/

நட்பின் சாட்சியினால் நனைத்துக் கட்டியெழுப்பிய நூல்கள்: சந்தரெசி சுதுசிங்க

நேர்கண்டவர்: விப்புலி நிரோஷினி ஹெட்டியாரச்சி – தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா

சந்தரெசி சுதுதுங்க சிங்கள இலக்கிய உலகில் அறியப்பட்ட கவிஞர். தொல்லியல் ஆய்வு, எழுத்து முதலானவற்றிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தொல்லியல் துறையில் கௌரவ பட்டமும், மைசூர் பல்கலைக் கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பாடலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அண்மையில் வெளியான இவரது சிங்கள கவிதைத் தொகுப்பான “தீப்பற்றிய சிறகுகள்” முழுக்க முழுக்க யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்ட நிகழ்வைப் பாடுபொருளாகக் கொண்டு வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவருடன் விப்புலி நிரோஷினி ஹெட்டியாரச்சி நிகழ்த்திய நேர்காணலின் தமிழ் வடிவம் இது. 

சாட்சி இருந்தாலும் நீதி கிடைக்காத, கடும் வன்முறை மிக்க அரசியல் விஷமிகளின் பாதகச் செயல்களும்,  மிலேச்சத்தனமான சம்பவங்களும்  எமது நாளாந்த நினைவுகளிலிருந்து  மறைந்துவிட்டாலும்,  அவை எவையும் எமது மானிட வரலாற்றிலிருந்து முற்றாக அகன்று விடவில்லை. கடந்த கால நிகழ்வுகளை அழித்து விட கடுமையாக முயற்சிக்கும் பிரதான அரசியல் அபிலாஷைகளையும் மீறி அந்த நினைவுகள் மீள மீள ஒளிர்கின்றன. அவ்வாறான நினைவுகளை புதைத்து விட்ட மக்கள் சமூகம் ஒன்று இருக்குமாயின், அந்த மக்கள் சமூகமும் மரணித்ததற்கு சமம். அவ்வாறான கசப்பான நினைவுப் பதிவுகள்  கடந்த கால அழிவுகள் பற்றிய  சிற்சில விடயங்களை மீண்டும் வெளிப்படுத்துகின்றன.

சந்தரெசி சுதுசிங்கவின் ‘தீப்பற்றிய சிறகுகள்’, யாழ் நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய அந்த இனவாத தீ பற்றிய நினைவுகளை மீட்கும் கவிதைப் படைப்பாகும். காலவோட்டத்தில் புதைந்து போன அந்த செய்தியினை மீட்டு; வெளியில் எடுத்த இந்த நினைவு நூல் கவிதாயினியின் இதயத்துடிப்பினை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுதியாகும். மீண்டும் சரிப்படுத்த முடியாத இந்த வரலாற்று தவறுக்கான பிராயச்சித்தம், மாயை, வேதனை, எதிர்ப்பு மற்றும் அதீத பீதி என்பனவற்றை ஒரு சோக காவியத்திற்குள் இணைத்துள்ள இந்த படைப்பு  பற்றி  நாம் பேச வேண்டிய  பல விடயங்கள் உள்ளன. கவிதாயினி சந்தரெசி இதற்காக விசேட ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த நடவடிக்கையின் அனுமானங்கள், இடைவெளிகள், அனுபவங்கள், பாத்திரங்கள் மற்றும் தகவல்கள் என்பனவற்றை கவிதை தொடர்ச்சியினூடாக முன்வைக்கின்றார். திம்பிரிகெய, மலகம, மத்தக பணவர, ஸ்முர்த்தி மற்றும் புனராகமனய என்று ஐந்து பகுதிகளாக தொகுக்கப்பட்ட இந்த கவிதைத் தொகுதி, அவரின் அம்முயற்சிக்கு   சான்று பகர்கின்றது. மேலும், இதனூடாக நுற்குகைக்கு உயிர்ப்பும் தனிநபர் ஆன்மாவின் ஊட்டமும் செலுத்தப்படுகின்றது. 

இங்கு, நூற்குகையுடன் சமச்சீராக இணையும் தோழமையுடனான வாசகர்களுக்கு வரிக்கு வரி, கவிதைக்கு கவிதையைப் போன்று திட்ட உருவரைவுகள், கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், வடிவமைப்பு அனைத்திலும் யாழ் நூற்குகையை தேடிச்சென்ற இந்த துணிச்சலான இளம் பெண்ணின் வாழ்வு மீதான பிரியமும் மனிதக் கருணையும் நிரம்பிய பரிசுத்தமான இதயமே காணக் கிடைக்கின்றது.

