இந்தியாவில் மறுமலர்ச்சி (பகுதி 2) – ஸ்ரீ அரவிந்தர்

தமிழில் : சியாம்

ஸ்ரீ அரவிந்தர் எழுதி, 15-9-1918 அன்று வெளிவந்த ‘The Renaissance in India – II’ என்ற கட்டுரையின் தமிழ் வடிவம்.

தற்போது தவிர்க்கமுடியாத வகையில் மறுமலர்ச்சிக்கு இட்டு சென்ற செயல்பாட்டை வராலாற்றுரீதியாகவும், தர்க்கரீதியாகவும் மூன்று படிநிலைகளாகப் பகுத்து ஆய்வு செய்யலாம். சிக்கலான உடைவையும், மறு உருவாக்கத்தையும் கொண்டவொரு புதிய கட்டுமானம் என்று இந்த செயல்பாட்டைக் கூறலாம். இதற்கான அடித்தளங்கள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தாலும், அதன் முற்றான விளைவுகளைக் காண நாம் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும். மேலும் அந்த விளைவென்பது உருமாறிய பழைய கலாச்சாரத்தின் புதிய யுகம் தானே ஒழிய, இறந்துபோன பழைய நாகரிகத்துடன் எவ்வகையிலும் இணைந்தது இல்லை. ஆகையால் இதுவொரு அசலான மறுபிறப்பும், புத்துயிர்ப்பும் ஆகும்.

ஐரோப்பிய சிந்தனைகளுடனான தொடர்பை இந்த செயல்பாட்டின் முதல் படிநிலை என்று சொல்லலாம். இந்தத் தொடர்பானது நம்முடைய பண்டைய கலாச்சாரத்தின் பல முக்கியமான கூறுகளை பரிசீலனை செய்யும் அளவிலும், சில வேளைகளில் அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படைகளையே நிராகரிக்கும் அளவிலும் கூட இருந்தது. இந்த ஐரோப்பிய தாக்கத்தின் மீதான இந்திய ஆன்மாவின் எதிர்வினையை இரண்டாவது நிலையாகக் கொள்ளலாம். இந்திய ஆன்மாவினுடைய எதிர்வினையானது சில நேரங்களில் ஐரோப்பா அளிப்பதை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாகவும், பழமையின் சாரத்தை வலியுறுத்துவதாகவும்கூட இருந்தது. மூன்றாவது நிலையாக சமீபத்தில் தொடங்கியிருக்கும் புத்தாக்கச் செயல்பாட்டை சொல்லலாம். இந்த புத்தாக்கத்தில் இந்திய மனதின் ஆன்மீக ஆற்றலானது அதன் உண்மைகளை மீட்டெடுத்து மேலானதொரு நிலையில் நீடிக்கிறது. நவீன சிந்தனையில் சரியானதாகவும், உண்மையானதாகவும், பயனுள்ளதாகவும் தெரிந்த எந்தவொன்றையும் அது ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அவற்றையெல்லாம் இந்தியத் தன்மையுடையதாக அது உருமாற்றவும் செய்கிறது. அதாவது நவீன சிந்தனையில் இருந்த அந்நியத்தன்மை முற்றிலும் நீங்கி, பண்டைய இறைவியான இந்திய சக்தியின்(Shakthi) இயக்கத்தில் இன்னொரு ஒத்திசைந்த கூறாக அது இணையும் அளவில் இந்த உறுமாற்றம் இருக்கிறது. இதன் மூலம் சக்தியானவள் நவீன தாக்கத்தின் பிடியிலிருந்து வெளிவந்து, அதைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறாள். அதனிடம் இனி ஒருபோதும் அவள் தோல்வியடையப் போவதில்லை, உடமையாகப் போவதும் இல்லை.

