ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

முட்டையிட ஒதுங்கும் பங்குனி ஆமைகள்

காலம் தப்பிப் பெய்கிறது
மழை
இருப்பினும் தை மாத இறுதியில்
கிழக்குக் கடற்கரையோரம்
முட்டையிடுவதற்காக
பங்குனி ஆமைகள்
இந்த ஆண்டும்
ஒதுங்கத் தொடங்கிவிட்டன.

000

சென்ற ஆண்டைவிட
கிழக்குக் கடற்கரையோரம்
சடலமாக ஒதுங்கும்
பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை
குறைவுதான் என்கின்றன செய்திகள்.
ஆழ்கடல் மீன்பிடிப்புப் படகுகளின்
இழுவை வலைகளில் சிக்கி
வயிறு கிழிவது மட்டுமே
பங்குனி ஆமைகளின் மரணத்துக்கு
காரணமல்ல என்று சடலப்பரிசோதனை
அறிக்கை கூறியது
எனக்கு பிரத்யேகமாக ஓர் ஆறுதல்.
ஜனவரி 18, 321 என்று
சுண்ணக்கட்டியால் எண்ணிடப்பட்டு
சடலப்பரிசோதனை முடிந்த
பங்குனி ஆமை ஒன்றை
பிரம்மஞான சபைக்கு நேர்பின்னால்
இன்று கடற்கரை நடையில் பார்த்தேன்.

000

பொங்கல் விடுமுறையில்
பிரமாண்டமான உடல்கொண்ட
எருமையை சடலமாக
உடைந்த பாலம் கழிமுகப்பகுதியில்
மூன்று நாட்கள் தொடர்ந்து
பார்த்தேன்.
காகங்களுக்கோ பெரும் விருந்து.
சென்னையோடு எருமைகளை தியானித்த
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கண்கொண்டு
இறந்த அந்த எருமையைப் பார்க்காமல்
நீங்கமுடியவில்லை.

000

அலைகளின் பின்னணியில்
புகைப்படப்பிடிப்புக்காக
வந்திருந்த பெயர் அறியவே முடியாத
யுவதி
நீ…….ண்….ட கொசுவங்கள் கொண்ட
ஆரஞ்சுப் பாவாடையை
தோகையாய் விரித்து உயர்த்தி
கடலை ஒருகணம்
ஆரஞ்சாய் காட்டினாள்.
மூளையில் படரந்த ஆரஞ்சு நிறத்தின்
முன்னால்
நான் அந்த எருமையாகி
அங்கேயே
மரித்துக்கிடந்தேன்.

000

காகங்களே
காகங்களே
பசிகொண்டு
என்னைக் கொத்திப்போய்விடுங்களேன்.

000

மந்தையிலிருந்து விலகி
உணவே கிடைக்காத
மரணப்பாழ் பனிவெளிக்குள்
சட்டென்று முடிவெடுத்ததுபோல
திரும்பி நடந்து தனீயாக
மறைந்துபோன
அந்த அண்டார்டிக் பெங்குயினுக்கு
காந்தி
என்று பெயரிட்டால்
என்ன?

000

நீரிழிவுக்காக அடிக்கடி
மாத்திரை வாங்கும்
அப்பலோ மருந்தகத்தில்
பணியாற்றுபவளிடம்
தொடரும்
என் உரையாடல் முயற்சியாய்
காலை உணவு எப்போதென்று கேட்டேன்
காலை உணவு சாப்பிடுவதில்லை என்று
தலையை ஆட்டினாள்.
காரணம் கேட்டேன்.
லிப்ஸ்டிக் பூசிய
சிப்பி உதடுகளைத் திறக்காமல்
சொல்லமறுத்து
வெறுமனே சிரித்து கதவை
அன்றைக்கும் மூடிவிட்டாள்.
அழகே
அழகே
எனக்கு மட்டும் ஏன்
இப்படி வேளாவேளைக்குப் பசிக்கிறது?

000

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss