முந்தைய பகுதிகள்:
கலையே உளசிகிச்சையாய் (பகுதி 1)
கலையே உளசிகிச்சையாய் (பகுதி 2)
“கலையே உளசிகிச்சையாய்” புத்தகத்தில் கலையின் பயன்கள் அதன் ஏழு செயல்பாடுகள் வழியாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன. நூலின் முன்னுரைப்பகுதியும், “நினைவுக் கூர்தல்” எனும் தலைப்பு கொண்ட முதல் அத்தியாயமும் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கலை எதற்காக?
நவீன உலகம் கலையை மிக முக்கியமானதாக, வாழ்க்கையின் அர்த்தத்திற்கு நெருக்கமானதாக, கருதுகிறது. புதிய அருங்காட்சியகங்கள் திறக்கப்படுகின்றன. புதிய கலை படைப்புகளுக்காகவும் அவற்றை காட்சிப்படுத்துவதற்காகவும் குறிப்பிடத்தக்க அளவில் அரசாங்க வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை எல்லாம் கலையின் உயர்ந்த மதிப்புக்கான சான்றுகளாகக் கருதலாம். இவற்றுடன் கல்வித் துறையில் கலைக் கோட்பாட்டின் அந்தஸ்தும் , வணிக சந்தையில் அதன் செல்வ மதிப்பும் கலையின் முக்கியத்துவத்திற்கு சான்றாக இருக்கின்றன. கலைப் படைப்புகளை அணுகி அறிவதை எளிமையாக்க, கலைப் பாதுகாவலர்கள் காட்டும் முனைப்பை (குறிப்பாக குழந்தைகளின், சிறுபான்மை குழுக்களின் நலனுக்காக) இன்னொரு சான்றாகக் கூறலாம்.
இவை எல்லாம் இருந்தும், கலையுடனான உறவு நாம் எதிர்பார்ப்பதுபோல சிறப்பானதாக அமைவதில்லை. மிகவும் மதிக்கப்படும் ஒரு அருங்காட்சியகத்தில் இருந்தோ அல்லது கண்காட்சியில் இருந்தோ நாம் நிறைவில்லாமல் வெளியேறுகிறோம். நாம் எதிர்பார்த்த மாற்றம் -அதாவது நம்மை மறுவரையறை செய்யும் அனுபவம்- ஏன் நிகழவில்லை என்று வியந்தவாறு குழப்பத்துடனும், ஏமாற்றுத்துடனும் வெளிவருகிறோம். இந்த பிரச்சினைக்கு ஒருவர் தன் அறிவின் போதாமையும், உணர் திறனின் தோல்வியுமே காரணம் என்று கருதி தன்னைத்தானே குற்றம் சொல்வதும் இயல்பானதே.
இந்த பிரச்சனையின் முதன்மைக் காரணம் தனிமனிதனில் இல்லையென்றும், கலை-ஸ்தாபனங்களில் கலை கற்பிக்கப்படும், விற்கப்படும், முன்வைக்கப்படும் விதத்தில்தான் இருக்கிறதென்றும் இந்த புத்தகத்தில் வாதிடுகிறோம். “கலை எதற்காக?” என்ற கேள்விக்கு பதில் அளிக்க, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அமைப்புரீதியான, ஆழமான முன்னெடுப்புகள் இல்லாததனாலேயே கலையுடனான நம் உறவு பலவீனமடைந்துள்ளது. இந்தக் கேள்வி எரிச்சலடையச் செய்வதாகவும், முறைக்கேடானதாகவும், கொஞ்சம் துடுக்குத்தனமாக கேட்கப்படுவதாகவும்கூட நம்மை உணரச்செய்கிறது. ஆனால் அப்படி எண்ண வேண்டியதில்லை.
“கலை கலைக்காகவே” எனும் கூற்று, கலை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக உருவாக்கப்படுகிறது என்ற கருத்தை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. அதனால் கலையின் மதிப்பு மர்மமாகிவிடுகிறது. பாதிப்படையும் நிலைக்குச் சென்றுவிடுகிறது. கலை, பெருமதிப்பிற்குரியதாக கருதப்பட்டாலும், அதன் முக்கியத்துவம் விளங்கிக் கொள்ளப்படுவதற்கு மாறாக பெரும்பாலும் ஊகித்துக்கொள்ளவே படுகிறது. அதன் மதிப்பும் எல்லோருக்கும் தெரிந்த பொதுக் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கலை ரசிகர்களையும், அதன் பாதுகாவலர்களையும் ஒரேயளவில் வருத்தமுறச் செய்யும் விஷயம் இது.
