/

அச்சில் ஏற்ற முடியாத சொற்கள் பற்றி, ஒரு கூறியது கூறல்!

மலேசியாவில் தடை செய்யப்பட்ட பேய்ச்சி நாவலை முன்வைத்து

சமீபத்தில் இணையத்தொடர்கள் பற்றிய ஒரு உரையாடலில் நண்பர், ‘இணையத்தொடர்களின் வெற்றிக்கு அவற்றில் இடம்பெறும் காமமும் வன்முறையும்தான் காரணம்’ என்று சொன்னார். அக்கூற்று ஓரளவு சரியானதும்கூட. சமீபத்தில் ‘பாவக்கதைகள்’ என்ற இணையத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. அத்தொடரில் இரண்டு பெண்கள் முத்தமிட்டுக்கொள்ளும்படி ஒரு காட்சி இடம்பெறுகிறது. படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் திரையரங்கில் வெளியாகும் ஒரு படத்தில் நிச்சயம் இப்படி ஒரு காட்சியை வைக்கமாட்டார். வைத்தாலும் அது தணிக்கையில் வெட்டப்படும் வாய்ப்பு மிகுதி. ஆனால், இணையத்தொடர்களில் திரையரங்கில் மட்டுமே படம் பார்த்தவர்கள் அதிர்ச்சியடையும்படி பல காட்சிகள் இடம்பெறுகின்றன. பாலியல் திரைப்படங்கள் வேறு. ஆனால் நாம் பொழுதுபோக்குக்காக பார்க்கும் இணையத்தொடர்கள் ஏற்கனவே நம்மில் படிந்திருக்கும் வெகுஜன ரசனையுடன் முரண்படுகின்றன. ஆக ஒரே காலத்தில் ஒரே சூழலில் இருவேறு வகையான யதார்த்தங்களை எதிர்கொள்கிறோம். இன்று ‘யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது’ என்று கருதப்படுவது நாளை யதார்த்தமாக மாறும்.

கலைப்படைப்புகளின் மீது ‘ஆபாசம்’ , ‘ஒழுக்க மீறல்’ போன்ற வார்த்தைகளை பொதுச்சமூகம் பிரயோகிக்கும்போது இவ்வார்த்தைகளை சுமத்தி ஒரு படைப்பினை விலக்க முற்படும்போது அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நவீனின் பேய்ச்சி நாவல் மலேசிய அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும்  பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒரு படைப்பு எவ்வளவு ‘பவித்திரமானது’ என்று பொதுச்சமூகம் சோதிக்க முயலும் போதெல்லாம் இந்த பதிலை திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஆகவேண்டும்.

பேய்ச்சி நாவலை வாசித்த பின்னர், சமீபத்தில் வெளியான தமிழ் நாவல்களில் பேய்ச்சி முக்கியமான ஒன்று என்று தோன்றியது. நாவல் மீது வேறொரு தளத்தில் விமர்சனம் உள்ளது. நவீன் அடிப்படையில் ஒரு செவ்வியல் கதைசொல்லி. கதைக்களத்தை முழுமையாக வாசகருக்கு உணர்த்தி மையச்சிக்கலை நுட்பமாக வெளிப்படுத்தும் கதைகளே நவீனை முக்கியமான கதைசொல்லியாக அடையாளப்படுத்துகின்றன. நவீனின் முக்கியமான கதைகளாக வண்டி, போயாக், யாக்கை போன்றவை வலுவான ‘கருக்களை’ கொண்டிருக்கும் மரபான சொல்முறையை பயன்படுத்தி இருக்கும் கதைகளே. இக்கதைகள் நினைவில் தங்குவதற்கு ‘கதைத்தன்மையே’ முதன்மையான காரணமாகிறது. அதாவது ஆசிரியர் தான் என்ன சொல்லப்போகிறோம் என்பது குறித்த தெளிவுடன் எழுதி இருக்கிறார் என்ற உணர்வைக் கொடுக்கும் கதைகள் இவை. சிறுகதைகளின் பலமாக வெளிப்படும் இந்த அம்சம் நாவலைச் சற்று பலவீனப்படுத்துகிறது. வேறொரு தருணத்தில் இதை விரிவாகப் பேசலாம்.

