/

முஸ்லிம் மக்களின் துயரமான தலைவிதி: ஜெயதேவ உயன்கொட

தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா

1950கள் தொடக்கம் பின் காலனித்துவ சிங்கள தேசியவாதமானது ‘தமிழ் எதிரி’யின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னர் ஒரு புதிய எதிரியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை சிங்கள இனவாதத்திற்கு ஏற்பட்டது. எந்தவொரு தேசியவாத அரசியலுக்கும் கருத்தியல்களுக்கும் ஒரு எதிரி  இருந்தாகவே வேண்டும். எதிரி இல்லாதபோது ஒரு எதிரியைக் கற்பனை செய்துகொள்வது எல்லா தேசியவாதத்திலும் காணப்படுகின்ற விசேட அம்சமும் ஆற்றலுமாகும். 2010ம் ஆண்டு முதல், சிங்கள தேசியவாதிகள் முஸ்லிம் எதிரியை உருவாக்கினர்.

இலங்கையின் சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த பிரஜைகளான முஸ்லிம் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓர் இனக்குழுமமாக எதிர்கொள்ளக் கூடிய, அதே நேரத்தில் எதிர்கொள்ளக் கூடாத  துரதிருஷ்டவசமான தலைவிதியை எதிர்நோக்கி வருகின்றனர். பிரஜைகள் என்ற ரீதியில்  மோசமான வேறுபாடுகளுக்குள்ளாக்கப்படுதல், புறக்கணிக்கப்படுதல், அரசின் புதிய எதிரியாகக் கருதப்படல், அரசியல் நண்பர்களினால் ஏமாற்றப்படுதல், மோசடிகளை எதிர்கொள்ளல் ஆகியவற்றை  ஒரு தலைவிதியாக அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். 

இனவாதம், தேசப்பற்று, போர் கருத்தியல்கள் என்பன வேகமாக பரவக் கூடிய பல்லின சமூகத்தில், பயங்கரவாதிகளை உருவாக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சிறுபான்மைப் பிரஜைகளினால் இலகுவாக கையாளப்படக் கூடிய தலைவிதி அல்ல இது.

இந்த பிரஜைகள் எதிர்கொண்டிருக்கும் துயர் மிகுந்த தலைவிதி மிகவும் தீர்க்கமாக வெளிப்பட்ட இரண்டு நிகழ்வுகள் அண்மையில் நிகழ்ந்தன. அதில் முதலாவது,  கோவிட் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளில் அரசாங்கம் அந்த மக்கள் மீது காட்டுகின்ற பாரபட்சமான கொள்கை. இரண்டாவது,  20வது திருத்தச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது அந்த மக்களின் அரசியற் பிரதிநிதிகள் அரசியல் பொறிக்குள் விழுந்தமை மற்றும்  அதற்கு காரணமாக அமைந்த அரசியல் நம்பிக்கைத் துரோகம் என்பனவாகும்.

கோவிட்டும் முஸ்லிம் பிரஜைகளும்

கோவிட் என்பது ஒரு தொற்று நோய் மட்டுமல்ல. அது சமூக- அரசியல்- பொருளாதார பிரச்சினைகளை தீவிரப்படுத்தியிருக்கும், பொது மக்கள் சுகாதாரம் சார்ந்த ஒரு சவாலும் ஆகும். ஆங்கில மொழியில் பரந்தளவில் அந்த அர்த்தத்தினை வழங்கவே  Pandemic என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. எனினும் இலங்கையிலும், ஒரு சில நாடுகளிலும் ‘கோவிட் பென்டமிக்’ என்ற இந்தச் சொற்களின் பயன்பாடு, அந்தப் பரந்தளவிலான அர்த்தத்தினை வழங்குவதற்கு அல்லாமல் –  தொற்றும் நோய் என்ற குறுகிய, காலாவதியான அர்த்தத்தினை வழங்கவே பயன்படுத்தப்படுகின்றது. இது துரதிருஷ்டவசமான சமூகப் பாதிப்புகளை  ஏற்படுத்தவல்லது.  இலங்கை இந்தத் தவறான பயன்பாட்டிற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது. ‘பென்டமிக்’ என்ற ஆங்கில சொல்லில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. அதாவது  எளிமையான மற்றும் ஆழமான அர்த்தம்  என்ற அடிப்படையில் அவற்றை குறிப்பிடலாம். எளிமையான அர்த்தமாக,   தொற்று நோயின் போது ஏற்படும்  பொதுக்கள் சார்ந்த சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் உள்ளடங்குகின்றன. இரண்டாவது அர்த்தமாக, சுகாதாரப் பிரச்சினைகளினால் ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடி மற்றும் சவால்கள் உட்பட தொற்று நோயின் சுகாதாரப் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதா என்பனவற்றை ஆராயும் நிலைமை என்பனவற்றைக் குறிப்பிட முடியும். 

