ஆழமான கருவைக்கூடச் சுருக்கமாகவும், துல்லியமாகவும். குறைந்த பாத்திரங்களுடனும் சொல்லக்குடியன என்பதால் சிறுகதை எனக்கு எப்போதுமே பிடித்தமான இலக்கிய வடிவம் என்றாலும், மனித வாழ்வோடு பிணைந்திருக்கும் மரபுகள், பண்பாடுகள். கலைகள், அரசியல், உளவியல் தொடர்பாக நுன்னிப்பாகவும் விரிவாகவும் சொல்வதற்கு நாவல்களே சிறந்த வடிவம் என்று தோன்றுகின்றது.
நீண்ட கால எனது வாசிப்புப் பயணத்தில், கதைகளை மட்டுமே வாசிப்பதில் ஒரு போதாமையை அண்மைக் காலமாக உணரத்தொடங்கியபோது எனது தேடல்களும் புதிய சிந்தனைத் தளத்தை நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. வாழ்வியற் கூறுகளை உணர்வுரீதியாகவும், கதையாகவும் திறம்படச் சொல்லும் நாவல்கள் சுய சிந்தனை வளர்சியை ஊக்கப்படுத்தும்வகையில் இருப்பது அரிது. கதைகள் ஒருவகையில் என் மனதை வளப்படுதியிருந்தாலும் மறுபக்கம் மீண்டும் மீண்டும் உணர்வுகளுக்குள் உழன்றவும் வைத்துள்ளன. நாவல்களுக்குக் கதைகள் இன்றியமையாதன. தற்போதைய மனநிலையில் கதைகளோடு சிந்தனை வளத்தையும் ஊக்கப்படுத்தும் நாவல்கள் வாசிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மனிதர்களுக்கிடையில் சமத்துவத்தை உருவாக்கச் சட்டங்கள், சித்தாந்தங்கள் அவசியம்தான், ஆனாலும் அக மாற்றமும் இணைந்தே சமத்துவ உணர்வை முழுமைபெறச்செய்யும். மனிதரை மனிதர் ஒடுக்கின்ற உணர்வு அகத்தளத்திலிருந்து எழுவதால், சமத்துவ உணர்வும் அகத் தளத்திலிருந்து எழுவது அவசியம்.
‘காந்தப் புலம்’ ஒரு மனப் பயணக் குறிப்பு. இந்த நூலின் மீதான வாசிப்பு அகச் சுவையையும். அறிவுத் தளத்தில் புதிய சிந்தனைகளையும் கிளறிவிட்டது என்பதனாலேயே எனது வாசக அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
“அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உண்டு”
மனிதர்கள் இயற்கையின் ஒரு கூறாய் பரிணமித்தவர்கள். இயற்கையின் கூறுகள் மனிதர்களுக்குள்ளேயும் இருக்கின்றன. “அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உண்டு” என்பது காந்தப் புலத்தில் மையப் புள்ளியாய் உள்ளது. இயற்கையின் அசைவுகள்(நீர், நெருப்பு, காற்று) மனிதர்களுக்குள்ளேயும் அசைந்து கொண்டிருக்கின்றன. இந்த அசைவு, தேங்கத்திற்கு முரணானது. தேக்கமுறுபவைகள் கழிவுகள்தான். மனித மனம் தனக்குள் ஊடாடும் மரபுகள், எண்ணங்கள், உணர்வுகள், அனைத்தையும் புதுப்பித்துக்கொள்வதன்மூலமே புதிய மனிதர்களாய் பரிணமிக்கவும் இயலும்.
காந்தப் புலத்தின் உயிர்த்துடிப்பாய் உள்ளது சமத்துவம். சமத்துவத்தை வெளியுலகில் உருவாக்குவதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சாதியத்துக்கெதிரான போராட்டம், இனவிடுதலைப் போராட்டம், பொருள் சமத்துவம், பால் சமத்துவம்… இவைகளைச் சட்டங்களால் மாற்ற முயலலாம். ஆனால், அகத்தளவில் மனிதர்கள் மாறாதபட்சம், முழுமையான மாற்றம் சாத்தியமில்லை என்பதால் மனிதர்கள் தம்மைத் தாமே உணருதல் அவசியம்.