இயற்கையின் ஏராளமான செயல்களில் -அது மனிதர்கள் சார்ந்ததோ அல்லது வேறு விஷயங்களோ- எதுவும் தற்செயலானதோ வெளிப்புற காரணிகளின் தயவினால் நடப்பதோ அல்ல. அகவயமான விஷயங்களே(inwardly) இயற்கையின் மிக முக்கியமான மாற்றங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. உள்ளபடியே நீடிக்கும் இந்திய உருமாற்றத்தின் சிக்கலானது முன்னரே தீர்மானிக்கப்பட்டதும் தவிர்க்க முடியாததும் ஆகும். ஏனென்றால் மேற்கத்திய நோக்கங்களையும் வடிவங்களையும் அவசரகதியில் பிரதியெடுப்பதும் சரி, தனக்கேயுரிய புரதான நோக்கங்களை அந்நிய மாற்றத்துக்கு இணங்க விடுவதும் சரி, இந்தியாவினால் இயலாத விஷயம்.

நவீன ஜப்பானை உருவாக்கியதைப் போலான துரித மாற்றம் இந்தியாவிற்கு சாத்தியமே இல்லை. அதன் புறக் காரணிகள் ஜப்பானைப் போல உறுமாற்றத்திற்கு சாதகமான நிலையில் இருந்தாலும் கூட. ஜப்பான் தன்னுடைய மையமாக தன்னியல்பிலும் அழகியல் உணர்விலும் வாழ்வதால், ஒன்றிணையத் தயாரான நிலையிலேயே அதனால் எப்போதும் இருக்க முடியும். அவளது தேசிய அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள அவளது வலிமையான மனவுறுதியே போதுமானதாக இருக்கிறது. அவளது கலை நோக்கும் அவளின் ஆன்மாவை உயிர்ப்புடன் வைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

ஜப்பானுடன் ஒப்புநோக்கையில், இந்தியாவானது குறைவான உயிர்ப்புடனும் உற்சாகத்துடனும் தன் ஆன்மாவில் நடுநாயகமாக வாழ்கிறாள். ஆதலால் அவளுடைய படைப்பாக்கத்தின் தகவமைக்கும் திறன் குறைபட்ட அளவிலேயே இருக்கிறது. எனினும் அவளுடைய மகத்தான படைப்பாக்கமானது தீவிரமும், சிந்தனையும் உடைய ஆழத்தைக் கொண்டது. இவ்வளவு தூரம் ஆழந்து சுயபரிசீலனை செய்து, வாழ்வின் வெளிப்புற பகுதிகளை அதற்கேற்றார் போல மாற்றியமைக்கவும், மறுவார்ப்பு செய்யவும் வேண்டியுள்ளபடியால் இந்தியாவினுடைய நடவடிக்கைகள் எல்லாம் நிச்சயமில்லாமலும், மிகுந்த கவனத்துடன் நீடிப்பதாகவும் இருக்கிறது. தன்னுடைய மறுவார்ப்பிற்கான ஆற்றல்கள் இவ்வாறு கவனமாக உறுதிசெய்யப்பட்டு, உட்கிரகித்துக் கொள்ளப்படும் வரை  அவளால் தான் தேர்ந்தெடுக்கும் புதிய பாதையில் எளிதாக அடியெடுத்து முன்வைக்க முடியாது. இந்த நகர்வின் சிக்கலில் இருந்தே அவள் எதிர்கொள்ள வேண்டிய  எல்லா பிரச்சனைகளும் முளைக்கிறது. இத்துடன் குழப்பமான நிலைப்பாடுகளும், பார்வைக் கோணங்களும் சேர்ந்து இந்த நகர்வை மேலும் சிக்கலாக்கி எளிதான, தெளிவான, நிச்சியமான வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனால் நாம் எதிர்காலத்தை பற்றி தெளிவான திட்டம் இல்லாமல், சூழலின் குழப்பமான அழுத்தத்தாலோ அல்லது மனக்கிளர்ச்சியால் உருவாகும் தொடர்ச்சியான தூண்டுதல்களாலோ முன்னகர்வது போலத்தோன்றலாம். இருப்பினும் இந்த முன்னகர்வின் சிரமங்களிலும் ஒரு உறுதிப்பாடு இருக்கவே செய்கிறது: அகம் தனது வழியை கண்டடைந்து அதன் தாக்கங்கள் மேற்பரப்புக்கு வந்த பிறகு அதன் விளைவுகள் வெறும் ஆசியச் சாயல் கொண்ட மேற்கத்திய நவீனத்துவமாக இருக்காது; மாறாக, மனித நாகரீகத்தின் எதிர்காலத்தை முதன்மையாக கருத்தில்கொண்ட அசலான புத்தம்புதிய ஒன்றாகவே இருக்கும்.

