அபூர்வ கணம்
மேடையில் பாடகி பாடிக்கொண்டிருந்தாள். நான் பாட்டையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். இருபத்தைந்து வயதிருக்கும். திருமணமாகியிருந்தது என்பதைக் கூந்தல் வகிட்டில் இட்ட குங்குமத்திலிருந்தும் அணிந்திருந்த செயினிலிருந்தும் அறிந்தேன். செயின் தாலிச் செயினாக இருக்க வேண்டும். விறைப்பான செயின். மடக்க முடியாது. தொங்கும் செயின் அல்ல. விறைப்பாக இருந்ததினால் பிடரியில் படியவில்லை. தோளில் கிடந்து இறங்கியிருந்தது. கழுத்தில் தங்கம் இல்லாத நாகரிக நெக்லஸ். பாடும்போது கையைத் தூக்கினால் சிலருக்கு வயிறு தெரியும். அவள் சேலை அணிந்திருக்கும் விதத்தில் முந்தானை விலக வாய்ப்பில்லை. ரவிக்கையும் வயிற்றுப் பகுதியை மறைக்கும் விதத்தில் அணிந்திருந்தாள். வலது கையில் ஒரு தங்க வளையல். இடதுகையில் வாட்ச். மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடும் புல்லாக்கு ஆபரணத்தை அணிந்திருந்தாள். வலது கையினால் தொடையில் தட்டிப் பாடினாள். தொடையில் உள்ளங்கையினால் ஒரு தட்டு, பின் புறங்கையினால் ஒரு தட்டு. உள்ளங்கையினால் தட்டும்போது புறங்கையில் ஒரு எமோஜியைப் பச்சைக் குத்தியிருந்தது தெரிந்தது. உள்ளங்கையை ஒட்டிய மணிக்கட்டுப் பகுதியில் பச்சை குத்தியிருந்தது என்ன என்று அறியமுடியவில்லை. ஏதோ பெயர் போலத் தெரிந்தது. இடதுகையிலும் வலது கை போலவே பச்சை குத்தியிருந்தாள்.
அவள் தொடையில் தட்டித் தாளம் போட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது தடித்த கொசு ஒன்று அவளைச் சுற்றி வந்தது. அந்தக் கொசு அவள் முகத்தருகே செல்லவில்லை. தாளம் போட்டுக்கொண்டிருந்ததால் தொடைக்கும் கைக்கும் இடையே கொசு சிக்கி நசுங்கி மரணமடையும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன். கொசு லாகவமாக தாள அடியில் மாட்டாமல் சுற்றி வந்தது. முகத்திற்கு நேராக வந்தால் பாடுவதில் இடைஞ்சல் நேருமே என்று யோசித்தேன். ஆனால், கொசு அவள் உடம்பைச் சுற்றி வந்ததே தவிர முகத்தைச் சுற்றிவரவில்லை. தாளத்தில் கொசு அடிபட்டு மரணமடைந்தால் அது அபூர்வ தருணமாக இருக்கும். அப்படி நடக்காது போல் இருந்தது.
திடீரென்று கொசு அவளைச் சுற்றி வரும் பாதைகளை மாற்றி என்னை நோக்கி வந்தது. என் முகத்தருகே வந்ததும் நான் இரண்டு கைகளாலும் தட்டினேன். கொசு கைகளுக்கு இடையே மாட்டி மரணமடைந்ததை உணர்ந்தேன். நான் தட்டியது அவள் பாட்டின் ஒரு அபூர்வ தருணத்தில் என்பதால் நான் தட்டும் சத்தம் கேட்டதும் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அது ஓர் அபூர்வ கணம்தான்.
***
குடும்பப் பெண்
சரவணன் காரை நிறுத்தினான். நெடுஞ்சாலையில் இருந்த டீக்கடையை நோக்கிச் சென்றான். டீ சொன்னான். உள்ளே சென்று சேரில் உட்கார்ந்தான். டேபிளில் ஈக்கள் பறக்கவில்லை. இதுபோன்ற டீக்கடைகளில் ஈக்கள் அசூயை ஏற்படுத்தும். இங்கு அவ்வாறு இல்லை. சற்று நேரத்தில் ஒரு பெண் டீ கொண்டுவந்து வைத்தாள். முப்பது வயதிருக்கும். கோட் அணிந்திருந்தாள். பெரும்பாலான சாலை ஓர ஹோட்டல்களில் பெண்கள் கோட் அணிந்து பார்த்திருக்கிறான்.
