எடிசன் புன்னகைக்கிறார்

நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி
சுவரில் கைவைத்துத் தடவியபடி
அறையின் விளக்கை எரியவைக்க முயற்சிப்பவனிடம்
அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது
அந்த நேரத்தில்போய்
சரி தவறு என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை
இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்
போனால் போகட்டுமென
தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்
அதுதான்
தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு

0

பொருத்தப்பாடு

உண்மையில் அவ்வளவு தைரியம் யாருக்குள்ளது
என்றுதான் நிமிர்ந்து நோக்கினேன்
ஆனால் பாரேன் வேடிக்கையை
இவ்வளவுதூரம் நியாபகம்வைத்து
காலம்தாண்டியும் தேடிவந்து
கனக்கச்சிதமாய் என் கழுத்தை மட்டும் குறிவைத்து
இரக்கமின்றி உரசிச்செல்லும் ஒரு துரோகத்தின் கைப்பிடி   அங்கு சுற்றி, இங்கு சுற்றி
கடைசியில்
எனது கரங்களுக்கே பொருத்தமாக அமைந்துவிட்டது

0

நெற்றியில் உறுத்தும் கண் 

அதோ பார், ”ராத்திரியில் தெரியும் விண்மீன்கள்தான்     
மழையைத் தடுத்து வைத்திருக்கின்றன”
அல்லது இப்படியும் கூறிப்பார்க்கலாம்
”பெய்யாமல் விடுபட்ட துளிகளே நட்சத்திரங்களாய் நிற்கின்றன”
அவன் கூறியதை யாரும் கேட்கவில்லை
தன் கண்களைத் தானே பொத்திக்கொண்டு  
”எங்கே நான் யாரெனக் கண்டுபிடி பார்ப்போம்” என்கிறான்
யாராலும் முடியாத காரியமல்லவோ அது
மீண்டும் பசித்தது.
தலைசுற்றிக் கிறக்கமாய் வர
அங்கே அவன்முன்னே உறக்கம்-தராத உடலைவிட்டு
தனித்துவந்த விழியைப்போல்
அலங்கார சிப்பியொன்று இமைகள் இறுக்க மூடிக்கிடந்தது
அதைக் கையிலெடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் 
தன்நெற்றிமீது வைத்துக்கொண்டு சட்டென திறந்தான்
ஒரு நொடியில்,
ஒரே நொடியில்
ஒட்டுமொத்தமும் மாறியதுபோலிருந்தது
யார் கண்டது
ஒருவேளை அவன் நம்புவதுபோல்
அதுவே உண்மையாகவும் இருக்கலாம்

0

சந்தேகத்தின்மீது டார்ச் அடித்துப் பார்க்கையில்

எல்லா பூதக்கண்ணாடிகளும் ஒருவிழியோடுதான் பிறக்கின்றன
இனி யாதொன்றும் தூரமில்லையென
எந்த திட்டங்களும் தன்னிடம் பலிக்காதென.
நானும் கவனிக்கின்றேன்
இவ்வளவு நாட்களாக இல்லாமல்
திடீரென்று இத்தகு நெருக்கமாகப் பழகும் இவர்களெல்லாம்
யாரென….
சந்தேகத்தின்மீது டார்ச் அடித்துப் பார்க்கும்போதெல்லாம் காரணங்கள் எதுவும் புலப்படுவதில்லை
மாறாக வெளிச்சம்பட்ட சுவரின்மீது
சிறு நிலவொன்று
எவரின் பிடியிலிருந்தோ தப்பியோடுகிறது 

பெரு விஷ்ணுகுமார்

ழ என்ற பாதையில் நடப்பவன்’ கவிதைத்தொகுப்பின் ஆசிரியர். கவிதைகளும், சிறுகதைகளும் சமகாலத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்

9 Comments

  1. உன் கவிதையை அறிந்து கொள்ள உள்ள அறிவு போதவில்லை … உலக அறிவு தேவை … தேடி கண்டு அறிந்து கொள்வேன் ஒருநாள்… சனீஸ்வரன் அன்பு…

  2. புன்னகைக்கும் எடிசனும் நெற்றியில் உறுத்தும் கண்ணும் அருமை.

  3. கவிதையின் சூட்சுமம் வலுவாக கைபிடித்து எழுதி காட்டுகிறது நவீனமாக கவிதையின் நடணத்தில் சொற்கள் ஒரு துள்ளல் துள்ளுது தங்களின் கவி வடிவம் மீது அருமை

  4. கவிதையின் சூட்சுமம் வலுவாக கைபிடித்து எழுதி காட்டுகிறது நவீனமாக கவிதையின் நடணத்தில் சொற்கள் ஒரு துள்ளல் துள்ளுது தங்களின் கவி வடிவம் மீது அருமை

உரையாடலுக்கு

Your email address will not be published.