காதலும் ஏனைய பூதங்களும் : குணா கந்தசாமி 

ண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பூத்திருப்பதைக் கண்டு பச்சை வயல் மனது என்ற வாக்கியம் ஜெயந்தியின் மனதில் தோன்றியது. அப்படியான தலைப்பில் ஒரு நாவலை முன்னர் நூலகத்தில் பார்த்திருக்கிறாள். படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தது எப்படியோ தவறிவிட்டது. இப்போது கண்ணுக்கு முன்னிருக்கும் பச்சை அந்த வாக்கியத்தை திரும்பவும் ஞாபகப்படுத்தியிருக்கிறது. மூன்று வருஷங்களாக மழை தவறாமல் பொழிகிறது. காலம் செழித்து நிலமெங்கும் பச்சை பிடித்துவிட்டது. தோட்டத்திற்கு தோட்டம் நெல் வைக்குமளவு பச்சை. கடைசியாய் நெல் வைத்தபோது அவளுக்கு பத்து வயதிருக்கும். இப்போதுதான் திரும்பவும் வாய்த்திருக்கிறது.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேலை ஓயாமல் கிடக்கிறது. கிழக்கு வெளுக்கும்போதே தோட்டத்திற்குப் போய்விடுகிறார்கள். சமயங்களில் கோழி கூப்பிடும் நேரத்திலேயே கிளம்பிவிடுவார்கள். வேலை மிகுந்த நாட்களில் சாளையிலேயே இரவு தங்கியும் விடுகிறார்கள். சமையல், மளிகைக்கடைக்குச் செல்வது என மேல்வேலைகளோடு தோட்டத்து வேலைகளுக்கும் ஜெயந்தி தயங்குவதில்லை. தம்பி கல்லூரிக்குப் போகிறான். காலையில் அவனை அனுப்பிவிட்டு மூவருக்குமான இருவேளைச் சாப்பாடு எடுத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினால், தோட்டத்திலிருந்து திரும்புவதற்குச் சாயங்காலமாகிறது. அவளது மாநிறப் பொலிவின் மீது அன்றாட வெயில் சற்றே வாட்டத்தைப் பூசியிருக்கிறது.

பொடுசுகள் எல்லோரும் செல்போனை வைத்துக்கொண்டு வெயில்படாமல் இருக்கும் காலத்தில் பட்டதாரியான மகள் தயக்கமின்றி தோட்டத்துக்குள் புழங்குவதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெருமை. ஜெயந்தியின் சுறுசுறுப்பை பிறத்தியார் பாராட்டும்போது அம்மாவின் மனசு பூரித்துவிடும். தவிர, சும்மா இருப்பது என்பது ஜெயந்தியின் இயல்பிலேயே இல்லை. எதுவும் தானாய் வரும் என்று காத்திருப்பதைவிட இறங்கிக் காரியம் பார்க்கவேண்டும். நடவு, களையெடுப்பு, அறுவடைக் கூலி என்று முட்டுவழிச் செலவுக்கு காசு தண்ணீராய்ச் செலவழிகிறது. ஒரு சொந்த ஆள் கூடுதலாய்க் கையாற்றுவது தேவையாகவும் இருக்கிறது. அந்தக் காலத்தில் குடும்பத்திற்குக் குடும்பம் ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றுக்கொண்டதன் காரணம் புரிந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலையடித்த பச்சையை திரும்பவும் பார்த்தாள். வெளியில் இருக்கும் பசுமையின் குளுமை மனதுக்குள்ளும் பரவிக்கிடக்கிறது. புற்கள், பூக்கள், மரங்கள், வயலில் இறங்கும் வெண்கொக்குகள், வலசை போகும் பறவைகள், தென்னந்தோப்பில் இடையறாது ஒலிக்கும் கிளிகளின் ஆலோலம் எனக் காண்பதும் கேட்பதும் மனதுக்குள் கூடிக்கிடக்கும் ரம்மியத்துக்கு அடர்த்தியூட்டுகின்றன. அந்த ரம்மியத்தின் மையத்தில் மகேஷின் முகம் சுடர்கிறது. அவனுடைய நினைப்பு எழும்போதெல்லாம் உடலே நாவாக மாறித் தித்திக்கிறது.

