/

குழந்தைக் கதைகள் 2 – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

தமிழில்: டி. ஏ. பாரி

தன்னை நாயென்று நினைத்த பூனையும், பூனையென்று நினைத்த நாயும்

முன்னொரு காலத்தில் ஒரு ஏழை குடியானவன் இருந்தான். அவன் பெயர் ஜான் ஸ்கிபா. மனைவி, மூன்று பெண் குழந்தைகளுடன் ஒற்றை அறை கொண்ட ஒரு ஓலைக்குடிசையில் வாழ்த்து வந்தான். அது கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. குடிசையில் தலைசாய்க்க ஒரு கட்டிலும் திண்ணையும் உண்டு, சமையலுக்கு ஒரு அடுப்பு. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லை. கண்ணாடி என்பதெல்லாம் ஏழை குடியானவர்களுக்கு ஆடம்பரமான விஷயமல்லவா. அதுபோக குடியானவர்களுக்கு கண்ணாடி எதற்கு? அவர்கள் பொதுவாக தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுவதில்லை.

அவ்வாறான இந்த வீட்டில் ஒரு நாயும் பூனையும் இருந்தது. நாய்க்கு பெவன் என்றும் பூனைக்கு கோட் (Kot) என்றும் பெயர். அவர்கள் இருவரும் ஒருவார இடைவெளிக்குள் பிறந்தவர்கள். அக்குடும்பத்திற்கு குறைவான அளவே உணவு கிடைத்துவந்த போதிலும் ஒருநாளும் நாயையும் பூனையையும் பட்டினியாக விட்டதில்லை. அந்த நாய் இதுவரை இன்னொரு நாயை பார்த்ததில்லை பூனையும் இன்னொரு பூனையை பார்த்தில்லை. எனவே நாய் தன்னை ஒரு பூனை என்றும், பூனை தன்னை ஒரு நாயென்றும் நினைத்துக் கொண்டது. அவற்றின் இயல்புகள் ஒரேமாதிரி இல்லை என்பது உண்மைதான். பூனை மியாவ் என்று சொல்ல நாய் குரைத்தது. நாய் முயல்களை துரத்தி ஓடுகையில் பூனை எலியின் பக்கம் பாய்ந்தது. ஆனால் எல்லா உயிர்களும் தங்கள் இனத்தைப்போல கச்சிதமாக ஒரேமாதிரி நடந்துகொள்ள வேண்டுமா என்ன? அந்த வீட்டின் குழந்தைகளும் ஒருவர்போல் இன்னொருவர் நடந்து கொள்வதில்லையே. பெவெனுக்கும் கோட்டுக்கும் இடையே நல்லுறவு இருந்தது. அவர்கள் அடிக்கடி ஒரே உணவை பகிர்ந்து கொள்ளவும் ஒருவர் இன்னொருவரை நடிக்கவும் முயற்சித்தனர். பெவன் குலைக்கும்போது கோட்டும் குலைக்க முயற்ச்சிப்பாள், அதேபோல் கோட் சத்தமிடுகையில் பெவனும் மியாவ் சொல்ல முயற்சிப்பதுண்டு. கோட் அவ்வப்போது முயலை துரத்துவதும் பெவன் எலியை பிடிக்க எத்தனிப்பதும் நடந்தேறின.