காந்தப் புலத்தின் மனப்பயணம் இவ்வாறுதான் தன் புதிய சிந்தனைகளால் பூத்திருக்கின்றது. இது ஒரு ஈழத்து இளைஞனின் மனப் பயணம். இரு தலைமுறைகளுக்கிடையிலான ஊடாட்டம்.
ஊடறுப்புகள்: பயணத் தளங்கள், பாத்திரங்கள்
மனித அகவெளியும், புறச்சூழலும் (அண்டமும் பிண்டமும்) காந்தப் புலத்தின் மையக் கதைக் களங்கள். இந்த இரண்டு கூறுகளும் மனிதர்களது வாழ்வில் பின்னிப்பிணைந்து இயங்கும் தளங்களாகவும் உள்ளன. இது ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாக நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனால், இந்த இயக்கம் பற்றிய விழிப்பு நிலையும், தொடர்ச்சியான அவதானிப்பும் இங்கு முக்கியமானது.
ஓர் ஈழத்து இளைஞனின் யுத்தகால இடப்பெயர்வுச் சூழலில் ஆரம்பிக்கும் கதை, பின்னர் அவனது அக உலகிலேயே பெரும்பாலும் நிகழ்கின்றது. இளைஞனின் அகம் தனியொரு பாத்திரமாக உருவகிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாத்திரத்தின் பெயர் “சடையன்.” அகவுலகம் முழுக்க முழுக்கக் குறியீடுகளாலேயே சித்தரிக்கப்படுகின்றது.
பிரதான கதாபாத்திரமான இளைஞனின் அகம் உணர்வுகள், சிந்தனைகள், மரபுகள் ஆழங்கள், நினைவுகள், மறதிகள், இரகசியங்கள், இன்னும் அறியப்படாத இருள்மைககள் அல்லது வெளிகள் என்று எமது மனதின் தன்மைகளைப் பிரதிபலிக்கின்றது.
குறியீடுகளாலான இவ் அகவுலகக் காட்சிகள் எம்மை ஒரு புதியதொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றது. அந்தப் புதிய உலகில், உணர்வுகள் மரங்களாக அசைகின்றன. அங்கு காதல் கனி காய்க்கின்றது. சொற்கள் மழைத் தூறல்களாக அல்லது பெரும் மழையாய்ப் பொழிகின்றன. எண்ணங்கள் பறவைகளாகிச் சிறகடிக்கின்றன. மனதில் ஆழ ஊறிப்போயுள்ள மரபுகள் நதியென அவனை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இளைஞனின் நினைலிருந்து தொலைந்திருக்கும் மறதி, மலைகளாய் உருப்பெற்றுள்ளன. மனங்களின் இரகசியம் ஒரு பொதிக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகக் குறியீடுகள் பேசுபொருளை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, அழகியலுக்கு மெருகூட்டுவனவும்கூட. காந்தப் புலம் நாவலில், வெளியுலகத்திலும், அகவுலகிலும் இன்னும் பல குறியீடுகள் (நாகம், யானை, கடல், கப்பல், நரி, பன்றி, செம்மீன்) போன்றவை கருத்தியல் அழகுணர்ச்சியை மெருகுபடுத்தியுள்ளன.
மனம், அகத்திலும் புறத்திலும் மாறி மாறிப் பயணிக்கக்கூடிய தன்மைகொண்டிருப்பதால், கதைக் களங்கள் அகமும், புறவெளியும் (ஈழம், புலம் பெயர் நாடொன்று) என்று மாறி மாறியே நிகழ்கின்றது. புறவெளியில் சந்தித்த மனிதர்கள் ‘சடையன்’ என்கிற அகத்திலும் வாழ்கின்றார்கள்.
