/

மானுடம் என்பது ஒரு சிறப்புரிமை : மெரிலின் ராபின்சன்

தமிழில் : விஷால் ராஜா

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : “மெரிலின் ராபின்சன் (1943-)  ஓர் அமெரிக்க நாவலாசிரியை. கட்டுரையாசிரியை. புலிட்சர் உட்பட பல முக்கிய விருதுகளை வென்றவர். நோபல் பரிசுக்கான விமர்சகர்களின் யூகப் பட்டியலில் அடிக்கடி இடம்பெறக்கூடியவர். அயோவா பல்கலைக்கழகத்தில், எழுத்தாளர் பயிற்சி வகுப்பின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

அவருடைய முதல் நாவலான ‘வீட்டை பராமரித்தல்’ 1980ம் வருடம் வெளியானது. உடனடியாக விமர்சன அங்கீகாரத்தை பெற்றது. டைம் பத்திரிக்கையின் நூறு சிறந்த ஆங்கில நாவல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்த நூல் ராபின்சனை ஒரு மேலான நாவலாசிரியராக அடையாளம் காட்டினாலும், அதன் பிறகு 24 வருடங்களுக்கு அவர் எந்த நாவலும் எழுதவில்லை. அவருடைய இரண்டாவது நாவல் கிலியட் 2004ல் வெளிவந்தபோது அதுவும் உடனடியாக பரவலான கவனத்தை பெற்றது. புலிட்சர் விருது வென்ற அந்த நாவல் அப்போதைய அமெரிக்க அதிபரான பாரக் ஓபாமாவால் பாராட்டப்பட்டு மேலும் புகழ் அடைந்தது.

இரண்டாவது வருகைக்கு பிறகு, தன் அறுபது வயதுக்கு மேல் ராபின்சன் தீவிரமாக புனைவுகள் எழுதினார். கிலியட் நாவலை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக வீடு (2008), லைலா (2014), ஜேக் (2020) ஆகிய மூன்று நாவல்களை வெளியிட்டார். இவை நான்கும் ஒரு நாவல் தொடரே. அதை அமெரிக்க காவியம் என்றழைக்கிறார்கள். ஒரே கதாபாத்திரங்களால் ஆன இத்தொடர் இறையியல் உரையாடல்களால் நிறைந்தது.

பாவம், குற்றவுணர்வு, மன்னிப்பு, அன்பு முதலிய அடிப்படை கிறிஸ்தவ கருத்தாக்கங்களின் பின்னனியில், அமெரிக்க தேசத்தின் மைய சிக்கல்களில் ஒன்றான இனவாதத்தினை, கிலியட் நாவல் தொடரில் ராபின்சன் ஆராய்கிறார். இதனுடன் சீர்திருத்த கிறிஸ்தவம் என்றழைக்கப்படுகிற கால்வினிய தத்துவமும் எமர்சன், தோரோ முதலியோர் முன்னெடுத்த அமெரிக்க ஆழ்நிலைவாதமும் அவர் எழுத்துக்களில் தாக்கம் செலுத்தியிருப்பதை விமர்சகர்கள் சுட்டுகிறார்கள். பெண் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி, பெண் அனுபவம் வழியே ஓர் ஆன்மீகமான தனிமனிதவாதத்தை வசப்படுத்தியது அவருடைய சாதனை எனலாம்.

புனைவுகள் அதிகம் எழுதாத இரண்டு தசாப்தங்களிலும் அவர் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். 1989ல் இங்கிலாந்தில் உள்ள செல்லஃபீல்ட் அணுமின் நிலையத்தின் சுற்றுச்சூழல் கேடுகளை விமர்சித்து ‘தாய் நாடு’ என்ற நூலை எழுதினார். தன் வாழ்க்கையின் மிக முக்கியமான நூல் என்று அவரே அதை குறிப்பிடுகிறார். அதற்குரிய ஆய்வுகளின் போது நிறைய கற்றுக் கொள்ள ஆரம்பித்ததாகவும் அதையொட்டி தன்னை மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டியிருந்தாகவும் கூறுகிறவர், புனைவெழுத்தில் இடைவெளி விழுந்ததற்கு அதுவுமொரு காரணம் என்கிறார். புனைவாசிரியர் எனும் எல்லைக்கு அப்பால் ராபின்சன் ஒரு கலாச்சார ஆளுமையாகவே செயல்படுகிறார் என்பதையே அவர் கட்டுரை நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

மெரிலின் ராபின்சன் மீது எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. உருவகங்களாலும் மீபொருண்மை சொல்லாடல்களாலும் நிறைந்த அவர் உலகம் சமகாலத்தின் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதில்லை என்றும் மனித மனதின் தீயப் பக்கங்களை அவர் காண மறுக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அழகு, நன்மை முதலியவற்றை அவர் தொடர்ந்து உன்னதப்படுத்துவதையும் மத நோக்கினையும் விமர்சித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பில்லாவிடினும் இங்கே அவற்றையும் பதிவு செய்து வைக்கிறேன்.

ஆழமாக அமெரிக்க கலாச்சாரத்தில் வேரூன்றிய எழுத்தாளர் என்றாலும் இரண்டு காரணங்களால் எல்லா மொழிச் சூழலிலும் அவர் வாசிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக மெரிலின் ராபின்சன் ஓர் ஆசிரியர். ஒரு எழுத்தாளர் எப்போது மகத்தானவராகிறார்? எழுத்தாளர் எனும் நிலையைக் கடந்து எப்படியோ அவர் ஆசிரியர் எனும் இடத்தை அடையும்போது. எங்கேயோ வாழ்வின் அடிப்படை கேள்விகளை தொடர்ந்து எதிர்கொண்டு, வாழ்வனுபவத்தின் வழியே கலாச்சார சட்டகங்கள் வழியே அவற்றை பரிசீலித்து, தன் வரையில் ஒரு பதிலை அல்லது அர்த்தப்பாட்டுக்கான ஒரு சாத்தியத்தை நமக்கு கையளிக்கும்போது அவர் ஆசிரியராகிவிடுகிறார். ஒரு கவிதை வரி சட்டென்று மந்திரமாக மாறுவது போல.

இரண்டாவதாக ராபின்சன் மொழிக்காகவும் வடிவத்துக்காவும் பெரிதும் வாசிக்கப்படுவர். தமிழில் புனைவு என்பது இன்னமும் கதைக் கட்டுமானத்தையே வலுவாக சார்ந்திருக்கிறது. அது தவறல்ல. ஆனால் புனைவு -முக்கியமாக நாவல்- வெவ்வேறு சாத்தியங்களின் வடிவம். மெரிலின் ராபின்சனின் நாவல்கள் கதை சம்பவங்களை மையப்படுத்துபவை அல்ல. மாறாக கவித்துவ வெளிப்பாடுகள், அழகிய நுட்பமான விவரனைகள், நீண்ட சிந்தனைகள் முதலியவற்றால் ஆனவை. மானுட அறிவு சேகரத்தை அடித்தளமாக கொண்டவை. மனிதர்களை, இயற்கையை, மொழியை தியானிக்கும் அம்சம் கொண்டவை. நமக்கு இத்தகைய முன்மாதிரிகள் தேவை. தமிழில், தோற்றவியல் (Phenomenology) அம்சம் கொண்ட ஆக்கங்கள் நிறைய இல்லை எனலாம். நகுலன் போன்ற முன்னோடிகள் எழுதியவைக்கூட வலுவானவை அல்ல. இந்த விரிவான மொழிபெயர்ப்பு பேட்டி (பாரிஸ் ரிவியூ, நேர்கண்டவர் : சாரா ஃபே, 2020) அதற்கான ஆவலைத் தூண்டினால் மகிழ்ச்சி.

