தும் கொச்சகம், தாழிசை, கடிதவாசகம், அகவல் போன்றவற்றையும் பாவிக்கலாம்.
நாடகப் பிரதிக்கான கதைக் கருவொன்றை முடிவெடுத்தபின்னர் அதைச் சொல்வதற்கான முறையை, வடிவத்தை சரிக்கட்டிக்கொள்கிறேன். உரையாடல்களின் படிக்கட்டுகள் நாடகத்திற்கு முக்கியமானவை. கட்டுகளைப் போட்டு, அவிழ்த்து விளையாட அவை பெரிதும் உதவுகின்றன. கூத்தாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும், வில்லிசையாக இருந்தாலும் ஒத்திகையில் நடக்கும் உரையாடல்களும், நிகழ்த்திப்பார்த்துக் கண்டு பிடிக்கும் விடயங்களையும் கொண்டு அப்பிரதியை வளர்த்தெடுப்பதே எனக்கு விருப்பமான விடயமாக இருக்கிறது. ஆரம்பத்தில் பல கலைஞர்களுக்கு இது ஒவ்வாத முறையாக இருந்தது. இப்போது என்னைப் புரிந்துகொண்டிருக்கிறார்களென்று நம்புகின்றேன்.
ஒவ்வொரு கலைக்குமான ‘பைகளை’ எனக்குள் வைத்துள்ளேன். ஒவ்வொன்றுக்குள்ளும் கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்கிறேன். நாவல் ஒன்றை எழுதுவதற்கான தரவு திரட்டும் வாசிப்பைச் செய்துகொண்டிருக்கும்போது சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். ஒரு கலை வடிவம் நகரவில்லையென்றால் மறு கலை வடிவத்தால் கதவைத்திறந்து ஓட வேண்டியதுதான்.
கேள்வி: கதையில் அமைக்கப்படும் (அமையும்) உள்ளடக்கம், மொழி, வெளிப்பாடு அல்லது கதையை மொழிதல் செய்யும் விதம், அதனுடைய வடிவம், முழுமையாக்கம் என்பதெல்லாம் எப்படி உங்களிடம் நிகழ்கின்றன? அதாவது ஒரு கதையை எப்படி உருவாக்குகிறீர்கள்? அல்லது ஒரு கதை உங்களிடம் எப்படி உருவாகிறது?
பதில்: நான் மனிதர்களைப் பார்க்கிறேன். இன்றைய ஒரு மனிதர் ஒரு மனிதராக இல்லை. என்னுடைய மனதுகூட நாடுநாடாய் அலைந்து திரிந்த ஒருவனின் மனதுதான். அது அந்தரித்த பயணங்களுக்குப் பரீச்சயப்பட்டது. அதனாற்தான் என் கலை வெளிப்பாட்டு வடிவங்கள்கூட அசையும் தன்மை கொண்டனவாக இருக்கின்றன.
என்னுடைய கதைகளில் வரும் ஒரு பாத்திரமென்பதும் ஒரு மனிதரில்லை. பல்வேறு இடங்களில், சூழல்களில் சந்தித்த மனிதர்களின் ஒத்திசைவான பொருத்துகளாகவே பல தருணங்களில் அமைந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் கதையை வேண்டிக் காத்திருக்கும் சிறு சிறு கச்சாப் பொருட்கள் ஒரு பழய சைக்கிள் கடைக்குள் கிடப்பதுபோல என்னுடைய நினைவில் சேகரிக்கப்பட்டுள்ளன. சைக்கிளின் உதிரிப் பாகங்களை தையல் இயந்திரத்தில் பொருத்துவது போலவும் சில கதைகளுக்குள் நிகழ்ந்திருக்கிறது.
ஆனால் என் கனவில் நான் நேரில் காணாத பல மனித முகங்கள் வந்து போகின்றன. மூக்குகளும், வாய்களும் ஏனைய மனித உதிரிப் பாகங்களும் எனக்குள் குவியல்களாகக் கிடப்பதைக் கண்டிருக்கிறேன். ஒருமுறை நான் கனவில் கண்டு, வரைந்து வைத்த நீள மூக்குப் பெண்ணை பேரூந்திற்குள் கண்டு அந்தப் பெண்ணின் பின்னால் சென்று அப்பெண் முறைத்துப் பார்த்த கதையுமுண்டு. அந்தப் பெண்ணை நான் மகளாகத்தான் பார்த்தேன் என்பது அவளுக்குத் தெரியாதுதானே.
