/

இழந்துவிட்ட பொன்னுலக உணவுமுறையின் ‘மகிமைகள்’: இளவேனில்

மனிதர்கள் பழங்காலம் குறித்த அதீதக் கற்பனைகளை எப்போதும் விரும்புகிறார்கள். கடந்த காலங்களை அமைதியும் வளமும் மிகுந்த ‘பொன்னுலக’மாகவே அனேகரும் நம்ப விரும்புகிறோம். மகிமையும், மேன்மையும் மிக்க முன்னோர்களின் வாழ்வு முறை மீதான ஏக்கம் நம்மில் இருந்துகொண்டே இருக்கிறது. இழந்துபோன பொன்னுலகம் பற்றிய தீவிர நம்பிக்கைகளே, இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகைப் பெருமளவு நிர்மாணிக்கும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தீராப் பசிக்கு, அமுது படைக்கும் அட்சய பாத்திரங்களில் ஒன்றாக திகழ்கின்றன.

இணைய உலகம் குறிப்பிட்ட அளவில் பொன்னுலகக் கதைகளால் நிரம்பி இருக்கின்றது. உலகமயமாக்கல் காலத்தில் இறந்தக் காலமென்பது இழந்துவிட்ட பூர்விகக் கதைகளின் மீது கட்டி எழுப்பப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ‘பூர்விகம்’ என்பதன் பொருள் உணவு, உடை, சமூக ஏற்றத்தாழ்வுகள், மொழி, போர், கலை, வழிபாட்டுமுறை என்று அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த வாழ்முறையை குறிக்கிறது. இவை அனைத்திலும் உணவுமுறை குறித்த மகிமை கதைகள் இணைய வெளியில் அதிகப்படியான கவனம் பெறுகின்றன. அப்படியான முக்கியத்துவம் பல நேரங்களில் அறிவியல் மறுப்பு வாதங்களாக பரிணமிக்கின்றன. இன்றைய கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நோயிக்கு தீர்வாக இயற்கை மருத்துவமும், உணவு வழி மருத்துவமும் மெய்நிகர் வெளியை ஆக்கிரமித்திருக்கும் அதே நேரம் அவை பெருமளவில் தடுப்பூசிக்கி எதிரான முழக்கங்களாகவே நிறைவுப் பெறுகின்றன.

உலக இயக்கத்தின் அடிப்படையாக ‘உணவு’ இருக்கிறது. உயிர்களின் பரிணாமமும் முரண்களும் உணவுத் தேவையைச் சார்ந்து உருவானவை. இந்திய நிலப்பரப்பில், இழந்துவிட்ட உணவுப் பெருமிதத்தின் பெரும்பான்மையான உரையாடல்கள் ’காலனியத்துக்கு முன் X பின்’ எனும் அரசியல் கலாச்சார முரண்களில் இருந்தே உருவானவைகளாக இருக்கின்றன; அல்லது வரலாற்றின் எல்லைகளை மேலும் இறுக்கினால் இது ’உலகமயமாக்கலுக்கு முன் X பின்’ எனும் முரண்களின் மோதல்களாகப் பார்க்க முடியும். ’காலனியத்துக்கு முன் X காலனியத்துக்குப் பின்’ எனும் முரண், இழந்துவிட்ட உணவுப் பெருமிதத்தின் உரையாடல் வெளியை மூன்று நூற்றாண்டுகள் வரை விரிவாக்கிப் பேசுவதற்கான வாய்ப்பைத் தரும். ’காலனியத்துக்கு முன் X காலனியத்துக்கு பின்’ எனும் முரணை ’இயந்திரமயமாக்கலுக்கு முன் X இயந்திரமயமாக்கலுக்குப் பின்’ என்று வரையறுக்கும் சாத்தியங்களும் இருக்கின்றன அல்லது ’நிலப்பிரபுத்துவ உணவு முறை X முதலாளித்துவ உணவு முறை’ எனும் பொருளாதார முரணாகவும் அணுக முடியும். நம் காலத்தின் உணவு முரண்களை ’நிலப்பிரபுத்துவ உணவு முறை X முதலாளித்துவ உணவு முறை’ எனும் நிலையிலிருந்து அணுகுவது பண்பாட்டு/பொருளாதார உரையாடல்களை நிகழ்த்த உதவும் என்று கருதுகிறேன்.