மளிகைப்பொருட்கள் வாங்கப் பிரிவுக்குச் செல்லும்போதுதான் அவனை நேரில் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அடிக்கடி அவனுடைய தையல் கடைக்குப் போனால் தேவையற்ற சந்தேகங்கள் வரும் என்பதால் நேரில் பார்க்கும்போது பார்வையின் பரிபாஷை அதிகமாகவும் பேச்சு குறைவாகவும் இருக்கும். ஆனால் எந்நேரமும் அவனுடன் உடனிருக்க வேண்டும் என்ற இனிய தவிப்பு மனதுக்குள்ளும் உடலுக்குள்ளும் நர்த்தனமிடுகிறது. இடையிடையே சட்டென்று மற்றவர்களின் கண்படாத மறைவுக்கு நகர்ந்து செல்போனில் அர்த்தமற்ற காணொளிச் சிறுபேச்சுக்கள். இனிய உளறல்கள்.  மணிக்கொருமுறை குரலைக் கேட்கவேண்டும். இடைவெளிகளில் எதுவும் புதிதாக மாறியிருக்காவிட்டாலும் மனசு தினுசு தினுசாய் பூசிக்கொள்ளும் வண்ணத்தைப் பரஸ்பரம் காட்டிக்கொள்ளவேண்டும். குரலினால் அணைத்துக்கொள்ளவேண்டும். அவனுடைய குரல்பதிவுகளின் பின்னணியில் ஒலிக்கும் காதல் பாடல்களின் சிறுதுணுக்குகள் மனதுக்குள் எதையெதையோ கிளர்த்திவிடுகின்றன. அம்மாவும் அப்பாவும் சாளையில் தங்கிவிடும் இரவுகளில் நெடுநேரம் அவனோடு பேசும்போது கிறக்கம் கூடிவிடுகிறது.

காதல் என்கிற விஷயம் மற்றவர்களின் வாழ்க்கைகளில் மட்டும் சாத்தியமாகிற விஷயம் என்றுதான் நினைத்திருந்தாள். தான் காதல்வயப்படுவோம், அதிலும் மகேஷ் இந்த மாயத்தைத் தனக்குள் நிகழ்த்துவான் என்பதெல்லாம் முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள். ஊருக்குள் பல காதல் கதைகளை அறிந்திருக்கிறாள். அவ்வளவு ஏன், போன தலைமுறையில் சொந்த வீட்டிலேயே நடந்திருக்கிறது. மூன்று நாட்கள் தன் அக்காவை வீட்டுக்குள் அடைத்துவைத்து புளியமிலாறால் அடித்தே காதலைக் கடக்கவைத்த அப்பாவின் இன்னொரு முகம் அரசல் புரசலாய் ஜெயந்திக்குத் தெரியும். அந்த வெறுப்பு அத்தைக்கு இன்னும் தீரவில்லை. அப்பாவுக்கும் ஊர்வாய்க்கும் பயந்து தன் காதலை அவ்வளவு ரகசியமாய் வைத்திருக்கிறாள்.

அவர்களுடைய காதலை அறிந்த மூன்றாவது மனிதன் இருவருக்குமான பரஸ்பரத் தோழன் கணேஷ் மட்டுமே. ஜெயந்தியின் வளவுக்காரரும் தோட்டத்தின் இணைப்பங்குக்காரருமான ராஜாமணி மாமனின் மகன். நினைவறிந்த நாளிலிருந்து அவளுடைய விளையாட்டுத் தோழன். எல்லாவற்றையும்விட அவளுடய உயிரைக் காப்பாற்றியவன். அது அவள் வயசுக்கு வருவதற்கு முந்தின வருஷம். வெயில் பளீரிடும் முற்பகலில் பாம்பேறியற்ற கிணற்றுமேட்டில் பூத்துக்கிடந்த செடிகளில் கனகாம்பரம் பறித்துபோது கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள். அவளை தூரத்திலிருந்து கவனித்தவாறே தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த கணேஷ் ஏதேச்சையாக நிமிர்ந்த கணமும் அவள் உள்ளே விழுந்த கணமும் ஒன்றாக இருந்தது. சிறிதும் சேறில்லாத கருங்கல் கிணற்றினுள் வெயிலினால் ஒளிர்ந்த நீருக்குள் அவளுடைய கண்களிலும் உடலிலும் பரவியிருந்த நடுக்கத்தை உணர்ந்தவாறே மேலே இழுத்துவந்து படியோரத்தில் அமரவைத்தான். அழுவதிற்குகூட இயலாத அளவிற்கு அச்சம் அவளைப் பீடித்திருக்க மலங்க மலங்க விழித்திருந்தவளை சுயநினைவுக்குக் கொண்டுவர நெடுநேரமாயிற்று.

“உன்ற உயிரக் காப்பத்துனதே நாந்தான் அம்மிணி. எங்கிட்டேயே லொள்ளு பேசறியா?” சம்பவத்தின் அதிர்ச்சி முழுமையாக மறைந்த சில வருஷங்களுக்குப் பிறகு இருவருக்கும் ஏதேனும் விவாதமோ வாக்குவாதமோ வந்துவிட்டால் அவளைப் பணியவைக்கும் முனைப்போடு தன் கடைசி அஸ்திரத்தை வீசுவான்.