ஒரு கதைசொல்லியாய் என் கனவுகளை மதிக்கிறேன். கடற்கரையிற் கிடக்கும் பொருட்களைச் சேகரிப்பதுபோல கனவிலிருந்தும் சேகரிக்கிறேன். அவ்வாறுதான் ‘வேருலகு’ என்ற என் கனவுகளின் தொகுப்பை குறு நாவல் வடிவில் எழுதினேன். கனவில் ‘இயனி’ என்ற பெயரைக் கண்டு காலையில் எழுந்து அதன் அர்த்தத்தைத் தேடி ‘ மின் காந்தத் துகள்’ என்று கண்டதும் ‘காந்தப்புலம்’ நாவலை அவளைச் சுற்றி எழுதினேன்.
ஒரு சைக்கிளின் பின் சக்கரம் போலவோ, ஒரு தராசின் வடிவத்திலோ சமூகத்தில் நாம் காணும் ஏதேனுமொரு பொருளின் இயங்குமுறையிலோ நம் கதையின் வடிவத்தை அமைத்துக்கொள்ளலாம். பொருட்களின் வடிவத்தைக் கதையின் வடிவமாக மாற்றும் தொழில் நுட்பத்திற்கு தொடர் உழைப்பால் வரும் சிறப்புத் தேர்ச்சி அவசியமென்றே நினைக்கிறேன்.
இவையெல்லாமே ஒரு கதையை நாம் எழுத நமக்கு ஊக்கம் தந்தாலும், தமிழ் மொழிக் கிடங்கில் இறங்கும்போது ஏற்படும் இன்பம் தனித்துவமானதுதான். நாம் மொழியின் மேலே பனிச் சறுக்கல் செய்யப்போகிறோமா? அல்லது உழவு இயந்திரத்தால் உழப் போகிறோமா? போகிற போக்கில் வாசகரின் கன்னத்தில் தட்டிவிட்டுச் செல்லப்போகிறோமா? அல்லது வாசகரோடு கண்ணைக்கட்டி விளையாடப் போகிறோமா? பல எழுத்தாளர்கள் பலவாறு செய்துகொண்டிருக்கிறார்கள். வாசகர்களோ பல உத்திகளைக் கண்டவர்கள்.
எவ்வளவுதான் கற்பனையின் வெவ்வேறு திசைகளுக்குச் செல்லக் கூடியவராக வாசகர் இருந்தாலும் நான் போடும் வீதியில்தான் மன ஓட்டம் செய்யவேண்டியிருக்கும். அல்லது எனது உத்தேசப் பரப்பில்.
பெரும்பாலும் மன ஓட்டத்திற்கான பிரதான வீதிகளைத்தான் நான் போட்டு விடுகிறேன், கிளை வீதிகளை அவர்களே போட்டாலும் கிளை வீதிகள் எங்கே சென்று முடியலாமெனும் ஊகங்களை மட்டும் செய்துகொள்வேன். என் கதைகளை நான்தான் முடித்து வைக்க வேண்டுமென்று நினைப்பதில்லை.
வழக்கு விசாரணைகளில் கேட்கப்படும் கேள்விக்கு நேரடியான பதில் சொல்லும் அறிவுத் தன்மையோடு கதையெழுதும் தொழிலை செய்வதில் எனக்கு ஆர்வமில்லை. பெரும்பாலும் கதைகளால் எவற்றையேனும் சொல்ல வேண்டுமென்றும் எழுதுவதில்லை. உணர்த்தவே முயல்வதுண்டு. அதனாற்தான் அதிகமான குறியீட்டுப் பிரயோகத்தைச் செய்கிறேன்போலும். சுருக்குக் கயிற்றோடு அடங்காத மாட்டின் அருகால் ஓடுவதுபோல மொழியோடு ஓடிய அனுபவமும் உண்டு. மொழிக்குள் சிக்கி சம்பவங்கள் இல்லாத கதையை எழுதியதுமுண்டு. பிரமை பிடித்தவன் நூலேணியில் ஏறுவதுபோல பயணித்ததுமுண்டு, அர்த்தங்களை ஒருகையிலும், உணர்வுகளை மறுகையிலுமாய் வைத்துக்கொண்டு ‘Play station’ விளையாடியதுமுண்டு.