தற்போது இந்த சர்ச்சை குறித்து மட்டும் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நாவல் தடைசெய்யப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து தமிழகத்திலும் மலேசியாவிலும் இலக்கியவாதிகள் இந்தத் தடைக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிந்து வருகின்றனர். தடைக்கு ஆதரவாகவும் சிலர் பேசுவதைக் கேட்க முடிகிறது. மதியழகன் என்பவர் இந்தத் தடை குறித்து ஒரு வானொலி நிகழ்ச்சியில் தன் அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். வழக்கமான ‘அரசு செய்ததில் என்ன தவறு இருக்கிறது?’ என்று அப்பாவியாகக் கேட்கும் குரலில் பேசுகிறார். இலக்கியத்தின் உள்வட்டத்தில் நடக்கும் சர்ச்சைகளையும் மோதல்களையும் அறியாத ஒரு பொது வாசகர் இந்தப் பேச்சை கேட்கும்போது ‘நியாயம்தானே’ என்று சொல்ல வைக்கும் குரலில் பேசுகிறார். இதுபோன்ற குரல்களுக்கு ஒரு நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இது அரசாங்கத்தின் குரல். எந்த ஒரு அநீதி பொதுமக்களின் பார்வைக்கு வந்தாலும் அரசு உடனடியாக ‘அது ஒரு நிர்வாகக் கோளாறு மட்டுமே. மற்றபடி நிர்வாகம் மிகச் சரியாக நடக்கிறது’ என்று சொல்வதை நான் அடிக்கடி கேட்டிருப்போம்.

பேய்ச்சி நாவல் தடை செய்யப்பட்டதற்கு அந்த நாவலில் இடம்பெற்ற ‘கொச்சையான சொற்களும் ஆபாசமான சித்தரிப்புகளுமே’ காரணம் என்று சொல்லப்படுகிறது. மலேசியாவின் கலாச்சார விழுமியங்களுடன் இப்படைப்பு இசையவில்லை என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மதியழகனும் இதைத்தான் சொல்கிறார். இதில் என்ன பிரச்சினை?

முதல் பிரச்சினை தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களுக்கு, அரசாங்கம் ஒரு படைப்பு இசைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான். தடைக்குக் காரணமாக சொல்லப்படும் இரண்டு உத்தேசக் காரணங்களை எடுத்துக் கொள்வோம். தடைசெய்யப்பட்ட ஒரு தமிழ்ச்சொல் நாவலில் இடம்பெறுகிறது. ஒரு சொல்லை ஒரு அரசாங்கம் தடைசெய்ய இயலுமா? பேச்சுக்கும் எழுத்துக்குமான உறவு இரு வழிகள் கொண்டது. எழுத்தும் பேச்சும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. ஒன்றையொன்று மாற்றியமைக்கின்றன. இந்த செயல்முறை மிகநுட்பமானது. ஒரு எழுத்தாளர் தன்னுடைய வாசிப்பின் வழியாக எழுத்தையும் செவிகள் வழியாக பேச்சையும் தொடர்ந்து கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறார். எழுத்தாளரின் மொழிநடை உருவாகி வருவது எழுத்து மற்றும் பேச்சுக்கான முரணியக்கம் வழியாகவே. உரையாடல் மொழி மேம்போக்காக நம்பவைத்தலுக்காக பயன்படுத்தப்படுவது போலத் தெரிந்தாலும் ஒரு படைப்பில் உரையாடல்கள் ஒரு தனித்த அர்த்தப்புலத்தை உருவாக்கி அளிப்பதை உரையாடல்களை திறம்படக் கையாளும் படைப்பாளிகளை வாசிக்கும்போது உணர முடியும். தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடன், பூமணி போன்றவர்கள் தங்களுடைய கதாப்பாத்திரங்களை எந்தவித தீவிர மெனக்கெடல்களும் இல்லாமல் உரையாடல்கள் வழியாக வாசகர் மனதில் பதிய வைத்துவிடுகின்றனர்.

