பழையவரால் என்ன பயன்?
நங்கை ஒருத்தியையும் நாமிருவர் மூவரையும்
பொங்கு அமளி பொறுக்குமோ- சங்கம்
குலைய விரால் பாயும் குருநாடர்கோவே
பழையவரால் என்ன பயன்.
தனிப்பாடல்- சொக்கநாதப் புலவர்
நம் இருவரையும் , கூடவே உன் சிந்தை வழி புகுந்து வந்திருக்கும் அவளையுமாக, மொத்தம் மூன்று பேரைத் தாங்குமோ இந்தக் கட்டில் ? சங்குகள் சோர்ந்திருக்க, விரால்கள் துள்ளிப்பாயும் கடற்துறையான குரு நாட்டுத் தலைவனே! பழையவரால் என்னதான் பயன்!
தலைவனும் தலைவியும் படுக்கையில் இருக்கிறார்கள். அப்போது தலைவனுக்கு இன்னொருத்தியின் மீது நினைப்பு போகிறது. அதை அறிந்து கொண்ட தலைவியின் பாடல் இது. தான் சங்கு போல் சோர்ந்திருக்க அந்த இன்னொருத்தி விராலைப் போல் துள்ளிப் பாய்கிறாள் என்று தலைவி வருந்துவதாகவும் இந்தச் சித்தரிப்பை விரிக்கலாம்.
மெல்லிய நகையுணர்வு தொனிக்கும் இக்கவிதை” பழையவரால் என்ன பயன்” என்கிற ஆழமான கழிவிரக்கத்தோடு முடிகிறது. நமது பழந்தமிழ் பாடல்களில் குடும்ப “ஆண்களின் ஒழுக்க மீறல்” நிறையவே பேசப்பட்டுள்ளது. பரத்தை, தலைவியின் அளவிற்கே பாடப்பட்டுள்ளாள். ஆனால் “. குடும்ப பெண்களின்” மீறல் குறித்த பதிவுகள் ஏதும் காணப்படுவதில்லை. தேடிச்சலித்தால் ஒரு வேளை சிற்றிலக்கியங்கள் எதிலாவது ஒளிந்து கொண்டிருக்கலாம். “எத்தனை பேர் தொட்ட முலை” எத்தனை பேர் நட்ட குழி” என்பன போன்று சித்தர் பாடல்களில் தென்படும் பொத்தாம் பொதுவான இச்சை வெறுப்பைக் கழித்துவிட்டுப் பார்த்தால், பெண்களின் மீறல்களை நாம் நவீன எழுத்துக்களில்தான் காண முடிகிறது.
மேற்கண்ட பாடலிலும் ” நங்கை” என்பவள் ” பரத்தை” என்றுதான் பொருள் சொல்லபட்டிருக்கிறாள்.
ஆனால் நான் ” இன்னொருத்தி” என்று கொள்கிறேன். இது கொஞ்சம் பாடலை விரிவாக்கிக் கொள்ள எனக்கு உதவுகிறது. பரத்தை மட்டும்தான் பரத்தமை செய்ய வேண்டும் என்றில்லையே?
இப்பாடலில் ” மனம்” பிரதான பங்கு வகிக்கிறது. மனதின் மேடை விசித்திரமானது. இருளும் மர்மமுமானது. இந்தப் பாடலை ஒட்டி இரண்டு கேள்விகள் பிறக்கின்றன.
ஒன்று, இருவர் இருக்கும் கட்டிலில் உண்மையில் இருவர்தான் இருக்கிறார்களா? இரண்டு, ஒரு உடல் எப்படி, எப்போது பழசாகிறது?