கிராமத்தில் வசிக்கும் குடியானவர்களிடமிருந்து தானியங்கள், கோழி, முட்டை, தேன், கால்நடைகள் போன்றவற்றை வாங்கி கொள்ளும் வியாபாரிகள் ஒருமுறைகூட ஜானின் குடிசைப்பக்கம் வந்ததில்லை. ஜானின் ஏழ்மைநிலை காரணமாக அவனிடம் விற்பதற்கு எதுவுமிருக்காது என்பதை நன்றாகவே அறிவார்கள். இந்நிலையில் ஒருநாள் வழிதவறிய வியாபாரி ஒருவன் அங்கு வர நேர்ந்தது. அவன் குடிசைக்குள் வந்து கடையை விரித்ததும் ஜான் ஸ்கிபாவின் மனைவியும் குழந்தைகளும் அழகழகான பகட்டு பொருட்களின் நிறையை கண்டு அசந்துவிட்டனர். வியாபாரி தன் மூட்டையிலிருந்து மஞ்சள் மணிமாலைகள், பொக்குமுத்துக்கள், ஈய காதணிகள், மோதிரங்கள், ஆடை கோர்க்கும் ஊசிகள், வண்ண கைக்குட்டைகள், இன்னும் இதுபோன்ற சிறு சிறு ஆபரணங்களை எடுத்துக் காட்டினான். இவை எல்லாவற்றையும்விட அந்த வீட்டு பெண்மணியை அதிகம் ஈர்த்தது மரச்சட்டமிடப்பட்ட கண்ணாடிதான். அவர்கள் அதன் விலையை விசாரித்தபோது வியாபாரி அரைப்பணம் என்றான். ஏழை குடியானவர்களுக்கு அதுவே பெருந்தொகைதான். ஜான் ஸ்கிபாவின் மனைவி மரியானா கொஞ்ச நேரத்தில் வியாபாரியிடம் ஒரு உடன்படிக்கையை முன்வைத்தாள். கண்ணாடிக்கான விலையை மாதாமாதம் ஐந்து பைசாவாக கொடுத்து அடைத்துவிடுவது என்று. வியாபாரி முதலில் சற்று தயங்கினான். ஏற்கனவே அக்கண்ணாடி மூட்டையில் பெரும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது, உடைந்துவிடும் அபாயம் வேறு இருந்தது. எனவே கொடுத்துவிடலாம் என முடிவுசெய்து மரியானாவிடமிருந்து முதல் தவணையாக ஐந்து பைசாவை பெற்றுக்கொண்டு கண்ணாடியை அக்குடும்பத்திடம் விட்டுச்சென்றான். அவன் அப்பகுதிக்கு அடிக்கடி வருபவன் என்பதால் ஸ்கிபாக்கள் நம்பகமானவர்கள் என அறிவான். எனவே கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் பொருளுக்கான விலையையும் லாபத்தையும் ஈட்டிவிட முடியும்.

கண்ணாடி அந்த வீட்டில் ஒரு கலகத்தையே உண்டாக்கியது. அதுவரை மரியானாவும் பெண் பிள்ளைகளும் தங்களை அதிகம் பார்த்ததில்லை. கண்ணாடி வருவதற்குமுன் கதவோரம் நின்ற பீப்பாயின் தண்ணீரில் தங்கள் பிரதிபலிப்பை பார்த்துள்ளனர், அவ்வளவுதான். தற்போது அவர்கள் தெளிவாக பார்க்க முடிந்ததும் தங்கள் முகங்களில் குறைகளை காண ஆரம்பித்தனர். இதுவரை அவர்கள் கவனத்தில் வந்திருக்கவே செய்யாத குறைகள் எல்லாம் கண்ணில் பட்டன. மரியானா அழகாக இருந்தாலும் முன்வரிசையில் ஒரு பல் இல்லாதது தன்னை அசிங்கமாக காட்டுவதாக நினைத்தாள். பெண்களில் மூத்தவள் தன் மூக்கு அகண்டு சப்பையாக இருப்பதை கண்டறிந்தாள். இரண்டாமவளுக்கோ தன் கன்னங்கள் ஒடுங்கியும் தாடை நீண்டும் இருப்பதாக தோன்றியது. மூன்றாமவளின் முகம் முழுக்க பழுப்புநிற புள்ளிகள் பரவியிருந்தன. ஜான் ஸ்கிபாவுக்கும் கூட கண்ணாடியில் தன்னை பார்த்தபோது திருப்தியில்லை. தடித்த உதடுகளும் முயலைப்போன்று முன்னால் நீட்டிக்கொண்டிருந்த பற்களும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அன்றைய தினம் அந்த வீட்டின் பெண்மணி கண்ணாடியில் ஆழ்ந்துவிட்டதால் இரவுணவு சமைக்கவில்லை, படுக்கையை விரிப்பதோ அல்லது வேறெந்த வீட்டுவேலையும் நடைபெறவில்லை. பெருநகரத்தில் இருக்கும் பல் மருத்துவர்கள் மாற்றுப் பற்களை பொருத்துவது பற்றி மரியானா கேள்விப்பட்டிருக்கிறாள், ஆனால் அதெல்லாம் மிகவும் செலவேறிய விஷயம். பெண்கள் மூவரும் தாங்கள் ஓரளவு அழகாக இருப்பதாக ஒருவரையொருவர் சமாதானம் செய்துகொண்டாலும் அவர்களிடம் முன்பிருந்த இயல்பான மகிழ்ச்சி தற்போது இல்லை. நகரத்துப் பெண்களின் வீண் பெருமிதத்தில் அவர்களும் துயருற்றனர். அகலமான மூக்குடையவள் எந்நேரமும் விரல்களால் மூக்கை அழுத்திப் பிடித்து அதை குறுகலாக்க முயற்சி செய்தாள். தாடை நீண்டிருப்பவளோ முஷ்டியால் அதை மேல்நோக்கி உந்தி சரிசெய்துவிட பார்த்தாள். மூன்றாமவளோ நகரத்தில் கிடைக்கும் முகப்புள்ளிகளை நீக்கும் களிம்பை வாங்குவது பற்றிய சிந்தனையில் இருந்தாள். ஆனால் நகரத்துக்கு பயணம் செய்வதற்கான பணம் எங்கிருந்து வரும்? அதுபோக களிம்பு வாங்கவும் பணம் வேண்டுமே? முதன்முறையாக ஸ்கிபாவின் குடும்பம் தங்கள் வறுமையை உணர்ந்து பணக்காரர்கள் மீது பொறாமை கொண்டனர்.