“சும்மா பீத்திக்காதே. எனக்கே நீச்சல் தெரியும். நீ வரலீனாலும் ஒண்ணும் ஆயிருக்காது, நானே ஏறி வந்துருப்பேன்”

“ஆமாமா… ஒண்ணும் ஆயிருக்காது, ஊருக்கே உப்புமா போட்ருப்பா இவ” கிண்டலாகச் சொல்லுவான்.

“செரி செரி. என்னக் காப்பத்துன சாமி நீதான்”  கடைசியில் பணிந்து நாடகீயத் தோரணையில் சொல்லிவிட்டுப் புன்சிரிப்பாள்.

“இருக்கட்டும் இருக்கட்டும், மத்தவங்களுக்குக் கஷ்டம்னா நம்ம மனசு தாங்காது”

அமர்த்தலாய் சொல்லிவிட்டு அரும்பு மீசையைப் பாவனையாய் முறுக்கிக்கொண்டு போவான் கணேஷ். அவனும் மகேஷும் நண்பர்கள். மகேஷ் பக்கத்து ஊர்க்காரன். இரண்டு ஊர்களுக்கும் பொதுவான பிரிவு. மேல்நிலைப்பள்ளிவரை மூவரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். ஜெயந்தி கல்லூரிக்குப் போனாள். படிப்பில் ஆர்வப்படாமல் கணேஷ் விவசாயத்தில் இறங்கிவிட மேலே படிப்பதற்கு வசதியற்று பிரிவில் தையல்கடை வைத்திருந்த பத்மக்காவிடம் தொழில் கற்றுக்கொள்ளச் சேர்ந்தான் மகேஷ். பத்மக்கா கல்யாணம் ஆகிப் போனபோது கடையையும் வாடிக்கையாளர்களையும் மகேஷுக்குக் கைமாற்றிக் கொடுத்துவிட்டாள்.

“என்னவிட மாமனப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும். கெளரவம் பாக்கறவரு. செட் ஆகுமான்னு பாத்துக்க. நாளைக்கு அவரு ஒத்துக்குவாருங்கறது சிரமந்தான். இதையேதான் அவங்கிட்டயும் சொல்லிருக்கிறேன். ஆசைக்குப் பழகிட்டு நாளைக்கு உக்காந்து ரெண்டுபேரும் கூகூன்னு அழுதுக்கிட்டு இருக்காதீங்க. எதுத்து நிக்கற தைரியம் கடைசி வரைக்கும் இருக்கோணும்”

இருவரின் மனப்போக்கையும் அறிந்தகொண்டவுடன் கடும் நடைமுறைவாதியான கணேஷின் ஆலோசனை அப்படித்தான் இருந்தது. கல்யாணத்திற்கு நிற்கும் மகேஷின் அக்கா பின்னலாடை ஆலைக்கு வேலைக்குப் போகிறாள். இரண்டு ஏக்கர் காட்டையும் பத்து வெள்ளாடுகளையும் வைத்திருக்கிறார் மகேஷின் தந்தை. கெளரவம் பார்க்கும் ஜெயந்தி அப்பாவின் குணத்தை அனுசரித்தே சொன்னான். ஆனால் ஜெயந்தி எரிச்சலானாள். என்ன இது, முறுக்கு மிகுந்த இளைஞனான இவன் கிழவனைப்போல் பேசுகிறான்?

“நாளைக்கு பிரச்சனை ஆச்சுன்னா நீ எங்ககூட நிப்பியா?” வெடுக்கென்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் போய்விட்டான் கணேஷ். காற்றில் கலந்த வாசனையைப்போல காதல் மனசுக்குள் கலந்துவிட்டபின் அதைப் பிரிப்பதற்கு வழியேது? அந்தப் பிரியம் எந்தப் புள்ளியில் தோன்றியது என்று அறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. படிக்கிற காலத்தில் சாதாரணமாகத்தான் பேசிப் பழகினார்கள். விகல்பம் இருந்ததில்லை. பத்மக்காவிடம் தைக்கக் கொடுக்கப்போகும்போது வரவேற்புக்கு புன்னகை செய்துவிட்டு துணிகளை வெட்டவோ தைக்கவோ தொடங்கிவிடுவான். பள்ளிக்காலத்திலிருந்து பல வருஷங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அவன் அவளிடம் பேசிய வார்த்தைகளை ஒரு பக்கத்திற்குள் அடக்கிவிடலாம். தேவையற்ற ஒரு சொல்கூட வெளியே விழாது. பத்மக்காவோ அவ்வளவு சீக்கிரத்தில் கிளம்ப விடமாட்டாள். ஊர்க்கதையும் உலகக்கதையும் பேசவேண்டும். துணியிலும் தையலிலும் வந்திருக்கும் புதிய விஷயங்களைச் சொல்லவேண்டும்.