கிளைகளாக நீளுகின்ற  வெப்பத்தை தணிக்கும் குளிர்மை

சில் எடுத்த தூண்கள் உயர்வான வாழ்வுக்கு வழிகாட்டும்

புண்ணியமான பல்கலைக்கழகம் வீணையும் வாசிக்கும்

பெரும் ஆலயமாக திகழும் நூற்குகை ஸ்தலம்…

பெரும் ஆலயமாக திகழும் நூற்குகை ஸ்தலம் (கவிதை 01). நூற்குகை ஸ்தலம் பெரும் ஆலயமாயின் அதன் தெய்வத்தை வணங்கிய இதயங்களை தேடிச்சென்ற பயணத்துடன் இந்த கதையை ஆரம்பிப்போமா?

இந்த நூற்குகை ஸ்தலம் நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் எனது மனதுக்குள் பிரவேசித்த போதிலும் இளம் பராயத்திற்கு வந்த பின்னரும் நூற்குகை ஸ்தலத்தினை மறக்க முடியாத காரணத்தினால் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு சென்று அது பற்றி தேடிப் பார்க்க என் மனது என்னை வற்புறுத்தியது. அன்றிலிருந்து நான் இந்த நூற்குகை ஸ்தலத்தின் தெய்வத்தை வணங்கிய மனிதர்களை தேடிக்கொண்டு  சுற்றித் திரிந்தேன். அந்த நூற்குகை ஸ்தலம் பற்றி மனதில் ஏற்பட்ட அனைத்துவிதமான உணர்வுகளும் இந்த தீப்பற்றிய சிறகுகளுக்கு உயிரூட்ட காரணமாகியது என்றே கருதுகின்றேன்.

‘ஆசித் திலகம் நாட்டின் நெற்றியில் ஜொலிக்கும்’

‘யாழ்ப்பாண புத்தர்’

‘யாழ்ப்பாணம் சீதனம்’ (வரதட்சணை)

கண்களால் பார்த்திராத அந்த நூற்குகையை மனதால் பார்ப்பதற்கு உங்களை வழிநடத்திய அடிப்படை தூண்டுதல்  எது?

1933ம் ஆண்டு ஓர் நாள் கே. எம்.செல்லப்பாவின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட இந்த யாழ் பொது நூலகம் என்பது வீர காவியம் போன்று பண்டைய காலத்தின் மரபுரிமையை பறைசாற்றும் ஒன்று. இந்த நூற்குகையின் பரப்பானது கற்கைக்குரிய மட்டத்தினைச் சேர்ந்தது. அதனால் அந்த நூற்குகை ‘இலங்கை  அன்னையின் நெற்றியில்  ஜொலிக்கின்ற திலகம்’ என்று நான் உணர்கின்றேன். அந்தளவுக்கு அர்ப்பணிப்புடனும் காதலுடனும் நூலகம் ஒன்று கட்டியெழுப்பப்பட்டது பற்றி அறியக் கிடைப்பது மிகவும் அரிதான விடயமாகும். இவ்வாறான  பெறுமதி மிக்க பொக்கிஷம்  நாட்டுக்கு பெருமை சேர்க்கும்  ஓர் விடயமாகும். அதேபோன்று இந்த மக்கள் சமூகத்திற்கு இந்த நூலகம்  அவர்களின் இதயங்களில்; வைத்து வழிப்படுகின்ற வழிபாட்டுக்குரிய அடையாளமாகவும், தமது அறிவின் மதிப்பினை உறுதிப்படுத்தும் ஒன்றாகவும் உள்ளது. அதனாலேயே யாழ்ப்பாணத்தின் புத்த பெருமான்   என்று எனக்கு அது தோன்றியது. அதுபோன்று அது அவர்களின் பெருமையையும் பெருஞ்செல்வத்தையும் வெளிப்படுத்தும் விடயம். ஆதலால் தான் அது அவர்களின் சீதனம் என்று அடையாளம் காட்ட முனைந்தேன். கொடூரமான சில மனிதர்களினால் அவை அனைத்தும் ஒரே ஒரு தீக்குச்சியினால் அழிப்புக்குள்ளானது.

‘சகோதர நூல்களின் மூச்சு இறுகி

விழிகளும் மேலே குத்திட்டு உணர்வற்ற போது

மயக்கம் ஏற்பட்டதனால் எனக்கு

எஞ்சிய சம்பவங்கள் நிச்சயமற்று போயின.

