/

தன்னிலை இழந்தபின்னும் மின்னும் தன்னிலை : ஷங்கர்ராமசுப்ரமணியன்

[சபரியின் “துஆ” கவிதை நூலை முன்வைத்து]

இறால், தனது உடலை இழந்து, வெறும் கூடாக எஞ்சும்போதும் புறநிலையில் எப்படி இறாலாகவே தோற்றம் அளிக்கிறது? அக்கூடு வெறும் அரண் மட்டும் அல்ல. உள்பகுதியை இழந்தபிறகு, இறாலின் தோடு ஒரு  நுட்பமான ஆபரணமாகிவிடுகிறது. இறாலின் தன்னிலையும் அதில் வெளிப்படுகிறது. ஆபரணத் தன்னிலை; ஆனால் சாரம் இறங்கியது. இறாலற்ற ஓர் இறால்.

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் “பெரிய இரட்டை இதய நதி” (Big Two-Hearted River) சிறுகதையில் நாயகன் நிக், ட்ரவுட் (TROUT) மீனைப் பிடித்து, அதன் உட்புறம், நாக்கு, செவுள் எல்லாவற்றையும் அனாயசமாக அகற்றி, கழுவியபிறகும் அவனுக்கு அது உயிருள்ள ட்ரவுட் மீனைப்போலவே தெரிகிறது. இறாலில் தோடோ அல்லது ஹெமிங்க்வேயின் டிரவுட் மீனோ, இரண்டுமே  உள்ளடக்கமே இல்லாத நுட்பமான செறிவான தன்னிலைகள்.

தன் சமீபத்திய கவிதை நூலான “துஆ”வில், இல்லாமல் இருக்கிற அந்த தன்னிலையினையே, சபரிநாதன் அடைந்துள்ளார். இத்தொகுப்பில் தன்னிலையைத் துறந்த பாவனையில் நாடகங்களை நிகழ்த்தி, தன்னிலையை பல நிலைகளில் வெளிப்படுத்தும் பிரயத்தனத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னிலையை வேறுவேறு காலங்களிலும் பருவங்களிலும் நிலங்களிலும் குரல்களிலும் பதுக்கியிருக்கிறார். வழக்காறுகளிலும், சொல் வளமைகொண்ட அலாதியான வெளிப்பாடுகளிலும் கரைத்து காவியம் போன்ற பிரமாண்ட ஓர் அனுபவக் களனுக்கும் ஒருமையனுபவத்துக்கும் வழிவகுத்துள்ளார். நவீன கவிதை ஏங்கிக் கொண்டிருந்த ஒரு சாத்தியம், “துஆ”வில் தூலமாகியிருக்கிறது. அதை சாதனை என்றே சொல்ல வேண்டும். 

“களம் காலம் ஆட்டம்”, “வால்” ஆகிய தொகுதிகள் வழியே வளர்ந்து சபரிநாதனின் ஆளுமையும் இடமும் “துஆ”வில் விகாசம் பெற்றிருக்கின்றன. தனித்துவமான அவர் குரல், நீளும் கார்வையாய் தொனிக்கிறது. 

000

தமிழ் நவீன கவிதை, இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் பன்மைத்துவத்தையும் பலகுரல் தன்மையையும் நோக்கி எட்டுவைக்கத் தொடங்கியது. புது கவிதை முழுமையாக நவீன கவிதையாக மாறியது அப்போதுதான்.

அதுவரை அனுபவம், அறிவு, கண்டடைதல்கள் இவை எல்லாவற்றையும்  சற்று தள்ளி வைத்து, குறைத்துச் சுருக்கி முத்தாய்ப்பாக வெளிப்படுத்தும் வடிவமாகவே புதுக்கவிதை, பொதுவாக இருந்தது. சுந்தர ராமசாமி, நகுலன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் என பலருடைய கவிதைகளை உதாரணமாக சொல்லலாம். “தனுவச்சபுரம்”, “கோட்ஸ்டான்ட் கவிதைகள்” போன்றவை உடனடியாக ஞாபகம் வருகின்றன. சிறந்த கவிதைகள் என்றாலும், வெட்டி தைத்து சுருக்கி சொல்லும் வடிவிலேயே இவை இயற்றப்பட்டன. இந்த பண்பினாலேயே புதுக்கவிதை, துணுக்கு வடிவில் வேறுவேறு விதங்களில் போலி செய்யப்பட்டது. அத்துடன் கவிதை என்ற பாவனைக்காக மொழிக் கட்டுப்பட்டித்தனத்தையும் கொஞ்சம்போல புதுக்கவிதை தக்கவைத்திருந்தது. 