இயந்திரமய/முதலாளித்துவக் காலகட்டத்தில் நடந்தேறிய இடம்பெயர்வுகளின் ‘வேகம்’ குறித்து வரலாறு பற்றி அடிப்படை அறிவு இல்லாத எவராலும் கூட மிகவும் இயல்பாக புரிந்துக்கொள்ள முடியும். இடம்பெயர்வுகளின் வேகம் என்பது மனித சமூக நிகழ்வுகளான மொழி, கலை, அரசியல், உணவுமுறை, உற்பத்திமுறை, குற்றம் என அனைத்தையும் உள்ளடக்கியதே. இழந்துவிட்ட நம் உணவுப் பெருமித முரண்களை, ‘இடம்பெயர்வுகளின் வேகம்’ உருவாக்கியிருக்கிறது.

முதலாளித்துவ உணவுமுறையின் இடம்பெயர்வுகள் ஏகாதிபத்தியம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் பின்புலத்தில் அதுக்கலாம் வரை நடந்தேறிய இடப்பெயர்வுகளைக் காட்டிலும் மிகவும் விரைவாக நடந்தேறியது. முதலாளித்துவ உணவு முறைகளின் வேகமான இடம்பெயர்வுகள் அதே அளவு வேகத்தோடு நிலப்பிரபுத்துவ உணவு முறையை நீர்த்துபோகச் செய்தது. உலகெங்கிலும், குறிப்பாக, நிலப்பிரபுத்துவம் தீர்க்கமாக மத நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கிய பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிவியல் அக்காலத்தின் முற்போக்குப் பொருளாதாரமாகப் பார்க்கப்பட்ட முதலாளித்துவத்துடன் இணைத்து இயங்க ஆரம்பித்தது.அறிவியல் முதலாளித்துவதுடன் இணைத்து இயங்குவதின் பண்பாட்டு, வரலாற்று காரணங்களை குறித்த சுவாரஸ்யமான ஆய்வுகளும் விவாதங்களும் பல இருக்கின்றன.

காலனிய இந்தியாவில் இயந்திரமயம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் மூன்றும் ஒருங்கிணைந்து முதலாளித்துவ உணவுமுறையின் வேகமான இடப்பெயர்வுக்கான வெளியை உருவாக்கிக் கொடுத்தது. இந்தக் காலகட்டம் தான் உணவுமுறை/தானிய இடப்பெயர்வுகள் நடந்தேறிய முதல் காலகட்டமா எனில், இல்லை எனும் பதிலையே மானுடவியல், தொல்லியியல் ஆய்வுகள் அறியத் தருகின்றன. இடப்பெயர்வுகளே பரிணாமத்தின் அடிப்படை, இடப்பெயர்வுகளே பன்முகத்தன்மை கொண்ட உயிர்களை உருவாக்கிப் பரிணமிக்க வைக்கிறது.

21ஆம் நூற்றாண்டின் உணவுமுறையை அமெரிக்க நொறுக்குத்தீனி உணவு முறை என்றும் சொல்லலாம். அதற்குக் காரணம் இழந்துவிட்ட உணவுப் பெருமிதங்கள் உடல் நலம், ஆரோக்கியம் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க நொறுக்குத்தீனி உணவு முறை முதலாளித்துவ உணவுமுறையின் உட்பிரிவாக இருப்பதால், நிலப்பிரபுத்துவ உணவு முறை X முதலாளித்துவ உணவு முறை எனும் முரண்களிலிருந்து அணுகுவது சில பதில்களைக் கண்டடைய உதவும். அமெரிக்க நொறுக்குத்தீனி உணவு முறை என்பதைப்போல் இந்திய நிலப்பிரபுத்துவ உணவு முறையைச் சாதிய உணவுமுறை என்று வரையறுக்கலாம். முதலாளித்துவ உணவு முறையையும் சாதிய உணவுமுறையையும் ஒப்பிடும்போது, லாபம் என்ற அடிப்படை நோக்கிலேனும் முதலாளித்துவ உணவுமுறை சாதி சார்ந்த உணவுப் பாகுபாடுகளை மிகக் குறுகிய அளவிலேலேனும் களைந்தது.