வட்டத்தைத்தாண்டும் முயல் வடிவில் ஒரு கோட்டோவியம் வரைந்து அந்தக் கோட்டின் பயணப் பாதையில் எழுத முயன்றதுதான் என்னுடைய ‘காந்தப்புலம்’ நாவல். ஓவியமாக வரைந்தது ஒரு முயல்தான். இலக்கிய முயல் அதிக குட்டிகளைப் போட்டபோது கிழிந்து போனது ஓவிய முயல். ஒரு கதையின் தொடக்கத்தையும் முடிவையும் தீர்மானித்து பல திட்டமிடல்களோடு எழுதுவதை என்னால் இரசிக்க முடியாதிருக்கிறது. கதை எழுதுதலும் ஒரு நிகழ்த்துகை இன்பத்தைத் தர வேண்டுமென விரும்புகிறேன். இவையெல்லாமே ஒரு கதை சொல்லியின் பிரச்சினைகள்தான். இலக்கியவாதியின் வேலை வெறும் கதை சொல்வது மட்டுமல்ல. இந்தச் சமூகத்தின் சிந்தனை அசைவியக்கத்தில் பங்காற்றுவதும்தான்.
கிட்டத்தட்ட மனப்பிறள்வு நிலைக்குச்சென்று திரும்பும் இலக்கியத் தொழிலாளிக்கும் எல்லோரையும்போல அன்றாட வாழ்க்கைக்கான உடலுழைப்பும், உறவுகளும், அவைசார்ந்த பொறுப்புகளும் உண்டு. இன்றைய மனிதரிடம் உருவமையும் புதிய உணர்வுகளையும், கருத்து உற்பத்தியையும் ஆராய்ந்து வழிப்படுத்தும் பொறுப்பாளியும் இலக்கியவாதிதான். ஆதலால் நம் கதைகளை ஒரு இலக்கியவாதிக்கான பொறுப்போடு வெளியிட வேண்டியுள்ளது.
இலக்கியவாதியாக இருப்பதென்பது ஒரு பிடிவாதம்தான்.
கேள்வி: இன்றைய நிஜமான மனிதர்களும் ஒருவரல்ல . பல்வேறு நிலைகளையும், தன்மைகளையும் கொண்ட பாத்திரங்களாகவே உள்ளனர். இதுதான் நாமும், இலக்கியமும் எதிர் கொள்கின்ற சவால். இந்த நிலை பிறள்வுக்கு கிட்டத்தட்ட நெருக்கமானது. ஒவ்வொருவரும் மயிரிழையில் தப்பித்துக்கொள்கிறோம். இந்த நிலையை வெளிப்படுத்திய இலக்கியங்கள் அல்லது நீங்கள் அறிந்த சினிமா?
பதில்: அண்மையில் வாசித்த நூல்களில் ‘The Sane Society ‘என்ற பெயரில் எரிக் ஃபிராம் அவர்கள் எழுதி, தமிழில் ராஜ் கௌதமன் அவர்கள் ‘மன வளமான சமுதாயம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த நூல் முக்கியமான ஒன்றாகத் தெரிந்தது. அது மானுடவியல், உளவியல் சார்ந்த நூல்தான், இலக்கியமல்ல. அதில் ‘ மனிதர்கள் விலங்குத் தன்மைக்கும், வளர்ச்சியடைந்த மனிதத் தன்மைக்கும் இடையில் சிக்குப்பட்டிருக்கிறார்கள்’ எனும் வகையிலான கருத்தை முன் வைத்து ஆராய்ந்திருப்பார். இந்த இரட்டை நிலைகளுக்குள் சிக்குப்பட்ட மனம் ‘நான்’ என்ற ஒற்றை பிம்பத்தை முதலில் உடைக்கிறது.
பின்னர் இந்த நவீன உலகத்தின் வாழ்க்கை முறை நம்மைச் சிதைக்கிறது.
வாழக்கை மிகுந்த களைப்புடையதாய் ஆகிப்போகிறது.