அந்த அம்சங்களை கவிதை உதறியபோதே நவீன கவிதை பிறந்தது. கவிதை,தன் களத்தை விரித்துக் கொண்டது. உரைநடையின் நீட்டத்துக்கும் சுதந்திரத்துக்கும் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தது. புனைவின் அம்சங்களைக் கையகப்படுத்தியது. அன்றாட எதார்த்தத்தின் சுழிப்புகளில் தொலைய அனுமதித்து குணரீதியாகவும் தொனிரீதியாகவும் பால்ரீதியாகவும் பன்மைப்பட்டது. இந்தத் தருணத்தை தமிழ் கவிதை, நவீன கவிதையாகிய தருணம் என்று வகுக்கிறேன்.

ஞானக்கூத்தனில் விஷமச்சிரிப்பையும் ஆத்மாநாமில் கனிவின் புன்னகையையும் புதுக்கவிதை சூடியது என்றால் நவீன கவிதையிலேயே, முதல்முறையாக களங்கமின்மையின் சிரிப்பைச் சூடியது. அன்றாட உலகின் காட்சிகளும் ஓசைகளும் நவீன கவிதையில் இறங்கின. அங்கதம், புனைவு, உருவகக் கதை, தேவதைக் கதைகள் என அது விரிவுகொண்டது. விக்ரமாதித்யன் தொடங்கி வைத்த ஒரு சாமானியன்,இசையின் கவிதைகளில் கருத்தியல்கள் எல்லாம் கைவிட்ட தமிழ் விதூஷகனாக பிற்பாடு விகாசம் கொள்கிறான்.

பெண் கவிகளின் வருகையும் நவீன கவிதையின் பாதையில் ஒரு தனி வாசலை திறந்தது. எல்லா அறிதல்களுடனும் விரிகிறது எனது யோனி என்ற சல்மாவின் அறைகூவல்; ஒரு நிறைவேறாத காதலில் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகளாய் முலைகளைச் சொன்ன குட்டிரேவதியின் மொழி. இவையெல்லாம் நவீன கவிதைக்குள், எந்த மனத்தடையுமில்லாத சுதந்திரமான குரல்களின் வருகையை அறிவித்தன. பெண்ணுடல் மேல் கட்டமைக்கப்பட்ட மொழி சார்ந்த புனிதங்கள் அப்பெண் கவிஞர்களாலேயே உதற முடிந்தது. சல்மா, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி உருவாக்கிய ஒரு புதிய தடத்தில் இயற்கையுடன் ஈடுபடும் மாயத்தருணங்களை உருவாக்கியவர்களாக தென்றல், சஹானா, தேன்மொழி தாஸ் ஆகியோர் இருந்தனர். வேறு வேறு குரல்கள், தன்னிலைகளை நடித்துப் பாவிக்கும் நவீன சமகாலக் குரலாக பெருந்தேவியும் லீனா மணிமேகலையும் இருக்கிறார்கள்.

இந்த தொடர்ச்சியிலேயே மாறும் உலக ஒழுங்கையும், மாறும் மனித நடத்தைகளையும் உலகமயமாதல் பின்னணியில் கட்டுரை மொழியில் விசாரித்த யவனிகா ஸ்ரீராமின் தத்துவக் கேள்விகளை மேலும் விரிப்பவர்களாக இளங்கோ கிருஷ்ணனும் சபரியும் வெய்யிலும் வந்து சேர்கிறார்கள்.      