எடுத்துக்காட்டாக, இந்திய இந்துச் சமூகத்தில் நெய்யின் பயன்பாடு; இதை நிலப்பிரபுத்துவ உணவுமுறை X முதலாளித்துவ உணவுமுறை எனும் நிலைகளில் வைத்து பார்க்கலாம். இத்தகைய ஒப்பிடு முதலாளித்துவ உணவுமுறையே மிகவும் சிறந்தது எனும் தீர்ப்பை எழுதுவதற்கான வேலை அல்ல. மாறாக, நிலப்பிரபுத்துவ உணவுமுறை X முதலாளித்துவ உணவுமுறைகளின் முரண் மெய்நிகர் உலகின் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தகவல் பசிக்கான காலமாக எப்படி மாறி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதே.

மெய்நிகர் உலகில் பரவும் உண்மை போன்ற தகவல்கள், சதிக்கோட்பாட்டுப் பிரதிகள், போலிச் செய்திகள் ஆகியவற்றில் அதிகம் இடம்பெறுவது பெருமுதலாளித்துவ நிறுவங்களின் சதி வலைகளும், லாப வெறியும் (இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பெருமுதலாளித்துவ நிறுவங்களுக்குமான நெருங்கிய உறவை மறுக்க முடியாதுதான்) அதன் மூலம் இழந்துபோன பெருமையைமிகு உடல்நலமிக்க தானியங்களையும், கால்நடை இனங்களையும் அழிக்கும் வேலையை செய்கின்றன எனும் கருத்தை உருவாக்கியிருக்கின்றன. இலுமினாட்டி சதி கோட்பாடுகளிலிருந்து உருவாகும் இந்த பெருமித வெளிப்பாடுகள் உபரி/லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு கூட்டு முதலாளித்துவத்தை கேள்வி கேட்காமல் ஒரு சுவாரசியமான சதி கதைகளை சொல்வதுடன் நிறைவு கொள்கின்றன. மேலும் இந்தியாவில் ‘தூய்மை’ அல்லது ‘பூர்விகம்’ மீதான ஏக்கம் என்பது இழந்துவிட்ட சாதிய ஆதிக்கத்தின் ஏக்கமாகவே கருதவேண்டியும் இருக்கின்றது.

2.

ஒரு உணவின் புவியியல் சார்ந்த தேவைகள் பயன்களையும் கருத்தில் கொண்டே, பூர்விகம் எனும் கருத்தை அணுக வேண்டி இருக்கின்றது. மேலும் பூர்விகம் என்பது என்ன என்ற கேள்விக்குப், பதில் தூய்மைவாதக் கருத்தியல்களின் வழியேதான் வெளிப்படுகிறது. எது பூர்விகம் எனும் கேள்விக்கு, இந்த அண்டத்தில் நிலையான எந்த ஒரு பதிலும் இல்லை. மேலும் உயிர்களின் பரிணாம வரலாற்றில் பூர்விகம், தூய்மை போன்ற கருத்தாக்கங்களைத் தொக்கி நிற்கும் எந்த உயிர்களும் பரிணாமித்ததில்லை. பூர்விகம், தூய்மை எனும் பதங்களை மானுடவியல், மரபியல், பரிணாம உயிரியல், தொல்லியல் தரவுகள் முன்வைக்கும் பொது இரண்டு பதங்களும் பொருள் சிதைந்து காணாமல் போய்விடுகின்றன. இங்கு எதுவுமே எப்போதுமே பூர்விகமாக இருந்திருக்கவில்லை – மனிதர்கள், உணவுப் பயிர்கள், கால்நடைகள் உட்பட.