அகழில் தொடர்ந்து  அயல் எழுத்தாளர்களின் விரிவான பேட்டிகளை பிரசுரிக்கிறோம். டெர்ரி ஈகிள்டன் பேட்டி. ஜனார்த்தனன் இளங்கோ மொழிபெயர்ப்பில் சார்லஸ் சிமிக் மற்றும் ஜான் கார்டனரின் பேட்டிகள். இவை எல்லாவற்றிலும் ஒரு தொடர்ச்சி இயல்பாக அமைந்து வந்திருக்கிறது. எழுத்தின் வெவ்வேறு பரிமாணங்களை இவை வெளிக் கொணர்கின்றன. இந்த பேட்டி ஒரு விதத்தில் தனித்துவமானது. நம்பிக்கைகள் சார்ந்து பேசுவதனால் இது அந்தரங்கமானதாய் தொனிக்கிறது. மற்ற பேட்டிகள், விவாதப் பிரதிகள். இது ஒரு ரகசிய உரையாடல்“

-விஷால் ராஜா

கேள்வி: சின்ன வயதில் வளர்ந்து என்னவாக ஆசைப்பட்டீர்கள்?

பதில்: ஒருவேளை, துறவி?  ஆனால் நான் கவிஞராவேன் என்று என் சகோதரன் அப்போதே கூறினான். எனக்கு ஒரு நல்ல சகோதரன் அமைந்தான். நல்ல சகோதரனுக்குரிய லட்சணத்துடன் நிறைய காரியங்கள் செய்தான்.  ஐடஹோவில் (Idaho) ஒரு சிற்றூரில் நாங்கள் வசித்தோம். ஆனால் அவனோ உலகத்தை பாகம் பிரிக்கும் அலெக்ஸாண்டர் போல “நான் ஓவியனாகிறேன். நீ கவிதை எழுது” என்று சொல்வான்.

கேள்வி: ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபோது நீங்கள் எழுதிய உருவகங்களே, உங்களுடைய “வீட்டை பராமரித்தல்” (HouseKeeping) நாவலின் ஆரம்பம் என்பது உண்மையா?

பதில்: கல்லூரியில் அமெரிக்க இலக்கியம் படித்தேன். அப்போது அது  வழக்கமான தேர்வு கிடையாது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியம் பெருவாரியாக அறிமுகம் ஆயிற்று. எமர்சன் தொடங்கி பல அமெரிக்க எழுத்தாளர்கள், உருவகங்களை கையாளும் விதம் என்னை ஈர்த்தது. அவர்கள் குரலிலேயே எழுதுகிற உணர்வை அடையும்பொருட்டு,  முனைவர் பட்ட ஆய்வின்போது அந்த உருவகங்களை எல்லாம் எழுதி வைக்க ஆரம்பித்தேன். ஆய்வு முடிந்ததும், அந்த உருவகக் குவியலை படித்து பார்க்கையில், நான் எதிரேப் பார்த்திராத விதத்தில் அவை ஒரு ஒழுங்கை அடைந்திருப்பது தெரிந்தது.  மேலதிகமாய் எதையோ குறிக்கிற ஒருவிஷயத்தை உருவாக்கியிருப்பதை அறிந்தேன். எனவே “வீட்டை பராமரித்தல்” நாவலை எழுத ஆரம்பித்தேன். அந்த கதாபாத்திரங்கள்  முக்கியமானவையாய் மாறின. என் எழுத்தாள நண்பர் ஒருவரிடம் இதை சொன்னபோது அவர் நாவலை படிக்க கேட்டார். அதுக்கடுத்து எனக்கு தெரிந்த ஒரே விஷயம் – அவர் முகவரிடமிருந்து வந்த கடிதமே. என்னை பதிப்பகத்திடம் கொண்டு செல்ல விரும்புவதாக சொல்லியிருந்தார்கள்.

கேள்வி: அந்நாவலில் ரூத், ஸில்வியா ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்குவதில் உங்கள் அணுகுமுறை எப்படி இருந்தது?

பதில்: ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வளர்ச்சியிலும் ஒருவித உணர்ச்சி பிணைப்பு உண்டாகிறது. என் சொந்த சிந்தனையில் கேள்வியை தோற்றுவிக்கிற கதாபாத்திரங்களே எனக்கு ஆர்வமூட்டுகின்றன. யாரேனும் ஒருவர் குறித்து -சாத்தியமான எல்லை வரை- அவர் வாழ்க்கையின் ஒட்டுமொத்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் பொருத்தி யோசிக்கும்போது, அவர் உடனடியாக மர்மமானவராகிவிடுகிறார்.

கேள்வி: உங்கள் இரண்டாவது நாவல் கிலியட்டில் மையக் கதாபாத்திரமான ஜான் ஏம்ஸ் ஒரு பாதிரியார். மதம் சார்ந்த எழுத்தாளர் என்று உங்களை நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: மதம் சார்ந்தவர் அல்லது சாராதவர் எனும் பிரிவினையே எனக்கு பிடிப்பதில்லை. மதம் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்த உடனேயே அது பொய்யானதாகிவிடுகிறது. இரக்கவுணர்வோடும் புரிதலோடும் எழுதப்படுகிற எதுவும் மதவுணர்வின் எல்லா வரையறைகளையும் அநேகமாக பூர்த்தி செய்துவிடும். அதற்கும் அந்த எழுத்தாளர் மதம் சார்ந்தவரா இல்லையா என்பதற்கும் தொடர்பில்லை.

கேள்வி: நம்முடைய அன்றாட உலகில் “கண்களால் தாள முடியாத அளவுக்கு அழகிருக்கிறது” என ஏம்ஸ் சொல்கிறார். அவர் அமெரிக்காவில் 1950களில் வாழ்கிறவர். இன்றும் அவர் அப்படி சொல்வாரா?

பதில்: “அழகு” என்று ஏற்கனவே மேற்கோளில் சுட்டி புரிந்துக் கொள்ளப்படுகிறவற்றைத் தாண்டி, அழகினை நீங்களே, உங்களுக்காக பார்த்தறிய ஒருவித விலக்கம் தேவை. நீர்த் தொட்டி மேல் வெளிச்சம் விழுகிற டச் (Dutch) ஓவியத்தை யோசித்து பாருங்கள். காலையில் எழுந்ததும் உடுத்துகிற எளிய ஆடைகளோடு ஒரு பெண் அங்கே நின்றுக் கொண்டிருக்கிறாள். அவ்வளவுதான். அழகு என்பது அப்படி மிக சாதாரணமான ஒரு விஷயத்தை தற்செயலாக காண்பதே.

ரெம்பிராண்டின் “இறந்த மாடு” ஓவியத்தை எண்ணி பார்க்கலாம். சாதாரணமான இறைச்சி துண்டு அவர் பார்வையை கைப்பற்றியிருக்கிறது. ஏனென்றால் அதில் மர்மமான ஏதோவொன்று இருக்கிறது. எட்வர்ட் ஹாப்பரிடமும் இதை காணலாம். “அந்த வெளிச்சத்தை பாருங்கள்” அல்லது “அந்த மனிதரை பாருங்கள்” எனும் குரல் அவரிடம் கேட்கிறது. இவையே மேதமையின் தருணங்கள். இதன் நிமித்தமாகவே வெவ்வேறு கலாச்சாரங்கள் கலைஞர்களை போற்றுகின்றன. “இதை கவனியுங்கள்” என்று சொல்லக்கூடியவர்கள் அவர்கள்தான். அவர்கள் சுட்டுவது அரண்மனையை அல்ல. சூரிய வெளிச்சம் படிகிற சாதாரண செங்கற் சுவரை.

அதே நேரம் அழகு பற்றிய போலியான கருத்தாக்கம் மீதும் மனிதர்களுக்கு ஈர்ப்பிருக்கிறது. அதுவுமே ஓர் அடிப்படையான மனித பண்புதான். வெறுமனே அலங்கார மன்றங்களில் எஞ்சிவிடுகிற கலாச்சாரங்களை எண்ணி பாருங்கள். அங்கே மக்கள் அலாங்காரத்துக்காய் தங்களை ஈயத்தில் வண்ணமடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மேலும் முட்டாளாகிறார்கள். இன்னொரு புறம், தம் இடையை மெலிதாக்க விலா எலும்புகளை உருவுகிற பெண்களும் இருக்கிறார்கள். அழகு பற்றிய அத்தகைய எண்ணங்களும் இன்று நிலவுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இது மனிதர்கள் தம் இயல்புப்படி, வெறுமனே மனிதர்களாய் நடந்து கொள்வதுதான். இதை கலாச்சார மற்றும் ஆன்மீக சிதைவின் அறிகுறி என்று எண்ண வேண்டியதில்லை. அப்படி எண்ணுவது நாம் செய்யக்கூடிய மோசமான ஒரு அழிவுச் செயல். பெரும்பாலான நேரங்களில் நாம் அதையே செய்கிறோம்.

