/

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

கிராப்பிக்ஸ் என்று கண்டறியப்பட்ட மிருகம்

அபூர்வமாய் எங்கள் குடும்பம்
தொலைக்காட்சியின் முன்பாகக் கூடியிருந்தது.
எல்லோரும் காணத்தக்க பொதுவான அலைவரிசையொன்றை
வெகுநேரமாய் தேடிக்கொண்டிருந்தோம்.
அச்சமயம் திரையில்
குழந்தையாகவே தொடர முடியாத
இளைஞனொருவன் தோன்றினான்.
செய்த குற்றங்களுக்காகத் தன்னை வழிநெடுகத் துரத்தும்
ராட்சத மிருகத்தை
என்னோடு சேர்த்து அவனும் உண்மையென்று நம்பினான்
அது விரைவில் எம் இருவரையும் கொன்றுவிடக்கூடுமென
அச்சத்தில் அந்த வயதையே விழிகளால் மூடிக்கொண்டேன்.
பிறகு நானும் அதுபோல் இளைஞனானேன்
பின்னால் திரும்பிப் பார்க்கையில்
விரட்டிவந்த கூர் நகத்தில்
ஒரேயொரு பிக்சல் மட்டும் ஓரத்தில் கசிவதை
எப்படியோ கண்டுவிட்டேன்
அதன்பிறகு
இப்போதெல்லாம் வலிய சென்று உசுப்பினாலும்
ராட்சத மிருகங்கள்
என்னை மட்டும் ஒன்றுமே செய்வதில்லை.

000

அசமந்தம்

கற்றுக்கொடுத்தது என்னமோ
தன்னிடம் இருக்கும் ஒன்றை மறையச்செய்து
மீண்டும் அதை
அதே இடத்தில் தோன்றவைக்கும்
ஒரு எளிய மந்திரத்தைதான்.
காதில் விழாததுபோல் நிற்குமிந்த மரங்களோ
அதனைச் செய்துமுடிக்க
இலையுதிர் முடிந்து வசந்தகாலம் வரட்டும் என்கின்றன.

000

பெரு விஷ்ணுகுமார்

ழ என்ற பாதையில் நடப்பவன்’ கவிதைத்தொகுப்பின் ஆசிரியர். கவிதைகளும், சிறுகதைகளும் சமகாலத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.