தமிழ் இணைய வெளியும் அதன் அங்கமான சமூக ஊடகவெளியும் பெருமளவில் தமிழ் அடையாளப் பெருமிதங்களிலே உழல்கிறது. இறந்த போன பூர்விகப் பொன்னுலகின் பெருமைகளில் திகட்த்திகட்டத் தமிழ் மெய்நிகர் சமூகம் நிரம்பி வழிகின்றது. அப்பெருமிதங்கள் மிகுதியான போலிகளால் அல்லது உண்மையைப் போன்ற செய்திகளால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மொழிப் பெருமிதங்கள், சாதிப் பெருமிதங்கள், பண்பாட்டுப் பெருமிதங்கள் என்று முடிவற்று நீளும் வரிசையில் இழந்துவிட்ட பூர்விக உணவுமுறைப் பெருமிதங்களும் அதையொட்டிய ஏக்கங்களும் அதை மீட்டெடுக்கும் முயற்சிகளும் நாள்தோறும் பெரும்பான்மையான தமிழரின் சமூக ஊடக வெளிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

தமிழ் மெய்நிகர் உலகின் நிரந்தர வைரல் நிகழ்வுகளில் ஒன்று, இழந்துவிட்ட பூர்வீகக் கால்நடை இனங்கள் குறித்த செய்திகள். குறிப்பாக மாடுகள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதர்கள் fertile crescent என்று மானிடவியலாளர்கள் அழைக்கும் இன்றைய சிரியா, லெபனான், ஜோர்டான் நாடுகளை ஒட்டிய பகுதிகளில் முதன் முதலில் மாடுகளைத் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக வளர்க்கத் தொடங்கியதை இன்றளவில் கிடைக்கப் பெற்றிருக்கும் தொல்லியல் மானுடவியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. பிரபலமான மானுடவியல் நூல்களான ’ஆதி இந்தியர்கள்’, ’துப்பாக்கி, கிருமி மற்றும் எஃகு’ போன்றவற்றைக் கொண்டே இந்தத் தரவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

Fertile Crescent அல்லது ஜாக்ரோஸ் மலைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த மக்கள் கால்நடை வளர்ப்பினை கிழக்கு ஆசியா முழுவதும் கொண்டு சென்றார்கள். இவர்களில் ஒருசிலரே பின்னாளில் சிந்து சம்வெளில் நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள். அவர்களே இப்போது அழிந்துவிட்ட அனால் இன்றைய இந்திய மாட்டு இனங்களின் முன்னோரான இந்திய ஒவ்ராக்ஸினை (indian aurochs) வளர்த்தனர். இந்திய ஒவ்ராக்ஸ், ஒவ்ராக்ஸ் எனும் அழிந்துவிட்ட ஆதி மாட்டு இனத்திலிருந்து தோன்றியது. ஒவ்ராக்ஸ், போஸ் அக்யூடிஃப்ரான் எனும் ஆதி மாட்டு இனத்திலிருந்து பாலிக்கோன் எனும் பனி யுகத்தில் தோன்றியது. ஒவ்ராக்ஸ் மற்றும் போஸ் அக்யூடிஃப்ரான் இந்திய நிலப்பகுதியில் இருந்து மட்டும்தான் தோன்றியது என்பதற்கான எந்தத் தரவுகளும் இல்லை.

ஒவ்ராக்ஸ்கள் பரிணாம வளர்ச்சியில் இரண்டு பிரிவுகளாக மாறி ஒன்று கிழக்கை நோக்கியும் மற்றொன்று மேற்கை நோக்கியும் பிரிந்து சென்றன. கிழக்கை நோக்கிப் பயணமான ஒவ்ராக்ஸ்களில் இருந்து தோன்றிய ஜீபூ, பின்னாளில் எழுபத்தைந்து மாட்டினங்களாகப் பரிணமித்தது. அதில் குறிப்பிடும்படியான ஒன்று, தமிழ்நாட்டின் காங்கேயம் மாடுகள். மிக இயல்பாகப் புரிந்துகொள்ளகூடிய செய்தி, இத்தகைய பரிணாம வளர்ச்சி இயற்கை அல்லது செயற்கைக் கலப்பினுடாகவே இருக்க முடியும் அல்லது நேரடிப் பரிணாம வளர்ச்சி என்ற வாய்ப்பையும் கருதலாம்.