இப்படியாக, பிரேம் – ரமேஷின் “கிரணம்” குறுங்காவியத்திலிருந்து தமிழ் கவிமனம் காணத்தொடங்கிய கனவின் பிரமாண்டம் சபரிநாதனின் ‘துஆ’வில் நிறைவுற்றிருக்கிறது எனலாம்.அல்லது 90களில் ஆரம்பித்த ஒரு நவீன கவிதைத் திட்டம் இன்று சபரியில் இன்னொரு திருப்பத்தை அடைந்திருக்கிறது.  தனிநபர் என்ற பிரக்ஞை மட்டுப்பட்டு, வரலாறு மற்றும் பண்பாட்டுத் தன்னிலையாக கவிதையும் கவிஞனும் உணரும் ஒரு கூட்டுத்தருணத்தைத் தான் 90-களில் கண்ட திருப்பமாகக் காண்கிறேன். சோவியத் யூனியன் உடைவுக்குப் பின்னான மனநிலை, அம்பேத்கர் நூற்றாண்டு ஆகிய நிகழ்வுகள் தமிழ் அறிவுச்சூழல் ஏற்படுத்திய இடையீடு இதன் புறமுகாந்திரமாக இருக்கலாம். அது இன்று வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கிறது.

ஓரு ஆழமான திசைமாற்றத்தையும் இங்கே பேசிப் பார்க்க வேண்டும். 90-களின் ஆரம்பத்தில் நவீன கவிஞர்கள் இக்கனவை உருவகித்தபோது எல்லோரிடத்திலும் ஓர் அவசரம் இருந்தது. பரபரப்பு இருந்தது. தலைகீழாக்கும் கலகத்துடிப்பு இருந்தது. அங்கே  எல்லாம் துள்ளத் துள்ளத் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்று சபரிநாதன் கவிதைகளிலோ அமைதி எழுந்துள்ளது. மரணமும், காதலும், கதைகளும், நினைவுகளும் பதப்படுத்தப்பட்டிருக்கின்றன. தொலைவின் ருசியை, தூரத்து ஏக்கம் படரந்த துக்கத்தை தன்னகத்தே வைத்திருக்கின்றன.

வரலாறு, தத்துவம், மெய்ஞானம், அரசியல் இவை எல்லாம் வெறும் கதைகளாய், பண்டங்களாய் மாறிவிட்ட அபரிமிதத்தின் காலத்தில் -கவிதை உட்பட- எதுவும் துடிக்காது போல – தேன்மெழுகுத் துண்டுக்குள் எந்த நூற்றாண்டிலோ சிக்கிக்கொண்ட பூச்சியைப் போல.

000

சபரிநாதனுடைய தனித்துவம் என்பது தமிழ் புனைகதையில் 90-களுக்கு மேல் செயல்படத் தொடங்கிய படைப்புரீதியான பேராவலையும் லட்சியத்தையும் சிரத்தையையும் பிரமாண்ட கட்டுமானத்துக்கான வேட்கையையும் கைப்பற்றியதே. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பா. வெங்கடேசன் தமிழ் புனைவுலகில் துவக்கி வைத்த படைப்புரீதியான பேராவலும் கோணங்கியின் சொற்களஞ்சிய அம்சமும் சேர்ந்த கவிதை வெளிப்பாடே சபரிநாதன்.

தேவதேவன், தேவதச்சன், யவனிகா ஸ்ரீராம் உள்ளிட்ட கவிஞர்களின் உலகங்கள் சபரியில் பிரதிபலிக்கின்றன. ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை வரலாற்றின் மூன்றாவது திருப்பத்தில் நுழைந்திருக்கும் சபரிநாதனின் கவிதைகளில் முன்னோடிகளின் உலகங்கள் கனம்கூடிப் பிரதிபலிப்பதைப் பார்ப்பது சிறந்த வாசிப்பனுபவமாக இருக்கிறது.