இந்த மறுமலர்ச்சியானது மேற்கத்திய கல்வியின் மூலம் இந்தியாவில் உருவான முந்தயகால அறிவுஜீவிகளின் சிந்தனையில் இருந்து தோன்றவில்லை. ஜப்பானில் நிகழ்ந்தாற் போல் துரிதமான மாற்றம் இந்தியாவிலும் நிகழும் என்று பொறுமையின்றி எதிர்பார்த்த நம்பிக்கைதான் அவர்களுடையதாக இருந்தது. இத்தகைய அறிவுஜீவிகள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருப்பினும், திறமையாலும் படைப்பூக்கத்தாலும் வலியவர்களாக இருந்தனர். அவர்கள் இந்தியாவின் மனதையும், ஆன்மாவையும், வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டதொரு ஒட்டுமொத்த நவீன இந்தியாவை எதிர்பார்த்தனர். அவர்களுடைய நோக்கத்தில் தீவிரமான தேசாபிமானம் இருந்தது, எனினும் அவர்களுடைய மனநிலையில் துளியும் இந்தியத் தன்மை இருக்கவில்லை. நமது பண்டைய கலாச்சாரத்தை  அரைகுறையான நாகரிகமாகக் கருதும் மேற்கத்தியப் பார்வையை அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லலாம். 

மேற்கிலிருந்து இரவலாக பெறப்பட்ட கருத்துக்களாலேயே அவர்கள் வழிநடத்தப்பட்டார்கள். அல்லது அவர்களுடைய கருத்தாக்கங்கள் எல்லாம் குறைந்தபட்சம் மேற்குலக ஆன்மாவால், கல்விமுறையால் பாதிக்கப்பட்டவையாக இருந்தன. அவர்கள் இடைநிலைக்காலத்து(medieval) இந்தியாவிலிருந்து விலகி, அதைத் தூற்றுவதிலும் அழிப்பதிலுமே நாட்டம் கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் இருந்து வெறுமே கவித்துவ குறியீடுகளை எடுத்துக்கொண்டு அதற்கு மேலோட்டமான, நவீனமான தனிச்சிறப்பை புகுத்தினர். இதற்கு நேர்மாறாக பண்டைய(ancient) இந்தியாவை பெருமைபொங்க அனுகி அதிலிருந்து அவர்களது புதிய கோணத்திற்குள் அடங்கக்கூடிய எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள விரும்பினர். இருப்பினும் பண்டைய இந்தியாவில் இடம்பெற்றிருந்த எந்தவொன்றின் உண்மை நிலையையோ ஆன்மாவையோ அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களது மேற்கத்திய அறிவுத்திறனுக்குள் பொருந்தாத எல்லாவற்றையும் நீக்குவதற்கே அவர்கள் பெருமளவில் போராடினர். அத்துடன் வெறுமையான, அறிவுக்கு ஏற்புடைய ஒரு எளிமையாக்கப்பட்ட மதத்தை அவர்கள் அடைய முற்பட்டனர். அவர்கள் உருவாக்கிய இலக்கியமானது பிற கலைகளின் மதிப்பீடுகளை மொத்தமாகத் தவிர்த்துவிட்டு, ஆங்கில மாதிரிகளின் ஆன்மா, வடிவம் உட்பட அனைத்தையும் மொத்தமாக இங்கு இறக்குமதி செய்யக்கூடியதாக இருந்தது.

