/

தத்துவத்தை மொழியியல் ஆக்கிரமித்தது எப்படி? : க்ரிஸ்பின் சாட்வெல்

தமிழில் : ஸ்வேதா மயூரி

மொழியும் காண்பதும்; ஓவியம் : ரெனே மார்க்ரெட்

இக்கட்டுரை தத்துவத் துறையின் மைய பேசுபொருளாக மொழியியல் உருவான கதையை சொல்கிறது. 20ஆம் நூற்றாண்டின் அதிவேக அறிவியல் வளர்ச்சி தத்துவத்திலும் கிளர்ச்சியை உண்டாக்கியது. அக்கால அறிஞர்கள் சிலர் 19ஆம்  நூற்றாண்டின் மீபொருண்மை சிந்தனைகள் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்களுக்குத் தேவை புறவயமாக அனைவரும் சோதித்துப்பார்க்கக்கூடிய ஒரு தத்துவ தளம். மொழி அவர்களுக்கு அப்படியான ஒரு தளத்தை வழங்கியது. தத்துவ கேள்விகளை அவை கேட்கப்படும் மொழியில் வைத்து அவர்கள் ஆராயத்தொடங்கினார்கள். மொழியின் தன்மை மற்றும் அதன் செயல்முறையை  கொண்டு பரவலாக அறியப்பட்ட கருத்துருவாக்கங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார்கள்.  இந்த மொழியார்வம் சிந்தனையாளர்களிடம் பிளவை ஏற்படுத்தினாலும், நாளடைவில் 20ஆம் நூற்றாண்டின் தத்துவத்தை முழுவதுமாக ஆட்கொண்டது.  2023ல் வெளிவந்த இந்த கட்டுரை மொழி தத்துவத்தில் துளிர்த்து, கிளை பிரிந்து, கனிந்து, உதிர்ந்த கதையை விரிவாகச் சொல்கிறது.

மொழிபெயர்ப்பாளர்

000

பிரதிக்கு வெளியே எதுவும் இல்லை” என்று ழாக் தெரிதா 1967 இல் அறிவித்தார். கிட்டத்தட்ட தெரிதா கூறிய எல்லாவற்றையும் போலவே,  இந்த சர்ச்சைக்குரிய பிரகடனத்தையும் அவர் கூறியதன் பின்னணி மற்றும் அந்த பின்னணியின் பின்னணி ஆகியவற்றை ஆராயாமல் விளக்குவது எளிதல்ல.  அப்போதைய  கல்வித்துறையின் மனநிலையைப் பதிவு செய்தது அவ்வரி.  1967 ரிச்சர்ட் ரோர்ட்டியின்  “The Linguistic turn” (மொழியியல் திருப்பம்) என்ற தொகுப்பு வெளியான ஆண்டு. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தத்துவம் ‘மொழியியல்’ தான் என்று வாதிட்ட புத்தகம் அது. அதற்குள்ளாகவே, இந்தக்  கருத்து  பெருவாரியான சிந்தனையாளர்களின் ஏற்பைப் பெற்றுவிட்டது. பிற்போக்குவாதிகள் என்று கருதக்கூடிய ஒரு சில நபர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். சில ஆண்டுகளாகவே, தத்துவம் மொழியின்  இயல்பை (Nature of language) (யதார்த்தத்தின், நன்மையின், அழகின் பண்புகளுக்கு மாறாக) முன்னிறுத்தி வந்திருந்தது. மொழியின் மீதான இந்த கவனம் சில சர்ச்சைகளையும் கிளப்பியது. மொழி மீதான கேள்விகளுக்கப்பால் தீவிரமான தத்துவக் கேள்விகள் ஏதேனும் இருக்க முடியுமா என்ற கேள்வியை அது எழுப்பியது.

அக்கால சிந்தனையாளர்கள் வெவ்வேறு தரப்பினை சேர்ந்தவர்களாக  இருந்தனர். பிற தரப்பினருடன் விவாதிக்க விரும்பாதவர்களாகவும்  இருந்தனர். எனினும் ஒருமனதாக  அவர்கள் எல்லோரும் மொழியின் மேல் செலுத்திய இடைவிடாத கவனமும், முக்கியத்துவமும் ஆச்சரியத்தை அளிப்பவை. 20 ஆம் நூற்றாண்டின் அறிவுசார்-வரலாற்றில் குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்த இந்த கவனம், அக்கால தத்துவத்தின் வளர்ச்சியைக் கண்ணாடி வில்லை போல பார்க்க உதவியது.

20 ஆம் நூற்றாண்டில் மேற்கத்தியத் தத்துவம் இரண்டு தனித்தனி கிளைகளாகப் பிரிந்திருந்தது.  ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய நூல்களும், நியதிகளும்  பிரதியேக சொற்பயன்பாடுகளும் உருவாகின . இக்கிளைகளுக்கு “பகுத்தாய்வு மெய்யியல்” (analytic philosophy) என்றும், “(ஐரோப்பிய) கண்டம்சார் மெய்யியல்”  (continental philosophy) என்றும் பெயர் சூட்டப்பட்டது.

