ஊழ் வண்ணம் : வெற்றிராஜா

கேம்ப்ரிட்ஜ் மண்ணில் கால் பதித்ததுமே சர் ஐசக் நியூட்டன் படித்த கல்லூரியை, அந்த ஆப்பிள் மரத்தை காண வேண்டும் என்கிற ஆவலில் மனம் பரபரத்தது. கேம் என்பது ஒரு நதியின் பெயர். கேம் நதியின் மீது பல அழகிய பாலங்கள் அமைந்துள்ளன. கேம் + ப்ரிட்ஜ் = கேம்ப்ரிட்ஜ். ஒவ்வொரு பாலமும் நுண் வேலைப்பாடுகளுடன், கேம்ப்ரிட்ஜில் உள்ள கல்லூரிகளின் சரித்திரங்களையும், சாதனைகளையும் பறைசாற்றியபடி மிளிர்கிறது.

நியூட்டன் கற்ற அதே ட்ரினிட்டி கல்லூரியில்தான் கணித மேதை ராமானுஜமும் படித்தார். ராமானுஜத்தின் ஊழ், அவரை ஈரோடு, கும்பகோணம், மெட்ராஸ் என சுழற்றியடித்து, பல்லாயிரம் மைல்கள் கப்பலில் பயணிக்க வைத்து, கேம் நதிக்கரை வரை இழுத்து வந்திருக்கிறது. சார்லஸ் டார்வின், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஆலன் ட்யூரிங், ஜான் மில்டன், பைரன், சில்வியா பிளாத், ஜவஹர்லால் நேரு,  டேவிட் அட்டன்பரோ, மன்மோகன் சிங் போன்ற பல ஆளுமைகள் படித்த கல்லூரிகள் கேம் நதிக்கரையெங்கும் வீற்றிருக்க, எதை காண்பது எங்கே துவங்குவதென குழம்பி, முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரியின் சுவற்றிலிருந்து கார்ப்பஸ் க்ளாக் வினோதமாக ஒலியெழுப்ப, அருகில் சென்று வேடிக்கை பார்த்தேன். அது அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட ஒரு மெக்கானிக்கல் க்ளாக்.  அதன் மீது ஒரு வெட்டுக்கிளி தனது கால்களால் கடிகார முட்களை தள்ளியபடி, காலத்தின் துளிகளை உணவாக தின்று செரித்துக் கொண்டிருந்தது. Chrono-Phagus அதாவது Time-Eater என்றழைக்கப்பட்ட ”காலத்தை உண்ணும் பூச்சியின்” ரூபம், அதை காண்பவருக்கு அச்சத்தையும் ஆர்வத்தையும் ஒருசேர அளித்தது. கேம் என்ற ஒரே ஒரு நதியின் மீது பல பாலங்களும், கல்லூரிகளும் முளைத்திருக்க, ஒரே ஒரு கல்லூரியைத் தேடி கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி, கங்கை, பிரம்மபுத்ரா என்று பல பெரிய நதிகளை கடந்து சென்ற என் கதை எனக்குள் மின்னலடித்தது. ஊழ் என்பது அத்தனை எளிதாக விளக்கி விட கூடிய ஒன்றா என்ன? புனைவின் வழியாக ஊழ் பற்றி சித்தரிப்பதை விட, என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் மூலமாக ஊழ் வினையை விவரிக்க முயற்சி செய்கிறேன். பாலங்களின் மீது தடதடவென்று ஓடுகின்ற ரயில்களின் ஓசை என் மண்டைக்குள் ஒலிக்க துவங்கியது. காலத்தை உண்ணும் வெட்டுக்கிளி என்னை முறைத்துப்பார்க்க, நான் கார்ப்பஸ் கடிகாரத்துள் நுழைந்து சுழன்றபடி, காலத்தின் பின்னோக்கி சென்று மாணவனானேன்.