ஒரு படைப்பில் உரையாடல்களில் வெளிப்படும் நுட்பங்கள், பேச்சினை கூர்ந்து கவனிப்பதன் வழியாகவும் அதை எழுத்து மொழிக்குள் கச்சிதமாக மாற்றுவதன் மூலமாகவும் உருவாகி வருகின்றன. இதுவொரு நுண்ணிய கலைச்செயல்பாடு. புனைவு மொழிக்குள் அழகையும் மர்மத்தையும் சேர்ப்பது. இப்படியான ஒரு செயல்பாட்டில் ஓர் அரசு ‘தடைவிதித்திருக்கும்’ சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. உணவுப்பொருட்களுக்கோ சமைப்பதற்கோ எந்தத் தடையுமில்லை. ஆனால் உணவிலிருந்து எழும் மணத்திற்கு மட்டும் தடை என்று சொல்வதைப் போன்றதொரு கூற்று அது. எழுத்தாளர் மொழியை சமூகத்தில் இருந்து எடுக்கிறார். அரசின் தணிக்கைக்கு உள்ளாகும் ஊடகங்களில் பயன்படுத்தப்படாத எண்ணற்ற சொற்கள் – அச்சில் ஏற்றமுடியாத சொற்கள் என்ற சொற்றொடர் நினைவுக்கு வருகிறது – மக்களின் புழங்கு மொழியில் உள்ளன. கேலியாக, வசையாக பல சமயம் அன்பின் நெகிழ்வில் கூட ‘அச்சில் ஏற்ற முடியாத’ இச்சொற்கள் புழங்கி வருவதை நாம் அறிவோம்.

உரையாடலாக இல்லாமல் நேரடியாக ஆசிரியர் கூற்றாகப் பயன்படுத்தப்படும் வசைச்சொற்கள் குறித்து விவாதிக்கலாம். அப்படியான நேரடிப் பயன்பாட்டுக்கு அவ்வாசிரியரின் அழகியல் நோக்கு காரணமென்றால் அது போன்ற சொற்களையும் ஒரு நூலில் இருந்து நீக்கிவிட முடியாது. ஆகவே இது அனைத்தையும் வாசிப்பு சார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இரண்டாவதாக நாவலின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு. ஆபாசம். இது இன்னும் சிக்கலானது. எது ஆபாசம் என்பது சார்ந்து ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல் இருக்கிறது. சிலருக்கு உடல் வர்ணனை ஆபாசமாகத் தோன்றலாம். சிலருக்கு உறவு வர்ணனை. சிலருக்கு பொதுச்சமூகம் ஒத்துக்கொள்ளாத உறவுகளுக்கு இடையேயான பாலுறவு. பொதுச்சமூகம் ஆபாசம் என்று கருதுவதற்கு ஏற்றதுபோல ஒரு தணிக்கை கொண்டுவர வேண்டும் என்றால் ஒரு ஆணும் பெண்ணும் கைக்குலுக்குவதைக்கூட எழுத முடியாது. ஆகவே ஆபாசம் என்பதை படைப்பின் எல்லைக்குள் நின்றே பார்க்க முடியும். பாலியல் சித்தரிப்புகள் வாசகர்களிடம் உணர்வுச் சுரண்டலை ஏற்படுத்தலாம். அல்லது கதைக்கு அவசியமானதாக இருக்கலாம். இவ்விரு எல்லைக்குள் வைத்தே ஒரு பாலியல் சித்தரிப்பினை விளங்கிக்கொள்ள இயலும். முதலாம் வகைப் படைப்புகளில் இருந்து வாசகர்களை விலக்கலாம். ஆனால் சரியான வழிநடத்துதல்கள் வழியே அது நடைபெறக் வேண்டும். விரும்பியே உடற்கிளர்ச்சியூட்டும் கதைகளைப் படிப்பவர்களை ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் ஒரு இலக்கியப்படைப்பில் அத்தகையதொரு சித்தரிப்பு வரும்போது அதன் தேவையை விளக்க வேண்டியிருக்கிறது. ‘மோகமுள்’ நாவலில் வரும் பாலுறவுச் சித்தரிப்புகளை இன்று அதன் கிளர்ச்சிக்காகவா நாம் நினைத்துப் பார்க்கிறோம்? யமுனாவின் புரிந்துகொள்ள முடியாத தன்மையும் பாபுவின் காமமும் குற்றவுணர்வும் கலந்த அலைகழிப்பும் மட்டுமே முதன்மையாக இன்று நினைவுக்கு வருகிறது. கிளர்ச்சி அம்சங்கள் நிறைந்த திஜாவின் அடி போன்ற குறுநாவல்களை இன்று யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. ஏனெனில் அதைவிடப் பலமடங்கு உடற்கிளர்ச்சியை பாலியல் தளங்கள் அளிக்கின்றன. எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ நாவல் வெளியாகியபோது இந்தவகையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன; இன்று சடங்கு நாவலை படிக்கும் ஒருவருக்கு அவ்வகையான குற்றச்சாட்டுக்கள் வேடிக்கை அளிக்கும். அதன் கலைப்பெறுமதிதான் இன்று முதன்மையான ஆக்கத்தில் ஒன்றாக நிலைநிறுத்துகிறது. ஆகவே ‘எழுத்தில் ஆபாசம்’ என்ற கோஷத்தை எழுத்து புனிதத்தன்மை கொண்டது என்று நம்பும் அடிப்படைவாத சிறு கும்பல் மட்டுமே எழுப்ப இயலும்.

