/

ஆசுவாசம் : சிறுகதை

விசாலமான பெருவெளியொன்றில்  அமைந்த சிறு, சிறு வட்டக் குடில்களின் கீழ் அமர்ந்திருந்த இணைகள் போலவே அவர்களும் ஒரு குடிலின் கீழ் அமர்ந்திருந்தார்கள். காற்று சிலுசிலுவென்று வீசியது. இவள் பக்கவாட்டில் செயற்கையாக உருவாக்கப் பட்ட பாறைகளினூடு பொசிந்து புதிதான ஊற்றாக நீர் ஓடுவதைப்  பார்த்துக் கொண்டிருந்தாள். பெரிய மீன்களும், சிறிய மீன்களும் வண்ணங்கள் துலங்க நீரின் மேற்பரப்பைக் கிளர்த்திக் கொண்டு வருவதும், மூக்குகளை மேலே நீட்டி சுவாசித்து விட்டு உள்ளே பாய்ந்து ஆவென்று எதையாவது விழுங்குவது போல் அசைவதுமாயிருந்தன.

அசைவு மட்டுமே அவற்றின் ஆதாரமென இருந்த அந்த மீன்களை அவள் ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.

இயக்கம் அற்றுப் போனால் அவற்றின் வாழ்வு நின்று விடும் எனும் பயமோ?

சிவப்பும், மஞ்சளுமாய் இடமும், வலமுமென இடைவிடாமல் அசைந்து கொண்டிருந்த அந்தப் பெரிய மீனை விட்டுக் கண்களை எடுக்க முடியவில்லை. அது ஒவ்வொரு திசையிலும்  நகரும் போதும் எத்தனை மீன்களை அது மறுபடி, மறுபடி சந்தித்திருக்கும்? எத்தனை சந்திப்புக்கள்? எத்தனை உரையாடல்கள்? எத்தனை நகர்வுகள்?

அவள் சட்டென்று தலையைச் சிலிர்த்துக் கொண்டாள்.

அவன் ‘என்ன’ என்றான்.

‘ஒண்டுமில்லை’  தலையை அசைத்தாள்.

கப் அண்ட் சோசர்களில் தருவிக்கப்பட்ட பால் கலந்த தேநீரை அவன் உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவன் சாப்பிட்ட பிறகும் தட்டில் தொதல் துண்டுகள் எண்ணெய்ப் பளபளப்போடு எஞ்சியிருந்தன.

‘சாப்பிடலாமே’ அவன் ஒரு துண்டை எடுத்து நீட்டினான்.

அவளுக்கு ஏனோ சாப்பிடத் தோன்றவில்லை. மீண்டும் மீன்களின் திசையில் பார்வையைச் செலுத்தினாள்.

‘ம்ம், வேறை என்ன…?’

‘வேறை …?’ அவள் யோசித்தாள்.

‘நீ சிந்திக்கிற முறையைக் கொஞ்சம் மாத்திப் பாக்கலாம்’  என்றாள் சற்றுப் பொறுத்து.

‘வட் டூ யு மீன்? போர் எக்ஸாம்பிள்…?’

அவள் யோசித்தாள். என்ன உதாரணத்தைச் சொல்வது? உதாரணம் என்ன,  அவன் எழுதுவதெல்லாம் அந்த வகையில் தானே இருக்கின்றன.

‘நீ எங்கட சனத்தை இழிவு படுத்துறாய்’

‘ஆர், நானா? நான் இழிவுபடுத்துறன் என்ன…?’ அவன் உதட்டைப் பிதுக்கி அபிநயித்தான்.

‘சனத்திண்டை முட்டாள் தனத்தை வெளிலை கொண்டு வர நினைச்சாலே அது இழிவு படுத்துறதா…?’

‘அதை சொல்லுறதுக்கும் ஒரு முறை இருக்கல்லோ?’