விடியற்காலை சைரன் ஒலியுடன்

விழித்து  பார்த்தேன்

ஐயோ கடவுளே என் குடும்பம்

படுக்கையிலேயே சாம்பலாகிக் கிடந்தது….(கவிதை 32)

எரிந்து சாம்பலாகிய நூல்கள் உயிருக்காக போராடி துடிக்கும் ஒரு நூலின் ஓலம்…. இந்த துயரை சாதாரண உரை நடையில் எழுதாமல்  கவிதையாக்கியது ஏன்?

புத்தகங்கள் என்பது எம் கண்களுக்கு  புலப்படாத ஏதோ ஒரு சக்தியைக் கொண்ட பொருள் என்று நான் தீடமாக நம்புகின்றேன். எம்மை விட புத்தகங்களுக்கு எதிர்காலம் பற்றி நன்கு தெரியும். இந்த நூல்கள் சுவாசிக்கின்றன: சமிக்ஞை செய்கின்றன. அப்படியெனில் நூலகம் தீக்கிரையாகும் போது நூலுக்கு எவ்வாறான எண்ணங்கள் தோன்றியிருக்கும்? எம்மை உயிருடன் தீயில் இடும் போது எமக்கு தோன்றும் எண்ணங்களும், புத்தகத்திற்கு தோன்றும் எண்ணங்களும் ஒரே விதமான வேதனை மிகுந்த எண்ணங்களாகவே இருக்கும். இந்த எண்ணத்தை  நான் உரைநடையில் எழுதினால் அது ஒரே சொற் தொடரில் மறந்துவிடக் கூடும். எனினும் கவிதை மாதிரியில் அது வேறுபட்ட கோணத்தில் நினைவுகளாக மனங்களில் பதிந்துவிடும்.

…மனச்சாட்சியை

வழியில் இறக்கிவிட்டு

அண்மித்தது

கரும் புகையிரதம்

தீ கக்கும் விலங்கின் கூவல் ஒலியுடன்.’ (கவிதை 34)

மனச்சாட்சியை வழியிலேயே இறக்கிவிட்டு புகையிரதத்தில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றது நூற்குகைக்கு தீ மூட்டியவர்கள் மட்டும் தானா? அன்று முதல் இன்று வரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்ற உறவுப் பயணங்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே எமக்கு நினைவில் வருவது புகையிரதம் என்ற போக்குவரத்து சாதனம் தான். இது ஒரு அடையாளம். வடக்குக்கு அனைவரும் செல்வதும், வடக்கிலிருந்து  அனைவரும் தெற்கிற்கு வருவதும் இந்த புகையிரதம் என்ற சாதனத்தினூடாக தான் என்ற எண்ணம் எமக்குள் ஊடுருவி உள்ளது. துரதிருஷ்டவசமாக வடக்கில் நிகழ்ந்த துயரங்கள் மத்தியில்,  இங்கு சொல்லப்படுகின்ற புகையிரத  பயணங்களுடன் தொடர்புடைய சம்பவங்களும் இருப்பதனைப் போன்று, இந்த புகையிரதத்தில்  வடக்கு நோக்கி சென்ற காதல், கௌரவம், அறிவு பற்றியும் பல கதைகள் உள்ளன. காலத்திற்கு காலம் தெற்கிலிருந்து வடக்குக்கு சமாதானம் பற்றிய எதிர்பார்ப்பினை மனதில் ஏற்றிக் கொண்டு சென்ற உறவுப் பயணங்களை எம்மால் மறக்க முடியாது. இன்று நாம் செல்கின்றவாறு சுதந்திரமாக செல்லும் உறவுகளை நோக்கிய பயணங்களை விட, வேறுபட்ட தன்மையிலான முடிவுகள், கஷ்டங்கள் என்பனவற்றை தாங்கிக் கொண்டு வடக்குக்கு சென்ற கடந்த கால பயணங்கள் பற்றி கேட்கும் போது இப்பொழுது மனதுக்கு ஓரளவுக்கு நிம்மதி தோன்றுகின்றது. அந்த உறவுப் பயணங்கள் சென்ற மனிதர்களின் மனித நேயத்தை இன்றும் வடக்கில் அடிக்கடி எம்மால் காணக் கூடியதாக உள்ளது.

