இம்மை செய்தது மறுமைக்காம் எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறி என
ஆங்கு பட்டன்று அவன் கை வண்மையே!
(புறநானூறு – கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரனை முடமோசியார் பாடியது )
இப்பிறப்பில் செய்த செயல்கள் மறுபிறப்பில் உயர்ந்த கதிக்கு உதவும் என்றெண்ணி அறம் செய்வது அறமாகாது . அது அறவிலை வணிகம். அப்படிச் செய்பவன் அல்ல ஆய் அண்டிரன். அறமாற்றுதல் சான்றோர் சென்ற நெறியென்றே அவனும் அவ்வழியே செல்கிறான்.
ஆய் வணிகம் செய்யவில்லை. அறம் செய்கிறான். அவன் கொடுக்கிறான். அதன் மூலம் எதையும் பெறுவதில்லை. ஏன் செய்கிறான்? அது சான்றோர் சென்ற நெறி. எனவே தளராது அறம் செய்கிறான். ” பட்டன்று” என்பதை ” பட்டது” என்று வாசிக்க வேண்டும் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.” பட்டன்று” என்பதைப் பாட பேதமாகச் சொல்கிறார்கள். ” பட்டன்று” என்று கொண்டு படித்தால் சான்றோர் சென்ற நெறி என்பதற்காகவும் அறம் செய்பவனல்ல ஆய் என்றாகிறது. அவன் அறத்தை விற்பவனல்ல. அதை ஒரு நன்நெறி என்று கொண்டு அதில் செல்வனுமல்ல. என்றால், அறம் செய்வது எதற்காக? என்கிற பெரிய கேள்வி இப்பாடலின் பின்னே எஞ்சியுள்ளது.
சான்றோர் சென்ற நெறியில் சென்றவன் என்று கொண்டு வாசித்தாலுமே அது ஒன்றும் அவ்வளவு நிறைவான பதிலாகத் தோன்றவில்லை. கடமையில் ஒரு எந்திரத்தனம் உள்ளது. ஏன் எதற்கு என்று தெரியாத ஒரு எந்திரத்தனம். எந்திரத்திற்கு கனிவு உண்டா?
அறமாற்றுதல் ” சொர்க்கத்தில் துண்டு போட்டு வைப்பதல்ல. பொன்னைக் கொடுத்து பொன்னைவிட மின்னும் புகழைப் பெறுவதல்ல. கொடுப்பதனினால் விம்மிப் புடைக்கும் அகந்தையைப் பெறுவதல்ல. நம் உபகாரிகளுக்கு எண்ணெய் கொப்பரைகளின் மீது பயம் இருப்பதால், அறத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் முற்றாக அழித்துவிட்ட அறத்தை இன்னொரு இடத்தில் கொஞ்சம் இட்டு இரண்டையும் சமன் செய்யப் பார்க்கிறார்கள்.
அறம் செய்தால் ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்கிறார்கள். ஆத்மாவை திருப்தி செய்வது எவ்வளவு அவசியமான காரியம்! சமயங்களில் கொள்பவரை விட கொடுப்பவர் மகிழ்ச்சிக்கு ஆளாகிறார். ” மகிழ்ச்சி” கிடைத்தற்கரிய பொருளன்றோ? ” தெய்வம் நின்று கொல்லும்” என்று எவனோ ஒருவன் சொல்லிவைத்திருக்கிறான். அந்த வரி நம்மைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிறது. தெய்வம் நம்மோடு அமர்ந்து மூன்று சீட்டு விளையாடுமென்றால் , பிறகு நம் சேட்டைகள் துவங்கிவிடும்.
மகாகவிகள் நிறைய கிடுக்குப்பிடிகளோடு அலைபவர்கள். ” மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்று அதிலொரு பிடியை எடுத்து நம்மை நோக்கி எறிகிறார் அய்யன். ஒருவன் எதனிடமிருந்தும் ஒளிந்து கொள்ளலாம். ஆனால் தன் மனத்திடமிருந்து தப்பிக்க இயலுமா? அதற்கு அவனை அப்பட்டமாகத் தெரியும்.