எனவே, தமிழ் நிலத்துக்கான தூய்மையான,பூர்வீக இனமாக எந்த ஒரு மாட்டு இனமும் இல்லை எனலாம். மாறாக இழைமணி (DNA) தரவுகள் இன்று நம்மிடம் இருக்கும் அல்லது நாட்டு மாட்டினங்கள் எனப்படும் அனைத்தும் எல்லையற்ற இயற்கை / செயற்கை கலப்பினங்களின் முடிவுகள்தான் என்பதைக் காட்டுகின்றன. எந்தவொரு பொருளும் இயற்கையான ஒழுங்கைத் தக்கவைக்க முடியாது, காரணம் இயற்கையில் ஒழுங்கு என்று ஏதும் இல்லை அல்லது ஒழுங்கு காக்கும் எதுவும் பிழைத்திருக்காது.

தமிழ் பூர்வீக மாட்டினங்களைக் காப்பாற்றுவதற்கான இயக்கம் பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் கால அல்லது காலனித்துவத்திற்கு முந்தைய சமூகங்களின்போது மனிதர்களால் வளர்க்கப்பட்ட இயற்கை / செயற்கைக் கலப்புகள் மூலம் உருவான இனங்களைக் காப்பாற்றும் இயக்கமாகும். நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் காலப் பெருமிதங்கள் வெளிப்படையாக ஆண்டான் X அடிமை காலப் பெருமிதங்களே. சமூக அடுக்குகளில் தங்களின் அபரிதமான ஆதிக்கத்தை இழந்துவிட்ட நினைவு வெளியின் வியாகூலமே பாரம்பரியத்தைப் பற்றி மிகுந்த அக்கறை கொள்ள வைக்கின்றது.

உதாரணமாக தமிழ்ச் சமூகத்தில் கால்நடைகள் – வீரம் இரண்டிற்கும் இருக்கும் நேரடித் தொடர்பிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களின் வீரம் ஆதிக்கத்துடன் தொடர்பிலலிருக்கும் ஒரு உணர்வு. புகழ்பெற்ற 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம் கூடஇழந்த கலாச்சாரப் பெருமிதத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது. வீரம் பண்பாடு போன்ற பதங்களே, பெரும்பாலான இளம் தலைமுறையினரை வீதிகளை நோக்கி – உண்மையில் கடற்கரையை நோக்கி – வரவைத்தது.

இழந்துவிட்ட பொன்னுலக மகிமையின் ஒரு பகுதியாக மெய்நிகர் உலகில் காணக்கூடிய மற்றொரு சுவாரஸ்யமான வாதம் பூர்வீகப் பயிர்கள். உலகெங்கிலும் நுகரப்படும் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றைப்பற்றி நாம் பேசலாம் – வாழைப்பழம்! ஏனென்றால் வாழைப்பழத்தை மனிதர்கள் வளர்க்க ஆரமித்ததும் ஒரு சுவாரசியமான கதைதான்.

தமிழ்ப் பண்பாட்டின் பிரதான பழங்களில் ஒன்று வாழைப்பழம். மா, பலா, வாழை எனும் பிரபலமான சொற்றொடர் தமிழ் பேசும் மக்களிடையே வாழை மரத்தைத் தமிழ் நிலத்தின் மரம் என்றும் வாழைப்பழம் தமிழ் உணவின் ஒரு பகுதி என்று உறுதியாக நம்புவதற்கு ஏற்றதாக இருக்கின்றது. வாழைப்பழம் தமிழ் உணவின் ஒரு பகுதி என்ற கருத்தில் எந்தச் சிக்கலும் இல்லை, ஆனால் எந்தக் காலம் முதல் என்பதில்தான் அடிப்படையான சிக்கல் இருக்கின்றது.