தொடக்கத் தருணங்களில் காதலை விதைக்குமளவிற்குப் பெரிதாய் சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. வெறுமனே பார்வைகள்தான். கடையை மகேஷ் நடத்தத்தொடங்கிய காலத்தில்தான் தனியாகப் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இடி இடித்து மின்னல் மின்னுவதுபோல் ஆரவாரமாய் இல்லாமல் வழக்கமாய் பார்வைவிழும் இடத்தில் நேற்றில்லாமல் இன்றொரு செடி முளைத்திருப்பது போலத்தான் அந்தக் காதல் தோன்றியது.

அவளுக்காக அவன் தைக்கும் ஆடைகள் அவ்வளவு திருத்தமாக இருக்கும். தொட்டு அளவெடுக்கமாட்டான். அளவு துணிகள் வாங்குவதோடு சரி. ஆடையில் நூலளவும் பிசகு இருக்காது. ஒவ்வொருவரின் உடல்வாகுக்கும் நிறத்துக்கும் பொருத்தமான உடைகளையும் வண்ணங்களையும் பரிந்துரைப்பதில் மகேஷுக்கு கூடுதலான  நுட்பம் இருந்தது. எப்போதும் பேண்ட் சட்டைதான் அணிவான். எளிய தரமுடையவை என்றாலும் அதில் ரசனை தெரியும். தலை கலைந்திருக்காது. கடையில் எப்போதும் எண்பதுகளின் காதல் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்.

வெளிப்படையான சொற்களாக எதுவும் பரிமாறிக்கொள்ளாமல் பார்வைகளின் வழியாகவும் சமிக்ஞைகளின் வழியாகவுமே காதல் கனிந்துவிட்டது. ஜெயந்திதான் முதலில் வெளிப்படுத்தினாள். ஆரம்பத்தில் புரியாதவன் போல் நடித்தான். பிரிவுக்குச் செல்லும்போதெல்லாம் பல நாட்களுக்கு அவனிருக்கும் திசையையே எட்டிப்பார்க்காமல் ஊடலை வெளிப்படுத்தினாள். கோபமா என்று கேட்டு அவன் குறுஞ்செய்தி அனுப்பவும் ஜெயந்தியின் பாவனைக் கோபம் ஏறுவெயிலில் உலரும் பனியைப்போல மறைந்துவிட்டது.

வேலை அதிகமிருந்தால் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு திரும்பிவந்து இரவு நெடுநேரம்வரை தைத்துவிட்டுக் கடையிலேயே படுத்துக்கொள்வான். உள்பக்கம் பூட்டப்பட்ட ஷட்டரின் வழியே அவ்வப்போது சாலைகளில் செல்லும் லாரிகளின் ஓசை கேட்கும். சிலநாட்கள் பேசிக்கொண்டிருப்பாள். அரிதாக எப்போதேனும் மாலைகளில் வேலைகளை முடித்துவிட்டு ஏழரை மணிக்குமேல் கணேஷ் வந்து கொஞ்சநேரம் பேசிவிட்டுப் போவான். ஏதாவது காரியமாக வெளியே போகும்போது பிரிவைக் கடந்துதான் செல்லவேண்டும் என்பதால் நாளுக்கு ஓரிருமுறையாவது அவனைச் சந்திக்க நேரிடும். பேசுவதற்கு நேரமில்லாவிட்டாலும் வண்டியை அணைக்காமல் என்ன காரியம் என்பதையாவது சொல்லிவிட்டுத்தான் நகர்வான்.

மகேஷிற்குக் குழப்பம் பெருகிவிட்டது. இரவுகளில் உறக்கம் வர மறுக்கிறது. சதா யோசனைகள். ஜெயந்தி கல்யாணத்திற்கு வற்புறுத்தத் தொடங்கிவிட்டாள். வீட்டில் திருமணப் பொருத்தத்திற்காக ஜாதகத்தை வெளியே கொடுக்கத் தொடங்கிவிட்டதாக சில நாட்களாகச் சொல்கிறாள். அது உண்மைதான் என்று மகேஷுக்கும் தெரியும். தன்னுடைய அப்பா நிச்சயம் அவர்களுடைய காதலுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால் எங்கேயாவது கோவிலில் வைத்து தாலிகட்டச் சொல்லி நெருக்குகிறாள்.

