
‘அப்பா, புனித வெள்ளியன்று உடலில் காயங்களுடன், வலியும் வேதனையுமாய், எதற்காக யேசு ரத்தம் சிந்தி சிலுவையை சுமந்தார்? நானும் அப்படி ஒரு சிலுவையை சுமக்கும் நாள் வருமென்று அண்ணன் சொல்வது உண்மையா அப்பா?’ என்றான் டிம்.
‘அய்யோ. நான் அப்படி சொல்லவேயில்லை’ பதறி மறுத்தான் ஃபில்.
காட்டுப் பாதையில் புழுதியைக் கிளப்பியபடி விரைந்தது ஜீப். இளைய மகன் டிம், நாள் முழுவதும் கேட்பதற்கு ஓராயிரம் கேள்விகளை வைத்திருப்பான். ஆறு வயது நிரம்பிவிட்டது. அவனுக்கு வானத்தில் மின்னுகின்ற அத்தனை நட்சத்திரங்களையும் எண்ணி விட ஆசை. மண்ணில் மலர்கின்ற அத்தனை பூக்களின் பெயரும் தெரிய வேண்டும். ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு தேன்துளியை தேடிச் செல்லும் வண்ணத்துப்பூச்சி போல, ஒரு கேள்வியிலிருந்து மற்றொரு கேள்விக்கு பறந்துவிடுவான்.
‘புனித வெள்ளியன்று மரித்து, பின் ஈஸ்டர் ஞாயிறு மீண்டும் யேசு பிறந்தார். கிறிஸ்துமஸ் அன்றும் அவருக்கு பிறந்தநாள். அப்படியென்றால் யேசுவுக்கு இரண்டு பர்த்டே அல்லவா, அப்பா?’ என்றான் டிம்.
ஃபில் சிரித்து விட்டான்.
‘ஆம். இரண்டு பர்த்டே பார்ட்டி. இரண்டு பர்த்டே கேக். உனக்கு பொறாமை தானே?’ சீண்டினான் ஃபில்.
ஸ்டியரிங்கை வளைத்தபடி புன்னகைத்தேன். நான்கு நாட்கள் முன்புதான் எனது பிறந்தநாள். இப்பொழுதெல்லாம் பர்த்டே கொண்டாட்டங்களை தவிர்த்துவிடுகிறேன். அதற்கு விரயமாகும் நேரத்தையும் பணத்தையும் ஊழியத்தில் செலவிடுவதே உத்தமம்.
தொடுவானில் சூரியன் மறைந்து கொண்டிருக்க, அந்தி மேகங்களில் பொன் தீற்றல். மார்கழி முடிந்து தைப் பிறந்த பிறகும் பனிக்காற்று கடுமையாய் வீச, பாதையின் இருபுறமும் புல்வெளிகள், புதர்கள், மரங்கள் கரும்பச்சையாய் தொடர்ந்தன. தூரத்தில் ஒரு கும்பல் யாருக்கோ அந்திமக் காரியங்களை முடித்துவிட்டு கொள்ளி வைக்க, தீ ஜ்வாலைகள் விண்ணை நோக்கி பசியுடன் எழுந்து ஆனந்த நடனமாடின.
‘அப்பா, சிலர் பிணங்களை எரிக்கிறார்கள். நாம் புதைக்கிறோம். எது சரி? எரிப்பதா? புதைப்பதா?’ என்றான் டிம்.
‘ஓ ஜீசஸ். கொஞ்சம் நேரம் சும்மா இருடா டிம். என்னால் புத்தகம் வாசிக்க முடியவில்லை’ சலித்துக்கொண்டான் ஃபில்.
‘ஓடுகிற வண்டியில் புத்தகம் படிக்க கூடாதென அம்மா சொன்னாளே!’
‘இது காமிக்ஸ் புத்தகம். படங்கள் நிறைந்தது.’
‘ஃபிலிப். டிமோதி சொல்வது சரி. இருட்டிவிட்டது. புத்தகத்தை மூடி வை. பேசிக்கொண்டே பயணிப்போம்’ என்றேன்.