நான் +1 வரை ட்யூஷனே படிக்கவில்லை. கிடைத்த ஒளியினை கிரகித்து, கிடைத்த நீரை உறிஞ்சி ஒரு காட்டுச்செடி போல வளர்ந்து கொண்டிருந்தேன். +2 வில் மொத்த வகுப்புமே ட்யூஷன் செல்ல, நான் மட்டும் ட்யூஷன் போகாமல் தவறு செய்கிறேனோ என்ற அச்சத்தால், புதுச்சேரியின் புகழ்பெற்ற பள்ளியொன்றின் ஆசிரியரான விஷ்வகுமார் பற்றி கேள்விப்பட்டு, அவரிடம் ட்யூஷன் போக முடிவெடுத்தேன். என் வீட்டிலிருந்து பள்ளி சென்று வருகின்ற தூரம் 14 கிமீ. விஷ்வகுமாரின் வீடு எதிர் திசையில் இருந்ததால் அங்கே சென்று வர 14 கிமீ. தினம் இப்படி  28 கிமீ சைக்கிளில் பயணித்தால், பிறகு படிப்பதற்கு நேரமேது? ஆனாலும் சவாலை எதிர்கொண்டு களத்தில் இறங்கினேன். பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து யோகப்பயிற்சி செய்வது போல, அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து விஷ்வகுமார் வீடு நோக்கி எனது சைக்கிள் பறந்தது. குளித்து பளிச்சென்று நெற்றி நிறைய விபூதி பட்டைகளுடன், முகத்தில் புன்னகையுடன் வரவேற்பார் விஷ்வகுமார். சொற்ப தொகையான ஒரு ட்யூஷன் பணத்தை அவர் வாய் திறந்து கேட்டதேயில்லை. கொடுத்தாலும் எண்ணி பார்ப்பதில்லை.

ஜெயமோகனின் ”சோற்றுக்கணக்கு” சிறுகதையில் உணவளிக்கும் ‘கெத்தேல் சாகிப்’ பாத்திரம் போல, மாணவர்களுக்கு கல்வியை அள்ளித் தந்தவர் ஆசிரியர் விஷ்வகுமார். அவர் ஒரு அற்புத கதைசொல்லியும் கூட. 

ஒரு துகள் (எலக்ட்ரான்) அதன் எதிர்-துகளுடன் (பாசிட்ரான்) இணைந்து சக்தியாக மாறுவதை (annihilation), வடலூர் இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்து மறைந்த சம்பவத்தை சொல்லி விளக்குவார். பேருந்தில் ஜன்னல் இருக்கைகள் முதலில் நிரம்புவதை வைத்து, எலக்ட்ரான்கள் அதன் சுழல் பாதைகளில் ஒற்றை ஒற்றையாய் அமர்கின்ற விதியை எளிதாக்குவார். பெருமாள் கோவில் சுவற்றின் வெள்ளை மற்றும் காவி வண்ண பூச்சு வரிசைகளை வைத்து ஒளிச்சிதறல்  (ஸ்பெக்ட்ரம்) எடுக்கப்படும். குழாயின் கீழ் உள்ள குடத்தில், நீர் நிரம்புகின்ற ஓசையின் மாற்றங்களை வைத்து ‘டாப்ளர் விளைவு’ நிகழும். இப்படி எண்ணற்ற உவமைகள். ஏராளமான கதைகள். விஞ்ஞானத்துடன் சேர்ந்து விஞ்ஞானிகள் பற்றிய குறிப்புகள் பல தருவார். ஒரு பாம்பு தன் வாயால் அதன் வால் கவ்விய வடிவம் கனவில் தோன்றியதை வைத்து August Kekulé உருவாக்கியதுதான் Benzene Ring என்பது ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை மேலும் சுவாரசியமாக்கியது.  நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் புகழ் பெற்ற தேற்றம் E = m*cஸ்கொயர். மேக்ஸ் பிளாங்க் தேற்றம் E = hv, அதற்கும் நோபல் பரிசு கிடைத்தது. ஒரு காகிதத்தில் இந்த இரண்டு முக்கிய தேற்றங்களை இணைத்து, டி ப்ரொக்லீ என்பவர் அலைநீளம் தேற்றத்துக்காக நோபல் பரிசு வென்றதை த்ரில்லர் கதை போல விளக்குவார் விஷ்வகுமார். அறிவுத்துறை எப்படி ஒரு தொடர் சங்கிலியாக செயல்படுகிறது என்பதை எண்ணி எனது ஆர்வம் பெருகியது. சட்டென்று எனக்கு  பாட புத்தகங்கள் அனைத்தும் கதை புத்தகங்கள் போல் தோன்றின. நனவிலும் கனவிலும் கதைகள் விரிந்து வளர்ந்தன. கற்றல் என்பது மிக இனிமையாகி விட்டது. பரிட்சை ஹாலில் கேள்விகளுக்கு எக்ஸ்ட்ரா காகிதங்களை வாங்கி ஒரு எழுத்தாளன் போல கதைகளை எழுதித் தள்ளினேன். +2 ரிசல்ட் வந்ததும் மதிப்பெண்கள் காண்பிக்க ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன்.