அவளுடைய யோசனை சரியானதாகத் தெரிந்தாலும் அக்கா கல்யாணத்திற்கு நிற்கிறாள். அவளை வீட்டில் வைத்துக்கொண்டு தான் இந்தக் காரியத்தைச் செய்தால் வாழ்நாள் பழிக்கு ஆளாக நேரிடுமோ என்று தயக்கமாக இருந்தது. திருமணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு தட்டுப்பாடு என்றாலும் எதனாலோ உறுதியாவது அக்காவுக்குத் தட்டிப்போகிறது. ஜெயந்தியிடம் ஆறுமாதம் காத்திருக்கச்சொல்கிறான். அதற்குள் அக்காவின் திருமணம் கைகூடிவிடும் என்று நம்பினான்.

பல வருஷங்களாகப் பார்த்தவள் என்றாலும் காதல் போன்ற விஷயங்களெல்லாம் தனக்கு ஒத்துவராது என்று ஆரம்பத்தில் தயங்கினான். ஜெயந்திதான் விடாமல் அழுத்தம் கொடுத்துப் பணிய வைத்தாள். தோற்றத்தில் சொழுசொழுப்போடும் கண்களில் சுறுசுறுப்போடும் இருந்தவளை நிராகரிக்க முடியவில்லை. அவனுடைய காலத்திற்குக் அவள் இனிமையைக் கொடுக்கிறாள். சதாநேரமும் கேட்கும் காதல் பாடல்கள் உள்ளே கள்வெறியை ஊட்டுகின்றன. அந்தப் பாடல்களின் நாயகியாக ஜெயந்தியே இருக்கிறாள்.

அவளுடைய அப்பாவோடும் பழக்கமுண்டு. ஒளிரும் சலவை வெள்ளையில் ஆஜானுபகுவான தோற்றத்தோடும் நரைக்காத முடியோடும் புல்லட்டில் போவார். தலைக்கு சாயம் அடிக்கிறார் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் உண்மையிலேயே முடி இன்னும் நரைக்கவில்லையென்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவனிடம்தான் துணி தைப்பார். பெரும்பாலும் பொங்கல் சமயத்தில் காதிபவனில் உயர்தரமான கதரில் ஏழெட்டு ஜதை வேட்டியும் சட்டைத்துணியும் எடுப்பார். சாதாரண சமயங்களில் உடையாய்ப் போடுவதற்கு சில சட்டைத்துணிகளும் எடுத்துவந்து அளவு கொடுத்துவிட்டுப் போவார். புதுலுங்கிகளை மூட்டுவதற்கும் அவனிடம்தான் வருவார். கச்சிதமாக செய்து தருவான். கடும் உழைப்பாளி என்றாலும் கெளரவம் பார்க்கும் முரட்டு ஆசாமி என்று கணேஷ் சொல்லியிருக்கிறான். ஆனால் மகேஷிடம் பேசும்போது சாதாரணமாகத்தான் இருப்பார்.

”இவ்வளவு நல்லா தைக்கறே மாப்ள, திருப்பூரு பக்கம் போனா இன்னும் பெருசா செய்யலாமுல்ல?”

ஒருமுறை அவர் கேட்டபோது அப்படியான யோசனையை நினைத்துக்கூடப் பார்த்திராதவன் பிற்காலத்தில் திட்டம் இருப்பதாகச் சொல்லிவைத்தான். பேச்சுமுறைக்கு மாப்பிள்ளைதான். ஆனால் மகளைக் கேட்டால் செருப்படிதான் கிடைக்கும். பக்கம்பாட்டில் அவருக்குச் செல்வாக்கும் அதிகம். இந்தக் காதலைப் பொறுத்தவரை தன் வீட்டில் பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் ஜெயந்தியின் அப்பாவிடம் சென்று பெண்கேட்கும் காட்சியை கற்பனை செய்துபார்த்தால் அடிவயிற்றில் அவஸ்தை எழுந்துவிடுகிறது. அவள் வற்புறுத்துவதுபோல் கோவிலில் வைத்து தாலி கட்டிவிடலாம். ஆனால் அதற்குப் பிறகான சிக்கல்களையும் சூழ்நிலைகளையும் சந்திக்கவேண்டும். யாருக்குத் தெரியும், எங்கேனும் அவன் உடல் வெட்டுப்பட்டுக் கிடக்கக்கூட நேரிடலாம்.