ஒருவேளை கலைக்கென பிரத்யேக நோக்கம் இருந்து, அதை எளிமையாக வரையறுக்கவும் விவாதிக்கவும் முடிந்தால் எப்படி இருக்கும்? கலை நிச்சயம் ஒரு கருவியாக செயல்படமுடியும். மேலும் அது எந்த வகையான கருவி என்பதிலும், அது நமக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும் என்பதிலும் நாம் இன்னும் கூர்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
கலை எனும் கருவி
பிற கருவிகளைப் போலவே, கலைக்கும் நம்முடைய இயற்கையான திறன்களை விரிவுபடுத்தும் சக்தி உள்ளது. நமது சில குறிப்பிட்ட பிறவி பலவீனங்களை கலை ஈடுசெய்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், உடலைத் தாண்டி மனதின் உளவியல் பலவீனங்களை அது ஈடுசெய்கிறது எனலாம். கலை (வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் கைவினைப் படைப்புகளை உள்ளடக்கிய பிரிவினை), ஒரு சிகிச்சை ஊடகம் என்று இந்தப் புத்தகம் முன்மொழிகிறது. கலை அதன் பார்வையாளர்களுக்கு வழிகாட்டவும், அறிவுறுத்தவும், ஆறுதல் அளிக்கவும் செய்கிறது. அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு அடித்தளமாக இருக்கிறது என்று இந்நூல் வாதிடுகிறது.
நம் உடற் கட்டமைப்பில் உள்ள போதாமையினாலேயே எந்தவொரு கருவியும் தேவைப்படுகிறது. உடலின் நீட்சியாக அக்கருவி நம் விருப்பத்தை நிறைவேற்ற அனுமதிக்கிறது. ஒரு கத்தி என்பது வெட்டுவதில் உள்ள நம் இயலாமயை பூர்த்திசெய்கிறது. ஒரு குடுவை, தண்ணீரை எடுத்துச்செல்வதில் நமக்குள்ள இயலாமயை பூர்த்திசெய்கிறது. கலையின் நோக்கத்தைக் கண்டறிவதற்கு முன், நாம் எவற்றையெல்லாம் மனதாலும் உணர்ச்சிகளாலும் மேற்கொள்ள விரும்பி, ஆனால் மேற்கொள்ள முடியாமல் இருக்கிறோம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
கலை எத்தகைய உளவியல் போதாமைகளுக்கெல்லாம் உதவும்? பொதுவாக ஏழு உளவியல் போதாமைகள் அடையாளம் காணப்படுகின்றன. எனவே கலைக்கும் ஏழு செயல்பாடுகள் உள்ளன. நிச்சயமாக வேறு சிலவும் இருக்கலாம். ஆனால் இவை மிகப் பொதுவானவை; உறுதியாக நம்மை ஒத்துக் கொள்ள வைப்பவை. கலையின் செயல்பாடுகளை நினைவுக் கூர்தல், நம்பிக்கையளித்தல், துயர் பகிர்தல், சமநிலை மீட்டல், சுய புரிதல், மேம்பாடு மற்றும் மதிப்பு பாராட்டல் என்று ஏழாக சுட்டலாம்.
000
நினைவுக் கூர்தல்
நினைவாற்றலே நம் வாழ்வின் ஆரம்பம். ஆனால் நினைவுக் கொள்வதில் நாம் போதாமையுடனும் இருக்கிறோம். உண்மைநிகழ்வுகளையும் உணர்ச்சிபூர்வமான வற்றையும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களையும் இழக்க நேரிடுகிற கவலையளிக்கும் நிலையிலேயே நம்முடைய மனம் இருக்கிறது.