“இந்த ஹோட்டலில் என்ன கிடைக்கும்.”
“சாப்பாடு கிடைக்கும் ஸார். இப்ப சாப்பாடு முடிந்துவிட்ட நேரம். இன்னும் ஒரே மணிநேரம் கழித்து தோசை, வடை ரெடியாகிவிடும் ஸார்.”
“நீங்கதான் சமையல் பண்றீங்களா.”
“இல்லை ஸார். நான் சப்ளையர்.”
“இப்ப பெண்கள் எல்லா இடத்திலேயும் இருக்காங்க. ஹோட்டல்லே இருக்காங்க. பெரிய ஹோட்டல் ரிசப்சனிலே இருக்காங்க. ஆட்டோ ஓட்றாங்க. போலீஸா இருக்காங்க. ஆபீசரா இருக்காங்க. அந்தஸ்து கூடியிருக்கு. எல்லா இடத்துலேயும் இருக்காங்க.”
“ஆமா ஸார்.”
“முன்னாடி ஆண்கள் சம்பாதிச்சு கொண்டு வர்ற பணத்தை அண்டித்தான் பெண்கள் இருக்க முடியும். இப்ப அப்படி இல்லை. பெண்களும் சம்பாதிக்கிறாங்க. நீங்க சம்பாதிக்கிறதை வூட்டுக்காரர் புடுங்கிட்டுப் போறாரா.”
“அப்படி இல்லை ஸார். ரெண்டு பணத்தையும் வைச்சு, அது ஒரு செலவுன்னா நான் ஒரு செலவுன்னு பண்ணிக்கிறோம்.”
“உங்க வூட்டுக்காரரு என்ன பண்றாரு.”
“பெயிண்ட் அடிச்சுக்கிட்டிருந்தது. நெஞ்சடைப்பு வந்துருச்சு ஸார். இருதயத்துக்கு வர்ற குழாயிலே அடைப்புன்னு அதை எடுத்துவிட்டாங்க. பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் வைத்தியம் பண்ணினோம். என்னாலே வேலைக்குப் போக முடியலை. நகையை அடகு வைச்சு செலவு பண்ணினோம். நகையை இன்னும் மீக்க முடியலை.”
“பெரியாஸ்பத்திரியிலே இலவசமாத் தானே பண்றாங்க.”
“எங்கே ஸார்… அதுக்கு இதுக்குன்னு செலவாயிருது. சாப்பாட்டுச் செலவும் இருக்கு.”
“இப்ப வேலைக்குப் போறாரா.”
“எங்கே ஸார்… படுத்தே கிடக்கு வேலைக்குப் போறதில்லை. நெஞ்சை அடைக்குதுன்னு சொல்லுது.”
“நெஞ்சைத் திறந்து ஆபரேசன் பண்ணினாங்களா.”
“இல்லை ஸார். அடைப்பை எடுத்துவிட்டாங்க.”
“அதுக்கு எதுக்குமா இவ்வளவு பாடு. நெஞ்சைத் திறந்து ஆபரேசன் பண்ணினதுங்க எல்லாம் வேலை பாத்துக்கிட்டு திரியறாங்க. அடைப்பை எடுத்துவிட்டதாலே உடம்பு வலு இல்லாமப் போச்சுன்னு சொல்றீங்களே.”
“அதுக்கு முடியலை ஸார். வேலை பாக்க சத்து இல்லை. நெஞ்சடைக்குதுன்னு சொல்லுது.”
“பயந்தான் காரணம். பயப்படாம இருக்கச் சொல்லுங்க. புள்ளைங்க எத்தனை. நீங்க வேலைக்கு வந்திர்றீங்க. ராத்திரிதானே போக முடியும்.”