ஒரே நேரத்தில் தத்துவத்தின் இவ்விரு பிரிவுகளிலும் தேர்ச்சி பெறுவது ஒரு கடினமான பணி. ஒரே நேரத்தில் மார்ட்டின் ஹைடெக்கர், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இருவரையும் முழுக்க அறிவதோ அல்லது  வில்லார்ட் வான் ஓர்மன் க்வைன், மிஷேல் ஃபூக்கோ இருவரையும் முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்வதோ சவாலானது. பல்கலைக்கழகங்களின் தத்துவத்துறைகளோ , ‘பகுத்தாய்வு மெய்யியல்’ அல்லது ‘கண்டம்சார் மெய்யியல்’ என்றும் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ததன் விளைவாக, இரண்டு முகாம்களுக்கு இடையே பூசல்கள் அடிக்கடி உருவாயின. ‘கண்டம்சார் மெய்யியல்’ தத்துவமே அல்ல என பகுத்தாய்வாளர்கள் நம்பினர். அது வெறும் அர்த்தமற்ற, மதிப்பில்லாத,  பாகுபாடுகள் மிகுந்த வெட்டிப்பேச்சு என்பது அவர்களின் வாதம். கண்டம்சார் தரப்பினரோ, ‘பகுத்தாய்வு மெய்யியல்’ கறாரான அதே சமயம் பயனேதுமில்லாத தர்க்க-பகுப்பாய்வு மட்டுமே என்றும், தேவையில்லாத அறிவியல் கொள்கைகளை உபயோகிக்கிறது என்றும் குற்றம் சுமத்தினர்.  மேலும், அது பண்பாடு சார்ந்த விமர்சனங்களை முன்வைப்பதில்லை என்றும், மனித வாழ்வோடு தொடர்பில்லாதத் துறை என்றும் வாதிட்டனர். 

விட்கன்ஸ்டீன்

இரண்டு கிளைகளுக்கு இடையேயும் நிறைய ஒற்றுமைகள் இருந்ததை இரு அணியினரும் உணராதது எவருக்குமே ஆச்சரியமளிக்கவில்லை. மேற்கத்திய அறிவியக்கத்தில் “பகுத்தாய்வு மெய்யியல்” மற்றும் “கண்டம்சார் மெய்யியல்” இரண்டும் ஒரே காலகட்டத்தில் உருவானவை. ஒரே அறிவுசார் பின்புலம் (பகுத்தறிவுவாதம், அனுபவவாதம், இலட்சியவாதம் போன்ற கோட்பாடுகள்) காரணமாக ஒருசேர வளர்ந்தவை. இவ்விரண்டு அணியினருக்கும்  கருத்தியல் ரீதியான போட்டி இருந்ததைப் போலவே தொழில்முறையாகவும் போட்டி இருந்தது. ஏனெனில் பேராசிரியர்கள் தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை விரட்டுவதிலேயே தங்கள் முழு கவனத்தைச் செலுத்துகின்றனர். ஆனால் இரண்டு துறைகளும், ஒரு நூறாண்டுக் காலம் ஒரே தளத்தில் பல்லாயிர விதங்களில் இயங்கிக் கொண்டிருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை.  மொழியின் மீது அவர்களுக்கு உண்டான வேட்கைக்கு அன்றைய காலகட்டம்  வெளிப்படுத்திய உயிர்ப்பே (zeitgeist) காரணம். 1967 ஆண்டு முடிவதற்குள், முற்றிலும் வேறுபட்ட சொற்களஞ்சியங்களைக் கொண்டிருந்த பகுத்தாய்வு மற்றும் கண்டம்சார்  முகாம்களும்,  ஒரே மாதிரியான ஈடுபாடுகளையும், அதே நேரத்தில் ஒரே மாதிரியான குறைபாடுகளையும்  வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தன.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், மொழி மீதான மோகம் இரு கிளைகளையும் முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது. இதற்குக் காரணம் ஏறத்தாழ ஒன்று தான். 19ஆம் நூற்றாண்டின் வெறுமையான, குழப்பமான, மேலோட்டமான  மீபொருண்மையியலை (Metaphysics) குணப்படுத்தக் கூடியது மொழியியல் ஒன்று தான் என்று இரு சாரரும் உறுதியாக நம்பினர். அவர்களின் பார்வையில் மீபொருண்மையியல் என்பது, GWF ஹெகல், ஃபிரெட்ரிக் ஷெல்லிங், ஆர்தர் ஷோபன்ஹவுர் போன்றவர்கள் எழுப்பிய அசட்டு கருத்துருவாக்கங்கள் மட்டுமே.

‘‘வரலாறு போகும் போக்கு”, “அனைத்தையும் தன்னளவில் உள்ளடக்கிய இயற்கை” போன்ற மீபொருண்மையியல்  தத்துவங்களில் ஆர்வம் காட்டாமல், “அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கை” என்ற சொற்றொடரை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் அர்த்தத்தை ஆராய்ந்தார்கள். மீபொருண்மையியல் வாக்கியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை, அவை அன்றுவரை தவறான பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன என்பன போன்ற முடிவுகளை ஆய்வாளர்கள் எட்டினார்கள். மொழியின் தன்மையை புரிந்துகொள்வதில் தத்துவம் கவனம் செலுத்துவது நல்லது. மீபொருண்மையியல் காட்டிலும் தத்துவத்திற்கு மொழியால் நன்மை உண்டாக வாய்ப்பு அதிகம் போன்ற ஆலோசனைகளையும் வழங்கினர்.

