/

ஜெயமோகனின் புனைவுக் களியாட்டு சிறுகதைகள்: இரம்யா

இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் நோயச்ச காலத்தின் அனுபவத்தை நுகரும் தலைமுறையின் சாட்சியாக நாம் அனைவரும் இருக்கிறோம். பெருந்தொற்று காலங்களுக்கே உரிய பொருளாதாரத் துன்பங்களும், மனச் சோர்வுகளும், எதிர்காலத்தின் ஐயங்களும் நம்மை சூழ்ந்திருக்கின்றன. ஜெயமோகனின் தளத்தில் நித்தமும் விழிக்கும் அவரின் வாசர்களுக்கு இந்த உலகாயதத் துன்பத்தைப் போக்குவனவாக அவரின் வீடுறைவு கால சிறுகதைகளான “புனைவுக் களியாட்டு சிறுகதைகள்” அமைந்தது. ’எண்ண எண்ணக் குறைவது’ என்ற சிறுகதை தொடங்கி ‘வரம்’ வரை நூறு சிறுகதைகளின் பயணம் ஜெ –விற்கு ‘வெண்முரசு எனும் தொடர் நாவல் வரிசையின் நிறைவிலிருந்து திசை திரும்பும் பயணம்’ என்று அவர் சித்தரித்தாலும் வாசகர்களுக்கு அது வேறு வகையான பயணம் தான். தத்துவார்த்தங்களில் மூழ்கித் திழைத்தும், கண்ணீர் வர வெடித்துச் சிரித்தும், தளர்ந்து போன உள்ளத்தை ஊக்கப்படுத்தியும், வரலாற்றினூடாக காலத்தில் பயணம் செய்துமென பல வகையான உணர்வுகளை பரிசளித்திருக்கிறார். நூறு கதைகளினூடாக அவரை அணுவணுவாக அணுக்கமாக்கிக் கொள்வதற்கான ஒரு வாசலைத் திறந்து விட்டிருக்கிறார். இந்த சிறுகதைகளை ’தத்துவம்’; ‘நாட்டரியல் தெய்வங்கள்’; ‘துன்பத்தேற்றி’; ‘செயலூக்கி’ என்ற தலைப்புகளாகப் பிரித்து அது சார்ந்த சிறுகதைகளைப் பற்றிய அறிமுகமாக இந்தக் கட்டுரை நீள்கிறது.

தத்துவம்

தத்துவம் என்பது தமிழ் இலக்கியத்திற்கு புதிதில்லை. சங்கப்பாடல்களிலும் பொருண்மொழிக்காஞ்சி என்ற துறையின் கீழ் வரும் பாடல்களில் தத்துவார்த்த சிந்தனைகளை நாம் அடையலாம். அவை பெரும்பாலும் சான்றோர்கள் தெளிந்து அறிந்த பொருளைக் கோருவதாகும். ஆனால் ஜெயமோகனின் எழுத்துக்களில் தத்துவமானது நாம் ஏற்கனவே கேட்டுக் கொண்ட தத்துவார்த்த கேள்விகளுக்கான பதில்களாகவும், எழுப்பிக் கொள்ளாத கேள்வியை எழுப்பிக் கொள்வதற்கான வாசலாகவும் அமைகிறது. ஜெ –வின் எழுத்துக்களில் தத்துவமானது நம்மை வந்தடையும் கணந்தோறும் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நூறு சிறுகதைகளில் தத்துவார்த்த கதைகள் என்று சிறு பட்டியலைப் போட்டால் அதில் முதலில் வந்து நிற்பன ’கரு’, ’கூடு’ ’நிழற்காகம்’, ’தங்கப்புத்தகம்’, ‘சிவம்’, ஆகியவை. இவற்றில் இந்த தத்துவத்தை தங்கள் சொற்களாலும், கதைகளாலும், செயல்களாலும், பயணங்களாலும் விளக்குபவர்களாக முக்தா, நித்யா, அசிதர் ஆகிய ஆசிரியர்கள் வருகின்றனர். நாமே மாணவர்களாகி, சில சமயம் நாமே அவர்களாகி இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வது போன்ற உணர்வை இந்த சிறுகதைகள் அளிக்கின்றன. இந்த ஐந்து கதைகளில் நான்கில் பெளத்த மதம் சார்ந்த விடயங்களும், ஒரு கதையில் சிவம்/சைவம் சார்ந்த விடயங்களும் வருகின்றது. கடற்கரையை விளிம்பாகக் கொண்டு தென் மூலையில் அமைந்திருக்கும் தமிழர்கள் நமக்கு நாம் நீண்ட பயணம் செய்து அடையக் கூடிய திபெத், இமையமலை, ஸ்பிடுக், லடாக் என பனிச் சரிவுகளில் இந்த ஆன்மீகப் புனைவை கட்டி எழுப்பியிருக்கிறார் ஜெ. அவருடைய தத்துவார்த்தங்கள் யாவும் இந்த எளிய வாழ்க்கையை நுண்ணுணர்வோடு அணுகக் கூடியவர்களுக்கான திறப்பாய் அமைகிறது.

திபத்தியன் புத்திசத்தின் ஆன்மீக அரசான ஷம்பாலா எனும் மர்ம இடத்தை சென்று சேரும் நோக்கம் கொண்டு தீவிரமாக பயணப்படும் ஆடமின் கதை தான் “கரு” எனும் குறு நாவல். கிட்டத்தட்ட நான்கு அடுக்கான ஓர் கதை சொல்லல். இங்கு வாசகர்களுக்கு கதை சொல்வது முக்தாவாயிருந்தாலும், அவர் சொல்லும் கதைக்குள் இருக்கும் ஆடம் மற்றும் அவன் கதை சொல்லும் கதைக்குள் இருக்கும் சூசன்னா, ஆனி என கதை நம்மை தீவிரமாக உள்ளிழுத்துச் செல்வதற்கு ஏதுவாக இந்த அடுக்குகள் அமைகின்றன.