“நான் இங்கே சாப்டுக்குவேன். புள்ளைகள்ல ஒருத்தி எட்டாவது படிக்குது. இன்னொருத்தி நாலாவது. ஸ்கூல்லே சாப்பாடு கொடுக்கறாங்க. என் வூட்டுக்காரர் கஞ்சிதான் விரும்பிக் குடிக்கிறாரு. வூட்லே அத்தை இருக்கு பாத்துக்குரும்.”
டீயைக் குடித்து முடித்திருந்தேன். “நான் கிளம்புறேன். டிப்ஸ் கொடுத்தா வாங்கிக்குவீங்களா.”
“வாங்கிக்குவேன் ஸார்.”
அவன் நூறு ரூபாய் நோட்டைப் பர்ஸிலிருந்து எடுத்துக் கொடுத்தான். திரும்பிப் பார்க்காமல் ஹோட்டலை விட்டு வெளியேறி காரில் உட்கார்ந்து முன்னால் இரு சக்கர வாகனம் இருந்ததால் ரிவர்ஸ் எடுத்தான். பின்னால் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண்ணிடமிருந்து ஹோட்டல் முதலாளி பணத்தை வாங்குவதைப் பார்த்தான். அவன் காரை ஓட்டிச் சென்றான்.
***
நாட்டியக்காரி
மங்கிய ஒளியில் மொட்டை மாடியில் அவள் உலவுவதைக் கண்டேன். அவளுக்கு நடுத்தர வயது. தெலுங்கு பேசுபவர்கள். சொந்த வீடு. இரண்டு முதிய பெண்கள் அவளுடன் வசிக்கிறார்கள். வேலைக்காரப் பெண் உண்டு. இந்த ஏரியாவில் இரண்டோ மூன்றோ வீடுகள் சொந்தமாக அவளுக்கு இருந்தது. அவள் பெயர் கங்காதேவி. எதிர் வீட்டில் இருக்கும் எனக்கு மொட்டை மாடி காம்பவுண்டுச் சுவர் மறைப்பதால் அரை உருவம் தெரிந்தது.
அகன்ற இடுப்பும் மெலிந்த இடையும் மை தீட்டிய பெரிய விழிகளும், மஞ்சள் நிறமும் கொண்ட அவளின் முக வசீகரத்தையும் வடிவத்தையும் விவரிக்க இயலாது. அவள் ஒரு காலத்தில் நாட்டியக்காரியாக இருந்தாள். ஆந்திராவில் பிரபலமாக இருந்தாள். தமிழ்நாட்டிலும் கலை ஈடுபாடு உள்ளவர்களால் அறியப்பட்டவள். ஒருநாள் அவள் வீட்டு வாசலில் பெரிய கார் வந்து நின்றது. நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அவர் பிரபலமான பாடகர். தென்னிந்தியா முழுவதும் தெரிந்த பாடகர். கர்நாடக இசையை அவரின் சிறு வயதில் இருந்தே பாடியவர். சினிமாப் பாடல்கள் பாடியிருக்கிறார். சற்று வயதானவர். காத்திரமான குரல் உள்ளவர். சபாக்களின் மதிப்பிற்குரியவர். ஊதியம் அதிகம் கேட்பவர். கங்காதேவி வாசலுக்கு வந்து கார்க் கதவைத் திறந்துவிட்டாள். அவர் காரிலிருந்து இறங்கினார். வியப்பும் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்த சிரிப்பில் அவள் முகம் மலர்ந்திருந்தது. காதுகளில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் ஆடின. மூக்குத்தி மின்னியது. இது ஓர் அற்புதமான காட்சி. வீட்டிற்குள் பாடகர் நுழைந்தார். அந்த வீட்டின் பெரிய ஹாலின் ஒரு புறத்தில், அகலமான ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருப்பதாகப் பிறர் சொல்லி நான் அறிந்திருக்கிறேன்.