தான் அவ்வளவு கோழையா என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம். கவிதையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் கடுகையும் மாமலையாக மாற்றியிருக்கிறது. கையில் தொழில் இருக்கிறதுதான். எங்கு போனாலும்  நன்றாகச் சம்பாதிக்கமுடியும். அப்பாவும் அம்மாவும் வெள்ளாடு மேய்த்துப் பிழைத்துகொள்வார்கள். ஆனால் அக்கா? பாவம் அவள். அவன் மீது எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாள். தன் கஷ்டத்தைக்கூட வெளியே சொல்லத் தெரியாத வெள்ளந்தியான அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு வழி அமைக்காமல் தன் சுயநலத்தை மட்டும் யோசிப்பது குற்றவுணர்வைக் கொடுத்தது. ஆனால் மறுபுறம் ஜெயந்தி விடாமல் கொத்துகிறாள்.

கணேஷிடம் இதுகுறித்து தெளிவாகப் பேசவேண்டும் என்று நினைத்தான். கிருத்திகைக்குப் பழனிக்குப் போய்விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கிய கணேஷ் வண்டியை எடுக்கவந்தபோது வழக்கம்போல் பிரசாதத்தைக் கொடுத்தான். கிருத்திகைக்கு கிருத்திகை விரதம் இருந்து பழனிக்குப் போய்வருவது அவனுடைய வழக்கம். கடையில் யாருமில்லை. இந்த விவகாரத்தை கலந்துகொள்ள நினைத்தபோது அவனுடைய முகத்திலிருந்த பசிக்களைப்பைக் கண்டு எதுவும் சொல்லவில்லை. முக்கியமான விஷயம் பேசுவதற்காக இரவு கூப்பிடுவதாக மட்டும் சொன்னான்.

அவன் சென்றபின் கடையில் உட்கார மனமில்லாமல் பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். தனிமை மனதுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. என்ன செய்வதென்று அடுக்கடுக்கான யோசனைகள். அக்காவுக்குத் திருமணம் ஆகும்வரை ஜெயந்தியைக் காத்திருக்கச் சொல்வது, இல்லையென்றால் விதிப்படி ஆகட்டுமென்று விட்டுவிடுவது என்றொரு கணமும் ஜெயந்தியை இழந்துவிட்டால் தன் வாழ்க்கையில் வெளிச்சமிருக்காது என்று மறுகணமும் மாறிமாறி மனம் ஊசலாடியது. அவள் நினைத்தால் இன்னும் ஆறுமாதம் தாக்குப்பிடித்துவிடமுடியும். கணேஷிடம் சொல்லி எப்படியேனும் ஜெயந்தியை ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும்.

சாயங்காலம் அக்கா வந்தபோது வழக்கமற்ற தருணத்தில் வீட்டில் அவனுடைய இருப்பைக் கண்டுவிட்டு ஆச்சரியமாகக் கேட்டாள். தலைவலியினால் கடையைப் பூட்டிவிட்டதாகச் சொன்னான். அவன் கேட்காமலேயே அக்கா போட்டுவந்து கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டிருக்கையில் ஜெயந்தியிடமிருந்து அழைப்பு வந்தது. ஒலியை அமர்த்திவிட்டு அழைப்பை எடுக்காமல் திரையில் ஒளிர்ந்த அவளுடைய பெயரையே திரை அணையும்வரை பார்த்துக்கொண்டிருந்தான்.

மூன்றாம் பிறை நாள். வேலியடியில் மின்மினிகள் கொத்துக் கொத்தாக மின்னின. மேகாற்றில் குளிர்ச்சி விரவியிருந்தது. வண்டியை இட்டேறியின் உள்பக்க மறைப்பில் நிறுத்திவிட்டு உள்ளடங்கிய வேப்பமரத்தின் இருளில் ஜெயந்தியும், கணேஷும் மகேஷின் அழைப்புக்குக்காக காத்திருந்தார்கள். கண்கள் இருட்டுக்குப் பழகிவிட்டன. மணி பின்னிரவு இரண்டரை ஆகிவிட்டிருந்தது. ஒன்றரை மணிக்கு அரவத்தைப்போல் ஓசையின்றி வீட்டிலிருந்து நழுவியிருந்தாள். அன்றைய ராத்திரி அப்பாவும் அம்மாவும் தோட்டத்துச் சாளையிலேயே தங்கிவிட்டிருந்தார்கள். கிளம்புவதற்கு முன் எட்டிப்பார்த்தபோது தம்பி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். நாய்களின் கண்களுக்குப் படாமல் ஊரின் தென்மேற்கு இட்டேறிக்கு வந்துவிட்டது அவளுடைய அதிர்ஷடம்தான்.