கரு என்பது ஆற்றல் அனைத்தின் மையம் எனக் கொள்ளலாம். சாதாரணமான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் நாம் யாவரும் சக்தி எந்திரங்களையோ ஆற்றல் மூலங்களையோ தேடி அலைவதில்லை. அதை யோகிகளும், தவ முனிவர்களும், ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்களும் கண்டடையவே தன் வாழ்நாள் முழுவதும் தேடி அலைகின்றனர். சிலர் கண்டடையவும் செய்கின்றனர். அப்படி ஆற்றல்மூலம் இருக்கும் இடம் எப்படியாக இருக்கும் என்று வியப்பவர்களுக்கு ஆடமும், ஆனியும், சூசன்னாவும் தங்கள் உள்ளுணர்வின் மூலம் தங்கள் பயணத்துக்கான பாதையை எங்கு கண்டடைந்தார்களோ அந்த இடம் என்று அறியும் போது தெளிவடைகிறது. ஆடமிற்கு தன் தந்தை வாயிலாக, ஆனி சூசன்னாவிற்கு சார்லஸ் என்ற அந்த இடத்தில் இறந்த சிறுவன் வாயிலாக என ஷம்பாலாவுக்கான துருப்புச்சீட்டு கிடைக்கிறது. பனிப் பிரதேசத்தில் இருக்கும் கொள்ளை கும்பலுக்கும் கூட காலங்காலமாக உதவுவது அவர்களின் உள்ளுணர்வு தான் எனும்போது உள்ளுணர்வின் திறப்பை அடைகிறோம். நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் எதையும் தர்க்கங்கொண்டு வீழ்த்திவிடும் மன நிலையிலிருந்து அறியப்படாத ஒரு அறிவியக்கத்தை நோக்கி எடுத்துச் சொல்கிறார். ”நீ காலம் முன்னோக்கி மட்டுமே ஒழுகும் ஒரு பரிமாணத்தில் இருக்கிறாய். அங்கே, ஷம்பாலாவில் இருப்பவர்கள் காலம் எல்லா திசைகளுக்கும் செல்லும் ஒரு ஐம்பரிமாணத்தில் இருப்பவர்கள்” என்று சொல்கையிலேயே ஐம்பரிமாணத்தில் நின்று கொண்டு ஷம்பாலாவைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

அவர் காட்சிப்படுத்தும் திபெத்தும் கூட கண்ணால் காணக்கூடியதும், கற்பனையால் வளர்த்தெடுக்கக் கூடியதும் என இரண்டு கோணங்களை ஒன்றாக இணைக்கும் முப்பரிமாணக் காட்சியாய் விளங்கிறது.

“நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது” என்ற வரிகள் அறிவுடையார் ஆவது அறிவார் என்ற வள்ளுவரின் வரிகளை முழுதுணரச் செய்கிறது.

கரு என்பது பற்றி கூறும்போது, ‘நம் உடலில் அத்தனை நோய்களுக்கும் முதல்விதைகள் உள்ளன. அவை உறங்கிக் கொண்டிருக்கின்றன. நோய் என்பது அதிலொன்று முளைப்பதே’ என்கிறார். மறுபிறப்பும் மீட்பும், மனிதன் அடையவிருக்கும் எல்லா மெய்மையும் ஏற்கனவே கருவடிவில் அவனுக்குள் இருக்கிறது என்ற சிந்தனைத் துளியை விதைக்கிறார்.

ஆடமின் இந்த புறவயமான பயணத்தைப் பார்த்து முக்தாவைப் போல நாமும் ஆச்சரியமடைந்தாலும் அதற்கான தர்க்கமாக ஜெ சொல்வது, ‘நாம் இழந்தவை எல்லாம் இங்கே எங்கோ துளியாக உள்ளன. அதைப்போல நாம் சென்றடைய வேண்டியவையும் எங்கோ துளியாக உள்ளன. மனிதன் தனக்குள் தேடவேண்டிய அனைத்தையும் இந்த பூமியெங்கும் அலைந்தும் தேடலாம். வெளியே தேடுவதே எளிது. ஏனென்றால் அங்கே இடம் வரையறைக்கு உட்பட்டது. வழிகாட்டிக் குறிப்புகள் பொதுவானவை. வழிகள் புறவயமானவை’.

இப்படி புறவயமான பயணத்தைப் பற்றிய கதையாக ’கூடு’ சிறுகதை அமைகிறது. இத்தகைய பயணத்தை மேற்கொள்பவர்கள் எல்லா மெய் ஞானத்திலும் இருக்கிறார்கள். இப்படி அலைவதைப்பற்றி ஜெ சொல்லும்போது ‘அது ஓர் ஆதி அக எழுச்சி, அது மானுடனைக் கடந்த ஒரு விசை’ என்கிறார்.

ஒவ்வொரு மானுடனும் ஏதோவோர் முதிர்வுத் தருணத்தில் ‘நான் யார்? இது என்ன?’ என்ற கேள்வியை தன்னை நோக்கி எழுப்பிக் கொண்டிருப்பான். அத்தகையவன் ஒரு இலக்கிய வாசகனாய் இருக்கும் பட்சத்தில் தான் கேட்டுக் கொண்ட இன்னும் ஆழமான தத்துவார்த்த கேள்விகளுக்கு பதில் கிடைப்பதாயும், எழுப்பிக் கொள்ளாத கேள்விகளை எழுப்பிக் கொள்வதற்கு ஏதுவாயும் ஜெ –வின் இந்த தத்துவம் சார்ந்த சிற்கதைகள் அமைந்தொழுகின்றன. ஒவ்வொருவரும் தனக்கானதை தன்னுடைய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு மேலும் மேலும் விரிக்க ஏதுவாயிருக்கிறது.

கருவை ஆற்றல் மூலம் அமைந்திருக்கும் இடமாக கரு என்ற குறு நாவல் அமைந்தது போல, புறவயமான பயணத்தை மேற்கொண்டு கருக்குழந்தையாக சுருங்கும் ஒரு பயணத்தை கூடு சிறுகதை எடுத்தியம்புகிறது. வஜ்ரயோகாசாரம் என்ற பெளத்த மரபின் சூத்திர வாக்கியங்களில் ஒன்று ‘மூன்றுமுறை உங்கள் உடலை திறந்து வெளியேறுங்கள்’ என்பது. நோர்பு திரக்பா மிகப்பெரிய மடாலயத்தை கட்டி தன் முதிர்ந்த வயதில் மூன்று முறை உடலைத் திறந்து வெளியேறி, சொல்லடங்கி உடல் சுருங்கி தனக்கான கூட்டை உருவாக்கிக் கொண்டு உயிர் துறந்தார். பனிப்பிரதேசத்தில் மம்மீ செய்யப்படும் முறை போலவே அவரை பதப்படுத்தி வைத்திருக்கின்றனர். அவர் பின்னாளில் ஒரு துறவிக்கு காட்சி தந்தார் என்ற செய்தியினால் ஈர்க்கப்பட்டும், தனக்கான கூட்டை உருவாக்கிக் கொள்ளும் நோக்குடன் இருக்கும் ராப்டன் எனும் புத்த துறவியை முக்தா சந்தித்து இவையனைத்தையும் அறிவதாக சிறுகதை அமைந்திருக்கிறது. நோர்பு திரக்பா வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புறவயமான ஆன்மீகப்பயணம் மேற்கொண்டது போலவே முக்தா தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார். ஒரு பயணக்கதை போல அமைந்து இமையமலையின் பனி பொழியும் அந்த இடங்கள், ஸ்பிடி சமவெளியின், மலையடிவாரத்தில் தனித்திருந்த லிகிர், ஸ்பிடுக் மடாலயம், லடாக்கின் ஹெமிஸ் மடாலயம், திக்ஸே மடாலயம், ஸ்பிடுக் கோம்பா என்ற தொன்மையான மடாலயம், சிந்துவிலிருந்து வடக்கே பியாங் கோம்பா மடாலயம், உம்லா என வாசகர்களை பயணப்படத் தூண்டும் பாதையைக் காணிக்கிறார்.