‘என்னெண்டு…? உனக்கு ஒரு ஸ்டைல் இருக்கும். எனக்கு ஒரு ஸ்டைல் இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரித்  தானே தங்கட பார்வையைக் காட்டலாம்’

‘அதைத் தான் கொஞ்சம் கவனமா செய்ய வேணும்…’

‘கவனமெண்டா…’

‘நீ எழுதுறபோது சனங்கள் முட்டாள் மாதிரியும், நீ மட்டுமே  ஆகாசத்திலை பறக்கிற தேவன் மாதிரியும் அந்த சமூகத்துக்கு நீதி போதிக்கின்ற மாதிரியும் எழுதுறாய்’

‘சமூகத்தில இருக்கிற சில முட்டாள்களுக்கு விளங்கப்படுத்த வேற வழி இல்லையே?’

‘இப்ப கூட நீ அவங்களை முட்டாளாத்தான் நினைச்சுக் கதைக்கிறாய்… அப்பிடித்தானிருந்தாலும், அதை விளங்கப்படுத்த வேற வழி இல்லையோ?’

‘என்ன வழி…?’

‘உண்மையா அவங்களை முன்னேற்ற வேணுமெண்டா அதுக்கு வழி வேற, இப்பிடி முகநூலிலை போடுறதெல்லாம் உன்னை ஒரு படிச்ச மனிசராக் காட்டுற அவாத் தான்…’

அவன் ஒரு கணம் அவளது விழிகளையே இமைக்காமல் பார்த்தான்.

‘ஏன், எங்கையாவது உன்னைப் பற்றி எழுதின மாதிரி பீல் ஆகிறியா…?’

அவனது குரலில் கேலி இருந்தது.

‘அதிலை எனக்கென்ன வந்தது?’

‘அப்ப ஏன் ரெண்டு காதலியோட அல்லாடுற மாதிரி நான் போட்ட போஸ்டுக்கு ஒரு ரியாக்சனும்  காட்டாமல் போனனி?’

‘உதெல்லாத்துக்கும் நான் ஒரு ரியாக்ஷன் காட்ட வேணுமோ என்ன?’

‘கொஞ்சம் கேலி, கிண்டலா எழுதுறதை   ஏற்றுக் கொள்ளப் பழகு. வாழ்க்கையில நகைச்சுவையுணர்வு கொஞ்சமெண்டாலும் இருக்கோணும்’

‘அதுக்கு எங்கட சனத்தைக் கீழை இறக்கத் தேவையில்லையே… யு ஆர் நொட் சீரியஸ்.’

‘எல்லா நேரமும் சீரியஸா இருக்க முடியாதப்பா…’

‘ஆனா, சீரியஸான விஷயத்துக்கு சீரியஸாத் தான் இருக்கோணும்’

‘இப்ப என்ன, நான் ஜாலியாய் போடுற பதிவுகள்  உனக்குப் பிடிக்கேல்லை. அப்பிடித்தானை. ஆனா அது தான் நான். அதுக்காக என்னை மாத்த முடியாது.’

‘அப்பிடி நீ போடுற பதிவு யாரையோ புண்படுத்துது எண்டது உனக்கு ஏன் தெரியேல்ல…?’

‘அது என்ரை சுதந்திரம். மை தோட்ஸ், மை வியூ. அதை நான் ஷெயர் பண்ணுறது பிடிக்காதவை என்னை விட்டு விலகிப் போகலாம்.’

‘அதைத்தானை நான் செய்யுறன். நான் எந்த ரியாக்சனும் காட்டேல்லை ஏண்டா என்னை விட்டிடேன்’

‘ஏதும் சொல்லலாம் தானே…?’

‘நான் சொன்னா நீ இன்னும் புண்பட்டிடுவாய். அது உன்ரை ஈகோவைக் கிளறும், அதை வச்சுக் கொண்டு அடுத்த பதிவிலை எங்கட சனத்தை இன்னும் சாடுவாய்…’

‘சனங்கள் இன்னும் பாமரத்தனமான இருக்கிறதைத்தான் நான் சுட்டிக் காட்டுறன்’

‘அதாலை நீ படிச்சவன் எண்டும், நாகரீகமானவன் எண்டும் மறைமுகமாய்க் காட்டிக் கொள்ளுறாய், அப்பிடித்தானை…’

அவன் பேசாமல் இருந்தான். இவள் மறுபுறம் திரும்பினாள்.