இருந்ததா இனம்  காற்றில் மிதந்து

தந்தை கன்னங்கரவின்

இலவச கற்பித்தலுக்கு

யாழ்ப்பாணமும் மாத்தறையும் கண்கள் போன்றிருந்தன அங்கு

அறிவு சோற்றைப் பகிர இரு வேறு கரண்டிகள் இல்லா நாட்களில்,

ராமநாதன் கண்ட நிம்மதி கீற்று மறைந்ததா?

குமாரஸ்வாமி பாதை நன்கு தெரியாமல் போனதா?

வர்ணக் கறையில்  உலகம் ஒன்று தோன்றியதா?

தாமரை பிளந்து கீழே விழுந்தது நூலகம் அருகிலா?

இது  நூலில் வருகின்ற 35வது கவிதை…

‘ஆராதனா புத்துனே’ என்ற தலைப்பில் வரும் 109 கவிதைகளின் ஊடாக நீங்கள் விடுக்கும் இந்த அழைப்பும் இன ஒற்றுமை தொடர்பாக உங்களது ஆத்மார்த்த பார்வையை பல விதமாக வெளிப்படுத்துகின்றதாக உள்ளது.  அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி இது:

‘அரிச்சுவடி நூலில் மென்மேலும் பக்கங்களைச் சேர்த்து

பழக்கமற்ற எழுத்துக்களை மனவெளியில் விடுவித்து

வாசியுங்கள் மகனே கழுத்தை உயர்த்தி விழிகளைத் திறந்து

படிப்பறிவு அழிக்கும் எல்லைக்கிராமங்களின் கோடுகளை

இறகுகளை விரித்து ஆடும் வடக்கின் மயில்களே

அதிக புள்ளிகளைப் பெற்று பறந்து வாருங்கள் இங்கே

இருளான விழிகள் இருளிலேயே இறக்கும்

விளக்கு ஒளி இன்னும் தெற்கில் இருக்கும்’.

இலவசக் கல்வியின்  அதி உயர் பலனைப் பெற்ற கல்விமான்களின் இந்த துயரச் சம்பவம் தொடர்பிலான இதயத்துடிப்பு உங்களுக்கு கேட்டது எப்படி?

சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர போன்றவர்கள் கொண்டிருந்த அபரிதமான மனித நேசத்தின் விளைவாக இலவசக் கல்வி எமக்கு கிடைத்தது. வடக்கு கிழக்கு என்ற வேறுபாடு அவரிடம் இருக்கவில்லை. அதேபோன்று இலங்கைக்கென பல்கலைக்கழகம் ஒன்று உரித்தாகும் போது பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்கள், குமாரஸ்வாமி போன்றவர்கள் அனைவரும் இன வேறுபாடு இன்றி கல்விக்கான உரிமையைப் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறான மனிதர்கள் வாழ்ந்து மறைந்த இந்நாட்டில் நூலகம் போன்ற மகத்தானதொரு கருத்தியலை  அழிக்கும் போது,  இதுவரை காலமும் அவர்கள் எமக்கு உரித்தாக்கிய கல்வியினால் நாம் எதனைப் பெற்றுக் கொண்டோம் என்ற சிந்தனையே தோன்றுகின்றது. ஒரே இரவில் அந்த தியாகங்கள் அத்தனையையும்  குறைத்து மதிப்பிட்டு எல்லாவற்றையும் அழித்து நாசமாக்கி விடுகின்றனர். அதாவது மிகத் துல்லியமாக ஒரே கோட்டில் எல்லாவற்றையும் வெட்டி வேறாக்கியது போன்று.  அத்தருணத்தில் அவர்கள் உயிருடன் இருந்திருப்பார்களாயின் இவ்வாறான அழிவுகளை பார்க்கும் போது அவர்களுக்கு என்ன தோன்றியிருக்கும்?

தமிழ் மாணவர்களின் கல்வி பற்றி ஒரு சிலரால் வெளிப்படுத்தப்படும் தவறான கருத்துக்களையும்,  பொறாமையையும்  மையமாகக் கொண்ட விடயங்களை கண்டிப்பதனையே ‘ஆராதனா புத்துனே’ கவிதையில் வெளிப்படுத்தியிருக்கின்றேன்.