சற்று நேரத்தில் பாடகரின் பாட்டு “ஜெகதோ தாரணா” என்று ஒலித்தது. உச்சஸ்தாயி பாட்டு. அடிவயிற்றிலிருந்து பாடினார். இந்தப் பாட்டை கங்காதேவியின் முன்னால் பாடுவது போல இதற்கு முன் அவர் பாடியிருக்க வாய்ப்பில்லை. கங்காதேவி கண்களை ஓரத்திற்குக் கொண்டுசென்று அவரைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளே போகமுடியாது. வெளியேயிருந்து பார்க்கவும் வழியில்லை.
பிறகு அந்தப் பாடகர் அடிக்கடி வர ஆரம்பித்தார். சில நாட்களில் பாடுவார். பிறகு அடிக்கடி வந்து தங்கிச் செல்வார். அதன் பிறகு வாரக்கணக்கில் தங்கினார்.
பெண் துணை இல்லாதிருந்த சபலப்புத்தியுடன் இருக்கும் எனக்கு என் வாழ்க்கை விரயமானது என்று தோன்றும். ஒருநாள் நான் தங்கியிருந்த வீட்டு வாசலில் நின்றிருந்தேன். வாசலில் கங்காதேவி நின்று தெருவின் இரு பக்கங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவள் சற்று தயங்கி என்னை அழைத்தாள். நான் சென்றேன்.
“வேலைக்காரி வரவில்லை. வழக்கமாகப் பால் பாக்கெட் போடுபவனும் இன்று போடவில்லை. எனக்கு ரெண்டு பால் பாக்கெட் வாங்கித்தர முடியுமா” என்றார்.
நான் தலையாட்டினேன். பணத்தை வாங்கிக்கொண்டு, இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பால் பாக்கெட் வாங்கச் சென்றேன். வாங்கித் திரும்ப வந்தேன். கங்காதேவி வாசலில் இல்லை. கேட்டைத் திறந்தேன். வாசல் கதவின் முன் நின்று தட்டினேன். சற்று நேரத்தில் கதவு திறந்தது. வயதான பெண் நின்றிருந்தார். ஹாலில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த கங்காதேவி ஊஞ்சலை நிறுத்தி என்னிடமிருந்து பால் பாக்கெட்டை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு “தேங்கஸ்” என்றாள்.
“நான் அந்தப் பாடகரின் ரசிகன்” என்றேன்.
“பாடுவேளா.”
“இல்லை. பாடத் தெரியாது. கேட்பேன்.”
“என்ன செய்கிறீர்கள்.”
நான் இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லி அவருக்கு உதவியாளனாக இருப்பதாகச் சொன்னேன். அவள் முகம் மாறியது.
“அவனுக்கு இன்னும் வாதம் வரவில்லையா” என்றாள்.
நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றேன்.
“‘வஞ்சகனின் உடல் எல்லாம் வாதம் வரவேண்டாமா’ என்று ஒரு பாட்டு உள்ளது தெரியுமா” என்றாள். பிறகு, “உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்றாள். நான் அவள் வீட்டுப் படியிறங்கி நான் குடியிருந்த வீடுக்கு வந்தேன்.
ஒரு வஞ்சகனின் கீழ் நான் வேலை பார்த்துக்கொண்டிருப்பதை நினைத்து வருந்தினேன்.
***
என் பெயர் கம்ரன்
பேரரசர் ஹுமாயூன் தம்பி கம்ரன் என்ற நான் குருடனாக மெக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடன் எனக்கு நம்பிக்கையான பரிவாரங்கள் வருகின்றன. பரிவாரங்களில் நம்பிக்கையற்றவர்கள் இருந்தாலும் என்னைக் கொன்று அடையக்கூடிய ஆதாயங்கள் ஏதுமில்லை. நான் ராஜ்யமற்றவன். பேரரசரின் கருணையால் நான் மெக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என் மன உளைச்சலைத் தீர்த்துக்கொள்ளவும் என் பாரத்தை இறக்கி வைக்கவும் என் மனதைத் தூய்மை கொள்ளவும் நான் மெக்கா பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கண் தெரியாததால் இருளின் உலகத்தில் இருக்கிறேன்.