‘டிம். உன் கேள்வி மரபு சார்ந்த ஒன்று. எகிப்திய ‘மம்மி’ பற்றி படித்தோமே, நினைவிருக்கிறதா? எகிப்தியர்கள் இறந்த சடலங்களை ‘மம்மி’யாக பாடம் செய்து பிரமிடுகளை கட்டினர். மனித உடல் ஒரு விதை போன்றது. பூமியில் விதைத்தால், இறந்தவர்கள் மீண்டும் துளிர் விடுவார்கள் என்பது நம்பிக்கை. இந்திய மரபில் சூரிய வழிபாடுகள் அதிகம். ஒரிசாவில் பார்த்த கொனார்க் கோவில் மாதிரி. நெருப்பு விண்ணை நோக்கி எழுவது. புதைத்தாலும், எரித்தாலும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நாகரீகங்கள் மறுபிறவியில் நம்பிக்கை வைத்தது எத்தனை ஆச்சரியமான ஒன்று!’ என்றேன்.
‘யேசு அப்படித்தான் மீண்டும் பிறந்தாரா அப்பா?’ என்றான் டிம்
‘மறுபிறவி வேறு. உயிர்த்தெழுதல் வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளாதே’ என்றான் ஃபில்.
‘ஆம். வேறு ஒரு உடலில் பிறப்பது மறுபிறவி. மரித்த உடலிலேயே மீண்டும் பிறப்பது உயிர்த்தெழுதல். மானுடம் அது செய்கின்ற பாவங்களை உணர்ந்து, மன்னிப்பு கோரி, உடலையும் மனதையும் புனிதமாக்கி ஒவ்வொரு கணமும் உயிர்த்தெழுவதற்கு எத்தகைய ஒரு நல்வாய்ப்பு!’ என்றேன்.
‘சென்ற ஆண்டு ஊட்டியிலிருந்து தஞ்சாவூர் வரைக்கும் போன எங்கள் பள்ளி சுற்றுலாவில் கண்ட தஞ்சை பெரிய கோவில் உயரமானதா? அல்லது இங்கு ஒரிசாவில் பார்த்த கொனார்க் கோவில் பெரியதா?’ கேள்விச்சரங்களை மீண்டும் தொடுக்க ஆரம்பித்தான் டிம்.
‘உலகிலேயே உயரமான பேராலயம் எது தெரியுமா டிம்? அது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள ‘Sagrada Familia’ பேராலயம்தான். அதை டிசைன் செய்தவரின் பெயர் கெளடி. அந்த பேராலயத்தை விட உயரமான கட்டிடங்களை உருவாக்கும் வாய்ப்புகள் பல கிடைத்தும் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டார். மனிதர்களின் கட்டிடங்கள் யாவுமே பெருங்கோவிலுக்கு ஒரு படி கீழே இருப்பதுதான் நியாயமென்று நினைத்தார் கெளடி’ என்றான் ஃபில்.
‘ஆம். வியக்க வைக்கும் ஆளுமை கெளடி. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். மதம் என்பது மனிதர்களை இணைக்கும் கருவி மட்டுமே. புதைத்தல், எரித்தல், சடங்கு, சம்பிரதாய ஆராய்ச்சிகளை தாண்டி, துயரத்தில் அவதிப்படும் உயிர்களுக்கு தொண்டு செய்தலே மகத்தானது. பல தலைமுறைகளாக முன்னேற்றம் எதுவுமின்றி இருட்டில் வாழும் அவலநிலை பூமியில் இன்னமும் தொடர்கிறது. அங்கெல்லாம் நம்பிக்கையுடன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். மெழுகு போல் உருகி வெளிச்சம் தந்து வாழ்வதில்தான் மீட்பு’ என்றேன்.
‘அப்பா, மின்மினிப்பூச்சி. மின்மினிப்பூச்சி. வண்டியை நிறுத்துங்கள். ப்ளீஸ்’ கெஞ்சினான் டிம்.
ஜீப்பை நிறுத்திய மறுகணம் டிம், ஃபில் இருவரும் எகிறி குதித்து ஓடினார்கள். நீண்ட புதர்வெளியெங்கும் மின்மினிப்பூச்சிகள். ஆயிரக்கணக்கில். லட்சக்கணக்கில். வைரத் துகள்களுக்கு சிறகு முளைத்தது போல. விண்மீன்கள் வழி தவறி திண்டாடுவது போல. இருண்ட காட்டில், அணையாமல் தெறித்து சிதறிய மத்தாப்புகள். சுடர்களால் புள்ளி வைத்து, நம்பிக்கையால் கோடு இழுத்து முடிவிலியாய் பறந்து விரிந்த ஒளிக்கோலங்கள். கறுப்பு வெள்ளை இரண்டு வண்ணங்களை மட்டுமே குழைத்து தீட்டிய ஒளிச்சித்திரம். இறைவனின் மகிமையை போற்றி ஒலித்த மௌன கீதங்கள். கடவுள் ஒரு கிருபைக்கடல் என ஓயாமல் நடனமாடிய ஒளி அலைகள். தூக்கணாங்குருவிகளே, இத்தனை மின்மினிப்பூச்சிகளை வைத்து அலங்கரிக்க உங்கள் அரண்மனையில் இடம் உள்ளதா? புற எழிலுடன் சேர்ந்து எங்கள் அகமும் ஜொலித்தது. மின்மினிப்பூச்சிகள் எங்கள் மூவரையும் முத்தமிட்டு ஆசிர்வதித்தன.