திருட்டு வழியில் பல்கலைக்கழகம் வருகின்றனர் என்ற பேச்சு அவர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துகின்றது. அதோடு இந்த உலகில் வாழும் அனைவரினதும் உரிமையாகக் கல்வி உள்ளது. அதனை ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ வரையறுக்க முயற்சிக்கப்படுமாயின் நாம் பிற்போக்கான கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ஓர்  சமூகமாக இருக்க வேண்டும். கல்வி என்பது தகுதியின் அடிப்படையில், திறமை அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பதனையே நான் கூற விளைந்தேன். இந்த விடயமே அந்த கவிதையில் கூறப்படுகின்றது. தெற்கில் ஒரு சில தரப்பினர் மத்தியில் உள்ள இந்த தவறான எணண்த்தினைக் கண்டிப்பதற்காக எழுதப்பட்ட கவிதை இது. வட பகுதி மக்களின் மௌனித்துப் போன மனச்சாட்சிக்காகவும், அந்த வேதனையை தணிக்கும் நோக்கத்திற்காகவும் எழுதப்பட்டது. 

‘கொட்டாங் கிழங்கு பனங்கருப்பட்டி

சுவை மண்டிய இதயத்தின் அடி வரை பெருக்கி

நினைவுக்கு வரும் ஆண்டியா கிணற்றின் ஆழம்

மயோசின் சுண்ணாம்புக்கற் தகடு மத்தியில்

உயிருக்கு போராடும் உவர்நீர் அலையின் சுவாசம்

இருண்ட வானில் தன்னந்தனியே

பூக்களின்றி வெடிக்கும் துயர வெடி சத்தம்

துளைத்து தெரிகின்ற மனதின் மேல்

அழைத்துவரும் நினைவுகளை தெருச்சந்தி

சாம்பலான பிரார்த்தனைகள் திருநீறாக

நாற்பது ஆண்டுகள் கடந்தும்

காற்றுடன் கலந்து தும்மலை கூட்டிவரும்.

ஒரே கவிதையை விலைக்கு வாங்கி

நூலக புத்தகத்தினுள்

ஓளித்தேன் இதயத்தின் ஒரு மூலையில்

மனிதநேயத்துடன் கலந்து பிணைத்து…’ (கவிதை 98)

உங்களின் கவிதைத் திறனை புடமிட்ட கவிதை இது. கலாசார உறவுகள் பற்றிய உணர்வு மட்டுமா அல்லது உன்னத மனித நேயம் பற்றிய உணர்வு மட்டுமா உங்களிடம் உண்மையில்  உள்ளது?

நான் இந்த உலகத்தை நேசிக்கின்றேன்.  இதயசுத்தியுடன்  அநீதிகளை எதிர்க்கின்றேன். உலகம் ஒரு வானவில் என்றே நான் கருதுகின்றேன். இந்த கலாசார பன்முகத்தன்மையை நேசிப்பதனை ஒரு புறம் வைத்துவிட்டு நோக்கினால்,   என் மனதில் அதிக இடத்தினை ஒட்டுமொத்த மானிடர்களுக்காக ஒதுக்கியுள்ளேன். இதனால் தான் அது வடக்குக்கும் பொதுவானதாக உள்ளது. உலகில் தொலைதூரப் பகுதிகளில்  வசிக்கும் மக்கள் மீது  செலுத்தும்  நேசத்தை மிகவும் தீவிரமாகவும் சிறப்பாகவும் இலங்கை வாழ் தமிழ் மக்கள்  மீது செலுத்த எனது மனம் எப்பொழுதும் தயார் நிலையிலேயே உள்ளது.

அன்று அந்த அரசியல் கூலிப்படையினர் கல்விமான் சரச்சந்திர மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தினை நினைவூட்டி யாழ்ப்பாணம் நூற்குகைக்கு தீ வைத்ததும் அவர்களே தான் என்ற கருத்து உங்களது கவிதையில் இவ்வாறு கூறப்படுகின்றது.

மனமே சிங்கபாகுவுக்காக தாழ்ந்த தலை

பேரறிவாளர் சரச்சந்திரவுக்கு தாழவில்லை ஏன்

 இது ஜனநாயகம் ஆளுகின்ற உலகாம்

கற்றவர்களையும் நூற்குகையையும் வீழ்த்துமா?  (கவிதை 46)

‘நான் ஹோமோ இரெக்டஸ்

அமர்ந்திருக்கின்றேன்

காந்தி வீதியின் முடிவில்

காலை மாலை அனுபவிக்கின்றேன்

நொந்து வேகின்றேன்

நெருப்பினைக் கண்டுபிடித்த தவறுக்காக…. (கவிதை 55)

உங்கள் கவிதைத் தொகுதியில் எங்கள் இதயத்தை சுட்டுப் பொசுக்கிய கவிதை இது.