சிறுகதை, நாவல், கவிதை யாவும் உடைமையாகப் பயன்படுத்தப்படுகிற, நுகரப்படுகிற ஒரு சிக்கலான காலகட்டத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறோம். கவிதையில் இருக்கும் தத்துவமோ, வரலாறோ கவிதைக்கேயான பிரத்யேகமான அழகியல் மற்றும் அறிதல் நோக்கத்துக்கான முகாந்திரம் மட்டுமே. இந்தக் காலகட்டத்தின் மனநிலையை எதிர்கொள்ளும் வெற்றிகரமான சமகாலக் கவிஞர் சபரிநாதன்.

000

இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள், சிந்தனையும் கவிதையும் முயங்கும் களமாக இருக்கின்றன. பல கேள்விகளை அதிலிருந்து நாமே உருவாக்கிக் கொள்ள முடிகிறது. கவிதை எங்கே தொடங்குகிறது, சிந்தனை எங்கே விடைபெறுகிறது? அனுபவம் எங்கே தொடங்கி கவிதை எங்கே பிரிகிறது? மெய்ஞானத்துடன் சேர்ந்து மாலை நடை நடந்து எந்த இருட்டில் எந்தச் சந்தின் முனையில் கவிதை விடைபெறுகிறது?

மானுடமும் இந்த உலகமும் அடைந்த அத்தனை அறிவுச் சேமிப்புகளும் மூழ்கி அலையடித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்துக்குள் எங்கோ பிரகாசித்துக் கொண்டிருக்கும் ‘சிறிய கூர்மையான ஒளிரும் பொருள்’ எனவே, கவிதையைக் கற்பனை செய்ய முடிகிறது.அல்லது நாகரிகங்கள் எழுந்து வீழ்ந்து புதையும் இடத்தில் தோன்றும் வண்ணத்துப்பூச்சி என. மிக மிகப் பழையதாக அசைவற்றதாகவும் மிக மிகப் புதியதாக வண்ணத்துடன் பறப்பதாகவும் கவிதை இருக்கிறது. “இறகு போன்ற புனிதமான வஸ்து” என்ற பிளேட்டோவும் உருவகம் நினைவில் வருகிறது.

இமயமலை, இருள், முதுமரம், சோழமண்டலக் கடற்கரை, வெட்டவெளிப் பொட்டலில் கிடக்கும் கல், சிறு கூழாங்கல் என ஆதியின் ஏகாந்தம் உறைந்திருக்கும் இடங்களை சபரிநாதன் தேடித் தேடிச் செல்கிறார். புராதனமான ஒரு தனிமைவாசத்துக்குள் உறைய நினைக்கிறார். இந்த ஏக்கத்துக்கும் கவிதையின் அடிப்படைச் செயல்பாட்டுக்கும் நிச்சயம் தொடர்பிருக்க வேண்டும். 

சபரியின் கவிதை “மண்ணுக்கடியில் தொப்புள்கொடியையும் ஓட்டுக்கூரையில் பால்பற்களையும் எறிந்த ஞாபகத்தை”த் தக்கவைத்திருக்கும் சேமிப்புக்கலனாக இருக்கிறது. துள்ளித் துள்ளி தூண்டில் முள்ளில் இருந்து விடுபட்டு ஆற்றில் குதித்து மறையும் அந்த அழகிய வெள்ளைக்கெண்டையின் நிகழ்கால அனுபவமுமாயும் இருக்கிறது. தொல்லிடமான அரிக்கமேட்டு அரியான்குப்பத்தின் ஆற்றங்கரையில் நீந்தும் புதிய மீன்களில் உள்ள காலாதீதமும் அதுவே. இன்னொரு இடத்தில், கணித மேதை ராமானுஜம் சந்திக்கும் “அநர்த்தக் கடுங்குழப்பத்திற்கு உரு அளிக்க” முயற்சிக்கும் உயிராகவும், வேறொரு தருணத்தில் பசுமையான சாப்பாட்டு இலையின் மூலையில் “பூமியின் சாராம்சமாக மிகச்சிறந்த முத்தாக” உறைந்திருக்கும் எளிய ஆனால் மிக ஆதியானதும் அரும்பொருளானதுமான உப்பாக இருக்கிறது.