இரு சிறுகதைகளும் ஒரு எச்சத்தை நம்முள் விட்டுச் செல்கிறது. ’கரு’ –வில் ஆடம் அந்த கனவு அரசான ஷம்பாலாவை அடைந்தானா? என்பதும், ராப்டனுக்கு நோர்பு திரக்பாவின் தரிசணம் கிடைத்ததா? என்பதும் சொல்லப்படவில்லை. அது ஒவ்வொரு வாசகனும் தானே உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்பதாக ஆசிரியர் எச்சம் விட்டுச் செல்வது வாசர்களுக்கான பெருவெளியாக மேலும் மேலும் புனைவை ஏற்றிக் கொள்ள ஏதுவாக உள்ளது.

“துறவு என்பதும் வாழ்கையில் வேறு ஒரு வகையில் நடிப்பது தான்”. என்ற வரி நிழற்காகம் என்ற சிறுகதையில் அசிதர் சொல்வதாக வருகிறது. ஒரு தனி நபராக நாம் வீட்டிலும், சமூகத்திலும், அறிந்தவர்களிடத்திலும் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து நடிக்கிறோமா? பலரும் அவ்வாறு கட்டமைக்கும் அவர்களுடைய பிம்பத்தையே நாம் நம்புகிறோம் என்ற திறப்பை நல்குகிறார். நல்ல நண்பன் என்பதும், மாணவன் என்பதும், நல்லவர் என்பதும் நம்பப்படும் வரை மட்டுமே நடிக்கம்படும் விடயம் தானே என்று அகம் நோக்கிய தேடலை முடுக்குகிறார்

“கலை என்பது ஒரு நடிப்பு. நிழல்நாய் கடிப்பதில்லை. போலி செய்வது மூலத்தை அறிவதற்கும் அதை கடப்பதற்கும் சரியான வழி. நாம் ஒன்றை நடிக்கத் தொடங்கும்போது அதிலிருந்து விடுபடுகிறோம்.” என்ற வரிகளில் நாம் நடிக்கிறோம் என்பதை உணர்வதற்கும் அதிலிருந்து விடுதலை அடைவதற்கான வழியும் பிறக்கிறது. ’நான்’ என்று வரையறுத்துக் கொண்ட பிம்பத்தை அணுவணுவாக கட்டுடைப்பதற்கான மார்க்கமாக இந்த வரிகள் அமைகிறது. இறுதியில் “பித்ருகடன்கள் இல்லாத ஒரு துறவியிடம் காகம் என்ன சொல்லும் என்று முக்தா அசிதரிடம் கேட்க, அவரோ ’நான் பித்ருவே அல்ல, இவர்கள் நம்புகிறார்கள் ஆகவே சும்மா நடிக்கிறேன்’ என்று சொல்லும்’ என்று சொல்வதாக வருவது அதிலிருந்து மேலும் சிந்தனையைத் தூண்ட ஏதுவாகிறது.

ஜெ சொன்ன பல அற்புதமான வரிகளில் ஒன்று “ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக!” என்பது. அதை விரித்து விரித்து ஆழமாக்கும் சாத்தியங்கள் அதிகம். அப்படி விரித்து எழுதிய கதையே ‘தங்கப்புத்தகம்’ எனும் குறு நாவல். லாமா டென்ஸின் க்யாட்ஸோ அவர்களால் முக்தா குகைத்தியானத்திற்கு பணிக்கப்பட்டு அங்கு அந்த இருள் சூழ்ந்த அறையில் ’நான்’ என்பதை அணுவணுவாக கரைக்கும் தருணம் ஒன்று வருகிறது. அதன் பின் தன் கனவுகளால் உந்தப்பட்டு அறிவின் முடிவின்மையை உணர்த்தும் மாயநூலைத் தேடி பதினெட்டு நாள் திபெத்தின் நிலவெளியிலான பயணத்தை நிகழ்த்துகிறார். முக்தா மற்றும் பாட் எர்டீன் ஆகிய இருவரும் சேர்ந்து நகல் எடுத்துவிட்டு செல்லும் முடிவை எடுக்கின்றனர். ஏற்கனவே அந்த நூலை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நகல் எடுத்திருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருந்தன. அதனால் அதை அப்படியே சரியாக நகலெடுத்துச் செல்லும் பணியில் தங்களை இருவரும் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். கடைசி வரை அவர்களால் அப்படியே ஒரே போல நகல் எடுக்க முடியாது சோர்ந்து போகின்றனர். நிறைவை அடைய முடியாது பாட் சோர்ந்தே போகிறான். முக்தாவோ அந்த நிறைவின்மையின் உச்சியில் நிஐவை அடைந்து அதிலிருந்து மீள்கிறார்.

திருக்குர்ரானையும் பைபிளையும் ஒப்பு நோக்க புறவயமான விடையங்களான வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள் ஆகியவை வேறுபடலாம் ஆனால் அதன் அக நோக்கில் ஆராய்ந்தால் அவற்றின் மூலம் ஒன்றே என்பதை அறியலாம். இரண்டு மதங்களின் மூலமும் ஒன்றிலிருந்து உருவாகி வேறு வேறு நகலெடுப்புகளாக உருமாறி இரு மதங்களாக உருவாகியிருப்பதை உணரலாம். இவையிரண்டையும் இந்து மரபுடன் ஒப்பிடவே முடியாது என்ற விடயத்தை தகர்த்தெறிந்தது ஜெ –வின் மகபாரத காவியத்தின் மறுஆக்கமான வெண்முரசும், அவரின் ரிக்வேதப் பாடலின் (129ஹைம்:10 மண்டலா) மொழி பெயர்ப்பும் தான். ”ஆதியிலே அது இருந்தது” என்ற வரி ரிக் வேதத்தில் வருகிறது. வெண்முரசின் பிரபஞ்சத்தோற்றுவாயில் இருளில் ’தான்’ என்ற சிரத்தை அற்ற நாகம் தன் முதல் அசைவுக்குப் பின்னர் ‘இது நான். இனி?’  என்று சொல்லிக் கொண்டு இச்சை ஒன்றாலேயே பல்லாயிரமாகப் பெருகுவதாக வருகிறது. ஆதியிலே வார்த்தை’ இருந்தது என்று ஆரம்பிக்கும் பைபிளையும் இதையும் உற்று நோக்க ஒரே மூலத்திலிருந்து அவை பிறந்திருப்பதை உணரலாம்.