என் வளர் இளம் பருவத்தில் ஒரு பொன் மொழியைச் சந்தித்தேன். படித்தவுடன் பிடித்துப் போனது. பாக்யராஜ் சொன்னது. ஒரு நிமிடம்…” தீவிர இலக்கியத்திற்குள் பாக்கியராஜ் வரலாம் இல்லையா?” – “வரலாம்.”- “அப்ப சரி..” அந்தப் பொன்மொழி என்னவெனில்” சந்தோசத்திலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பார்க்கிறது தான்”. அந்தப் பெரிய சந்தோசம் கிடைக்கவில்லையெனில் நாம் சந்தோசப்படுத்துவோமா? மனித உயிரால் எதையுமே பெறாமால் மகத்தான காரியங்களை, தியாகங்களைச் செய்ய இயலுமா? இடது கை கொடுப்பதை வலது கை அறியலாகாது என்கிறார்கள். இடது கையும் அறியாத ஒரு நிலை உண்டல்லவா? அது மனிதனுக்குச் சாத்தியமா? அவன் நிச்சயம் அறத்தின் வழியே ஏதோ ஒன்றைப் பெறுகிறான். என்ன பெற்றால் அவன் அறவான்? என்ன பெற்றால் அவன் வணிகன்? இப்படி அறத்தைச் சுற்றி நிறைய சிக்கலான கேள்விகள்.
தி.ஜானகிராமன் ஒரு கதை எழுதியுள்ளார். சுந்தரதேசிகர் என்பவரை ராமதாஸ் என்கிற நிலத்தரகன் ஏமாற்றிவிடுகிறான். இல்லாத நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக ஆசை காட்டுகிறான். அவ்வளவு சமயோஜிதமாக, நயவஞ்சகமாக காய் நகர்த்துகிறான். தேசிகர் தன் மனைவியின் நகைகளக் கூட விற்று ராமதாசுக்கு குடுத்துக் கொண்டே இருக்கிறார்.ஆனால் நிலம் கிரயம் ஆவது போல் தெரியவில்லை. தேசிகர் விழித்துக் கொள்ளும் முன் 24,000 ரூபாயை பிடுங்கி விடுகிறான் தரகன். பிறகு போலீஷில் மாட்டில் அடி உதை பெறுகிறான். ஆனால் கோர்ட்டில் தேகரிடமிருந்து பணம் ஏதும் வாங்கவே இல்லை என்று சத்தியம் செய்து விடுகிறான். ஜாமீனில் வெளிவரும் அவன் திடீரென்று காய்ச்சல் கண்டு படுத்த படுக்கையாகிறான். ஏமாற்றிய காசெல்லாம் தீர்ந்து போனதால் வறுமையும் பீடித்துக் கொள்கிறது. மரணத்தறுவாயில் நைந்து போய்க் கிடக்கிறான். அப்போது தேசிகர், அதாவது நமது தி.ஜா அவன் வீட்டிற்குள் வருகிறார். அவரிடம் பழி உணர்ச்சி ஏதும் வெளிப்படுவதில்லை. ரொம்பவும் நிதானமாக பேசுகிறார். அவனை கெட்டிக்காரன் என்று பாராட்டக் கூட செய்கிறார். அவன் மேல் இரக்கமும் கொள்கிறார். ‘ கடனோடு செத்தா நமது சாஸ்திரப்படி நல்வழி கிட்டாது. நீ அப்படி சாகக்கூடாது. உன் கையில் இருப்பது எதையாவது கொடு. ஒரு ரூபாய் கூட போதும். அதை வாங்கிக் கொண்டு மொத்தம் கடனும் தீர்ந்ததென்று லோகமாதா மேல ஆணையா சொல்லிவிட்டு போய்விடுகிறேன்’ என்கிறார். ராமதாசின் மனைவி விம்மி விம்மி அழதபடியே எதையோ அவன் கையுள் திணித்து அவரிடம் நீட்டச் செய்கிறாள். அந்த இரண்டணாவைப் பெற்றுக் கொண்ட தேசிகர் ” பராசக்தி மேல ஆணையா சொல்றேன் உன் புருசன் கடன பூராவும் தீர்த்துட்டான். கவலைப் படாதே…அவனும் கவலைப் பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
“கடன் தீர்ந்தது” என்பது இக்கதையின் தலைப்பு. இது நான் கதை சொன்ன லட்சணம். தி.ஜா எப்படி சொல்வார் என்பது உங்களுக்குத் தெரியும். 24,000 ரூபாய் அறப்பிசகை இரண்டனாவை வைத்து சரிக்கட்டிவிடப் பார்க்கிறார் தி.ஜா. கதையின் கடைசி காட்சிகளில் நமக்கு கண்ணீர் பெருகி வருகிறது. ஆகவே சரியாகிவிட்டது போல்தான் தோன்றுகிறது. ராமதாசுக்கு நல்வழி கிட்டட்டும் என்று ஒவ்வொரு வாசகனும் வேண்டிக் கொள்கிறான். இந்தக் கதையில் அறத்தை ” அட்ஜஸ்” செய்வது இன்னொரு அறத்தின் பெயரால் என்பதால் அது ” அட்ஜஸ்” என்பதே நமக்குத் தெரிவதில்லை.