துயரத்தின்போது அல்லது ஆழமான சிந்தனையிலோ எமது மனசுக்குள்ளேயே நாம் சில கணங்களில் தொலைந்துபோவதைப் போன்றே, காந்தப் புலத்தில் காலப் பள்ளத்துள் சடையன் மனசு தனது துயரகாலத்தில் தொலைந்துபோகின்றது. இவ்வாறான பல தளங்களில் கதை பயணிக்கின்றது.
இங்கு காலப் பயணம் (time travel) கதைக் களங்களில் முக்கியமான ஒன்று. ஈழவிடுதலைப் போர்- இடப்பெயர்வுக் காலம் இறந்தகாலங்களாகவும், பின்னர் தற்காலத்திலும் கதை நிகழ்கின்றது. பின்னர் ஆதிகாலத்துக் செல்கின்றது மனசு. அங்கிருந்து திரும்பி தற்காலத்திற்கு வருகின்றது.
உடல் காலத்தின் நேர் வழியில் பயணிப்பதுதான், ஆனால் மனமோ இந்தத் தம்மைக்கு முரணானது. உடலோடு மனம் ஒன்றியிருப்பதுபோல தோன்றினாலும் மனம் வேறாகவும் இருக்கின்றது. பல பாத்திரங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். அவர்கள் சமூகப் பற்றுடையவர்களாகவும், சமூகப் போராளிகளாகவும் படைக்கப்பட்டுள்ளனர். காந்தப் புலத்தின் பிரதான பாத்திரம், ஒரு மலையகத்து இளைஞன்.
பெரும்பாலான பெண் பாத்திரங்கங்கள் அப் பாத்திரங்களின் கதை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இறந்துவிடுகின்றனர். ஆசிரியர் கதைக் கருவின் தேவை கருதியே இவ்வாறு எழுதியிருக்கலாம். யதார்த்தத்திலும், பெண்கள் பல சமூக ஒடுக்குமுறைகளால் இறக்கும் சம்பவங்களோடு பொருத்திப்பார்த்துக்கொண்டாலும், இத்தனை பெண்பாத்திரங்கள் மரணமெய்வது, அவர்களது கருத்துக்களைச் சொல்வதற்கான தொடர்ச்சி இல்லாமல் போய்விடுகின்றது.
மனிதர்களுக்கிடையிலான சமத்துவம் ‘காந்தப் புலம்’ முழுவதும் ஒரு நூலிழை போன்று தொடர்கின்றது. பொருளியல் சமத்துவம், பால் சமத்துவம். அகநிலைச் சமத்துவம், இறுதியல் ஞானம்.
சமத்துவத்தை நிலைநாட்ட வரலாறு முழுவதும் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள், வாழ்வியல் முறைகள், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள், சித்தாந்தங்களில் இருக்கும் முரண்கள், ஒன்றுமைகள் காந்தப்புலத்தின் பேசுபொருள்கள்.
மார்க்சியத்துக்கும் பௌத்தத்துக்குமான ஒற்றுமை பொதுவுடமை சார்ந்து மிக நெருக்கமாக இருப்பதைப் பற்றியும் காந்தப்புலம் பேசுகின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தனியுடமை மனிதர்களுக்கான அழிவென்றும், பொதுவுடமையே மனித சமத்துவத்திற்கு அவசியமென்றும் முன்மொழிந்தார். ஆசை துன்பத்திற்கான காரணி. ஆசையின் விளைவுதான் தனியுடமை. பொறாமை. போட்டி, குரோதம் போன்ற பாதகமான உணர்வுகளும் தனியுடமை மனநிலையிலிருந்துதான் எழுகிறது. தனியுடமைக் குவிப்புக்கு முரணாகவுள்ளது மார்க்சியம். ஆகவே மனித வாழ்வை மேம்படுத்த உருவாக்கப்பட்ட தத்துவங்களின் ஒன்றுமைகள் முக்கியமானவை.