இங்கு தங்கப் புத்தகம் குறுநாவலில் “பாட், ஒருவேளை எல்லா மதங்களும் இப்படித்தானோ?;  எல்லா மூலநூல்களும் இப்படித்தானா?  கார்ல் மார்க்ஸின் மூலநூலும்கூட?” என்ற வரி வருகிறது. ’மூலம் ஒன்றே’ என்ற கருத்துவாயை இதன் மூலம் அடையலாம். எந்த ஒரு குறிப்பிட்ட புத்தகமும் அதை படிக்கும் வாசகனால் பலவாராகப் படிக்கப்பட்டு பல்லாயிரமாகப் பெருகுகிறது. ஒற்றைப் புள்ளியினின்று பெரு வெடிப்பு நிகழ்ந்து இந்தப் பிரபஞ்சம் பெருகி விரிவடைவது போல அனைத்து புத்தகமும் ஒரே மூலத்தினின்று பிறந்து விரிகிறது. புத்தகம் மட்டுமா? எந்த ஒன்றையும் நோக்க இந்த கருத்துருவாக்கத்தை அடையலாம். உலகில் பல மில்லியன் மனிதர்கள் இருந்தாலும் ஒரே உருவத்தோற்றத்தைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒரு மூலத்தினின்று தனக்கானதை எடுத்துக் கொண்டு பல்லாயிரமாகப் பெருகுகிறார்கள். தனி மனிதனுக்கும் கூட ஒரு மூலம் இருக்கிறது. ஆனால் அவனை அணுகுபவர்கள் அவர்கள் பார்க்கும் கண்ணோட்டம் வழியாக அவனை பலவாறாக வகுத்துக் கொள்கிறார்கள். இப்படி இந்தக் கருத்தை வரலாறு, புவியியல், அரசியல், ஆனமீகம் என விரித்துக் கொண்டே செல்லலாம்.

காசி எனும் ஓர் ஆன்மீக நகரத்தின் அற்புதமான சித்திரத்தை சிவம் சிறுகதை அளிக்கிறது. “பிறர்” என்ற ஒன்றைத் துறந்ததாக அது காட்சியளிக்கிறது. ’அன்பே சிவம்’ என்பதிலிருந்து ’சிவோகம்’ என்ற பயணத்தை நோக்கி நம்மை அது நகர்த்துகிறது. குரு நித்யா அவர்கள் அலைந்து திரிந்து காசியில் பெற்ற அனுபவத்தின் மூலம் அவர் ’அன்பு’ என்ற ஒன்றை எங்ஙனம் கரைத்தார் என்பது சித்தரிக்கப்படுகிறது. இறந்துபட்டு சிதைமூட்டப்படும் பிணங்களின் மேல் அங்கிருப்பவர்களின் ஓர் அலட்சியமான பார்வை அவர்களை உயிரின் மீது இறக்கமற்றவர்கள் என்று தோன்றச் செய்யும். மறு கணமே தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழையும் ஓர் பைத்தியத்தைக் காப்பற்றும் இளைஞன் ‘ஓர் உயிரள்ளவா’ என்ற வார்த்தை இருப்பின் உயர்வை எடுத்துரைக்கும். ஒரு வகையான நிலையாமையையும், ’அன்பு’ என்பதை விடுவித்துக் கொண்டு உலக துக்க விடுதலையை அடைந்து இந்தியா முழுவதும் சுற்றித் திரிவது பற்றி கதை சொல்லப்படுகிறது. ஆனாலும் இவையாவும் இல்லறத்தில் இருப்பவர்களால் கை கொள்ள முடியாதவை. அவர்களுக்கான வரிகளாக “உடல் காலத்தில் சென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என. உள்ளம் அதில் இருந்தாக வேண்டும். ஓடும் படகில் அமரும் காகம்போல. ஆகவே அது எங்கும் தனியாக நின்றுவிடமுடியாது. எழுந்து எப்படிச் சுற்றினாலும் மீண்டும் வந்து அந்தப்படகில் அமர்ந்தாக வேண்டும். அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி உள்ளத்தை நாளும் புதிய சூழலில் ,புதிய வகையில் திகழச்செய்துகொண்டே இருப்பது உடல்தான். நில்லாக்காலம் நிகழும் உடல்” என்ற வரிகள் அமைந்தொழுகுகிறது.

நாட்டாரியல் தெய்வங்கள்

ஜெ திபத்திய புத்தத்தைப் பற்றிச் சொல்லும் போது: ‘திபெத்திய பௌத்தம் என்பது இந்திய பௌத்தமும் இந்திய தாந்த்ரீக மரபுகளும் பான் மதமும் இணைந்து உருவானது. பான் மதம் மூதாதை வழிபாட்டில் இருந்து தோன்றியது.’ என்கிறார். நம்முடைய தமிழர் மரபில் மூதாதையர் வழிபாடு இன்றியமையாதது. அதனைத் தன் புனைவில் ஏற்றி நம்மில் மழுங்கிப்போன உள்ளுணர்வு எனும் கூரிய ஆயுதத்தை நினைவூட்டுகிறார். அப்படியான கதைகளாக ‘கழுமாடன்’ ’முதலாமன்’ ’பீடம்’, ’புழுக்கச்சோறு’, ’ராஜன்’ ஆகியவை அமைகின்றன.

இயற்கை வழிபாடும், குல தெய்வ வழிபாடும் உடையது தமிழர் மரபு.

பைதல் ஒக்கல் தழீஇ அதனை

வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்

நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்

கெடுவில் நல்லிசை சூடி

நடுகல் ஆயினன் புரவலன் எனவே

என்ற புறநானூற்றின் வரிகளின் மூலம் நம்மிடையே வேரூன்றியிருந்த நடுகல் வழிபாடு புலனாகிறது. அப்படியான நடுகற்களின் மீது புனைவை ஊற்றி வடித்த கதைகளாக ஜெ –வின் கதைகள் அமைகின்றன.

இன்றளவிலும் தமிழர் மரபில் குல தெய்வ வழிபாடு இருந்து வருகிறது. இந்த குலதெய்வங்கள் யாராக இருக்க முடியும் என்ற கேள்விக்கான விடையாக முதலாமன் சிறுகதை அமைகிறது.  குலத்திலுள்ள அத்தனைபேரும் தெய்வமாவதில்லை. தெய்வமாவதற்கு அவன் முதலாமனாக வேண்டும். இனி நாம் சந்திக்கும் நடுகற்கள் தோறும் முதலாமனான காளியனையே காணுமளவு உணர்வு நெகிழ்ச்சியான கதை.