எழுத்து வடிவில் பாதுகாப்பது – மறதியின் விளைவுகளுக்கான யதார்த்தமான எதிர்வினை. அதற்கு அடுத்தநிலையிலான, ஆதாரமான எதிர்வினையே கலை. இந்த நோக்கமே ஓவியத்தின் தோற்றக்கதையாகவும் சொல்லப்படுகிறது. ரோமானிய வரலாற்றாசிரியர் ப்ளினி தி எல்டர் (Pliny the Elder) குறிப்பிடுவது போல ஆழமான காதலில் உள்ள ஓர் இளம் ஜோடி பிரிய நேர்கிறபோது, காதலி தன் காதலனின் நிழலை சுவரில் தீட்ட முற்படுகிறாள். பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய கலைகளில் இது அடிக்கடி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரெக்னால்ட்(Regnault) இந்த காட்சியை வழங்கியிருக்கும் விதம் உருக்கமானதாக உள்ளது(1). இழப்பு குறித்த பயத்தினால், கல்லறையின் ஓரத்தில் கரிக்கோல் நுனியைப் பயன்படுத்தி ஒரு கோட்டோவியத்தை அவள் உருவாக்குகிறாள்.
அந்தி மாலையின் மென்மையான வானம், அந்த காதலர்கள் இணைந்து இருக்கப்போகிற கடைசி நாள் நெருங்குவதைக் குறிப்புணர்த்துகிறது. மேய்ப்பர் இனத்தின் குலச்சின்னமான நாட்டுப்புற குழல் இசைக்கருவியை அவன் கையில் சாதாரணமாக பற்றியிருப்பதும், அதேவேளையில் இடதுபுறத்தில் ஒரு நாய் அந்தப் பெண்ணை அண்ணாந்து பார்ப்பதும், நமக்கு பணிவையும் அர்ப்பணிப்பையும் நினைவூட்டுகிறது.
அவன் சென்ற பின்னரும், அவனை மேலும் தெளிவாகவும் தீவிரமாகவும் தன் மனதில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவள் ஒரு உருவகத்தை/ஒவியத்தை உருவாக்குகிறாள். பல மைல்களுக்கு அப்பால், ஒரு பசுமையான பள்ளத்தாக்கில் அவன் தனது விலங்குகளோடு இருக்கும் சமயத்தில், அவன் மூக்கின் துல்லியமான வடிவமும், சுருட்டைமுடியின் நெளிவும், கழுத்தின் வளைவும், தோள்பட்டையின் விரிவும் அவள் நினைவில் பசுமையாய் இருக்கும். இந்த ஒவியம் சித்திரக்கலையின் தோற்றத்தை துல்லியமாக விளக்குகிறதா என்பது முக்கியமன்று. இது நமக்களிக்கும் நுண்ணறிவே பழைய வரலாற்றைப் பற்றியதாக இல்லாமல் உளவியல் சார்ந்ததாக உள்ளது.
எது முதல் சித்திரக்கலை முயற்சி என்கிற சிறு புதிரைத் தாண்டி ரெக்னால்ட்(Regnault) இங்கு ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறார்: “கலை நமக்கு ஏன் முக்கியம்?” . அவர் பதில் முக்கியத்துவம் வாய்ந்தது. நமக்குப் பிடித்தமான விஷயங்கள் இல்லாமலாகும்போதும் அவற்றை தக்கவைத்துக்கொள்ளவும் நீட்டித்துக்கொள்ளவும் கலை ஒரு கருவியாக உதவுகிறது. நம் வாழ்வில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததொரு பணியை நிறைவேற்றுகிறது.
குடும்பத்தோடு நாம் புகைப்படங்களை எடுத்துக்கொள்வதற்கான தூண்டுதலைக் கவனியுங்கள். தாஜ் மஹாலையும், கிராமத்து நடைபயணத்தையும், மிக முக்கியமாக, ஏழேமுக்கால் வயதில், வீட்டுத்தரையில் அமர்ந்து பொம்மை வீடு கட்டிக்கொண்டிருக்கும் குழந்தையின் துல்லியமான தோற்றத்தையும் காலப்போக்கில் நமது அறிவாற்றலின் பலவீனத்தால் மறக்கநேரிடும். இந்த அச்சத்தின் விழிப்புணர்விலிருந்துதான் உடனடியாக கேமராவை கையில் எடுப்பதற்கான உந்துதல் உருவாகிறது.