இன்னொன்றாக மாறி நின்று பார்த்தல், கூடு விட்டுக் கூடுபாய்தல் என்ற தன்மைகளில் பேசுதலெல்லாம் தமிழிலக்கியத்தில் பல காலமாக இருந்து வருவதுதான். பல ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஆனந் எழுதியிருந்த ‘நான் காணாமற் போகும் கதை’ சற்று வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்தது பிடித்திருந்தது. காஃப்கா, நீட்சே, போர்ஹேஸ், எலிவீசல், ரஸ்ய எழுத்தாளர்கள் என்று பல எழுத்தாளர்களின் இலக்கிய இயங்குமன நிலைகளால் நாம் ஈக்கப்பட்டிருந்தாலும், வாழ்க்கைக் கணங்கள் தரும் மன நிலைகளே பெரும்பாலும் எழுத உந்துகின்றன.
நேரம் பணத்திற்கு விற்கப்படும்போது நேரத்தை பணமாகப் பார்க்கும் தன்மை மனித மனதின் இயற்கையான ஓட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யவும் செய்விக்கவும் பழக்கப்பட்டுவிட்டோம். தொழில்களுக்குள் இருக்கும் கலைத்தன்மையை இரசிக்கக்கூட நேரமில்லை. எல்லாவற்றிற்கும் சுருக்கமான வழிகளைத் தெரிவுசெய்கிறோம், எல்லாவற்றிலும் இலாப நட்டம் பார்க்கிறோம். நம்முடைய நினைவு ஆற்றலை கடவு இலக்கங்கள், கடவுக் குறிப்புகளாலும், வங்கித் தவணைகளாலும் நிரப்புகிறோம். நம்முடைய நினைவாற்றலை வர்த்தக உலகம் பல வழிகளில் எடுத்துப் பாவிக்கின்றது. ஒரு வகையில் ‘பிளாஸ்ரிக்கை’ உண்பது போலத்தான்.
இவ்வாறான இன்றைய மனிதச் சமூகம் மிகவும் கோளாறான தன்மையோடு ஓடிக்கொண்டிருக்க, பழய சமூகப் பிற்போக்கு மன நிலைகள் இவற்றிற்குள் தமது இயங்கு முறைகளை மறு நிர்மாணம் செய்துகொள்கின்றன. இன்றைய மனித மனதிற்கு அமைதியும், அழகான நினைவுகளும், கலையின்பமும் கட்டாய மருந்தாக இருக்கிறது.
சமூகத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான குரல்களாக எழுத வேண்டியிருந்தாலும், நம்முடைய எழுத்து அன்பையும், மகிழ்ச்சியான மன நிலைகளையும், துயரப்படுபவர்களைத் தேற்றும் கனிவையும், வாழ்க்கை மீதான நம்பிக்கையைப் பெருக்கக் கூடிய வகையிலும் எழுதவேண்டும் என்ற ஆசை வருகிறது.
கேள்வி: கதை எழுதுதலும், ஒரு நிகழ்த்துகை இன்பத்தைத் தரவேண்டும்’ என்று சொல்லுறீங்கள். கதையோ, கவிதையோ எழுதும்போது நாம் இன்னொரு வாழ்க்கையை நிகர் வாழ்க்கையை வாழ்கிறோம். அதில் நாம் படைக்கின்ற பாத்திரங்களோடு அமைகின்ற வாழ்க்கையின் ருசி கிடைக்கிறது என்பதுவும் இதுவும் ஒன்றா?
பதில்: வெங்காயம், கடுகு, மிளகாய், நச்சீரகம், எண்ணை எல்லாவற்றையும் சட்டியிலிட்டு தாளிக்கும்போது ஒரு ‘வாசம்’ வரும். அந்த வாசத்தை நாம் போடுவதில்லை. நாம் சட்டியிலிட்ட பொருட்களுக்கு அளவுகள் இருக்கலாம். வாசத்தில் வித்தியாசங்கள் வரலாம். வாசத்தை நாம் அளப்பதில்லை. வாசம் சட்டிக்குள் கிடப்பதில்லை. அது காற்றில் பரவிப் பயணிக்கிறது. நாம் சட்டிக்குள் எல்லாப் பொருட்களையும் போட்டது ‘நிகழ்ச்சி’. ஆனால் ‘நிகழ்ந்தது’ வாசம். ‘நிகழ்தலுக்கு’ எப்போதுமே ஒரு கட்டுடைக்கும் தன்மையுள்ளது. தற்செயல், திடுக்குறவைத்தல், அதிசயித்தல் போன்ற முற்றிய உணர்வு நிலையை ‘நிகழ்தல்’ என்ற விடயம் நமக்குள் உண்டாக்குகிறது.