தொல்பொருளியல் பாடத்தில் மனித பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலப்பகுதிகள் பற்றி நாம் கற்கின்றோம். அதில் ஹோமோஇரெக்டஸ் மனிதன்  நெருப்பு பயன்பாட்டுக்கு பழக்கப்பட்டான் என்று  கூறப்படுகின்றது. இந்த ஹோமோஇரெக்டஸ் மனிதன் காந்தி வீதியின் முடிவில் இருந்துகொண்டு துயருரும் விதம் இந்த கவிதையில் கூறப்படுகின்றது. அம்மனிதன் நெருப்பினைக் கண்டுபிடிக்காவிடின் இந்த மகத்தான பொக்கிஷமான இந்த நூலகம்  இவ்வாறு அழிந்துபோயிருக்காது என்ற கருத்தில் நின்று அந்த கவிதை எழுதப்பட்டது.  மற்றைய விடயம் ,  காந்தி வீதி என்பது இரண்டு விடயங்களை வெளிப்படுத்துகின்றது. பொதுநூலகத்திற்கு பிரவேசிக்கும் ஒரு வழியாக இந்த பாதை உள்ளது என்பது ஒரு விடயம். மற்றையது அகிம்சாவாதத்தில் ஈடுபட்ட காந்தியின் தத்துவம் முடிவில் நின்று தவிக்கின்றது   என்பது மற்றைய விடயமாக உள்ளது.

உங்களது அடிப்படை குறிக்கோள் வடக்கு- கிழக்கு இணைப்புக்கான  பாலம் அமைப்பதா அல்லது வேறுபட்டதொரு இலக்கியப் படைப்பினை மேற்கொள்வதா?

இலக்கியப் படைப்புகளை செய்ய எத்தனையோ இலக்கியப் படைப்பாளிகள் நம்மத்தியில் உள்ளனர். அவர்கள் மிகவும் உயர் தரத்தில் அவ்வாறான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் என் தேவை வடக்கு கிழக்கு தெற்கு இணைப்புக்கு உதவக் கூடிய ஏதாவது ஒன்றை உருவாக்குவதாகும். அதற்காக நான் இலக்கியத்தினை ஒரு ஊடகமாக ஓரளவுக்குப்  பயன்படுத்திக் கொள்கின்றேன்.  சமாதானத்தின் பாலத்தை (இணைப்பினை) உருவாக்குவதற்கு தேவையான அதீத முயற்சிகளை எடுப்பது எனது குறிக்கோளாகும்.

தீப்பற்றியெரிகின்ற மனங்களுக்குள் மீண்டும் தீயை வைக்கும் சமூக பேச்சாடல்கள் அன்றி பற்றியெரிகின்ற மனங்களை குளிர்விக்கும் புதிய பேச்சாடல்களை நோக்கி இந்த நூலினூடாக பிரவேசிக்க முடியுமாயின் அதனை எவ்வாறு செய்யலாம்?

பற்றி எரிந்துகொண்டிருக்கும் மனங்களுக்காக முன்னின்று செயற்படுவதனை  மீண்டும் தீ மூட்டும் செயல் என்று நான் கருத மாட்டேன்.  எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு துயரச் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான கருத்தியல் ரீதியிலான தூண்டுதல்களை மேற்கொள்தல் என்றே அதனை நான் கருதுகின்றேன். அது பற்றி சிந்திக்கும் போது பற்றி எரிந்த மனங்களால் ஓரளவுக்கு குளிர்மையும், தணிப்பும் உணரப்படும். அதற்கான பேச்சாடல்களையே நாம் கட்டியெழுப்ப வேண்டும். அது பிராயச்சித்தம், மன்னிப்பு, மௌனித்துப் போகாத நம்பிக்கை, அன்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்ப காரணமாக அமையும் என்று  கருதுகின்றேன். ஆகக்குறைந்தது இந்த வரலாற்றை கூட அறியாமல் ஒரு சில கருத்தியல்களைப் பிடித்துக் கொண்டு இருக்கும் தற்கால இளம் சமுதாயம் கூட ஏதோ ஒரு அளவுக்கு ஆரம்பகால சம்பவங்களை விளங்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் நெருங்கி வர ஆரம்பிப்பர் என்றே இதனூடாக நான் நம்புகின்றேன்.     

விப்புலி நிரோஷினி ஹெட்டியாரச்சி

கவிஞர், சிறுவர் எழுத்தாளர், சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இதுவரையில் ரு காவ்யா - ரூபாவலியா, சண்டகா, சகுந்தலாவாங்கே சூல காவ்யா, மற்றும் நிக்மனகா நிமித்தக் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.