ஒரு கட்டிலில் பத்து ஆண்களும், பத்துப் பெண்களும் சேர்ந்து புரள வகை செய்கிறது மனம். அவனது சிந்தைக்குள் அவனது கல்லூரித் தோழி, பக்கதுவீட்டு மங்கை, திரை நாயகி, அன்று புதிதாகக் காண நேர்ந்த கட்டழகி ஒருத்தி என கூட்டம் களைகட்டலாம். இதுவே பெண்ணிற்கும் பொருந்தும். நினைவு ஸ்தூலமான எடையை கொண்டு வருவதில்லை என்பதால் மட்டுமே நமது கட்டில்கள் காலொடிந்து சரியாமல் நிற்கின்றன. மீறல்கள் பல வகைப்படும். சந்தடியே இல்லாத, யாராலும் கண்டறிய முடியாத, சட்டமும், நீதியும், தர்மமும் செல்லுபடியாகாத ஒரு மீறல் இது. மனம் இல்லவே இல்லை என்று சாதித்து விட்டால் எந்த அதிகாரத்தாலும் அதைத் தண்டிக்க இயலாது.
பல வருடங்களுக்கு முன் வாசித்து இப்போது மங்கலாக நினைவில் இருக்கும் கவிதை ஒன்றின் தோராயமான வரிகள்…
“நீங்கள் என்னை
வீட்டுச் சிறையில் அடைக்கலாம்.
சுற்றிலும் சீருடை அணிந்த
காவலர்களை நிறுத்தி
என்னைக் கண்காணிக்கலாம்
ஆனால் என் பிரக்ஞையில்
என்ன வருகிறது போகிறது
என்பதை
உங்களால் ஒருக்காலும் கண்டறிய இயலாது.
வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட ஒரு கவியின் குரலிது. ஆனால் அவர் மனம் , அதுவும் கவி மனம் அண்டமெங்கும் சுற்றித் திரிவதை யாராலும் கட்டுப்படுத்த இயலாதல்லவா? கட்டில்களின் கதைக்கும் இது பொருந்தும். கட்டில்கள் இருந்த படியே இருந்துகொண்டு பறந்து கொண்டிருப்பவை. இந்தப் பறத்தலில் சினிமாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. திரை நட்சத்திரங்கள் அநேக வீடுகளில் ஜொலிக்கக் கூடியவர்கள் குறிப்பாக இராத்திரிகளில். அவர்கள் ஏகன்- அநேகன் தத்துவத்திற்கு அருகில் வரக் கூடியவர்கள். ஒரு கமலஹாசன் மற்றும் ஓராயிரம் கமலஹாசன்கள். ஒரு நயன்தாரா மற்றும் ஓராயிரம் நயன்தாராக்கள்.
‘ஜிகிர்தண்டா’ படத்தின் ஒரு காட்சியில் திடீரென ‘ டைட்டானிக்’ புகழ் ஜேக்கும், ரோஸ்சும் கட்டிலில் தோன்றுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆதவனின் “சினிமா முடிந்த போது” என்கிற கதை ஒரு தம்பதி சினிமாவிற்குச் சென்று திரும்பிய பிறகு நிகழ்வதைப் பேசுகிறது. கதையின் மையம் நம் ‘கட்டில் கதை’ அல்ல. என்றாலும், கட்டில் கதைகளையும் தொட்டுச் செல்லும் ஒரு கதை. அன்றிரவு சினிமாவில் பார்த்த பெரிய மார்பகங்களைக் கொண்ட நடிகையை நினைத்தவாறே உறங்கிப் போகிறான் கணவன். ‘உங்களோடு சேர்த்து எனக்கு இரண்டு குழந்தைகள் ‘ என்று உருகும், குடும்பம் என்கிற அமைப்பிற்கு அர்ப்பணிப்போடு உழைக்கும் மனைவியின் உள்ளத்தையும் காட்டி கதையை முடிக்கிறார் ஆதவன்.
“அவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கையறைக்கு வந்தாள். அவன் தூங்குவதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய வழுக்கை விழுந்த தலை, கவர்ச்சியற்ற நாசியும், உதடுகளும், பெரிய தொந்தி…ஓர் ஏக்கத்துடனும், சலிப்புடனும் அவள் விளக்கை அணைத்தாள்.நல்ல வேளை. தூங்கிவிட்டான். இப்போது இடையூறின்றி எது வேண்டுமானாலும் எண்ணமிடலாம். சினிமா தியேட்டரில் சில நிமிடங்கள் தன்னையும், உஷாவையும் தனியே விட்டுவிட்டு கணவன் டிக்கெட் வாங்கச் சென்றிருந்த போது அவளை ரசனையுடன் வெறித்துப் பார்த்த அந்த இரு வாலிபர்களை நினைத்துக் கொண்டாள். என்ன ஸ்லிம்… என்ன ஸ்மார்ட்… அவர்களுடைய உடலெங்கும் குமிழியிட்ட துடுக்கும், வாலிப வெறியும்….அந்த இளைஞரகளை நினைத்தவாறே மெல்ல மெல்ல அவளும் தூங்கிப் போனாள்..
இருவரும் சும்மாதான் தூங்குகிறார்கள். அங்கு ஒன்றுமே நடக்கவில்லைதான். ஆனாலும் அவ்வளவு நடந்து முடிந்து விட்டதல்லவா?
ஜெயமோகனின் சமீபத்திய கதைகளான ‘ கந்தர்வன்’ , ‘ யட்சன் ‘ இரண்டிலும் இந்தக் ‘ கட்டில் கதைகள் ‘ கையாளப்பட்டுள்ளன. கோயில் காளையாக வலம்வரும் உருண்டு திரண்ட தேகம் கொண்ட எண்ணெய்ப் பண்டாரம் என்பவனை , அந்த ஊர்ப் பெண்கள் சன்னல்களில் ஒளிந்து கொண்டு, கண்டு கண்டு ஏங்குகிறார்கள். ‘ அரிப்பெடுத்த சனியனுங்க… நல்ல அரக்கை உருக்கி வச்சு அடைக்கணும் சனியனுங்களை’ என்று முணுமுணுத்துக் கொள்கிறார்கள் ஆண்கள். முருகப்பன் என்பவன் தன் மனைவியுடனான கூடலுக்குப் பிறகு ‘ என்ன இன்னைக்கு..? பாம்புல்ல படமெடுத்து ஆடுச்சு..? அந்த எண்ணைப் பண்டாரத்தை நெனச்சிகிட்டயோ? ‘ என்று கேட்டு அவளை அடித்துத் துவைக்கிறான். பிறகு அவள் செத்துச் சிலையாகி நிற்கையில் அதன் முன் நின்றுகொண்டு சொல்கிறான்…. ” உள்ளதைச் சொல்லனும்னா எனக்கு உன் மேலே ஒரு கோவமும் இல்ல கேட்டியா? நீ பொலிகாளைய நினைச்சு சந்தோசமா இருந்தா அந்நேரம் எனக்கும் சந்தோசமாத்தான் இருக்கும்.. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவிலே அம்பிடு வெளையாட்டு உண்டும்லா? கசப்பாக்கும் அதிமதுரம். நாத்தமாக்கும் தீராத்த நறுமணம். வெசமாக்கும் நல்ல லகிரி…”
ஒரு உடல் படுக்கையில் பூரித்து ஆர்ப்பரித்தால், அதன் இன்பத்தை அறுவடை செய்வது அதன் இணை உடல் தானே? சிந்தையில் யார் இருந்தால் என்ன?
ஜெயகாந்தனின் ” சினிமாவுக்குப் போன சித்தாளு” கட்டில்கதையை பிரதானமாகப் பேசுகிறது. உண்மையைப் பேசும் அழகுடனும், துணிச்சலுடனும், வலுவாக உரத்த குரலில் பேசும் கதை இது.சினிமா என்கிற மாய உலகின் பசப்புகளை, அது எளிய மக்களின் மீது நிகழ்த்தும் கொடூரமான தாக்குதல்களை அப்படடமாகப் பேசியிருக்கிறார் ஜெயகாந்தன். எம்.ஜி.ஆர் எப்படி இந்த நாவலைக் கண்டும் காணாதது போல் கடந்து சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.