வாழைப்பழத்தைப் பற்றிய வசீகரமான உண்மை என்னவென்றால், ஆஸ்ட்ரோனேசியர்களின் வருகைக்கு முன்னர் பப்புவா நியூ கினியாவில் முதன்முதலில் அது பயிரிடப்பட்டது. பின்னர், ஆஸ்ட்ரோனேசியர்கள் வாழை பயிரிடலைத் தென்கிழக்கு ஆசியா முழுவதும் எடுத்துச்சென்றனர். பின்னர் வாழை தமிழ் பேசும் மக்கள் உட்படப் பல தென்கிழக்கு ஆசியர்களின் பிரதான உணவின் ஒரு பகுதியாக மாறியது. வாழைப்பழம் என்பது தமிழ் உணவின் ஒரு பகுதி மட்டுமல்ல, பண்பாட்டு விழுமியங்களிலும் நேரடியான பங்கேற்பைச் செய்கின்றது, குறிப்பாக விழாக்கள், திருமணங்கள், பக்தி நிகழ்வுகள் என்று சொல்லலாம்.

வரலாற்றின் காலவரிசையில், ஒரு பசிஃபிக் தீவுக்கூட்டத்தின் காடுகளில் வளர்க்கப்பட்ட காட்டு மூசா தாவரம் ஆஸ்ட்ரோனேசியர்களின் வருகைக்காகக் காத்திருந்தது, பின்னர் பண்பாட்டு முக்கியத்துவத்தை அடையக் கிட்டத்தட்ட 7000+ மைல்கள் பயணித்து ஜாக்ரோஸ் மலைகளிலிருந்து கிழக்கு ஆசியாவுக்கும் பின்னாளில் தென்இந்தியாவிற்கும் குடிபெயர்ந்த ஒரு குழுவினருக்குப் பிரதான உணவின் ஒரு பகுதியாக மாறியது. எனவே, வாழைப்பழத்தின் புனிதம் பற்றிய கருத்தாக்கத்தில் பற்று கொள்ள வேண்டியிருந்தால், வாழைப்பழத்தை உண்பதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டி இருக்கும்.

தமிழ் அடையாளத்தின் அடிப்படையாகக் கருதப்படும் மற்றொரு பிரபலமான தாவரத்துக்கும் இதே வாதம் பொருந்திப்போகிறது. போரஸஸ் அல்லது பனை மரம். பனை தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வ மரமாகும், தமிழ் மக்களுக்கான தெய்வீக மரமாகவும் கருதப்படுகிறது. பனையின் பூர்விகம் ஆப்ரிக்காவின் வெப்பமண்டல நிலத்தில் உருவானது. ஆப்ரிக்கா இந்தியாவுக்கு இடையேயான நீர்வழி பாதையில் ஆசியாவுக்குக் கொண்டுவரப்பட்டு இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறியது என்று வரலாற்று, மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (Pipatchartlearnwong,et.al)

தமிழ் அடையாளத்தைக் காப்பதற்கான வழிகளில் ஒன்று பூர்விக இனங்களைப் பாதுகாத்தல் என்ற கருத்தைத் தமிழ்ச் சமூகத்தில் பரவலாகப் கேட்க முடியும் அதுவே நம்மில் பலரைத் தமிழ் நாட்டு மாடுகளை, பனைமரத்தை என்று பலவற்றைப் பாதுகாக்கும், அழியும் நிலையில் இருக்கும் எந்தவொரு உயிரினத்தையும் பாதுகாப்பது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் அதை தமிழ் அடையாளத்துடன் இணைப்பது பொருத்தமானதாக இருக்காது. மாறாக அதை ஆப்பிரிக்க அடையாளத்துடனே இணைத்துப் பார்க்க முடியும் (குறிப்பாக ஒரு துணை-சஹாரா அடையாளமாகப் பார்க்க வேண்டி இருக்கலாம்.)

3.

பெருமிதம் அல்லது மகிமை எப்போதும் பரிணாமவெளியின் எல்லையைக் குறுக்கும் பணியை மட்டுமே செய்யும். வளர்ச்சியின் எல்லைகள் பன்முகத்தன்மையுடன் வடிவிலே இயங்கும். பன்முகத்தன்மை இயற்கையின் ஒழுங்காக இருக்கின்றது அல்லது பன்முகத்தன்மையின் தேர்வுகளைக் கொண்டே உலகம் தன்னை உருவாக்கிக்கொண்டு இன்று வரை விரிவடைந்துகொண்டே செல்கிறது.