கடுகை நாம் திருடியிருக்கலாம், வெங்காயம் வெட்டிய கத்தியால் ஒரு கொலை செய்திருக்கலாம். எண்ணையில் நஞ்சு கலந்திருக்கலாம். அந்த ‘ வாசம்’ தரும் மயக்கம், அல்லது இன்பம் என்பதையும் ஆராய்வதற்கே இலக்கிய அரசியற் பிரக்ஞை அவசியப்படுகிறது. நீங்கள் சொன்னதுபோல நமக்குள்ளேயே பல பாத்திரங்களைச் சுமப்பதும், அவற்றுக்குள் ஒன்றோடொன்றை விவாதிக்க வைப்பதும், உணர்வு மோதல்களைச் செய்து பார்ப்பதும் நமக்குள்ளேயே இன்னொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் இன்பம்தான்.
இன்னொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கின்ற இன்பம் கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாய்த்த ஒன்றுதான். அது தரும் இன்னொரு நிகழ் இன்பத்துக்கு – அனுபவத்துக்கு வெளியே அந்தப் படைப்பில் உள்ளமைந்திருக்கும் அரசியல், தத்துவம், புதிய அனுபவங்கள் எல்லாம் வாசகப் பரப்பில் நிகழ்த்துகின்ற வினைகள் – விமர்சகரிடத்தில் உருவாகின்ற வினைகள்… இரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நாம் எவற்றிற்கெல்லாம் இன்பம் அடைகிறோம்? நம் இன்பத்தின் தன்மைகள் பலவாக இருக்கின்றன. எந்த வரியை எந்த இடத்தில் பொருத்தினால் எந்த மன நிலை உருவாகும் என்பதை எந்த இடத்தில் இருந்து முடிவெடுக்கிறோம்? ‘வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதிருக்கட்டும்’ என்பதைப்போல நாம் பேச நினைக்கும் அரசியற் கருத்தொன்று அழகியல் அணுகுமுறைக்குள் கை மாறும்போது என்னவாகிறது?
இவ்வாறான தருணங்களில் எழுத்தாளரின் சிறுமைகளை எழுத்தாளரின் ஆளுமை வெல்ல வேண்டும். அப்படி நிகழும்போது எழுத்தாளரை மேம்படுத்தும் கருவியாக இலக்கியம் மாறுகிறது. இலக்கியம் இலட்சியவாதத்திற்கு மட்டுமேயான கருவியல்ல, நான் இலட்சிய வாதத்தை முன் வைப்பதால் இவ்வாறு பேசுகின்றேன்.
அழகியலை முன்னிலைப்படுத்தும் போக்கு, அரசியலை முன்னிலைப்படுத்தும் போக்கு என்று இரண்டு விதமாகப் பேசும் தன்மைகளைக் காண முடிகிறது. அது சரியான பார்வையல்ல என நினைக்கிறேன். ஒவ்வொரு செயலுக்கும் அரசியல் இருப்பதுபோல அழகியலும் இருக்கிறது. ஆகவே இரண்டும் செயலோடு இணைந்திருக்கிறது. நமது ரசனை உருவாக்கத்திலும் சமூகத்தாக்கம் இருக்கிறது. ‘தூக்கமா கண்மணி துள்ளியெழு’ எனும் வகையில் உணர்ச்சித் தூண்டலை இலக்கியம் செய்ய முடியும். அதே இலக்கியம் சிறிய, சிறிய மன மாற்றங்களைச் செய்து ஒரு பண்பட்ட நிலைக்கு மனதை முன்னேற்றலாம்.
எழுத்தாளர்களுக்கு அமையும் எழுத்துப்பாணியென்பது ஒருவரின் இயல்பு, உடற் தன்மை, பாதிப்புகள், பெற்றுக்கொண்டவற்றை சுய அறிவாய் மாற்றிக்கொள்ளும் திறன் போன்ற பலவற்றின் கூட்டுப் பெறுமானமாக மேல் வந்து தொடர்ச்சியாய் அதையே அவர் செய்து வளர்த்ததாக இருக்கலாம்.