எவற்றையெல்லாம் மறந்துவிடுவோம் என்று நாம் கவலைப்படுகிறோமோ அவையெல்லாம் குறிப்பிட்ட ஒரே விஷயங்களாகவே இருக்கின்றன. நமது இந்த கவலை ஒரு நபரையோ அல்லது காட்சியையோ இழப்பது பற்றியது மட்டுமல்ல. எவையெல்லாம் முக்கியமானவையோ அவற்றையே உண்மையில் நினைவில் கொள்ள விரும்புகிறோம். நல்ல கலைஞர்கள் என்று நாம் அழைப்பவர்கள் எல்லோரும் எதை நினைவுக்கூர்வது, எதை விட்டுவிடுவது என்பதை சரியாக கண்டடைந்தவர்களே.
ரெக்னால்ட் சித்தரிக்கும் ஓவியத்தில், பிரிந்து செல்லும் காதலனின் ஒட்டுமொத்த வடிவத்தையும் அந்தப் பெண் மனதில் நிறுத்த நினைக்கவில்லை. அதையும் தாண்டி, நிலைநிறுத்தக் கடினமான அவன் ஆளுமையையும் சாராம்சத்தையுமே அவள் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறாள். ஒரு காட்சியையோ, நபரையோ அல்லது இடத்தையோ பற்றிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் பதிவு செய்யலாம். எனினும் சில விஷயங்கள் மற்ற எல்லாவற்றையும் விட கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை.
ஒரு கலைப் படைப்பின் (அது ஒரு குடும்பப் புகைப்படமாக இருப்பினும்) உள்ளடக்கம் , நிரந்தரமாய் தக்கவைத்துக்கொள்ள முடியாத மதிப்புமிக்க கூறுகளை முன்னிறுத்த முற்படும் போது அது வெற்றிகரமான, சிறந்த படைப்பாக ஆகிறது. நல்ல கலைப்படைப்பு , முக்கியத்துவம் வாய்ந்தவற்றின் சாரத்தை நிலைநிறுத்துகிறது என்று கூறலாம். அதே சமயம் மோசமான படைப்புகள் , மறுக்கமுடியாத வகையில் நமக்கு எதை நினைவூட்டினாலும், அதன் சாரத்தை நழுவ விட்டுவிடுவதால் ஒரு வெற்று நினைவுப் பரிசாக மட்டும் எஞ்சிவிடுகின்றன.
இந்த விஷயத்தில் கூர்மையை வெளிப்படுத்துவதனாலேயே ஜோஹனஸ் வெர்மியர் (Johannes Vermeer) ஒரு சிறந்த கலைஞர் எனும் அந்தஸ்துக்கு தகுதியானவர் ஆகிறார். ஏனென்றால் பொருத்தமான விவரங்களை எவ்வாறு நினைவுக்கூர வைப்பது என அவருக்குத் தெரியும். “கடிதம் வாசிக்கும் நீல ஆடைப் பெண்” (2) ஒவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளவள் சலிப்படைந்தவாறோ, அமைதியில்லாமலோ, பரபரப்பாகவோ, சங்கடத்திலோ, சிரிப்பிலோ அல்லது வேறெந்த மாதிரியாகவோ தோற்றமளித்திருக்கலாம். ‘அவளை’ வரைவதற்கு நிறைய வழிகள் இருந்திருக்கலாம். ஆனால் வெர்மியர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையையும் தருணத்தையும் இந்த ஓவியத்தில் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவள் தன்னுணர்வின்றி, தொலைதூரத்திலிருக்கும் ஒரு நபர் பற்றியோ, பிரச்சனை பற்றியோ சிந்தித்துக்கொண்டிருக்கிறாள். ஆழ்ந்த அமைதியுடைய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவளது உள்வாங்கும் திறனை வெர்மியர் உணரச் செய்கிறார். அவள் கைகள் அந்த கடிதத்தை வைத்திருக்கும் விதம் தனித்துவம்வாய்ந்ததாகத் தோன்றுகிறது: இன்னொரு நபர் தன் விரல்களை நீட்டி அந்த கடிதத்தை பிடித்துக்கொள்ளும்படி லேசாக முஷ்டிகளை இறுக்கியிருக்கிறாள். இது ஒருவேளை அவள் குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் ஒழுங்கின்மையாக இருக்கலாம். படிக்கும் போது அவள் வாய் லேசாக திறந்திருப்பதை வைத்து ஒரு அமைதியான அழுத்தத்தை உணரலாம்.