சமத்துவத்திற்கு முரணான சாதியத்தை ஒழிப்பதற்கு எமது நிலத்தில் நடந்த போராட்ட முறைகள் அல்லது போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் போதாமைகளும், முரண்களும் பற்றிப் பேசும்போது, ஈழத்தில், சாதியத்திற்கு எதிராகப் போராடிய மூத்த தலைமுறை மார்க்சிஸ்டுக்களின் வெள்ளாள சாதிய மனநிலைதான் பெரியாரியத்தை ஈழத்திற்குக் கொண்டுவரத் தடையாக இருந்தது என்கின்ற விமர்சனமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது. இந்தகைய விமர்சனத்துக்கு இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த தலைமுறை மார்க்ஸியவாதிகளிடம் எவ்வாறான பதில்கள் இருக்கின்றது? போராட்டப் பெருமைகளைப் இன்றும் பேசிக்கொண்டிருப்பவர்கள் விமர்சனங்களைத் தட்டிக்கழிப்பவர்களாகத்தான் தெரிகிறது. சுயவிமர்சனங்களும், கடந்தகால சாதியத்துக்கெதிரான போராட்டம் தொரர்பான சரியான மதிப்பீடுகளும் அடுத்த தலைமுறையினருக்கு பலனுள்ளதான இருக்கும்.
கத்தோலிக்க மதத்திலிருந்து விலகும் ஒரு பாதிரியார் ஆத்மீகத்தை உணர்கின்றார். இங்கு ஆத்மீகம் மதத்துடன் தொடர்பற்றதாகப் பார்க்கப்படுகின்றது. எழுத்தாளர், ஆத்மீகத்தை “தன்சார ஆழ அனுபவம்” என்று குறிப்பிடுகின்றார். நம்மை நாமே அவதானித்தல், புரிந்துகொள்ளுதல் ஞானத்தை அடையும் வழிகளாக முன்மொழியப்படுகின்றது. “தன் சார ஆழ அனுபவம்” என்கின்ற இந்தப் பதம் ஆசிரியரின் புதிய உருவாக்கம். இவ்வாறு கருத்தியலோடு புதியசொற்களையும் உருவாக்குவதன் மூலம் தமிழ் மொழியும் புதுப்பிக்கப்படுகின்றது. கால ஓட்டத்தில் கருத்தியல் மாறும்போது மொழியும் மாற்றமடைதல் தவிர்க்கமுடியாததாகவும் உள்ளது. “கற்பு” பற்றிய கருத்தியல் மாறியபோது “வன்புணர்வு” என்ற சொல் மாற்றப்பட்டது. இன்று முற்போக்கு இலக்கிய சூழலில் பலரும் இச் சொல்லைப் பாவித்துவருகிறார்கள்.
நாவல் முழுக்க நூலிழைபோன்று நகர்ந்துகொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் சமத்துவம் மற்றது பௌத்தமும்.
‘அண்டத்திலுள்ளதுதான் பிண்டத்திலுமுண்டு’ என்ற கூற்று கருத்தியலாகவும் இருக்கின்றது. வௌிச் சூழலில் நிகழுபவை அகத்தில் தாக்கமுறுகின்றன. தன்னைத் தானே புரிந்துகொள்வதோடு, தனிமனித உருவாக்கத்தின் அவசியம் பற்றிய பௌத்தத்தின் அறிவுரைகள் தொடர்பாக இங்கு பேசப்படுகின்றது. துன்பத்திலிருந்து விடுபட ஆசைகளைத் துறத்தல் அவசியம் என்பது பௌத்த நெறியின் பிரதான ஒரு கூற்று.
கதாபாத்திரமான இளைஞன் ஆசை, பொறாமை, காதல் பிரிவு என்கின்ற மனிதரது வழமையான உணர்வுகளுக்கு ஆளாகி பின் ஆழத் துயரத்துக்குச் சென்று, துயரத்திலிருந்து மீளுகின்ற காலத்தில் தன் உணர்வுகளை அவதானித்தும், உணர்ந்தும் தனக்குள் பகுத்தறிந்துபார்த்தும், துயரத்திலிருந்து விடைபெற்று பௌத்தம் வழி ஞானதை நோக்கிச் செல்கின்றான்.