கேள்வி: ஏம்ஸ் மதத்தின் முக்கிய பலன்களில் ஒன்றாக சுட்டுவது – “அது உங்கள் கவனத்தை கூர்மையாக்க உதவுகிறது. உங்களிடம் என்ன கேட்கப்படுகிறது என்பது பற்றியும் நீங்கள் எதையெல்லாம் புறக்கணிக்கலாம் என்பது பற்றியும் ஒரு அடிப்படையான உணர்ச்சியை தருகிறது”. உங்களுடைய மத நம்பிக்கையும் பழக்கமும் இதையே உங்களுக்கு தந்திருக்கின்றன என்று சொல்லலாமா?

பதில்: மதம் ஒரு சட்டகத்தை உருவாக்கும் வழிமுறை. அது தன்னை கேள்விகளின் நிரையாகவே முன்வைக்கிறது. மதம் – ஒருமுகப்படுத்தும் மொழி. அது வாழ்க்கையின் வளர்ச்சி போக்கை பேசுகிறது. அனுபவத்தின் பண்பு நிலையை பேசுகிறது. இவை பற்றியெல்லாம் யோசிப்பது எனக்கு பலனளிப்பதாக உள்ளது. மனிதர்களுடைய கற்பனையினையும் வெளிப்பாட்டினையும் விரிவுபடுத்துவதிலும் மதம் ஆழமான பாதிப்பை செலுத்தியுள்ளது. உயர் கலைகள் யாவும் மதத்துடன் நெருக்கமாக பிணைந்திருப்பதை, சமீபமாக மட்டுமே நம்மால் பார்க்க முடியவில்லை.

கேள்வி: எனில் மதத்தின் சட்டகத்தை நாம் இழந்துவிட்டோமா?

பதில்: அமைப்பு , அது பெரும்பாலும் என்ன வடிவத்தில் இருந்தாலும், ஒரு இடையூறே என ஒரு காலக்கட்டத்தில் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணுவது கலாச்சாரத்தை பொருத்தவரை ஒரு ஆட்டோ இம்யூன் சிக்கல். நோய் எதிர்ப்பு மண்டலமே உடலைத் தாக்குவது போல. ஜீவராசி தன் சொந்த இருப்புக்கான சூழ்நிலைகளை தானே நிராகரிப்பது.

நாம் எல்லோரும் கலாச்சார உயிரினங்களே. “அர்த்தம்” என்பது தானே சும்மா காற்றில் உருவாவதில்லை. அது கலாச்சார சட்டகத்தினாலேயே நிலைக் கொள்கிறது. அதை இழப்பது என்பது, நம் உடலில் எலும்பு கூடு மட்டும் இல்லையென்றால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எண்ணுவது போல. எல்லோரும் கதவுக்கு கீழே நழுவி போய்விடுவோம்.

கேள்வி: இந்த சட்டகத்தில் அறிவியல் எப்படி பொருந்துகிறது?

பதில்:  என்னால் முடிந்தவரை, சமகால பிரபஞ்சவியல் பற்றி படித்து தெரிந்து கொள்கிறேன். ஏனென்றால் யதார்த்தம் என்பதே ஓர் ஆழமான மர்மம்தான். செவ்வியல் இயற்பியல், குவாண்டம் கோட்பாடு இரண்டையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், இரண்டும் தத்தம் வரையறைகளுக்குள் மகத்தானவையாக இருக்கின்றன. ஆனால் சமகாலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று இணைய முடியவில்லை. வெவ்வேறு சிந்தனா முறைமைகளால், ஒட்டுமொத்தமாய் புரிந்துகொள்ளக்கூடிய வழியில் இணைய முடியாவிட்டால், அது நம் புரிந்துகொள்ளும் முறையில் இருக்கும் பிழைத் தானே தவிர, அந்த முறைமைகளில் உள்ள பிழையல்ல.

கேள்வி: அறிவியல், மதம் இரண்டும் ஒன்றாய் இணைய முடியாத இரண்டு முறைமைகளா?

பதில்: இந்த விவாதமே அறிவியல் பற்றிய எளிய புரிதலாலும் மதம் பற்றிய எளிய புரிதலாலுமே எழுகிறது. மதத்தை அம்பலப்படுத்துவதாக யாராவது சொன்னால், அறிவியல் பற்றிய பதினெட்டாம் நூற்றாண்டின் கருத்தாக்கத்தில் இருந்தே அவர்கள் பேசுவதாகவே எனக்கு தோன்றும். ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) குறித்தே இங்கு குறுப்பிடுகிறேன். அவர் அடைந்திருக்கிற அந்தஸ்த்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. யதார்த்தை நம் முன் வெளிப்படுகிற பௌதீக உலகமே முழுமையாக விளக்கிவிடும் என்பது போல அவர் செயல்படுகிறார்.

மறுபுறம், மத வெளிப்பாட்டை உருவாக்குகிற, தொகுக்கிற பலரும் நன்னம்பிக்கையில் செயல்படுவதில்லை என்பதையும் சொல்ல வேண்டும். நாம், பிறர் எனும் எதிர்நிலை மனப்பாங்கானது ஒட்டுமொத்தமாய் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீர்கேடு.

மெரிலின் ராபின்சன் தன் குழந்தையுடன்

கேள்வி: டாக்கின்ஸ் பற்றியும், மற்ற புதுயுக கடவுள் மறுப்பாளர்கள் பற்றியும் நீங்கள் விமர்சனபூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். தூய அறிவியல் சார்ந்த அவர்களுடைய தீவிரமும் மதம் சார்ந்த அவர்களுடைய அலட்சிய உணர்வுமே உங்களை பாதிக்கின்றனவா?

பதில்:  இல்லை. இயன்றவரை நான் அறிவியலையும் படிக்கிறேன். மேற்சொன்னவர்களின் சிந்தனை அறிவியல்பூர்வமானதே அல்ல என்பதுதான் உண்மை. தன்னால் விளக்கமுடியாத அல்லது தான் எதிர்பார்த்திராத ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பதற்கான உந்துதலே அறிவியலின் அடிப்படை பரவசம். டாக்கின்ஸ் போன்ற புதுயுக கடவுள் மறுப்பாளர்கள் இதற்கு நேரெதிராக – அறிவியல், உலகத்தை  ஒரு மூடிய அமைப்பாக வெளிப்படுத்துவது போல – செயல்படுகிறார்கள். சமகால அறிவியல் அதை சொல்லவில்லை.

பல அறிவியலாளர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் யதார்த்தம் குறித்து, டாக்கின்ஸ் போல,  பேசுவதில்லை. எல்லா கேள்விகளுக்கும் ஓர் எளிய பதில் இருப்பதாக அவர்கள் முன்முடிவு கொண்டிருப்பதில்லை. குறிப்பாக கடந்த நூறாண்டுகளில் அறிவியல் கண்டுபிடித்த எந்தவொரு விஷயத்தின் அடிப்படையிலும் அந்த முடிவை அவர்கள் எட்டுவதில்லை.

பிரபஞ்சவியலையும் குவாண்டம் ரியாலிட்டி பற்றிய கோட்பாடுகளையும் ஒருங்கே நோக்கி செல்லும் அறிவியலையே நான் விரும்புகிறேன். அது, தன் விவரணைகளின் ஆற்றல்களில் செவ்வியல் இயற்பியலை காட்டிலும் நேர்த்தியான அடுக்குகள் கொண்டது. அறிவியல் அற்புதம் நிறைந்தது. விசும்பின் தூசியில் ஓர் அணுவில் இருந்தபடி, பிரபஞ்சத்தின் விளிம்பை எப்படி காண்பது என்று நாம் கண்டுபிடித்திருக்கிறோம். நான் வாசிக்கும் அனைத்திலுமே, அறிவுறுத்தல்களையே உணர்ந்திருக்கிறேன். ஒரு நல்ல இறையியல் நூல் வாசிக்கும்போது ஏற்படுகிற அதே திருப்தியை அறிவியலும் எனக்கு வழங்கியிருக்கிறது.

கேள்வி: அறிவியல், யதார்த்தம் பற்றிய ஒரு புறவயமான கருத்தாக்கத்தை வழங்குகிறது. மதமோ, நாம் நம்மை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம் என்பதை பேசுகிறது இல்லையா?