இவ்வாறு அரங்கேறிய ‘மொழியியல் திருப்பம்’, 1890- 1910 நடுவே நடந்த ஒரு   தொழில்முறையான/அறிவார்ந்த மோதலின் விளைவு எனலாம். அந்நூற்றாண்டின் பெரும்பகுதி ஹெகல் மற்றும் காண்ட்டின் இலட்சியவாத கருத்துருவாக்கங்களால் அடித்துச் செல்லப்பட்டது. அவர்களுக்குப் பின்னரும், பிற சிந்தனையாளர்கள் அக்கருத்துருவாக்கங்களை மேலும் மேலும் விரிவாக்கி அவர்களுக்குள்ளாகவே விவாதித்துக்கொண்டிருந்தனர். மற்ற துறைகளில், குறிப்பாக அறிவியலில், எந்த ஒரு பயனும் அவற்றிற்குப் பெரிதாக இருக்கவில்லை. மேலும், பல்வேறு அனுபவவாத அறிவியல் (empirical sciences) துறைகளில் நிகழ்ந்த அதிவேக வளர்ச்சியை ஒப்பு நோக்கும் போது, போலி அடையாளம், பொருள் தெளிவின்மை முதலான சிக்கல்கள் மண்டிய, தேவையின்றி  விரிவாக்கப்பட்ட பழைய பாணி யோசனைகளுக்குள்  தத்துவம் அகப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் சிந்தனையாளர்கள் மத்தியில் உருவானது.

முதலில் பகுத்தாய்வினரை எடுத்துக் கொள்ளலாம்.  ரஸ்ஸல் மற்றும் G.E.மூர் ஆகியோர், மொழியின் உதவியுடன் தத்துவ கேள்விகளுக்குத் தீர்வு காண்பதே பகுத்தாய்வு தத்துவத்தின் மைய நோக்கம் என்று முன்மொழிந்தனர்.  இந்த கருத்தை அவர்கள் கண்டடைந்தது சக மாணவர் மற்றும் ஆய்வாளர்  லுட்விக் விட்கன்ஸ்டினின் ‘டிராக்டேடஸ் லாஜிகோ-பிலாசோபிகஸ்’ (Tractatus Logico-Philosophicus) (1921)  என்ற படைப்பில்.

பகுத்தாய்வு மொழியியலில் திருப்புமுனையாகவும் அடித்தளமாகவும் அமைந்த இப்படைப்பு, மொழியின் எல்லைகளை (பொருள் கொள்ளும் வகையில்) வகுப்பதே தனது இலக்காகக் கொண்டிருந்தது. உதாரணமாக, இருப்பின் (existence) தத்துவத்தை, மூர், விளக்க முற்படவில்லை. மாறாக ‘இருப்பு’ என்ற வார்த்தையின் பொருளை விளக்க முயன்றார். ஒரு சொற்றொடரில் ‘இருப்பு’ என்னும் சொல் பயனிலையாக (Predicate) வர வாய்ப்பில்லை என்றார். குறிப்பிட்ட விஷயங்கள் என்னென்ன என்று கூறாமல், ‘குறிப்பிட்ட’ என்ற வார்த்தைக்கு- தேவைக்கு அதிகமான கச்சிதம் மற்றும் கவனத்துடன்- அர்த்தம் அறிய விழைந்தார். உரையாடல் மெல்ல, ‘நான்’ என்னும் தன்னுணர்விலிருந்து ‘நான்’ என்னும் சொல்லின் அர்த்தம் நோக்கி நகர்ந்தது.

ரஸ்ஸலும் மூரும் எதிர்பார்த்தது போலவே தர்க்கத்தில் உருவான மாற்றங்கள் மொழிகளுக்குப் புத்துயிர் அளித்தன. தத்துவத்தின் கல்வித் தர அந்தஸ்தை உயர்த்தின. எழுத்திலும் சிந்தனையிலும் புதிய விவாதங்களும் புதிய மாற்றங்களும் நிகழ்வதற்கு வழி வகுத்தன. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுக் காலம் இந்த புதிய சிந்தனைமுறை தன் கையில் வைத்திருந்தது. காலாவதியான தொழில்நுட்பம் போல் அவ்வப்போது கையாளப்பட்டாலும், தத்துவவாதிகள் இடையே ஒரு நிபுணத்துவத்தை உண்டாக்கியது. மேலும் அது சிந்தனையாளர்களைக் கற்பனையில் மிதக்க விடாமல் சில எல்லைகளை (ஓரளவிற்கு) வகுத்துத் தந்தது.