என் சகோதரர் பேரரசர் ஹுமாயூனை எதிர்த்து ஷெர்ஷா சூரி போரிட்டபோது அவர் என் உதவியை எதிர்பார்த்தார். நான் உதவி செய்யவில்லை. நானும் என் இன்னொரு சகோதரன் அஸ்கரியும் அவரை வெறுத்தோம். காபூல் என் கட்டுப்பாட்டில் இருந்தது. ஷெர்ஷாவினால் தோற்கடிக்கப்பட்டு நாடு இழந்து என் சகோதரர் ஹுமாயூன் அலைந்துகொண்டிருந்தபோது ஹுமாயூனின் மாற்றாந்தாய் மகன் அவருடன் இணைந்துகொண்டார். அவர் பெயர் ஹிந்தால். ஹிந்தாலின் ஆசிரியரின் மகள் ஹமிதாவை ஹுமாயூன் மணந்துகொண்டார். ஓராண்டுக்குப்பின் கோடைக்காலத்தின் உச்சத்தில் தார் பாலைவனத்தைக் கடந்து சிந்துவை அடைந்தனர். அங்குள்ள அமரக்கோட்டையில் அக்பர் பிறந்தார். குழந்தையையும் மனைவியையும் கந்தகாரில் விட்டுவிட்டு ஈரான் மன்னரைச் சந்தித்து அவரின் உதவியை நாடினார். மன்னர் கொடுத்த நிதியையும் படையையும் கொண்டு என்னையும் சகோதரர் அஸ்கரியையும் ஹுமாயூன் தோற்கடித்தார். அடுத்த எட்டு ஆண்டுகள் நான் காபூலை மீட்க முயற்சி எடுத்தேன். கடைசியாக நடந்த போரில் நான் கைது செய்யப்பட்டேன்.
என்னைக் குருடாக்கும்படி சகோதரர் ஹுமாயூன் ஆணையிட்டார். என் உடலின் வலுவையெல்லாம் திரட்டி இறைவனை அழைத்து, என்னைக் கொன்றுவிடும்படி ஹுமாயூனிடம் கெஞ்சினேன். நான் இறைவனின் பெயரால் எவ்வளவோ மன்றாடியும் அவர் மனம் இரங்கவில்லை. அப்போது நான் என் கண்கள் குருடாக்கப்படும்போது என் வலியை வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது என்ற வைராக்கியத்தை இறைவனின் பெயரால் எடுத்துக்கொண்டேன்.
என் கண்கள் குருடாக்கப்பட்டன. சாட்சியாக இருந்தவர்கள் என் வைராக்கியத்தைக் கண்டு அதிசயித்ததைக் காண என்னால் இயலவில்லை. நான் இருளில் வீழ்ந்தேன். இருளே என் வாழ்க்கையானது. பேரரசரைச் சந்திக்க விரும்பினேன். நடக்கவேயில்லை. காலங்கள் கடந்தன. என் குரல் கேட்டு இறைவன் பேரரசரிடம் சொன்னதாலோ என்னவோ நான் பேரரசரைச் சந்திக்கக் கொண்டுபோகப்பட்டேன்.
எங்கும் இருள். பேரரசரின் குரல் ஒலித்தது. “என்ன வேண்டும்.”
நான் பேரரசரின் பட்டங்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்த துதிகளையும் குரல் வந்த திசையைப் பார்த்துக் கூறினேன். பிறகு, கடைசியாகக் கூறினேன், “என்னால் ஏதும் செய்ய இயலாது. கண்கள் இல்லை. இருளில் வாழ்கிறேன். தங்களை எதிர்த்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாக மெக்கா செல்ல பேரரசர் அனுமதிக்க வேண்டும்.”
இருளில் வார்த்தைகள் ஒலித்தன. “மெக்கா செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.” நான் அவரை வாழ்த்தி ஏதோ சொன்னேன். அவர் சென்றுவிட்டார் என்பதை என் புலன்களால் அறிந்தேன்.