‘அம்மாவும் அக்காவும் நம்முடன் வந்து இருக்கலாம். கண் கொள்ளா காட்சி. வசீகரமாய் விரிகிறது’ அசைவற்று நின்றுவிட்டான் ஃபில்.
‘தீப்பெட்டி, போத்தல்களில் சில மின்மினிப்பூச்சிகளை அடைத்து எடுத்துச்செல்வோமா?’ என்றான் டிம் .
‘வேண்டாம். இந்த பிரபஞ்சத்தின் பேரழகை கைப்பற்றி விடலாம் என்று நினைப்பதே ஒரு முட்டாள்தனம்தான் இல்லையா? இந்த காட்சியை விழிகளால் உள்வாங்கு. இந்த அனுபவத்தை ஒரு ஓவியமாக, கவிதையாக அல்லது இசையாக வெளிப்படுத்தி அம்மாவுக்கும், அக்காவும் இந்த அற்புதத்தை கடத்து’ என்றேன்.
‘அப்பா, பசிக்குது’ வயிற்றை தடவினான் டிம்.
மின்மினிப்பூச்சிகளை வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள போர்டிங் ஸ்கூலில் படிப்பதால், இருவரையும் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. ரொட்டியை பிய்த்து இருவருக்கும் ஆசையாய் ஊட்டிவிட்டேன். பழச்சாற்றை குடித்தபடி ‘நேற்றிரவு அம்மா சமைத்த உணவின் சுவை நாக்கில் நிற்கிறது. மறக்க முடியாத விருந்து’ என்றான் ஃபில்.
‘இங்கேயே டென்ட் போட்டு தூங்கி விடலாமா?’ டிம்.
‘இது காடு. அருகில் மனோகர்ப்பூர் கிராமம் உள்ளது. இரவு அங்கே உறங்கிவிட்டு, நாளை காலை வீடு போய்விடலாம்’ என்றேன்.
எங்கள் அருகே சில நத்தைகள் நிதானமாய் நகர்ந்து கொண்டிருந்தன. ஏற்கனவே ஒரு கூட்டம் கடந்து சென்றிருக்க வேண்டும். கைவிளக்கு வெளிச்சத்தில் அவை விட்டுச்சென்ற தடங்கள் வெள்ளிக்கோடுகளாய் ஒளிர்ந்தன. சூரிய ஒளி பட்டு நத்தையின் பாதைகள் சில சமயம் வானவில் போல ஒளிர்வதுண்டு. ஒருமுறை ‘ரெயின்போ ஸ்நெயில்’ பற்றி நான் கூறியதை டிம்மும் ஃபில்லும் நம்பவேயில்லை. தோட்டத்தில் ஊர்ந்து சென்ற நத்தையின் ஓட்டின் மேல் ஸ்கெட்ச் பேனாவால் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் தீட்டி ‘ரெயின்போ ஸ்நெயிலை’ கண்டுபிடுத்துவிட்டதாக தூக்கி வந்து காண்பித்தார்கள். கோடை விடுமுறையின் போது ஆஸ்திரேலிய கடற்கரையில், வானவில்லை மிஞ்சும் விதமாக வண்ண வண்ண சிப்பிகளையும், சங்குகளையும், கிளிஞ்சல்களையும் கண்டெடுத்த பிறகே ‘ரெயின்போ ஸ்நெயில்’ இருப்பதற்கான சாத்தியத்தை நம்பினார்கள்.
‘ஒரு வகையில் நாமும் இந்த நத்தைகள் போலத்தான். போகும் இடமெல்லாம் வீட்டை சுமந்து செல்கிறோம். நத்தைக்கு ஓடு. நமக்கு ஜீப்’ என்றேன்.