இட்டேறியின் மறைவில் கணேஷ் ஏற்கெனவே பைக்கோடு காத்திருந்தான். அவனிடமிருந்த இரண்டு பைகளில் ஒன்றை அவள் கையில் வாங்கிக்கொள்ள இன்னொன்றை பெட்ரோல் டேங்கின்மேல் வாகாகப் பொருத்திவைத்தான். அதில்தான் திருமாங்கல்யமும் முகூர்த்தத்திற்கான வேட்டி சேலைகளும் அவளுடைய சிலநகைகளும் இருக்கின்றன. முழுக்க கொறங்காடுகள் வரும்வரை வண்டியை உருட்டிவந்து பிறகு விளக்கைப் போடாமல் பின்னும் ஒரு கிலோமீட்டர் தெற்கே வந்தார்கள். இந்த இட்டேறியெல்லாம் அவனுக்கு உள்ளங்கை ரேகைபோல என்பதால் கணேஷ் இருட்டுக்குள் எந்தச் சிரமமுமின்றி வண்டியோட்டினான்.

கிழக்கே திரும்பும் முக்கிலிருந்த கணேஷின் கொறங்காட்டுக்குள்தான் மகேஷின் அழைப்புக்குக் காத்திருக்கிறார்கள். இன்னும் ஒருகிலோமீட்டர் கிழக்கே போனால் இட்டேறி மெயின் ரோட்டில் சேருகிறது. அந்த முக்குக்கு வந்தவுடன் மகேஷ் இவர்களுக்குக் கூப்பிடவேண்டும். பிறகு இருவருமாய் பைக்கில் தாராபுரம் போய் அங்கிருந்து மதுரைக்குப் பேருந்தில் சென்றுவிடுவதாக ஏற்பாடு. வீட்டை எதிர்த்து காதல்மணம் செய்துகொண்ட ஜெயந்தியின் கல்லூரித் தோழியொருத்தி மதுரையில் இருக்கிறாள். அவளும் அவளுடைய கணவனும் அவர்களைத் தைரியமாக கிளம்பி வரச்சொல்லியிருந்தார்கள். மதுரையிலிருந்து நால்வருமாகக் கிளம்பிப்போய் திருச்செந்தூரில் திருமணம். இதுதான் திட்டம்.

திட்டம் உருவாகத் தொடங்கிய நாட்களிலேயே தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும், ஆனால் கூடவரமுடியாது என்பதையும் கணேஷ் சொல்லிவிட்டான். அவர்களுடைய காதலுக்கும் கல்யாணத்திற்கும் அவனுடைய ஆதரவு முழுக்க இருந்திருக்கும் என்று ஊராருக்கு சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியாவிட்டாலும், ஊரிலிருப்பது குறைந்தபட்சம் அதை மறுப்பதற்கான பிடியைக் கொடுக்கும் என்று நினைத்தான். மகேசுக்கு பல விஷயங்களில் தடுமாற்றமாக இருந்தது. மங்கிலியம், துணிமணிகள், புது சிம்கார்டு எடுத்ததெல்லாம்கூட கணேஷ்தான்.

“இன்னொருக்கா கூப்ட்டுப் பாரு, லேட்டாச்சு, இன்னும் என்ன பண்றான்?” பதட்டமான குரலில் முணுமுணுத்தாள். இந்த இரவில் இப்படியொரு சூழ்நிலையில் உட்கார்ந்திருப்பது அவஸ்தையூட்டியது. ஊரின் வாசனையிலிருந்து முழுக்க நீங்கினால்தான் உள்ளிருக்கும் பதட்டம் தணியும்.

“ரிங் போகுது, வந்துட்டு இருப்பான்னு நெனைக்கிறேன். பொறுமையா இரு, இன்னும் டைம் இருக்குது”

பெருமூச்செறிந்தவளுக்கு சிறுநீர் முட்டியது. எழுந்து சற்று தூரத்திலிருந்த வேலாம்புதர் மறைவை நோக்கி நடக்கையில் பார்த்துப்போகச் சொன்னான் கணேஷ். அவளுடைய மனதின் அடியாழத்தில் அப்பாவின் குரல் திரும்பத்திரும்ப ஒலித்தது. ஒருமாதமிருக்கும். போனில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

“எம் புள்ளயா இருந்திருந்தா சோத்துலயே வெஷம் வைச்சிருப்பேன்”

பக்கத்து ஊரில் சமீபத்தில் நடந்த ஒரு காதல் திருமணத்தைக் குறித்த பேச்சு என்பது உடனடியாக விளங்கிவிட்டது. அவர் அப்படிப் பேசியதை அவள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் இனியும் தாமதிப்பது சரியாக இருக்காது என்று தன்னுடைய முடிவை இறுக்கிப்பிடித்து நின்றுவிட்டாள். தன் அக்காவின் பொருட்டு மகேஷுக்கு இந்தக் காரியத்திலிருக்கும் தயக்கம் புரிந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் தானும் அத்தையைப்போல் வாழ்க்கை முழுமைக்கும் மறுகிக் கொண்டுதான் இருக்கவேண்டும். தங்களுடைய காதலில் சாதி வேறுபாடு இல்லை என்பதால் தன் அப்பா ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமூகம் ஏற்றுக்கொண்டுவிடும், மேலும் தங்களுடைய திருமணம் அவனுடைய அக்காவின் திருமணத்தைத் சற்றே தாமதப்படுத்துமோ தவிர தடுத்துவிடாது என்று பலவாறாகச் சொல்லி மகேஷைச் சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்திருந்தாள்.