மேலும் இந்தக் கதைகளில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வை நமக்கு ஆசிரியர் காணிக்கிறார். காட்டை வெறியுடன் பார்க்கும் இந்த காலகட்டத்தில் “ஊரை பசியுடன், உடைமைவெறியுடன் காடு உற்றுநோக்கிக் கொண்டே இருந்தது.”, ”இரவில் காட்டுடன் இணைந்து கொள்ளும் ஊர்” போன்ற சித்தரிப்புகளின் வழி காட்டிற்கும் ஊருக்கும் இடையேயான நெருக்கமான தொடர்பு வெளிப்படுகிறது. காட்டிலிருந்து வழிந்து உருவான ஊர், காட்டு தெய்வங்களையே முதன்மையாக வழிபடும் மக்கள் என இயற்கையோடு இயைந்து வாழ்வு சொல்லப்படுகிறது. நம் நிகர் வாழ்க்கையை உற்று நோக்கினாலும் குல தெய்வங்கள் பெரும்பாலும் காடுகளில் வாழ்வதைப் பார்க்கலாம். பின்னும் குளிகன், மாதி, பிறுத்தா, கடுத்தா, நீலி, கேசி, முத்தி, சோதி, நாகினி என . நூற்றெட்டு ஊர்களுக்குமான நூற்றெட்டு தெய்வங்கள் பற்றி கூறுகிறார். அவர்களின் குழந்தைகளாக, உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்பட்ட, மூதாதைகளை வணங்கிய ஓர் தொல்குடி அழிந்து போன இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லை வைத்து புனைவை ஊற்றி உருவாக்கிய கதையாக இவை அமைகின்றன.

இது தவிர புலையர்களின் வாழ்க்கையை, வழிபாட்டை, நம்பிக்கைகளை, துன்பங்களை, சடங்குகளை பல கதைகளில் விரவி வைத்திருக்கிறார். அவை எளியவர்கள்/ ஒடுக்கப்பட்டவர்கள் வரலாற்று ரீதியாக துன்பமடைந்தவர்களுக்கான குரலாக, அதிலிருந்து எழும் அறச்சிக்கல்களை கேள்விகளாக எழுப்புகின்றன. காரியாத்தான், சுண்டன், உருமன் என தலைமுறை தலைமுறையாய் அவர்களுக்கு இழைத்த அநீதிக்கான பலிகளை நம்மிடம் கேட்கும் கதையாக ’பீடம்’ ’கழுமாடன்’ ஆகிய சிறுகதைகள் அமைகின்றன. இன்று வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக, நொறுக்கப்பட்டவர்களுக்காக அரசு பல வகைகளில் சலுகைகள் கொடுக்கிறது. இந்தக் கதைகளின் விளிம்பில் இது போன்ற சலுகைகள் அவர்களை நிறைவு கொள்ளச் செய்யும் பலிகள் என்று வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகிறது.

கழுவேற்றம் பற்றிய ஒரு விளாவரியான சித்திரத்தை இந்தக் கதைகளில் காணலாம். அதை தீர்க்கமாக ஏற்கும் கார்யாத்தானைப் பார்த்து உள்ளம் கலங்கிவிடுகிறது. அவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு காலங்காலமாக கழுமாடன் சாமியாய் நின்று அவன் பழிவாங்கும் ஒரு நம்பிக்கை சொல்லப்படுகிறது. கழுமாடன் சாமியின் அவதாரங்களாய் அவை நிலை பெறுகின்றன.

திருவிழாக்கள் அனைத்துமே மனித மனத்திற்காக உருவாக்கப்பட்டவை. கடந்த காலம் அனைத்தையும் கரைத்து தன்னை முழுவதுமாக மீட்டு எதிர்காலத்தில் செலுத்த மன வைத்தியம் தெரிந்தவர்களால் உருவாக்கப்பட்டவையாக அவை இருக்கின்றன. மனமானது எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டு, நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை என்பதான நிலையை அடைய உருவாக்கப்பட்டவை. அப்படியான ஒரு நிலையை உலகாயதங்களில் மூழ்கியிருக்கும் ஒருவன் அடையும் அனுபவமாக ஜெ வடித்திருக்கும் சிறுகதையே புழுக்கச் சோறு. மனிதனால் கட்டப்பட்ட வீடுள்ள இடத்தினின்று, வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாக, பாதை மாறி, காடேயான யானையை எதிர்கொண்டோடி தப்பவேமுடியாதளவு வழி தவறி காட்டின் கருவை அடைந்து காட்டின் மனிதர்களால் மீட்கப்படும் ஓர் அற்புதமான பயண உணர்வை இக்கதை அளிக்கிறது.

துன்பத்தேற்றி

துன்பங்கள் இன்பங்களைப் போலவே இந்த மானுட வாழ்வில் இன்றியமையாதவை. தன் இளமைக் காலத்தில் ஜெ சந்திக்காத துன்பங்களே இல்லை எனலாம். தன் இருபத்திரெண்டாம் வயதில் எதிர்கொள்ளவே முடியாத அவரின் பெற்றோர்களின் இறப்பிற்குப் பின்னர் அலைக்கழிந்து துன்பப்பட்டவர். அப்படி ஒருவரால் தான் துன்பம் என்ற ஒன்றின் மீது இத்துனை அருமையான புனைவுக் கதையை ஏற்ற முடியும். ஒருவகையில் துன்பங்களின் அனைத்து பரிமாணங்களையும் பல்வேறு கதைகளில் சொல்லிக் கொண்டே வருகிறார். அவை அனைத்தையுமே கோர்த்துக் கொண்டால் அது நம்மை துன்பத்தைக் கடக்க ஏதுவாக்கும்.