பதில்: இந்த உலகில் இருக்கக்கூடிய எல்லாவற்றினிடமிருந்தும் மனிதர்களை தனித்து காட்டுவதும், அந்த தனித்தன்மைக்கான ஆதாரம் என்றும் அறிவியலையே சொல்ல முடியும். அதுவொரு சாதனை. விண்வெளி பயணம், ஆரோக்கிய மோம்பாடு என்று மனிதர்களுடைய அனுபவத்தில் நேரடியான மாற்றங்களை ஏற்படுத்துவதால் அறிவியலுக்கு ஒரு தனி மதிப்பிருக்கிறது. நிரூபண ஆற்றலால் அதற்கு ஒரு அதிகாரமும் கிடைக்கிறது. ஆனால் மனிதர்கள் பற்றிய உரையாடலில் அது தலைகீழான ஒப்புமையே செய்கிறது. கழுதைப் புலிகள் அறிவுள்ளவை; ஆனால் அவற்றைவிட நாம் கூடுதலாக சில அடிகள் எடுத்து வைத்ததே நாம் மேலும் அறிவுள்ளவர்களாக இருப்பதன் காரணம் என்று அறிவியல் சொல்வது போல.

மதத்தின் முதல் கடமை என்பது மனிதர்களாய் இருப்பதன் மதிப்பையும் அந்த உணர்ச்சியையும் தக்கவைப்பதே. பழைய வேதாகமத்தை தொகுத்து சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம் – உங்களுக்கு நீங்களே தீங்கு செய்வதை நிறுத்துங்கள். ஆனால் நம் இயல்பிலேயே நமக்கு நாமே தீங்கிழைக்காமல் இருப்பதற்கான பண்பில்லை. நம் சொந்த கண்ணியத்தின் அடிப்படையிலோ அல்லது பிற மனிதர்களுடைய கண்ணியத்தின் அடிப்படையிலோ நாம் தொடர்ந்து நடந்து கொள்வதில்லை. பைபிள் இதையே முடிவில்லாமல் அறிவுறுத்துகிறது.

கேள்வி : தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏதாவது மத ரீதியான விழிப்புநிலை அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

பதில் : இல்லை. எந்த மாய அனுபவமும் எனக்கு வழங்கப்படுவது வீணானதே. என்வரையில், சாதாரண விஷயங்களே தெய்வாம்சம் கொண்டவையாக தோன்றுகின்றன. உலகை நாம் எதிர்கொள்வதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன எனும் கால்வினிய (Calvinistic) கருத்தாக்கம் எனக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. புறத்தில் இயக்கமற்று நிலைத்திருக்கக்கூடிய ஒரு விஷயத்தை நாம் அப்படியே உள்வாங்குவதில்லை. மாறாக, எல்லா அனுபவத்துக்கும் தீர்க்கமான ஒரு தரிசன பண்பிருக்கிறது. ஒவ்வொன்றும் உங்களுக்கென்றே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒவ்வொன்றுக்கும் ஏதோ அர்த்தம் இருப்பதாக உணர்கிறீர்கள். வால்ட் விட்மனிலும் எமிலி டிக்கன்ஸிலும் காணக்கூடிய தனிமனிதவாதம் என்பது இதுதான். ஒரு மெய்ஞானி தரிசனத்திலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறாரோ அதையே உங்கள் கண்ணோட்டம் வழியாகவும் புரிந்துகொள்ளும் விதம் வழியாகவும் நீங்கள் பெறலாம்.

கேள்வி: சாதாரண விஷயங்களை இப்படி நோக்குவதை ஒருவர் எப்படி கற்றுக் கொள்வது?

பதில்: அது வளர்த்துக் கொள்கிற திறனல்ல. நாம் தொலைத்துவிடுகிற அந்த திறன் நம் பிறப்பிலேயே இருக்கிறது. அப்படி தொலைக்காமல் இருக்கவே கற்றல் தேவைப்படுகிறது.

கேள்வி: உங்கள் நாவல்களின் கதை நிகழ்வுகளை நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டுவிடுவீர்களா?

பதில்: இல்லை. ஒருவித சட்டகம் கண்டிப்பாக இருக்கும். “வீடு” நாவலை எடுத்துக் கொண்டால் அது “கிலியட்”டுடன் ஒத்திசைந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கப்பால் வேறு திட்டங்கள் கிடையாது. கதாபாத்திரத்திலிருந்தே எல்லா செயல்பாடுகளும் முளைக்க வேண்டும் என்று நான் வலுவாக கருதுகிறேன். கதாபாத்திரத்தைவிட வேறெதெற்குமே அதிகமான முன்னுரிமை கொடுப்பதில்லை. என்னுடைய எல்லா நாவல்களிலும் தொடர்ந்து பொதுவாக இருக்கக்கூடிய விஷயம் – என் மனதை விட்டு நீங்காத ஒரு கதாபாத்திரம் அவற்றில் இருக்கிறது என்பதே. நான் மேலதிகமாக புரிந்துகொள்ள விரும்புகிற, சிடுக்குகள் நிறைந்த ஒரு கதாபாத்திரம்.

கேள்வி: ஒரு மோசமான கதாபாத்திரத்தை எழுதுவது சவாலானதா?

பதில்: கடவுள், மனிதர்களினிடத்தே ஓர் அழகியல் இன்பத்தை துய்ப்பதாக கால்வின் சொல்கிறார். கடவுள், முடிவற்ற காலத்தினூடாக, தன்னைச் சுற்றி மனிதர்களை இருத்திக் கொள்கிறார். எனில், அத்தகைய மனிதர்களின் ஒரே தனித்துவம் என்பது தம் வரையறைகளை கடப்பத்தில் தோற்றுப் போவது மட்டுமே என்று கற்பனை செய்வதற்கு ஒரு முகாந்திரமும் இல்லை. பைபிளில் வரும் தாவீது அரசரை, உதாரணமாக எடுத்துக் கொண்டால், அவரே ஒன்றும் விசேஷமானவர் கிடையாது. எனவே குறையற்ற மனிதர்கள் மட்டுமே பெறுமதியானவர்கள் என்று கருதுவது,  மானுட சரித்திரத்தில் காணக்கிடைக்கிற ஆழமான மதிப்புடைய எல்லாவற்றையும், அதிர்ச்சியூட்டும்விதத்தில் தவிர்ப்பதாகிவிடும். சில நேரங்களில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். கடவுள் எதை ஏற்பார் எதை மறுப்பார் என்பது குறித்து நம்பமுடியாத அளவில் ஒரு குறுகலான பார்வை உருவாகியிருக்கிறது.

ஓவியம் : எட்வர்ட் ஹாப்பர்

கேள்வி: எப்போதாவது உங்களுடைய நம்பிக்கை அன்றாட வாழ்க்கையோடு முரண்பாடு கொள்வதுண்டா?

பதில்: வகுப்பெடுக்கும்போது சில சிக்கல்கள் மேலெழும். ஏதாவதொரு மாணவரின் கதையை படிக்கும்போது, என் அளவுகோலில், அது ஆபாசமானதாக தோன்றும். ஒரு கற்பனை மனிதரைக்கூட சுரண்டுவதோ அல்லது மரியாதையில்லாமல் நடத்துவதோ எனக்கு ஏற்புடையதல்ல. அதே நேரம் என் அளவுகோலையே எல்லோருக்கும் பொதுவானதாக சொல்ல முடியாது என்பதையும் உணர்கிறேன். அத்தகைய தருணங்களில் என் நம்பிக்கை சார்ந்த எதிர்வினையை கரையோடு நிறுத்திக் கொள்வேன். மனிதர்கள் எந்த தணிக்கையின் குறுக்கீடுகளுமின்றி தங்கள் அனுபவங்களை உலகில் வாழ அனுமதிக்க வேண்டியது அவசியம். சில உச்சக்கட்ட சூழ்நிலைகளில் மட்டும்  இதற்கு விதிவிலக்குகள் தேவைப்படலாம்.

கேள்வி: உங்கள் மாணவர்கள் நீங்கள் கற்றுத் தருகிற அதி முக்கியமான விஷயம் எது?