‘நான் படிச்சவன் என்கிறது உனக்குப் பெருமை இல்லையோ…?’

‘அதை நாங்கள் எங்கட செயலிலை காட்ட வேணும்’

‘………….’

‘அவங்கள் படிக்கேல்லை எண்டதுக்காக, அவங்களை எப்பவும் குறை சொல்லிக் கொண்டிருந்தா அது ஒரு காலமும் மாறாது. அவங்கட வாழ்க்கையிலை எப்பிடி மாற்றத்தைக் கொண்டு வாறதெண்டு யோசிக்கலாம்…’

‘எவ்வளவு தான் படிச்சாலும் குண்டுச் சட்டிக்கை குதிரை ஓட்டுற மனநிலை உனக்கும் போகாது’

‘நான் ஒண்டும் குறுகிய வட்டத்துக்க இல்லை.’

‘கரெக்ட். இப்ப தான் சரியான பொயின்டுக்கு வந்திருக்கிறாய்’

‘உன்ரை இந்த ஈகோத்தனமான ஆர்கியுமெண்டுக்கு நான் வரேல்லை’

‘உன்னோட வியாக்கியானம் பண்ண எனக்கும் நேரமில்லை’

‘ஆனா, பதிவுக்கு வாற கொமெண்ட்ஸுக்குப் பதில் போட மட்டும் இரவு, பகலாய் பொழுதிருக்கும்’

அவன் சினந்தான்.

‘கடைசில என்னத்துக்கு வந்து சேருறாய் எண்டு சொல்லு’

‘நீ எதை வேணுமெண்டாலும் எழுது. ஆனா, உனக்குள்ளை உள்ள ஈகோ உன்னை, உன்ரை இனத்துச் சனம் எல்லாத்துக்கும் மேலை புத்திஜீவியாக் காட்டவும், நீ ஒரு சிறகு முளைச்சவன் போலவும்  காட்ட வெளிக்கிடூது. அதை நீ உணர்ந்தியெண்டால் சரி. உன்ரை சிந்தனை சரியான போக்கிலை போகும்.’

‘இட்ஸ் ஒகே’  ஒத்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டவனைப் போலிருந்த அவனை அவள் நம்ப மாட்டாமல் பார்த்தாள்.

‘இப்பிடியே போனால், எங்கட உறவும் நாளாந்தம் சண்டை, சச்சரவுக்குள்ளைதான் போகும். அதை விட நாங்கள் பிரேக் பண்ணலாம் எண்டு நினைக்கிறன்’

அவள் கண்கள் அதிர நிமிர்ந்தாள்.

இந்தச் சாதாரண வாக்குவாதத்திற்காகவா  விலக நினைக்கிறான். ராகினியுடனான நெருக்கம் அவளை விலக்குமென்பது ஏதோ ஒரு நாளில் அவளுக்குத் தோன்றியது தான். அது இப்போதல்லவே. ராகினியும் இவனைப் போலவே இவனது  பதிவுகளுக்குக்  கொமெண்ட் போடுவாள். அவனைப் போலவே அந்த சமூகத்தை நையாண்டி செய்வாள். அதன் மூலம் அந்த சமூகத்தை விட அவர்கள் சற்று மேலானவர்கள் ஆகிறார்கள். அப்படியா…?

அவள் மேசையில்  சிந்தியிருந்த நீரை இழுத்துக் கோலம் போட்டாள்.

பக்கத்தில் திரும்பிய போது அந்தப் பொன்மஞ்சள் மீன் அங்குமிங்குமாயசைந்தது. இந்த மௌனத்திற்கிடையில் அது எத்தனை தரம் அங்குமிங்குமாய்ப் பயணித்திருக்கும்?

‘எல்லாம் விளங்கிக் கொள்ள ரெண்டு வருஷம் பிடிச்சிருக்கு என்ன?’

அவள் நெஞ்சார்ந்த துயரோடு சொன்னாள்.

அவன் அவளைக் கடைக்கண்ணால் பார்த்தான்.

இது அவனுக்கு இலகுவானது.

எப்போதும் போலில்லை. எப்போதும் போல ஆரம்பித்தது. எப்போதுமில்லாதது போல முடிந்து விட்டது.