துன்பத்தைப் பற்றி ஜெ சொல்லும்போது, ‘இருக்குத துக்கங்களிலே ஆயிரத்திலே அஞ்சுபோக மிச்சமெல்லாம் ஆத்மநிர்மித துக்கம்தான்’. என்கிறார். ஆனால் இந்தத் துன்பங்கள் யாவும் மனித மனத்தினால் தான் மேலும் பெரிதாக்கப்படுகின்றன என்பதை, ”மனுஷனுக்க மனசு ஒரு விசித்திரமான விஷயமாக்கும். அது அப்டியே பாற்கடலா எளகும். புளிச்சு நாறி நஞ்சுக்கடலா ஆகும். பூவா விரியும். உடனே அதை முள்ளா மாத்தி தன்னையே குத்திக்குத்தி கிழிப்பான்..” என்று கூறுகிறார். இந்தவுலகில் ஆடுவதும் வேடமிடுவதும் நான்தான் ஆனால் ஆட்டுவிப்பது நீயே என்று சொல்லி மனதை அந்த ஆத்மநிர்மித துக்கத்தினின்று விடுதலை செய்வதற்கான மார்க்கத்தை ’தூவக்காளி’ என்ற சிறுகதையின் மூலம் எடுத்தியம்புகிறார்

மூத்தோள் சிறுகதையில் அவர் சித்தரிக்கும் ஜ்யேஷ்டாதேவியின் முகத்திலிருந்த ஏளனமும் வெறியும்  குரூரமும் ஓர் புல்லரிப்பை மேனியில் படரச்செய்வது. நோய்கள், அமங்கலங்கள் இவையாவும் துன்பம் என்ற ஒற்றை உணர்வின் பல்வேறு தோற்றங்கள். அதைத் தருபவள் தான் ஜ்யேஷ்டாதேவி இன்பமும் துன்பமும் நிறைந்தது இந்த வாழ்க்கை. இதில் துன்பம் வருகையில் அவைகளை முழுமையாக சந்தித்து உள்வாங்கி போராடி இன்பம் என்ற ஒன்றை நோக்கி செலுத்த வேண்டும். இன்பம் என்பது அந்த அந்த பருவத்தின் வெற்றி/ இலக்கு/ புகழ்/ நிறைவு/மகிழ்ச்சி என்பேன். அவள் தான் பகவதி. 

நல்ல துன்பங்களே நம்மை உருவாக்குபவை. கதையின் ஆரம்பத்தில் கோவிலின் மூலமாய் இருக்கும் பகவதியும், ஓரமாய் யாரும் விரும்பப்படாத ஜ்யேஷ்டாதேவியையும் காணித்திருப்பார். அந்த அமங்கள தேவியை அப்புறப்ப்டுத்தச் சொல்லி போற்றி சொன்னதால் அதை பூசை செய்யும் பண்டாரம் மனம் உடைந்து போகிறான். தன்னை ஆற்றுப்படுத்த கோவிலின் வடக்குவாசலின் அருகேயுள்ள பாறையில் ஏறி வழுக்கி விழுந்து ஒரு குகையை அடைகிறான். அந்த இருளான குகைக்குள் ஜ்யேஷ்டாதேவியின் பேருருவும் அது மூடப்பட்டு அதற்கு அப்பால் பகவதியின் கருவறை இருப்பதையும் பண்டாரம் காண்கிறான். அவளின் காலடி உயரமேயானவள் மங்கள தேவியான பகவதி என்று அறிகிறான். ஒரு வகையில் இந்த மயிர்கூச்செறியும் இந்தக் காட்சி பிம்பத்தில் ஒவ்வொரு வாசகரும் தன் தலைக்குமேல் பேருருக் கொண்ட துன்பங்களின் அன்னையான ஜ்யேஷ்டாதேவியின் தரிசணத்தை அடையளாம். வாழ்க்கையின் நிதர்சனத்தை அடையலாம்.

ஏதோவொரு வகையில் வாழ்க்கையின் துன்பத்தினால் உந்தப்பட்ட கதையின் நாயகன் ஒருவன் புத்தகங்கள் படிப்பதற்காகவே ஒரு வீட்டைத் தேடுகிறான். குடியிருக்க முடியாத வீடு என்று ஷாஃபி சொன்ன மாத்திரத்தில் அந்த வீட்டையே தேர்ந்தெடுத்து அதில் அல்லும் பகலும் புத்தகத்தைப் படித்து மாள்கிறான். தங்கப்புத்தகம் சிறுகதையில் முக்தா ஒரு இருளான அறைக்குள் சென்று நேரம் காலம் அறிய முடியாது ‘நான்’ என்பதைத் துறக்கும் செயலைச் செய்வார். உலகாயதத் துன்பங்களினால் சிக்கி மீள முடியாது உடைந்துபோய் அந்த குடியிருக்கமுடியாத அறையில் புத்தகங்களுக்குள் மூழ்கும் கதையின் நாயகன் இருக்கும் நிலையும் கூட ஏறக்குறைய அந்த நிலை தான். உடலிலிருந்து ஆன்மாவைப் பிரித்தெடுத்து ’தான்’ என்பதைக் கரைக்க முற்படும் ஒரு செயலின் படிநிலை அது. இந்த நிலையை அடைய மாய நூலான ’தங்கப்புத்தகம்’ தான் வேண்டுமென்பதில்லை; துறவியாக வேண்டுமென்பதில்லை. நல்ல துனபத்தைப் பெற்றாலே போதும். தன்னைக் கரைத்து தன்னையே வேறொன்றாகப் பார்க்க உதவும் எந்தப் புத்தகமும் தங்கப் புத்தகம் தான் எனும் திறப்பை இந்தக் கதையில் தந்திருப்பார்.

இருக்கிறேன் என்பதையே இனிமையாகப் காணுமளவு தன்னைக் கரைத்து புத்தகத்தில் மூழ்கிப் போகும் நிலை. உடலைக் கரைத்து பிரக்ஞையைக் கரைத்து விதைக்குள் பருப்பாக மாறிக் கொண்டே இருக்கும் ஒரு நிலையை ஜெ இதில் சொல்லியிருப்பார். இறுதியில் எஞ்சும் வரிகளாக இக்காவின் “போனதெல்லாம் அல்லாவுடைய கணக்கில் எழுதிவிடு” என்ற வரிகள் அமைந்துவிடுகின்றன.

ஆபகந்தி என்ற சிறுகதையில் மிகவும் துன்பத்தில் இருக்கும் ஒருவனுக்கு தன் வீட்டில் புதையல் இருக்கும் என்ற ஒரு ஒளி கிட்டியவுடன் தோண்ட ஆரம்பிக்கிறான். சலிக்காது பித்துப் பிடித்தவன் போல் தோண்ட ஆரம்பித்த அவனை பண்டாரம் ஒருவன் வந்து ‘“ஆனா ஒண்ணு, தோண்டினா வாரது என்னன்னு சொல்லமுடியாது. சீதேவி வாரதுக்கும் மூதேவி வாரதுக்கும் சரிசமமான எடமிருக்கு” என்று சொன்னதும் அவன் நிறுத்தி விட்டான். அதன் பின் அவன் இறந்தும் போகிறான்.  அதன் பிறகு மேலும் வறுமையில் அவன் குடும்பம் உழன்றமையால் துணிந்து அவனுடைய மனைவி மூதேவியா இருந்தாலென்ன “வாடி பரவாயில்லை நானா நீயானு பாத்திடறேன்” என்றெண்ணி குழி பறிக்கிறாள். புதையல் கிடைக்கிறது. அதை வைத்து தான் அவர்கள் முன்னேருகிறார்கள். அந்த நிலத்தில் இன்னும் புதையல்கள் இருக்கலாம். அதே சமயம் ஆபகந்தியும் இருக்கலாம். ஆனால் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விட்டு விடுகிறார்கள். அவரோ எதுக்கு வம்பு என்று தோண்டாமல் இருந்து விடுகிறார். “அகத்தேயானாலும் வெளியேயானாலும் அகழ்வது மிகமிக ஆபத்தானது.” என்ற வரியோடு கதை முடிகிறது. இது வெறுமே துன்பத்தேற்றி மட்டுமல்ல. அதையும் தாண்டி புறமும் அகமும் என நம்மை அகழச் செய்யும் கதை.