கோவிட் 19 என்ற தொற்று நோய் பென்டமிக் ஆக மாறுவதன் வெளிப்பாடாக,  அதன் இனக்குழுமப் பரவல் முறையை ஆராய்வதனைக் குறிப்பிட முடியும்.

நகர்ப்புற வறிய மக்கள்  மற்றும் வறிய முஸ்லிம் மக்கள் மத்தியிலேயே கோவிட் நோய் மிக வேகமாக பரவுகின்றது. இது நகர்ப்புற  வறிய மக்களினதும், வறிய முஸ்லிம் மக்களினதும் தவறினால் நிகழும் விடயம் அல்ல. அது  கோவிட் வைரஸ் பரவும் இயல்பின் அடிப்படையில் நிகழ்வதாகும். நோயாளிகளின் வாய் மற்றும் மூக்கினூடாக வெளியேறும் நுண்ணிய நீர்த்திவலைகளினூடாக வைரஸ் பரவுகின்றது. அவை கண்களுக்கு புலப்படாத நுண்ணிய அங்கிகளாகும்.

நெருக்கமாக பழகும் வேளை, பேசும் வேளை, சாப்பிடும் வேளை, சந்திக்கும் வேளை  இலகுவாக மக்கள் மத்தியில் நோய்  பரவுகின்றது. நகர்ப்புற குறைந்த வருமானம் பெறுகின்ற, சிறிய வீடுகளில் வசிக்கின்ற அத்துடன் அதிக சன நெரிசல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் கோவிட் நோய் வேகமாகவும், மிக இலகுவாகவும் பரவுகின்றது. கோவிட் நோய் தொற்றிலிருந்து தப்புவதற்குத் தேவையான சமூக மற்றும் தனி நபர் இடைவெளியைப் பேண இந்த வறிய மக்களால் ஒருபோதும் இயலாது.  நாகரிக உயர் மற்றும் நடுத்தர  வகுப்பினர் மத்தியிலும், கிராமிய சமூகத்தினர் மத்தியிலுமே இவ்விடயம் சாத்தியப்படும். 

இதில் ஒரு படிப்பினை  உள்ளது. இலங்கையைப் போன்று இந்தியாவிலும் நகர்ப்புற வறிய மக்களும், நகர்ப்புற வறிய முஸ்லிம் மக்களும் கோவிட் தொற்றின் பாதிப்பிற்கு அதிகம் உள்ளாகியிருக்கின்றார்கள். இதன்படி பார்த்தால், கோவிட் தொற்றானது இனவாதத்தினையும்,  வர்க்க வாதத்தினையும் மேலோங்கச் செய்து கொண்டு பரவுகின்றது. கோவிட் தொற்றினால் ஏற்படுகின்ற விசேட பென்டமிக் நிலைமையின்  – அதாவது இனவாதத்தின், நேரடியான இரையாக இலங்கையின் முஸ்லிம் மக்கள் மாறியுள்ளனர். 

‘இனத்தின்’ புதிய ‘எதிரிகள்’

2010ம் ஆண்டு சிங்கள இனவாதம் புதிய கண்டுபிடிப்பொன்றைச் செய்திருந்தது. 2009ம் ஆண்டு நிகழ்ந்த விடுதலைப்புலிகளின் தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி 2010ம் ஆண்டில் முக்கியத்துவம் பெற்ற விடயமாகியிருந்தது. 1950கள் தொடக்கம் பின் காலனித்துவ சிங்கள தேசியவாதமானது ‘தமிழ் எதிரி’யின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னர் ஒரு புதிய எதிரியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை சிங்கள இனவாதத்திற்கு ஏற்பட்டது. எந்தவொரு தேசியவாத அரசியலுக்கும் கருத்தியல்களுக்கும் ஒரு எதிரி  இருந்தாகவே வேண்டும். எதிரி இல்லாதபோது ஒரு எதிரியைக் கற்பனை செய்துகொள்வது எல்லா தேசியவாத்திலும் காணப்படுகின்ற விசேட அம்சமும் ஆற்றலுமாகும். 2010ம் ஆண்டு முதல், சிங்கள தேசியவாதிகள் முஸ்லிம் எதிரியை உருவாக்கினர். ஹெல உறுமய முதல் ஞானசார, இராவணா படை, டேன் பிரியசாத் போன்றவர்கள் மற்றும்  மொட்டுக் கட்சியின் பிரதானிகளும், சிங்கள இனவாத ஊடகங்களும் இந்த புதிய எதிரியினை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். 