“ஒரு பழத்தைப் பார்த்து, அது
காலத்தால் ஆனது எனப் புரிந்துகொள்ள முடிந்தால்
அதைக் கடித்தபடி,
நிலத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமத்தையும்
வரலாற்றுக்கு முந்தைய ஞாபகத்தையும் அசைபோட முடிந்தால்
அதில் ஒரு சுளையை விண்டு அருகிருப்போருக்குத் தருகையில்,
நல்லெண்ணத்தை மட்டுமின்றி கொஞ்சம் சூரிய ஒளியையும்
காற்றையும் கையளிக்கிறோம் என நம்புவது இயன்றால்
தொலியைத் தூர எறியும் தருணம், யாவும்
மண்ணுக்குத் திரும்பும் எனக் கற்றுக்கொள்ளுவது கூடுமென்றால்
சும்மா சும்மா நன்றி நன்றி என முணுமுணுப்பதும் சாத்தியமே”

000

புனைவு, வரலாறு, தத்துவம், அரசியல், இறையியல், அழகியல், பண்பாட்டு நினைவுகள் இவை யாவும் ஊடாடும் ஒரு தொல்லியல் காட்சி சாலையாய் திகழ்கிறது சபரியின் கவியுலகு. ஒரு பெரும் அனுபவப் பிராந்தியத்துக்குள், வாழ்ந்து முடிக்கவே முடியாத ஓர் அகண்ட ஆயுளின்  திகைப்பனுபவத்தை அவர் தோன்ற வைக்கிறார். குரல்கள், நிலங்கள், திணைகள் என்று பிரக்ஞைபூர்வமாக மூச்சுமுட்டும் ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டித்துள்ளார். சிந்தனை, அறிவு, அனுபவம் ஆகியவற்றின் சாகச விரிவில் கவிதையை ஒளித்து அல்லது கவிதையைச் சிதறடித்து அல்லது கவிதையை வெளியே நிற்கவைக்கும் விளையாட்டை இத்தொகுப்பில் சபரி செய்திருக்கிறார். ‘தொல்லியல் துறையின் வண்ணாத்திகள்’ கவிதை அதன் சிறந்த உதாரணம்.

பிரார்த்தனையின் உச்சாடனத் தன்மை, தொல்குரல்களை எதிரொலிக்கும் ஏக்கம், புராதன இரைஞ்சல், இயற்கை மீது கவனம் கொள்ளக் கோரும் மொழித்தியானம், இகத்தில் பரத்துக்குச் செல்லும் எத்தனம் இவையெல்லாம் இன்றைய நவீன கவிதைகளின் முகாந்திரங்களாக இருப்பதற்கான சூழல் என்னவென்பதையும் சபரிநாதனின் கவிதைகளை முன்வைத்து ஆராயலாம்.

மதத்தை கவிதை இடம்பெயர்க்கும் என்ற ஆத்மாநாம் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. மதவாதம், இனவாதத்தின் அடிப்படையில் உலகமெங்கும் அதிகரித்திருக்கும் வன்முறைகள், ஒதுங்குவதற்கு நிழலே தராத கருத்தியல் மூலைகளைக் கண்டு தப்பித்தோடி, ஆதித்தாயின் முலைகளைப் பற்றிப்பிடிப்பது போல சமயத்தன்மைக்கும் இயற்கைப் பிரக்ஞைக்கும் கவிஞர்கள் திரும்புகிறார்கள் அல்லது திரும்புவதற்கான கனவைக் காண்கிறார்களாய் இருக்கும்.  