“அனைத்து நேர்மையான சிக்கல்களும் குறைந்தபட்சம் கோட்பாட்டளவில் தீர்க்கக்கூடியவை” என்று நேர்க்கருத்து(positivist)-தத்துவவாதி AJ அயர் 1936 இல் அறிவித்தார். பெரும்பாலான தத்துவ சிக்கல்கள் போலி சிக்கல்கள் என்றும்,  தத்துவ கேள்விகளை அவை எழுப்பப்படும்  மொழியிலேயே ஆய்வு நடத்தி போலியா இல்லையா எனக் கண்டறியலாம் என்றும் அவர் நம்பினார்.

“முழுமையானது பரிணாமத்திற்கும், வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் ஆனால் முழுமைக்கு பரிணாமமோ, வளர்ச்சியோ கிடையாது” (The Absolute enters into, but is itself incapable of, evolution and progress) என்பது போன்ற ஒரு போலி மீபொருண்மை பிரகடனத்தை எடுத்துக்கொண்டால், அதனை முதன்முதலில் உச்சரித்தவருக்கு கூட அதற்கு இலக்கண முக்கியத்துவம் உள்ளதா இல்லையா என்பதில் தெளிவு இருக்காது.  ஏனெனில் அப்படியான ஓர் வாக்கியத்தை எவராலும் பரிசோதித்துச் சரிபார்க்க இயலாது,” என்றார் அயர். Absolute குறித்த சொற்றொடரை, 19 ஆம் நூற்றாண்டின் பிரபல சிந்தனையாளர்  F H பிராட்லியின் எழுத்துக்களிலிருந்து தோராயமாக எடுத்துக்கொண்டதாக AJ அயர் கூறினார். “ஏறக்குறைய முந்தைய தத்துவங்கள் அனைத்தும் வெறும் பிதற்றலாகவே இன்று எஞ்சுகின்றன,  ‘All mimsy were the borogoves’ போல. ஆனால் சற்று சுவாரஸ்யம் குறைவாக,” என்கிறார் (‘All mimsy were the borogoves,’ லூயிஸ் கரோல் ‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ இல் பயன்படுத்திய ஓர் அபத்தமான வாக்கியம்). 

அயர் சொல்லவருவது இதைத்தான்,  ஏதேனும் ஒரு மரியாதைக்குரிய/பயனுள்ள/நன்கு வரையறுக்கப்பட்ட நிலையைத் தத்துவம் அடைய வேண்டும் என்றால், தத்துவத்தை மொழியின் இயல்பில்,  மொழியின் செயற்பாட்டில் தேட வேண்டுமே ஒழிய யதார்த்தத்தில் அல்ல.

ஹார்வர்டில் க்வைனின் சக ஊழியரான நெல்சன் குட்மேன் தனது “உலகை உருவாக்குவதன் வழிகள்” (Ways of Worldmaking) (1978) புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்:

“உலகம் எப்படி இருக்கும் என்று நான் உங்களிடம் கேட்டால் நீங்கள் வெவ்வேறு சட்டகங்கள் (frames of reference) வழியாக எப்படி இருக்கும் என்று கூறுவீர்கள். ஆனால் சட்டகங்கள் எதுவும் உபயோகிக்காமல் எனக்கு உலகை விளக்குங்கள் என்று நான் கேட்டால்,  நீங்கள் எவ்வாறு உலகை விவரிப்பீர்கள்? உண்மையில்  நாம் விளக்கியதையே மீண்டும் மீண்டும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறோம்.  நாம் பிரபஞ்சத்தைச் சட்டகங்கள் வழியேதான் புரிந்து வைத்திருக்கிறோம்.  அத்தகைய வழிகள் அல்லாமல் பிரபஞ்சத்தை நம்மால் விளக்கமுடியாது.”

குட்மேன் மற்றும் அவரையொத்த சிந்தனையாளர்கள் பலரும், பெரும்பாலான தத்துவ கேள்விகள் செயற்கையாக எழுந்தவை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். நமது உலகத்திற்கும், நாம் சட்டங்கள் வழி புரிந்து கொண்டிருக்கும் உலகத்திற்கும் இருக்கும் வேறுபாட்டால் இத்தகைய கேள்விகள் உருவாகியிருக்கவேண்டும், சட்டங்களின் வழி உலகைப் புரிந்து கொள்வதே நம்மால் முடிவது, நமக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை என்பதை “தொலைந்த உலகம்” (The World Well Lost) என்ற புத்தகத்தில் ரோர்ட்டி 1970 களின் தொடக்கத்திலேயே எழுதியிருந்தார்.

பகுத்தாய்வு முறைகள் வளர வளர அதை உபயோகிப்பதற்கான ஆர்வமும் உடன் வளர்ந்தது.  விட்கன்ஸ்டினின் பிந்தைய எழுத்துக்களில், ‘மனித அனுபவங்களுக்கும் பண்பாட்டிற்கும் மொழி இன்றியமையாதது,’ என்ற தன் தரப்பினை விளக்கி விரிவாகவே எழுதினார். இந்தக் கருத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான உந்துதலும் காலப்போக்கில் பிற சிந்தனையாளர்களிடம் வலுப்பெற்றது. அவர்கள் முன்வைத்தது இதைத்தான், ‘19 ஆம் நூற்றாண்டின் தத்துவத்தைச் சிதைப்பது மட்டுமே மொழியியலின் நோக்கம் அல்ல, மனித பண்பாடு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு அடித்தளம் அமைத்ததே மொழி தான்.’