“மின்காந்தத் துகள்கள்” என்று பொருளுடைய “இயனி” இயற்கையோடு ஒன்றிய, சுய சிந்தனையும் கொண்ட, ஒரு ஆழுமை மிக்கப் பெண். பிரதான ஆண் பாத்திரமும் இயனியுமும் நேசத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள். இவர்களுக்குள் ஏற்படும் முரண் பலவீனமானதாக உள்ளது.
இத்தனை ஆழுமையுடன் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரமும் குறுகிய காலத்தில் இறந்துபோவதால், அவளுக்குகெனப் பேசுவதற்கான பெரிய வெளி இருக்கவில்லை. ஆனால் அவளுடைய ஆளுமை அவள் இறந்த பின்னரும் உணரப்படுகின்றது.
மனசின் மாறி மாறிப் பயணக்கும் தன்மையால், சில சம்பவங்கள் அகத்தில் நிகழ்கின்றனவா அல்லது வெளியேயா என்கின்ற குழப்பம் வாசகருக்கு சில நேரங்கள் வருதவதற்கு வாய்ப்புண்டு என்பதால் அவதானமான வாசிப்பு அவசியம்.
பெரும்பாலான நாவல்கள் கதைகளை மட்டுமே வைத்து எழுதப்படுபவை. காந்தப்புலத்திலும் கதைகள் இருக்கின்றனதான். ஆனால் கதைகளோடு தத்துவ விசாரணைகளும், தத்துவங்களை இணைத்துப் பார்த்தலும்(மார்க்சியம்-பௌத்தம்) ஆய்வுசெய்தலும் நிழந்திருக்கின்றது. தத்துவங்கள் தொடர்பாகவும், “தன் சார ஆழ அனுபவங்கள்” தொடர்பாகவும், ஆசிரியரின் சுய ஆய்வுகளும், சுய கண்டுபிடிப்புக்களும் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் உணர்வுகள், எண்ணங்கள் தொடர்பான தனது சொந்த அவதானிப்புகள், கண்டுபிடிப்புகளை ஆசிரியர் எழுதியுள்ளார். இவையே இந்த நாவலின் மிகப் பலமாகவும், வழமையான நாவல்களிலிருந்து வித்தியாசன தன்மையையும் கொண்டிருக்கின்றது.
மெலிஞ்சி முத்தனின் “அத்தாங்கு”, “வேருலகு” போன்ற முன்னைய நாவல்களிலும் சிறிதளவான தத்துவ விசாரணைகளோடு கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ‘வேருலகு” நாவல் கனவுகளின் தொகுப்பு. காந்தப் புலத்தில் அகவுலகக் காட்சிகள் ஒரு கனவு போன்றே மனதில் படிகின்றன. அங்கும் உணர்வுகள் எண்ணங்கள் பற்றிப் பேசப்பட்டிருப்பது கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ஒரு மயக்க உணர்வையும் கொடுக்கிறது. கதைசொல்லும் உத்தியும், காட்சிப் படிமங்களும். யதார்த்தமுடைய ஒரு மனசைக் கதாபாத்திரமாக உருவாக்கியிருப்பதும், அதன் அக- புற பயணங்கள் மாயத் தன்மையானதாகவும் இருக்கின்றது.
காந்தப் புலத்தில் பாவிக்கப்டும் மொழி அவசிறமற்ற வார்த்தைகளின்றி சொற் சிக்கனங்களோடு, வாசிப்பதற்கு இனிமையைத் தரும், புதுவகையான எழுத்துப் பாணியாகவே இருக்கிறது. ஆசிரியரின் பெரும்பாலான நாவல்களில் உரையாடல்கள் குறைவாகவும், கதைசொல்லப் பாணியே அதிகமாகவும் காணலாம். காந்தப்புலமும் விதிவிலக்கல்ல.
௦௦௦
நிரூபா
நிரூபா கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். ‘சுணைக்கிது’ , ‘இடாவேணி’ ஆகிய சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.