தமக்கு அமைந்த தன்மையில், ஒவ்வொருவரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். வாசகர்கள் புகழ்பெறும் எழுத்தாளர்களின் மன ஓட்டத்திற்கு பழக்கப்பட்டுவிடுகிறார்கள். பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பல வகையான மன ஓட்டங்களில் சென்றுபார்க்கும் முயற்சி நம் வாசகர்களுக்குத் தேவையாகிறது. நம் விமர்சகர்களிடம் தராசுகள் அதிகரித்திருக்கின்றன. தராசுத் தட்டுகளின் கீழே காந்தம் ஏதேனும் ஒட்டியிருக்கின்றனவா என்று வாசகர்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியுமுள்ளது.
கேள்வி: இலக்கியப்பிரதிகளில் அல்லது கலையாக்கத்தில் ஆக்கமுறைமை அதாவது வடிவத்தையும் உள்ளீட்டையும் உருவாக்கும்முறைமை, வாசிப்புமுறைமை, நோக்குநிலை எல்லாம் புதிய – பின்நவீனத்துவ – சிந்தனையில் மேலும் கூர்மையும் விரிவும் கொள்ள வேண்டியதாகி உள்ளது. மற்றமைகள், விளிம்புநிலைகள் எல்லாவற்றின் மீதும் சமனிலை கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதே.. இது சவாலானதா? அல்லது சூழலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியோடு இயல்பாகவே அமையக்கூடியதா?
பதில்: இக்கேள்விக்கான பதிலை சற்று வித்தியாசப்பட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். முன்னரெல்லாம் திருடராக இருப்பது கடினமாக இருந்தது. இப்போது திருடர்களுக்கான கதவுகள் திறந்துள்ளன. திருடர்களும் தொழில் நுட்ப அறிவு கொண்டோராய் முன்னிலையில்தான் இருக்கிறார்கள். கணினி மயப்பட்ட எல்லாத் துறைகளிலும் திருட்டிற்கான வசதிகளும் உள்ளடங்கியே இருக்கின்றன. கலைத் துறையிலும் அது நிறைந்தே இருக்கிறது.
ஒரு புகைப்படத்தை எடுத்து அதன்மீது கணினியில் அச்சுப்பதித்துவிட்டு புகைப்படத்தை அழித்த பின்னர் இது நான் வரைந்த ஓவியம் என்று சொல்ல முடியும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இரண்டு ஓவியங்களை கலந்து ஒரு புதிய ஓவியத்தை உருவாக்க முடியும். ஒரு எழுத்தாளரின் கதைப்பாணியில் எழுதவோ, எழுதியதை இசையமைக்கவோ முடிகிறது.
நம்முடைய மனதிற்குப் பரீச்சயமான நமது மரபார்ந்த சினிமா இசை மனதின் செளகரியமான எல்லைகளில் லயித்து உலவக்கூடியதாக இருந்தது. இப்போது இசை எதிர்பார்க்காத எல்லைகளை திடீரெனத் தொட்டு, திடீரென கீழே விழுந்து ஓடும் தன்மைகளில் வருகின்றன. இவ்வாறு பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
மரபார்ந்த நமது மனக் கட்டமைப்பு ஒரு ‘ரப்பர் வளையம்போல நம்மைச் சுற்றி ஈய்ந்து கொடுக்கும் தன்மையோடு நின்று பிடிக்கிறது. இது அறும்போது மனித மனது அந்தரப்படும் நிலைகளுக்குச் செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. உடல் என்ற ஒன்றிற்குள் நாம் இருக்கும்வரை மனப் பழக்கம், அல்லது மன ஒழுங்கு என்பன தேவையாகவே இருக்கும். பழைய மன ஒழுங்கிலிருந்து புதிய மன ஒழுங்கிற்கு மனிதமனம் செல்லுமானால் அங்கேயும் அறக் கோட்பாடுகள் தேவைப்படுமென்றே எண்ண விரும்புகிறது. இன்றைய மனது.
நான் மேற்கூறிய தன்மைகளையும் உள்வாங்கியபடியே உங்கள் கேள்விக்கான பதிலையும் சொல்ல வேண்டியிள்ளது. இன்றைய சிந்தனை முறையில் ஏற்பட்டுள்ள கூர்மை புதிய உலகத்தில் தவிர்க்க முடியாதது. இது அறிவு எழுச்சியின் இயங்கு முறைதான்.