அவர்களுடைய நம்பிக்கையானது பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மத்திய தர போலி ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமான தன்வயப்படுத்தலில், பிரதியெடுத்தலில் தான் இருந்தது. இதன் பெருமதியென்று ஏதேனும் இருக்கலாம், எனினும் அவர்களுடைய வழிமுறை தவறானதென்று நமக்கு இப்போது தெளிவாகத் தெரிகிறது. ஆங்கிலமயமாக்கப்பட்ட  இந்தியா என்பது எந்தவகையிலும் சாத்தியமானதோ விரும்பக்கூடியதோ அல்ல. அவர்களுடைய இந்த முயற்சி இறுதிவரை தொடர்ந்திருக்குமாயின், அது நம்மை நகலெடுப்பவர்களாக(copyists) மாற்றியிருக்கும். நாம் ஐரோப்பிய வளர்ச்சி தடத்தில் எப்பொழுதும் முட்டிக்கொண்டு குழப்பத்துடன் பின்தொடர்பவர்களாக மாறியிருப்போம். அது நம்மை என்றைக்குமாக ஐம்பது வருடங்கள் பின்தங்கவைத்திருக்கும். எனினும் இந்த சிந்தனை போக்கிற்கு தற்போது வரை நீடிக்கக் கூடிய ஆற்றல் இருக்கவில்லை. அதில் சொற்பமானவை இன்றளவும் தொடர்கின்றன; ஆனால் அதன் கவர்ச்சியான ஆற்றல் மறைந்து, இப்போது மீட்புக்கான எந்த சாத்தியமும் இல்லாமல் காலாவதியாகிவிட்டது.

இருப்பினும் இந்த முதிர்சியற்ற கடந்தகால சிந்தனப்போக்கானது அதன் உபவிளைவுகளை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளது. தற்போதைய சக்திவாய்ந்த மறுமலர்ச்சிக்கு அவை தவிர்க்கமுடியாதவை. நாம்  அவற்றுள் முக்கியமான மூன்று விளைவுகளைக் கண்டெடுக்கலாம்.

ஸ்ரீ அரவிந்தர்

கடந்தகால சிந்தனைப்போக்கின் முதல் விளைவு என்று அறிவுத்திறன் தன்னிச்சையாக மீண்டெழுந்ததைச் சொல்லலாம். தொடக்கத்தில் அறிவுத்திறனின் இந்த இயக்கம் குறுகிய எல்லைக்குள் செயல்படுவதாக இருந்தாலும் தற்போது மானுடத்தின் எல்லா துறைகளுக்கும் அது விஸ்தரிக்கிறது. அது அவ்வாறு கையகப்படுத்தும் எல்லா துறைமேலும் தன்னை தனித்துவத்துடனும்  ஆர்வத்துடனும் ஈடுபடுத்துகிறது. இது இந்திய மனதிற்கு எல்லா வகை ஞானத்திற்குமான அதன் தொய்வில்லா பழைய வேட்கையை மீட்டுக் கொண்டுவந்துள்ளது. மனித மனதுடைய விமர்சனத்திறனின் முழு சாத்திய எல்லையையும் அது திறந்துள்ளது. முன்பு வெகுசிலரிடம் ஒரு குறுகிய எல்லைக்குள் இருந்த முழுமையான உற்றுநோக்குதலும், சுதந்திரமான தீர்மானங்களும் தற்போது பொதுப்படையாக அறிவுத்திறனின் சாரமான கருவியாக மாறியுள்ளது. இவையெல்லாவற்றையும் முந்தைய பிரதியெடுப்பு காலகட்டமானது தொடர்ந்து எடுத்துச் செல்லவில்லை. எனினும் அது உருவாக்கிய கரு இப்போது செழித்து வளர்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். 

இரண்டாவது விளைவாக அது கொந்தளிப்பான நவீன கருத்துக்களை பழைய கலாச்சாரத்திற்குள் அறிமுகப்படுத்தியது. அவற்றை நமது பார்வைக்குக் கொண்டுவந்து சிந்திக்கவைத்தது. அத்துடன் நமது பழைய மரபின்படி செயல்பட்ட விதத்திலிருந்து விலகி பெரிதும் மாறுபட்ட விதத்தில் நம்மை செயல்படவைத்தது.