காட்டிலிருந்து இறங்கி மனிதர்கள் இருக்கும் இடத்தில் வந்தமர்ந்த குரங்கு ஒன்று மிகவும் கடினப்பட்டு ஒரு ஸ்க்ரூவை எப்படி மாட்ட வேண்டும் என்று கற்றுக் கொள்கிறது. முதன் முதலில் அது கற்றுக் கொண்ட விடயமாதலால் அது ஆனந்தக் கூத்தடுகிறது. அதன் பின் மனிதனைப் போலேயே அந்தக் கடையில் உலக துக்கங் கொண்டு வேலை பார்க்க ஆரம்பிக்கிறது. அம்மாவுக்கும் அரிகிருஷ்ணனுக்கும் இடையில் நடக்கும் விவாதம் ஒருவாராக மரபும் நவீனமும் முட்டிக் கொள்வதாக இருக்கிறது. குரங்கின் செய்கை அரிகிருஷ்ணனை பல வாராக சிந்திக்க வைக்கிறது. காடு என்னும் அற்புதமான இடத்தை விட்டுவிட்டு இப்படி பொருளற்ற கஷ்டத்தை இந்தக் குரங்கு ஏன் பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிக் கொள்கிறான். ”மனுசனை சம்சாரத்திலே பிடிச்சு வைக்குதது என்ன? அறிவாக்கும். ஒரு புதிய விசயத்தை அறிஞ்சுகிடணும்னுதான் மனுசன் எல்லா பிரச்சினைக்குள்ளையும் போறான்.” ஒரு வகையில் உலகின் முதல் முக்கியக் கண்டுபிடிப்பான சக்கரம்/தீ கூட மனிதனுக்கு அந்த குரங்கைப் போலத்தான் குதூகலத்தை அளித்திருக்க முடியும். குரங்கை காட்டுக்குள் விடுவதா? அல்லது அது சிரமேற்கொண்டு குதூகலமாகச் செய்யும் இந்த மெக்கானிக் வேலையில் இருத்தவா? என்ற அரிக்கிருஷ்ணனின் கேள்வி ஒவ்வொரு மானுடனும் தன்னை நோக்கிக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாக அமைகிறது.

இறுதியில் நிதர்சனம் என்ற ஒன்று இருக்கிறதே. காட்டிலிருந்து கீழே இறங்கி இந்த மன்னுலகின் ஞானதுக்கத்தைத் தேடி வந்தாயிற்று. வாழ்ந்தே ஆக வேண்டும். குரங்குக்கு மெக்கானிக் தொழில் போல இந்த மானுடமும் சாவி இருக்கிறதோ இல்லையோ, ஏதோ ஒன்றைப் பற்றி ஞானதுக்கத்தின் உச்சியில் நிறைவை அடைந்து இறப்பதோ அல்லது ஞானசன்னியாசம் அடைந்து முக்தியை அடைவதோ ஏதோ ஒன்றைக் கைக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை சாவி சிறுகதை வழங்குகிறது.

செயலூக்கி

ஜெ எப்பொழுதுமே செயல் என்பதின் மேல் தீராப் பற்று கொண்டிருப்பவர். அவர் தன் வாழ்விலும் அதையே கடை பிடிப்பவர். செயல் செய்யுந்தோறும் விசை கொண்டு எழுபவர். செயலை நோக்கித் தூண்டும் ஜெ –வின் வரியாக “ஆகவே செயல் புரிக” என்ற வரி அமைகிறது. தத்துவார்த்த கேள்விகளோடே இந்த வாழ்க்கையை அணுகி, அலைந்து திரிந்து பயணம் செய்து ஆன்று அவிந்து அடங்கி நிறைவின்மையின் உச்சியில் ஒரு நிறைவை அடையும் ஆன்மீகவாதிக்கு நிகராக செயல்வாதிகளை ஜெ வைக்கிறார். அவர்கள் இருவரும் சென்று சேரும் புள்ளி ஒன்று என்பதை தன் பல சிறுகதைகளின் வாயிலாகக் கூறுகிறார். அந்தப் பட்டியலில் ஆமை, ஆகாயம், தேனீ, சிறகு, நற்றுணை போன்ற சிறுகதைகளை வைக்கலாம்.

மிக உயரிய இலக்கை வைத்துக் கொள்பவர்கள் அதற்கு இணையாக மிக அதிகம் இழந்தாக வேண்டும் என்பது விதி. எத்துனை துன்பங்களை, பசியை, வசவுகளை, கேளி கிண்டல்களை, துரோகத்தை, தனிமையைக் கடந்து ஒரு மனிதர் தன் இலக்கை அடைய வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு கொரம்பையம்மாவைப் பற்றிச் சொல்வதே இந்த ’ஆமை’ சிறுகதை.

”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்ற குறளை ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தல் புலனின்பத்தை அடக்கினால் வரும் நன்மையைப் பற்றிச் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜெ சொல்லும் இந்த ஆமை சிறுகதையைக் கொண்டு உற்று நோக்க அப்படி தனித்துத் துறந்து கொரம்பயையே கூடாக்கி வாழ்ந்து சுருங்கி இறந்துபடும் நிலை தலைமுறை கடந்தும் பயனளிக்கும் என்ற கருத்தை அடையலாம். கொரம்பை என்பது என்ன என்று யோசிப்பவர்களுக்கு ஜெ அது பற்றிய அழகான சித்திரத்தை அளித்திருக்கிறார்.