அந்த வீட்டின் மனித உறுப்பினர்கள் மட்டுமல்ல நாயும் பூனையும்கூட தொடர்ந்து கண்ணாடியால் பாதிக்கப்பட்டன. குடிசை தாழ்வாக இருந்ததால் கண்ணாடி திண்ணைக்கு சற்று மேலே மாட்டப்பட்டிருந்தது. முதன்முறையாக பூனை திண்ணையின்மீது தாவி தன் உருவத்தை பார்த்தவுடன்  அது குழப்பத்தில் செய்வதறியாமல் தடுமாறியது. அம்மாதிரி ஒரு ஜீவராசியை அதுவரை அது பார்த்ததில்லை. கோட்டின் மீசை காற்றில் துழாவியது, தன் பிம்பத்தை பார்த்து மியாவ் சொல்லியபடி பாதத்தை உயர்த்திக் காட்டியது. அந்த மற்றொரு ஜீவனும் மியாவ் சொல்லி பாதத்தை உயர்த்துவது கோட்டுக்குப் பிடிக்கவில்லை. சிறிது நேரத்தில் நாய் திண்ணையின்மீது குதித்தேறி கண்ணாடியை பார்க்க, அங்கு இன்னொரு நாயை கண்டதும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆக்ரோஷமாக அந்த நாயை நோக்கி குரைத்து பற்களை காட்ட மற்றொரு நாயும் அதேமாதிரி செய்தது. இரண்டுக்கும் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் வாழ்வில் முதன்முறையாக பெவனும் கோட்டும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டன. நாய் பூனையின் கழுத்தில் கடிக்க பூனை சீறிக்கொண்டு போய் நாயின் முகத்தில் அறைந்து நகங்களால் பிராண்டியது. இரண்டுக்கும் இரத்தம் கசிந்ததில் அது அவற்றின் விலங்கியல்பை மேலும் உசுப்புவிட, நடந்த சண்டையில் ஒன்றையொன்று கொல்லும் அளவுக்கு போய்விட்டது. வீட்டிலிருப்பவர்கள் அவற்றை ஒருவழியாக விலக்கி காப்பாற்றினர். நாய் பூனையைக் காட்டிலும் வலுமிக்கது என்பதால் அது வெளியே கட்டிப்போடப்பட அது அல்லும்பகலும் ஊளையிட்டபடியே இருந்தது. நாய் பூனை இரண்டுமே தங்கள் வேதனையில் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டன.