‘யேசுவுக்கு சிலுவை’ என்றான் ஃபில்
‘அண்ணன் சொல்வது எதுவுமே எனக்கு புரிவதில்லை’
‘சிலுவை என்றால் என்ன? இன்றைக்கு அது ஒரு குறியீடு. பிறவிக்கடலில் நீந்தி தத்தளிக்கும்போது கிடைக்கும் மரக்கட்டையே சிலுவை. சொல்லப்போனால் நமது உடலே ஒரு சிலுவைதான். உடல் என்ற சிலுவையில் ஆன்மா அறையப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவி வாழ்நாள் முழுவதும் உடலை சுமந்து அலைகிறது.’ என்றேன்.
‘ஆனால் ஒரு தொழுநோயாளிக்கு உடல் என்பது சீழ் பிடித்து சீரழியும் பொருளாகி விடுகிறதே! உடலே சிலுவையென்றால் அவர்கள் சுமப்பது பாவத்தையா?’
ஃபில் அப்படி ஒரு கேள்வியை எழுப்புவான் என எதிர்பார்க்கவேயில்லை. அதை கிரகித்து பதில் கூற என்னை திரட்டிக்கொண்டிருந்தேன்.
‘அப்பா, நீங்களும் அம்மாவும் ஏன் இப்படி தொழுநோயாளிகளுடன் இங்கே ஒரிசாவில் போராட வேண்டும்? குஷ்டத்தால் மாறிக்கொண்டே இருக்கும் உடலுக்கு துணி தைக்கிறீர்கள். பழைய டயர்களை விலைக்கு வாங்கி அவர்களுக்கு செருப்பு செய்கிறீர்கள். மருந்து போடுகிறீர்கள். ரத்தம், ரணம், சீழ்களால் பாழாகிறது நம் வாழ்க்கை. பேசாமல் நாம் ஆஸ்திரேலியாவுக்கே போய்விடலாமே?’
‘ஃபில், நாம் காந்தியை பற்றி நிறையவே பேசியுள்ளோம். லண்டனில் படித்து, தென்னாப்பிரிக்காவில் வேலை செய்த அவர் வெளிநாட்டிலேயே வாழ்ந்திருக்கலாமே! காந்தி ஏன் இந்திய மண்ணில் சேவை செய்து உயிரை விட்டார்?’
‘காந்தி பிறந்தது இந்திய மண்ணில். நீங்கள் பிறந்தது ஆஸ்திரேலிய மண்ணில். காந்தியை பின்பற்றி நமது வேர்களை நோக்கி செல்வதென்றால் நாம் ஆஸ்திரேலியா போவதுதானே சரி?’
நான் மீண்டும் மெளனமானேன். டிம் எனது மடியில் தலை வைத்து உறங்கிவிட்டான். அவனை தூக்கிக்கொண்டு ஜீப்புக்கு வந்து மனோகர்ப்பூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.
‘ஃபில், அந்த நத்தையை போல நீ ஆஸ்திரேலியாவை முதுகில் சுமந்து அலைகிறாய் என்று நம்புகிறேன்’.
ஃபில் அமைதியாகவே இருந்தான்.
‘ஒன்றை கவனித்தாயா ஃபில்? ஒரு நத்தையின் புறப்பாடு அதன் வீட்டிலிருந்து தொடங்குகிறது. இலக்கு சென்றடையும்போதும் அதன் முதுகில் வீடுதான் உள்ளது. புறப்பாடும் இலக்கும், தேடுதலும் கண்டடைதலும், துவங்கிய இடத்தில்தான் என்றால் பயணத்தின் அர்த்தமென்ன?’
‘புரியவில்லை’ என்றான் ஃபில்.
