ஒரு வாக்குமூலம்
இறைவா, நான் விரும்பினேன் ஸ்ட்ராபெரி ஜாமை,
பெண்ணுடம்பின் இருண்ட மதுரத்தை,
சில்லிடும் வோட்காவை,ஒலிவ எண்ணையில் ஊறவைத்த ஹெர்ரிங் மீனை
லவங்கத்தின் கிராம்பின் வாசனையையும் கூட.அப்படியானால் நான்
என்ன மாதிரியான தீர்க்கதரிசி?ஏன் தூய ஆவி
இப்படியொரு மனிதனிடம் வருகை தரவேண்டும்?
நியாயப்படி அழைக்கப்பட்ட மற்ற அநேகரோ நம்பிக்கைக்குரியவர்கள்.
என்னை யார் நம்பியிருக்கக்கூடும்?ஏனெனில் அவர்கள் பார்த்தனர்
நானெப்படி கண்ணாடிக்குவளைகளைக் காலிசெய்கிறேனென,
எப்படி சாப்பாட்டில் தஞ்சமடைகிறேனென மேலும்
பரிசாரகப்பெண்ணின் கழுத்தை எத்தனை மோகத்துடன் நோட்டமிடுகிறேனென.
குறையுடையவன் அது குறித்து அறிந்துள்ளவன்,மகத்துவத்தை விழைந்தபடி
அது எங்கிருந்தாலும் அடையாளங்காணக் கூடியவன்,
முழுதாய் இல்லையெனினும், ஓரளவிற்கு, வருங்காலத்தை முற்காண முடிந்தவன்.
எனக்குத் தெரியும் என்னைப் போன்ற சிறிய மனிதருக்கு எஞ்சியது என்னவென்று:
சின்ன நம்பிக்கைகளின் விருந்து,பெருமை பிடித்தவர்களின் பேரணி
கூனர்களின் பந்தயம்,இலக்கியம்.
Berkeley, 1985
இது மாத்திரம்
பள்ளத்தாக்கு அதற்கு மேலே இலையுதிர்கால வண்ணங்களில் காடுகள்.
ஒரு தேசாந்திரி வருகிறான், வரைபடம் கொணர்ந்துள்ளது இங்கே அவனை.
அல்லது ஞாபகம்.முன்னொருகாலத்தில்,வெயிலில்,முதல்பனி பொழிகையில்
இந்த வழியாக வந்தபோது அவன்,காரணம் ஏதுமின்றி,வலிமையானவனாகவும்
ஆனந்தத்தையும் உணர்ந்தான்.விழிகளின் ஆனந்தம்.
எல்லாம் லயத்தில் இருந்தன, நிலைமாறும் மரங்களின்,
பறக்கும் பறவையின்,பாலத்து ரயிலின் லயத்தில்,அசைவின் விருந்து.
பல வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பிவருகிறான்,எந்த கோரிக்கையும் இல்லை.
அவன் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான்,அதி விலையுயர்ந்த ஒன்று:
நானோ நானற்றைவையோ இல்லாத விளிம்பில்
பெயர் இன்றி,எதிர்பார்ப்புகள் இன்றி,அச்சங்களோ நம்பிக்கைகளோ இல்லாது
தூய்மையாகவும் எளிமையாகவும் காணவியல்வது
South Hadley, 1985
இவ்வுலகம்
இது எல்லாமே ஒரு தவறான புரிதல் எனத் தோன்றுகிறது.
வெறும் வெள்ளோட்டம் நிஜமாக எடுத்துக்கொள்ளப்பட்டடது.
நதிகள் தம் மூலங்களுக்குத் திரும்பும்.
காற்று தன் சுழற்சியில் ஸ்தம்பிக்கும்.
துளிர்ப்பதற்கு பதிலாய் மரங்கள் தம் வேர்களைக் கவனிக்கும்.
பந்தொன்றைத் துரத்தி திரியும் வயசாளிகள், கண்ணாடியில் பார்த்தால் –
அவரெல்லாம் மீண்டும் குழந்தைகள்.
காலமானோர் ,ஒன்றும் புரியாது, விழித்தெழுவர்.
நிகழ்ந்தவை யாவும் நிகழாதவையாகும் வரை இது தொடரும்.
என்னவொரு நிம்மதி ! ஆசுவாசம் கொள்ளும் மிகத் துயரற்றவரே.