பதில்: என்ன எழுதியிருக்கிறோம் என்பதை எழுத்தாளர்கள் தாங்களே உண்மையாக பார்க்கவும், தங்கள் பலம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும் நான் உதவ முயற்சிக்கிறேன். வழக்கமாக புனைவில் தனித்து தாவுகிற ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். ஒரு படிமம் அல்லது ஒரு தருணம். மொத்த கதையின் மையமாகவும் மாறுகிற அளவுக்கு அதற்கு வலு இருக்கும். அதை அவர்களால் பார்க்க முடிந்தால், அதை பயன்படுத்தலாம். மேம்படுத்தலாம். நுட்பமானதும் புதியதுமான ஒரு புனைவை கட்டமைக்கலாம்.

நான் தொழில்நுட்பத்தை கற்றுத் தர முயற்சிப்பதில்லை. ஏனென்றால், கதையின் ஜீவன் எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதும் தொழில்நுட்ப சிக்கல்கள் எல்லாம் தாமாகவே மறைந்துவிடும். அடிப்படையில் எந்த திசையிலும் நகராத ஒரு கதையை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டே போவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அவர்கள் முதலில் செய்ய வேண்டியது, காகிதத்தில் தாம் எழுதுகிறவற்றுடன் தீவிரமான வகையில் உரையாடுவதே. தாங்கள் எழுதுகிறவற்றில் பூரணமாக ஈடுபடும்போது, ஓர் அசாதாரணமான மாற்றம் நிகழும். மொழியின் கற்பனையின் ஒழுங்கு தோன்றும்.

கேள்வி: இலக்கிய விமர்சனம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: விமர்சனத்தின் முதன்மை ஆர்வமே விமர்சனம்தான் என்றாகிவிட்டது. விமர்சனம் என்பது எழுத்தாளர்கள் உண்மையில் என்ன எழுதுகிறார்களோ அதை பற்றியதாக இல்லாமல் ஆகிறது. பெரும்பாலான நேரம், பத்திரிக்கை விமர்சனமானது எழுத்தாளர்கள் ஏதோ விற்றுத் தீர்க்க வேண்டிய ஒரு நுகர்வு பொருளை உருவாக்கியிருப்பது போன்ற தோரணையில் இயங்குகிறது.

போலவே, வாழும் எழுத்தாளர்களை இறந்து போன எழுத்தாளர்களுக்கென்று ஒதுக்க வேண்டிய பிரமிப்புடன் அணுக வேண்டியதில்லை என்றும் சில நேரங்களில் நான் எண்ணுவதுண்டு. அதே சமயம், தன் எழுத்து வழியே ஏற்கனவே மதிப்பீட்டிய, பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர், பத்து வருடங்கள் செலவு செய்து ஒரு நாவலை எழுதும்பட்சத்தில், அது உலகின் தலை சிறந்த நாவலாக இல்லாவிட்டாலும், அதை முழுமையாக நிராகரிப்பது சரியான எதிர்வினை கிடையாது. ஒரு தோற்றுப் போன ஆக்கம், வேறொரு தலைமுறையில் தோற்றுப் போனதாக தோன்றாது போகலாம். எழுத்தாளனுடைய புனித யாத்திரையில் அது ஒரு பகுதியாக இருக்கலாம்.

கேள்வி: எழுதுவதற்கென்று தனித்துவமான பழக்கங்கள், இடம் இவை எல்லாம் உண்டா?

பதில்: நான் எப்போதும் வேலையில்லாத ஒரு சோம்பேறி போலவே ஆடை உடுத்துவேன். முடிந்தவரை, என் சொந்த உடல், இருப்பு பற்றியே ஞாபகம் இல்லாதிருக்க விரும்புவேன். வீட்டுக்குள் இருந்து எழுத வேண்டியது, முக்கியம். ஏனென்றால் என் சுற்றுபுற சூழல்களை மறந்துவிடுவேன். யோசனையில் கவனம் விலகாது.

கேள்வி: எழுதுவது உங்களுக்கு எளிமையாய் வரக்கூடியதா?

பதில்: எழுதுவதன் சிரமத்தை குறைத்து சொல்ல முடியாது. ஆனால் அதில் கூர்மையான கவனத்துடன் செயல்படும் ஒரு நிலை அமைகிறது. எவ்வளவு சிரமமாய் இருந்தாலும் எரிச்சல் ஏற்பட்டாலும் அதுவொரு நிறைவான அனுபவமே. அவ்விதம் ஒரு விஷயத்தில் கவனம் குவித்து செயல்படுவது ஓர் அற்புதமான உணர்ச்சி. நான், உலகிலிருந்து துண்டித்து தனித்திருக்க முற்பட அதுவும் ஒரு காரணம். அதனாலேயே உலகின் நியாயமான எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளும்போதுக்கூட சற்று சிடுசிடுப்பு கொள்கிறேன்.

கேள்வி: எழுத்திற்கென்று தினசரி அட்டவணை உண்டா?

பதில்: அவ்வளவு ஒழுக்கமாக செயல்படும் திறன் எனக்கில்லை. ஏதாவது ஒரு விஷயம் என் மேல் வலுவான ஆதிக்கம் செலுத்தும்போதே என்னால் எழுத முடிகிறது. தொழில்முறை திட்டங்களை சில முறை முயன்றிருக்கிறேன். ஆனால் எழுதுவதற்கான உண்மையான உந்துதலுடன் மனதில் எந்த விஷயமும் இல்லாமல், எதையாவது எழுதினால் அது நானே வெறுக்கும்படியே இருக்கும். மன அழுத்தத்தை உண்டு பண்ணும். பார்க்கவே பிடிக்காது. அது எரிந்து புகையாகிற நேரம் வரை தாக்கு பிடிப்பது கடினம். எனினும், இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் என்றே விரும்புகிறேன்.

கேள்வி: அவை நடுவாந்திரமாக இருந்திருந்தாலுமா?

பதில்: இல்லை, இல்லை.

கேள்வி: நிறைய திருத்தி எழுதுவீர்களா அல்லது முதல் வடிவத்தையே வெளியிடுவீர்களா?

பதில்: ஏதாவது எழுதிவிட்டு, அது பிடிக்கவில்லை என்றால் உடனே தூர எறிந்துவிடுவேன். மீண்டும் முதலில் இருந்து எழுத முயற்சிப்பேன். அல்லது அதே அளவு உணர்ச்சி வேகம் கொண்ட வேறெதையாவது எழுதுவேன். ஆனால் மறு வாசிப்பு செய்து ஏற்கனவே எழுதியதை திருத்தி எழுதுவதை பெரும்பாலும் செய்வதில்லை. ஒரு வாக்கியம் எனக்கு தேவை என்றால் அது உடனே தெரிந்துவிடும். அது சரியான அமைப்பை பெறுகிறவரை மனதில் ஓட்டி ஓட்டி பார்ப்பேன். காகிதத்தில் எழுதுவதற்கு முன்னால் என் மனதிலேயே திருத்தங்கள் நிகழ்ந்துவிடும்.

எழுதும் பருவத்தில், எல்லா நேரமும் என் தலைக்குள் எழுதிக் கொண்டேதான் இருப்பேன். ஆனால் எழுத்தில் புதிதாய் கண்டுபிடிக்க வேண்டியதை, பௌதீகமாய் உட்கார்ந்து எழுதும்போதே செய்ய விரும்புவேன். வீட்டுக்கு பாலத்தில் நடந்து வரும்போது, ஒரு கருத்து தோன்றினால் உடனே அந்த யோசனையை நிறுத்த எண்ணுவேன்.  ஏனென்றால் ஒரு காட்சியை முழுமையாக யோசித்து முடித்துவிட்டால், பேனாவை கையில் எடுப்பதற்குள் அக்காட்சியே சிதைந்திருக்கும்.

கேள்வி: நாவலாசிரியராகவே உங்களை பலருக்கு தெரியும். ஆனால் கட்டுரைகள் எழுதுவதிலும் நீங்கள் நிறைய நேரம் செலவிடுகிறீர்கள். அது எப்படி ஆரம்பித்தது?