“இன்னுங் காணமே? கொண்டா போனை”

கணேஷிடமிருந்து செல்போனைப் பிடுங்கி மகேஷுக்கு அழைத்தாள். ரிங் போய்க்கொண்டே இருந்தது. ஒரு நிமிஷத்திற்குப் பிறகு திரும்ப அழைப்பதற்கு எத்தனித்தபோது செல்போன் திரையில் வந்த குறுந்தகவலைப் பார்த்தாள்.

“நா வரலை. நீ அவள வீட்லயே கொண்டுபோய் விட்டுடு. இது சரியா வராது”

அவளுக்குக் கேவல் வெடித்து குலுங்கி அழத்தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியோடு செல்போனை வாங்கிப் பார்த்தவனுக்கு, என்ன சொல்லி அவளைச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. அவசரமாக மகேஷுக்கு அழைக்க முயற்சி செய்தபோது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

“சுவிட்ச் ஆஃப்”

அவனுக்கு மகேஷ் மீது கோபமும் எரிச்சலும் ஏற்பட்டன. இத்தனை பேடித்தனத்தை வைத்துக்கொண்டு எதற்கு திட்டத்தில் இவ்வளவு தூரம் வரவேண்டும்? முன்பே ஒதுங்கியிருக்கவேண்டும். ஆறுமாசம் காத்திருக்கச்சொல்லி அவளிடம் வற்புறுத்துமாறு சொன்னதென்னவோ வாஸ்தவந்தான். ஆனால் ஜெயந்தி அதற்கும் மசியாததால் முடிவை அவர்களிடமே விட்டுவிட்டான். மகேஷினுடைய மன அல்லாட்டங்கள் புரிந்திருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறான் என்று இதுவரை கணேஷ் நம்பியிருந்தான்.

அழுகை ஓய்ந்து சிலையைப்போல் உறைந்திருந்தவளை இருட்டுக்குள் உற்றுப்பார்த்தான். இப்போது உடனடியாகச் செய்யவேண்டியது யார் கண்ணுக்கும் படாமல் அவளை வீட்டில் கொண்டுபோய்விடுவதுதான். இந்த அகாலத்தில் யாரேனும் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டால் விஷயங்கள் வேறு அர்த்தம் கொண்டுவிடும். மற்றவற்றை விடிந்ததும் பொறுமையாகப் பேசிக்கொள்ளலாம்.

“சரி கெளம்பு, வீட்டுக்குப் போயிரலாம் மணி மூன்றரை ஆச்சு. இப்போ என்ன ஆயிப்போச்சு? இன்னிக்கு நடக்கலை. அவ்வளவுதானே? எப்பவுமா நடக்காமப் போயிடும்? எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ”

“இன்னிக்கு  நடக்காதது இனி என்னிக்கும் நடக்காது” அவள் சொன்னபோது கிழக்குப்புறத்திலிருந்த வேலிமரத்திலிருந்து குருட்டாந்தை மூன்றுமுறை விடாமல் கத்தியது.

“சும்மா உணர்ச்சிவசப்படாத. முதல்ல எந்திரி. சீக்கிரம் வீட்டுக்குப் போறது முக்கியம். இல்லீனா தேவையில்லாத புதுப் பிரச்சனைக வரும்”

அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது. கேவலின் கடைசி ஒலிப்பில் சொன்னாள்.

“அவன நம்பிக் கெணத்துல விழுந்துட்டேன்”

அவளுக்குப் பதில் சொல்லாமல் பைகளை எடுத்துக்கொண்டு வண்டியை நோக்கி கணேஷ் நடக்கத்தொடங்கினான். கண்ணீரைப் புறங்கையால் துடைத்தவாறு எழுந்து பின்தொடர்ந்தாள்.

       ***

குணா கந்தசாமி

சிறுகதை ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படும் 'குணா கந்தசாமி' சமகாலத்தில் பல்வேறு மதிப்புரை கட்டுரைகளும் எழுதிவருகிறார். கற்றாழைப் பச்சை, புலியின் கோடுகள், உலகில் ஒருவன், மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் ஆகிய நூல்ககளின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.