கண்ணாடியால் வீட்டில் நடந்துள்ள களேபரத்தை பார்த்ததும் ஜான் ஸ்கிபா கண்ணாடி தன் குடும்பத்திற்கு தேவையில்லாத ஒன்று என முடிவு செய்தான். “நம்மை நாமே ஏன் பார்க்க வேண்டும்?” அவன் சொன்னான், “கண்டு வியப்பதற்கு இந்த வானமும், சூரியனும், நிலவும், நட்சத்திரங்களும், பூமியும் அதிலிருக்கும் காடுகளும், சோலைகளும், நதிகளும், தாவரங்களும் போதாதா என்ன?” கண்ணாடியை சுவரிலிருந்து கழற்றி மரச்சாமான்களுடன் போட்டு வைத்தான். மாதத் தவணை வாங்குவதற்காக வியாபாரி மீண்டும் வந்தபோது ஜான் ஸ்கிபா அவனிடம் கண்ணாடியை கொடுத்து பதிலாக கைக்குட்டைகளும் பெண்களுக்கு செருப்புகளும் வாங்கிக் கொண்டான். கண்ணாடி மறைந்ததும் கோட்டும் பெவனும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின. பழையபடியே நாய் தன்னை ஒரு பூனையேன்றும் பூனை தன்னை நாயென்றும் எண்ணிக் கொண்டன. தங்கள் தோற்றத்தில் உள்ள குறைகளை பெண்கள் உணர்ந்திருந்தாலும் அவர்கள் மூவருக்குமே நல்ல இடத்தில் திருமணம் அமைந்தது. ஜான் ஸ்கிபாவின் வீட்டில் நடந்ததை கேள்விப்பட்ட கிராமத்தின் பாதிரியார் இவ்வாறு சொன்னார், “முகம் பார்க்கும் கண்ணாடி நம் தோலின் நிறத்தை மட்டுமே காட்டும். ஒரு மனிதன் தன்னையும், குடும்பத்தையும், தன் வாழ்வில் சந்திக்க கூடியவர்களையும் மேம்படுத்த எந்த அளவு முயற்சி செய்கிறான் என்பதிலேயே அவனுடைய உண்மையான தோற்றம் உள்ளது. அப்படியான கண்ணாடியே மனிதனின் உள்ளார்ந்த ஆன்மாவை வெளிப்படுத்தக்கூடியது.”

மூலம்: The Cat who thought she was a Dog & The Dog who thought he was a Cat – Stories For Children (Isaac Bashevis Singer: Classic Editions)

****

நான் தொலைந்து போன கதை

புரொஃபசர் சாமுவேலின் சுயசரிதையிலிருந்து ஒரு அத்தியாயம்:

என்னை அடையாளம் காண்பது மிகவும் சுலபம். நீண்ட மேலங்கியை அணிந்து, அளவில் பெரிய ஷுக்களும், அகண்ட விளிம்புகளை கொண்ட பழைய தொப்பியை அணிந்தபடி, மூக்குக் கண்ணாடியில் ஒருபக்க கண்ணாடி இல்லாமல், சூரியன் பிரகாசிக்கும் நேரத்திலும் குடைப்பிடித்தபடி வீதியில் செல்லும் மனிதனை நீங்கள் காண நேர்ந்தால் அது நான் தான், புரொஃபசர் சாமுவேல். என்னை தெளிவாக அடையாளம் காண இன்னும்சில வழிகள் உள்ளன. என் பாக்கெட்டில் எப்போதுமே செய்தித்தாள்கள் வார இதழ்கள் அல்லது வெறுமனே தாள்கள் மடித்து வைக்கப்பட்டு உப்பிக்கொண்டிருக்கும். பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட சிறிய பெட்டியை கையில் சுமந்தபடி முடிவில்லாமல் தவறுகள் செய்தபடி இருப்பேன். நியூ யார்க் நகரில் நாற்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன், எனினும் நகரை நோக்கி செல்ல நினைக்கும் போதெல்லாம் பார்த்தால் எதிர்திசையில் சென்று கொண்டிருப்பேன், கிழக்கே போக வேண்டுமெனில் நான் போகும் திசையோ மேற்காக இருக்கும். எங்கும் தாமதமாக செல்வேன், எவரையும் நினைவிலிருந்து அடையாளம் கண்டதில்லை.

நான் பொருட்களை மறந்து வைத்து விடுவதுண்டு. பேனாவை எங்கே வைத்தேன்? பணத்தை எங்கே வைத்தேன்? கைக்குட்டை எங்கே போனது? என் குறிப்பேடு எங்கே? ஒருநாளில் நூறு கேள்விகள் எழும். மொத்தத்தில் கவனக்குறைவான புரொஃபசர் என்று பெயர் வாங்கியிருந்தேன்.

