வேணு தயாநிதி கவிதைகள்

ஓமன திங்கள் கிடாவோ

ஸ்வாதித்திருநாள் மகராஜா
இன்னமும்
உயிரோடு இருக்கும் ரகசியம்
தெரியுமா உங்களுக்கு?

இன்றோடு அவருக்கு
இருநூற்று பதினொரு
வயது நிறைவு

வெயில் நேரத்தில்
படியேறி வீட்டுக்கு வந்து
முற்றத்தில் நின்றது போதும்.
திகைக்காதீர்-
தண்ணீர் எதுவும் தேங்கவில்லை.
வெறும் கருங்கல் தரைதான்.
காலணியை கழற்றிவிட்டு
அதன் குளுமையில் பாதம் பதித்து
இப்படி வாருங்கள்.

சியாமா சாஸ்திரி
நேற்றே வந்து
கூடத்தில் காத்திருக்கிறார்.
உடல்முழுக்க
வரையப்பட்ட நாமங்களுடன்
தம்புராவை ஏந்திக்கொண்டு,
புரந்தரதாசரும் தியாகராஜரும்
ஓலா ஆட்டோவில் இறங்கி
இதோ,
வந்துவிட்டார்கள்.

நீற்றுப் பட்டைகளை சரிபார்த்து
உருட்திராட்சங்களை தேடியெடுத்து
முத்துச்சாமி தீட்ஷிதர்
வீட்டை விட்டு கிளம்ப
தாமதமாகிவிடலாம், என்றாலும்
எப்படியும் வந்துவிடுவார்.

முதலில்
இந்த நீர்மோரை பருகுங்கள்
தொன்னையில் இருக்கும்
இந்த இளஞ்சூடான
அக்காரவடிசிலை
அருந்துங்கள்.
அதன் தித்திப்பு
அப்படியே இருக்கட்டும் நாவில்.

உங்களுக்கு சங்கீதம் தெரியாதா?
பரவாயில்லை.
நல்ல ஒரு பாடலை
திரும்பவும் கேட்க பிடிக்கும் அல்லவா?

ஸ்வரங்களின்
தொடர் முழக்கத்தில்
தேய்ந்து பளபளப்பு கூடிய
தூண்களுக்கு மத்தியில்,

பட்டுத்துணி போர்த்திய கட்டிலில்
அரைத்தூக்கத்தில்,
பக்கவாட்டில் படுத்துக்கொண்டிருக்கிறாரே,
கருவில் திருகொண்ட குமாரர்-
அவரை நினையுங்கள்.
காதில் கேட்பதை
வாயால் ஒலியுங்கள்.

தங்க சரிகை
மின்னும் சல்லாத்துணியாக
கூடத்தின் குளுமையையில் நெளியும்
வீணையின் மீட்டல்
உம்மை வழிநடத்தட்டும்

கசவுப்பட்டு உடுப்பில்
தங்க வளை ஒலிக்க
அடுக்களையில்
அம்மை பால்சோறு
கலந்து கொண்டிருக்க

பிரதமன் நிற
உத்தரீயத்தில்
சீவி முடிந்த சிகையுடன் நிற்கும்
இறயிம்மன் தம்பி
தன் கையெழுத்துப்பிரதியை
சரிபார்த்துக்கொண்டு
திருப்தியுடன் புன்னகைக்கிறார்.

குறிஞ்சி ராகத்தின்
இனிமையில் மயங்கி
கோழிகள் கூச்சல் அடங்க
அழியில் பசுக்கள்
தீவனம் மறந்து நிற்க
கிளிகளும் அன்னப்பறவைகளும்
கூடிவிட்டன முற்றத்தில்

புழைக்கடை விரிப்பில்
உலரும் புகையிலை போல
சுருக்கம் கொண்ட உதடுகள் சுழித்து,
ஒரு பல் கூட இல்லாத
வாயை திறந்து
ஸ்வாதித்திருநாள்
எப்படி சிரிக்கிறார் பாருங்கள்!

தாலாட்டில் நெகிழ்ந்து
சற்று தாழ்ந்து விட்ட
கூடத்தின் விதானம்
தானும் பாட முயன்று
காற்றில் கிறீச்சிடுகிறதே,
கேட்கிறதா?

வெட்கத்தை விட்டு
குரலை உயர்த்தி
இன்னும் சற்று
உரக்க பாடுங்கள்,
ஆமாம் அப்படித்தான்.

ஓமனத்திங்கள் கிடாவோ?
நல்ல கோமள தாமர பூவோ?
பூவில் நிறஞ்ஞ மதுவோ?
பரி பூர்நேந்து தண்டே நிலாவோ?

௦௦௦

வேணு தயாநிதி

வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.  புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்

1 Comment

  1. சிறப்பு நன்றாக இருக்கிறது..

உரையாடலுக்கு

Your email address will not be published.