ஒரு இனத்தின் பிரஜைகள் தமது கலாசாரம், மொழி, மதம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில்  சிறப்பு வாய்ந்த அடையாளங்கள் தமக்கு இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு, அந்த அடையாளத்தின் அடிப்படையில் மற்றைய பிரஜைகள் குழுக்களிலிருந்து தாம் வேறுபடுவதாகக் கருதி முன்னெடுக்கின்ற  அரசியலே ‘அடையாள அரசியல்’ என்பதன் அர்த்தமாகும். 

முஸ்லிம் சமூகத்திலிருந்து தோன்றிய கலாசார, மத மற்றும் அரசியல் அடிப்படைவாத இயக்கங்களின் காரணமாக, இந்த ‘முஸ்லிம் எதிரி’யை உருவாக்கும் செயற்பாடானது இலகுவானதாக அமைந்திருந்தது. 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இந்த செயற்பாட்டின் உச்ச சந்தர்ப்பமாகும்.

இலங்கையின் முஸ்லிம் பிரஜைகள் சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகங்களிலிருந்து தோன்றிய அடிப்படைவாத ‘அடையாள அரசியலை’ தழுவிக் கொண்டமையானது,  இலங்கைச் சமூகத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படவும், சிங்கள, தமிழ், கிறிஸ்தவ, இந்து மற்றும் பௌத்த மக்களினால் எதிரியாகக் கருதப்படவும் பின்னணியில் இருந்த காரணியாகும். ஒரு இனத்தின் பிரஜைகள் தமது கலாசாரம், மொழி, மதம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில்  சிறப்பு வாய்ந்த அடையாளங்கள் தமக்கு இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு, அந்த அடையாளத்தின் அடிப்படையில் மற்றைய பிரஜைகள் குழுக்களிலிருந்து தாம் வேறுபடுவதாகக் கருதி முன்னெடுக்கின்ற  அரசியலே ‘அடையாள அரசியல்’ என்பதன் அர்த்தமாகும்.  இந்த அடையாள அரசியலில் முற்போக்கான அம்சங்களும், இருண்ட பக்கங்ளும் உள்ளன. அதன் முற்போக்கான அம்சமாக, அடக்குமுறைக்கும், ஒடுக்கப்படுதலுக்கும் உள்ளாகும் சிறுபான்மை குழுக்கள் தம்மீதான அடக்குமுறை குறித்த புரிதலையும், கூட்டு அறிவையும், உரிமைகள் தொடர்பான உணர்வையும், கூட்டு அரசியல் செயற்பாட்டிற்கான ஒத்துழைப்பு தொடர்பான  அறிவையும் அந்த பிரஜைகளின் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப உதவுவதனைக் குறிப்பிடலாம்.  

அடையாள அரசியலின் இருண்ட பக்கமாக, மொழி, மதம், கலாசாரம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் இனக்குழுமங்களுக்கிடையே பிரிவினை, முரண்பாடுகள், அவநம்பிக்கை, பழிவாங்கல் உணர்வு, மோதல் மற்றும் வன்முறை என்பனவற்றை அது ஊக்குவிக்கின்றது. தமது மதம் அல்லது கலாசாரம், மற்றைய பிரஜைகளின் மதம் மற்றும் கலாசாரத்தினை விட மிக சிறப்பானது என்றும், உயர்வானது என்றும் கருதி, பிற மதங்களையும் கலாசாரங்களையும் புண்படுத்துவதும், அவற்றை வெறுப்பதும், அந்த வெறுப்பின் அடிப்படையில் மோதல்கள், யுத்தம், வன்முறைகள் ஏற்படுதலும், அவற்றை நியாயப்படுத்தலும் இந்த அடையாள அரசியலின் இருண்ட பக்கத்தின் விளைவுகளாகும்.