‘அடுத்தது என்ன?’ என்றார் விஷ்வகுமார்.

‘ஜிப்மர்ல மெடிக்கல் படிக்க ஆசை. என்ட்ரன்ஸ் எழுதி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கேன். கிடைப்பது சாத்தியமில்லை சார்’ என்றேன்.

‘வேறென்ன ஆப்ஷன்ஸ் வெச்சுருக்க?’ என்றார்.

‘தெரியல சார்’ என்றேன்.

‘என்னது? வீட்ல செய்தித்தாள் வாங்கும் பழக்கமுண்டா?’

‘இல்லை சார்’ என்றேன்.

அருகே மேசையின் மீது இருந்த செய்தித்தாளை பிரித்து, குறிப்பிட்ட ஒரு பக்கத்தை தேடினார்.

‘’Regional Engineering College அதாவது மண்டல பொறியியல் கல்லூரியின் விண்ணப்ப படிவம். அப்ளை பண்ணு. முயற்சி திருவினையாக்கும்’’ என்று ஆசிர்வதித்தார்.

அவரது எட்டு வயது மகள் சிரித்துக்கொண்டே வாழ்த்து சொல்லி எனக்கு டாட்டா காண்பித்தாள். ஆசிரியர் அன்று கத்திரிக்கோலால் எடிட் செய்து தந்தது செய்தித்தாளை மட்டுமல்ல, என் தலைவிதியையும் கூட என்று அப்போது தெரியவில்லை.

நமது மரபு அணுக்களில் மாற்றம் செய்கின்ற தொழில்நுட்பம் இன்று மிகவும் எளிதாகி, DNA எடிட்டிங் தாண்டி RNA எடிட்டிங் வரை வந்துவிட்டது. டிசைனர் உடைகள் போல டிசைனர் குழந்தைகள் உருவாக்க இயலும். ஆட்டிசம் குறைபாடுகள், சர்க்கரை நோய், ஆட்டோ இம்யூன் போன்ற பல  நோய்களுக்கு தீர்வாக ஜீன் எடிட்டிங் நம்பிக்கை தருகிறது. தாவரங்கள், மிருகங்கள் தாண்டி மனித மரபணுக்களில் சோதனை செய்வதற்கு பல தேசங்களில் தடையென்றாலும், முயற்சிகள் தொடர்ந்தபடிதான் உள்ளது. Watson & Crick விஞ்ஞானிகள், மரபணுவின் வடிவத்தை முதலில் கண்டுபிடித்த நாளன்று , கேம்ப்ரிட்ஜ் பரிசோதனை கூடத்தின் அருகில் இருந்த ஈகிள்ஸ் பப் உள்ளே சென்று, ‘உயிரின் ரகசியத்தை’ கண்டடைந்து விட்டதாக அங்கே அறைகூவல் விடுத்துள்ளனர். டபுள் ஹெலிக்கல் டிஎன்ஏ மாடலுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நான் நின்றிருந்த கார்ப்பஸ் க்ளாக்கிலிருந்து பத்தடி தூரத்தில் ஈகிள்ஸ் பப் தெரிய, உள்ளே நுழைந்தேன். உள்ளூர் மக்களுடன், சுற்றுலா பயணிகள் பலர் குழுமியிருந்தனர். மிக அருகில் கேவண்டிஷ் பரிசோதனைக் கூடம். ஜே.ஜே தாம்ஸன் எலக்ட்ரானை  கண்டுபிடித்ததும், ஜேம்ஸ் சேட்விக் நியூட்ரானை கண்டுபிடித்ததும் இங்குதான். மாபெரும் அறிவியல் திருப்புமுனைகளை தந்த மகத்தான மனித மனங்கள் நடந்து சென்ற தெரு. அத்தெருவில் சிறிது தூரம் நடந்து சென்று, வலது புறம் திரும்பியவுடன் சார்லஸ் டார்வின் வசித்த வீடு தென்பட்டது. தற்சமயம் இது போன்ற வீடுகளில் கல்லூரி மாணவர்கள் வாடகையெடுத்து வசிக்கிறார்கள். ஒரு அறையிலிருந்து பாட்டு சப்தமும், கூச்சலும், ஆரவாரமும் பீறிட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையை நிரூபிக்க முயல்கிறார்களோ?