000

சபரிநாதன்

“களம் காலம் ஆட்டம்”, “வால்” ஆகிய தொகுதிகளில் அடிக்கடி தென்பட்ட சிறுவன் இத்தொகுப்பின் சிறுகவிதைகளில் இருக்கிறான்.அவன் களங்கம் ஏறாதவன். ஞாயிற்றுக்கிழமைகளில் சோப்பு நுரைகளுடன் விளையாடி இந்த உலகத்தை மிதக்க வைப்பவன். அப்பாவிடம் கோபித்துக்கொண்டு பாட்டி ஊருக்குச் செல்லும் வழியில் வானவில் பார்ப்பவன். அவனுக்குரியதும் அவன் மட்டுமே பருகியுணர்ந்ததுமான அறிவனுபவங்களின் ‘நச்சுச்சுனை’யே அவனது நீண்டகவிதைகள் என நான் புரிந்துகொள்கிறேன். சபரிநாதனின் சிறுவன் வழியாகவே அவருடைய ஆளுமையையும் தொனியையும் அடையாளம் காண்கிறேன்.

உபநிடதம், ஒளி, ஆனை கட்டிய கல், பந்து, துணிமணிகள் ஆகிய கவிதைகளில் வரும் அந்தச் சிறுவன் கரிசல் மண்ணின் அடையாளத்தையும் அனுபவத்தையும் தெரியப்படுத்துபவன். அதேநேரத்தில் ஒரு அந்நியத்தன்மையையும் உலகளாவிய தன்மையையும் கொண்டவன். களங்கமின்மையின் ஊடுருவும் ஸ்படிக அனுபவத்தையும் கொண்டிருப்பவன். மத்தியான வெளிச்சமடிக்கும் தெருவில் விளையாட்டைத் தொடர்பவன். அங்கே இருட்டே இல்லை. 

ஆல்பெர் காம்யூவின் முதல் மனிதன் நாவலில் வருகிற “ஏழ்மையிலும் செம்மையாக” இருக்க கற்றுத்தந்த பாட்டியின் பக்குவம் இறங்கிய சிறுவனும், ழாக் ப்ரெவரின் களங்கமற்ற சிறுவனும் இக்கவிதைகளில் குறுக்கும் மறுக்குமாய் அலைகிறார்கள். அவர்களை தொடர்வது அலாதியாய் இருக்கிறது. என்னுடைய “அம்மாவுடன் போகும்” கவிதையில் வரும் சிறுவனையும் நான் எதிர்கொண்டேன். வானவில் கவிதையில், பேருந்தில் நிலவு அவனுக்கு துணையாக நகர்ந்துகொண்டிருக்கிறது. அச்சிறுவனே, பெரியவர் கவிதைகளிலும் கல்மிஷமற்ற கண்களாக இருக்கிறான். ஆனால் அங்கே சிலசமயம் காப்காவும் வந்துவிடுகிறார். அப்படி கல்மிஷமின்மையும், காப்காவின் அவல நோக்கும் ஒருங்கே அமைந்த கவிதையே “காளிங்கரின் கடிதம்”. 

எங்கள் அலுவலகத்திற்கு தகவல் உள்ளீடு செய்பவர் தேவைப்பட்டார்.
விளம்பரம் கொடுத்தோம், சுவரொட்டிகள் ஒட்டினோம்.
மறுநாள் காலை இளமான் ஒன்று
வரவேற்பறையில் காத்திருந்தது. அதன் வாயில்
ஒரு சிபாரிசுக்கடிதம்
காளிங்கர் என்ற புகழ்பெற்ற ஓநாயிடம் இருந்து
‘இவரது அன்னையாரை எனக்குத் தெரியும்
மிருதுவானவர், பழகுதற்கு இனிமையான நல்ல நண்பர்’


சிபாரிசுக்கடிதம் கொடுத்துவிடும் சபரிநாதனின் ஓநாய்க்கும் சரி. ஆடுகளை உண்ணும் நீட்ஷேவின் பிணந்தின்னி கழுகுக்கும் சரி. இரைகள் மீது எப்போதும் மிகுந்த மரியாதையே உள்ளது.

000

கழுகுமலை வெட்டுவான் கோயிலுடன் தொடர்புடைய ‘பெருந்தச்சன்’ கதையை ‘கல்புணை’ எனும் தலைப்பில் ஒரு நீள்கதைப்பாடலின் தன்மையில் சபரிநாதன் இயற்றியுள்ளார். அது,  தமிழ் நவீன கவிதையில் நிகழ்ந்துள்ள ஒருமையும் செறிவும் கொண்ட ஒரு மாபெரும் கனவு என்று கூறுவதில் எனக்குத் தயக்கமில்லை. ஒரு பிரமாண்டமான நவீன நாடகத்துக்கு உதவும் கவிதைப்பிரதியும்கூட. 