இயந்திரமய நவீன உலகில் உருவான போக்குவரத்து இயந்திரங்கள் மனிதர்களையும் தானியங்களையும் கால்நடைகளையும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லும் பணியை விரைவாக்கியது. உலகமயமாக்கல், பொருள்முதல்வாதக் கூறுகளின் தொடர்புகளை இதற்கு முன்னான நூற்றாண்டுகளைவிட இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மிகவும் எளிமையாக்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு தமிழர் மொஸரெல்லா பாலாடைக் கட்டிமீது பெருவிருப்பம் கொண்டிருந்தால் அதை தெற்கு இத்தாலியில்தான் சுவைப்பேன் என்று விரும்பினால் அதைச் சுவைக்க குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் இன்று அதே விருப்பத்தை இருபத்திநான்கு மணிநேரத்தில் நிறைவேற்றலாம் அல்லது அதே தெற்கு இத்தாலிய மொஸரெல்லா இந்தியப் பல்பொருள் அங்காடிகளிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

பயிர்கள், கால்நடைகள், உணவுகள், மனிதர்கள், பண்பாடுகள் நகர்வு அல்லது புலம்பெயர்வு பொன்னுலகமான இறந்த காலத்தைவிடத் தற்போதைய நூற்றாண்டுகளில் மிகவும் எளிதாக நடந்தேறுகிறது. இயற்கையான புலம்பெயர்வுக்கு மாறான இந்த விரைவான புலம்பெயர்வுகள் நமக்கு முடிவற்ற அச்சத்தை கொடுக்கிறது. அந்த அச்சம் உயிர் பயத்தைக் கொடுக்கிறது. ஆனால் அறிவியல் இந்த அச்சத்துக்கு எதிரான பதிலையே அளிக்கிறது. மருத்துவ அறிவியலின் வளர்ச்சி மனிதர்களின் வாழ்நாளை அதிகமாக்கியிருக்கிறது.

பழமை மீதான ஏக்கம் இன்னொரு வகையில் மனிதர்களில் பிரதிபலிக்கிறது என்று கருதுகிறேன். அது நம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள். எடுத்துக்காட்டாக இந்த பிரதியின் தொடக்கத்தில் எழுதியதை போல், கோவிட்-19 தொற்றுக்குத் தீர்வாகப் பாரம்பரிய வைத்தியமுறை அல்லது உணவு சார்ந்த சிகிச்சைமுறை எளிமையான தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இப்படியான பாரம்பரிய வைத்தியமுறை அல்லது உணவு சார்ந்த சிகிச்சை எளிமையான தீர்வாக நமக்குத் தோன்றுகிறது. இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் கலந்த குடிநீரைத் தீர்வாகப் பார்ப்பது எளிமையானதாகத் தோன்றலாம். அதுவே குழாய்கள் மாட்டப்பட்டு அவசர சிகிச்சையில் இருக்கும் காட்சி அதிகம் அச்சமூட்டுவதாக இருக்கின்றது.

மனிதர்கள் எப்போதும் தங்கள் கேள்விகளுக்கு எளிதான தீர்வுகளையும் பதில்களையுமே விரும்புகிறோம். மெய்நிகர் வெளியின் எளிமையான தீர்வுகள், நாம் உண்மை என்று நம்புவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சார்பான ஆதாரங்களை நோக்கியே நம்மை இயக்குகின்றன. இதை உளவியல் ‘உறுதிப்படுத்தல் சாய்வு’ என்று சொல்கிறது. இதைத்தான் பெரும்பான்மையான நேரங்களில் நம்மை அறியாமல் இணைய வெளியில் செய்ய எத்தனிக்கிறோம். உறுதிப்படுத்தல் சாய்வே இத்தகைய பொன்னுலகக் கதைகள் மெய்நிகர் உலகில் பரவுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