‘நான் ஏற்கனவே சொன்னேன். பரிசுத்த ஆவி நமக்குள், நம் அருகிலேயே உள்ளது. இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவது வீண் வேலை. இந்த சூட்சுமத்தை புரிந்துகொண்டால் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், பூமியில் எந்த இடமும் ஒன்றுதான்’
‘தொழுநோயாளிகள் பற்றி கேட்டாய். கடவுளின் தரிசனம் என்பது எப்பொழுதும் சந்தோஷமான காரியம் மட்டுமே அல்ல. கடவுளின் வருகை மரணத்தின் வழியாகவும் நிகழக்கூடும். ஒரு தொழுநோயாளி பிழைத்தாலும் சரி மரித்தாலும் சரி, இறுதியில் கடவுள் தரிசனம் நிச்சயம் உண்டு. தொழுநோய்க்கு தொண்டு செய்வதின் மூலம் நான் தினந்தோறும் கடவுளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன்’
‘தொழுநோயாளிகள் தங்கள் உடலையே புழுவாக வைத்து தூண்டில் போடுகிறார்கள். சின்ன மீன் கிடைத்தால் அதை தின்று பிழைத்து விடுகிறார்கள். சில சமயம் பெரிய சுறா மீன் வந்து தூண்டில் போடுபவரையே விழுங்கி விடுகிறது. கடவுள் தருகின்ற தரிசனங்கள் எண்ணற்றவை’
மூன்றாம் பிறை வானத்தில் உயர்ந்து பிரகாசமாய் ஜொலிக்க, குளிரின் தாக்கம் அதிகமானது. மனோகர்ப்பூர் கிராமம் உள்ளே நுழைந்து ஜீப்பை நிறுத்தினேன்.
டிம் தூக்கத்தில் பிதற்றினான். ‘இன்று வெள்ளிக்கிழமை. ஞாயிறுதோறும் உயிர்த்தெழுதல் நிகழ்வை கொண்டாடுவது போல, ஒவ்வொரு வெள்ளியன்றும் நாம் புனித வெள்ளியை நினைக்க வேண்டுமா அப்பா?’
டிம் மீது போர்வையை நன்றாக இழுத்து மூடினேன். தலையணைகள் வைத்து அருகருகே அணைத்தபடி நாங்கள் மூவரும் ஜீப்புக்குள் படுத்து உறங்கினோம்.
000
ஆழ்துயிலுக்கும் நனவுக்கும் நடுவில் வருவதே கனவு. முதலில் அதை கனவு என்றுதான் எண்ணினேன். ஆனால் அது ஆயிரம் கோடி சூரிய ஒளி. லட்சக்கணக்கான மின்னல்கள். விழிகள் மூடிய ஆழ்துயில் இருட்டிலும் இந்த பிரகாச அனுபவத்தை எப்படி உணர்கிறேன்? அறிவால் இதை புரிந்துகொள்ள எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்து தூக்கம் கலைந்துவிடுகிறது. அறிவை உதிர்த்துவிட்டு மெளனமாய் இந்த ஒளி வெள்ளத்தில் மிதப்பதே உன்னதம். வெளிச்சத்தின் அதிர்வுகளை தாள முடியாமல் துள்ளியது உடல். அந்த பேரொளி வெடித்து சின்ன சின்ன தீப்பந்தங்களாகி நெருங்கி வந்தது. மனிதர்கள் பேசுகின்ற ஒலியுடன் சேர்ந்து ‘அப்பா அப்பா’ என்ற குரலும் கேட்டது. ஃபில் என்னை உலுக்கிக்கொண்டிருந்தான். கதகதப்புக்காக என்னை கட்டியணைத்திருந்த டிம்மின் உறக்கம் இன்னும் கலையவில்லை.
பத்து இளைஞர்கள், ஏழெட்டு சிறார்கள், சுமார் பதினெட்டு பேர் ஜீப்பை சுற்றி வட்டமாய் வளைத்து நின்றனர். கூர் சீவிய மூங்கில் கழிகள், இரும்பு ஆயுதங்கள், தீப்பந்தங்களை கைகளில் ஏந்தியபடி அருகில் வந்தனர். இவர்களில் சிலரை நானறிவேன். இந்த கூட்டத்தின் தலைவன் தாராசிங். உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒரிசா பழங்குடி மக்களுக்கு ஹிந்தி கற்றுக்கொடுக்க வந்தவன். அவனருகில் சான்ச்சல். சான்ச்சலுக்கு பதிமூன்று வயது இருக்கலாம். அவனது தாய் கர்ப்பிணியாக மகப்பேறு சிகிச்சைக்கு வந்தது, சான்ச்சல் பிறந்தது, அவனை கைக்குழந்தையாக தூக்கியது அனைத்தும் நினைவுக்கு வந்தது. இன்று கையில் ஆயுதத்துடன் நிற்கிறான். ஜீப்பை விட்டு இறங்கி அவர்களுடன் பேசுவதற்காக நகர்ந்தேன். இரும்பு ஆயுதம் ஒன்று பெரும் விசையுடன் என் கால் எலும்பை தாக்கியது. எலும்பு முறியும் ஓசை கேட்டது. வலியின் வீச்சு மூளையின் நரம்பில் தெறித்தது.