மேய்ச்சல் நிலங்களில் வேலி போட்டு வாழ்வாதாரத்தை தடுத்து, மெழுகுவத்தி ஏற்றுவதற்கு வரி கட்ட சொன்ன அதிகாரத்தை எதிர்த்து வெடித்த குடியானவர்களின் புரட்சி, கேம்ப்ரிட்ஜ்  மண் வரை பரவியுள்ளது. அரச வம்சங்களுக்கும், பிரபு குடும்பத்தாருக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த கல்வியானது, குடியானவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நடந்த போராட்டங்களை “Town versus Gown” என்று கூறுகிறார்கள். கேம்ப்ரிட்ஜின் முதல் எண்ணூறு வருட சரித்திரத்தில் ஆண்கள் மட்டுமே படித்துள்ளனர். சென்ற நூற்றாண்டில்தான் பெண்களுக்காக கல்லூரிகளின் கதவுகள் திறந்து, அவர்களுக்கு பட்டமளிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இரண்டு ராணிகள் கொடையளித்து உருவான கல்லூரியின் பெயரை Queens கல்லூரி என்பதா அல்லது Queen’s கல்லூரி என்பதா என்று குழம்பி, இறுதியில் Queens’ கல்லூரி என்று பெயரிட்டு மொழிச்சிக்கலை தீர்த்துள்ளனர். குயின்ஸ்’ கல்லூரியை தாண்டி கிங்ஸ் கல்லூரியை வந்தடைந்தேன். கிங்ஸ் கல்லூரி ஆறாம் ஹென்றி கொடையளித்து உருவானது. சுற்றி பார்க்க நுழைவு கட்டணம் ஐந்து பவுண்டுகள். ரசீது வாங்கி உள்ளே நுழைந்தேன். நவீன கணிப்பொறியியலின் தந்தை ”ஆலன் ட்யூரிங்” படித்த கல்லூரி இது. பிரம்மாண்டமான வாசல். சீரான பச்சை புல்வெளி. வண்ண மலர்கள் நிறைந்த தோட்டங்கள். அருகிலேயே ஒரு தேவாலயம். கல்லூரியின் பின்புறம் கேம் நதி ஓடிக்கொண்டிருந்தது. செல்வமும் செழிப்பும் இணைந்து கிங்ஸ் கல்லூரியின் ஒவ்வொரு புள்ளியிலும் ஞானத்தின் செறுக்கு தெறித்தது. மீண்டும் வாசலுக்கு வந்து, வடக்கு நோக்கி நகர்ந்து நியூட்டன் படித்த ட்ரினிட்டி கல்லூரிக்கு வந்து சேர்ந்தேன். அவரது அறையின் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த ஆப்பிள் மரத்தை சிலர் புகைப்படம் எடுக்க, சிலர் காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்தனர். கல்லூரி விடுமுறை காலத்தில் நியூட்டன் தனது கிராமம் சென்றபோது, அங்கு விழுந்த ஆப்பிளை பார்த்த பின் புவியிர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்றும், அந்த மரத்தின் சந்ததிதான் ட்ரினிட்டி கல்லூரியில் நட்டு வைத்து வளர்க்கப்படுகிறதென்றும் பல கதைகள் உலவுகின்றன. கல்லூரியின் ஆலயத்தில் இருந்த நியூட்டனின் சிலையருகில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ட்ரினிட்டி கல்லூரி எட்டாம் ஹென்றியின் கொடை. நான் காலையிலிருந்து டஜன் கணக்கான கல்லூரிகளை கண்டு, அதில் படித்த அறிஞர்களை கிரகிக்க முயன்று மலைத்துப்போய் நின்றிருந்தேன்.  ஜவஹர்லால் நேரு, எம்.எஸ். ஸ்வாமிநாதன், மன்மோகன் சிங் போன்ற பல ஆளுமைகளை உருவாக்கி, இந்தியாவின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானித்ததில்  கேம்ப்ரிட்ஜ் மண்ணுக்கு பெரும் பங்குண்டு என்றே கூறலாம்.