பதில்: என் சொந்த மனதினை மாற்றுவதற்காகவே எழுத ஆரம்பித்தேன். எனக்கென்று ஒரு புதிய வார்த்தை சேகரத்தை அல்லது வெளியை உருவாக்க முயல்கிறேன். அதன் வழியே மேலும் விசாலமடைய விரும்புகிறேன். டச் படை கடலிலிருந்து நிலத்தை அடைவது போல. அல்லது என்னால் அதுவரை அணுக முடியாத இறுக்கமான ஒரு பகுதியை திறந்து பார்க்க முயற்சிக்கிறேன் எனலாம். கட்டுரை எழுதுவதன் நோக்கமும் அது அளிக்கும் மகிழ்ச்சியும் இதுவே. என் சொந்த சிந்தனையை தொடர்ந்து பரிசீலித்தபடி இருக்கிறேன். ஒரு விஷயத்தை எழுதியவுடன் இக்கேள்வியை கேட்டு பார்ப்பேன் – “இது உண்மை என்று எனக்கு எப்படி தெரியும்?”. ஆரம்பத்திலிருந்து ஏற்கனவே நன்கு தெரிந்த இடத்திலிருந்து எழுதும்பட்சத்தில், நான் எதையும் புதிதாக கற்றுக் கொள்ள முடியாது.

நம் கலாச்சாரத்தில், வெறுமனே எழுத வேண்டும் என்பதற்காக நிறைய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையில் சொல் புரட்டும்படி ஏதாவது கிடைத்தால் உடனே சொல் புரட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த எழுத்தாளருக்கேக்கூட பெரிய விஷயங்களை எழுதுவதற்கான திறனில்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் சாரமில்லாத நிறைய உரைநடையை நாம் உற்பத்தி செய்கிறோம். ஒருவர் தான் பதில் கண்டடைய வேண்டியதை எதிர்கொள்ளும் தருணத்திலிருந்தே சிறந்த கட்டுரைகள் உருவாகின்றன.

கேள்வி: அமெரிக்கர்கள் பெரிய கேள்விகளை சிந்திப்பதை தவிர்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நாம் எதை அஞ்சுகிறோம்?

பதில்: மனிதர்கள் தம்மையே அஞ்சுகிறார்கள். எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருப்பதே சிறந்தது என்கிறார் பிராய்ட். என்னவோ நாம் பூமியில் வலியின்றியும் பிரக்ஞையின்றியும் வாழ விதிக்கப்பட்டவர்கள் போல. என்னுடைய பார்வை அவரிடமிருந்து வேறுபட்டது.

இந்த விஷயத்தில் பண்டைக் கால மக்களின் பார்வை சரியாகவே இருந்திருக்கிறது. நேசத்திற்குரிய புராதானமான மனித அனுபவமானது ஒருமுகப்பட்டது; கடினமானது; இருள் கவிந்தது. மேலும் மகத்தானது. அதை வெறுமனே பூமியில் சௌகர்யமாக வாழ்வது என்று சுருக்கிவிடக்கூடாது. நிழல் கவியும் பள்ளத்தாக்கும் அவ்வனுபவத்தின் பகுதியே. சந்தேகம், துயரம் உட்பட இதுவரை மனிதக்குலம் என்னவெல்லாம் அனுபவித்திருக்கிறதோ அதையெல்லாம் நீங்கள் அனுபவிக்காவிட்டால், உங்களை நீங்களே குறுக்கிக் கொள்கிறீர்கள். நாம் வலியையும் கடினப்பாட்டையும் ஒரு தோல்வியாக உணர்கிறோம். நான் இதை கடந்துவிடுவேன் என்றும் இதுவரை நான் போற்றிய எல்லோருமே இதை கடந்திருக்கிறார்கள் என்றும் இசையும் இலக்கியமும் இதிலிருந்தே பிறந்திருக்கிறது என்றும் சொல்வதற்கு பதிலாக தோல்வி என அனுபவத்தை சுருக்குகிறோம். நம் மானுடம் என்பது ஒரு சிறப்புரிமை என எண்ண வேண்டும்.

கேள்வி: நீங்கள் பதற்றத்தை (anxiety) உணர்வதுண்டா?

பதில்: பொதுவாய் எல்லோரும் சாதாரணமாக உணர்வதைவிட குறைவாகவே பதற்றத்தை உணர்கிறேன் எனலாம். உலக சராசரியைக் காட்டிலும் கூடுதலாக செல்வம் படைத்தவர்களும் கல்வி பயின்றவர்களும்கூட பதற்றத்தை தேர்வு செய்கிறார்கள். அத்தகைய பதற்றத்தை நான் செலவு செய்யப்படாத ஆற்றல் என கருதுகிறேன். பயன்படுத்த படாததனாலேயே அந்த ஆற்றல் கசப்பாகிவிடுகிறது.

கால்வினியம் (Calvinism) உணர்ச்சிகர உறுதிப்பாட்டினை (emotional stoicism) உருவாக்க வேண்டியது. அந்த மரபில் வரக்கூடிய ஒரு கருத்து இருக்கிறது. எப்போதும் ஒரு கேள்வியை நீங்கள் எதிர்கொண்டபடி இருக்கிறீர்கள். “இந்த சூழ்நிலையில் கடவுள் என்ன எதிர்பார்க்கிறார்?”. இந்த எண்ணம், ஒருவித விலக்கத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால் தனித்துவமான கண்ணோட்டத்தை உருவாக்குகிற விலக்கம் அது. கண்ணோட்டமே வேண்டாம் என்பதல்ல.

இப்போது என் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். வாழ்க்கையில் நிலைபெற்றுவிட்டார்கள். ஆனால் இளவயதில் அவர்களை பற்றி நான் பதற்றம் கொண்டிருந்தேன். வருங்காலத்தை தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற பதற்றம். ஒருவித விலங்கு நிலை ஜாக்கிரதையுணர்வு அது.

கேள்வி: உங்களுடைய கட்டுரையொன்றில் அளவுக்கதிகமாக மீன் பிடிப்பது கடலின் சமநிலையை குலைத்துவிடுவதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். “நம்முடைய புதிய மன அமைப்பினால், கடல் வேட்டையாடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது”

பதில்: ஐரோப்பா உலகின் மிகப் பெரிய மீன் ஏற்றுமாதியாளர்களில் ஒன்று. ஆபத்தான பெரும் மீன் பிடி கப்பல்களால் மேற்கு ஆப்பிரிக்க கரையின் மீன் வளம் அழிக்கப்படுகிறது. விளைவாக கிராமங்கள் அழிந்து ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஓர் அலையாக இடப்பெயர்வு நடக்கிறது. பிரான்ஸ் பிடிக்கவில்லை என்றால் அகதிகள் ஏன் இங்கே வருகிறார்கள் என்று மக்கள் சாதாரணமாக கேட்கிறார்கள். பட்டினி கிடப்பதற்கு இது தேவலாம் தானே?

கேள்வி: நீங்கள் மீன் உண்பீர்களா?

பதில்: நான் பொதுவாக சைவம்தான் உண்பேன். அதே நேரம், ஹிட்லர் சைவம் என்பதை நினைவில் வைத்திருக்கிறேன். இத்தாலியில் முசோலினியை சந்தித்தபோது, ஹிட்லர் அவர்களுடைய இரவு விருந்தை நிராகரித்துவிட்டார். அவர் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ இல்லை. வெறுப்பின் ஒழுக்கம் எப்படி ஒரு எதிர்மறை குறியீடாக முடியும் என்பதற்கு ஹிட்லரை உதாரணமாக சொல்லலாம்.

கேள்வி: செல்லபீல்ட் அனுமின் நிலையத்தை (Sellafield Nuclear Plant) அடிப்படையாக வைத்து “தாய் நாடு” நூல் எழுதுகிற திட்டம் எப்படி தோன்றியது?

பதில்: கடவுளுக்குத்தான் வெளிச்சம். தாய்நாடு நூல் எழுதுவேன் என்று நான் எண்ணியிருக்கவே இல்லை. இங்கிலாந்தில் அப்போது வசித்தேன். தொலைக்காட்சி, செய்தித்தாள் எல்லாவற்றிலும் அணுமின் நிலையம் பற்றியே பேச்சிருந்தது. அது எவ்வளவு மோசமான ஒரு நிகழ்வு என்று ஆச்சர்யப்பட்டு போனேன். புளூட்டோனியம்-239 மற்றும் பிற யுரேனிய தனிமங்களை,செல்லஃபீல்ட் பாதுகாப்பில்லாமல் பிரிக்கிறது. பெரிய அளவிலான கதிரியக்க கழிவுகளை கடலில் கலக்கிறது. இது ஒரு பேரழிவு. 1956லிருந்து இதை அவர்கள் செய்து வருகிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இத்தகைய மோசமான செயலை மனிதர்கள் செய்கிறார்கள் என்பது மலைப்பாக இருக்கிறது. ஆனால் அப்படிதான் செய்கிறார்கள்.