இறுதியான விளைவென நமது கடந்தகாலத்தை புதிய கண்களுடன் பார்க்க வழிவகுத்ததைச் சுட்டலாம். நெடுங்காலமாக புதைந்துபோன நம்முடைய பண்டைய சிந்தனையையும் ஆன்மாவையும் மீட்டெடுத்தது  மட்டுமல்லாமல் அது புதிய கோணங்களையும், ஆக்கத்துக்கும் வளர்ச்சிக்குமான புதிய சாத்தியக்கூறுகளையும் காண்பதற்கான புத்தொளியைக் கண்டடையவும் வழிவகுத்தது. முந்தைய காலகட்டத்தில் நமது பண்டைய கலாச்சாரத்தை நாம் தவறாக புரிந்துகொண்டோம், எனினும் அதுவொரு பிரச்சனை இல்லை. மரபான சிந்தனையாக இருந்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ளும் மறுபரிசீலனைக்கான கட்டாயமே இங்கு மிகவும் பிரதானமானது.

இந்திய மறுமலர்ச்சியின் இரண்டாவது காலகட்டமானது (புதியவற்றின் மீதான இந்திய மனதின் எதிர்வினை) இந்த மறுபரிசீலனைக்கான ஆற்றல்களையும் பண்புகளையும் செயல் நோக்கி வலுவாக நகர உதவியது. ஆங்கிலமயமாக்கும் தூண்டுதலானது பழைய தேசிய ஆன்மாவை எதிர்கொண்டு அதன் தாக்கத்தால் விரைவில் நீர்த்துப்போனது. இதன் காரணமாக தங்களது மேற்கத்திய பார்வையுடன் பிடிவாதமாக  நீடிக்கும் தற்கால அறிவுஜீவிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது அருகிவரும் அளவில் உள்ளனர். இப்போது எஞ்சியிருப்பவர்களும் கூட முன்பு பொதுவானதாக இருந்த ‘கடந்தகாலத்தை தூற்றும் மனநிலையை’ விட்டுவிட்டார்கள்.

மீதமுள்ள பெரும்பாலான அறிவுஜீவிகளின் நவீனத்துவமானது பண்டைய நோக்கத்தாலும் உணர்வாலும் செறிவிழந்துவிட்டது. இதன் மூலம் அவர்கள் இந்திய தன்மைகளை தற்போது இன்னும் மேம்பட்ட அளவில் புரிந்துகொள்ளத் தலைபடுகிறார்கள். அதாவது அவர்கள் இந்தியத் தன்மைகளின் வடிவங்களைத் தாண்டி அதன் ஆன்மாவை தடையின்றி ஏற்றுக்கொள்வதையும், அதன் புதுவகையான புரிதல்களுக்கு முயல்வதையும் சொல்லலாம். துவக்கத்தில் அவர்களின் மையக்கருத்தானது வெற்று நவீனத்துவமாக இருந்து, எல்லா இடத்திலும் மேற்கத்திய தூண்டுதலை மட்டும் வெளிப்படுத்தியது. ஆனால் நாளடைவில் அது பண்டைய கருத்துகளை விரும்பி எடுத்துக்கொண்டு, பண்டைய ஆன்மாவின் அனைத்து வண்ணங்களையும் தன்னில் நிறைத்துக் கொண்டது. இதனால் துவக்கத்தில் சிறிதளவாக இருந்த பண்டைய நோக்கமும் உணர்வும் பெருகி,  நவீனத்துவ நோக்கத்தின் மொத்த சிந்தனையும் ஆன்மாவும் இந்திய பண்பு இயல்புகளாக மாற்றமடைந்தது. தற்கால இலக்கியத்தின் அசலான, தனித்துவம் மிக்க மேதைகளான தாகூர் மற்றும் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் படைப்புகள் இந்த மாற்றத்தின் படிநிலைகளை தெளிவாகக் காட்டுகின்றன.