‘மாதர்சோத். காடி சே பாஹர் மத் ஆவோ. வர்னா, லிப்ஸ்டிக் லகாகே காண்டு மார் தூங்கா சாலே’ தாராசிங் குரலை உயர்த்தினான்.
‘ஓய் சோட்டா பீம். ரஸ்ஸி லேகே ஆனா. படா பீம், மிட்டி கா தேல் ஜ்யாதா ஜரூரத் படேகா. ஜல்தி ஜா’
எனக்கு இவர்கள் பாஷை புரியும். கயிறும் எரிபொருளும் கொண்டு வர கட்டளையிட்டான் தாராசிங். சூழலின் தீவிரமும் வேட்டையின் வெறியும் தீயாய் பரவியது. இறைவா, என் குழந்தைகளுடன் இந்த அக்னி பரிட்சையில் மாட்டிக் கொண்டேனே! நான் மட்டும் தனியாக வந்திருக்கலாமே! நம்பிக்கையுடன் மற்றொரு காலை எடுத்து ஜீப்புக்கு வெளியே வைத்தேன். கூரான மூங்கில் கழியால் முகத்தில் தாக்கப்பட்டேன். என் வலது கன்னத்தில் சதை கிழிந்து குருதி வெளிப்பட்டு டிம் முகத்தில் சூடாய் வழிந்தது. ஒரு கொடிய கனவை கண்டவனாய் உறக்கம் கலைந்து அலறினான் டிம்.
‘சபாஷ் மகேந்திரா. சஹி மாரா. தோஸ்தோன். மித்ரோன். தியான் சே சுனோ. யே விதேசி ராவண் ஹை. யே ஜீப் லங்கா ஹை. அப் லங்கா-தகன் ஹோனே வாலா ஹை. போலோ, ஜெய் பஜ்ரங் பலி’ நரம்பு புடைக்க கத்தினான் தாராசிங்.
‘ஜெய் பஜ்ரங் பலி’ நள்ளிரவில் நான்கு திசையிலும் அந்த முழக்கம் எதிரொலித்தது.
குருதி வழிந்து எனது வலது கண்ணில் நிரம்பி, ஒரு பக்கம் பார்வை மறைந்தது. வலது கன்னம் வீங்கி எரிந்தது. சொற்கள். சொற்கள். சொற்கள். விவிலியத்தின் சொற்கள் என்னுள் பொங்கியெழுந்தன. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு”
சட்டென்று டிம்மையும் ஃபில்லையும் தூக்கி ஜீப்பிலிருந்து வெளியே தள்ளிவிட்டு ‘ஓடுங்கள்’ என்றேன்.
‘சான்ச்சல், டிம்மும் ஃபில்லும் உனக்கு சகோதரர்கள். இருவரையும் தேவாலயத்துக்கு இழுத்துக்கொண்டு ஒடு. நான் இங்கேயே அமர்ந்து உன் கூட்டம் சொல்வதை கேட்கிறேன்’ என்றேன்.
ஒரு கண்ணில் ரத்தமும் மறு கண்ணில் கண்ணீருமாய் மன்றாடிய என்னை பார்த்த சான்ச்சல், மந்தையிலிருந்து விலகி சென்ற ஆட்டுக்குட்டி போல மிரண்டு குழம்பினான். அவன் கையிலிருந்த ஆயுதம் நழுவி கீழே விழுந்தது. எனக்குள் சிறு வெளிச்சம் துளிர்விட்டது.
‘மூவரும் தேவாலயம் நோக்கி ஓடுங்கள். கர்த்தர் உங்களை ரட்சிப்பார்’ என்று கூவினேன்.
கூர்மையான ஆயுதம் ஒன்றை யாரோ என் முதுகில் ஓங்கி குத்தினார்கள். அது என் உடலுக்குள் பயணித்து மார்பை பிளந்து வெளியே வந்தது. விலா எலும்புகள் சிதைந்து ரத்தம் பீறிட்டு வழிந்தோடியது.