ம.நவீன்

ஆகவே ஒரு படைப்பில் வரும் பாலியல் சித்தரிப்பு, அதன் ஒட்டுமொத்த அர்த்தத்தளத்தில் சேர்ப்பது என்ன என்பது மட்டுமே ஒரு வாசகரின் முதன்மையான கேள்வியாக இருக்க வேண்டும்.

பேய்ச்சி நாவலை வசைச்சொற்கள் இடம்பெறுகின்றன, ஆபாசம் உள்ளது என்ற இரண்டு முத்திரை குத்தல்களுக்குள்ளும் அடைக்க முடியாது. நாவலின் தடைக்கு சொல்லப்பட்ட காரணமாக இவற்றைக் கொண்டால் மேற்சொன்ன விளக்கங்களை மட்டும் அளித்து இக்கட்டுரையை முடித்துக் கொள்ளலாம். ஆனால் நாவலின் தடைக்குப் பின்னே வேறுசில காரணங்களும் இருப்பதை ஊகிக்க முடிகிறது. நாவல் வெளிவந்தது முதலே மலேசிய இலக்கியச்சூழலில் இந்நாவல் பேசுபொருளாகி இருக்கிறது. நாவல் குறித்து பல கட்டுரைகள் வந்தன. நாவலை கடுமையாக விமர்சித்தும் எழுதப்பட்டன. ஆகவே இத்தடைக்குப் பின்னே அழுத்தம் கொடுத்தவர்களும் நிச்சயமாக வேலை செய்திருப்பார்கள். ஆனால் நாவல் தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தைப் வாசித்தபோது அதிர்ச்சியே ஏற்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு காரணத்தைச் சொல்லி ஒரு படைப்பைத் தடைசெய்ய இயலுமா என்று கேள்வி எழுந்தது. இங்கும் நூல்கள் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கான காரணங்கள் வேறு வகையானவை. ஆனால் ஆபாசம், வசைச்சொற்கள் போன்ற நவீன இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்தே விவாதிக்கப்படும் விஷயங்களைக் கொண்டு தடைகோருவது ஏற்கத்தக்கதாக இல்லை.

நாவல் தடை குறித்து சுனில் கிருஷ்ணனுடன் பேசிய நவீன் இத்தடை எதிர்பார்த்ததுதான் என்று சொல்கிறார். மூன்று விதமான வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கிறார். ஒன்று, நாவலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு நாவலை மறுபதிப்பு செய்வது. இரண்டு, சர்ச்சைக்குரிய சொற்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விற்பனையைத் தொடர்வது. மூன்று, நாவலை நிரந்தரமாகத் தடைசெய்வது. நவீன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளுக்கு தயாராகவே இருந்திருக்கிறார். ஆனால் நாவலில் இருந்து சொற்களை நீக்குவதை அவர் ஏற்கவில்லை. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் விளக்கம் கோரலும் இல்லாமலேயே நாவல் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் ஒரு நூலுக்கு தடைவிதிப்பது அது வாசகர்களை சென்றடையும் வேகத்தை அதிகப்படுத்தவே செய்யும். ஆனாலும் தடை என்பது ஒரு குறியீட்டுச் செயல்பாடு. கலைச்செயல்பாடுகளை தணிக்கை செய்ய நினைக்கும் அதிகார முகத்தின் வெளித்தெரியும் ஒரு சிறுநுனி. இத்தகைய செயல்பாடுகளை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் மீதும் கலைச்செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் கண்டிக்க வேண்டும். அவ்வகையில் இக்கட்டுரை வழியாக மலேசிய அரசுக்கு ‘அகழ் மின்னிதழ்’ வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.