எஸ்ஸே*
நான் அவளது முகத்தைப் பார்த்தேன்,திகைப்பில் வாயடைத்துப்போய்.மெட்ரோ ஸ்டேஷன்களின் விளக்குகள் பறந்துமறைந்தன.நான் அவற்றை கவனிக்கவில்லை. நமது பார்வைக்கு, பொருட்களை விழுங்குவதற்கான சக்தி இல்லாவிடில் என்ன செய்ய முடியும்?விலங்கு அல்லது பறவை ஒன்றின் ஓவியத்தில் இருந்து எளிமையாக்கப்பட்ட ஹைரோக்ளிஃப் போன்றதொரு குறியீட்டை, லட்சிய வடிவத்தின் வெற்றிடத்தை அன்றி வேறெதையும் விட்டுவைக்காமல், பொருட்களைப் பரவசத்துடன் கணத்தில் விழுங்குவதற்கான பூரணசக்தி நம் பார்வைக்கு இல்லை என்றால், என்ன செய்யமுடியும்?சற்றே தூக்கிய குறுநாசி,நேர்த்தியாய் வாரப்பட்ட கேசத்துடன் கூடிய உயர்ந்த புருவம்,முகவாயின் கோடு-ஆனால் பார்வையின் சக்தி ஏன் பூரணமாய் இல்லை-தவிர,இளஞ்சிவப்பு கலந்த வெண்ணிறத்தில் இரு செதுக்கப்பட்ட குழிகள்,அவற்றுள் இருண்டு ஒளிரும் எரிமலைக்குழம்பான விழிகள்.வெறுமனே அம்முகத்தை உள்வாங்குவதன்றி, இங்குள்ள அனைத்து வசந்தக்கிளைகள்,சுவர்கள்,அலைகளின் பின்னணியில்,அதன் அழுகையில்,சிரிப்பில்,பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கியோ அல்லது முப்பதாண்டுகள் கழிந்தபின்னரோ ஆன பின்புலத்தில்,அம்முகத்தை அடைய வேண்டும்.அதைக் கொண்டிருக்க வேண்டும்.இது ஒர் ஆசை கூட கிடையாது.ஒரு பட்டாம்பூச்சி போல,மீனைப் போல,தாவரத்தண்டை போல, இன்னும் மர்மமானது,அவ்வளவுதான்.ஆக எனக்கு நேர்ந்துள்ளது இது:உலகைப் பெயரிடுவதற்கான நிறைய முயற்சிகளுக்குப் பின்னரும்,என்னால் சொன்னதை திரும்பச்சொல்ல மட்டுமே முடிகிறது,ஒரே தந்தியை மீண்டும் மீண்டும் மீட்டுதற்கு மட்டுமே.மேலான எந்தச் சக்தியும் அடையமுடியாத, மிகவுயர்ந்த தனித்துவமான ஒப்புதலை மட்டுமே கூற முடிகிறது:நான் இருக்கிறேன்,அவள் இருக்கிறாள். கூவுங்கள்,எக்காளம் ஊதுங்கள்,ஆயிரக்கணக்கானோர் அணிநடை செல்லட்டும்,குதித்து ஆடைகளைக் கிழித்து மீண்டும் மீண்டும் இதையே சொல்லுங்கள்:இருக்கிறது!
அவள் ராஸ்பைல் நிலையத்தில் இறங்கினாள்.இருப்பவற்றின் பிரம்மாண்டத்துடன் தனித்துவிடப்பட்டேன் நான்.ஒரு ஸ்பான்ஜ் துயருறுகிறது தன்னைத் தன்னால் நிரப்பிக்கொள்ள முடியவில்லை என.ஒரு நதி துயருறுகிறது,மேகங்களின் மரங்களின் பிரதிபலிப்புகள் மேகங்கள் மரங்கள் இல்லை என்பதால்.
Brie-Comte-Robert, 1954
- ESSE – இருத்தல் என்பதற்கான லத்தீன் பதம்
சாளரம்
விடியலில் சன்னலுக்கு வெளியே பார்த்த நான் பொலிவில் ஒளிபுகுவதாய் ஓர் இள ஆப்பிள் மரத்தைக் கண்டேன்.
மீண்டும் ஒருமுறை விடியற்காலையில் வெளியே கண்டபோது,கனி கொழிக்கும் ஆப்பிள் மரம் ஒன்று அங்கே நின்றது.
வருடம் பல கடந்திருக்க வேண்டும்.ஆனால் என் தூக்கத்தில் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் நினைவில்லை.
Berkeley 1965
சபரிநாதன்
சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.