இங்கிலாந்திலிருந்து திரும்பியதும், என் பைகளை கூட பிரித்து அடுக்கவில்லை. உடனே அமர்ந்து கையோடு ஒரு கட்டுரை எழுதி என் முகவருக்கு அனுப்பினேன். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் இதை கையாள வேண்டியதில்லை என்றும் அவருக்கு தெரிவித்தேன். ஆனால் அவர் ஹார்ப்பருக்கு அனுப்பினார். அவர்களும் உடனே பதிப்பித்துவிட்டார்கள். பிறகு இன்னொரு பதிப்பாளர் என்னை அணுகி அதை பற்றி ஒரு புத்தகம் எழுத முடியுமா என்று விசாரித்தார்.

கேள்வி: தாய்நாடு 1989ல் வெளியானது. இன்று அந்த புத்தகத்தை எப்படி பார்கிறீர்கள்?

பதில்: என் வாழ்நாளில் ஒரேயொரு புத்தகம் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்றால் அது இந்த புத்தகமாக இருக்க வேண்டும். இப்புத்தகம் எனக்கு மெய்யான கல்வியாக இருந்தது. அதை எழுத ஆரம்பிக்கும்போது நான் அதுவரை கற்றறிருந்தவை எல்லாம் மதிப்பிழந்தன. மீண்டும் ஓர் ஆய்வு செய்வது போல மனதில் தோன்றியது. எது அறிய வேண்டிய பொருத்தமான விஷயம்?  அடுத்து எங்கே தேட வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. மேலும் அந்த புத்தகத்தை எழுதாமல் இருந்திருந்தால் என்னையே என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. உலகை அழிக்கிற விஷயத்தை எல்லோருடன் சேர்ந்து நானும் செய்வதாக எண்ணியிருப்பேன்.

கேள்வி: எதை சுட்டுகிறீர்கள்?

பதில்: நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத மாதிரி நடிப்பதையே சுட்டுகிறேன். பிளாஸ்டிக் பைகள் ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் மிருகங்களை கொல்கின்றன என்பது நமக்கு தெரியும். எனினும் அவை என்னவோ மாயமாய் மறைந்துவிடுகிற மாதிரி அவற்றை நாம் கணக்கின்றி பயன்படுத்துகிறோம்.

புதுவகை மின் விளக்குகள் மின்சாரத்தை குறைவாக உபயோகிக்கும் என நமக்கு தெரியும். ஆனால் அவை எங்கிருந்து உற்பத்தியாகி வருகின்றன? சீனா? ஹங்கேரி? மெர்க்குரி இருப்பதனால் விஷக் கழிவுகள் அவற்றில் சேர்கின்றன. எனில் உற்பத்தியின்போது அந்த ரசாயனங்களால் பாதிக்கப்படுவது யார்? சீனாவிலும் ஹங்கேரியிலும் அதனால் உருவாகிற சூழலியல் சீர்கேடுகள் என்ன? கொஞ்சமாக மின்சாரத்தை சேமிப்பதற்காக இப்படி தொலைதூரங்களிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வதால் கிடைக்கக்கூடிய லாபம்தான் என்ன?

செல்லஃபீல்ட் புத்தகத்தின் மீது எனக்கு சார்பிருக்க இன்னொரு காரணம் – நாம் என்னென்ன விதங்களில் இனவாதிகளாக இருக்கிறோம் என்பதையும் அது வெளிப்படுத்துகிறது. ஐரோப்பியர்கள், வெள்ளையர்கள் என்பதால் மற்ற ஜனங்களைவிட அவர்கள் கூடுதல் பகுத்தறிவோடு இருப்பார்கள் என்றும் பொறுப்பற்ற வினோத செயல்களை எல்லாம் வேறு கண்டங்களில்தான் காண முடியும் என்று நாமாக அணுமானிக்கிறோம்.

கேள்வி: அது சர்ச்சைக்குரியதாக மாறும் என்று எப்போதாவது கவலைப்பட்டீர்களா?

பதில்: இல்லை. அந்த நூலை எழுதும்போது கோபத்தில் இருந்தேன். என்னுடைய உணர்ச்சியை மாற்றும்படிக்கு, அதில் நான் எழுப்பிய எந்த கேள்விகள் சார்ந்தும் இன்னமும் எந்த மாற்றமும் நிகழவில்லை. செல்லஃபீல்ட் இப்போது மேலும் பெரிதாகியிருக்கிறது.

கேள்வி: ஒருமுறை நீங்கள் “இந்த பூமியில் நமக்கு கிடைக்கிற வேறுபாடுகள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவே இல்லாமல், கெட்டதுக்கும் மோசமானதுக்கும் நடுவேதான் அடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அனுமானத்திலிருந்து நான் தொடர்கிறேன்” என்று எழுதியிருந்தீர்கள். எப்போதாவது அதிக அவநம்பிக்கை வருவதாக எண்ணியிருக்கிறீர்களா?

பதில்: உண்மையில், போதுமான அளவு எனக்கு அவநம்பிக்கை இல்லை என்றே கவலை கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க ஆழமான நிறைவுணர்ச்சிகளால் நிரம்பியிருக்கிறது. அதனால் உலகம் சீரான நிலையில் இல்லை என்கிற தகவலை மறந்துவிடுகிறேன். உதாரணமாக, நான் என் காலத்தை மதிப்புடன் பேணுகிறேன்.  என் நேரத்தை முழுமையாக என் கட்டுபாட்டில் வைத்திருக்கிறேன். என்னை பொருத்தவரை அது மிக உயர்வான வாழ்க்கைத் தரம். ஏதோவோர் தருணத்தில் எனக்கான செயற்கையான ஒரு மண்டலத்தை உருவாக்கிக் கொண்டேன். என்ன வேண்டுமோ அதை செய்துக் கொள்ளலாம். அதற்கான வெகுமதியும் பெறலாம். என்னுடைய இருப்பிலேயே ஒருவித தூய்மைவாத இன்பவியல் (puritanical hedonism) இருக்கிறது.

கேள்வி: தூய்மைவாத இன்பவியல் என்றால்?

பதில்: செய்ய விரும்பாத எதையும் நான் பெரும்பாலும் செய்ய வேண்டி இருந்ததில்லை. என்னுடைய எந்த ஈடுபாட்டையும் பன் மடங்கு நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாகவே என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. கணக்கிட முடியாத என் நல்லதிருஷ்டத்தை புரிந்து கொள்ள வேண்டுமாயின், அதை நல்லபடியாக உபயோகிக்க வேண்டிய விசேஷக் கடமை இருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

கேள்வி: அதாவது, எப்போதும் நிறைவில்லாமல் மேலதிக கோரிக்கைகள் வைப்பதற்கோ அல்லது வேறேதையாவது எதிர்பார்ப்பதற்கோ மாறான ஒரு நிலை?

பதில்: எனக்கு வேறெதுவும் தேவைப்படும் என்றே தோன்றவில்லை. உதாரணத்துக்கு, நான் ஒரு தனிமைவாசி. இந்த அம்சத்தால் பிறருடைய எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய முடியாது. ஆனால் என்வரையில் இதுவொரு அற்புதமான விஷயம். சமூகத்துடன் இணைந்த இருப்பில் உள்ள திருப்திகரத்தை என்னால் இனங்காண முடியும் – நான் அதில் அதிகம் ஈடுபடுவதில்லை என்றாலும். ஆனால் பல நாட்களுக்கு இன்னொரு மனிதக் குரலையே கேட்காமல்தான் இருக்கிறேன். அப்படி இருப்பது என் கவனத்தில்கூட இருப்பதில்லை. நான் அதை அஞ்சுவதும் இல்லை. தனிமையுடனான என் பிணைப்பின் தீவிரத்தையே உண்மையில் அஞ்சுகிறேன்.