20ஆம் நூற்றாண்டின் மத்தியில் வெளிவந்த “தத்துவ விசாரணைகள்” (Philosophical Investigations) நூலில் விட்கன்ஸ்டின் எழுதிய வரி இது, “ஒரு மொழியைக் கற்பனை செய்வது ஒரு உயிரினத்தைக் கற்பனை செய்வது போல.” ரோர்ட்டியின் “மொழியியல் திருப்பம்”  வெளியாவதற்கு முன்பாகவே அனைவருக்கும் ஒன்று புரிந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தத்துவத்தின் மையத்திலிருந்தது மொழியே, குறிப்பாக மொழியின் தன்மை மற்றும் அதன் செயல்முறை. 

தனது நூலின் முன்னுரையில் ரோர்ட்டி  இவ்வாறு எழுதுகிறார்,

“சமீபகாலமாகத் தத்துவத்தில் புரட்சி ஏற்படுத்தியிருக்கும் மொழியியல் குறித்த புரிதலை அளிப்பதே இத்தொகுதியின் நோக்கம்.  ‘மொழியியல்’ என்று நான் கூற வருவது இதைத்தான் – தத்துவப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக (அல்லது கலைப்பதற்காக) மொழியைச் சீர்திருத்துவது (அல்லது) புரிந்துகொள்வது. மொழியியலை முன்னெடுத்தவர்கள் நம் காலத்தின் முக்கியமான தத்துவ கண்டுபிடிப்பு மொழியியல் என்கின்றனர். உண்மையில் இது எக்காலத்திற்கும் முக்கியமான கண்டுபிடிப்பும் கூட.”

க்வைன் மற்றும் விட்கன்ஸ்டினின் கருத்துக்கள் டொனால்ட் டேவிட்சன் மற்றும் ரோர்ட்டி ஆகியோரால் விவாதிக்கப்பட்டு நாளடைவில்  ‘பின்நவீனத்துவம்’ என்று அறியப்படத் தொடங்கியது. பின்நவீனத்துவம் ஏற்கனவே சில காலமாக ஐரோப்பாவில் அந்நாட்களில் பேசப்பட்டு வந்தது. நமது அனுபவங்களையும் நமது உலகத்தையும் கட்டமைப்பது மொழி தான் என்று பின்நவீனத்துவம் வரையறுத்தது. ஆனால்  நிறைய அறிஞர்கள் இந்த பார்வையை மறுத்தனர். ‘பின்நவீனத்துவம்’ போன்ற புதிய பெயர்களையும் அலங்காரங்களையும் அவர்கள் விரும்பவில்லை.  ஆனால் 1985 முதல், ரோர்ட்டி, ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் மற்றும் சார்லஸ் டெய்லர் ஆகியோர் தத்துவத்தின் ‘பகுப்பாய்வு’ மற்றும் ‘கண்டம்சார்’ கிளைகளின் முடிவுகள் ஒத்துப்போனதை அனைவர் கவனத்திற்கும் கொண்டு வந்தனர்.

இப்போது நாம் கண்டம்சார் மொழியியல் பக்கம் திரும்புவோம். ஹைடெக்கர் மீபொருண்மையியல் வாதத்தை மறுக்கும் கூட்டத்தைச் சேர்ந்திருந்தாலும்,  “மொழியில் தான் பொருட்கள் முதலில் உரு கொள்கின்றன, மொழியில் தான் அவை நிலை கொள்கின்றன” (It is in language that things first come to be and are) என்கிற மீபொருண்மையியல் சாயல் கொண்ட வரியை எழுதினார். மனிதனைப் பற்றி விளக்கும் போது அவர், “மனிதன் ஒரு பேசும் உயிரினம். பேச்சு மனிதனுக்குத் தனித்துவமானது என்பது இங்குப் பேசு பொருள் அல்ல. பேச்சின் மூலம் உலகத்தையும் [ஆகவே தன்னையும்] கண்டறியக்கூடிய ஓர் உயிரினம் என்ற வகையில் அவன் பொருட்படுத்தத்தக்க  உயிரினம் ஆகிறான்”

இம்மாதிரியான சொற்றொடரை பகுத்தாய்வாளரான க்வைன் சொல்ல மாட்டார். அயரும், ஹைடெக்கர் அவதானிப்பதை ஏற்க மாட்டார். ஆனால் அவர்களிருவரும் தொடர்ந்து வலியுறுத்தியதை போலவே இவ்வாக்கியம் மொழியை மையத்தில் வைக்கிறது. க்வைனும், அயரும் தொடங்கிவைத்த விவாதம் போலவே, ஹைடெக்கர் தொடங்கிவைத்த தத்துவ விவாதமும் பல ஆண்டுக்காலம் தொடர்ந்தது.

