சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

குரோட்டன்களும் வாடின

நான் பாராமுகமாய் இருந்துவிட்டேன்
இந்த வாழ்க்கை என்ற விசயத்தில்
இன்று தூங்கினால் போதுமென்றிருந்தது
கனவுகளை இப்போது உதாசீனப்படுத்துகிறேன்
அந்திகளின் வானம்
எந்த உணர்வையும் கொண்டுவரவில்லை
இந்தப் பாழாய்ப்போன தனிமையைக் கூட
பறித்துவிட்டது
என் காலம்

இப்போது
குரோட்டன்களும் வாடுகின்றன
.

மின்மினிகளின் மனது
.
தோற்றுப்போன ஆட்டத்தை
மீண்டும் ஆடாதவர்கள் உண்டு

மறுத்த ஒருவரை
பின்தொடராதவர்கள் உண்டு

வரம் தர மனதில்லாத தெய்வங்களுண்டு

நிழலில்லாத மரங்கள் உண்டு

எதிலும்
வெற்றியை ருசிக்காதவர்கள் உண்டு

மீண்டும்
பிறக்க விரும்பாதவர்கள் உண்டு

ஆட்டமே
நீ அறிந்துகொள்
எல்லா பிறவியிலும் தோற்பவர்களின் மனதை
இறக்கப்போகும் மின்மினிகள் ஔியாக்கின
.
தேவனும் ரம்மும்
.
ஒரு நாளை டபுள் எக்ஸ் ரம் கட்டிங்குடன்
தொடங்கினார் ஹென்றி
குடித்து முடித்ததும்
நெஞ்சில் சிலுவையிடுவார்
நாளொன்று மூன்றுமுறை
சிலுவையிடுவார்

நெஞ்சிலிருக்கும்
நீரை ஒயினாக்கிய தேவன்
தமிழ்நாடு அரசின்
டபுள் எக்ஸ் ரம்மிற்கு
மேலும் பாவமேற்று
திருப்பூர் வெயிலில்
ஒரு பாலத்தினருகில்
ஹென்றியோடு படுத்திருந்தார்

சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ் விக்கியில் 

1 Comment

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சில் சொருகிய கவிதை

    நெஞ்சிலிருக்கும்
    நீரை ஒயினாக்கிய தேவன்
    தமிழ்நாடு அரசின்
    டபுள் எக்ஸ் ரம்மிற்கு
    மேலும் பாவமேற்று
    திருப்பூர் வெயிலில்
    ஒரு பாலத்தினருகில்
    ஹென்றியோடு படுத்திருந்தார்

    இந்த வரிகள் கவிதையின் உச்சம் சிறப்பு நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.