மனிதர்களை இணைக்கமாக்கவும், வாழ்வு முறையை மேலும் சனநாயகமாக்கவும் அனைத்துவிதத் தொழிநுட்பச் சாத்தியங்களுடன் தொடங்கிய இந்தப் புதிய நூற்றாண்டு அதைச் செய்யாது தன்னிடம் இருக்கும் தொழிநுட்பச் சாத்தியங்களைக் கொண்டு மனிதர்களைத் தனிமையானவர்களாய் மாற்றி, சிந்தனை வெளிகளின் எல்லையை மிகவும் சுருக்கியிருக்கின்றது. இத்தனிமை மெய்நிகர் வெளியில் நம் இருப்பை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளி அதன்மூலம் நம்மிலிருந்து மேலும் அதிகப்படியான தரவுகளை உறிஞ்சும் வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் சிறப்பாகச் செய்கின்றன. அதுவே அபத்தப் பெருமிதங்கள் நிரம்பிய போலிச் செய்திகளையும் சதிக்கோட்பாடுகளையும் நோக்கி இழுக்கின்றன. இதன் ஒருபகுதியாக இழந்துவிட்ட ஆரோக்கியமான பொன்னுலக உணவுமுறை மீதான ஏக்கமும் வெளிப்படுகிறது.

இழந்துவிட்ட பொன்னுலக உணவுகள் குறித்து கவலை தோய்ந்த குரல்களை, நம் இன்றைய மனித வாழ்வின் அனைத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவத்துக்கு எதிரான குரலாகவும் நிச்சயம் கருதலாம். எடுத்துக்காட்டாக, மரபணு மாற்றுத் தானியங்கள், இரசாயன உரங்கள், அணு ஆற்றல் போன்று வரிசை படுத்தலாம். மேலும், உபரி மீதான பேராசை கொண்ட முதலாளித்துவ உணவுகளின் தீமைகள், இதனால் உருவாகி வரும் நோய்கள் அல்லது காலநிலை மாற்றங்கள் நமது இருப்பை அச்சுறுத்துகின்றன. உபரி மீதும் மூலதனம் மீதும் வேட்கை கொண்ட ஏதோ ஒருவகையில் நிலப்பிரபுத்துவ விழுமியங்களை கொண்டிருக்கும் கூட்டு முதலாளித்துவம் குறித்து. ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ், கார்ல் மார்க்ஸ், ரோசா லக்சம்பர்க், அன்டோனியோ கிராம்ஸ்கி ஆகியோரின் நாட்களில் இருந்து டேவிட் கிராபர், யானிஸ் வருஃபாகிஸ், எஸ்தர் டஃப்லோ, தாமஸ் பிகெட்டி போன்றோரின் சமீபத்திய அத்தியாயங்கள் வரை விவாதிக்கவேண்டிய நீண்ட முடிவற்ற உரையாடல் அது.

மூலதனப் பொருளாதாரம் குறித்த அபத்தங்களுக்குத் தீர்வு, நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறைக்குச் செல்வது அல்லது இழந்துவிட்ட பொன்னுலகை மீட்டெடுப்பது. இப்படி மீட்டெடுக்கப்டும் வாழ்க்கை இந்தியச் சமூகத்தில் சமத்துவமற்ற சாதியச் சமூகமாகத்தான் முடியும். அல்லது, வறுமை, பஞ்சம், பட்டினி, முடிவடையாப் போர்கள், அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், காலநிலை ஆபத்துக்கள் என்று பலவற்றுக்குக் காரணமான கூட்டு முதலாளித்துவத்தின் லாப வேட்கைக்கும் தீர்வு சாதியமும்/ஏற்றத்தாழ்வுகளும் நிரம்பிய பொன்னுலகம் அல்ல.

மாறாக விவாதங்கள், உரையாடல்கள் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தைப் பற்றியதாக மாற்றமடைய வேண்டும். நிச்சயமாக, எல்லாவற்றுக்கும் ஒற்றைத் தீர்வைத் தேடும் கனவுகளைப் பற்றி ஏக்கம் கொள்ள முடியாது. இயற்கை/ செயற்கை நிகழ்வுகள் எதையும் வெள்ளை / கருப்பு என்று முடிவு செய்துவிட முடியாது. எனவே இந்த உரையாடல் ‘மனிதர்கள் X மற்றவை’ எனும் இரண்டு புள்ளிகளில் சிக்கித் தவிக்கும் முடிவற்ற ஒன்றாகவே முடிகிறது.

இளவேனில்

இளவேனில் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். கடந்த எட்டு ஆண்டுகளாக புதினங்கள், கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘உரையாடல்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.