“ஒரு கொரம்பை இப்டி ஒரு மாளிகையாட்டு வளரமுடியும்டே. ஆமைக்க சக்தி அதாக்கும் மக்கா, அதுக்கு வேகமில்லை, ஆனா விட்டுக்குடுக்காத பிடிவாதம் உண்டு”  என்ற வரிகள் ஊக்கத்தை அளிப்பவை. நாகப்பன் முதலாளி, “எனக்கோ எனக்க அப்பன் பாட்டனுக்கோ எந்த சாமியும் எள்ளுமுனை அளவுக்குக் கூட குடுக்கல்ல…” எனும் போதும்,”இனியிப்ப ஏதாவது சாமி வந்து என்ன வரம் வேணும்னு கேட்டாக்கூட போடா மயிராண்டின்னாக்கும் சொல்லுவேன்… போ போ…” எனும் மனநிலை செயல் எனும் ஊக்கியால் மட்டுமே வருவன. இந்த நிலையயே வள்ளுவரும் “தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார். ஆனால் இந்த உலகத்தில் ”நான்” அடையும் வெற்றி என்பது என்னை மட்டுமே சார்ந்ததில்லை. நான், என் அப்பா/அம்மா, அவர்களுக்கு முன்னுள்ள தலைமுறை தோறும் செய்த ஆமை முயற்சியாலே தான் இன்று பயனடைய முடிகிறது. ”ஆமைக்க சக்தி அதாக்கும்!” என்ற சிறுகதையின் இறுதி வரிகள் மனதில் கொரம்பையம்மாவை நிறுத்திவிடுபவை.

சிந்து சமவெளி நாகரீகத்தின் ஆதிசிவன் தொடங்கி இன்று வரையான காலகட்டத்தை எடுத்துக் கொண்டோமேயானால் நாம் நம் மரபில் எண்ணற்ற சிலைகளை படைத்திருக்கிறோம். அவையாவும் ஏதோ ஒரு சிற்பியால், அந்த எண்ணத்தைக் கொண்ட மனிதனால் படைக்கப்பட்டவை. சிலைகளையெல்லாம் அத்தகைய மனிதர்களின் கண்கள் வழி பார்க்க வைப்பதே ’ஆகாயம்’ சிறுகதை. பெயர் தெரியாத பல சிலைகளை உருவாக்கும் ஒரு சிற்பியாக குமரன் வருகிறான். எங்கிருந்து இந்த சிலைகள் தன்னை குமரன் மூலம் வடித்துக் கொள்ள வருகின்றனவோ என்ற எண்ணத்தைத் தூண்டக் கூடியது அவனின் வேலைப்படுகள். “எப்படியோ ஒரு தெய்வம் உருவம் கொண்டு மண்ணுக்கு வந்துவிட்டது. இந்த பொட்டனின் கையை அது தேர்வுசெய்துகொண்டது. நாம் அதை தடுக்கமுடியாது.” என்று சொல்லுமளவுக்கான விசை கொண்டது அவனின் செயலூக்கம்.

குமரனைப் போன்றே தான் அனைத்துக் கலைஞர்களும். அவர்களின் எண்ணம் என்னும் கருவறையில் பிறக்கும் ஓவியங்கள், கதைகள், திரைக்கதைகள், கவிதைகள், சிலைகள், பாடல்கள், இசைகள், ஒலிகள், வண்ணங்கள் யாவற்றையும் நினைத்துப் பார்க்க அவையுமே செயலூக்கம் கொண்டவை தான். அவர்களில் மாஸ்டர் தான் குமரன் போன்றோர்கள். ”ஆகசமுல்லா” என்று சொல்லுமளவுக்கான செயலின் உச்சத்தைக் கொண்டவர்கள்.

”எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும். அவ்ளவுதான். அதுக்குமேலே குடுக்கமுடியாது. குடுக்காதவன் விரியமாட்டான். விரியாதவனுக்கு மெய்யான சந்தோசம்னு ஒண்ணு இல்லை” என்ற வரிகள் தேனீ சிறுகதையின் சண்முகத்தின் அப்பாவுக்கானவை. தன் வாழ் நாளெல்லாம் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் உதவி கரை தேற்றி விடும் தேனீ மனிதர்கள் நம்மைச் சுற்றியும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தான் சமூகத்தின் ஆணி வேர். இவர் போன்றவரால் தான் சமூகம் தழைக்கிறது. தன்னுடைய வேலைப்பலுவின் காரணமாக அவருக்கு மிகப்பிடித்த தேன் போன்றிருக்கும் ராஜரத்தினம் பிள்ளையின் இசையைக் கூட கேட்க முடியாதிருக்கும் அவரின் செயலூக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரின் வேலையின் வீரியத்தைப் பற்றிக் கூறும்போது, ’இந்த கூடுகெட்டுத பூச்சிகள்லாம் இருக்குல்லா, தேனீ இருக்குல்லா, அதை மாதிரி. அவருக்க கைரெண்டும் ரெண்டு பூச்சிகள்னு சொல்லுங்க. அது பூப்பூவா நுணுக்கமா செஞ்சுகிட்டே இருக்கும்.’ என்ற வரி வருகிறது. செயலுக்கான வரிகள் அவை. செயல்! செயல்! என உந்திச் செல்பவை.

-தொடரும்

(இதைத் தவிரவும் இந்த புனைவுக்களியாட்டு சிறுகதைகளை பலவாறு பிரித்து பட்டியலிடலாம். மிச்சமுள்ளவை அடுத்த கட்டுரையில்.)

இரம்யா

விருதுநகர் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். தமிழிலக்கிய வாசகர்

5 Comments

  1. வணக்கம்.
    தமிழ்ச் சூழலில் ஒரு படைப்பாளரின் படைப்புகளைப் பற்றிப் பேசுவது என்பதே அரிதான செயலாக இருக்கும்போது, ஒரு படைப்பாளரின் படைப்புகளைத் தொகுத்து, நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கும் ரம்யா அவர்களுக்கு முதலில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியும் வெளிவந்த பின்னர் முழுக் கட்டுரையைக் குறித்தும் ஒரு குறிப்பு எழுத விரும்புகிறேன். நன்றி.
    – முனைவர் ப. சரவணன், மதுரை.

    • உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா. பெரிதும் உவக்கிறேன்…

  2. இரம்யாவுக்கு நுட்பமான பார்வையும், நல்ல மொழிவளமும் வாய்த்திருக்கிறது. தட்டல் வழுக்களாக இருக்கலாம் பிரதியில் அங்கங்கே எழுத்துப்பிழைகளும் உள்ளன. எ+டு -> தரிசணம், முன்னேருகிறர்கள், விளாவரி, கேளிகிண்டல். பிரதியைப் பதிவேற்றமுன் இன்னொருவரிடம் செம்மை நோக்கத்தருவது நல்லது, எம் கண்களுக்குப் பிடிபடாதவை அவர்களுக்குப் பிடிபடும். பாராட்டுகள்!

உரையாடலுக்கு

Your email address will not be published.