திருச்செந்தூரில் தொலைந்துபோகும் மகன் பிரதீபன், வடக்கில்,கழுகுமலையின் பிரதிபிம்பமாக கருதப்படுகிற எல்லோராவில் விழித்தெழுகிறான். பெருந்தச்சனுக்கும் மகன் பிரதீபனுக்கும் உள்ள துவந்தத்தை எல்லா தந்தை, மகன்களுக்குமான முரண்களமாக மாற்றுகிறார் சபரி. பெருந்தச்சன் நனவிலி என்றால் பிரதீபன் நனவு. தந்தையின் கலையிலிருந்து தன் கலையை சிருஷ்டிக்கத் தப்பியவன். 

தந்தையின் பின்னே
மகன் நடக்கிறான்
வெறுங்காலில்
பொசுக்கும் தேரி மணலில்
வெகு காலம் நடப்பதாய் ஒரு மயக்கம்
ஆனாலும் நடக்கிறான்
கங்கரிசலில் செங்கரட்டில் உடைமர ஓடைக்கரைகளில்,
பாங்கிணறுகள் உறங்கும் சேற்று நிலங்களில்
ரத்தத்தில் மதிக்கும் எந்த முதலைகள் அவர்களைத் துரத்துகின்றன?”

மனத்தின் இருள் ஆழங்களுக்குள்ளும் வரலாறுகள் புதைந்த அடுக்குகளுக்குள்ளும் ஒலிக்கும் ‘கல்புணை’யின் மந்திர மொழி, இறந்தகாலம் போல தொனிக்கும் பாழ்வெளியின் முகமறைப்பில் நிகழ்காலத்தை பற்றியும் பேசுகிறது. செல்லும் வழி இருட்டு, செல்லும் மனம் இருட்டு, சிந்தை அறிவினிலும் தனி இருட்டு என்று புதுமைப்பித்தனில் தொடங்கிய துர்சகுனக் குறிகள், அவிழ்ந்தவிழ்ந்து விரியும் கல்புணையில் புனைவின் வழியாக அழியத் துடிக்கும் நிலவெளியின் பயங்கரக் காட்சிகளாக விரித்தெடுக்கப்பட்டுள்ளன. மனம் கொள்ளும் இரட்டை நிலைகள் அபாரமான படிமங்களாக மாற்றப்பட்டுள்ளன( கலசத்தில் கடல். உள்ளே நஞ்சும் அமுதும்) 

யாரும் யாரையும் காப்பாற்ற இயலாது
நீதியின் பேரில் நிகழ்ந்தவைதாம் பாதிப் பேரழிவுகள்.
அவர்கள்தான் பிள்ளை பிடிப்பவர்கள்
அவர்கள்தான் கொலை செய்பவர்கள்
அவர்கள்தான் கற்பழிப்பவர்கள்
அவர்கள் மாடங்களிலும் மேடைகளிலும் ஏறிக் களைக்காதே
அவர்கள் முன் தலைகுனிந்து நிற்காதே
அற்பக்கவலைகளில் இருந்து உன்னைக் காத்துக்கொள்.
திரும்பிப் பாராதே
நாட்டிலும் நகரிலும் பரவுகிறது கெட்ட நாற்றம்.

பண்பாடு, நீதி, கலை, கவிதை எல்லாமே கல்புணையில் பெருந்தச்சனால், பிரதீபனால், கராளனால், தீவதனால், நீரதி கதாபாத்திரங்களால் விசாரிக்கப்படுகின்றன. சைவ, பௌத்த, சமண வரலாறுகள் குறுக்கிடுகின்றன.  வெப்பமும் நீர்மையும் படர்ந்த நிலங்கள்,  மனத்தின் கோர இருள்கள், காமத்தின் மர்ம இருள்கள், நடுவில் யாரோ யாரிடமோ சொல்லும் ஞானவாக்கியங்கள், தரிசனங்கள், உருவகக் கதைகள் எல்லாம் நம்மை மூச்சுமுட்ட வைக்கின்றன.