இந்தியாவின் பெரிய வரைபடம் ஒன்றின் முன்பாக நான் நின்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு மாநிலத்தின் மீதும் பல்ப் ஒன்று எரிய, திருச்சி துவாக்குடியில் REC கவுன்சலிங் பரபரப்பான கட்டத்தை எட்டியது. அமைதிப்படை அனுப்பிய காரணத்தால் அமைதிப்பூங்காவில் ராஜீவ்காந்தி படுகொலை அரங்கேற, பஞ்சாப் தீவிரவாதிகள், காஷ்மீர் தீவிரவாதிகள், அஸாம் தீவிரவாதிகள் என தேசத்தின் அனைத்து முனைகளும் பதட்டத்தில் இருந்த காலமது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தெற்கு, மத்திய, மற்றும் வடஇந்தியாவில் உள்ள கல்லூரிகளை தெரிவு செய்துவிட்டதால் சீட்டுகள் தீர்ந்து, அந்த மாநிலங்களின் மீது மினுக்கிய பல்புகள் விரைவாக அணைந்தன. என் முறை வந்தபோது பஞ்சாப், காஷ்மீர், அஸாம் ஆகிய மூன்று பல்புகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. நான் விரல்களை உயர்த்தி பஞ்சாப், காஷ்மீர் என்று நகர்த்தி கடைசியில் வடகிழக்கு நோக்கி அஸாம் மாநிலத்தை தேர்ந்தெடுத்தேன். அல்லது அஸாம் என்னை  தேர்ந்தெடுத்தது என்றும் சொல்லலாம்.

புதுவையை சுற்றி கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் என எனது பால்யகால பயணங்கள் யாவுமே பேருந்து சார்ந்தவைதான். பதினெட்டு வயது வரை நான் ரயிலில் பயணித்ததே இல்லை. முதுகில் பதினெட்டு கிலோ லக்கேஜ்ஜையும், நெஞ்சத்தில் பதினெட்டு வருட நினைவுகளையும் சுமந்து கொண்டு, புதுவையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டேன். காகிதத்தில் நான் கிறுக்கிய ரயில் ஓவியங்களை விட பிரம்மாண்டமாய் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  நின்றிருந்தது. வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல ரயில் விசுக்கென்று கிளம்பியதும், என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. டி.வியில் சேனல்கள் மாறுவது போல, ரயிலின் ஜன்னல்கள் வழியே தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று காட்சிகள் மாறின. பல வித முகங்கள், மொழிகள், உணவுகள், உடைகள், வண்ணங்கள். இயற்கை காட்சிகள். ஒரிசாவில் பந்த் அறிவித்ததால் காலை துவங்கி மாலை வரை ரயில் ஒரே இடத்தில் நின்று விட்டது. கொல்கத்தாவிலிருந்து கவுஹாத்தி செல்ல வேண்டிய காமரூப் எக்ஸ்பிரஸ்ஸை இனி பிடிக்க இயலாது. அதன் பிறகு Barak Valley ரயில். பள்ளி நாட்களில் இந்திய வரைபடத்தில் நதிகளின் பெயரை எழுதியதுண்டு. அந்த நதிகள் எல்லாம் இன்று உயிர்பெற்று பெருக்கெடுத்து பேரோசையுடன் ஓடிக்கொண்டிருந்தன.  கூவம், கொசத்தலையாறு, ஆரணி, பென்னா, கிருஷ்ணா, கோதாவரி, நாகவல்லி, மகாநதி, பிராமணி, ஹூக்ளி , சுபர்னரேகா, கங்கை, தீஸ்தா, பிரம்மபுத்ரா, பராக் நதி என மிக நீளமான ஒரு ட்ராலி ஷாட் ஏழு உதயங்களையும், ஏழு அந்திகளையும் காண்பித்த பின் நிறைவடைந்தது. நான் கல்லூரிக்குள் காலடி வைத்தேன்.