குடிசைவாசிகளான ஒரு தம்பதி… மனைவி தன்னோடு ‘இல்லை’ வாத்தியாரோடுதான் ‘ இருக்கிறாள்’ என்பதை அறிய நேரும் போது அந்தக் கணவன் தலை தலையாக அடித்துக் கொண்டு அழுகிறான்.
” ….நெனச்சிக் கீறாங்களாம். அதிலே இவருக்குப் பூட்டுதாம்! கம்னு கெட! நெனச்சிக்கினா இன்னா பூட்டுது? நம்ப தலை எயுத்து பயேது தான் துண்றோம். அதுக்கோசரம் பிரியாணிய நெனச்சிக்கக் கூடாதா?”
என்று எதிர்கேள்வி கேட்கிறாள் மனைவி.
“நானாம்மே பயது? “
“நானாம்மே பயது? “
என்று திரும்பத் திரும்பக் கேட்டு உடைகிறான் கணவன். அதுவரை வாத்தியாரை தலைவரென்றும், தெய்வமென்றும் போற்றிக் கொண்டிருந்தவன் தன் இடத்தை அவர் எடுத்துக் கொண்டார் என்ற தெரிந்ததும் வசைமாரி பொழியத்துவங்கி விடுகிறான்…
“பொட்டமே அவன்…பார்த்தா பளபளன்னு இருக்கானேன்னு நெனச்சுக்கின்னியா? எல்லாம் மேக்கப்பும்மே..அவன் கெயவம்மே … த்தூ? “
பிரியாணி வாசத்துக்கு மூக்கைப் பொத்துவது சற்றே சிரமமான காரியம்தான். காலமெல்லாம் பழையதை உண்ண விதிக்கப்பட்டிருக்கிற அவளை நினைத்தாலும் கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது. பளபளவென்று இருக்கும் ஒன்றைப் பார்க்காமல் இருப்பதுதான் எப்படி?
இந்த ‘ டகால்டி ‘ வேலையெல்லாம் நம்மகிட்ட வேண்டாமென்று , ஒரு ரமேஷ், புணர்ச்சியின் போது தன் பெயரை உச்சரிக்கச் சொல்லி நிர்பந்திக்க, அவள் ரமேஷ் என்று சொல்லிவிட்டு , சுரேஷ் என்று நினைத்துக் கொள்கிறாள். இணை தன்னோடுதான் உள்ளது என்று உறுதிபடுத்திக் கொள்ள இந்த நாமகரண உச்சாடனம் ஒரு உபாயமாக இருக்கலாம்.ஆனால் எல்லா உபாயங்களிலும் ஒரு ஓட்டை உண்டு.
பெருந்தேவியின் கவிதையில் ஒருவன் கோவித்துக் கொண்டே ஓடி விடுகிறான்…
கேசவா
மூன்றாம் முறையாக
விபத்தை எதிர்த்து
வீடு மீண்ட என்னிடம்
அத்தையொருத்தி
கேசவா கேசவா என்று
இனியாவது சொல்லென்றாள்.
கேசவனைக் கூப்பிட்டால்
வாசல் வரும் விபத்து
வராந்தாவில் நின்றுவிடுமாம்.
அன்றிலிருந்து
ஆகாயம் முதல் நிலம் வரை
எதில் வேகஞ் சென்றாலும்
சொல்ல மறப்பதில்லை.
ஒருமுறை
தூக்கத்தில்
கேசவா என்றேன் போல.
கனவில்
என்னோடு
இயக்கத்திலிருந்த
சிநேகிதன்
கோபித்துப்போனவன்தான்.
இதுவரை
கண்ணுக்குத் திரும்பவில்லை.