ஹைடெக்கர்

 ஹைடெக்கர்தன் மொழி சார்ந்த எண்ணங்களை “On the way to language” (மொழிக்கான பாதை) (1959) போன்ற அவருடைய பிந்தைய எழுத்துக்களில் விரிவாக வளர்த்தெடுத்தார். மனித அனுபவம் மற்றும் மனித யதார்த்தத்தின் அடித்தளம் மொழியே என்ற வாதமும் அதில் அடங்கும். ஹைடெக்கரின் மாணவர் – மற்றும் ரோர்ட்டியின் ஹீரோவான  , ஹான்ஸ்-ஜார்ஜ் காடமரின் ‘Hermeneutics’ (உரையியல்) தத்துவத்தில் இது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. ‘Hermeneutics’ என்ற வார்த்தை முதலில் உரை எழுதுவதன் கலையைக் குறித்தது. குறிப்பாக பைபிளின் உரைகள். பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கண்டம்சார் தத்துவம், ‘Hermeneutics’-ஐ மொத்த தத்துவத்தின் வாரிசாக நிறுவ நினைத்தது.

 1976 இல் காடமர் எழுதினார், “மொழியே இவ்வுலகத்தில் நமது செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. அனைத்தையும் உள்ளடக்கி இவ்வுலகத்தின் அரசியல் சாசனமாக இருப்பதும் மொழி தான்”.மேலும்,“நம்மைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் அறிவிலும், உலகத்தைப் பற்றி நாம்  கொண்டிருக்கும் அறிவிலும், நம்முடைய சொந்த மொழியால் எந்நேரமும் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறோம். நாம் வளர்கிறோம், ஆட்களுடன் பழகுகிறோம், கடைசியாகப் பேசக் கற்றுக் கொள்ளும் போது நம்முடன் நாமே பேசிப் பழகுகிறோம்.. உண்மையில் நாம் நம் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை மொழி நமக்கு அளிக்கிறது”

இந்த தொனியில் மொழியைக் குறித்து எந்த பகுத்தாய்வாளரும் கூற மாட்டார் தான். எனினும் பகுத்தாய்வு தத்துவத்தின் அதே தீவிரத்தோடு மொழியின் மீதான ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது காடமரின் இந்த கருத்து.

உண்மையில், தெரிதா மற்றும் அவரது சகாக்கள் வலியுறுத்திய ‘மொழியின் கட்டுடைப்பு’ (deconstruction) ஹைடெக்கர் மற்றும் காடமரின் கருத்துக்களை நெருக்கமாகவே பின்தொடர்கிறது, அதே நேரத்தில் அதிலுள்ள பாசாங்குகளையும் சந்தேகத்துடன் நிராகரிக்கிறது. தெரிதா கூறுகிறார், ஆம், நாம் அனைவரும் மொழியைச் சார்ந்த ஜீவராசிகளே. மொழி ஒரு வகையில் நம் யதார்த்தத்தை நிர்ணயிக்கிறது. மொழி பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே ஒரு தொடர்பையும் உருவாக்குகிறது. மொழியைக் கொண்டு பிரபஞ்சத்தை நாம் உருவாக்குகிறோம்/ வெளிப்படுத்துகிறோம் என்று கூட கூறலாம்.  மொழியை அறிவது மனித வாழ்வை அறிவது போல. ஏனெனில் மொழி, மனித அனுபவம் இரண்டுமே செய்கைகள் மூலம் நாம் நடத்தும் உரையாடல்களே. 

ஹான்ஸ்-ஜார்ஜ் காடமர்

ஆனால் இதில் பின்னர் பிரச்சனைகள் எழுந்ததாக தெரிதா கூறுகிறார். ‘Hermeneutics’ சொல்வது போல், உலகை அனுபவிப்பது புத்தகம் வாசிப்பது போன்ற ஒரு செயல் என்று நாம் நம்புவோமானால், உலகம் நமக்கு உணர்த்தும் ‘உண்மை’ போலவே வாசிப்பும் பிழையான புரிதலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் நாம் வாசிக்கும் ஒவ்வொரு படைப்பும் முரண்பாடுகளாலோ, தெளிவின்மையாலோ நிரம்பியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நாம் ஒப்புக்கொண்டாகவேண்டும். மேலும் 20 ஆம் நூற்றாண்டின் பல இலக்கியங்கள் பூடகம், சர்ரியலிசம் போன்றவற்றோடு விளையாடிப் பார்த்தன : இந்த உலகமும் நாமும் படைப்பிலக்கியங்கள் என்றால் நாம் காவிய நாடகங்கள் அல்ல,  நாம் நவீன கவிதைகள். ஜேன் ஆஸ்டனின் நாவல் அல்ல , நாம் ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவல். ஒருவேளை தொலை தூரம் சென்று பார்க்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோமோ என்னவோ.

பின்நவீனத்துவ எழுத்துக்கள், குறிப்பாகப் பிரெஞ்சு அறிஞர்கள் ஃபூக்கோ மற்றும் ஜில் டலூஸ்ஸின் எழுத்துக்கள், மொழி கட்டமைத்த யதார்த்தம் “வீழ்ந்துகொண்டே” வருவதன் வரலாற்றைப் பதிவு செய்தன. ழான் லியோதார், பழைய தத்துவ அமைப்புகள் உலகைப் புரிந்து கொள்வதற்காக எழுப்பிய பெருங்கதையாடல்கள் (master narrative) அனைத்தும்  உடைந்து விட்டன என்றும், 20ஆம் நூற்றாண்டு தனக்கென ஒரு கோர்வையான மொழியைக் கூட (யதார்த்தை புரிந்துகொள்ள) உருவாக்க முடியவில்லை என்றும் வாதிட்டார்.