அந்திப்பொன் ஒளி பட்டு கேம் நதி ஜொலித்துக் கொண்டிருந்தது. நான் மெல்ல நடந்து கேம் நதியின் படகுத்துறை  வந்து சேர்ந்தேன். படகில் துடுப்பு போட்டு செல்வது Rowing. நீண்ட கழி ஒன்றை நீருக்குள் உள்ள மண்ணில் செலுத்தி துழாவியபடி செல்வது Punting. கேம் நதியில் Punting மிகப் பிரபலம். கேம்பிரிட்ஜ் கல்லூரிகளை படகில் Punting செய்தபடியும் சுற்றி காட்டுகிறார்கள். கோடைக்கால சுற்றுலா பயணிகளை குறிவைத்து வழியெங்கும் ஐஸ்கிரீம் கடைகள். நகரின் மையத்தில் சந்தை சுறுசுறுப்பாக இயங்கியது. ஓவியங்கள், கைவினை பொருட்கள், கலைப் பரிசுகள் விற்பனைக்கு இருந்தன. கேம்பிரிட்ஜ் கல்லூரிகளின் படம் அச்சிட்ட டீ சர்ட், டீ கப், பை, பேனா, டை, தொப்பி, பொம்மைகள் என்று கடைகளில் பல வகை  நினைவுப்பொருட்களை விற்றனர்.  ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளை துரிதமாய் வினியோகிக்க, இரு சக்கர வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாய் பறந்து கொண்டிருந்தன. நான் ராமானுஜத்தை நினைத்துக் கொண்டேன். முதல் உலகப்போர் நேரத்தில், சைவ உணவு கிடைக்காமல்,  இனவெறி தாக்குதலில் சிக்கி, கடுங்குளிரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 32 வயதிலேயே கணிதமேதை இறந்துவிட்டார். இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லர் படைகளின் தகவல் பரிமாற்றங்களை, ரகசிய குறியீடுகளை கட்டுடைப்பதற்காக புதிய கணிப்பொறி ஒன்றை வடிவமைத்தார் ஆலன் ட்யூரிங். இரண்டாம் உலகப்போரின் வெற்றியை நிர்ணயித்த ஆலன் ட்யூரிங், ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அவரை கட்டுப்படுத்த மருந்து செலுத்தியதின் விளைவாக அவரது ஹார்மோன்கள் குழம்பி, மார்பகங்கள் உருவாகி, உளவியல் பாதிக்கப்பட்டு 41 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். மகாத்மா காந்திக்கு தோட்டாக்களை பரிசளித்த சமூகம்தானே நாம்? 

ஊழ் என்றால் என்ன? தலைவிதியா? கடவுளா? அதற்கும் அப்பால் அறிய முடியாத ஒன்றா? ஊழ் என்பது விதி என்றால் விதியை மதியால் வெல்வது சாத்தியமா? ஊழ் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றால் பிறகு மதியால் எப்படி அதை மாற்ற இயலும்? ஒரு தனி மனிதனின் ஊழ் என்பது, சமூகத்தின் ஊழ் மற்றும் பிரபஞ்ச விதிகளுடன் பிணைந்தே இருப்பதால் அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தனியொரு மனிதனால் அறிவின் பாதையில் சென்று அகழ்ந்தெடுக்கப்படுகின்ற கணித சூத்திரங்கள், அறிவியல் விதிகள், மகத்தான கண்டுபிடிப்புகள் யாவும் நோபல் பரிசுகளை வென்றாலுமே கூட, ஒரு சமூகமாக அதை கையாளுவதற்கான தகுதியையும் முதிர்ச்சியையும் நாம் அடையாத பட்சத்தில், அந்த கண்டுபிடிப்புகள் அழிவில் முடியக் கூடும். நல்லூழ் தீயூழ் ஆவதும், ஆகூழ் போகூழ் ஆவதும் இப்படித்தான். அணுவை பிளந்து அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்றாலும், அணு ஆயதங்களையும், இயற்கை பேரிடர்களையும் கணக்கில் கொண்டு இன்று உலகில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றது. மரபணு சோதனைகளுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. ஆலன் ட்யூரிங் மீதான குற்ற வழக்குகளை தள்ளுபடி செய்த இன்றைய நீதிமன்றம், பழைய தீர்ப்புகளை மாற்றி எழுதியது. அரசாங்கமும் சமூகமும் மன்னிப்பு கோரி, ஐம்பது பவுண்டு கரன்சி நோட்டில் ஆலன் ட்யூரிங் படத்தை அச்சிட்டு கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் உள்ள பூர்வகுடிகளுக்கு இழைத்த அநீதிகளுக்காக, வளர்ந்த சமூகங்கள் இன்று மண்டியிடுகின்றன. கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் செய்கின்ற பாவங்களுக்கு, எதிர்காலத்தில் பிராயச்சித்தம் தேடுகின்ற நிறுவனத்தின் பெயர்தான் சமூகமோ? இந்தியாவின் ஆன்மா காந்தி. ஆன்மாவை கொன்றுவிட்டு தான் நாமும் வேகமாய் வளர்கின்றோம். 