பல வருடங்களாக நான் ஒரே பல்கலைகழகத்தில் தத்துவபாடம் எடுத்து வந்தாலும் வகுப்பறைகளை கண்டுபிடிப்பது இன்றளவும் சிக்கல்தான். மின்தூக்கிகள் என்னை ஏமாற்றிவிடும், மாடிக்கு போக நினைத்தால் கடைசியில் அடித்தளத்தில் நின்று கொண்டிருப்பேன். மின்தூக்கி கதவுகளோ என் மோசமான எதிரிகள், அவற்றில் மோதிக் கொள்ளாமல் அனேகமாக எனக்கு ஒருநாளும் கடந்ததில்லை.

தொடர்ந்து அபத்தமான தவறுகள் செய்வதோடு எனக்கு மறதியும் அதிகம். காப்பிக்கடைக்குள் நுழைந்தால் கோட்டை மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். கோட் தொலைந்தது தெரியவரும்போது எந்த கடைக்கு சென்றேன் என்பதே மறந்துவிட்டிருக்கும். நான் தொப்பிகள், புத்தகங்கள், குடைகள், ரப்பர் காலணிகள் எல்லாவற்றையும் விட முக்கியமாக சில கைப்பிரதிகளையும் தொலைத்திருக்கிறேன். சிலசமயம் என் சொந்த வீட்டு முகவரியும் மறந்துவிடுவதுண்டு. ஒருநாள் மாலை அவசரமாக வீட்டுக்கு செல்வதற்காக டாக்சியில் ஏறினேன். ஓட்டுநர் “எங்கே போகணும்?” என்றுதும் வீட்டின் முகவரியே நினைவுக்கு வரமால் அடம்பிடித்தது.

“வீட்டுக்கு!” என்றேன்.

“வீடு எங்கே இருக்கிறது?” அவர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“எனக்கு நினைவில்லை”

“உங்கள் பெயரென்ன?”

“புரொஃபசர் சாமுவேல்.”

“புரொஃபசர்,” ஓட்டுநர் ஒரு யோசனை சொன்னார், “நான் உங்களை அருகிலிருக்கும் டெலிபோன் பூத்துக்கு கூட்டிப் போகிறேன். டெலிபோன் புத்தகத்தில் உங்கள் முகவரியை கண்டுபிடித்துவிடலாம்.”

அருகிலிருக்கும் டெலிபோன் பூத்துடன் கூடிய மருந்துகடையில் என்னை இறக்கிவிட்டார். ஆனால் திரும்பிவரும் வரைக்கும் காத்திருக்க முடியாது என அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார். கடைக்குள் நுழையும்போதுதான் கையில் வைத்திருந்த பெட்டியை தவறவிட்டுவிட்டேன் என்பது உறைத்தது. “என் பெட்டி, என் பெட்டி!” டாக்சிக்கு பின்னால் கத்தியபடி ஓடினேன், டாக்சி அதற்குள்ளாக என் குரலுக்கு அப்பால் சென்றுவிட்டிருந்தது.

மருந்துகடையில் இருந்த டெலிபோன் புத்தகத்தில் ‘S’ என்ற அகரவரிசையில் பெயரை தேடினேன், என் சோதனைக் காலம் அதில் எண்ணற்ற சாமுவேல்கள் இருந்தன ஆனால் என்னுடைய எண் மட்டும் இல்லை. அப்போதுதான் நினைவுக்கு வந்தது, என் மனைவி பல மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு பொதுப் பட்டியலில் வராத தனியார் எண்ணை வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார். காரணம் இதுதான், என் மாணவர்கள் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் நடுராத்திரியில் போன்செய்து என் தூக்கத்தை கெடுப்பதுண்டு. அதுபோக அடிக்கடி வேறொரு சாமுவேலுக்கு பதில் தவறுதலாக எனக்கு அழைப்புகள் வரும். அதெல்லாம் சரிதான், தற்போது நான் எப்படித்தான் வீட்டுக்குப் போவது?

வழக்கமாக என் முகவரிக்கு வரும் சில அஞ்சல் கடிதங்களை சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பேன். சரியாக அன்றைக்கெனப் பார்த்து பாக்கெட்டுகளை சுத்தமாக காலி செய்திருந்தேன். அன்றைய தினம் என் பிறந்தநாள், அதற்காக என் மனைவி மாலையில் நண்பர்களை அழைத்திருந்தாள். பெரிய கேக் ஒன்றை தயார்செய்து பிறந்தநாள் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்திருந்தாள். நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக எங்கள் வரவேற்பறையில் காத்திருப்பதை என் மனக்கண்ணால் காண முடிந்தது. நானோ இங்கு மருந்துகடையில் நின்று கொண்டிருக்கிறேன், எங்கு வாழ்ந்தேன் என்பதையே நினைவுகூர இயலாமல்..