மனம் தானாய் திருந்தினால் தான் உண்டு. தானாய் உவந்தால் தான் உண்டு. அதற்குத் தொடையில்லை என்பதால் நீங்கள் சூடு வைக்க முடியாது. மனம் ஒரு உருவிலி என்பதால் அதன் கையைப் பிடித்துத் திருகி, பிறப்புறுப்பில் ஓங்கி ஒரு மிதி வைக்க இயலாது.
தனிப்பாடலின் கடைசி வரி சமயங்களில் கண்ணீரை வர வழைப்பது. தான் ஒருவருக்கு பழசாகி விட்டோம் என்பதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் ஜீரணிக்க முடிவதில்லை. புத்தம் புதிதாக இருந்த தலைவி மெல்ல மெல்லத் தேய்ந்து தலைவனுக்குப் பழசாகி விட்டாள். ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு எப்படி பழசாகிறது ? அல்லது ஒரு உடல் இன்னொரு உடலுக்கு எப்போது பழசாகிறது? அன்பு குறைந்து ஈர்ப்பு குறைகிறதா? அல்லது ஈர்ப்பு குறைந்து அன்பு குறைகிறதா?
ஒருவருக்கு பழசாகிவிடும் உடல், இன்னொருவரை பளீரிட்டு அழைக்கும் விந்தையும் நேர்கிறதே எப்படி?
நீண்ட நெடிய மணவாழ்வின் தொடர் ஓட்டத்தில் ஏதோ ஒரு தருணத்தில் சலிப்பு தோன்றிவிடுகிறது. ஆனாலும் ‘ ஒருவனுக்கு ஒருத்தி ‘ என்பதே தமிழ்வாழ்வின் தாரக மந்திரம். அதுவே நம் பண்பாடு. அதுவே நம் பெருமைமிகு மகிமைகளில் ஒன்று. ஆனாலும் பாருங்கள்….பழையவரால் என்ன பயன்?
காமம் மட்டுமல்ல, உணவு, உடை துவங்கி கலை, இலக்கியம் வரையிலும் மனிதனுக்குப் ‘புதிதின்’ மீதுள்ள மோகம் கவனம் கொள்ளத்தக்கது. அவன் ‘புதிது’, ‘ புதிது’ என்றுதான் வாய் பிளந்து அலைகிறான்.
ஆக, கவிஞனும், உளவியல் மாணவனுமான இவன் இச்சமூகத்திற்குச் சொல்ல விரும்புவது யாதெனில் ‘அதிகம் கத்தாமலிருப்பது ‘ நம் அனைவருக்குமே நல்லது.
இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
அருமையா எழுதியிருக்கீங்க கவிஞரே
அற்புதம் இசை சார்
அதகளம் அமர்க்களம் அமைதி அமைதி நன்றி இசை அவர்களுக்கு
இத்தனை வருட சண்டை அனைத்தும்
அர்த்தமற்றவை என்று புரிந்த தினத்தில்
“மாஸ்டர் ஒரு லைட் டீ ” என்ற குரலுக்கு
“வா” என்ற கடவுளின் தலை அசைப்பை
போன்றதொரு கட்டுரை , நன்றி இசை அவர்களுக்கு மீண்டும்
திருஇசை அவர்களுக்கு சக்திவேல் ஜெயமோகன் தளத்தில் தங்கள் பற்றிய கட்டுரையைபடிக்க வாய்ப்பு கிடைத்தது தங்களின் இந்த ஐந்து கட்டுரையும் மிக அருமை.தங்கள் கவிதைகள் ஒருவகை கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் நாம் விஷ்ணு புரம் இலக்கிய வட்டத்தில் சந்தித்து உள்ளோம்.
அன்பின் இசை
பழையதை விடுத்து புதியதை தேடும் அனைத்து ஆண் பெண்களுக்குமான மனித மனங்களின் உட்புகுந்து எழுதப்பட்ட கட்டுரை.
கவிதையைப் போலவே கட்டுரையிலும் ஜொலிக்கும் இசைக்கு வாழ்த்துக்கள்.