இன்னொரு புறம், இந்த இயக்கத்திற்கு எதிர் திசையில் வலுவான வேறொரு இயக்கம் வளர்ந்துவருகிறது. இந்தியத்தன்மை கொண்ட எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும், மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்ற கட்டாய எதிர்வினையுடன் இந்த இயக்கம் தொடங்கியது. இந்தத் தூண்டுதல் இப்போதும் நம்மிடம் இருக்கிறது; அதன் பல்வேறு தாக்கங்களும் நம்மிடையே தொடக்கிறது. இந்த இயக்கத்தின் பணி இன்னும் நிறைவடையவில்லை. ஆனால் உண்மையில் இந்த எதிர்வினையானது நவீனம் இந்தியத்தன்மையோடு இணைந்ததன் தொடக்கத்தையும், அதன் வெளித் தெரியாத தன்வயப்படுத்தலையும் தான் குறிக்கிறது. பண்டையவற்றை நியாயப்படுத்தும் பொழுது, அதை பழைய, புதிய என இரண்டு மனநிலைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல அவற்றை மரபான மனமும் ஏற்றுக்கொள்ள வேண்டும், விமர்சன மனமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒருவகையில் புறப்பட்ட இடத்திற்கு மீண்டும் திரும்புவது மட்டுமல்ல, பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞையின்றியோ செய்யப்படும் மறுவரையறையும் கூட. இந்த ‘திரும்பிச் செல்லும்’ செல்பாடானது செயற்கையான மீளுருவாக்கத்தை(synthetic restatement) அடிப்படையாகக் கொண்டுள்ளது. பண்டைய கலாச்சாரத்தின் ஆன்மாவைத் தேடும், அக்கலாச்சாரத்தின் வடிவங்களை மதித்து அவற்றை உயிர்ப்பிப்பதற்காக பேணும் அதே நேரத்தில், மறுவார்ப்பு செய்வதற்கும் காலத்திற்கு பொருந்தாதவற்றை மறுப்பதற்கும், பழைய ஆன்மீகத்துடன் இணைவதற்கு ஏற்ற அல்லது அதன் வளர்ச்சிப் பாதையை விரிவுபடுத்தக்கூடிய புதிய நோக்கங்களை அனுமதிப்பதற்கும் அது தயங்குவதில்லை. கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையெலான இந்த சுதந்திரமான தொடர்புறுத்தலிலும், மறுகட்டமைப்பின் வழியைப் பேணுவதிலும் விவேகானந்தர் அவரது காலத்தில் முன்னுதாரணாமாக, ஒரு வலுவான பிரதிநிதியாகத் திகழ்ந்தார்.     

ஆனால் இந்த இயக்கத்தின் செயல்பாடு இத்துடன் முடியவில்லை. இது தன்னளவில் அடிப்படையான புத்தாக்கத்திற்கே இட்டுச்செல்கிறது. இந்த புத்தாக்கம் இல்லையெனில் சிந்தனை மற்றும் பண்பியல்பு ஆகிய இரட்டை இயங்கங்களின் முடிவும் பொருத்தமற்ற இணைதலாகவே இருக்கும். அதாவது நாம் இப்போது அணியும் வினோதமான அரை ஐரோப்பிய-அரை இந்திய உடையைப் போல. ஆழம் மிக்க தனது ஆன்மாவிற்கு இந்தியா முழுமையாக திரும்பவேண்டும். அதன் ஆன்மா செயலாற்றவும், ஒன்றிணைக்கவும், ஒத்திசைவை ஏற்படுத்தவும் இந்தியா தனது தற்கால, எதிர்கால வாழ்வின் ஒட்டுமொத்த பலத்தையும், இலக்குகளையும் அளிக்க வேண்டும். அப்படியான அசலான ஆற்றல்மிக்க படைப்பாக்கத்தையே புதிய இந்தியக் கலையின் உதாரணமாக நாம் எடுத்துரைக்க முடியும். தனது இயக்கத்தின் எல்லா தளங்களிலும் உண்டாகும் அசலான படைப்பாக்கத்தின் தொடக்கமே, இந்தியாவின் மறுமலர்ச்சியை அவள் சுயமாக கண்டடைந்தற்கான அறிகுறியாக இருக்கும்.

***

இந்தியாவில் மறுமலர்ச்சி – பகுதி 1

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.