‘இலக்கியம் மனம் சார்ந்தது, மனிதக் கலாசாரங்களின் புராதன அழகுத் தொடர்ச்சியை காவிவரும் இந்த மனதைச் சத்திரசிகிச்சை செய்யும் அறிவின் கூர் அலகுகள் இலக்கியத்தில் ஆதிக்கம் செய்யக் கூடாது’ என்ற கருத்துகள் ஒரு பக்கம் ஒலித்துக்கொண்டிருந்தாலும். ‘பகுத்துப் பார்த்தல், தொகுத்துப் பார்த்தல் என்ற இரண்டுமே முக்கியமான சிந்தனைத் தேவைகள்தான்.
அதிகார நிலைகளைத் துல்லியப்படுத்தி அவை கையகப் படுத்தியவற்றை சுட்டி கலைத்துப் போடுவதும், சிந்தனை மோதல்களிலிருந்து புதிய வடிவங்களை உருவாக்குவதும் ஒரு விளையாட்டு. அந்த விளையாட்டுத் தரும் புதியவகை இன்பமே இன்றைய இலக்கியம் தர வேண்டியதும்கூட. ‘நமது உணர்வுகள் துல்லியப்படும் நிலைகளை அவதானித்தலும், கலப்பு உணர்வுகளை பகுத்துப் பார்த்தலும் இன்றைய இலக்கியவாதிக்கு அவசியத்தேவையாக இருக்கிறது.
மனிதர்கள் சமூகமாக வாழ்வதே சிறந்தது.
கேள்வி: அப்படியென்றால், யதார்த்தவாத – இயற்பண்புவாத எழுத்துகளுக்கான இடம்?
பதில்: எல்லாமே அதனதன் இடத்திலிருந்து அடுத்தகட்டத்திற்கு முன்னேற வேண்டியதுதான். ஏற்கனவே இத்தன்மைகள் கலப்படைந்த பண்பு நிலைகளுக்குள் சென்றுவிட்டதாகவே உணர்கிறேன்.
000

கருணாகரன்
கருணாகரன் ஈழத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும், விமர்சனத்தையும் கண்டவை
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















“அதிகார நிலைகளைத் துல்லியப்படுத்தி அவை கையகப் படுத்தியவற்றை சுட்டி கலைத்துப் போடுவதும், சிந்தனை மோதல்களிலிருந்து புதிய வடிவங்களை உருவாக்குவதும் ஒரு விளையாட்டு. அந்த விளையாட்டுத் தரும் புதியவகை இன்பமே இன்றைய இலக்கியம் தர வேண்டியதும்கூட.”
மெலிஞ்சி முகுந்தனின் மேற்கண்ட சிந்தனையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
– தமிழ்மொழி சக்திவேல்
கோபிசெட்டிபாளையம்
சமூக பொருளாதார அரசியலையும் சாதிய ஒழிப்பு கொள்கையையும் புதிய பரிமாணத்தில் நசுக்காக வாசகர்களிடத்தில் கொண்டுசெல்லும் மனநிலையை நான் மதிக்கிறேன்
இலங்கைத் தமிழர் தமது தனித்துவமான பண்பாட்டுத் தளத்தை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும். விரிவான ஆழமான அரசியல் சமூகப் பார்வை இந்த நேர்காணல். கிராமங்கள் தோறும் ஒற்றுமையை ஏற்படுத்த சிறூரவை போன்ற அமைப்புகள் அனைத்து சமூக மக்களின் பிரதிநிதித்துவமுடன் இணைந்து உருவாக வேண்டும் என்ற கருத்து முக்கியமான காலத்தின் தேவை. சாதிகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான பண்பாட்டுக் கூறுகளும் சம்பிரதாய முறைகளும் உள்ளன. அவற்றை ஒன்றாக இணைக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் களையவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை நோக்கிய வெளிப்படையான செயற்திட்டம் அவசியம்.
அழகான ஆழமான ஆணித்தரமான எண்ணங்கள் இன உணர்வுகள் சமூகமாற்றங்க்ள் கூத்து நாடகம் என யாவற்றையும் ஒன்றிணைந்த செயல்பாட்டைவிளம்பி உரையாடலை மெருகு படுத்தியுள்ளார் முத்தான முத்து மெலிஞ்சி முத்து