‘இப்பிடி, ரெண்டு வேற துருவங்களாயிருந்து அடி படுறதை விட பிரேக் பண்ணுறது நல்லது. நீ உன்ரை வழிலையும், நான் என்ரை வழிலையும்.’

‘முன்னமே , ரெண்டு பேருக்கும் ஓட்டாது எண்டு தெரிஞ்சது நல்லதாய் போச்சு’

‘எனக்கு, உன்ரை பியூச்சரை நினைச்சால் தான் கஷ்டமாயிருக்கு, ஒருத்தனை விரும்பின பிறகு லேடீஸ் கலியாணம் கட்டுறது கஷ்டம்’

‘அதையும் ஒரு பதிவாய் போடலாம் தானை. உன்ரை பழைய எக்ஸ் காதலி எண்டு எதிர்காலத்திலை நிறைய பதிவு போடுற சான்ஸ் கிடைக்கும்’

அவள் சிரித்துக் கொண்டு தான் சொல்ல நினைத்தாள்.

சிரிப்பு வரவில்லை.

‘பாத்தியே, இதுக்கே சீரியஸ் ஆகிறாய்’

‘ப்சு… வேறை வேலை இல்லை.’

‘நீ முற்போக்கா சிந்திக்கிறதுக்கு இன்னும் நாள் ஆகும்’

அவள் அவனைக் கிளம்புமாறு சொன்னாள். தான் சற்றுத் தனியே இருந்து விட்டு வருவதாகச் சொன்னாள்.

அவள் ஏதும் தவறான முடிவுக்கு  வந்து விடுவாளோ என்பது போல அவன் பதறினான்.

‘இதெல்லாம் மனசைப் பாதிக்கிற அளவுக்கு நான் திடமில்லாதவள் இல்லை. நீ போனா நான் பெட்டரா பீல் பண்ணுவன்’

அவன் ‘ இட்ஸ்  ஒகே’  என்றவாறு தோள்களைக் குலுக்கிக் கொண்டு நகர்ந்தான். அவன் திரும்பிப் பார்க்கப் போவதில்லை என்பதை அவள்  உணர்ந்தேயிருந்தாள்.

கண்களில் நீர் திரையிட்டிருந்தது. துடைக்க வேண்டும் போலிருக்கவில்லை.

மெலிதான விசும்பல் அவள் தொண்டைக்குள்ளிருந்து கிளம்பியது.

அவனோடு பழகிப் பார்க்க வேண்டும். சரி வந்தால் சேரலாம். இல்லாவிட்டால் விலகிப் போகலாம் என்றெல்லாம் நினைத்து அவனோடு பழகியிருக்கவில்லை. நினைக்கவே மனம் கசந்தது.

நெடுநேரம் எழுந்திருக்கத் தோன்றவில்லை. அப்படியே அமர்ந்திருப்பதால் அவளுக்கு எந்தச் சங்கடமும் இல்லை. துயர் எதுவும் இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? உருகி, உருகிக் காதலித்த அந்த நடிப்பை அவன் வெட்டொன்று துண்டு ரெண்டாக  விலகுவான் என்பது அவன் விலகிப் போன அந்தக் கணம் வரை அவள் எண்ணியிராத ஒன்று.

தொலைதூரத்து வானில் கோலமிட்டது போல விரைந்த பறவைகளைப் பார்த்தாள்.

திரும்பிய பக்கத்தில் அந்தப் பெரிய மீன் அங்குமிங்குமெனத் தன்  மூக்கை நீர்ப்படலத்தை விட்டு மேனோக்கித் தூக்கி இரு திசைகளிலும் மாறி, மாறி நீந்தியது. அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். எண்ணெயூறிய தொதல் தீண்டப்படாமல் தட்டில் கிடந்தது. அதைப் பிய்த்து நீருக்குள் போட்டால் என்ன எனத் தோன்றியது? மீன் அதைத் தின்னுமா?

சற்றுப் பொறுத்து எழுந்தாள். நடந்து வந்து வீதியை நெருங்கினாள்.

அருகிலேயே  பஸ் தரிப்பு நிலையம் இருந்தது.