தி. ஜா ” கடன் தீர்ந்தது” என்று சொன்னால், யூமா வாசுகி “தீராத கணக்கு ” என்கிறார். இது மொத்தமும் ஒரே பூமி. இங்கு வசிப்பது ஒரே மனிதனின் வேறு வேறு உருக்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பு. இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு குழந்தை சிணுங்கி அழுதால் அதற்கு நீயும்தான் பொறுப்பு.
தி.ஜா மன்னித்து விட்டுவிடுகிறார். யூமாவோ ” கொன்று போடு! ” என்று முழந்தாளிட்டு நிற்கிறார். ‘பெருங்கணக்கு’ இது.
தீராத கணக்கு
எதையோ நினைத்தபடி
எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது….
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்
ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்.
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது…
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்
பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்
உன் குழந்தை என் கால்களைத் தொட்டு
கை மலர்த்தும்படிச் செய்தாயே,
பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது
எவ்வளவு பாடுபட்டது…
அதைவிடவும் நீ என்னை
முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்
இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்
அனாதைக் குழந்தையை அடக்கம் செய்யவென்று
இரந்து நிற்கிறாய் இன்று
புவி சுமக்க முடியாத பாரமாக இது
எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது…..
அய்யோ அய்யோ என்று
பதறி அழிந்தபடியே
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து
உன்னைக் கடந்து போகின்றேன்
தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க
ஏன் உனக்குத் தெரியவில்லை?
“யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்?” என்கிற தேவதேவனின் கவிதையையும் இந்த வரிசையில் வைத்து நோக்கத்தக்கது
ஆத்மாநாமின் கவிதை ஒன்று…
என் ரோஜாப் பதியன்கள்
என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களை
இன்றுமாலை சந்திக்கப் போகிறேன்
நான் வருவது அதற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்லப் படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு
கண்ணாடியால் எனைப்பார்த்து
வெளி வருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான் தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த் தூங்கு என்றன
மீண்டும் ஒருமுறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி.
ஆத்மாநாமை விடப் புகழ்பெற்ற கவிதை இது.
“நான் ஊற்றும் நீரைவிட
நான்தான் முக்கியமதற்கு”
என்கிறது கவிதை. தன் உயிருக்கு ஆதாரமான நீரைக் காட்டிலும் அதை ஊற்றுபவனின் அன்பில் வளரும் அந்த ரோஜாவைப் போல் ஒரு மனிதனால் இருக்க இயலுமா? இதை எழுதியவன் ஏன் கிணற்றில் குதித்தான்? யார் அவனைப் பிடித்துத் தள்ளியது?
அறம் என்று ஒன்று இருக்குமானால், அந்தக் கிணறு எழுந்து ஓடியிருக்காதா? இது மேலும் ஒரு சிக்கலான கேள்வி.
ஆய்அண்டிரனும் ஆத்மாநாமும் கவிதையின் சொர்க்கத்தில் ஆரத்தழுவி இன்புறக்கூடும்
இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
தெய்வம் நின்றுகொல்லும் எனும் வரிக்கு உரையெழுதி என்னை பகுத்தறிவு பாதையில் இழுத்து விட்டீர்கள்.