‘அபேய். பச்சூ, பேன்ச்சோத். ஹட் டர்போக் சாலே.’ என்றவாறு சான்ச்சலை தள்ளிவிட்டு டிம்மையும் ஃபில்லையும் ஜீப்புக்குள் தூக்கி வீசினார்கள். எங்கள் மூவரையும் ஜீப்புடன் கயிற்றால் பிணைத்து கட்டினார்கள். சப்தம் கேட்டு தூக்கம் கலைந்து கிராமத்து ஜனங்கள் கூட ஆரம்பித்தனர். தடுக்க முயன்ற ஒரிரு நபர்களை தடியால் அடித்து விரட்டினான் தாராசிங். பெட்ரோல், டீசல், கெரசின் என்று கைக்கு கிடைத்த எரிபொருட்களை எல்லாம் எங்கள் மீதும் ஜீப் மீதும் ஊற்றினார்கள். ஃபில் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்க, டிம் ஓலமிட்டு அழுகையை தொடர்ந்தான். மகளையும், மனைவியையும் நினைத்துக்கொண்டேன்.
‘க்ளாடி. நானில்லாத வாழ்க்கை உனக்கு சிரமமாக இருக்கலாம். இங்கே எங்களுக்கு நிகழ்வதை கேட்டு கலங்கி நின்று விடாதே. தொழுநோயாளிகளை கைவிட்டு விடாதே. நமது பணியை நீ முன்னெடுத்து செல்வாய் என்று நம்புகிறேன். இவர்களை மன்னித்துவிடு. அறியாமல் பாவம் செய்கிறார்கள். பாவ மன்னிப்பு மட்டும் இந்த மண்ணில் இல்லாது போனால், மானுடம் தன் வாழ்வை தொடர வழிதான் ஏது? இந்த ‘சான்ச்சல்’ நிச்சயம் ஒரு நாள் தேவாலயம் வருவான். அவனை நம் சமூகம் ஏற்று கர்த்தரின் வழியை காண்பிக்க வேண்டும். கர்த்தர் பரிசுத்தர்’
‘என் தேவனே! நீ கூறிய வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து, உள்ளத்தை தூய்மைபடுத்தி, மனித குலம் முன்னகர்கிறது. ஆனால் உன் சிலுவைப்பாடு அனுபவத்தை உடல் வழியாக மீண்டும் செய்து காட்டும் பாக்கியம் சிலருக்கே அமைகிறது. நாங்கள் மூவரும் இந்த சத்திய சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால் அதனால் எங்களுக்கு மகிழ்ச்சியே. இந்த வேள்வித் தீயில் உடலையே அவியாக இடுவதற்கு நாங்கள் தயார். சொற்களை செயல்களாக்கும் நேரம் நெருங்கிவிட்டது’.
என் பிஞ்சுகள் இரண்டையும் இரு கைநீட்டி இறுக்கி அணைத்துக்கொண்டேன்.
யாரோ வீசிய நெருப்பால் மெழுகுவர்த்திகள் சுடர்விட்டு எரியத் துவங்கின. இரண்டு சிறிய மெழுகுவர்த்திகள். ஒரு பெரிய மெழுகுவர்த்தி.
‘என் தேவனே! எரிந்து உருகி வழிகின்ற மூன்று மெழுகுவர்த்திகள் இதோ உனக்கு முன்பாக. இந்த காணிக்கையை ஏற்றுக்கொள். இனி வரும் பயணங்களில் மானுடம் இருளை எதிர்கொள்வதற்கு இந்த ஒளி பயன் தரட்டும். கீழ்மை, சுயநலம், ஆணவத்தை இந்த நெருப்பு சுட்டெரிக்கட்டும். இந்த மெழுகுவர்த்தி எரிந்து முடியும் வரை நான் இங்கு இருப்பேனா தெரியவில்லை. ஆனால் இந்த நெருப்பின் துளியேந்தி ஒளிமயமான இன்னொரு பயணத்தை தொடங்கியிருப்பேன் ‘
ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் ‘என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்றான் டிம்.
நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.
‘எல்லாம் முடிந்தது’ என்றேன் நான்.
‘தந்தையே, உம்முடைய கைகளில் என் ஆவியைப் ஒப்புவிக்கிறேன்’ என்றான் ஃபில்.
டிம் கேட்ட கடைசி கேள்விக்கு ஒரு பதிலை கூறிவிட என் தலையை திருப்பி அவனை பார்த்தேன். ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் திருவிழாவுக்காக குடில் அலங்காரம் செய்யும்போது, தொட்டிலில் புன்னகை பூக்கும் குழந்தை யேசுவின் முகத்தை போலவே கேள்வியும் பதிலுமாய் நிறைந்திருந்தது டிம்மின் முகம்.