அறமற்ற ஒரு சமூகத்தில் அறத்தை நிலைநாட்டுவதே நமது கடமையும் தர்மமும். அப்படி ஒரு செயலில், நம் உயிரே போனாலும் பரவாயில்லை என்று நம்மை தீவிரமாக இயங்க வைப்பதே ஊழ்.  செயலின் நோக்கம்தான் முக்கியமே தவிர, செயலின் பலன்கள் அல்ல. ஒரு செயலின் நோக்கத்தை பொறுத்துதான் ஊழ் என்பது, நல்லூழாகவோ தீயூழாகவோ வடிவமெடுத்து நம்முடன் கைகோர்க்கிறது. யுகந்தோறும் ஊழ் நம்மை கண்காணித்துக் கொண்டேயிருக்கிறது. அதை தரிசிக்க பூர்வ ஜென்மம், மறுபிறவியெல்லாம்  தேவையில்லை. வாழும் காலத்திலேயே சற்று கூர்மையாக நம்மை சுற்றி நடப்பவற்றை கவனித்தாலே போதும். 

இப்படித்தான் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்து, கேம்பஸ் நேர்காணலுக்காக ஒரு கல்லூரிக்கு செல்ல கோரினார்கள். சில காரணங்களால் என்னால் வர இயலாது என்றேன். அலுவலக பஸ் கல்லூரி நோக்கி கிளம்பிவிட்டது. நான் மாணவர்களை பற்றி யோசித்தேன். சமூகத்தின் பல்வேறு அடுக்குகளிலிருந்து வரும் சில மாணவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச தடுமாறுவதுண்டு. மாற்றுத்திறனாளி மாணவர்களை வழக்கமான இண்டர்வியூ முறைகள் பதட்டமாக்கிவிடும். மாணவர்களின் தயக்கத்தை போக்கி சிறிது நம்பிக்கை அளித்தால் அவர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப தீர்வுகளை தரக்கூடியவர்கள். கேம்பஸ் இண்டர்வியூ என்பது அவர்கள் வாழ்க்கையை மாற்றவல்ல ஒரு வாய்ப்பு. மறுநாள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நான் கல்லூரிக்கு வந்து விடுவதாக கூறினேன். சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்து புதுவை பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்தேன். பரபரப்பான சூழலில் HR டீம் என் கையில் ஒரு பயோடேட்டாவை கொடுத்து ஒரு மேசையை காண்பித்தனர். அங்கே ஒரு பெண் தனது நேர்காணலுக்காக காத்திருந்தாள்.

யார் இவள்? எனக்கு முன்பாக வந்து இங்கே அமர்ந்து இருக்கிறாள். வட்ட முகம். நெற்றியில் விபூதி. மலர்ந்த சிரிப்பு. பரிச்சயமான இந்த முகத்தை இதற்கு முன்பு எங்கோ பார்த்த நினைவு. 

பயோடேட்டாவை பார்த்தபடி, ,’பெயர்?’ என்றேன். 

அவள் தனது முழுப் பெயரை சொன்னாள்.

நான் நம்ப முடியாமல் ‘தந்தையின் பெயர்?’ என்று மீண்டும் கேட்டேன். 

‘விஷ்வகுமார்’ என்றாள்.

‘என்ன வேலை செய்கிறார்?’

‘ஆசிரியர்’ என்றாள்..

 ‘எந்த பள்ளியில் ஆசிரியர்?’

சொன்னாள்.

நான் மனசுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். பல வருடங்களுக்கு முன் எனக்கு வாழ்த்து சொல்லி டாட்டா காண்பித்த சிறுமி இவள்.

‘யுவர் டெக்னிக்கல் ரவுண்ட் ஸ்டார்ட்ஸ் நௌ’ என்றபடி நான் கேள்விகளை கேட்க, அவள் பளிச்சென்று பதில்களை சொல்லத் துவங்கினாள். 