மரத்தின் கீழிருந்த இருக்கையில் தலையைக்   கவிழ்த்து முகத்தைப் பொத்தியபடி இருந்தாள்.

எந்த முகத்தையும்  நிமிர்ந்து பார்க்கத் தோன்றவில்லை. எந்த முகம் ஆதுரமாய் நோக்கினாலும் கண்களில் குபுக்கென்று நீர் வடிந்து விடும் போலிருந்தது. இரண்டு, மூன்று பஸ்கள்  நின்று மறைந்தன. அவை தனக்குரிய பஸ்களா   என மட்டும்  அவள் நிமிர்ந்து பார்த்தாள்..

அரைமணிக்குப் பிறகு சிறிய சொகுசு பஸ் ஒன்று அருகே நின்றது.

இவள் நிமிர்ந்த ஒரு கணத்தில் அதனைக் கண்டாள்.

யாரும் நிற்கவில்லை. கடைசி வரிசையில் இடம் இருந்தது.

இவள் தாவி ஏறிக் கடைசி வரிசைக்கு நகர்ந்து  உட்கார்ந்தவுடன் முகத்தை மடியில் கவிழ்த்துக் கொண்டாள்.

அந்த பஸ்ஸிற்குள்ளிருந்த எளிய சனங்களைப் பார்த்தால் கண்கள் வழிந்து விடும்.

அப்படியானவர்களைத்தான் அவன் தன் கற்பனைக்குள் எப்போதும் முன்னேற மாட்டாத பாமரச் சனங்களெனத் தன் வித்துவத்தைக் காட்டப் பயன்படுத்திக் கொள்வான்.

இவள் தற்செயலாய் நிமிர்ந்த போது கண்டக்டர் அடிக்கடி தன்னைத் திரும்பிப் பார்ப்பதைக் கண்டாள்.

வாசலுக்கு அருகிலிருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்திருந்தவர் இறங்கியவுடன் அதில் போய் அமர்ந்து கொண்டாள். இப்போது கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்தாள். அவளது வலப்புற இருக்கையில் இரண்டு வயோதிபப் பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி முன்புறமாக எக்கி ‘தலைவலியோ பிள்ளை, தைலம் தரட்டுமோ…?’ என்றாள்.

இவள் மூளை நிஜத்திற்கு வரச் சற்றுச் சிரமப்பட்டது.

‘என்ன?’

‘தைலம் தரட்டுமோ, தலையிடிக்கு…?’

‘ம்ம்’ அவள் தலை அசைந்தது. விழிகள் சட்டென ஒளி பெற்றன.

முன்னால் நின்ற  கண்டக்டர் இவளிடம் திரும்பி

‘அம்மாமார், எல்லாம் எப்பவும் வச்சிருப்பீனை…’ என்றான் ஒரு பாராட்டுதல் போல.

இவர்களைத்தான் அவன் இழிந்த பாமரத்துச் சனங்கள் என்கிறான்.

அந்தப் பெண் தன் கைப்பையைக் குடைந்து அந்தச் சிறிய மஞ்சள் டப்பியை எடுத்து இவளிடம் நீட்டினாள். அவளுக்கு உண்மையில் தலை வலிக்கவில்லை. அந்த டப்பாவைத் திறந்து சிறிது பசையை எடுத்து நெற்றியில் அழுத்தித் தேய்த்தாள்.

மனதிலிருந்த அத்தனை வடுக்களும் கரைந்து போக ஆசுவாசமாய் அந்த நெற்றிப் பொட்டில் குளிர்வு ஏறியது.

இனி முகத்தைப் பொத்த வேண்டிய தேவையொன்றும் இல்லையென அப்போது அவளுக்குத் தோன்றியது.

                                         ***

தாட்சாயணி

ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய  சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

3 Comments

  1. “மற்றவர் மனங்களை நோகடிக்கக் கூடாது” என்பதில் என்றுமே உறுதியாக இருப்பவர் எழுத்தாளர். (கதைகளில் கூட. )அவருக்கு நிகர் அவரேதான்.👌👌👌🙏🙏🙏

உரையாடலுக்கு

Your email address will not be published.