ழான் பாட்ரிலார்ட் தோற்றத்திற்கும்/யதார்த்தத்திற்கும் (appearance/reality) இருக்கும் வேறுபாடுகள் மறைவதைக் குறித்துப் பேசினார். 1980களில், இந்த வேறுபாடு எந்த முக்கியத்துவமும் இல்லாத அளவுக்குத் தெளிவற்றதாக மாறிவிட்டிருந்தது.  நிஜ அனுபவங்கள் மற்றும் யதார்த்தத்தின் இடத்தை உருவகங்களும், குறியீடுகளும் எடுத்துக்கொண்ட ஒரு தெளிவற்ற டிஸ்னி வேர்ல்ட் போன்ற உலகில் நாம் வாழ்கிறோம் என்பது பாட்ரிலார்ட்டின் நன்கு அறியப்பட்ட வாதம். 20ஆம் நூற்றாண்டு இறுதியில், மற்ற அறிஞர்கள், இவர்களைப் போல் அல்லாமல், பிற நேர்மறையான பின்நவீனத்துவ கண்ணோட்டங்களை முன்வைத்தனர்.

இவற்றில் ஒன்று, பால் ரிகோயர் மற்றும் அலாஸ்டெய்ர் மேக்கின்டைர் முன்வைத்த கதையாடல் (narrative). கதையியல் கோட்பாடு (Narrative Theory) – உளவியல், வரலாறு, நீதி போன்ற துறைகளில் – கதையாடலை பிரதானப்படுத்தியது. தனது ‘Time and Narrative’ (1984)  புத்தகத்தின் மூன்றாவது பகுதியில் ரிக்கோயர் இவ்வாறு கூறுகிறார், “வாழ்க்கை, நாம் சொல்லும் கதைகளால் நெய்யப்பட்ட துணி போன்றது.” மனிதனைப் பற்றிய இந்த மேற்கோள் இன்றும் கூட பிரபலமானது:  நைக்கி (Nike)  கூட ‘We are the stories we tell’ (நாம் சொல்லும் கதைகள் தான் நாம்) என்ற வாசகத்துடன் பின்நவீனத்துவ ரயிலில் ஏறியது.

“நேரத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு… நடந்த நிகழ்வுகளைக் கதை போல் விவரிப்பது அவசியமாகிறது… கதையாகச் சொல்லி நேரத்தை அளவிட முடியாவிட்டால் அது நேரமே அல்ல” என்று ரிக்கோயர் எழுதினார். மேலும் அவர் தனிமனித அடையாளத்தை விளக்கவும் இக்கருதுகோளைப் பயன்படுத்தினார்.  “எது நாம் ஒருவனை/ஒருத்தியை/ஒன்றைப் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரே நபராகப் பார்க்க வைக்கிறது? அவ்விடை, அவரவர் வாழ்வை நாம் கதையாகக் கேட்பதில் உள்ளது.” 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உளவியல், நீதி மற்றும் மீபொருண்மையியல் நியதிகளைக் கதைகளாக விளக்க கதையியல் வழி செய்து தந்தது. மனிதனின் இயல்பை மற்றும் உலகின் இயல்பை ஒரு சேர உணர்த்தியவை கதைகளே. அந்தக் கால சிந்தனையாளர்களுக்கு ‘கடவுள்’ அல்லது ‘இயற்கை’ உணர்த்தியது போல.

20ஆம் நூற்றாண்டின் இறுதியில், ரோர்ட்டி மற்றும் டெய்லர் போன்ற செல்வாக்குள்ள  தத்துவ அறிஞர்கள் மொழி/சமூக கட்டுமானவாதம் (constructionism) குறித்துப் பேசினர். உலகின் பெரும்பகுதி, வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கட்டுமானவாதம் கூறுகிறது. அது கதைக்கோட்பாட்டிலிருந்து வந்தடைந்த  ஒரு கருத்துருவாக்கம். ‘நம்மால் கட்டமைக்கப்பட்ட ஒரு உலகத்தை நம்மால் மாற்றிக் கட்டமைக்க முடியும்’ என்கிற கருத்து, சமூகம் மற்றும் அரசியலின் எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையை உருவாக்கியது. நம் மொழிகளில் கவனம் குவித்து, பொருளை வெளிக்கொண்டுவந்து, விமர்சித்து, சீர்திருத்துவது மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்று கட்டுமானவாதம் நம்பியது. ‘மனிதர்களை வாசிப்பது  என்பது, ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டுமே புழங்கும் உயிரினங்களை வாசிப்பதற்கு ஒப்பாகும்’ என்று டெய்லர் தனது புத்தகமான ‘Sources of the Self’ (தன்னுணர்வின் ஆதாரங்கள்) (1989) இல் எழுதினார். “நாம் மொழி அறிமுகமான பின்னர் தான் தனிமனிதன் என்கிற அடையாளத்திற்கு வந்து சேர்கிறோம். மொழியைத் தவிர வேறு நுழைவுவாயில் நமக்கு இல்லை ”.