000

வெற்றிராஜா
புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















சிறப்பான சிறுகதை. தந்தையும் மகன்களுக்குமான உரையாடல் மிக இயல்பாகவும் தத்துவார்த்தமாகவும் அழகாக அமைந்துள்ளது.
மனதை கனக்க வைக்கும் கதையை மனம் தடுமாறாமல் எழுதிய திறத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் வெற்றிராஜா…
மின்மினியின் உற்சாகத்தோடு ஒளிப்புள்ளிகளாய்த் தொடங்கும் சிறுவர்களின் உரையாடல் இயேசுவின் வாழ்வை விவரித்து இறுதியில் அவர்களது வன்முறையான மரணம் வழியாக இலக்கியத்தில் உயிர்த்தெழுகிறது. உணர்வுகள் சரியாக விவரிக்கப்பட்டு வாசிப்பின் இறுதியில் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கும் சிறுகதை.
மெழுகுவத்திகளை வெறியர்கள் விரையம் செய்திருக்கலாம், ஆனால் Staines-ன் ஊழிய ஜோதி அனையாது. வெறுப்பை ஒழித்து, அன்பை பெருக்குவதற்கு , இது போன்ற பல கதைகள் (கற்பனை+ஆவணம்) காலத்தின் அவசியம். அதை நன்குணர்ந்து இந்த படைப்பை அருளிய வெற்றிராஜாவிற்கு எனது நன்றிகள்.
அன்பே சிவம்!
எனக்கு உங்களின் எழுத்துக்கள் எல்லாம் ஒரு காட்சி போல (ஒரு திரைப்படத்தின் visuals) உணர்த்தியது. அருமையான திரைக்கதை வடிவில் ஒரு மானுடவியல் !!!!
பல வருடங்களுக்கு முன்பு சிறு வயதில் ஒரு சோக செய்தியாக கேட்ட இந்த நிகழ்வு லேசாக நினைவிருக்கிறது. இன்று உங்களின் கட்டுரை மூலம் அந்த நிகழ்வுகளை உயிரோட்டமாக உணர்ந்தேன். மீண்டும் ஒரு உயிர்த்தெழுதல்
கடைசி பத்தி முடிக்கும் பொழுது கண்ணில் தானாக தோன்றிய கண்ணீர் துளிகள் அந்த உயிர்களுக்கு சமர்ப்பனம்🙏
I truly appreciate your concern for justice and conscience behind the story. From my Catholic faith, I understand Christ as inseparable from the ONE Church He founded and can be fully known Only through the One True Church. Still, I trust that sincere searching, when done humbly, can be a place where Christ works. May you find The True Christ and the True meaning of our life and existence. Thank you for sincere endeavours.
நாம் அனைவரும் ஏதாவது ஒரு சிலுவையை சுமந்து செல்கிறோம். சில நேரங்களில் சரியான காரணங்களுடனும், பெரும்பாலான நேரங்களில் காரணம் தெரியாமல். நான் இதுவரை படித்ததிலேயே மிகவும் கடினமான கதைகளில் இதுவும் ஒன்று. வெற்றி ராஜா இந்தக் கதையை பல சம்பவங்களைச் சேர்த்து எழுதியுள்ளார், ஒவ்வொன்றும் அதன் சிலுவையைத் தழுவுகின்றன. மகாத்மா குறிப்பிட்டது போல, நமது மதம் மனிதநேயமாக இருக்க வேண்டும், நமது கடவுள் இந்த நம்பிக்கையை ஆதரிக்க வேண்டும். அப்படி நடந்தால், மறுபிறப்பு அல்லது உயிர்த்தெழுதல் தேவையில்லை.வெற்றி ராஜா வழக்கம் போல் பல்வேறு இடங்களை சித்தரித்து தனக்கே உரிய பாணியில் அற்புதமாக எழுதியுள்ளார். பொருள்கள் மற்றும் சம்பவங்கள். வெற்றி ராஜாவுக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற அற்புதமான படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
So touching Raaja.
எனக்கு உங்களின் எழுத்துக்கள் எல்லாம் ஒரு காட்சி போல (ஒரு திரைப்படத்தின் visuals) உணர்த்தியது. அருமையான திரைக்கதை வடிவில் ஒரு மானுடவியல் !!!!
அருமையானச் சிறுகதை. இதனைப் பற்றி பேசியுள்ள காணொளி: https://youtu.be/a0Yp2hpsRQU?si=e9SF9A_0-Xnd280A