வெர்மியர் அவளது முகத்தின் இந்தப் பகுதியை கவனமாகப் பார்க்கும்படி நம்மை ஊக்குவிக்கிறார். அவள் முகத்தை, அதே நிறம் கொண்ட ஒரு வரைபடத்திற்கு எதிராக வரைந்ததன் மூலம், அவளுடைய மனம் அந்த வரைபடத்திற்குள் எங்கோ நிலைத்திருப்பதை உணர்த்திவிடுகிறார். ஓவியத்தில் இருக்கும் அந்த தெளிவான ஒளி ஒருவேளை அவளுடைய மனதைப் போன்றதாக இருக்கலாம்; அவள் மனம் தெளிவான, நிலையான உணர்ச்சிப் பிரகாசத்துடனும் இயங்கலாம். வெர்மியர் தனது கதாப்பத்திரத்தினுடய ஆளுமையின் சாரத்தை இங்கு பிரதிபலிக்கச் செய்திருக்கிறார். இது ஒரு நபரின் காட்சிப் பதிவு மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மனநிலையில் அவள் எப்படி காட்சியளித்தாள் என்பதை பற்றிய சித்தரிப்பு.
தக்கவைத்துக்கொள்ள உதவி தேவைப்படுகிற, நிலையற்றதும், மறைந்துபோகக்கூடியதுமான பல முன்னுதாரணமான அழகிய அனுபவங்களைப் பத்திரப்படுத்திக் கொள்வதற்கான வழியாக கலை செயல்படுகிறது. தண்ணீர் எடுத்துச் செல்லும் செயலையும் அதைச் செய்ய நமக்கு உதவும் கருவியையும் இந்த இடத்தில் ஒப்பிட்டலாம்.
கடுங்காற்றுடன் கூடிய ஒரு ஏப்ரல் நாளில், வெளியே ஒரு பூங்காவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். மேலே உள்ள மேகங்களைப் பார்த்து அவற்றின் அழகையும் வசீகரத்தையும் கண்டு நெகிழ்ந்துபோகிறோம். நம் வாழ்வின் அன்றாட சலசலப்பில் இருந்து அவை மகிழ்ச்சியுடன் தனித்திருப்பதாக உணர்கிறோம். அந்த மேகங்களுக்குள் நம் மனதை செலுத்துகிறோம். சிறிது நேரம் நம்முடைய கவலைகளிலிருந்து விடுபட்டு, நம் உளக்குரலின் ஓயாத புகார்களை மட்டுப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான சூழலில் இணைந்துகொள்கிறோம்.
ஜான் கான்ஸ்டபிள்-ன்(John Constable) இந்த மேக ஓவியங்கள், மேகங்களின் தனித்துவமான தன்மை, வடிவம், நிற மாறுபாடுகள், அவை ஒன்றிணைந்த விதம் ஆகியவற்றையெல்லாம் வழக்கத்தை விட கூடுதலாக கவனம் செலுத்தி பார்க்குமாறு நம்மை அழைக்கின்றன (3). கலை, சிக்கல்களை விலக்குகிறது. ஆழ்ந்த அர்த்தமுள்ள அம்சங்களில் கவனம் செலுத்த உதவுகிறது. கான்ஸ்டபிள் மேக ஓவியங்களை வரையும்போது, நாம் வானிலை ஆய்வுகளில் தீவிரமான அக்கறை காட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. மேகத் திரளின் துல்லியமான தன்மைக்கூட இங்கு முக்கியமல்ல. மாறாக, ஒவ்வொரு நாளும் நம் தலைக்கு மேலே நிகழ்கிற ஓசையில்லா நாடகத்தின் உணர்ச்சிகரத்தின் அர்த்தத்தை தீவிரப்படுத்தவே அவர் விரும்புகிறார். அந்த அர்த்தத்தை நாம் உணரும்படிக்கு மேகத்தை அணுகும் தொலைவில் நிறுத்துகிறார். அதற்குரிய மைய இடத்தை நாம் வழங்குவதற்கு ஊக்குவிக்கிறார்.
000
தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.