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்

***

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

7 Comments

  1. very interesting, fantastic. கேம்பிரிட்ஜ் வளாகத்தில் போய்வந்த உணர்வு. இதுபோன்ற வெளிநாட்டுக் கல்விச்சுழல், வரலாறு குறித்த தகவல்கள் தமிழில் குறைவே. நண்பர் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நம் மொழியில் இவை கிடைக்கும்போதுதான், நமக்கென ஒரு கனவு உருவாகும், நம் பிள்ளைகளெல்லாம் இங்கு படிக்கும் காலம் வரும். எனக்கு சமஸின் லண்டன் பயணக்குறிப்புகள் இடையிடையே நினைவுக்கு வந்தது. நன்றி, மிக நன்றி.

  2. ஒவ்வொரு இடங்களுக்கும் சென்ற திருப்தி
    ஊழ் மிக நுட்பமான தலைப்பு. அது உங்கள் வாழ்வில் எப்படி அமைந்தது என்பதை அருமையாக தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்
    தத்துவத்தையும், கதையையும், பயணக்கட்டுரையும், சமூக நீதியையும் ஒரு சேர கொண்டு வந்தது அபாரம்
    ஒரு அருமையான படம் பார்த்த நிறைவு

  3. உங்கள் எழுத்து வசீகரமாகவும் வேகமாக வாசிக்கவும் வைக்கிறது. நல்லது.

  4. அருமையான பதிவு. தங்களின் கேம் உலா மற்றவரின் சிந்தனைச் சிறகுகளை படப்படக்க வைத்ததும் ஊழ் தானோ?
    வாழ்த்துகள் வெற்றிராஜா

  5. தனது பணியின் பெரும்பகுதியை ஐடியில் கழித்த ஒருவர் ஊழ் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதுவும் அவரது வாழ்க்கை உதாரணத்தை எடுத்துக் கொண்டு. ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள். எனக்குத் தெரிந்தவரை, தகவல் தொழில்நுட்பத் துறையினர் எப்போதும் தங்கள் தொழில் மற்றும் சொத்துக் குவிப்பு பற்றியே சிந்திப்பார்கள். அவர்களின் கடந்த காலத்தைப் பற்றியும் அவர்களின் ஊழ் பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை. . இந்த பதிவு பல விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுத்துள்ளது. எழுத்தாளர் தனது தனிப்பட்ட ஊழ்வை வெளிப்படுத்தினார் மற்றும் ஊழின் விளைவுகளை நேர்மறையான வழிகளில் விளக்குவதற்கு தன்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளார்.வணக்கம் விஸ்வகுமார் ஒரு ஆசிரியர் கிடைத்துள்ளார், அவர் அனைத்து அறிவியல் மற்றும் கணித பாடங்களையும் நடைமுறை வழிகளில் விளக்குவதற்கு நம்பமுடியாத அறிவைக் கொண்டுள்ளார். எனவே, ராஜா இது உங்கள் நல்ல ஊழ். திருக்குறள் ஒன்று உள்ளது. நுண்ணிய நூல் பால கற்பினும் உண்மை அறிவே மிகும். இந்த திருக்குறளுக்கு உங்கள் ஆசிரியர் சிறந்த உதாரணம். இந்த நாட்களில் அத்தகைய ஆசிரியரைப் பெறுவது எளிதானது அல்ல. 2K தலைமுறை வெறும் தகவல்களை மட்டும் உட்கொள்கிறது.அவர்கள் தங்கள் பெரியவர்களின் கடந்த கால அனுபவங்களைக் கேட்கத் தயாராக இல்லை, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இது அவர்களின் ஊழ். ஆனால் நாம் பெரியவர்களாக இருப்பதால், அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஊழினைப் பற்றிய பின்விளைவுகள். உங்கள் பதிவில் பல நுணுக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. கேம்பிரிட்ஜில் படித்த உயர்ந்த ஆளுமைகள் மற்றும் அவர்களின் ஊழ்கள் பற்றி. ராஜா உங்கள் நேர்த்தியான பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதுபோன்ற தனிப்பட்ட மற்றும் சமூகப் பொறுப்புள்ள கட்டுரைகளை பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து எழுதி இடுகையிடவும். வெற்றி ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் . எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.

  6. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ராஜா!!!
    ஊழ் ஒரு செயலின் நோக்கத்தை பொருத்துதான் என்பதை இந்த உலகிற்கு விளக்கியது உங்கள் “விஷ்வகுமார்” ஆசிரியர் கதை சொல்லுவது போல இருந்தது.
    கேம்பிரிட்ஜ் உலா “பொன்னியின் செல்வன்” கதை சொல்லுவது போல இருந்தது.

    நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.