ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

ஓவியங்கள் 'சேது வேலுமணி'

1

நாம் நினைத்ததெல்லாம் நம்மை ஆசிர்வதிப்பதில்லை
இப்போதைக்கு சம்பந்தமில்லாத ஏதோ ஒன்று ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கிறது
அது காலத்தின் வரைபடத்தில் ஒரு புள்ளியாக நமை வைத்து நகர்த்திவருகிறது
நம்பிக்கை ஒளிரும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும்
காலம் ஒரு யூடர்ன் எடுத்து
திரும்புகிறது
நாம் போகக்கூடும் பாதை
அப்போது தானே விரிகிறது.

°

பெளர்ணமி நாளொன்றில்

ஒளிப்பந்தலொன்றில்
திருவிழா வைத்து
களிப்பு முற்ற பைத்திய நிலையைத் தருவித்துக்கொண்டு
விதவிதமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும்
கூட்டத்தின் ஓரத்தில்
ஒரு பலூன் விற்பவனுக்கு
அவ்வப்போது வந்து வந்து போகிறது
தன் சிறு பிறழ்வு

அதை எப்படி அங்கே எடுபடச்செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை

கூட்டம் கலைகிறது
வியாபாரம் முடிகிறது

யாரோ அந்தரத்தில் ஒரு பலூனை தவறவிட்டுப்போயிருக்கிறார்கள்

அதன் அலைதலின்மையில் அலைதலுள்ளது
மிதத்தலின்மையில் மிதத்தல் உள்ளது

உக்கிரமான அந்த மெளனத்தில் பித்தின் மெல்லிய பொலிவுள்ளதைப் பார்த்தான்

வானத்தை இரு விரல்களால் உரு பெருக்கினான்

கண்கள் கூசும் பலூனிலிருந்து
கொஞ்சம் வெளிச்சத்தை
எரியிழையறுந்த குமிழ் விளக்கொன்றில்
கொஞ்சம் நிரப்பிக்கொண்டான்.

சுவரில் எழுந்த இரட்சனை

கரண்ட் இல்லை
சிறிய அகல் ஒளி
அதன் முன்
பக்திமையில் பிரார்த்திப்பது போல் அமர்ந்திருந்தோம்

ஒரு நொடி குழந்தையை விட்டு
சும்மா எழுந்தேன்

பகையுருவம் கூட இல்லை
விழுந்துகிடந்த
எம் நிழல் தாம்

ஒரு மருட்டும் தோரணையில்
என் முன்
அப்படி எடுத்ததொரு பேருரு.

காகிதப்பறவை

காதல் என்னிடம்
ஒரு காகிதப் பறவையாக இருந்தது
அதைக் கொஞ்சினேன்
அதோடு குலாவினேன்
மகிழ்ச்சியாக இருந்துவந்தேன்

உண்மையில்
மாயாமே நானறியேன்

ஒருநாள் ஆர்வம் மேலிட
அதற்கு உயிர் தந்தால் என்னென்று
கூட்டத்தைக் கூட்டி
ஒரு கைக்குட்டையை அதன் மேல் கவிழ்த்து
நயமற்ற சந்தத்தை ஒரு மந்திரமென ஜபித்தேன்
அது ஜீவன் கொண்டு
வேறு உலகை நோக்கி பறந்துபோனது

அது இல்லாமல் நானில்லை

மீண்டும்
அதை கண்டடையும் முயற்சியைத் தொடங்கினேன்

மழை தன் முதல் காலை எடுத்து வைக்கும் இடத்தின் மண்துகள் போல கிடந்து காத்துக்கொண்டிருக்கிறேன்

கண்கள் கூசும் வெளிச்சத்தில்
இமைகளை
ஆயிரம் முறை
அனத்தியனத்தி
மூடி மூடி பார்த்தென்ன

அரை மாத்திரைக்கு வந்து போன மின்வெட்டை என்னால்
ஈடுசெய்ய முடிவதே இல்லை.

ச.அர்ஜூன்ராச்

சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. "ராஜ Single " கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

1 Comment

  1. கண்கள் கூசும் வெளிச்சத்தில்
    இமைகளை
    ஆயிரம் முறை
    அனத்தியனத்தி
    மூடி மூடி பார்த்தென்ன

    அரை மாத்திரைக்கு வந்து போன மின்வெட்டை என்னால்
    ஈடுசெய்ய முடிவதே இல்லை.

    சிறப்பு ஐயா மிக்க மகிழ்ச்சி

உரையாடலுக்கு

Your email address will not be published.