நவீன உலகின் இனக்குழும அரசியலில் காணப்படுகின்ற பொதுவான ஒரு அம்சமாக இந்த அடிப்படைவாத அடையாள அரசியலைக் குறிப்பிட முடியும். பலதரப்பட்ட கலாசார அடையாளம் உள்ள இனக்குழும பிரஜைகள் இதன் காரணமாக ஒருவரையொருவர் தனது எதிரியாகக் கருதுகின்றனர். அத்துடன் தமது இருப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கருதுகின்றனர். எதிரியை வெறுப்பதும், அழிப்பதும் தமது பிரஜைகளின் கூட்டு இருப்புக்கு தேவையான முன் நிபந்தனையாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக வளர்ச்சிப் பெற்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்குழும அரசியலில் தீவிரமாக வெளிப்பட்டதும், தற்போதும் வெளிப்படுவதும் இந்த இருண்ட பக்க அடையாள அரசியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பிற்போக்குத்தனமான பேரழிவு மிக்க இன அரசியலாகும். இந்த யதார்த்தம் ஒருவருக்கும் புரியாமல் இருப்பது இலங்கையின் பெருந்துயரமாகும்.  பிரபாகரன், சிறில் மெத்தியூ, ராஜரத்ன, ஜாதிக்க ஹெல உறுமய, ஞானசார, ராவணா படை, ஹிரு மற்றும் தெரண தொலைக்காட்சி, திவயின போன்ற சிங்கள பத்திரிகைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணை ஆணைக்குழு போன்ற  எமது சமூகத்தில் தோற்றம் பெற்றுள்ள  நவீன வெளிப்பாடுகள் அனைத்தும், இந்த அடையாள அரசியலின் இருண்ட பக்கத்தின் விளைவுகளால் உருவானவையாகும்.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் நிகழ்கால அரசியல் துயரத்தினைப்  போன்று சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற அரசியல் துயரங்களும் மேற்கூறப்பட்ட விடயங்களுடன் ஒன்றுக்கொன்று தொடர்புற்ற மூன்று பகுதிகளாகும்.

அரசியல் வீழ்ச்சி 

இலங்கையின் அனைத்து இனக்குழுமங்களைச் சேர்ந்த  பிரஜைகளின் வர்க்க மற்றும் சமூகத் தளங்களிலும், அரசியல்வாதிகள், மக்கள் தொடர்பூடகங்கள், பிரஜைகள் மற்றும் மதங்களுக்கிடையிலும், ஒழுக்க ரீதியிலான அரசியல் வீழ்ச்சி நிலை மிகப் பாரியளவில் வெளிப்படுகின்றது. அந்த வீழ்ச்சிக்கான  பொறுப்பு மற்றும் அதன் வெளியீட்டாளர்களாகி இழைத்த  தவறு தொடர்பில் ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டி குற்றம் சுமத்துவதனையே எமது சமூகத்தில் அனைவரும் செய்கின்றனர். இன்றைய நாட்களில் அந்த விரல்கள் தம்மை நோக்கி நீட்டப்படுவதனை இலங்கையின் முஸ்லிம் மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதே தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும், அதில் கூறப்படும் விடயங்களை அறிக்கையிடும் வெகுஜன ஊடகங்களும் இந்த நாடகத்தின் பிரதான  பகுதிகளை இப்பொழுது நடித்துக் காட்டுகின்றன. இலங்கை எதிர்கொள்கின்ற தோல்விகள் அனைத்திற்கும்  ஒரே  காரணம்  என்ற  குற்றச்சாட்டு தற்போது முஸ்லிம் மக்கள் மீது கட்டியெழுப்பப்படுகின்றன. கோவிட் தொற்றினைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் தோல்வியைப் பற்றி பேசாது,  வறிய முஸ்லிம் மக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகங்கள் காட்டும் எல்லையற்ற ஆர்வத்தின் மூலம் இந்த விடயமே புலப்படுகின்றது. 

அத்துடன், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள  அரசியல் வீழ்ச்சி நிலை நன்கு வெளிப்பட்ட இன்னொரு நாடகமயமான சம்பவமும் இடம்பெற்றது.  20வது திருத்தத்திற்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகள் வாக்களித்தமையே அது. உண்மையில் இது அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்கொலையாகும்.

இந்த நிலைமையானது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் வீழ்ச்சி, நெருக்கடி என்பனவற்றுடன்  அவர்கள் தற்போது எதிர்கொள்கின்ற விடுபட முடியாத துயர்மிகுந்த  தலைவிதியினையும்  அடையாளப்படுத்துகின்றது. ஆதலால் அது பற்றி ஓரளவு பகுப்பாய்வு செய்வது எமது கலந்துரையாடலுடன் சம்பந்தப்பட்டதாகவே அமையும்.

முஸ்லிம் அரசியற் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு இரண்டு காரணங்கள் அடிப்படையாக அமைந்திருந்தன என்று தெரிகின்றது. கோவிட் தொற்றின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை, தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அரசாங்கம் விருப்பத்துடன் அனுமதியை வழங்கும் என்ற நம்பிக்கையே இதில் முதலாவது காரணமாகும்.  நீதி அமைச்சர் அலி சப்ரியினால் முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியாக இது அமைந்திருந்தது என்று தெரிய வருகின்றது.  புதிய அரசாங்கம் பாரம்பரிய முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கும், முஸ்லிம் தொழில்சார் வல்லுனர்களுக்கும் எதிராக முன்னெடுத்துள்ள ‘பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தின்’ முன் நிராயுதபாணியான நிலையில் உள்ள, தம்மிடம் இருக்கின்ற ‘நிபந்தனையுடன் அடிபணிதல்’ என்ற மாற்றுவழியின் பிரதான செயற்பாடு, இரண்டாவது காரணமாகும்.