அதன்பிறகு டாக்டர் மதர்ஹெட் எனும் நண்பர் ஒருவரின் டெலிபோன் எண் நினைவுக்கு வந்தது. அவரை அழைத்து உதவிகேட்க முடிவு செய்தேன். நான் டயல் செய்ததும் ஓர் இளம்பெண்ணின் குரல் பதில் சொன்னது.

“டாக்டர் மதர்ஹெட் வீட்டில் இருக்கிறாரா?”

“இல்லை”

“அவரது மனைவி இருக்கிறாரா?”

“இருவருமே வெளியே சென்றிருக்கிறார்கள்,”

“அப்படியானால் அவர்களை எங்கு அழைக்க முடியும் என்று சொல்ல முடியுமா?”

“நான் குழந்தைகளை பார்த்துக் கொள்பவள் மட்டும்தான், ஆனால் அவர்கள் 

புரொஃபசர் சாமுவேலின் வீட்டில் ஒரு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏதேனும் செய்தி சொல்ல வேண்டுமா? யார் அழைத்தார்கள் என்று சொல்லட்டும்?”

“புரொஃபசர் சாமுவேல்,”

“அவர்கள் உங்கள் வீட்டுக்குத்தான் ஒருமணிநேரம் முன்பு கிளம்பி சென்றார்கள்.”

“அவர்கள் எங்கு சென்றார்கள் என்று மட்டும் சொல்கிறீர்களா?”

“நான்தான் சொன்னேனே, உங்கள் வீட்டுக்குத்தான்.”

“ஆனால் என் வீடு எங்கிருக்கிறது?”

“சும்மா என்னிடம் விளையாட வேண்டாம்!” சொல்லிவிட்டு அப்பெண் இணைப்பை துண்டித்துவிட்டாள்.

என் நினைவுக்கு வந்த எண்களை கொண்டு மேலும் சில நண்பர்களை அழைத்தேன், ஆனால் நான் எங்கு அழைத்தாலும் கிடைத்த பதில் ஒன்றுதான்: “அவர்கள் புரொஃபசர் சாமுவேல் வீட்டில் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார்கள்.”

நான் வீதியில் செய்வதறியாமல் நின்றுகொண்டிருக்கையில் மழைபெய்ய தொடங்கியது. “என் குடை எங்கே?” பதில் உடனடியாக தெரிந்தது. அதையும் எங்கோ தொலைத்துவிட்டிருக்கிறேன். அருகில் இருந்த நிழற்குடையில் ஒதுங்கினேன். வானம் பொத்துக் கொண்டது போல் கனமழை பெய்யத் தொடங்கியது. இடியும் மின்னலும் சேர்ந்து கொண்டன. பகல் முழுதும் வெயில் சுட்டெரித்து வெக்கையாகத்தான் இருந்தது, ஆனால் குடையை தொலைத்துவிட்டு நானும் தொலைந்துபோய் நிற்பதால் இப்படி புயலடிப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இலை. மழையைப் பார்த்தால் இரவு முழுக்க விடாது எனத் தோன்றியது.

சிந்தனையை திசைமாற்ற நமது தொன்மையான தத்துவ சிக்கலை குறித்து சிந்திக்க துவங்கினேன். ஒரு தாய்கோழி முட்டையிட, அது பொரித்ததும் கோழிக்குஞ்சு வந்துவிடும். எப்போதுமே இப்படித்தான் நடந்து வருகிறது. நான் சிந்தித்தேன், ஒவ்வொரு கோழிக்குஞ்சும் முட்டையிலிருந்து வர ஒவ்வொரு முட்டையும் கோழிக்குஞ்சிலிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் கோழிகுஞ்சு முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? என்றென்றைக்குமான இந்த கேள்வியை எந்த தத்துவவாதியும் தீர்த்து வைக்கவில்லை. என்ன இருந்தாலும் கண்டிப்பாக ஏதேனும் விடையிருக்க வேண்டும். ஒருவேளை இந்த கேள்வியில் முட்டிக்கொள்ள எனக்கு விதிக்கப்பட்டிருக்கலாம்.