அவ்வாறே மெக்காவுக்குச் சென்றுகொண்டிருந்த நான் உடல்நலமில்லாமல் மூச்சுவிடச் சிரமப்பட்டு கூடாரத்தில் இருந்தேன். ஏனோ அப்போது நான் சொன்னேன், “இறைவன் எப்போதும் மன்னிப்பவன்.” இருளை உணரமுடியாதவனாக என் மூச்சு நின்றது.
***
சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.
வணக்கம் …
‘அகழ்’ இலக்கிய இணைய இதழில் இன்று வெளியான, எழுத்தாளர்
‘சுரேஷ்குமார இந்திரஜித்’ அவர்களின் … 1. அபூர்வ கணம், 2. குடும்பபெண், 3. நாட்டியக்காரி, 4. என் பெயர் கம்ரன் ஆகிய நான்கு குறுங்கதைகளுமே அபூர்வ கணங்களை கொண்டுள்ளது. இக்கதைகளின் முடிவு அபூர்வ கணங்களை நிகழ்த்துகிறது. அது, வாசிக்கும் எனக்கு அபூர்வ தருணமாக உள்ளது.
1. ‘அபூர்வ கணம்’ ஒரு குறுங்கதையாக இருந்தாலும் இதில் மேடையில் பாடும் பாடகியின் வயிறு தெரியும், முந்தானை விலகும் அபூர்வ கணங்கள் பார்வையாளனுக்கு கிட்டாத ஏமாற்றம் …
பாட்டின் அபூர்வ தருணத்தில் தற்செயலாக தன்னை மொய்த்த கொசுவை அடித்த பார்வையாளின் இரு கை ஓசை கேட்டு, அதை தனக்கான கைதட்டலாக பூரித்து, பார்வையாளனை நோக்கி திரும்பி பார்த்த பாடகியின் அபூர்வ கணம், அது பார்வையாளனுக்கு ஏற்படுத்திய சிலிர்ப்பு என ஒன்றுக்கு மேற்பட்ட அபூர்வ கணங்களை இக்குறுங்கதை கொண்டுள்ளது.
2. ‘குடும்ப பெண்’ குறுங்கதையில், ஈ மொய்க்காத சாலையோர டீக்கடையில், கோட் அணிந்த பெண் சப்ளையரின் மீது வாடிக்கையாளனின் கழிவிரக்கத்தை கேலிக்குள்ளாக்கும் அபூர்வ முடிவு, என்னுள் அதிர்ச்சி கணத்தை ஏற்படுத்தியது.
3. ‘நாட்டியக்காரி’ குறுங்கதை : பொதுவாக வர்ணனைகளை வாசகப்படுத்த விரும்பாத சுரேஷ்குமார இந்திரஜித் சார், இந்தக்கதையில் விவரிக்க இயலாத ஒரு நடுத்தர வயது பெண்ணின் அழகு வடிவத்தை, வசீகரத்தை ஓரிரு வாக்கியத்தில் ஓவியமாக காட்சிப்படுத்திய வர்ணனை அபூர்வம். கதை பகடியாக முடிந்ததும், அபூர்வ தருணம்.
4. ‘என் பெயர் கம்ரன்’ குறுங்கதையில் சில வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும், அவற்றை ஒன்று சேர்த்தால் … ஒரு அபூர்வ வாசகமாக என்னுள் வசப்பட்டது.
கண் தெரியாததால்
இருளின் உலகத்தில் இருக்கிறேன்
நான் இருளில் வீழ்ந்தேன்
இருளே என் வாழ்க்கையானது
இறைவன் எப்போதும் மன்னிப்பான்
இருளை உணர முடியாதவனாக
என் மூச்சு நின்றது.
• சுரேஷ்குமார இந்திரஜித் சார், அகழ், ஓவியர் ஆகியோருக்கு நன்றி.
தற்செயல் விநோதங்களை தனது சிறுகதைகளில் வெளிப்படுத்தி வரும் சுரேஷ்குமார இந்திரஜித் சார், தற்செயல் விநோதங்களிலுள்ள அபூர்வ கணங்களை இக்குறுங்கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். நான் தவறவிடும் அபூர்வ கணங்களை கண்டுணர இந்தக்கதைகள் பயிற்சியளிக்கிறது.
good collection