ஆனால் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும், முஸ்லிம் பிரஜைகளும் ஏமாற்றப்பட்டமையே உண்மையில் நிகழ்ந்துள்ளது. முஸ்லிம் மக்களின் புதிய அரசியல் தலைவராகும் நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்திருக்கின்ற அலி சப்ரி இந்த ஏமாற்றுத்தனத்திற்கான தரகு வேலையை செய்துள்ளமையானது இந்த அரசியல் துயர நாடகத்தின் மிக முக்கியமானதொரு அம்சமாகும்.  

முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் தொடர்பிலும் இங்கு ஒரு விடயத்தினைக் கூற வேண்டியுள்ளது. இலங்கையின் அனைத்து இனக்குழுமங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் பெரும்பாலும்  ஊழல் பேர்வழிகளாகவே உள்ளனர்.  தமிழ்க் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கள்  இல்லை. தமிழ்க் கூட்டமைப்பு தவிர அனைத்துச் சிறுபான்மை அரசியற்கட்சிகளின் தலைவர்களும், ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் இரண்டின் தலைவர்களும் – குறிப்பாக 1980களின் நடுப்பகுதியிலிருந்து செயற்படும் தீவிர ஊழல் அரசியலின் சுயமான பங்காளிகளாக உள்ளனர்.  அந்தக்  காரணத்திற்காக அவர்கள்  மிகவும் மகிழச்சியான நலன்களைப் பெற்றுள்ளனர். விகிதாசார பிரதிநிதித்துவ முறை, கூட்டு அரசாங்கம் உருவாகும் நிலை, அரசாங்கங்களுக்கு பெரும்பான்மை பலத்தினைப் பெறுவதன் தேவை ஆகிய  பின்னணியில், ஐதேக மற்றும் சுதந்திரக் கட்சி தலைமைகள் தீவிர ஊழல் அரசியலை ஓர் ஆயுதமாக மிகவும் வெற்றிகரமாக பயன்படுத்திய கடந்த நான்கு தசாப்தங்களில், இலங்கையின் சிறுபான்மை இனக்குழுமத்தினைச் சேர்ந்த அரசியற் கட்சிகள் சில, அந்த ஊழல்களினால் அதிக நலன்பெற்றவர்களாக சுய விருப்பின் பேரில் மாறினர் என்பது எமது நாட்டின் சமகால அரசியல் யதார்த்தத்தின் ஓர்  அம்சமாகும். அந்த யதார்த்தத்திலிருந்து இலகுவில் விடுபட எவராலும்  இயலாது.

சிங்கள மற்றும் தமிழ் பிரஜைகள் மத்தியிலும் தோன்றியுள்ள சவால் ஒன்றை ஏற்றுக்கொள்வதே இலங்கையின் முஸ்லிம் பிரஜைகள் முன் இன்று  உள்ள விடயமாகும். அதாவது, இருண்ட அடையாள அரசியலின் பிற்போக்குவாத மரபுகளிலிருந்தும், ஊழல் அரசியல் வர்க்கத்தின் பிடியிலிருந்தும், மத கலாசார மற்றும் இனக்குழும தனிமைப்படலிலிருந்தும் சுய விடுதலைப் பெறுவதே அது. அத்துடன் இன, மத, கலாசார ரீதியில்  தனிமைப்படாமல்,  இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமானம் ஆகிய அடிப்படையில்  உலகளாவிய ரீதியில் மனித விடுதலைக்கு வழிகாட்டக் கூடிய புதிய பார்வையினைக் கண்டறியவும் வேண்டும்.

நன்றி: ராவய

ஜெயதேவ உயன்கொட

அரசியல் விஞ்ஞானியான ஜெயதேவ உயன்கொட இலங்கையில் அரசியலமைப்பு நிபுணரும் ஆவார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் அரசறிவியலில் மூத்த பேராசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இலங்கையின் இனமோதல், சிறுபான்மையினரின் உரிமைகள், இலங்கையின் மாகாணச் சீர்திருத்தங்கள் முதலாக விடயதானங்களைப் பெருமளவிற்கு எழுதியுள்ளார்.

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.