மழையின் வலு குறைவதாக தெரியவில்லை. என் பாதங்கள் நனைந்து குளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு தும்மல் போட்டதும் மூக்கை துடைக்க கைக்குட்டையை தேடினால் அதுவும் இருக்கவில்லை.

அந்நேரத்தில் பெரிய கருப்புநிற நாயொன்றை வீதியில் பார்த்தேன். அது மழையில் நின்று தொப்பலாக நனைந்தபடி என்னை சோகமான கண்களுடன் பார்த்தது. என்ன பிரச்சனை என்று எனக்கு உடனடியாக புரிந்துவிட்டது. அதற்கு வழி தெரியவில்லை. அதுவும் தன் முகவரியை மறந்துவிட்டிருந்தது. அந்த கள்ளமற்ற விலங்கின்மீது அன்பு பொங்க, அதை கூப்பிட்டேன். அது ஓடி வந்ததும் அதனிடம் மனிதர்களிடம் பேசுவதுபோலவே பேசினேன். “சகோதரா, நாம் ஒரே படகில் பயணிக்கிறோம். நான் மனித சாமுவேல். நீ நாயினத்தில் ஒரு சாமுவேல். ஒருவேளை இன்று உனக்கு பிறந்தநாளாக இருக்கலாம், உனக்கும் ஒரு பார்ட்டி நடக்கலாம். உன் அன்புக்குரிய உரிமையாளர் ஊர் முழுக்க உன்னை தேடிக்கொண்டிருக்க நீ இங்கு அனாதையாக மழையில் நின்று நடுங்கிக்கொண்டிருக்கிறாய். என்னைப் போலவே நீயும் பசியாக இருப்பாய் என நினைக்கிறேன்.”

நான் அதன் ஈரத்தலையில் தட்ட அது வாலை ஆட்டியது. “எனக்கு என்னவெல்லாம் நடக்கிறதோ அது உனக்கும் நடக்கும்,” அதனிடம் சொன்னேன். “நாம் இருவரும் நம் வீட்டை கண்டடையும்வரை உன்னை கூடவே வைத்திருப்பேன். உன் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீ என்னிடமே இருந்துகொள். இப்போது உன் கையை நீட்டு,” நான் கையை நீட்டியதும் அதுதன் வலக்காலை உயர்த்தியது. அதற்கு எல்லாம் புரிந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு டாக்சி எங்கள் இருவர் மீதும் நீரை வாரி இறைத்தபடி கடந்தது. திடீரென கொஞ்சதூரத்தில் டாக்சி நிற்க யாரோ “சாமுவேல்! சாமுவேல்!” என்று கூப்பிட்டார். திரும்பி பார்க்க டாக்சியின் கதவு திறந்ததும் என் நண்பரின் தலை தெரிந்தது. அவர் என்னை அருகில் அழைத்து கேட்டார் , “சாமுவேல், நீ இங்கே என்ன செய்கிறாய்? யாருக்காக காத்திருக்கிறாய்?”

“நீங்கள் எங்கே போகிறீர்கள்?” நான் கேட்டேன்.

“உன் வீட்டுக்குத்தான். தாமதாகிவிட்டது என்பது உண்மைதான், வேறொரு இடத்தில் சிக்கிக்கொண்டேன். வராமல் இருப்பதைவிட தாமதமாக வருவது பரவாயில்லை அல்லவா. ஆனால் நீ வீட்டில் இல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்? அதுபோக இந்த நாய் யாருடையது?”

“கடவுள்தான் உங்களை அனுப்பியிருக்க வேண்டும்!” நான் ஆச்சர்யத்தில் கத்தினேன். “இன்றைக்கு மிகவும் சோதனையான நாள்! நான் என் முகவரியை மறந்துவிட்டேன், பெட்டி டாக்சியுடன் போய்விட்டது, குடையையும் எங்கோ தொலைத்துவிட்டேன், காலணிகள் எங்கு போனது என்பதே தெரியவில்லை.”