ஒவ்வொரு கணமும் முடிவற்ற பாலையாய் நீண்டது. இக்குமிழை
யாரேனும் ஊதி உடைத்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்றிருந்தது.

என்கிறாள் நீரதி.

கழுகுமலை பெருந்தச்சனின் கதையில் வருவதைப் போல ‘கல்புணை’யில் மகன் தீபன், பெருந்தச்சனின் கனவில் மட்டுமே இறக்கிறான். வரலாற்று யுத்தங்களும், பேரிடர்களும், அநீதிகளும், பஞ்சமா பாதகங்களும், மானுடம் அனுபவித்த அன்பும் காமமும் சந்தோஷமும் மொழியால் விளக்கவும் விலக்கவும் இயலாத மெய்மையின் இருள் படர்ந்த வெளியில் ‘கல்புணை’ யை அநாயசமாக மிதக்கச் செய்திருப்பது சபரிநாதனின் சாதனை.

ராபர்ட்டோ கலாஸோவின் ‘க’ நாவலை கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட நாவல் என்று வரையறுக்கலாமென்றால் ‘கல்புணை’ நெடுங்கவிதையை கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட கவிதை என்று தாராளமாகச் சொல்லலாம். தொடர்ந்து வாசித்து அறிதல்களுக்குள்ளும் அர்த்தங்களுக்குள்ளும் இறங்குவதற்கான தொடர் வாசிப்பைக் கோரும், வசீகரிக்கும் படைப்பு இது.  

அண்ட சராசரத்தின் துண்டொன்று ஒளிர்ந்த கயத்தின் முன்
நின்றுகொண்டிருந்த பெருந்தச்சன் ஆழ மூச்சிழுத்து
நிமிர்ந்து வான் நோக்கினார் :
எவ்ளோ நட்சத்திரம்என்று ஒரு சிறுவனைத் தாயிடம் கூறவைக்கும் காட்சி.

000

ஆறு பிரிவுகளாக ஆறு குண, பருவங்களாக ஒரு நாவலைப் போல மடிப்பு மடிப்பாகப் போய்க் கொண்டே இருக்கும் ‘துஆ’ கவிதைகள், எனக்கு கனத்த அனுபவத்தைத் தந்தது.

வழக்காறுகள், பிராந்திய விளிப்புகள், பழஞ்சொற்கள் பரவியிருக்கும் இந்தக் கவிதைகளில் ஒரு கவிதைக்கு ஒரு பிழையேனும் குறுக்கிடுவது கவிதை வாசகனுக்கு சங்கடத்தையும் நெருடலையும் தருகிறது. பிழை நோக்குவதில் பதிப்பகத்தார் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

000

‘துஆ’ வாங்குவதற்கான சுட்டி

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

1 Comment

  1. //
    நவீன கவிதை ஏங்கிக் கொண்டிருந்த ஒரு சாத்தியம், “துஆ”வில் தூலமாகியிருக்கிறது. அதை சாதனை என்றே சொல்ல வேண்டும்.
    //

    //
    சபரிநாதனுடைய தனித்துவம் என்பது தமிழ் புனைகதையில் 90-களுக்கு மேல் செயல்படத் தொடங்கிய படைப்புரீதியான பேராவலையும் லட்சியத்தையும் சிரத்தையையும் பிரமாண்ட கட்டுமானத்துக்கான வேட்கையையும் கைப்பற்றியதே.
    //

    Big statements indeed!!! ஆனால், இம்முடிவிற்கு தான் இழுத்து அல்லது அழைத்துச் செல்லப்பட்ட விதத்தை விளக்கிய விதம் அலாதியானது, சுவாரஸ்யமும், விரிவும், கூர்மையும் கொண்ட கட்டுரை. மீண்டுமொரு முறை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.