ரோர்டி, டெய்லர், பெர்ன்ஸ்டீன் மற்றும் மேக்கின்டைர் ஆகியோர் பகுப்பாய்வு, கண்டம்சார் தத்துவத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அவரவர் எழுத்துக்களின் மூலம் வெளிகொண்டுவந்தனர். பகுப்பாய்வு, கண்டம்சார் தத்துவங்கள் அவர்களின் எழுத்துக்களில் தான் ஒன்றுசேர்ந்தன ஒழிய அமெரிக்கத் தத்துவ சங்கத்தின் விவாதங்களில் அல்ல. இரு படையினருக்கும் நடுவில் நின்றிருந்த மதிற்சுவர் ஒரு சிறிய வேலியாக  மாறியது. அன்று ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மறுபக்கம் தெரியும், ஏன் , நீங்கள் நொடியில் தாவி மறுபக்கம் செல்வதாகக்கூட கற்பனை செய்துகொள்ளலாம்.

காலப்போக்கில், தத்துவ அறிஞர்கள் தாங்கள் ஆராய்ந்து கொண்டிருந்த சிக்கல்களின் முக்கியத்துவம் குறைந்துவருவதைக் கண்டனர். மொழியின் மீதான கவனம் திசை திரும்பியது. முன்பு முக்கியம் என்று தோன்றிய கேள்விகள் பலவும் நூற்றாண்டின் இறுதிக்குள் முடிந்தளவிற்குப் பதிலளிக்கப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ விட்டன. இருகரையைச் சேர்ந்த தத்துவவாதிகளுக்கும், 1970களில் எட்டியதை விட மொழியியலில் ஏதேனும் சாதிக்க இடம் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. 1899 இல் ஜெர்மனிய இலட்சியவாதம் தனது உச்சபட்ச நிலையை எட்டியது போல, 1999 வாக்கில், மொழியியலும் கதையியல் கோட்பாடும் தனது உச்சநிலையை அடைந்து ஓய்ந்திருக்கலாம்.

தெரிதா

புது மில்லினியத்தில் கவனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் பக்கம் திரும்பியது. இது மொழி கட்டுமானவாதம் உள்ளிட்ட கருத்தியல்களைத் தேவையற்றதாக, பொய்யானதாகச் சித்தரித்தது. சுற்றுச்சூழல் பிரச்சனைகளில், குறிப்பாக கார்பன் வெளியேற்றம் குறித்த விவாதங்களில் மொழி ஒரு பங்கு வகிக்கிறது என்றாலும், உண்மையில் அதன் மையத்தில் இருப்பது (மக்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீர்மானிப்பது) அணுக்களுக்கிடையிலான ஊடாட்டமே. எந்தவொரு தத்துவமும், இயற்கை வகுத்திருக்கும் விதிகளைக் குறைத்து மதிப்பிட்டாலோ, மனிதன் கையில் மாற்றத்திற்கு உள்ளாகும் ஒரு பருப்பொருளாக இயற்கையைச் சுருக்கினாலோ, தன்னுடைய அழிவுக்கு தானே குழி தோண்டுகிற நிலைக்கு வந்துவிடுகிறது. இறுதியில் அறிஞர்களுக்கு மொழியை ஆராய்வதில் உண்டான ‘ஆர்வம்’, ஒரு புத்தகத்தை வாசிப்பது போல ஒவ்வொருவரும் இந்த உலகை அனுபவிக்கிறார்கள் என்கிற அவர்களின் ‘அவதானிப்பு’ எல்லாம் ஒரு கட்டத்தில் மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடாகப் பிறருக்குத் தோன்ற ஆரம்பித்தது.   

விட்கன்ஸ்டினின் டிராக்டேடஸ் நூல் விவாதித்த எதுவும் இவ்வுலகில் இப்போது இல்லை. இன்றைய உலகம் படங்கள் மற்றும் படங்களுக்கு உபதுணையாக இருக்கும் வாசகங்களினால் சூழப்பட்டுள்ளது. நாம் மொழியின் வரையறைக்குள் வாழ்கிறோமா என்கிற கேள்வி இல்லாமலாகி, நாம் மெய்நிகர் உலகில்  வாழ்கிறோமா என்பது இன்றைய கேள்வியாகிவிட்டது. புதுயுகம், புதிய கேள்விகள் மற்றும் சவால்களை உருவாக்கியுள்ளது. இது புதிய சிந்தனை மற்றும் வரலாறுகளின் அவசியத்தை தான் காட்டுகிறது என்றாலும் ஹெகல் குறிப்பிட்டது போல், எதனுடைய கதையையும், அதன் முடிவு நெருங்கும் வரை நம்மால் சொல்ல முடியாது தான்.

ஸ்வேதா மயூரி

பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். உலக செவ்விலக்கியங்கள் மற்றும் வரலாறு மீது ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள் கட்டுரைகள் எழுதிவருகிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபாடுள்ளவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.