என் நண்பர் சொன்னார், “உன்னைப் போலொரு புரொஃபசரை எங்குமே பார்த்ததேயில்லை. சரி வா வீட்டுக்குப் போகலாம்”

வீட்டுமணியை அடித்தேன். மனைவி கதவை திறந்து என்னைப் பார்த்ததும் கத்திவிட்டாள். “சாமுவேல்! எல்லோரும் உனக்காகத்தான் காத்திருக்கிறார்கள். நீ எங்கு சென்றாய்? உன் பெட்டி எங்கே? குடை, காலணிகள் எங்கு எதையுமே காணோம்? இந்த நாய் எங்கிருந்து வந்தது?”

நண்பர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். “நீ எங்கு சென்றிருந்தாய்? நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். உனக்கு ஏதோ நடந்துவிட்டது என்றே நினைத்தோம்!”

“யாருடைய நாய் இது?” என் மனைவி கேட்டுக்கொண்டே இருந்தாள்.

நான் சமாளிக்க இயலாமல் இறுதியில் சொல்லிவிட்டேன், “தெரியவில்லை. வீதியில் இதை கண்டெடுத்தேன். இப்போதைக்கு இதை பவ் வவ் என்று கூப்பிடலாம்.”

“பவ் வவ், பெயர் ஒன்றுதான் குறைச்சல்!” மனைவி திட்டினாள். “நம் பூனைக்கு நாய்களை பிடிக்காது என்பது தெரியும். அதுபோக கிளிகள் வேறு. அவை பயத்திலேயே செத்துவிடும்.”

“இது அமைதியான நாய்” நான் சொன்னேன். “இவன் பூனையுடன் நட்பு கொள்வான். கண்டிப்பாக கிளிகளை பயமுறுத்தவும் மாட்டான். மழையில் நடுங்கியபடி நின்ற இவனை என்னால் விட்டுவர முடியவில்லை. இவனொரு நல்ல ஆன்மா.” 

நான் இதைச் சொன்னதும் அங்கிருந்த அனைவரும் உடல் நடுங்கும்படி  நாய் ஊளையிட்டது. பூனை உள்ளறைக்குள் ஓடிவிட்டது. அது மீண்டும் நாயை கண்டபோது முதுகை வில்போல வளைத்து தாக்குதலுக்கு தயாராக நின்றது. கூண்டுக்குள் இருந்த கிளிகள் சிறகை அடித்தபடி சுற்றிவந்து கிறீச்சிட்டன. எல்லாரும் ஒரே சமயத்தில் பேச ஆரம்பித்தனர். ஒரே கூச்சல் குழப்பம்.

இவையெல்லாம் எப்படி முடிந்தது எனத் தெரிய வேண்டுமா?

பவ் வவ் இன்னமும் எங்களுடன் தான் இருக்கிறது. அதுவும் பூனையும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். குதிரையின் முதுகில் சவாரி செய்வதைப்போல கிளிகள் அதன் முதுகில் சவாரிசெய்ய கற்றுக்கொண்டன. என் மனைவியை பொறுத்தமட்டில் என்னைவிட பவ் வவ்வை அதிகம் நேசிப்பது அவள்தான். நாயுடன் நான் வெளியே போகும்போதெல்லாம் சொல்வாள், “முகவரியை மறந்துவிடாதீர்கள், இருவருமே.”

என் பெட்டியோ, குடையோ அல்லது காலணிகளோ அதன்பிறகு கிடைக்கவில்லை. எனக்கு முன்பிருந்த பல தத்துவவாதிகள் செய்ததைப் போலவே நானும் கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்ற புதிரை அவிழ்ப்பதை கைவிட்டுவிட்டேன். அதற்கு பதிலாக சாமுவேலின் நினைவு குறிப்புகள் எனும் புத்தகத்தை எழுத துவங்கியிருக்கிறேன். நான் ஒரு டாக்சியிலோ, உணவு விடுதியிலோ அல்லது ஒரு பூங்காவின் இருக்கையிலோ அதை தொலைக்காமல் இருக்கும்பட்சத்தில் நீங்கள் என்றேனும் ஒருநாள் அதை வாசிக்கலாம். அதுவரை இதோ மாதிரிக்காக ஒரு அத்தியாயம்.

மூலம்: The Day I Got Lost – Stories For Children (Isaac Bashevis Singer: Classic Editions)

குழந்தைக் கதைகள் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

டி.ஏ. பாரி

டி.ஏ. பாரி, அவ்வப்போது சில ஆங்கில சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார். பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர் ஈரோட்டில் வசிக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.