இந்த மனநிலை என் குடும்பத்திற்கே உண்டு. என் சகோதரன் ஒரு தனிமைவாசி. என் அம்மா ஒரு தனிமைவாசி. தனித்திருப்பது, நமக்கு தேவையான எல்லா நேரத்தையும் தேர்ந்து கொள்வது இவை இரண்டும் மகத்தான சிறப்புரிமைகள் எனும் தன்னம்பிக்கையுடனே நான் வளர்ந்தேன். அதுவே இருப்பின் விசேஷ பகுதி. நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேனோ அதையெல்லாம், தனிமையில் இயல்பாக இருக்கும் என் குணத்துக்கே சமர்ப்பிக்க வேண்டும். எழுத்தாளனுக்கு அதுவொரு நல்ல முன்னறிவு. மேலும் புத்தகங்கள் சிறந்த தோழமைகள். புத்தகத்தைவிட அதிகம் மனிதத்தன்மை கொண்ட இன்னொரு விஷயம் கிடையாது.

கேள்வி: ஜோனதன் எட்வர்ட்டின் அடிக்குறிப்பொன்று உங்கள் பிரக்ஞையையே மாற்றியதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது என்னது?

பதில்: இருப்பின் தன்னிச்சையம்சம் (arbitrariness of existence) பற்றி அதில் அவர் பேசுகிறார். நிலவில் பிரதிபலிக்கும் வெளிச்சத்தினை ஓர் உருவகமாக பயன்படுத்துகிறார். இரவில் நிலவில் வருவது பிரதிபலிப்பு என்றாலும், நாம் அதை தொடர்ச்சியான வெளிச்சமாகவே பார்க்கிறோம். ஆனால் உள்ளார்ந்து அப்படியொரு இணைப்பு கிடையாது. வெளிச்சமாக மட்டுமே அது புதிப்பிக்கப்பட்டு நீடிக்கிறது.

இங்கே எல்லா விஷயங்களும் ஏன் தம்மியல்பில் இருக்கின்றன என்பதையோ அல்லது ஒரு தருணத்துக்கு பிறகு எப்படி இன்னொரு தருணம் வருகிறது என்பதையோ எந்த அறிவியல்வாதியாலும் விளக்கிட முடியாது. நாம் யதார்த்தத்தை சுவீகரிக்கிறோம். ஒரு பழைய காலணி போல அதில் புழங்குகிறோம். இவை எல்லாம் ஆச்சர்யமூட்டும் வகையில் தன்னிச்சையாய் நடக்கின்றன.

கேள்வி: இந்த தன்னிச்சைத்தன்மை இயற்கைக்கு மீறியவற்றையும் (super natural) உள்ளடக்குமா?

பதில்: இயற்கைக்கு மீறியவை எனும் கருத்தாக்கம் என்னை ஈர்ப்பதில்லை. உலகத்தை ஒரு மூடிய உள்ளுறைந்த யதார்த்தம் என்று சொல்வதிலோ அதனுள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தில் சில இடையீடுகள் நிகழ்வதாக சொல்வதிலோ எனக்கு விருப்பம் இல்லை. நாம் வாழ்ந்து அனுபவிக்கக்கூடிய யதார்த்தம் என்பது முழுமையாக நெர்ய்யப்பட்ட யதார்த்தத்தின் ஒரு பகுதியே.

பிரபஞ்சம் வேறெங்கோ இருந்து வேறென்னவோ செய்துக் கொண்டிருக்கிறது என்று பாவனை செய்வது உண்மையன்று. நாம் பிரபஞ்சத்தின் நடுவே இருக்கிறோம். அதை முழுமையாக சார்ந்திருக்கிறோம். அதனால் முழுமையாக வரையறை செய்யப்பட்டிருக்கிறோம். வாலேஸ் ஸ்டீவன்ஸ் போன்ற ஒருவரை வாசித்தால், அவரும் அடிப்படையில் இதையே சொல்கிறார்.

கேள்வி: மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கையில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா? அத்தகைய சிந்தனைகள் உங்களை இரவில் தூங்க விடாமல் செய்வதுண்டா?

பதில்: ஏற்கனவே எனக்கு சின்ன அளவில் தூக்கமின்மை உண்டு. இரவில் நான் எழுந்துக் கொள்வேன். என் மனம் அதற்கு முன்பாகவே தெளிவடைந்திருக்கும். உலகம் அமைதியோடிருக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யலாம்.

மரணத்தை பற்றி யோசிக்கும்போது, நான் இல்லாமலும் இங்கு வாழ்க்கைத் தொடரும் என்கிற எண்ணம் ஓர் ஆழமான துயரை ஏற்படுத்துகிறது. இழப்பதற்கு அவ்வளவு இருக்கின்றன – வரலாறும் கலைச் சின்னங்களும். ஆனால் அவை என்னை இழக்காது.

கேள்வி: மரணத்தின் முன்னிலையில் தவிப்பின்றி இருப்பதற்கு மதம் ஒரு நல்ல வழிமுறையா?

பதில்: நம்பிக்கை எப்போதுமே தன்விருப்பின் செயலாகவே (act of will) எனக்கு தோன்றும். கடவுள் மீது நம்பிக்கைக் கொள்வதற்கு என்ன பொருள் என்று உண்மையாகவே எனக்கு தெரியாது. என்வரையில், அனுபவமே கடவுள் சார்ந்த உணர்ச்சியாகவும் இருக்கிறது. நமக்கு பிரக்ஞை இருக்கிறது. அது இந்த உலகை புரிந்துகொள்ளச் செய்கிறது. அழகினால் நம் உள்ளம் அசைகிறது. இதற்கு மேலான ஓர் அற்புதம் இருப்பதாக நான் எண்ணவில்லை.

கேள்வி: மதத்தின் தர நிலையை எட்டும் பொருட்டு, நீங்கள் உங்களை தணிக்கை செய்வதுண்டா?

பதில்: தணிக்கை என்று சொல்ல முடியாது. ஆனால் என்னையே அடிக்கடி தயார் செய்ய வேண்டியிருக்கிறது. நான் எதில் ஈடுபடுகிறேனோ அதில் மூழ்கிவிடுகிறேன். வேறு மனிதர்கள் இருப்பதையே மறந்துவிடுகிறேன். அதனால் எல்லா சூழ்நிலைகளிலும் மனிதர்களால் சரியாக ஏற்றுக் கொள்ளும்படி நடக்க முடிவதில்லை. எனவே மதம் தடை செய்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய குறிப்பிட்ட தோல்விகளை கடந்து வருவதற்கு மதத்தினால் எப்போதும் உதவ முடிவதில்லை. எனவே தன் மைய நோக்கான சோலிப்சிஸம் (Solipsism) நோக்கி சாய்கிறேன்.

கேள்வி: வாழ்க்கையில் எதையேனும் தவறவிட்டுவிட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்: தவறவிட்டவை நிச்சயம் இருக்கும். உதாரணத்துக்கு அதிகம் பயணம் செய்திருக்கலாம். கடந்த வருடம் பாரிஸ் சென்றேன். அழகான நேரம் வாய்த்தது. இப்படி அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் என தோன்றியது. பிறகு வீட்டுக்கு வந்ததும், செய்து முடிக்க நிறைய வேலை இருப்பதாக பட்டது. இன்னும் படிக்காமல் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன. உண்மையில் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், குறிப்பிட்ட தருணத்தை எட்டுகிறோம். அங்கே மனம் அசாதாரண விஷயங்களை சாத்தியப்படுத்துகிறது. அப்படியென்றால், அதையே செய்வோம் என்று எண்ணிவிடுகிறேன்.

***

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

3 Comments

  1. இயற்கை, அறிவியல், மதம், அழகு மீதான விந்தையை விடாமல் ஒரு ஆசிரியரின் குறிப்புகளாக இந்த நேர்காணலைப் படித்தேன். அனுபவங்களின் மீதும் அழகின் மீதும் மாறாத விசுவாசத்தைக் கொண்டிருக்கும் சொற்கள். கவிஞன் கொண்டிருக்கும் விசுவாசம் அது. வாழ்த்துகள் விஷால்…
    ஷங்கர்ராமசுப்ரமணியன்

உரையாடலுக்கு

Your email address will not be published.